Type Here to Get Search Results !

பழைய ஏற்பாடு ஆய்வு பாகம் எட்டு 8 | வேதாகமத்தின் ஆழமான ஆய்வு | பைபிள் புதிய கண்ணோட்டம் | Old Testment Bible Study in Tamil | Jesus Sam

பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–8)

    ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

    பழைய ஏற்பாடு ஆய்வு எட்டாம் பாகம்.  பழைய ஏற்பாட்டு ஆய்வின் கடைசி பாகம் இதுவாகும்.  பழைய ஏற்பாட்டு ஆய்வின் மூலமாக வேதத்தைக் குறித்து ஆலமாய் நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.  முதல் ஏழு பாகங்களை படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்த எட்டாம் பாகத்தைப் படிப்பீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    முதல் ஏழு பாகங்களுக்கான இணைப்புகள்:

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு (4)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து (5)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஆறு (6)

பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஏழு (7)

தெற்கு ராஜ்யம்:

            தெற்கு ராஜ்யம் ரெகொபெயாம் தொடங்கி, கடைசி ராஜாவாகி சிதேக்கியாவின் காலம் வரை நீடித்தது.  ரெகொபெயாம் முதல் சிதேக்கியா வரை மொத்தம் இருபது ராஜாக்கள்.  கி.மு.586-ம் ஆண்டு வரை இந்த ராஜாக்களின் காலம் நீடித்தது.  இந்த இருபது ராஜாக்களில் பதினான்கு ராஜாக்கள் கடவுளுக்கு பயந்தவர்கள் அல்ல.  ஆறு ராஜாக்கள் மாத்திரமே கடவுளுக்கு பயந்து நடந்தார்கள்.  வடக்கு ராஜ்யத்தை அழித்தது போல தெற்கு ராஜ்யத்தை ஆண்டவர் அழிக்கவில்லை.  காரணம், தெற்கு ராஜ்யத்தில் யூதா கோத்திரம் இருந்தது.  இந்த யூதா கோத்திரத்திலிருந்தே இயேசு கிறிஸ்து வர வேண்டும்.  தெற்கு ராஜ்யத்தில் இருந்தவர்கள் அழிக்கப்படவில்லை என்றாலும், சிதேக்கியாவின் காலத்தில் எழுபது ஆண்டுகள் அடிமைகளாக இருந்தார்கள்.  சிதேக்கியாவின் காலத்தில் கி.மு.586-ம் ஆண்டு எரேமியாவும் அவருக்கு உதவியாக இருந்த சிலரையும் தவறி மற்ற அனைவரும் பாபிலோனுக்கு அடிமையாக கொண்டுபோகப்பட்டார்கள்.

 

எரேமியா:

எரேமியாவோடு கூட சிலர் இஸ்ரவேலிலே தங்கிவிட்டார்கள்.  இவர்களை பாதுகாப்பதற்காக பாபிலோன் ராஜா சில வீரர்களையும், ஆளுநர்களை இஸ்ரவேல் நாட்டிலே வைத்திருந்தார்.  எரேமியாவோடு கூட இஸ்ரவேலிலே இருந்தவர்களில் ஒருவனாகிய இஸ்மவேல் என்பவன் பாபிலோனிய ஆளுநரை கொலை செய்துவிடுகிறான்.  எனவே, எரேமியாவும் அவனோடு கூட இருந்தவர்களும் எகிப்துக்கு தப்பியோடினார்கள்.  அவர்கள் எகிப்திலேயே வாழ்ந்துவிட்டார்கள்.  அவர்களுடைய சந்ததியில் வந்தவர் தான் புதிய ஏற்பாட்டு சவுல் அல்லது பவுல்.

 

பாபிலோனுக்கு சிறைபட்டுப்போனவர்களில் சிலர் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, கி.மு.536-ம் ஆண்டு செருபாபேல் தலைமையில் தேவாலயம் கட்டுவதற்காக எருசலேமிற்கு வந்தார்கள்.  அதற்கு பின் இருபது ஆண்டுகள் கழித்து எஸ்றாவின் தலைமையில் முழு யூதர்களும் தங்கள் தேசத்திற்கு திரும்பினார்கள்.  சிலர் மாத்திரம் பாபிலோனிலே தங்கிவிட்டார்கள்.  அவர்களும் நெகேமியாவின் காலத்தில் அலங்கம் கட்டுவதற்காக தங்கள் சொந்த தேசத்திற்கு வந்துவிட்டார்கள்.

இப்படி சிதேக்கியா ராஜாவின் காலத்தில் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், மூன்று பிரிவுகளாக தங்கள் தேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

 

தீர்க்கதரிசிகள்:

            பழைய ஏற்பாட்டில் மொத்தம் பதினேழு தீர்க்கதரிசன புத்தகங்கள் உள்ளது.  ஐந்து பெரிய தீர்க்கதரிசன புத்தங்கள், பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள் என மொத்தம் பதினேழு தீர்க்கதரிசன புத்தகங்கள் பழை ஏற்பாட்டில் உள்ளது.  புத்தகத்தின் அளவை வைத்தே பெரிய தீர்க்கதரிசன புத்தகம் சிறிய தீர்க்கதரிசன புத்தகம் என்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்திருக்கிறார்கள்.  புலம்பல் புத்தகம் ஐந்து அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அதை நாம் பெரிய தீர்க்கதரிசன புத்தகத்தோடு சேர்க்க காரணம், அது எரேமியா புத்தகத்தோடு இணைந்திருக்ககூடிய புத்தகம்.  எரேமியா தீர்க்கதரிசி தான் புலம்பல் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

 

பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

            ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல் இவைகள் பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள்.

 

ஏசாயா:

            ஏசாயா சுமார் கி.மு. 700-ம் ஆண்டில் வாழ்ந்த மனிதர்.  ஏசாயா தெற்கு ராஜ்யத்தில் வாழ்ந்த மனிதர்.  இவருடைய நாட்களில் தான் வடக்கு ராஜ்யம் அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது.  தெற்கு ராஜ்யத்தில் ஆறு ராஜாக்கள் மாத்திரமே கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள்.  அந்த ஆறு ராஜாக்களில் ஒருவரான உசியாவின் காலத்தில் வாழ்ந்தவர் இந்த ஏசாயா.

            உசியா ராஜாவின் நாட்களில் தேசம் செழிக்கத்தொடங்கியது.  விவசாயம் அசீர்வதிக்கப்பட்டது.  ஏசாயா தீர்க்கதரிசி தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை மறந்து ராஜாவோடு கூட சேர்ந்துகொண்டார்.  உசியா ராஜா மரணமடைந்ததும், ஏசாயா மிகுந்த கலக்கமடைந்தார்.  அப்பொழுது ஆண்டவர் அவருக்கு காட்சியளித்தார், உண்மையான ராஜா நான் இருக்க நீ மனிதனை ராஜாவாக நினைத்தாய் என்று ஆண்டவர் ஏசாயாவிற்கு உணர்த்தினார்.

            ஏசாயா தன் தவறை உணர்ந்தவராக ஆறாம் அதிகாரத்தை புலம்பி எழுதுகிறார்.  கர்த்தராகிய என் ராஜாவை என் கண்கள் கண்டது என்று ஏசாயா 6:5-ல் வாசிக்கிறோம். 

 

            ஏசாயா புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.

1-39 – முதல் ஏசாயா

40-55 – இரண்டாம் ஏசாயா

56-66 – மூன்றாம் ஏசாயா

           

            ஏசாயா யூத ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த ஒரு நபர்.  யூதர்கள் எழுபது ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டுப்போவார்கள் என்றும், எழுபது ஆண்டுகளுக்கு பின்பு கோரேஸ் மன்னனின் காலத்தில் திரும்பி வருவார்கள் என்றும் ஏசாயா இருநூறு (200) ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் உரைத்தார்.  (ஏசாயா 44:28)

            இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனங்களையும் ஏசாயா ஒன்பதாகம் அதிகாரத்தில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.  இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தாலும், அவர் மனிதன் அல்ல, அவர் கடவுள் என்று சொன்னவர் இந்த ஏசாயா தீர்க்கதரிசி. 

            ஏசாயா 9:6-ல் அவர் ஆலோசனைக் கர்த்தர் என்றும், வல்லமையுள்ள தேவன் என்றும், நித்திய பிதா என்றும் ஏசாயா எழுதுகிறார்.

 

எரேமியா:

            எரேமியா புத்தகத்தை ஒப்பாரி புத்தகம் அல்லது அழுகையின் புத்தகம் என்றும் சொல்லலாம்.  எரேமியா சிறுவயது முதலே பிரசங்கம் செய்ய துவங்கிவிட்டார்.  தனது குடும்பத்தார், நண்பர்கள், தேசத்தின் ராஜா அனைவரையும் சந்தித்து, நீங்கள் பாவம் செய்கிறீர்கள், மனம்திரும்புங்கள் என்று சொன்ன மனிதன் இந்த எரேமியா.  இதனால், வீட்டிலிருந்து துரத்தப்பட்டார், நண்பர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, ராஜா இவரை கிணற்றிலும், பாதாள சிறையிலும் அடைத்தார்.  சொந்த நாட்டில் உள்ள ஒருவரும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  அனைவரும் இவரை வெறுத்தார்கள்.

            எரேமியா இஸ்ரவேலர்களிடம் நீங்கள் மனந்திரும்பாவிட்டால் ஆண்டவர் பாபிலோன் ராஜாவிற்கு கட்டளையிடுவார், அவர் வந்து உங்களை பாபிலோனுக்கு அடிமைாயாக கொண்டுபோவார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார்.  அதுமாத்திரம் அல்ல பாபிலோன் ராஜா உலகம் முழுவதையும் கைப்பற்றி பிடித்துக்கொண்டிருக்கிறார், அவர் உலகத்தைப் பிடிப்பதற்கு உதவியாக இருப்பது நம்முடைய கடவுள் தான் என்றும் எரேமியா ஜனங்களிடம் சொன்னார்.

            யூதா தேசத்தில் வாழ்கின்ற ஒருவன், என்னைப் பற்றி புகழ்ந்து பேசுகிறான் என்று பாபிலோன் ராஜாவிற்கு பெருமையாக இருந்தது.  எனவே, நெகேமியாவின் மீது நேபுகாத்நேச்சாருக்கு நல்ல ஒரு பற்று இருந்தது.

            எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்டும் ஜனங்கள் மனம்திரும்பாததால், கி.மு 586-ம் ஆண்டு சிதேக்கியா ராஜாவின் காலத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேமை தரைமட்டமாக தகர்த்துப்போட்டு, ஜனங்களை இழுத்துச்சென்றார்.

            நேபுகாத்நேச்சார் எருசலேமை சிறைபிக்க தன் வீரர்களை அனுப்பும்போது, அவர்களிடம் சொல்லி அனுப்புகிறார், நீங்கள் எருசலேமைக் கைப்பற்றும் முன், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற எரேமியா என்ற மனிதனைத் தேடிக்கண்டுபிடியுங்கள்.  அவனிடம் எரேமியாவே நீங்கள் பாபிலோனுக்கு வந்தால் எங்கள் மன்னன் உங்களை நன்றாக பராமரிப்பார், உங்கள் தேவையை சந்திப்பார், நீங்கள் விரும்பினால் அங்கு வரலாம்.  இல்லையென்றால், இங்கே தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லச்சொன்னார்.

            வீரர்களும் எரேமியாவிடம் கேட்டார்கள், அதற்கு எரேமியா நான் இங்கேயே தங்கிவிடுகிறேன் என்று சொல்லுகிறார்.  எனவே, பாபிலோனிய வீரர்கள் எரேமியாவையும் அவனோடு கூட சில வயதுமுதிந்தவர்கள், பெண்கள், குழந்தைகளையும் விட்டுவிட்டு, மற்ற எல்லோரையும் அடிமையாக இழுத்துச் சென்றார்கள்.  எரேமியாவிற்கு துணையாக ஒருசில வீரர்களையும் எருசலேமிலேயே விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் பாபிலோனுக்கு சென்றுவிட்டார்கள்.

 

புலம்பல்:

            பாபிலோனியர் எருசலேமை இடித்து தரைமட்டமாக்கியதைப் பார்த்த எரேமியா மிகவும் வேதனையோடு புலம்பல் புத்தகத்தை எழுதுகிறார்.  பாபிலோனுக்கு சிறைபட்டுப் போகும் வரை எரேமியா புத்தகத்தில் வாசிக்கிறோம்.  சிறைபட்டுப்போன பின்பு எருசலேமைப் பார்த்து எரேமியா எழுதிய புத்தகம் தான் புலம்பல் புத்தகம்.

            எரேமியா புலம்பி எழுதும் புலம்பல் புத்தகத்தையும் அழகிய இலக்கிய கவிதை நயத்தோடு தான் எழுதுகிறார்.  எபிரெயு மொழியில் மொத்தம் இருபத்து இரண்டு எழுத்துக்கள் உள்ளது.  எரேமியா புலம்பல் புத்தகத்தை எழுதும் போது முதல் வசனத்தை எபிரெயு முதல் எழுத்தில் துவங்குகிறார்.  இரண்டாவது வசனத்தை எபிரெய இரண்டாவது எழுத்தில் துவங்குகிறார்.  மூன்றாவது வசனத்தை எபிரெய மூன்றாவது எழுத்தில் துவங்குகிறார்.  இப்படியாக இருபத்து இரண்டு எழுத்துக்களிலும் இருபத்து இரண்டு வசனங்களை எழுதுகிறார்.

            புலம்பல் புத்தகத்தில் ஐந்து அதிகாரங்கள் உள்ளது.  ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய  இந்த ஒவ்வொரு அதிகாரத்திலும் இருபத்து இரண்டு, இருபத்து இரண்டு வசனங்களே உள்ளது.  இந்த நான்கு அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் எபிரெயு மொழியில் உள்ள இருபத்து இரண்டு எழுத்துக்களிலேயே துவங்குகிறது.  மூன்றாம் அதிகாரம் அதாவது நடு அதிகாரத்தில் மொத்தம் அறுபத்து ஆறு வசனங்கள் உள்ளது.  இந்த அதிகாரத்தில் முதல் மூன்று வசனங்கள் எபிரெய முதல் எழுத்தில் துவங்கும்.  நான்காம், ஐந்தாம், ஆறாம் வசனம் எபிரெய இரண்டாம் எழுத்தில் துவங்கும்.  இப்படியாக அறுபத்து நான்கு, அறுபத்து ஐந்து, அறுபத்து ஆறு ஆகிய வசனங்கள் எபிரெய இருபத்து இரண்டாவது எழுத்தில் துவங்கும்.  எரேமியா தான் புலம்பி எழுதும் புத்தகத்தைக்கூட இவ்வளவு அழகாக இலக்கிய கவிதை நயத்தோடு எழுதிவைத்துள்ளார்.

            இந்த எபிரெய கவிதை இலக்கியத்தை நாம் தமிழ் மொழியில் வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடியாது.  தமிழ் மொழியில் அவ்வாறு மொழிபெயர்க்கவும் முடியாது.  இதை எபிரெயு மொழியில் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள மடியும். 

 

சங்கீதம் 119

            தாவீதும் எரேமியாவைப் போலவே ஒரு சங்கீதத்தை எழுதுகிறார்.  எபிரெயு முதல் எழுத்தில் துவங்குமாறு எட்டு வசனங்களை எழுதுகிறார்.  இரண்டாவது எழுத்தில் துவங்குமாறு எட்டு வசனங்களை எழுதுகிறார்.  இப்படியாக இருபத்து இரண்டு எழுத்துக்களுக்கும் எட்டு, எட்டு வசனத்தை தாவீது எழுதுகிறார்.  அப்படி எழுதப்பட்ட சங்கீதம் தான் 199-ம் சங்கீதம்.  எனவே சங்கீதம் 119-ல் மொத்தம் 176 (22X8=176) வசனங்கள் உள்ளது.

 

எசேக்கியேல்:

            எசேக்கியேல் ஒரு ஆசாரியன்.  பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் யூத ஜனங்களை பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு செல்லுவதற்கு முன்பாகவே பாபிலோனுக்கு சென்றவர் தான் இந்த எசேக்கியேல் தீர்க்கதரிசி.  முதன் முதலாக கி.மு.609-ம் ஆண்டு யூதர்கள் பாபிலோனுக்கு  சென்றார்கள்.  எ.கா. தானியேல், அசரியா, அனனியா, மிசாவேல்.  இவர்கள் பாபிலோனுக்கு சென்று, கடவுளுடைய கிருபையால் அத்தேசத்தில் உயர்த்தப்படுகிறார்கள்.  அவர்கள் உயர்த்தப்பட்ட போது, நாங்கள் எங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக எங்கள் தேசத்தில் உள்ள ஆசாரியர்கள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அப்படி கொண்டுவரப்பட்ட ஆசாரியர்களில் ஒருவர் தான் இந்த எசேக்கியேல்.  எசேக்கியேல் பாபிலோனுக்கு சென்ற வருஷம் கி.மு.597-ம் வருஷம்.

            பாபிலோனில் யூதர்கள் தங்கள் கடவுளை ஆராதிப்பதற்கு தேவாலயம் இல்லாததால், இந்த எசேக்கியேல் யூதர்களை ஓய்வு நாளில் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, சங்கீதங்களைப் பாடியும், நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தும் ஜனங்கள் உண்மைக் கடவுளை ஆராதிக்க வழிவகை ஏற்படுத்தினார்.  பாபிலோனிலுள்ள யூதர்கள் தங்கள் கடவுளை ஆராதித்த இடத்தையே ஜெப ஆலயம் என்று சொன்னார்கள்.

            ஆண்டவரை ஆராதிக்க எருசலேமில் தேவாலயம் இருந்ததுபோல, பாபிலோனில் தேவாலயம் இல்லாததால் ஜனங்கள் ஒன்றாக கூடி ஆண்டவரை ஆராதிக்கும்படியான ஒரு இடத்தை ஏற்படுத்திய நபர் இந்த எசேக்கியேல்.

            எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்த இடம் பாபிலோன்.  இந்த எசேக்கியேல் இரண்டு முக்கிய தீர்க்கதரிசனங்களை ஜனங்களுக்கு சொல்லுகிறார்.

            முதலாவதாக, பாபிலோனில் குடியிருக்கிற யூத ஜனங்களே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்று நினைக்க வேண்டாம்.  கடவுள் கட்டாயம் ஒரு நாள் உங்களை யூதா தேசத்திற்கு அழைத்துச் செல்வார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார்.

            இரண்டாவதாக, சபை எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களுக்குப் பின், பூமியில் யூதர்களின் காலம் துவங்குகிறது.  அந்த நாட்களில் (ஏழு ஆண்டுகள்) என்ன சம்பவிக்கப்போகிறது என்பதையும் எசேக்கியேல் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.

 

தானியேல்:

            பாபிலோன் ராஜ்யத்தை மேதிய, பெர்சியர்கள் எப்படி கைப்பற்றுவார்கள், மோதிய பெர்சியர்களிடமிருந்து ராஜ்யத்தை எப்படி கிரேக்கர்கள் கைப்பற்றுவார்கள்.  கிரேக்கர்களிடமிருந்து ராஜ்யத்தை எப்படி ரோமர்கள் கைப்பற்றுவார்கள், ரோமர்களின் சாம்ராஜ்யத்தின்போது இயேசு கிறிஸ்து வருவார் என்ற வரலாற்று சரித்திரத்தை தானியேல் தீர்க்கதரிசி எழுதுகிறார்.

தானியேல் புத்தகமும் பாபிலோனில் வைத்து எழுதப்பட்ட புத்தகம்.  தானியேல் புத்தகத்தில் உள்ள முதலாம் அதிகாரத்தின் நடுப்பகுதியில் இருந்து ஏழாம் அதிகாரம் வரை அராமிய மொழியில் எழுதப்பட்டது.  முதலாம் அதிகாரத்தின் முதல் பகுதியும், எட்டு முதல் பனிரெண்டு அதிகாரங்கள் கொண்ட பகுதியும் எபிரெயு மொழியில் எழுதப்பட்டது.

 

சிறிய தீர்க்கதரிசிகள்:

            ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா ஆகிய பன்னிரண்டு புத்தகங்கள் சிறிய தீர்க்கதரிசியின் புத்தகங்கள்.

 

ஓசியா - ஆமோஸ்: (வடக்கு ராஜ்யம்)

            ஓசியா ஆமோஸ் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் வடக்கு ராஜ்யத்திற்கு (பத்து கோத்திரம்) தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்.  இந்த வடக்கு ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் வணங்காக கழுத்துள்ளவர்கள்.  கடின இருதயமுள்ளவர்கள்.  எலியா, எலிசா இவர்களும் வடக்கு ராஜ்யத்திற்கே தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.  ஆனாலும் அந்த ஜனங்கள் மனம்மாறவில்லை.

            ஓசியா வடக்கு ராஜ்யத்தை சேர்ந்த தீர்க்கதரிசி.  ஆமோஸ் தெற்கு ராஜ்யத்தில் உள்ள தெக்கோவா ஊரைச் சார்த்தவர்.  இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் மற்ற தீர்க்கதரிசிகளைப் போல ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.

 

ஓசியா:

            ஓசியா தனது வாழ்க்கையையே தீர்க்கதரிசனமாக மாற்றினார்.   ஆண்டவர் ஓசியாவிடம் நீ விபச்சாரியை திருமணம் செய் என்று சொன்னார்.  ஓசியாவும் விபச்சாரியை திருமணம் செய்தார்.   ஜனங்கள் அனைவரும் நீ தீர்க்கதரிசியாய் இருந்தும் விபச்சாரியை திருமணம் செய்தது என்ன என்று அவனிடம் கேட்டார்கள்.  அதற்கு ஓசியா நீங்களும் இதைப்போலவே ஆவிக்குறிய விபச்சாரத்தில் இருந்துகொண்டு ஆண்டவருக்கு அருவெருப்பான காரியங்களை செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொன்னார்.

ஓசியாவுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.  மூத்த மகனுக்கு யெஸ்ரயேல் என்று பெயர், இரண்டாவது மகளுக்கு லோருகாமா என்று பேர், மூன்றாவது மகனுக்கு லோகம்மீ என்று பெயர்.  இதுபோன்ற பெயர்களை இஸ்ரவேல் ஜனங்கள் வைக்கவே மாட்டார்கள்.

யெஸ்ரயேல் என்றால் ராஜாக்கள் யுத்தம் செய்யும் பள்ளத்தாக்கு என்று அர்த்தம்.  அதாவது அழிவைக் குறிக்கிறது.  அதன் மூலமாக ஓசியா ஜனங்களுக்கு ஆண்டவர் உங்களை அழித்திருக்க வேண்டும்.  ஆனால் அழிக்காமல் வைத்திருக்கிறார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறார். 

இரண்டாவது மகள் லோருகாமாள்.   லோ என்றால் இல்லை என்று அர்த்தம்.  காமாள் என்றால் அன்பு, கிருபை, இரக்கம் என்று அர்த்தம்.  லோருகாமாள் என்றால் அன்பு இல்லை, கிருபை இல்லை என்று அர்த்தம்.  எதற்காக இந்த பெயரை வைத்தார் என்றால், ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.  நீங்கள் கடவுளுடைய அன்பையும், கிருபையையும் பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் என்பதை விளங்கப்பண்ண இந்த பெயரை சூட்டுகிறார்.

மூன்றாவது மகன் லோகம்மீ.  இதன் அர்த்தம் நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல.  இதன்மூலம் இஸ்ரவேலர்களே நீங்கள் ஆண்டவருடைய ஜனங்கள் அல்ல என்று எடுத்துரைக்கிறார்.

இப்படியாக ஓசியா விபச்சாரியை திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளுக்கு விசித்திரமான பெயரை வைத்து, அதன் மூலமாக ஜனங்களுக்கு பிரசங்கம் பண்ணினார்.

பின்பு ஓசியாவின் மனைவியாகிய விபச்சாரி ஓசியாவிடம் இருந்து மீண்டுமாக தன் பழைய வாழ்க்கைக்கே சென்றுவிட்டாள்.  அப்பொழுது ஆண்டவர் ஓசியாவிடம் நீ மறுபடியும் அவளை அழைத்து வா.  இந்த முறை அவளை விளைகொடுத்து வாங்கி அழைத்து வா என்று சொல்லுகிறார்.  மீண்டும் ஓசியா அவளை அடிமைக்குரிய விலையைக் கொடுத்து வாங்கி, தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.  இதன் மூலமாகவும் ஓசியா இஸ்ரவேல் ஜனங்களுக்கு கடவுளுடைய அன்பைக் காட்டினார்.

இப்படி ஓசியா தன் வாழ்கையையே ஒரு பாடமாக்கி இஸ்ரவேலர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்.  ஆனால், ஜனங்கள் மனந்திரும்பவில்லை.

 

ஆமோஸ்:

            வடக்கு ராஜ்யத்தை சேர்ந்த ஓசியா பிரசங்கித்ததையே ஜனங்கள் கேட்கவில்லை.  தெற்கு ராஜ்யத்திலிருந்து ஒருவர் சென்று பிரசங்கித்தால் கேட்பார்களா?  ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து தீர்க்கதரிசனம் சொல்லாமல், இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று மற்ற தேசங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்.

            தீருவின் மூன்று பாதங்களின் நிமித்தமும் நான்கு பாதகங்களின் நிமித்தமும் ஆண்டவர் சொல்லுவது என்னவென்றால், தீருவை ஆண்டவர் அழிக்கப்போகிறார் என்றும், ஏதோமை ஆண்டவர் அழிக்கப்போகிறார் என்றும், தமஸ்குவை ஆண்டவர் அழிக்கப்போகிறார் என்றும், அம்மோனை அழிக்கப்போகிறார் என்றும், மோவாபை அழிக்கப்போகிறார் என்றும் ஒன்றொன்றாக சொல்லிகொண்டே இருந்தார் ஆமோஸ்.  இஸ்ரவேல் ஜனங்களும் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள்.  கடைசியாக இஸ்ரவேலர்களே ஆண்டவர் உங்களையும் அழிப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

            இதைக் கேட்ட இஸ்ரவேல் தேசத்தின் ஆசாரின் ஒருவன் நீ உங்கள் எல்லைக்கு சென்று தீர்க்கதரிசனம் உரைத்து சம்பாதித்துக்கொள்.  எங்கள் எல்லைகளுக்கு நீ வரவேண்டாம் என்று அவனை துரத்திவிடப்பார்த்தார்கள்.  அப்பொழுது ஆமோஸ் நான் மிகப்பெரிய செல்வந்தவன் எனவும், என்னிடம் அதி உயர் ரக ஆடுகள் இருக்கிறது என்றும், அநேக வேலையாட்கள் எனக்கு இருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்.

            இதைக்கேட்ட ஆசாரியன் ஒரு பெரிய மனிதனை நாம் மறியாதைக் குறைவாக பேசிவிட்டோம் என்று பயந்தான்.  அப்பொழுது ஆமோஸ்  உன் மனைவி நகரத்தில் வேசியாய் இருப்பால், உன் பிள்ளைகள் வெளியில் மரணமடைவார்கள் இப்படியாக அந்த ஆசாரியனை கடிந்துகொண்டார் ஆமோஸ்.

            ஆமோசின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டும் வடக்கு ராஜ்யத்தில் உள்ள இஸ்ரவேலர்கள் மனம் திரும்பவில்லை.

 

தெற்கு ராஜ்யம்:

            பனிரெண்டு சிறிய தீர்க்கதரிசிகளில் இரண்டு தீர்க்கதரிசிகள் வடக்கு ராஜ்யத்திற்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.  நான்கு தீர்க்கதரிசிகள் தெற்கு ராஜ்யமாகிய யூதா ராஜ்யத்திற்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.  தெற்கு ராஜ்யத்திற்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யோவேல், மீகா, ஆபகூக், செப்பனியா.

            இந்த நான்கு தீர்க்கதரிசிகளும் வெவ்வேறு முறைகளில் தீர்க்கதரிசனம் உரைத்தாலும், இவர்கள் சொல்லும் ஒரு காரியம் என்னவென்றால், யூதா ஜனங்களே, நீங்கள் மனந்திருப்பாவிடில் கர்த்தர் உங்களை பாபிலோனுக்கு அடிமையாக கொண்டுசெல்லுவார்.  உங்களை பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு சென்ற ஆண்டவர் சில காலங்களில் மறுபடியும் உங்கள் தேசத்திற்கு கொண்டுவருவார்.  இந்த காரியத்தையே அந்த யூதா ராஜ்யத்தில் உள்ள நான்கு தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்கு சொன்னார்கள்.

            யோவேல் தீர்க்கதரிசி இரண்டாம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியைப் பற்றியே தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.  இதையே அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் பேதுரு பயன்படுத்துகிறார்.

            மீகா 5:2-ல் இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.

 

ஒபதியா:

            ஒபதியா ஏதோமியர்களுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். ஏசாவின் (யாக்கோபின் குமாரன்) வம்சத்தாரே ஏதோமியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  ஏதோமியர்கள் கன்மலையில் வாழ்ந்தவர்கள்.  மலையை உடைத்து, குகையாக்கி அதில் வீடுகள் அமைந்து வாழ்ந்து வந்தார்கள்.

இந்த ஏதோமியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்களை கடவுள் அழிக்கப்போகிறார் என்று ஏதோமியர்களுக்கு விரோதமாக ஒபதியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.

ஒபதியா புத்தகம் ஒரு அதிகாரத்தை மட்டுமே கொண்டது.  இப்புத்தகத்தில் கன்மலையின் உச்சியில் குடியிருக்கிற ஏதோமியரே நீங்கள், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் தெற்கில் இருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்து உன்னை அழித்துப்போடுவார்கள்.  நீங்கள் உயிர்ப்பிழைக்க அகதியாய் இஸ்ரவேல் தேசத்திற்கு ஓடிவருவீர்கள், இஸ்ரவேலில் இருந்தும் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்றும் ஒபதியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.  இந்த தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியதை வரலாற்று குறிப்புகளில் நம்மால் பார்க்கமுடிகிறது.

ஏதோமியர்களின் தெய்வங்கள் அனைத்தும் அழகானதாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும்.  அமத்சியா ராஜா (2 நாளாகமம் 25-ம் அதிகாரம்) ஏதோமியர்களை அழித்து நிர்மூலமாக்குகையில் அவர்கள் தெய்வங்களை திருடிக்கொண்டு வந்து, இவன் தேசத்தில் வைத்து அந்த தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி வந்தான்.  அந்த அளவிற்கு ஏதோமியரின் தெய்வங்கள் கவர்சியாகவும், அழகாகவும் இருந்தது.

கன்மலையின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த ஏதோமியர்களை தெற்கே இருந்து வந்த ஜனங்கள் அழித்துப்போட்டபோது, ஏதோமியர்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் அனைவரும், தங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து தஞ்சம் புகுந்தார்கள்.  இஸ்ரவேலர்களும் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள்.  இந்த ஏதோமியர்கள் இஸ்ரவேலில் உள்ள செசரியாப் பகுதியில் (மத்திய தரைக்கடல் பகுதி) தஞ்சம் புகுந்தார்கள்.

ஏரோது மன்னன்:

            ரோமர்கள் உலகைக் கைப்பற்றிய போது, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குரு மன்னனை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ரோமர்களுக்கு இருந்தது.  ஒரு நாட்டில் உள்ள குடிமகனையே அந்த நாட்டிற்கு மன்னனாக ஏற்படுத்தினால் அவர்கள் நம்மை மேற்கொண்டுவிடுவார்கள் என்று எண்ணி, ஒவ்வொரு நாட்டிற்கும் வேறு நாட்டில் உள்ள ஒரு மனிதனை இந்த ரோமர்கள் குரு மன்னர்களாக்கினார்கள்.

            இந்த சூழ்நிலையில் இஸ்ரவேல் நாட்டில் அகதிகளாய் வாழ்கின்ற ஏதோமியர்கள், ரோமப் பேரரசர் ஜீலியஸ் சீசரிடம் சென்று, அரசே நாங்கள் ஏதோமியர்கள், இஸ்ரவேல் நாட்டில் அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் நாங்கள் இஸ்ரவேலர்கள் அல்ல.  நாங்கள் செல்வம் படைத்தவர்கள், நீங்கள் அதிகாரத்தை மட்டும் கொடுத்தால்போதும், எந்த பண உதவியும் செய்ய தேவையில்லை, நாங்கள் இஸ்ரவேல் நாட்டை ஆட்சி செய்கிறோம். அங்கிருந்து உங்களுக்கு வரி செலுத்துகிறோம் என்று கேட்டார்கள்.  பேரரசனுக்கு இது நலமாகத் தோன்றியதால், அந்த ஏதோமியர்களில் ஒரு பணக்காரனை இஸ்ரவேலர்களுக்கு குரு மன்னனாக ஏற்படுத்தினான்.  இந்த ஏதோமியனின் பெயர் தான் ஏரோது.

            கி.பி.70-ல் இஸ்ரவேலர்கள் ரோமாபுரிக்கு விரோதமாக கலகம் பண்ணினார்கள், அந்த சமயத்தில் இந்த ஏதோமியர்களும் ரோமர்களுக்கு விரோதமாக வேறொரு காரணத்திற்காக கலகம்பண்ணினார்கள்.  அப்பொழுது ரோம பேரரசர் நெஸ்பசியன், அவருடைய மகன் தீத்தசை ஒரு பெரும் சேனையோ அனுப்பினார்.  அவர்கள் வந்து இந்த ஏதோமியர்கள் ஒவ்வொருவரையும் அழித்து நிர்மூலமாக்கினார்கள்.  கி.பி.70-ல் ஒபதியாவின் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறினது.

 

யோனா மற்றும் நாகூம்:

            யோனாவும், நாகூமும் நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்.  நினிவே என்பது அசீரியா நாட்டின் தலைநகரம்.

யோனாவை ஆண்டவர் நினிவே பட்டணத்திற்கு சென்று தீர்க்கதரிசனம் உரைக்க சொன்னார்.  யோனா முதல் முறை போக மறுத்தார்.  பின்பு நினிவே பட்டணத்திற்கு சென்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.  ஜனங்கள் மனம் திரும்பினார்கள்.

யோனா தீர்க்கதரிசனம் உரைத்ததற்கும் நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்ததற்கும் இடைப்பட்ட காலம் நூறு ஆண்டுகள்.  யோனா தீர்க்கதரிசியைப் போல நாகூம் தீர்க்கதரிசி நினிவே பட்டணத்திற்கு சென்று தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.  இஸ்ரவேலில் இருந்து கொண்டு நினிவே அழியப்போகிறது என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

நாகூம் சொன்னதுபோலவே நினிவே பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது.

 

 ஆகாய், சகரியா, மல்கியா:

            ஆகாய், சகரியா மல்கியா இம்மூவரும் அடிமைத்தனத்திற்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்.  பாபிலோனிலிருந்து ஜனங்கள் திரும்பி வந்த பின்பு யூதர்களுக்கு தீர்க்கதரிசன் உரைத்தவர்கள்.

            கி.மு536-ல் செருபாபேலின் தலைமையில் ஜனங்கள் பாபிலோனிலிருந்து இஸ்ரவேலுக்கு வந்தார்கள்.  வந்தவர்கள் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்ட பின்பு, ஆலயத்தைக் கட்டாமல் தங்களுக்கு வீடுகளை கட்ட துவங்கினார்கள்.  இதைப் பார்த்த செருபாபேல் ஆண்டவரிடம் மன்றாடுகிறார்.  அந்த நேரத்தில் செருபாபேலை ஆறுதல்படுத்தவும், தைரியப்படுத்தவும், ஆலய வேலையை புரக்கணித்த யூத ஜனங்களை கண்டித்து ஆலயம் கட்டும் வேலைகளை துரிதமாக துவங்கவும் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் ஆகாயும், சகரியவும்.

            சகரியா பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதர்களுக்கு மாத்திரம் அல்ல, எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய காரியங்களையும் தீர்க்கதரிசனமாக எழுதி வைத்திருக்கிறார்.

 

மல்கியா:

            ஆயாயும், சகரியாவும் தீர்க்கதரிசனம் உரைத்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு பின்பு ஜனங்களின் இரகசிய பாவங்கள் பெருகியதால், ஜனங்களை கடைசி முறையாக பரிசுத்தப்படுத்துவதற்கு மல்கியாவை ஆண்டவர் ஏற்படுத்தினார்.  இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு நானூறு ஆண்டுகளுக்குப் முன்பு, அடிமைத்தனத்திலிருந்து ஜனங்கள் திரும்பி வந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்பு மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.

            நான்கு அதிகாரம் கொண்ட இப்புத்தகத்தில் நான்காம் அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தோடு அந்த அதிகாரம் முடிவடைகிறது.

 

 

கவிதைப் புத்தகங்கள்:

            யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு இவை ஐந்தும் கவிதைப் புத்தகங்கள்.  இவை ஐந்தும் யூதர்களின் கவிதைப் புத்தகங்கள்.  கவிதைப் புத்தகத்தை வாசிக்கும்போது கவிதை நடையிலேயே வாசிக்க வேண்டும்.  இவை ஐந்தும் வரலாற்றுப் புத்தகம் அல்ல.  எனவே, இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் உண்மை என்று நாம் நினைக்கக் கூடாது.  அப்படியானால் கவிதைப் புத்தகங்கள் பொய் சொல்லுகிறதா என்று நீங்கள் நினைக்கலாம்.  கவிதை புத்தகம் என்பது பொய் புத்தகம் அல்ல, ஒரு உண்மை நிகழ்வை வேறு கோணத்தில் மக்களுக்கு விளங்கச் செய்வதே கவிதைப் புத்தகம்.

            ஒரு பழமொழி இப்படியாக சொல்லுவார்கள், கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு.

 

யோபு:

            வேதாகமத்தில் முதல் முதல் எழுதப்பட்ட புத்தகம் யோபு புத்தகம்.  இப்புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.  யோபு புத்தகம் மோசேயினால் எபிரெயு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.  ஆனால் யோபு புத்தகத்தின் மூல மொழி எது என்று இன்னும் கண்பிடிக்கப்படவில்லை.  மோசேக்கு இப்புத்தகம் கிடைப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் தான் இந்த யோபு புத்தகம்.  மோசே உபாகமம் புத்தகத்தை எழுதும் போது, யோபு புத்தகத்தையும் மொழிபெயர்த்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

            உபாகமம் புத்தகத்தை மோசே எழுதும்போது காதேஸ்பானியா என்ற இடத்தில் இஸ்ரவேலர்கள் இருந்தார்கள்.  இந்த காதேஸ்பானியா இடத்திற்கு வடக்கு பகுதியில் இருந்த தேசம் தான் ஊத்ஸ் தேசம்.  காதேஸ்பானியாவிலிருந்து ஊத்ஸ் தேசம் நடந்து செல்லும் அளவிற்கு குருகிற தூரத்திலேயே இருந்தது.

            தேவபுத்திரர்கள் என்பது தேவதூதர்கள் அல்ல.  தேவதூதர்களை வேதம் ஒருபோதும் தேவபுத்திரர் என்று அழைக்கவில்லை.  யோபு புத்தகத்தில் வருகிற தேவபுத்திரர்கள் என்பது மனிதர்களையே குறிக்கிறது.

            யோபு புத்தகத்தில் தேவபுத்திரர்கள் ஆண்டவருக்கு கணக்குக் கொடுத்துக்கொண்டிருந்த போது சாத்தானும் அவர்கள் நடுவே நின்றான் என்று வாசிக்கிறோம்.  இந்த நிகழ்வு நடந்தது பரலோகத்தில் அல்ல, பூமியில் நடந்தது.  அப்படியானால் அந்த தேவபுத்திரர்கள் யார்?   அவர்கள் மனிதர்கள்.  மெல்கிசேதேக்கின் வம்சத்தில் வந்தவர்கள்.  யோபுவும் அந்த வம்சத்தில் வந்தவர்.

            யோபு சரித்திரம் உண்மையில் நடந்த ஒரு வரலாறு.  யோபுவின் வரலாற்றை கடவுள் யார்மூலமாகவோ கவிதை வடிவில் எழுதி வைத்திருக்கிறார்.  அதை மோசே எபிரெயு மொழிக்கு மொழி பெயர்த்தார்.

 

சங்கீதம்:

            சங்கீத புத்தகத்தில் நூற்று ஐம்பது (150) சங்கீதங்கள் உள்ளது.  உண்மையில் நூற்று நாற்பத்து ஒன்பது (149) சங்கீதங்களே உள்ளது.  ஒரு சங்கீதம் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது.  பதினான்காம் (14) சங்கீதமும், ஐம்பத்து மூன்றாம் (53) சங்கீதமும் ஒரே சங்கீதம்.  இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

            பெரிய சங்கீதம் 119

            சிறிய சங்கீதம் 117

            சங்கீத புத்தகத்தில் சேலா என்பது யூதர்கள் சங்கீதத்தை இசையோடு இணைந்து பாடுவார்கள்.  அப்படி பாடும்போது சேலா என்று வரும் இடங்களில் அமைதியாக இருப்பார்கள், இசைக்கருவி மாத்திரம் வாசிக்கப்படும்.

            சங்கீதங்களிலிருந்து நாம் மூல உபதேசங்களை எடுக்க கூடாது.  எனென்றால் அது கவிதை.  ஐந்து கவிதைப் புத்தகங்கள் உள்ளது.  இவைகளிலிருந்து நாம் மூல உபதேசத்தை எடுக்க கூடாது.

சங்கீதம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

 

நீதிமொழிகள்:

            நீதிமொழிகள் புத்தகம் முப்பத்து ஒன்று (31) அதிகாரத்தை கொண்டது.  நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள அதிகபடியான பகுதிகளை எழுதியது சாலொமோன்.  சாலொமோன் எழுதின அனைத்து நீதிமொழிகளும் ஞானத்தை மையமாகவே வைத்து எழுதப்பட்டிருக்கும்.

            31-ம் நீதிமொழிகள் சாலொமோன் பாடினது அல்ல.  இது பெண்களைப் பற்றிய ஒரு அதிகாரம்.

 

பிரசங்கி:

            பிரசங்கி புத்தகமானது, சாலொமோன் தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தீர்க்கதரிசனமாக எழுதிய புத்தகமாகும்.  எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாய் இருக்கிறது.

 

உன்னதப்பாட்டு:

            தீர்க்கதரிசனம் என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று.  கவிதையும் புரிந்துகொள்ள கடினமானது.  உன்னதப்பாட்டு புத்தகத்தில் தீர்க்கதரிசனம் கவிதையாக எழுதப்பட்டுள்ளது.  உன்னதப்பாட்டு புத்தகத்தை சாலொமோன் எழுதுகிறார்.  எழுதின சாலொமோனுக்கே அதின் அர்த்தங்கள் புரியாது.  அந்த அளவிற்கு ஆழமான சத்தியத்தை ஆவியானவர் அந்த புத்தகத்தில் புதைத்து வைத்துள்ளார்.

            உன்னதப்பாட்டு புத்தகம் ஒரு சரியான புத்தகம் அல்ல.  அந்த புத்தகத்தை வேதத்திலிருந்து எடுத்தால் நலகமாக இருக்கும் என்று அநேக நினைக்கிறார்கள்.  காரணம் அதன் அர்த்தம் அவர்களுக்கு பிரிவதில்லை.

            உன்னதப்பாட்டு புத்தகத்தில் ஒரு அழகான ஆண் மகன் இருப்பதாகவும், அவர் அழகு இளந்த ஒரு பெண்னை அழகி என்று வர்ணிப்பதாகவும், அந்த பெண் அந்த அழகான ஆண் மகனை வர்ணிப்பதாகவும் வாசிக்கிறோம்.

            உண்மையில் அந்த ஆண் மகன் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.  சூனேமித்தியாள் என்பது சபையைக் குறிக்கிறது.  இயேசு கிறிஸ்து சபையை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை சாலொமேன் ஞானி எழுதுகிறார்.  சபை உருவாவதற்கு முன்பே  சபைக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உரவைக் குறித்து எதுவுமே புரியாமல், ஆவியானவர் சொன்னதை அப்படியே புத்தகத்தில் சாலொமோன் எழுதிவைத்துள்ளார்.  அதுவே உன்னதப்பாட்டு புத்தகம்.

            சாலொமோன் உலகில் சிறந்த ஞானி.  மட்டுமல்ல காதல் மன்னன்.  பார்க்கிற எல்லா பெண்களையும் அவர் நேசித்தார்.  எல்லா பெண்களும் அவரை நேசித்தனர்.  அந்த அளவிற்கு காதலில் விழுந்த ஒருவர் தான் சாலொமோன்.  எனவே ஆண்டவர் காதலை நன்கு புரிந்துகொண்ட ஞானியின் மூலமாக, அவர் சபையின் மீது வைத்துள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.