Type Here to Get Search Results !

சிலுவை தியானம் | ஏழு வார்த்தைகள் விளக்கவுரை | Missionary. Johnson Ashok Kumar | The Seven Words of Jesus Christ on the Cross | Jesus Sam

================
சிலுவையில் அருளுரையும் இறை வேண்டலும்
(அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்)
===============
முன்னுரை:
நான்கு நற்செய்தி நூல்களிலும் சிலுவையில் இயேசு பேசின வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இவைகள் அவரவர் சூழலுக்குத் தக்கவாறு பாதுகாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இயேசு தனது தாயாரை அன்பான சீடரிடம் ஒப்படைத்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டும் இடம் பெற்றிருப்பது, அந்த திருச்சபையில் இருந்த பொறுப்பேற்பதில் இருந்த சுணக்கமாகும். ஒருவரை ஒருவர் ஏற்பதும், தாங்குவதும் அரிதாக இருந்த சூழலில் இப்பதிகு நினைவு கூறப்பட்டது.

மத்தேயு நற்செய்தி நூலில் இடம்பெற்றுள்ள ”ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பது, பாலஸ்தின நாட்டில் இருந்த திருச்சபை பல்வேறு இன்னல்களுக்கு (சபை விலக்கம், ஊர்க்கட்டுப்பாடு, பணியின்மை, வறுமை, உறவற்ற நிலை) உட்பட்டபோது இந்த கூற்று நினைவு கூறப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அவ்வாறே ஒரு செயல் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுபட்டு புரிந்துகொள்ளப்பட்டது.

எடுத்துக்காட்டாக, மத்தேயுவில் “மலை அருளுரை“ (மத்தேயு 5-7) (மோசேயை மனதில் கொண்டு) லூக்காவிலல் ”சமவெளி அருளுரை“ (லூக்கா 6:17) அன்றைய கிரேக்க மெய்யியலாளர்கள் நகர மையத்தில் தாங்கள் கூறவிரும்பும் செய்தியை மந்தைவெளி போன்ற சந்தைவெளியில் பேசுவார்கள். சற்று உயரமாக உள்ள மேடையில் ஏறிநின்று பேசும் வழக்கம் இவைகளை அதற்குச் சான்றாகக் கூறலாம்.

சிலுவை மொழிகள் ஏழு என்று கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஆதித்திருச்சபைத் தந்தையாரில் ஒருவரான டேஷியன் என்பவர் வரிசைப்படுத்தினார். இவை இறைவேண்டலில் தொடங்கி இறை வேண்டலில் முற்றுப்பெறுகின்றது.
1. தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை.
    (லூக்கா 23:34)

2. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்.
    (லூக்கா 23:43)

3. தாயிடம், அம்மா இவரே உம் மகன், சீடரிடம், இவரே உம் தாய் என்றார்.
    (யோவான் 19:26,27)

4. என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்?
    (மத்தேயு 27:46)

5. தாகமாய் இருக்கிறேன்.
    (யோவான் 19:28)

6. எல்லாம் நிறைவேறிற்று.
    (யோவான் 19:30)

7. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
    (லூக்கா 23:46)


சற்றேறக்குறைய 40 தமிழ் வார்த்தைகளுக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தியானம் அல்லது அருளுரை எனலாம். இவைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? இதில் ஒன்று கூட நற்செய்தி நூல்களுக்கு வெளியே பதிவு செய்யப்படவில்லையே எனும் பொழுது இவையனைத்தும் இயேசுவின் வாழ்வுடனும், ஆதித்திருச்சபையின் வாழ்வுடனும் பிண்ணிப் பினைந்தவை என்பதை நற்செய்தியாளர்கள் புரிந்துகொண்டனர்.

புதிய ஏற்பாட்டில் அதிக நூல்களை எழுதியதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பவுலடிகளார் இதில் ஒன்றைக்கூட பதிவு செய்யவில்லை. ஆதித்திருச்சபைக்கும் பவுலுக்கும் இயேவின் நிகழ்வுகள், பிறப்பு, அருளுரைகள், அடையாளங்கள், அற்புதங்கள் முக்கியமாய்த் தெரியவில்லை. அவர்களின் நம்பிக்கை “சிலுவை“. அது வழங்கிய மீட்பு அதன் அடையாளமாகும் உயிர்த்தெழல். சிலுவையே திருச்சபையின் அடித்தளம். சிலுவை வெளிப்படுத்திய ஒப்படைப்பு, கீழ்படிதல், நம்பிக்கை, பாடுகள், மீட்பு, வாழ்வு, ஒப்புறவு, ஏற்புடைமை, உயிர்த்தெழல் போன்றவற்றின் மீது கவனம் இருந்தது. ஆனால் இன்றைய திருச்சபைகள் அற்புதங்களின் மீது நம்பிக்கை கொண்டு பற்றுறுியாளர்களை உருவாக்குகிறார்களே தவிர, மக்களை சிலுவையையும், அது வெளிப்படுத்தும் உயரிய ஒப்படைப்பையும், அதனால் கிடைத்த வாழ்வையும் அது பகிரப்பட வேண்டிய அவசியத்தையும் கற்றுத்தர தவறுகிறது. இயேசுவின் கட்டளையே “கற்பியுங்கள்” சீடர்களை உருவாக்குங்கள் என்பதாகும்.

யார் சீடர்கள்? இயேசுவுடன் உண்டு உறங்கி வாழ்ந்தவர்கள். இந்த அனுபவம் இன்று நம்மிடையே உள்ளதா? அதனை நோக்கிய வாழ்வை அமைத்துக் கொள்ளும் முயற்சியே மலை அருளுரை, சமவெளி அருளுரைப் போன்றதே சிலுவை அருளுரையாகும். நாம் இயேசுவுடன் வாழும் அனுபவத்தை வெறும் முயற்சியே, பயிற்சியே உபவாச நாட்கள். இது இக்காலக்கட்டத்திற்கு மட்டுமல்ல வாழ்வு முழுவதற்கும் மேற்கொள்ளும் பயிற்சியாக கொள்ள வேண்டும்.

தூய வாரம், தூய வியாழன், தூய வெள்ளி இவையெல்லாம் சடங்கல்ல. மாறாக அனுபவங்கள், வாழ்வின் நிகழ்வுகளாக்கப்பட வேண்டும். மன்னிப்பை வழங்கி அவருடன் வாழ அழைப்பு விடுக்கும் சிலுவையையும் சிலுவை மொழியையும் வாழ்வியலாக்குவோம்.


ஒன்றாம் திருமொழி
அப்பொழுது இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை“ என்றார். (லூக்கா 23:34)

ஆண்டவராகிய இயேசு சிலுவையிலிருந்து கூறிய முதலாவது திருமொழி இதுவாகும். இம்மொழியில் இயேசுவுக்கும் தன் தந்தைக்கும் இடையே இருந்த உறவு தெளிவாக வெளிப்படுகிறது. இதனை நான்கு நற்செய்தி நூல்களும் ஆங்காங்கே பதிவு செய்யத் தவறவில்லை. சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்.

1. கிறிஸ்து இயேசுவை உலகத்திற்கு அவரின் தந்தையே அனுப்பினார். தாமாக இந்த பணிக்கு வரவில்லை.
    (யோவான் 3:16)

2. கடவுளின் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே வாழ்வியல் என்று வாழ்ந்தவர்.
    (யோவான் 8:38)

3. இயேசு தன் சொந்த விருப்பத்தினடிப்படையில் எதையுமே செய்ய முற்படவில்லை. அதனால் தோல்வியுமடையவில்லை.
    (யோவான் 8:29)

4. கிறிஸ்து தனது வாழ்வில் எதனைச் செய்தால் கடவுள் / தந்தை பிரியப்படுவாரோ, மாட்சிமை அடைவாரோ அதனை மாத்திரமே செய்தார்
    (யோவான் 8:29)

5. தன்னுடைய தந்தையின் கடவுளின் உள்ளிருப்பை அனுபவித்தவர். எப்பொழுதும் கடவுளோடு இருந்தவர்.
    (யோவான் 17:11)

6. கடவுள் / தந்தை தன்னை எப்பொழுதும் தனியே விடுதில்லை என்ற உணர்வில் வாழ்ந்தவர். 
    (யோவான் 8:29)

7. கடவுளின் / தந்தையின் கட்டளையின் அன்பில் நிலைத்திருந்தார்.
    (யோவான் 15:10)

தந்தை என 84 முறை யோவானில் வருகிறது. அவரோடு இவரும், இவரோடு அவரும் இணைந்தே இருந்தனர். எனவே இயேசுவும் தந்தையும் எப்பொழுதும் இணைந்தே இருந்தனர்.

இயேசு தன் வாழ்வில் செய்த ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் தன் தந்தையிடம் அனுமதி பெற்று அல்லது ஆலோசனை பெற்று செய்தார். இதற்காக இயேசு தந்தையிடம் ஒவ்வொரு முறையும் இறை வேண்டல் செய்தார் என்று கூறினாலும் தவறில்லை. அவ்வகையில் இயேசு தன் வாழ்வில் தன் தந்தையிடம் பலமுறை இறைவேண்டல் செய்துள்ளார். அவைகளில் சிலவற்றை காண்போம்.

1. தன் பணியை துவக்கும் முன்பு 40 நாட்கள் தனித்து இறைவனுடன் வேண்டுதல் செய்தார்.
    (மத்தேயு 4)

2. திருப்பணிக்கு சீடர்களை நியமிக்கும்பொழுதும், தெரிவு செய்யும் முன்பும் இறைவேண்டல் செய்தார்.
    (லூக்கா 6:12)

3. திருப்பணி பணிக்காய் நன்றி.
    (மத்தேயு 11:25)
    (லூக்கா 10:21)

4. பசித்த மக்களுக்கு உணவளித்த போது
    (யோவான் 6:11)

5. லாசருவை உயிரோடு எழுப்பும்போது.
    (யோவான் 11:11)

6. இயேசுவைப் பார்க்கக் கிரேக்கர்கள் வந்தபோது நன்றியின் இறைவேண்டல்.
    (யோவான் 12:27,28)

7. பணி நிறைவு இறை வேண்டல்
    (யோவான் 17:1)

8. போராட்ட இறைவேண்டல்.
    (மத்தேயு 28:39)
    (மாற்கு 14:36)
    (லூக்கா 22:42)

9. சிலுவையில் மன்னிப்பு இறைவேண்டல்
    (லூக்கா 26:32)

10. ஆவியை ஒப்புகொடுத்தல்
    (மாற்கு 14:26,42)
இது போன்று பல இறைவேண்டல்களைச் செய்தார்.

இங்கு ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லவிரும்புகிறேன். தன் இறை வேண்டலில் ஒருமுறைகூட கடவுளே என்று இறைவேண்டலை தொடங்கவோ முடிக்கவோ இல்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவாகவே எல்லா இறைவேண்டல்களும் அமைந்திருக்கும்.

முதலாவதாக இவ்வார்த்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய வார்த்தை "இவர்களை மன்னியும்" என்பது. இவர்களை என்று இயேசு யாரைக் குறிப்பிடுகின்றார்? அனைவரையும் மன்னித்தார் என்று பொதுவாகக் கூறக்கூடாது. ஏனென்றால், வார்த்தையை தெளிவாக புரிந்துகொள்வது முதலாம் திருமொழிக்கு கூடுதல் பொருள்தரும். கிரேக்க மொழியில் இவர்கள் என்றால் யாராவது ஒரு கூட்டத்தை கூட்டிக்காட்ட வேண்டும். இந்த இலக்கணம் தமிழுக்கும் வேறுசில மொழிக்கும் பொதுவானது. அப்படியென்றால் இயேசு யாரைச் சுட்டிக்காட்டினார். சிலுவையில் இயேசுவை அறைந்த போர்ச்சேவகர்களையா? கேலிப்பேசிய எருசலேம் யூதர்களையா? பண்டிகைக் கொண்டாட வந்து சிலுவை வேதனையை வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டத்தினரையா? போகிற வழியில் வேடிக்கைப் பார்த்த வழிப்போக்கர்களையா? அங்குமிங்கும் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த கைவிட்டுவிட்ட சீடர்களையா? யாரை மன்னிக்குமாறு வேண்டினார்.

நிச்சயமாக போர் சேவகர்களை மன்னிக்குமாறு வேண்டியிருக்க மாட்டார். ஏனென்றால், அவர்கள் செய்தது தங்கள் எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்றியது. இது உண்மை ஊழியர்களின் கடமை என்று உணர்தல் வேண்டும். மற்றவர்களுக்கும் சிலுவை மரணத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. இந்நிலையில் யாரை மன்னிக்குமாறு வேண்டினார்?

இரண்டு கிரேக்க வார்த்தைகளை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இவர்கள் என்பதற்கு, “ஹுட்டாய்“ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, “இவர்களுக்கு எதை செய்தீர்களோ" என்ற மத்தேயுவின் வாசகத்திலும் (25:40), “யார் இவர்கள்“ என்ற வெளிப்படுத்தின விசேஷத்தின் வாசகத்திலும் (7:13) பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலுவை மொழியில் கிரேக்கத் திருமறையில் இயேசு இந்த முதலாவது வார்த்தையை உச்சரித்தபொழுது “அவுட்டோயிஸ்“ என்ற வார்த்தையை, அதாவது அவர்களை என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். இவ்வாறெனில் அவர்கள் என்பது யாரைக் குறிக்கிறது? கண்ணுக்கு மறைவாக உள்ளவர்களையே அவர்கள் என்று சொல்லுவது வழக்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அவர்கள் யார்?
1. பரிசேயர்களும் ஏரோதியர்களும் (பரிசேயர் சமயத் தலைவர்கள், ஏரோதியர் அரசியல் கூட்டத்தினர்)
    மாற்கு 3:6

2. இயேசு வளர்ந்து, தங்கி, பணிசெய்த பகுதி மக்கள் அவரின் மேலான பணியைக் கண்ட பின்னரும் எதிர்த்தனர்.
    லூக்கா 4:29

3. திருமறை அறிஞர்கள் (மலை பிரசங்கம் மற்றும் ஓய்வுநாள் பற்றிய விளக்கம் தந்ததால்) எதிராயினர்.
    மாற்கு 11:18

4. இயேசு கலிலேயாவைச் சார்ந்து வாழ்ந்ததால் (கலிலேயா சபிக்கப்பட்ட பகுதி என்ற புரிதல் யூதர்களுக்கு இருந்தது) யூதர்கள் இயேசுவை பெறுத்தனர்.
    யோவான் 7:1

5. எருசலேம் யூத சமயத் தலைவர்கள், ஆசாரியர்கள், தலைமை ஆசாரியர் (மத்தேயு 27:20) மற்றும் இவர்களோடு எருசலேம் மூப்பர், சனகரீம் சங்கம், பிலாத்து, ஏரோது ஆகியோரை இந்த பட்டியலில் அடக்க வேண்டும்.

அறியாமல் செய்தது என்ன?
1. பன்னெடுங்காலமாய் கலிலேயர்களும், சமாரியரும் மற்றும் யூதர்களும் நாடற்ற, அரசற்ற, தலைமையற்ற, விடுதலையற்ற தங்கள் நிலையை மாற்ற கடவுள் மேசியாவை (கிறிஸ்துவை, அருட்பொழிவு பெற்றவர்) அனுப்புவார் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் அவர் யூதேயாவில் தோன்றுவார், அவரின் பணி மையம் எருசலேம் நகராக இருக்கும். யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவர் என்ற நம்பிக்கை யூதர்களுக்கு கூடுதலாய் இருந்தது.

ஆனால் இயேசு பிறந்தது யூதேயா. வளர்ந்ததும், வாழ்ந்ததும், பணி செய்ததும், நட்பு பாராட்டியதும் ஓரங்கட்டப்பட்ட மக்களிடம். குறிப்பாக கலிலேயாவில். எனவே யூதர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

கடவுளால் அனுப்பப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசுவை கடைசிவரை அறியவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.

2. மேசியா உலகமெங்கும் வாழ்ந்த யூதர்களை கூட்டிச் சேர்ப்பார். (எசேக்கியேல் 34:11,12,13) என்று நம்பினர். கிரேக்க மன்னன் அலெக்சாந்தர் காலத்தில் கி.மு.4-ம் நூற்றாண்டில் யூதர்கள் இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் அரசுபணி மற்றும் இதர காரியங்களுக்காக குடியமர்த்தப்பட்டனர். இப்படி பல்வேறு நாடுகளில் வளமாய் (செல்வத்திலும், அறிவிலும்) வாழ்ந்த மக்கள் எசேக்கியல் தீர்க்கத்தில் கூட்டிச் சேர்க்கும் பணியில் உட்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையிருந்தது.

ஆனால் இயேசுவோ நாட்டிற்குள்ளேயே சிதறடிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு வாழ்விழந்து மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல் வாழ்ந்த (மத்தேயு 9:36,37) பெண்களை, நோயுள்றோரை, பாவிகளை, ஆயக்காரர்களை, தன்னை மேசியா என்று நம்பிய அந்நியர்களை, ஊனமுற்றோர்களை, ஏழைகளை ஒன்று திரட்டினார். இப்பணியை மேசியாவின் பணியென இயேசுவின் எதிரிகளால் அங்கீகரிக்க முடியவில்லை.

3. ஓய்வு நாள் போன்ற சடங்குகள் பொருளற்று பின்பற்றி வந்த நேரத்தில் வாழ்வுதரும் செயல்களை ஓய்வுநாளில் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தியும் பண்பாடும் இயேசுவால் சிதைந்து விடுமோ என்ற போலி கௌரவம் அவர்களைக் கவ்வி பிடித்தது.

4. கடவுளை தந்தை என்று இயேசு அழைத்ததை அவர்களால் அங்கீகரிக்கவே முடியவில்லை.

5. இயேசுவை கள்ளத்தீர்க்கதரிசிகளில் ஒருவராக நினைத்து அவரைக் கொலை செய்யத் துணிந்தனர் (உபாகமம் 13:1-18). ஆனால் ஒன்றை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். கள்ளத் தீர்க்கதரிசிகள் மக்களை வேற்றுக் கடவுளிடம் வழிநடத்துவார்களேத் தவிர திருமறையின் கடவுளை நோக்கி வழிநடத்த மாட்டார்கள் என்பதை உணரத்தவறினர்.

6. மேசியா தங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ரோம அரசை வீழ்த்தி புதிய அரசை எருசலேமில் தொடங்கி, தாவீது அரசை மீண்டும் உருவாக்குவார் என்று நம்பினர். ஆனால் இயேசுவோ தனது அரசு இவ்வுலகு அரசு பேன்றதல்ல. இவ்வுலகத்திற்குரியதல்ல என்று தெளிவாக உரைத்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத சமயத்தலைவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.

7. சுயநலம் கண்களை மறைத்தது. மக்கள் வழிபடக் கடவுள் அளித்த கொடையாகிய கோயிலை வணிகத்தலமாக மாற்றி மக்கள் வழிபட வழிமறித்தனர். இதற்கு கோயில் தூய்மை என்று பெயரிட்டனர். ஆனால், இயேசுவோ, கோயிலை அனைத்து மக்களுக்குமான வழிபடும் தளமாக மாற்றினார்.

8. தன் சமயத்தவரைக் கொல்ல அந்நியரின் உதவியை நாடினர். சமயமும், அரசியலும் அநீதியைச் செய்ய இன்றுபோல் அன்றும் உடன்படிக்கை செய்து கொண்டது.

ஏன் தந்தையிடம் வேண்டுதல் செய்தார்?
1. இயேசு மரியாளைப் போன்று கடவுளின் பணிசெய்ய ஒப்புக்கொடுத்த ஒரு கருவியே.

2. இயேசுவின் பணி தந்தை அனுமதித்த பணியே
    யோவான் 10:36

3. தந்தையே இயேசுவைப் பணிக்கு அனுப்பினார்.
    யோவான் 8:42

4. இயேசுவின் போதனை கடவுளுடையது.
    யோவான் 7:7

எனவே சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் கடவுளுக்கு எதிரானதே தவிர தனக்கு எதிரானது அல்ல என்ற நோக்கில் இயேசு தன் தந்தையாகிய கடவுளிடம் மன்னிக்குமாறு வேண்டுகிறார்.

மேலும் அவர்களின் பாவம் மானுட மகனுக்கு எதிரானது (யோவான் 5:27, மத்தேயு 9:6, மாற்கு 2:10, லூக்கா 5:24). உலகத் தோற்றம் முதல் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டிக்கு வாழ்வளிக்கும் பணியை இயேசு மேற்கொள்கிறார். ஆம் காலந்தோறும் காயீனின் குடும்பத்தால் நசுக்கப்படும் ஆபேலின் வீட்டாரை, கடவுளின் மக்களை மீட்கும் பணியே இப்பணி. இப்பணியை அங்கீகரிக்காமல் தடையேற்படுத்தி பணியை முடக்க நினைக்கும் மக்களுக்காக தந்தையிடம் மன்னிப்பு கோருகிறார்.

இயேசு தன் வாழ்நாளில் பகைவர்களை மன்னிக்கவும், அவர்களிடம் அன்பு செய்யவும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவும் கற்றுக்கொடுத்தார். அதையே தன் வாழ்வியலாக்குகிறார். மன்னிப்பு கடவுளின் சாயல். அச்சாயலை நாமும் பெற்று கிறிஸ்துவை உலகிற்கு அறிமுகம் செய்வோம். மன்னிப்பு ஒப்புறவுக்கும் புதுவாழ்விற்கும் வழிவகுக்கிறது.

தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்யும் நம்காலத்து சுயநலவாதிகள் மனம் மாற கடவுள் மன்னிக்க வேண்டுதல் செய்வோம். ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்தும் தொலைக்காட்சி பெட்யின் நிகழ்வுகள் உணவில், உடையில், சிந்தனையில், பேச்சில், செயலில், குடும்பத்தில், சமூகத்தில், சமயத்தில், சமாதான வாழ்வில் நஞ்சை லாபகமாக கரைத்துவிடுகிறதே யார் மன்னிப்பு கேட்பது?

பணம் விளையும் பூமியாய் பள்ளிகள் மாறி மானுட மூளையை முதலாளித்துவத்திற்கு சலவைச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளன. யார் மூலம் மன்னிப்பு கேட்பது? பொறுப்பற்ற பெற்றோர். நல்ல ஆலோசனையை உதறும் பிள்ளைகள், எதிர்கால மானுடத்திற்கு சவாலாகிறதே இதை என்ன செய்வது?

காலை முதல் மாலை வரை ஏய்த்துப் பிழைப்பதையே நோக்கமாகக் கொண்டு எளியவரை வஞ்சகமாய் ஏமாற்றும் எல்லாத் துறைகளையும் சார்ந்த வலியவரை என்ன செய்வது? கடவுளிடம் உங்களுக்காய் மன்னிப்பு மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் உங்களை மன்னிப்பதன் மூலம் நீங்கள் வாழ்கிறீர்கள். கூட்டிணைக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதில்லை. அதிலும் இன்றைய சூழலில் வாழ்வுக்காய் வேலைத்தேடி வரும் வடஇந்திய தொழிலாளர்கள் நிலை பரிதாபம். சக்கையாய் பிழியப்படுகிறார்கள். மோசே காலத்து ஆளோட்டிகள் நினைவுக்கு வருகிறார்கள். வீட்டு வேலை செய்வோர், வயலில் சூளைகளில் கொத்தடிமைகளாய் வேலை செய்வோர் இப்படிப்பட்ட தொழிலாளர்கள் தினமும் நம்மை மன்னிப்பதால்தான் நாம் வாழ்கிறோம். நமது தொழிலும் வாழ்கிறது. ஏய்ப்பவர்கள், ஏமாற்றுபவர்கள், வஞ்சிப்பவர்கள் மனம் திரும்புவது அவசியம் என்பதை உணர்த்துவோம்.


இரண்டாம் திருமொழி
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்“ (லூக்கா 23:43)

இயேசுவின் சிலுவை மொழிகளில் இது இரண்டாவது மொழியாகும். இயேசுவோடு அதே நாளில் வேறு இரண்டு கள்வர்கள் (குற்றவாளிகள்) சிலுவையில் அறையப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில் இரண்டு கள்வர்கள். ஆனால் யூதர்களைப் பொறுத்த வரையில் இயேசு உட்பட மூவருமே ரோமர்களுக்கு எதிரான கலகக்காரர்கள். இயேசுவின் காலத்தில் அரசுக்கெதிரான கலகக்காரர்கள் கள்வர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இக்கள்வர்கள் புதிய ஏற்பாட்டின் காலத்திற்கு முன்பு கிரேக்க ஆட்சி நடைபெற்ற பொழுது அவர்களுக்கெதிராக தங்கள் சமய உரிமையை அரசியல் உரிமையை நிலைநாட்ட போராடிய மக்கபேயு புரட்சியாளர்கள். இவர்களே இயேசுவின் காலத்தில் ஆயுதம் ஏந்தி ரோமருக்கு எதிராக கலகம் செய்த செலோத்தியர்கள். ஒரு குறிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. இயேசுவின் சீடர்களில் ஒருவரான சீமோன் என்பவர் செலோத்தியன் என்ற குறிப்பை லூக்கா 6:15 தருகிறது. (காணானியன்) சில வேளைகளில் இவ்வகை விடுதலைப் போராளிகள் அப்பாவி மக்களை அச்சுறுத்தி வாழ்வதும் உண்டு. இவர்கள் குகைகளில், மலைகளில், அடர்ந்த காடுகளில், மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் மறைந்து வாழ்ந்தனர். வணிகர்கள், செல்வந்தர்கள் பயணவழியாகச் செல்லும்போது அவர்கள் வருகையை அறிந்து அவர்களிடம் இருக்கும் பணத்தை, செல்வத்தை பறிப்பர். ஏழைகளுக்கு இவர்கள் தங்களையும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. இது தேவையற்ற அச்சமாகவே புரிய வேண்டும். ஏனெனில் இவர்களில் பலர் ஏழைகளே. மேலும் ரோம அரசு ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் ரோமரல்லாத ஆண்கள் அரசுக்கு தலைவர் (poll tax) செலுத்த வேண்டும். ஆனால் அக்காலத்தில் உணவுக்கே வழியில்லாமல், வேலைவாய்ப்பில்லாமல் மக்கள் அவதிப்பட்டனர் (மத்தேயு 20:6,7). இந்நிலையில் வரி எப்படி கட்டுவது? வரி கட்ட இயலாத ஆண்கள் அரசின் அடக்குமுறைக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறி, மறைவாக வாழ்ந்த கள்வர்கள் என அழைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். பலர் இவ்வியக்கத்திலிருந்து கொண்டே ஊரில் வாழும் தங்கள் குடும்பத்திற்கு தங்களுக்கு கிடைக்கும் பணத்தை குடும்பத்தின் உணவுத் தேவைக்காக அனுப்புவதும் உண்டு என்று தீயிசன் என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் கூறுகிறார். இவர்களில் இருவரே இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

இயேசுவின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள்:
1. தன்னை இறைமகன் என்று அறிக்கை செய்தாள் (யோவான் 19:7,12). இயேசுவின் காலத்தில் ரோம அரசனைத் தவிர வேறு யாரையும் கடவுளின் மகன் என்று அழைக்கக் கூடாது. வரி தொடர்பான கேள்விகளுக்கு இயேசு விடையளித்த போது (மத்தேயு 22:15-21) ரோம நாணயத்தில் உள்ள உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேள்வியெழுப்புகிறார். அதில் பொறிக்கப்பட்டிருப்பது ”ரோம அரசன் கடவுளின் மகன்“ (அகஸ்டஸ் சீசர்களின் மகன்) எனவே தான் வேறு எவரையும் அவ்வாறு அழைக்கக் கூடாது என்ற எதிர்ப்பு இருந்தது. அப்படி அழைத்தால் அவன் அரசனுக்கு எதிரானவன். தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டார்கள்.

2. ரோம அரசராகிய சீசருக்கு வரி கொடுக்க வேண்டாமென்று மக்களை ஏவிட்டார்.
    (லூக்கா 23:2)

3. கலிலேயா முதல் யூதேயா வரை மக்களிடையே கலகத்தைத்தூண்டி விட்டார்
    (லூக்கா 23:5,14)

4. மக்கள் சீரழிய காரணமாயிருந்தார். (லூக்கா 23:5) இன்றைய மக்களின் தவறான பண்பாட்டுத் தகவுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து விடுபட்டு மனம் திரும்பி கடவுளின் அரசிற்கென தகவுகளை வாழ்வில் கைக்கொள்ளச் செய்தார். ஆனால் மக்களை தூண்டிவிடுவதாக குற்றச் சாட்டு.

இயேசு இத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பிடப் பட்டார். ஆகவே இயேசு அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளோடு மூன்றாவது குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட்டார்.

இயேசுவோடு சிலுவையில் இரண்டு புறமும் இரண்டு கள்வர்கள் அறையப்பட்டார்கள். இக்கள்வர் இருவரும் இயேசுவை கேலிப்பேசிய மக்களோடு சேர்ந்து இயேசுவை கிண்டலும் கேலியும் செய்தனர் (மாற்கு 15:32, மத்தேயு 24:44). நீ மேசியாவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று கூறினர் (லூக்கா 23:39). ஆனால் இப்படிக் கேலி பேசிய கள்வர்களில் ஒருவன் எப்படி மனம் மாறினான்? இயேசுவின் எந்த வார்த்தையை (அ) செயலை கேட்ட பிறகு, கண்ட பிறகு மனம் மாறியிருப்பான். சிலுவையினடியில் நின்று கொண்டிருந்த ரோமனான நூற்றுக்கதிபதி இயேசு தன் தந்தையிடம் தன் உயிரை ஒப்படைத்த பின்பு, அனைத்தையும் கண்ட பின்பு இயேசுவை இறை மகன் என்றும், நீதிமான் என்றம் அறிக்கையிட்டான் (மாற்கு 15:39, மத்தேயு 27:57, லூக்கா 23:47). அரசின் உயர் பொறுப்பில் இருந்தவர் அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசன் ஆகியோரின் பண்பு நலன்களை நன்குணர்ந்த நூற்றுக்கதிபதியின் சான்று எத்துனை சிறப்புமிக்கது. ஆனால் இக்கள்வன் எதன் அடிப்படையில் இயேசுவை நோக்கி திரும்பியிருப்பான்? இயேசுவின் சிலுவைத் திருமொழிகளில் இம்மொழி வேறு எங்காவது இடம் பெற்றிருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ?

கள்வனில் ஏற்பட்ட மாற்றங்கள்:
1. அவனில் இருந்த கடவுள் பயம் வெளிப்படுகிறது. எனவேதான் தன் நண்பரிடம் கடவுள் பயம் இல்லையா? என கேள்வியெழுப்புகிறான். கள்வர்கள் என்று குறிப்பிடப்படும் இம்மக்கள் எத்துணை கடவுள் நம்பிக்கையுடனும், பயத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நமக்கு இது ஓர் அறைகூவல். சிலுவையில் துன்புறும் இயேசுவை அவமதிப்பது கடவுளுக்குகந்த அல்ல என்ற உணர்வடைகிறான், தன் நண்பனுக்கு உணர்த்துகிறான்.

2. தாங்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதை ஒப்புக்கொண்டு தன் நண்பனிடம் அதனை பகிர்ந்து கொள்கிறான்.

3. இயேசு குற்றமற்றவர் என்பதை தன் நண்பனுக்கு எடுத்து உரைக்கிறான். யூத சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் இயேசுவை குற்றவாளியாக கண்டனர். பிலாத்துவும் அதனை ஏற்று தண்டனையும் அளித்துவிட்டான். ஆனால் சிலுவையில் தொங்கும் நிலையிலும் அவர் குற்றமற்றவர் என்று குரலெழுப்பிய ஒரே குரல் இக்கள்வனுடையதே.

4. தன் நண்பனை திருத்த முயற்சி செய்கிறான்.

5. துன்புறுகிற இயேசுவிடம் நம்பிக்கை கொள்கிறான். அற்புதத்தையும் அடையாளத்தையும் நம்பிய யூதர்களிலும், நம்மிலும் இவன் மேலானவனாய் காட்டப்படுகிறான்.

6. சமயத்தலைர்களும், அரசியல் தலைவர்களும் காணமுடியாத மேசியா குணத்தை இக்கள்வன் இயேசுவிடம் காண்கிறான்.

7. கடவுளுக்கும், இயேசுவுக்கும் இடையே இருந்த உறவை உணர்கிறான்.

8. இயேசுவை அணுகியவர்கள் பலரும் பல்வேறு அடைமொழிகள் கொடுத்தே இயேசுவை அழைத்தனர். ஆனால் இவனோ யதார்த்தமாய் இயேசுவை பெயர் சொல்லியே அழைத்தான். இயேசுவை பெயர் சொல்லி அழைத்தவன் இவன் ஒருவனே. தங்களின் சொந்த நன்மையை மையப்படுத்தும் சிலர் பல்வேறு விதங்களில் அடைமொழிகள் தருவதுண்டு. சிலர் சிலர் மீது கண்ட நற்பண்புகளின் அடிப்படையில் அடைமொழி தருவதும் உண்டு. இயேசுவின் வாழ்வில் இரண்டுமே நடைபெற்றதுண்டு. ஆனால் இக்கள்வன் எதார்த்தாதியாக, இயேசுவை நண்பராக புரிந்துகொள்கிறான். தோழமை இயக்கத்தினராக உரிமையுடன் பெயர் சொல்லி அழைக்கிறான்.

9. இயேசுவோடு எப்பொழுதும் இருப்போம் என்று உறுதி சொன்னவர்கள் ஓடிப்போனார்கள். ஆனால் துன்புறும் இயேசுவோடு கள்வன் தன்னை இணைத்துக்கொள்கிறான்.

10. இயேசு உயிரோடு மீண்டும் வருவார் என்று நம்பினான். அவரது அரசு இவ்வுலகில் உருவாக்கப்படும் என்றும் நம்பினான். இயேசுவின் தற்போதைய நிலையையும் முன்னிறுப்பு நிலையையும் உணர்ந்தவனாய் காணப்படுகிறான். செபதேயுவின் பிள்ளைகளால் உணரமுடியாத மேலான சிந்தனை இவனிடம் காணப்படுகிறது. இயேசுவின் அரசை, கடவளரசை நம்பிய முதல் மனிதனாக அடையாளப்படுகிறான்.

11. ஆயுதப் புரட்சி வெற்றி பெறாது. அது ஒரு சுழற்சி என்பதை தன் தோழர்களுக்கு சிலுவையில் இருந்து அறைகூவல் விடுத்து இயேசுவின் வழியே அரசு அமைக்கின்ற உன்னத வழி என்பதை எடுத்துரைக்கிறான். கருத்தியல் புரட்சி கலாச்சார புரட்சியும் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல மாறாக புதிய வாழ்வுமுறை, அது வன்முறையால், ஆயுதத்தால் முடியாது
    (எபேசியர் 6:12)

12. இயேசு குடித்த அதே பாத்திரத்தை அவனும் குடிக்கிறான்.

13. கானானியப் பெண் எப்படி இயேசுவை வார்த்தையால் வென்றாளோ, வாழ்வைப் பெற்றாளோ (மாற்கு 7:29) அவ்வாறே இவனும் திருமுழுக்கு இல்லாமல் வார்த்தையால் கடவுள் அரசை வெற்றிக் கொள்கிறான்.

14. ரோம அரசு அழியும். கடவுளின் அரசு உதிக்கும் என்று அச்சமின்றி ஊரறிய உரக்க உரைக்கிறான்.

15. ஓர் ஓநாய் ஆடாய் மாறுகிறது. ஒரு ஈட்டி அரிவாளாய் மாறுகிறது. (கொலைக்கருவி உற்பத்திக் கருவியாகிறது)

16. பரதீசு என்றால் என்னவென்று பலர் ஆராய்ச்சி செய்து வியாக்கியானம் செய்வார்கள். அது தேவையற்றது. காரணம் பரதீசு என்பது ஒரு பாரசீகச் சொல். அதன் பொருள் மிகவும் அழகான பாதுகாப்பான இடம். அது கடவுள் உள்ள இடமே தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. எனவே, இந்த ஆய்வை விடுத்து கள்வன், இயேசுவின் இயக்கத்துடன் இணைந்துக்கொண்டது போல் நாம் கடவுளரசை அமைக்க எவருடன், எந்த இயக்கத்துடன் இணைந்து பணி செய்தால் மக்கள் விடுதலை வாழ்வு வாழ்வார்கள் என்று ஆய்ந்து இணைந்து செயல்படுவதே சாலச்சிறந்தது.

ஒரு மனிதனுக்கு மீட்பு எத்தருணத்திலும் கிடைக்கும் என்பதற்கு இதை விட மிகப்பெரிய சான்று எதுவுமில்லை. நாமும் நம்முடைய பிழைகளைக் குற்றங்களை மீறுதல்களை, கீழ்ப்படியாமையை அறிக்கையிடுவோம். ஆண்டவரின் அரசில் இடம் பெறுவோம்.


மூன்றாம் திருமொழி
“அப்பொழுது இயேசு தம்முடைய தாயாரும் தமக்கு அன்பாயிருந்த சீடனும் அருகே நிற்கக் கண்டு தாயாரிடம் அம்மா அதோ உன் மகன், பின்பு சீடனை நோக்கி அதோ உன் தாய் என்றார். அந்நேரம் முதல் அந்தச் சீடன் அவளைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டான்“ (யோவான் 19:26)

மரியாளும் இயேசுவும்:
யூதேயா நாட்டைச் சார்ந்த பெத்லகேமின் ஊரான் யோசேப்பு. அவரின் மனைவி மரியாள். இவர்களுக்கு யாக்கோபு, யோசே, யூதா மற்றும் சீமோன் ஆகிய ஆண் பிள்ளைகளும் (மாற்கு 6:3) பெண் பிள்ளைகளும் இருந்தனர். இவர்களின் மூத்த மகன் இயேசு என்று சமநோக்கு நற்செய்தி நூல்கள் கூறுகின்றன. புலம் பெயர்ந்து பிழைப்புத்தேடி கலிலேயாவில் குடியேறியவர் யோசேப்பு. உழைத்தாலும் வறுமையில் வாடிய குடும்பம் (காணிக்கையாக ஆட்டுக்குட்டி தர இயலாமல் புறாவை காணிக்கைத்தர வந்தார்கள் (லூக்கா 2:24, லேவியராகம் 12:8). வறுமையில் வாழ்ந்ததால் தாயுக்கும் மூத்த மகனுக்கும் உள்ள உறவும் ஒப்படைப்பும் கூடுதலாகவே இருக்கும். இது நாம் அறிந்த உண்மை. இயேசுவின் குடும்பமும் விதிவிலக்காய் இருந்திருக்க இயலாது. மூத்த ஆண் மகனை கடவுளுக்கு நியமிக்க வேண்டுமென மோசேயின் சட்டம் இதனை வலியுறுத்துகிறது. (யாத்திராகமம் 13:2,12,15). மரியாளும் தன் மகனை பரிசுயனாகவே வளர்த்தார் (யோவான் 3:2). அவரும் ரபி என்றே அழைக்கப்பட்டார். யூதத் தாய் சமயம் சார்ந்த அனைத்து கட்டளைகளையும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டியவர், அதனையும் சிறப்பாகவே செய்துள்ளார். இதனை இயேசுவின் வாழ்விலும் காணமுடிகின்றது. எருசலேம் சென்றபோது இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்வு நமக்கு இதனை உறுதிசெய்கிறது.

வாரந்தோறும் ஜெப ஆலயம் செல்வது, தவறாமல் பண்டிகைக்கு எருசலேம் செல்வது (உபாகமம் 16:16) திருமறையை புரிந்து கொள்வது, அதற்கு விளக்கம் தருவது (மாற்கு 6:1,2)

ஒரு தச்சன் பிள்ளைகள் எவ்வகை உடை உடுத்தியிருக்க இயலும். இதனை இயேசு தன் உடையை போர்ச் சேவகர்கள் பங்கிடும் பொழுது நிச்சயம் நினைத்து தனக்கு உடை உடுத்திய தாயை நோக்கிப் பார்ப்பதாக யோவான் அழகுற பதிவு செய்துள்ளார்.

யோவான் நற்செய்தி முழுவதும் எங்கும் இயேசுவின் குடும்பம் பற்றிய பதிவேயில்லை. கானாவூர் நிகழ்வில் தாயார் பற்றிய குறிப்புள்ளதை தவிர பெயரோ வேறு தகவல்களோ இல்லை. ஆனால் இயேசுவுக்கு தாயின் மீதிருந்த பாசத்தை யோவான் ஆசிரியர் மற்றவர்களை விட வலிமையாய் சிலுவையினடியில் பதிவு செய்கிறார்.

கானாவூர் நிகழ்வில் உமக்கும் எனக்கும் என்ன? என்று கேள்வி எழுப்புவதன் மூலம் உறவற்ற நிலையிலிருப்பது போல் மேலோட்டமாய் காணப்படும். ஆனால் தாங்கள் அழைப்பாளர்களே தவிர உடையவர்கள் அல்ல என்ற பொருளும் அதனுள் அடங்கியுள்ளது. மரியாளோ ஊராரின் கையறு நிலையைக் கண்டு பதறும் பண்பாளராக யோவான் காட்டுவதையும் அதனை நோக்கி தன் மகனை நகர்த்தும் உயர்ந்த தாயாகவும் காட்டுகிறார் ஆசிரியர்.

கப்பர்நகூமில் இயேசு ஒரு வீட்டினுள் இருந்தபொழுது இயேசுவின் குடும்பமே (தந்தை தவிர, அவர் இறந்திருக்க வேண்டும்) அவரைத் தேடி வந்ததாகவும் அது அவருக்கு அறிவிக்கப்பட்டபொழுது யார் எனது தாய்? எனக்கு சகோதரன் சகோதரி யார்? எனற கேள்வியெழுப்பி அங்கும உறவற்ற நிலையில் இயேசு இருந்ததாகவும் காணப்படுகின்றது. ஆனால் கடவுளின குடும்பம் மிகப் பெரியது, அதில் அனைவருக்கும் உறவும், உரிமையும், பொறுப்புமுள்ளதை கூட்டிக் காட்டப்படுவதையும் உணர வேண்டும். (மாற்கு 3:32-35)

பெற்றோரை பாதுகாக்க வேண்டும். அன்பு பாராட்ட வேண்டும் என்று தனது சீடர்களுக்கு கறபித்தவர் இயேசு. ஏனெனில் இன்று போலவே அன்றும் பெற்றோரை பயனற்றவர்களாக கருதி அவர்களை பேணுவதை விட கடவுளுக்கு “கொரபான் காணிக்கை“ அளித்துவிடும் வழக்கம் இருந்தது (மாற்கு 7:11) அப்படி காணிக்கை படைத்துவிட்டு பொறுப்பிலிருந்து தப்பிப்பதை (இன்றைய நடுத்தர குடும்பத்தினரும் செல்வந்தரும் பெறறோரை முதியோர் இல்லத்தில் தங்க வைத்து பணம கட்டுவிடுவது போன்றது) இயேசுவும் மிகவும கடுமையாய் கண்டித்தார்.

கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக தன் வாழநாளையே அர்ப்பணித்துக்கொண்ட தனது தாய். கடவுளுக்காய் அவப்பேற்றினைச சுமந்து தன்னை கடவுளுக்கு கருவியாக்கினது மட்டுமின்றி தன்னையும கருவியாக்க அவள் எடுத்துக்கொண்ட வாழ்க்கைப் பயணத்தை இயேசு நினைத்துப் பார்க்கிறார். பெற்று வளர்த்ததோடு கடமை முடிந்து விட்டது என்று நின்றுவிடாமல் தன் பணி பயணத்துடன் தனனையும் இணைத்துக்கொண்டு கலிலேய பெண்களுக்கு ஓர் அணித்தலைவியாய் நெடுமபணத்தை மேற்கொண்டு தனக்கு மறைவான ஆதரவாய் நடந்ததையும் இயேசு நினைத்துப் பார்க்கிறார்.

தன்னைப் பாதுகாக்க யூதேயாவிலிருந்து எகிப்துக்கும் பின்னர் எகிப்திலிருந்து கலிலேயாவுக்கும என மறைந்து மறைந்து ஓடிஒளிந்து பாதுகாத்த தாய் இப்பொழுது பவனியாய் கலிலேயாவிலிருந்து சமாரியா வழியாய் யூயோவுக்கு கூட்டத்துடன் வந்தவர். பதுக்கி பாதுகாத்ததாய் தன்னை பலிகொடுத்துவிட்டு துடிதுடிக்க நிற்பதையும் (2 மக்கபேயர் 7-ம் அதிகாரத்தில் ஏழு மகன்களை கடவுளுக்காய் அந்தியோகு எப்பிபனாஸால் பலிகொடுத்த தாயை ஒத்த நம்பிக்கை) இயேசு உணர்கிறார். தான் கைவிடப்பட்டு துன்புறுவதைவிட தன்னைச் சுமந்த தாய் என்ன பதற்றத்தில் நிற்கிறாரோ என்று அனைத்து ஆறுதல் சொல்லவேண்டிய நிலையில் தன் சகோதரர்களோ, சகோதரிகளோ, சீடர்களோ, கலிலேய ஆண்களோ ஒருவரும் அங்கு இல்லாத நிலை இயேசுவுக்கு இன்னும் வேதனையைக் கூட்டுகிறது. ஏனெனில் நான்கு நற்செய்தி நூல்களுமே சீடர்கள் இரவே சிதறி ஓடிவிட்டதாகவும், ஒரு சீடர் நிர்வாணமாய் ஓடிவிட்டதாகவும், சிலர் ஒரு வீடடிற்குள் தாழிட்டு பாதுகாப்பாய் தங்கிவிட்டதாகவும், பேதுருவும் தலைமை ஆசாரியனுக்கு அறிமுகமான ஒரு சீடன மட்டுமே இங்குமங்குமாய் நடமாடிக் கொண்கடிருந்தனர். (அவர் எருசலேமைச் சார்ந்த மரியாளின் மகனாகிய யோவான் மாற்காக இருந்திருக்க வேண்டும். இவன் பேதுருவோடும் பவுலோடும் நற்செய்தி பயணத்தில் இணைத்துககொண்டவன்).

சிலுவையினடியில் பெண்கள்:
எந்த போராட்டத்திலும் பெண்களின் துணிவு சிறப்புமிக்கதாகவே இருக்கும். இயேசுவின் இயக்கத்திலும் அப்படியே இருந்துள்ளது. கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றிய பெண்கள் சிலுவை வரை பின் தொடர்ந்துள்ளனர். ஓடி ஒளியவில்லை (லூக்கா 23:55, மாற்கு 15:41). இவர்களுடன் தாயாகிய மரியாள், மகதலேனாமரியாள், சின்ன யாக்கோபுக்கும் யோசேப்புக்கும் தாய் அதாவது கிளேப்பாவின் மனைவியும், சலோமே (மாற்கு 15:40, யோவான் 19:25) என்பவர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

தாயுடன் இயேசுவின் இறுதி உரையாடல்:
கானாவூர் திருமணத்தில் பெண்ணே என்று தான் இயேசு தன் தாயை அழைத்ததாக குறிப்புள்ளது (யோவான் 2:6). ஆனால் நான்கு நற்செய்தி நூல்களிலேயே இந்த ஒரு இடத்தில் மாத்திரமே இயேசு தனது தாயாரை “அம்மா“ என்று அழைத்ததாக (யோவான் 19:26) குறிப்புள்ளது. இதை உணர்ந்ததால் நம் உள்ளம் அதிலும் வேதனையின் ஊடே இயேசு தன் தாயாரை அம்மா என்று உரக்கக் கூவித்தான் அழைத்திருக்க வேண்டும். (கேலியும் கிண்டலும் நிறைந்த சூழல், குருபுறமும் வலி பொறுக்காமல் கதறும் கள்வர்கள்). இந்த குரலைக் கேட்டுத்தான் பூமி அதிர்ந்ததோ, வானம் இருண்டதோ, திரைச்சீலை கிழிந்ததோ? கடவுளைத் தந்தையென்றார், மரியானை அம்மா என்றார். சிலுவையில் அவரின் பிறப்பின் உண்மை உறுதி செய்யப்படுகின்றது.

துடித்துத் துவண்டு கொண்டிருந்த மரியாள் தன் மகன் தன்னை அம்மா என்று அழைப்பதைக் கேட்ட மாத்திரத்தில் நிமிர்ந்திருப்பார். அம்மா அதோ உன் மகன் என்று தன் அன்பான சீடனைக் காட்டுகிறார். சீடனிடம் அதோ உன் தாய் என்று கூறுகிறார். தனித்து விடப்பட்ட தாய்க்கு, தங்கள் தாயைத் தனியே தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்ட தன் சகோதரர்களின் நிலையை உறுதி செய்துகொள்ள இயலாத நிலையில் இயேசு தாய்க்கு ஒரு நம்பிக்கையைத் தருகின்றார்.

அன்பான சீடன் யார்?
யோவான் ஆசிரியர் இரண்டு புதிர்களை வைத்துள்ளார்.
1. அன்பான சீடன் யார் என்ற உண்மையை சொல்லாமலேயே விட்டது

2. இயேசுவின் தாய் ”மரியாள்“ என்ற பெயரை எங்கும் பதிவு செய்யாமல் போனது. மத்தேயு, மாற்கு, லூக்கா இதனை பதிவு செய்துள்ளார்கள்.

இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க இன்றுவரை ஆய்வுகள் தொடர்கின்றன. பெயர் குறிப்பிடாத சீடரைப் பற்றிய குறிப்புகள் (யோவான் 1:35,37,39,40; 13:23; 21:23,24) பல இடங்களில் காணப்படுகின்றன. இதனையும் கருத்தில் கொள்வது அவசியம்.

அன்பான சீடன் என்பது “திருச்சபை“ என்று பொருள் புரிய வேண்டும் என்பது பல இறையியலாளர்களின் கருத்து, சிலர் யோவான் சீடனே என்றும் கூறுவர். ஆனால் யோவான் எல்லாவற்றையும் விட்டுவந்தவர். தொடர்ந்து மிகப்பெரிய பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கப்போகிறவர் அவரிடம் கூடுதல் சுமையை இயேசு கொடுப்பாரா? அல்லது தன்னையே நம்பி ஏராளமான பெண்கள் நாடுவிட்டுநாடு வந்திருக்கும் பொழுது தனது தாயாருக்கு மட்டும் (நான்கு சகோதரர்கள் இருக்கும் பொழுது) பாதுகாப்பை இயேசு உறுதி செய்திருப்பாரா? அப்படி செய்திருந்தால் அது சுயநலமாகாதா? மகதலேனா மரியாள் இயேசுவுக்காகவே வாழ்ந்தவராயிற்றே. அடக்கம் செய்யப்பட்ட பின்பும் இயேசுவின் உடலுக்காய் படாத பாடுபட்டவராயிற்றே. இப்படி அநேக பெண்கள் சிலுவையினடியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் ஆதரவு யார்?

இயேசுவின் இந்த மூன்றாம் திருமொழியை எப்படிப் புரிந்து கொள்வது? யோவான் நூலில் முக்கிக் கட்டளை “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்“ என்பது. இதனைக் கொண்டு இதற்கு தெளிவுபெறலாம். தன்னையே தனது வார்த்தைகளையே நம்பி சிலுவையினடியில் நிற்கும் மக்களைப் பார்த்து ஒருவரையொருவர் பொறுப்பெடுங்கள். யாரையும் கைவிட்டுவிடாதீர்கள். அன்பு செய்யுங்கள். பெண்களை தாயாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு நான் இருக்க வேண்டிய இடத்தில் நீங்கள் மகனாயிருங்கள் என்றும் இயேசு கூறியிருப்பார் என்று புரிந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். கடவுளின் இயக்கம் தொடர இந்த உறவு அவசியம் என்பதையும், இயேசு உணர்ந்தே கூறியிருப்பார்.

பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரி அமைத்துத் தருகிறார். வாழும் பொழுது கவனியாமல் பின்னர் வாழ்நாள் முழுவதும் அய்யோ, என் பெற்றோரை கவனியாமல் விட்டு விட்டேனே என்று மனதுக்குள் குற்ற உணர்வோடு காலமெல்லாம் வெளியே தெரியாமல் ஊமை அழுகை அழவேண்டாம். பெற்றோரை நேசியுங்கள். அது கடவுளுக்கு செய்யும் தொண்டு.

“யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கினான்“ ஆதியாகமம் 48:12. என்ற வாசகம் பிள்ளைகள் பெற்றோரை எப்படி தொழ வேண்டுமென்பதை கற்றுத்தருகிறது.


நான்காம் திருமொழி
“ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எலோயீ எலோயீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்“ (மாற்கு 15:34, மத்தேயு 27:46)

இயேசு சிலுவையிலிருந்து கூறின நான்காம் திருமொழி இதுவாகும். சிலுவைத் திருமொழிகளிலேயே இதற்கு மட்டும்தான் பொருள் விளக்கம் தரப்படுகிறது. காரணம் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தாய் மொழியான அரமேயச் சொற்கள் சில இடம்பெற்றுள்ளன. உதாரணமாக “எப்பத்தா“ (திறந்திடு), “தலித்தாகூமி“ (சிறு பெண்ணே எழுந்திரு), மாராநாத போன்ற சொற்களை இதற்கு உதாரணமாய் கூறலாம். அவ்வாறே இந்த நான்காம் வார்த்தையிலும் மாற்கு நற்செய்தி நூலில் எலோயீ என்றும், மத்தேயு நற்செய்தி நூலில் ஏலி என்றும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எலோயி என்பது அரமேயச் சொல்லாகும். ஏலி என்பது எபிரேயச் சொல்லாகும். எலோயீ என்பது சிலுவையின் குரலை பதிவு செய்த சீடனின் குரலாகும். ஏலி என்பது மத்தேயு எழுதிய யூதத்திருச்சபையின் (எபிரெய மொழி பேசிய திருச்சபை) குரலாகும். ஆனால் சிலுவையினடியில் நின்று கொண்டிருந்த எவருக்கும் (கலிலேயப் பெண்களைத் தவிர) இயேசுவின் கதறல் புரியவில்லை. எனவேதான், அவர்கள் எலியாவை அழைக்கிறான் என்று புரிந்து கொண்டார்கள். காரணம் யூதர்கள் தாங்கள் துன்புறுகின்றபோது எலியா வந்து காப்பார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசுவும் அதே நம்பிக்கையில் கதறுகிறார் என்று எண்ணினர். ஆனால் அவரோ தன்னுடைய கடவுளை அழைக்கிறார் என்று விளங்கிக் கொள்ளாமல் போனது அவர்களின் அறியாமை.

ஏல் அல்லது யேல் என்று எபிரேய பெயர்கள் முடியும் அவை கடவுளை குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, யோவேல் (ஏல்) தானியேல் (யேல்) போன்ற பெயர்களைக் கூறலாம். இயேசுவும் ”ஏல்“ என்று அழைத்தார்.

என் கடவுள்:
இயேசு முற்றிலும் கைவிடப்பட்டு நிர்வாணமாய் சிலுவையில் அவமானத்தின் சின்னமாய் நின்றுகொண்டிருந்த பொழுதும் கடவுளை சொந்தம் பாராட்டுகிறார். தனக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த உறவை உரக்கச் சொல்லுகிறார். என் தந்தை என்று அழைக்கின்றபோது எந்த உணர்வோடு அழைத்தாரோ அதே உணர்வோடு கடவுளை அழைக்கிறார். அவருக்கு திருமறையின் பகுதிகள் தெளிவாக மனக்கண் முன் வருகிறது. உலகத்தில் ஆபேல் முதல் சகரியா வரை அநேகர் தன்னைப் போன்றே கதறியிருப்பர் என்ற சிந்தனையும் அவருள் ஓடியது என்பதை மறக்கக்கூடாது. கடவுளுக்காய் உண்மையாய் வாழுகின்றபோது இத்தகைய கொடுந்துயருக்குள் உள்ளாவது தடுக்க இயலாதது. ஆனால் இது முடிவல்ல, இதுவும் இயேசு அறிந்ததே.

பாபிலோன் நாட்டில் யூதர்கள் சிறையிருப்பில் இருந்தபொழுது எந்த நம்பிக்கைக் கொண்டிருந்தார்களோ அதனைவிட மேலான நம்பிக்கையை இயேசு கொண்டிருந்தார் (எங்கள் கடவுள் தப்புவிக்க வல்லவர் (தானியேல் 3:17), அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் (ஆபகூக் 3:17) போன்ற பகுதிகளை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

ஏன் என்னைக் கைவிட்டீர்?
இயேசுவின் சிலுவை மரணம் திடீரென்று எதிர்பாராமல் நடந்து விட்டது. இயேசு அதிர்ந்தார். அதனால் இப்படிக் கதறினார் என்று கருதக்கூடாது. ஏனென்றால் பணியின் துவக்கத்தில் கப்பர்நகூமில் சூம்பின கையுடைய ஒரு மனிததனை குணப்படுத்திய அன்றே இயேசுவை கொலைச்செய்ய திட்டமிட்டதை இயேசு நன்கறிவார் (மாற்கு 3:6). இதன் பின்னர் பலமுறை இயேசுவைக் கொலைசெய்ய வேதபாரகர்(மாற்கு 11:18) யூதர் (யோவான் 5:18) சொந்த ஊர் மக்கள் (லூக்கா 4:29) கல்லெறிந்து கொல்ல முயற்சி (யோவான் 8:31,39) எருசலேமில் கொல்ல முயற்சி இவையெல்லாவற்றையும் இயேசு நன்கு அறிந்திருந்தார்.

இயேசு கலிலேயா பணிமுடித்து எருசலேமுக்கு புறப்பட்டபோது, தனது சீடர்களிடம் தனக்கு எருசலேமில் என்ன நடக்கும் என்பதை மூன்றுமுறை (மாற்கு 8:31, மத்தேயு 16:21, லூக்கா 9:22-ல் முதன்முறையாகவும் மாற்கு 9:30, மத்தேயு 17:22, லூக்கா 9:43-ல் இரண்டாவது முறையாகவும், மாற்கு 10:32, மத்தேயு 20:17, லூக்கா 18:31-ல் மூன்றாவது முறையாகவும்) தெளிவாக அறிவித்தார். சீடர்களில் ஒருவராகிய சீமோன், இது நடக்கக்கூடாது என்று இயேசுவை வேறு பாதைக்கு திருப்ப முயற்சித்ததும் உண்டு (மத்தேயு 16:21-23). ஆனால் இயேசு சிலுவையை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார் (மாற்கு 9:31, யோவான் 8:28, மாற்கு 10:33, 14-21, லூக்கா 22:22, மத்தேயு 17:12)

இயேசுவுக்கும் இச்சிலுவைப் பயணத்தில் தயக்கம் ஏற்பட்டதுண்டு, அப்பொழுது இயேசுவை மோசேயும், எலியாவும் சந்தித்து தங்கள் வாழ்வின் அனுபவத்தை இயேசுவுக்கு எடுத்துரைத்து தொடர்ந்து பயணதம் செய்ய இயேசுவுக்கு தைரியமூட்டினர். இதுவே மறுரூப நிகழ்வு (மத்தேயு 17:1-8). இதில் இயேசுவுக்கு வெள்ளை உடை அளித்தல், துன்புறுவதற்கு ஆயத்தப்படுத்துதல் (வெளிப்படுத்தல் 7:14).

சீடர்களின் அதாவது திருச்சபைக்கு கிறிஸ்துவை பின்பற்றும் வாழ்வு நெறிகளில் தயக்கம், சுணக்கம் மற்றும் பயம் ஏற்படும் பொழுது நமக்கு சிறந்த முன்மாதிரியாகவே மறுரூப நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. ஆம் நம்முடைய முற்பிதாக்கள், பணியாளர்கள், அருட்பணியாளர்கள் (கிரஹம் ஸ்டெயின்) நமக்கு முன்மாதிரிகளை அமைத்துள்ளனர். இயேசுவுக்கு மோசேயும், எலியாவும். நமக்கோ அவர்களும் இயேசுவும் நம்முடைய முற்பிதாக்களும் சான்றாக உள்ளனர்.

கலிலேய சீடர்கள் தன்னோடு திரளாக தோட்டத்தில் விழித்திருந்த போது, கூட்டமாய் வந்த ரோம போர் சேவகர்களும், எருசலேம் கோயில் சேவகர்களும் அவர்களை வளைத்த பொழுது மக்களைக் காக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர்களைத் தப்புவிக்கச் செய்தவர் (யேவான் 18:8).

எனவே இயேசுவின் இக்கறல் கைவிடப்பட்ட கதறல் அல்ல, மாறாக உலகத்தோற்றம் முதல் கடவுளுக்காக துன்புறுத்தப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் கடவுளை நோக்கி உலகில் கதறுகிறார்களோ அவர்களின் கூட்டுக்குரல் இது (ஆபேல், ஆகார், பாபிலோனில் யூதர்கள், கிரேக்க அரசன் அந்தியோகு எப்பிபனஸ் காலத்தில் அங்கங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்ட யூதர்களின் கதறுதலோடு தன்னுடைய கதறலையும் இயேசு இணைத்துக் கொண்டார்).

இந்த இறைவேண்டுதல் சங்கீதங்களின் புத்தகத்தில் 22-ம் சங்கீதத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதில் தன் முன்னோர்க்கு உதவின கடவுள் தன்னைக் கைவிட்டதற்கான காரணத்தை அறியாமல் கதறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடவுள நிச்சயம் மறுமொழி அளிப்பார், நீதியை செய்வார், எதிர்கால சந்ததி அவரைத் தொழும், அவர்கள் திருப்தி அடைவார்கள். கடவுள் ஒருநாளும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை இச் சங்கீதத்தில் இடம் பெற்றுள்ளது. திருமறையின் 39 நூல்களையும் நன்கு கற்றறிந்த பரிசேயனான் இயேசுவுக்கு துன்ப நேரத்தில் இச்சங்கீதம் நினைவில் வந்திருக்க வேண்டும். எனவேதான் என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று சங்கீதக்காரனோடு சேர்ந்து இப்பாடலை அவரும் உரக்கக் கூவுகிறார்.

இயேசு துன்புறும் மக்களுடைய பிரதிநிதியாக மானுட மகனாக தானியேல் நூல் எடுத்துரைக்கிறது (தானியேல் 2:13), இம் மனுமகன் உலகின் அனைத்து துன்புறுகிற மக்களின் பதிலாளாக நிற்கிறார். இது அவரின் குரல் மாத்திரமல்ல மாறாக அனைத்து துன்புறும் மக்களின் குரலாகும்.

கடவுளின் மகனாக உலகின் மீட்பிற்கு வடிவம் கொடுக்க வந்தவருக்கே இந்நிலை என்றால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் ஒன்றும் புதிதல்ல, பெரிதல்ல என்று எதிர்கால கடவுளின் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு இவ்விதமாக சிலுவையிலிருந்து கூறினார். திருமறையின் கடவுள் துன்புறுத்துகிற கடவுளல்ல, துன்புறுகிற மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவர். முட்செடி பற்றி எரிந்தபோது நடுவில் தோன்றிய கடவுளின குரல், எகிப்து நாட்டில் அடிமையாயிருந்தவர்களின் குரல், பாபிலோன் நாட்டில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களோடு அக்கினிச்சூளையில் நான்காவது மனிதராக நடமாடியவர் இயேசுவின் கடவுள்.

உக்ரைன் நாட்டில் மக்களுடன் தன்னை இணைத்துக்கொள்பவர். உலக முழுவதும் சுயநல வன்முறையால் பாடுபடும் மக்களின் பிரதிநிதியாக இயேசு நிற்கிறார். ஹீரோஷிமாவில் ஒன்றும் அறியாமல் திருமறையின் கடவுளை பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து வழிபட்டு வந்த சுமார் 10,000 பேர் அணுகுண்டு வீச்சில் கொல்லப்பட்டார்களே (தியான் சந்த்கார் பகிர்ந்த தகவல் இது) அவர்களின் கூக்குரலும் இதில் அடங்கியுள்ளது.

இதனைவிடக் கொடுமை சொல்லி அழுவதற்குக்கூட மனிதத் துணையற்று நம்பிக்கையுடைய உறவற்று மனதிற்குள்ளாகவே புழுங்கிக்கொண்டிருக்கும் (யோவான் 16:20) துக்கத்தின் வெடித்து சிதறிய ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மானுட மக்களின் குரலே இயேசுவின் குரல்.

இக்குரளை நாம் கேட்டதுண்டோ? நேரம் ஒதுக்கியதுண்டோ? அவர்களுக்காக, அவைகளுக்காக தீர்வை நோக்கி அவர்களுடன் பயணப்பட்ட அனுபவம் உண்டா? இல்லையேல் இன்றே தீர்மானம் செய்வோம். அவர்களுக்குள் இணைவோம். அவர்கள் வாழ்வுக்காய் உழைப்போம்.


ஐந்தாம் திருமொழி
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது“ என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். (யோவான் 19:28)

புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் பலரும் 5 மற்றும் 6-ம் வார்த்தைகளை ஒரே வார்த்தையாய் புரிவது கூடுதல் பொருள் தரும் என்கின்றனர். ஆயினும் “எல்லாம் முடிந்தது” ஒரு வாக்கியமாகவும், “நான் தாகமாயிருக்கிறேன்” மற்றொரு வாக்கியமாகவும் புரிவதும் தவறல்ல. ஏனெனில் இரண்டும் முழுமையான வாக்கியங்களே. இங்கு நாம் ஐந்து ஆறு என்று தனித்தனியாகவே தியானிக்கிறோம். காரணம் இறையியல் அழுத்தம் கூடுதலாக கிடைக்கும் என்பதால்.

சிலுவைத் திருமொழிகளில் ஐந்தாம் மற்றும் ஆறாம் மொழிகள் மாத்திரமே திருமறை வாக்கியம் நிறைவேற கூறப்பட்டதாகவும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவெனில் சிலுவை மரணமும் அதனால் கிடைத்த மீட்பும் திருமறையின் வெளிப்பாடே. மேசியா வருகை திருமறையின் நிறைவுறலே, அவரின் வார்த்தையும் வாழ்வும் எதிர்பார்ப்பின் நிறைவேற்றமே. அவ்வாறு இருக்கையில் இவ்விருவார்த்தைகள் மாத்திரம் நிறைவேறியது என்று புரிதல் தேவையற்றது. மேலும் சங்கீத பாடல்கள் அனுபவ வெளிப்பாடே தவிர எதிர்பார்ப்பின் பாடல்கள் அல்ல.

சங்கீதம் 69 குற்றமற்ற ஒருவர் துன்புறுத்தப்பட்ட பொழுது எழுதப்பட்ட புலம்பல் பாடலாகும். குற்றமற்ற தனக்கு தீமை செய்ய பலர் எழுகின்றனர். நான் வீழ்ந்து போவது போன்று உணர்கிறேன். என் எதிரிகளை அழியும். ஏனெனில் நீர் ஏழைகளைக் கைவிடாத கடவுள், எனவே, உம்மைத் துதிப்பேன் என்கிறது.

இச்சங்கீதத்தின் அடிப்படையில் பார்த்தல் இயேசுவுக்கு ஒத்துப்போவது போன்று தோன்றியாலும் (குதிகால் தூக்குதல் சங்கீதம் 41:9 தொண்டை வறலுதல் சங்கீதம் 69:3 வஸ்திரம் பங்கிடல் சங்கீதம் 22:18) சங்கீதக்காரன் போன்று தன் பகைவர்களை அவர் சபிக்கவில்லை என்பதையும் கவனித்தால் இது நிறைவேற்றம் அல்ல. உண்மையாய் வாழ்பவர்கள் துன்பத்திற்கு உள்ளாவது இயற்கையே. ஆனால் இறுதி வெற்றி அவர்களுக்கு கடவுள் தருவார்.

நீதிக்காய் துன்புறுகிறபோது இறுதிவெற்றி கிடைக்கும் என்றால் அது எப்பொழுது என்ற கேள்வியும் எழும்பப்படுவது நியாயமே! விண்ணகத்தில் கிடைக்கும் மாற்று கருத்தில்லை; ஆனால் இவ்வுலகில் மாற்றம் காணமுடியாதா? என்ற கேள்விக்கு விடை சில நேரங்களில் நீதிக்காய் துன்புறுகிற பொழுது துன்புறுகிறவர் கண் பார்க்கவே நீதி கிடைக்கும். சிறந்த எடுத்துக்காட்டு நிறவேறி போராட்டமும் நெல்சன் மண்டேலாவும் அதற்கு சான்றாக கூறலாம்.

இந்தியா போன்ற நாடுகளில் வகுப்பு மற்றும் சாதிக்கு எதிரான நீதிக்கான போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே நீதி கிடைத்தாலும் மானுடம் மாறுகிறது என்ற நம்பிக்கையை நாம் மறுக்க முடியாது. ஆனால் இறுதி வெற்றிக்காய் தொடர்ந்து குரலெழுப்ப வேண்டும். இன்றும் இந்திய குடியரசின் முதல் குடிமகன் முன்னாள் குடியரசுத் தலைவரே (ராம் கோவிந்த) கோயிலுக்கு வெளியே தான் கடவுளை வழிபட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வாழ்வில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் “ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்“ சங்கீதம் 69:21 அப்படிப்பட்ட வார்த்தைகளை தீர்க்கங்களாகத் கொள்ளத் தேவையில்லை. வியர்வையோ இரத்தமோ உடலிலிருந்து அதிகமாய் வெளியேறும் பொழுது தாகமெடுப்பது பொதுவான நியதி. இயேசுவும் இவ்வனுபவத்தினூடே கடந்து வருவதால் தாகமெடுத்தது.

“தண்ணீர் வேட்கை“ சிலுவையில் அறையப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் ஏற்படும் அனுபவம். எனவேதான் சிலுவையில் அருகே திராட்சைச் சாறு (காடி) வைத்திருந்தார்கள். குற்றவாளிகள் கதறும்பொழுது கொடுத்த வலியை தாங்க உதவிடுவார்களாம். கொடூர கொலைகாரர்களின் செயலில் ஓர் இரக்கச் செயல் அவ்வளவே.

யோவான் நூலில் மாத்திரம் இவ்வார்த்தை ஏன்?
இயேசுவை கிறிஸ்து என்றும் கடவுளின் மகன் என்றும் சீடர்கள் தொடர்ந்து அறிக்கை செய்தனர் (அப்போஸ்தலர் 2). இதனால் எரிச்சலடைந்த யூத மக்களும், சமயத் தலைவர்களும் சீடர்களை சமூக விலக்கமும், சமய விலக்கமும் செய்தனர் (யோவான் 9). உறவற்று திரிந்த இந்த நிலையில் ரோம அரசும் சந்தேகப் பார்வையை இயேசுவின் சீடர்களின் மீது பதித்தது. யூதர்களால் கல்லெறிதல் (persecution) ஒருபுறம், ரோம சேவகர்கள் தேடுதல் மறுபுறம் என இருதலைக் கொள்ளியாக இயேசுவின் பற்றாளர்கள் துக்கத்திற்குள்ளாயினர். யாரிடம் போய் நிற்பது திக்குத்தெரியாத நிலை. இந்நிலையில் மக்களுக்கு எழுதபபட்ட நம்பிக்கையின் வாக்கியமே “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்“ என்பது. ஆனால் அவ்வாக்கியம் இன்று பணமாக்க பயன்படுகிறது.

யூதேயாவை விட்டு சீடர்கள் பல்வேறு திசைகளுக்கும் சிதறி ஓடி பல இடங்களில் தஞ்சம் புகுந்து பின்னர் அங்கு நற்செய்தியை வளர்த்தனர். எபேசு எனும் இடத்தைச் சுற்றிலும் இப்பணி வெகுவாய் வளர்ந்தது. அக் காலக்கட்டத்தில் திரிபுக் கோட்பாடுகள் வளர்ந்தன. நாசரேத் இயேசு ஒரு மனிதனே, இறையாற்றல் உடையவர் அல்ல என்ற நம்பிக்கையை உருவாக்க சிலர் முனைந்தனர். வேறு சிலர் இயேசு மனித தோற்றத்தில் இருந்த கடவுள் அவர் மனிதனல்ல என்றனர். (தோன்றி மறையும் ஆற்றல் பெற்றவர் எனவே சிலுவைப்பாடுகள் பாடுகளே அல்ல என்றனர். 1 யோவான் 4:2)

இத்திரிபுக் கோட்பாடுகளுக்கு பதிலுரைக்கவே யோவான் ஆதியிலே வார்த்தையாய் கிறிஸ்து இருந்தார் என்று அவரின் முன்னிருப்பு நிலையையும், பின்னர் அவர் மாம்சமானார் (யோவான் 1:14) என்பதன் மூலம் படைக்கும் முன்னர் கடவுளின் சாயலும் உலகில் வாழ்ந்தபொழுது முழு மனுடமாகவும் வாழ்ந்தார் என்பது யோவானின் புரிதலும் நம்பிக்கையுமாகும்.

இயேசு தன்னை நம்பி தன் போதனைகளை நம்பிய பெரிய இயக்கமாக்கிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தை காட்டிக் கொடுக்கவோ கைவிடவோ இல்லை. அவர்களுக்காக தன்னை அர்ப்பணித்தார் (யோவான் 18:8). தனது சிந்தனைகள், கடவுளின் விருப்பம், மக்களின் வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக கொடுந்துயரைத் தாங்கி நின்றார் (பாபிலோனில் வாழ்ந்த யூதர்களையும், கிரேக்க மன்னன் அந்தியோகு எபிபனாசு காலத்து மக்கள் போன்றும் துயரங்களை எதிரகொள்ளல்). அத்துன்பத்தின் ஊடே தன் தண்ணீர் வேட்கையை வெளிப்படுத்தினார். அவருக்கு பசி எடுத்தது (மத்தேயு 21:28) தாகமெடுத்தது (யோவான் 4:7) சிலுவைப் பாடுகளில் இவ்வார்த்தை அவரின் மானுடத்தை வெளிப்படுத்துகிறது. முழு மனிதராக வாழ்ந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தை இயேசு தன் வாழ்வில் இரண்டு முறை பயன்படுத்துகிறார். சமாரிய பணியைத் தொடங்கும் முன்னர் ஒரு பெண்ணிடம், ”தாகமாயிருக்கிறேன், தாகத்துக்கத் தா” என்றார்.

கிராமபுறத்தில் இன்று உரையாடலைத் தொடங்கும் முன்னர் “ஒரு வாய்க்கு பாக்கு இருக்கிறதா?” அல்லது “வெற்றிலை இருக்கிறதா? சுண்ணமாம்பு இருக்கிறதா?“ என்று ஏதாவது கேட்டு அதனூடே உரையாடலைத் தொடங்குவது வழக்கம். இயேசுவும் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார். தாகத்துக்குத் தா என்று ஆரம்பித்து சமாரியரையே தன்னை மேசியா என்று உணரவைத்தார் (யோவான் 4:42). பணியின் தொடக்கம் அது. சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்பது பணி தொடர்ந்திட விழைத்த தாகமாகும்.

கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வது என்பது அகலமான பாதையில் நடப்பது அல்ல, அது வரையறைகளையும், எல்லைகளையும் கொண்டது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய தன்னை வருத்திக் கொண்டுதான், பயிற்சி எடுத்து தன் உருவத்தை தன் உடையை குறைத்துதான் உள்ளே செல்ல முடியும். அப்படியே செல்ல முடியாது. இயேசுவே இதனைத் தன் வாழ்வில் மாதிரியை அமைத்துத் தருகிறார்.

துன்புறும் இயேசுவுக்கு சமூகத்தின் பங்களிப்பு என்ன? இயேசுவைத் சுற்றி நின்றவர்களில் ஒருசில கலிலேய பெண்களைத் தவிர ஆண்களில் நிக்கதோம், அரிமத்தியாவின் யோசேப்பு மட்டுமே நின்றுகொண்டிருந்தனர். கைதியாய் நிற்கும் இயேசுவுக்கு இவர்கள் யாரும் உதவிட முடியாது, கூடாது. இன்றும் நீதிமன்த்திற்கு அழைத்து வரப்படும் சிறைக் கைதிகளுக்கு நீதிமன்றத்தில் உறவினர்கள் எதுவும் தரக்கூடாது (சட்டத்திற்கு புறம்பாக காவலர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதிப்பது வேறு தகவல்).

சிலுவையின் அடியில் நின்றவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்காளானைக் கொண்டுவந்து காடியைத் தோய்த்து கொடுத்தான். தாகமாயிருக்கிறேன் என்று கேட்டதால் அவன் தரவில்லை (மத்தேயு 27:48, மாற்கு 15:36) அவர் வலி பொறுக்காமல் கதறுவதால் மயக்கமடைந்து விடுவாரோ அல்லது காடியை காடியை கொடுத்தாலும் மயங்கி விடுவாரோ என்ற சிந்தனையும் இருந்தது. அவர் கதறினால் தான் எலியா வருவாரோ என்று பார்க்கலாம் என்ற சிந்தனையினால் தான் கொடுக்க வேண்டாம் என்று தடுத்தனர். கதற அனுமதித்தனர். இன்னும் கொஞ்சம் கத்தினால் ஒருவேளை எலியா வருவாரா என்று பார்க்கலாம் அடையாளத்தைக் காண்பதற்காகவே. இந்த சூழலில் காடி கொடுக்கப்பட்டது. (மத்தேயு 27:49, மாற்கு 15:36)

நீதிமான் துன்புறும் பொழுது எலியா வந்து காப்பார் என்ற நம்பிக்கை யூதரிடம் நிலவியது. இயேசு உண்மையில் நீதிமானாய் இருந்தால் எலியா வருவாரா பார்ப்போம் என்றும், அப்படி வந்தால் நம்புவோம் என்றும் காத்திருந்தனர். ஏனெனில் காடியை கொடுத்தவர்கள் யூதர்கள், எலியா வருவார் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள். வலியை உணராதவர்கள் எலியாவை எதிர்பார்த்தார்கள்.

அற்புதங்களினால் இயேசுவின் பின் சென்றவர்கள் (யோவான் 4:48). அவர்களிடம் ஏற்கனவே யோனாவின் அடையாளமேயன்றி வேறு அடையாளம் கிடையாது (மாற்கு 8:11,12) என்று கூறிவிட்டார் (மத்தேயு 12:39, மத்தேயு 16:4). மேலும் இயேசுவைக் காப்பாற்ற எலியா வந்தால் காலந்தோறும் கடவுளுக்காகவே இரத்த சாட்சியாய் மரித்த ஆபேல் முதல் சகரியா வரை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் நம்பிக்கை பொய்யோ என்றும் ஆகிவிடும். எனவே எலியா வருகையை எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமே இவர்கள்.

யோவான் நற்செய்தி நூலில் இயேசு கேட்ட பின்னர் காடி கொடுக்கப்பட்டது (யோவான் 19:28,29,30). இயேசு குடித்தார் என்ற குறிப்புத் தரப்படுகிறன்றது. நான் குடிக்கும் பாத்திரம் என்று இயேசு எதனைக் குறிப்பிட்டாரோ (மத்தேயு 19:22, மாற்கு 10:38) அதனைக் குடித்து முடித்தார். எதற்காக இயேசு தன் வாழ்வை கடவுளுக்கு ஒப்படைத்தாரோ அது நிறைவேறியது. தன் வாழ்வில் கடவுளுக்காக வாழ ஒப்படைத்தபொழுது எதிர்பட்ட எல்லா இன்னல்களையும் எதிர்கொண்டார். எதிர்கொள்ள இயலாத நிலையில் பின்வாங்கியும் உள்ளார் (மத்தேயு 14:21) தனித்து சென்றுள்ளார் (மத்தேயு 14:23) போராயுள்ளார் (லூக்கா 22:43) தன் வேதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் (மத்தேயு 16:21, மத்தேயு 26:28) கடவுளின் திட்டம் இயேசுவின் வாழ்வில் அப்படியே நிறைவேற்றப்பட்டது. இயேசு ஒரு கருவியே என்று புரிதல் தேவையில்லை. கடவுள் இயேசுவை தூரத்தில் இருந்து இயக்கினார். சாத்தானையும் யூதாஸையும் அவரே இயக்கினார் என்று கருதத்தேவையில்லை. மாறாக இயேசுவின் மரணம் அநீதிக்கு எதிராக போராடிய இயேசுவைக் கொல்ல சாத்தான் திட்டமிட்டு அதற்கு யூதாஸ் கருவியாக்கப்பட்டான் (லூக்கா 22:3) என்று புரிவது சிறப்பானது.

நம் வாழ்விலும் தெரிந்தும், தெரியாமலும் உண்மையாய் வாழ்கிற எளிய வாழ்வின் மீது நம்பிக்கைக் கொண்ட, நீதியின் மீது தாகமுடையவர்களுக்கு எதிராக அல்லது அநீதிக்கு ஆதரவாக நாம் கருவியாகிறோம்.

இதனை நாம் தெரிந்து செய்வதில்லை. இதனைத்தான் நமது இறைவேண்டல்களில் “மாம்சமோ பலவீனமுள்ளது“ எனவே எங்களை மன்னியும் என்று கடவுளை வாஞ்சிக்கிறோம். எடுத்துக்காட்டாக காற்று மாசுபட, நீர் ஆதாரம் தனியார் மயமாக்கிட, வனங்கள் அழிந்திட, மழைநீரை பொறுப்புடன் சேகரிக்காமை இவையெல்லாம் சிறிய காரியங்கள் அல்ல. மாறாக எதிர்கால மானுட வாழ்வை உறுதிசெய்வது. கடவுளே “நான் இனி படைப்புகளை அழிக்கமாட்டேன்“ என்று கூறியுள்ளார். அவ்வாறெனில் வேறு யார் அழிக்கப்போவது? நீதியின் மீது பசி தாகம் இல்லாதவர்கள் தான் அழிப்பார்கள். “கடவுளே உம்மில் இருந்த தாகத்தை எங்களுக்குத் தா என்று கேட்போம்…“ இயேசுவின் பாத்திரத்தை நாம் குடிக்க முயற்சிப்போம். வாழ்வுக்காக ஏங்கிடும் மக்களுக்காக இயேசு ஏற்ற துன்புறும் பாத்திரத்தை நாமும் ஏற்போம். தொடர் பணிக்காக அவரின் தாகத்தை நமது வாழ்வின் ஒப்படைப்பின் மூலம் இயேசுவின் தாகத்தை தனிப்போம்.


ஆறாம் திருமொழி
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். (யோவான் 19:30)

ஆறாம் திருமொழி யோவான் நற்செய்திக்கே உரிய சிறப்பான சொல்லாகும். பொது மொழிபெயர்ப்பில் (திருவிவிலியத்தில்) “அந்த இரசத்தை குடித்ததும்” என்ற வார்த்தையாக கூறுவார். ஆழ்ந்த பொருள் பொதிந்த, வார்த்தையாகும். “குடித்ததும்” என்ற சொல் இயேசு தனது சீடர்களுடன் உரையாடிய பொழுது பயன்படுத்திய வார்த்தையாகும். மாற்கு நூலில் 10:38-ல் “நான் குடிக்காமல் இருப்பேனோ“ என்றும் கூறியுள்ளார். எனவேதான் குடிக்க வேண்டியதை, (தான் அனுபவிக்க வேண்டியதைத) குடித்து முடித்ததும் கூறிய வார்த்தையாக யோவான் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

சொல் விளக்கம்:
“முடிந்தது“ என்று சில மொழிபெயர்ப்புகளில் காணப்பட்டாலும் “நிறைவேற்று“ என்பதே சரியான பொருளாகும். இவ்வார்த்தை இப்பொருளில் இதற்கு முன்பும் பின்பும் திருமறையில் எங்கும் பயன்படுத்தவில்லை என்று கெமிலின் என்பவர் கூறுவதை கவனிக்க தவறக்கூடாது. படைப்பின் வரலாற்றை எழுதிய ஆசிரியர் நிறைவாக பயன்படுத்திய வார்த்தை (ஆதியாகமம் 2:1)

இதனைச் சிறப்புமிக்க வார்த்தை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவ்வார்த்தை பொதுவாக வணிகத்துறையில் பயன்படுத்தும் வார்த்தையாகும். குறிப்பாக வங்கிக்கணக்கில் புதியதாக கணக்குத் தொடங்குமுன் முந்தைய கணக்குகள் முடிந்துவிட்டன என்று எழுதுவது போன்று பொருள்கொண்ட வார்த்தையாகும். அவ்வாறே கடன் உறுதிமொழி கொடுத்து வாங்கிய பின்னர் கடன் முழுவதும் கடன் முழுவதும் திருப்பிச் செலுத்திய பின்னர் முடிந்தது (பைசலானது) என்று கூறுவது போன்றதும் இதுவாகும். மேலும் பணியாளர்கள் பணி நிறைவுற்றதும் தங்கள் பணி நிறைவுற்றது என்று தங்கள் எஜமானர்களிடம் கூறுவது போன்ற பொருளையும் தரும் வார்த்தையாகும். இயேசுவும் கடவுளுக்குச் சிறந்த பணியாளர். அவர் தனது பணியை முடித்து அறிக்கைத் தருகிறார்.

யோவான் நற்செய்தி நூல் மற்ற நூல்களிலிருந்து மகிவும் வேறுபட்டது. இயேசுவின் முன் இருப்புநிலையை மையப்படுத்தும் நூலாகும். ஆதியில் இருந்தவர், எல்லாம் அவர் வழியாய் உண்டாயின, அவர் வார்த்தையாய் (லோகாஸ்) கடவுளுடன் இருந்தவர். அவரே கடவுளின் திட்டத்தைத நிறைவேற்ற பூமிக்கு மானுடனாக வந்தவர். “ஒருவரும் கெட்டுப்போகாமல் நிலைவாழ்வு பெற“ (யோவான் 3:16) வார்த்தை மாம்சமானவர் (யோவான் 1:14) எதற்காக அவர் ஊனுடல் எடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிற்று.

தொடக்கத்தில் மானுடம் கடவுளின் சாயலை அனுபவித்தது. ஆனால் அதனை உணரவில்லை. சாத்தான் தவறான வழிகாட்டுதலின் பெயரில் கடவுளைப்போல இருந்த அவர்கள் அதனை மறந்து கடவுளைப் போலாக மானுடம் நினைத்தது. கடவுள் ஏதோ அதிகாரமுடைய சக்தி, அந்த அதிகாரத்தை சக்தியை தாங்களும் பெறவேண்டும் என்று சாத்தானின் மாய வலையில் விழுந்து அதிகார தாகத்தால், மோகத்தால், வெறியால் கீழ்படியாதிருத்தல் என்ற பாவத்தை செய்தனர். இப் பாவத்தால், வெறியால் கீழ்படியாதிருத்தல் என்ற பாவத்தை செய்தனர். இப் பாவத்தால் பெற்றிருந்த சாயலை இழந்து சாத்தானின் சாயலை பெற்றனர். இப் பாவத்தால் பெற்றிருந்த சாயலை இழந்து சாத்தானின் சாயலை பெற்றனர். தனக்குச் சொந்தமான மானுடம் வேறு ஒருவனுடைய சாயலுடன் வாழுகிறதே என்று தனது சாயலை மானுடம் பெற தனது மகனை உலகிற்கு அனுப்பினார். அவரும் கடவுளின் சாயலை உலகிற்கு வாழ்வாக்கினார். பிறர்க்காய் தன்னை அளித்தல், தன்னுடையதை அளித்தல், அதிகாரத்தை விட்டுக் கொடுத்தல், தன்னை நம்பியவர்களை வஞ்சகம் செய்யாதிருத்தல் போன்ற இன்னும் பல கவுளின் சாயலை. சுருக்கமாக கூறின், “அன்பு செய்வதே“ கடவுளின் சாயல் என்பதை வாழ்க்கையாக்கிய கடவுளின், மகனின் செயல் நிறைவுற்றது.

அவ்வாறே மக்களை மீட்கும் நோக்கத்துடன் கடவுள் எழுப்பிய மக்கள் ஒவ்வொருவர் பற்றியும் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்விலும் நிறைவேறின. அதிலும் குறிப்பாக முதலாம் ஒப்பந்த நூலில் (பழைய ஏற்பாடு) குறிப்பிட்டுள்ள பல்வேறு இறைவாக்குகள் அச்சுபிறழாமல் இயேசுவின் பாடுகளில் நிறைவேறின. இதனைத்தான் மெக்தீ என்பவர் இயேசுவின் சிலுவைத் தொடர்பான நிகழ்வுகளில் மாட்டும் சுமார் 28 இறைவாக்குகள் நிறைவேறிற்று என்கிறார். அதே சமயம் கசப்பைக் கலந்துகொடுத்தார்கள், குதிகாலைத் தூக்கினான் என்பதெல்லாம் தீர்க்கத் தரிசனங்களாக புரிந்து கொள்ளப்பட்டனவே தவிர அவ்வகைச் சங்கீதங்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட வாழ்வின் அனுபவ வெளிப்பாடே தவிர இயேசுவுக்கு அளிக்கப்பட்ட காடியைப் பற்றியோ, உடன் நண்பராய் இருந்தே இயேசுவுக்கு துரோகம் இழைத்த யூதாஸ் பற்றியோ கூறப்பட்டவை அல்ல. எனவே அப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின என்று எண்ணுதல் கூடாது. ஏனெனில் அவை அனுபவ பகிர்வே தவிர எதிர்கால எதிர்பார்ப்புகள் அல்ல.

எவைகளெல்லாம் நிறைவேறிற்று:
மானுடத்திற்கு மீட்பைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு கடவுளால் இயேசுவுக்கு வழங்கப்பட்டது. “இவர் என் நேசக்குமாரன்“ என்று அழைப்புத் தரப்பட்டது. இந்த அழைப்பின் பணியை நிறைவு செய்தார்.

கடவுளுக்கும் மானுடத்திற்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை சமன்படுத்த தொடங்கப்பட்ட பணி நிறைவேறிற்று.

கடவுளின் சாயலை மானுடத்திற்கு பெற்றுத்தரும் பணி நிறைவுற்றது. மோசே மூலம் கடவுள் அனைத்துலக அடிமைகளின் விடுதலையை உறுதிசெய்ய நிறைவேற்றினார் (யாத்திராகமம் 12:38). எகிப்தில் அனைத்துலகைச் சார்ந்த அடிமைகளும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். உலகில் அடிமை வியாபாரம் மேலோங்கியிருந்த நாடு எகிப்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல இயேசுவின் மூலம் அனைத்துலக மக்களின் மீட்பு உறுதி செய்யப்பட்டது.

ஆபேலைக் கொன்ற காயினின் வம்சம் அதற்காய் மனம் வருத்தப்படவில்லை. கடவுளின் மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையாகவும் கருதினர் (ஆதியாகமம் 4:24). தங்களைக் கொல்பவர்களுக்கு பழியுண்டாகும் என்று அதிகாரமமதையுடன் நடந்துகொண்டனர். தங்களுக்கு காயம், தழும்பு யாராவது ஏற்படுத்தினாலும் தங்கள் பக்கம் கடவுள் இருப்பதாக கூறி அவர்களைக் கொல்லும் அளவு துணிந்து கொடூரம் செய்தனர். ஆனால் இயேசுவின் வாழ்வின் மூலம் ஆபேலின் இரத்தம் சிந்துதல் இனி இல்லை என்ற புரிதலில் கொன்றவன் (நூற்றுக்கதிபதி) சிலுவையின் அடியில் இயேசுவை பணிகிறார். “இவரே கடவுளின் மகன்“ என்கிறார். மனம் திரும்பாத சகாப்தம் நிறைவுறுகின்றது. மன்னிப்பு கோருவதும் மன்னிப்பு வழங்குவதுமாக புதுயுகம் தொடங்குகிறது (மாற்கு 15:25)

யோவான் 4:34-ல் “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என் போஜனம்“ என்று பணியைத் தொடங்கினார். அப்பணியானது யோவான் 17:4-ல் “நான் செய்யும்படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்துமுடித்தேன்“ என்கிறார். இயேசுவின் உலகின் பணி நிறைவுற்றது.

இங்கு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ரோம நாட்டின் சிறைச்சாலைகளில் ஒவ்வொரு குற்றவாளியின் அறையின் முன்பும் அக்குற்றவாளி செய்த குற்றத்தையும் அதற்குரிய தண்டனையையும் வரிசைப்படுத்தி அதனை எழுதி அறையின் முன்பு பதித்து வைத்திருப்பார்களாம். தண்டனை நாட்கள் நிறைவுற்றதும் அந்த குற்றவாளியின் கையில் சுவரில் பதித்து வைத்ததை எடுத்து கொடுத்து, “நிறைவேற்றினார்“ என்று எழுதி கொடுத்துவிடுவார்களாம். இது அவரவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவரவர நிறைவேற்றுதல், ஆனால் இயேசுவோ உலகின் குற்றத்திற்கு தண்டனையை தான் அனுபவித்து நிறைவேற்றுகின்றார்.

கடவுளின மீட்புப்பணி நிறைவேறிவிட்டதா? என கேள்வியெழுப்பினால், இல்லை எனறே விடைவரும். ஏனெனில் முடிவுற்றிருந்தால் ரோமர் 8:13-ல் கடவுளின பிள்ளைகள் என்று வெளிப்படுவார்கள் என்று படைப்பு பேராவலுடன் காத்திருக்கிறதாமே அதற்கு யார் பொறுப்பேற்பது, பிரசவ வேதனைப்படும் படைப்பை விடுதலைச் செய்வது யார்? எனவேத தான் இயேசு இது தொடர் பணி தன்னோடு முடிவதில்லை என்று “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்“ என்றாரோ (மாற்கு 16:16)

பவுலும் தனது கருத்தைக் கூறும்போது கொலோசெயர் 1:24-ல் “கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானவற்றை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக மாம்சத்தில் நிறைவாக்கி வருகிறேன்“ என்கிறார். இன்னும் குறையுள்ளது அதனை நிறைவு செய்ய நானும் இன்னும் பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். எனவேதான் இயேசு என் நாமத்தினால் நீங்கள் எதனையாவது இழந்தால் நூறத்தணையாக பெறுவீர்கள் என்றார். அதற்காகத்தான் இப்பணியைத் தொடரத்தான் உலகமெங்கும் போய் சீடர்களை ஏற்படுத்துங்கள் என்றார். பணி நிறைவுற்றிருந்தால் சீடர்கள் எதற்காக? அடிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தும் இரத்தம் சொட்ட ஆட்டுக்குட்டியானவர் நிற்க வேண்டிய அவசியம் என்ன? இயேசு அறபுதமான முன்மாதிரியை வைக்கினறார். அந்த பணியை “சிலுவை சுமக்கும் பணியை“ தொடர வேண்டும் (மத்தேயு 10:38) என்றும் அழைப்புத் தருகிறார். நம் மூலம் தன் பணியை நிறைவு செய்ய அழைப்புத் தருகின்றார்.

நிறைவாக நம்முடைய வாழ்வில் என்றாவது “நிறைவு“ என்று எப்போதாவது சொல்லியிருப்போமா? கடவுள் ஒவ்வொருவரையும் ஏதாகிலும் ஓர் உயர்வான நோக்கத்திற்காக இவ்வுலகில் வாழ அனுமதிக்கிறார். அந்த நோக்கத்தை நாம் நிறைவு செய்கிறோமா, வாழ்வு முழுவதும் நிறைவற்றவர்களாய் ஏதேனும் ஒரு தாகத்துடன் தான் வாழ்கிறோம். அதுவும் சுயநலம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது.

உலகில் மானுடம் பிறக்கிறது. அது பெயரோடு பிறக்கவில்லை அம்மானுடம் இவ்வுலகில் பெயரை மட்டுமே சுமந்து திரிகிறது. நாமும் ஒரு மானுடம் என்ற உணர்வோடு மானுடத்தின் தன்மையுடன் ஒரு நாளாகிலும் வாழ்ந்திருப்போமா? உடை, உணவு, உறையுள் இவற்றின் மூலம் மாத்திரம் மானுடம் தன்னை மானுடம் என்று நிலைநிறுத்துவதல்ல. மாறாக மானுடத்திற்கு உரிய தன்மையும் வாழ்ந்துள்ளோமா? சாக்ரட்டீஸ் உலகில் மனிதனை பகல்வேளையின் கையில் விளக்குடன் தேடினாராம். காரணம் மனிதர் ஒருவரும் அவர் கண்ணில் காணப்படவில்லையாம். ஆனால் அவருக்குப் பின் வாழ்ந்த இயேசு மனிதனாக வாழ்ந்து காட்டினார். அதனை நிறைவு செய்தார். நாம் இயேசுவைப் பின்பற்ற ஆயத்தமா? நம் வாழ்வின் நோக்கத்தை நம்மில் குடும்பத்தில் சமூகத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்போம்.


ஏழாம் திருமொழி
“தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்“ என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர்த்துறந்தார். (லூக்கா 23:46)

சிலுவையில் இயேசு மகா சத்தமாய் கூறிய செய்திகள் இரண்டு. அவை:
1. என் கடவுளே என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்.

2. பிதாவே உம் கைகளில் என் ஆவி (உயிர்).

இவ்விரண்டு செய்திகளுமே இயேசுவின் பற்றுறுதியின் வெளிப்பாடு எனலாம். என்னத் துன்பம் வந்தாலும் இவரே என் கடவுள். இவரிடமே என் வாழ்வை, உயிரை ஒப்படைப்பேன் என்ற உறுதிப்பாடு.

யூத மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். (அசீரியர், பாபிலோனியர், மேதியர், பாரசீகர், கிரேக்கர், ரோமர் இவர்களால் துன்பங்களைச் சந்தித்தவர்கள்). அவர்கள் வழக்குகளைச் சந்திக்கும் பொழுதும், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொழுதும் ஏறெடுக்கும் மன்றாட்டு இது. “என் ஆவியை உம்மிடம் ஒப்புவிக்கிறேன்“ என் வாழ்வு உம் கையில் உள்ளது என்பது பொருளாகும்.

யூதத் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தங்கள் பிள்ளைகள் இந்த இறைவேண்டலைச் செய்ய கற்றுத் தருவார்களாம். அவ்வாறே மரணத்தருாயிலும் இந்த இறைவேண்டலைச் செய்யும் வழக்கம் இருந்துள்ளது.

இயேசு சிலுவையில் சொன்ன ஆவியை ஒப்படைக்கும் இறுதி வாக்கியம் இதுவாக வரிசைப்படுத்ப்படுத்தியுள்ளார் ஆதித்திருச்சபைத் தலைவர் டேஷியன் என்பவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், இவ்வாக்கியம் சங்கீதம் 31-ல் இடம் பெற்றுள்ளது (சங்கீதம 31:5). இச் சங்கீதத்தில் கடவுளுக்கு அஞ்சி வாழுபவர்கள வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும் போராட்டங்களையும் வரிசைப்படுத்துகிறார். (துயரம், தவிப்பு, பலம் இழத்தல், நிந்தை, திகில், ஒதுக்கப்படுதல், அடையாளம் இழந்து போதல், அவதூறு, விரோதமான ஆலோசனைகள் தனக்கு எதிராக எழுதல், கொலை செய்ய முயற்சி) இவ்வளவையும் எதிர்கொண்டாலும் கர்த்தரே தனது அடைக்கலம் என்ற மேலான நம்பிக்கை காணப்படுகின்றது. மேலும் தனது மன்றாட்டை கடவுள் பேட்டார். உண்மையுள்ளவர்களை தற்காப்பார் என்ற நம்பிக்கையும் மேலோங்கியுள்ளது.

சங்கீதக்காரன் தனது ஆவியை ஒப்படைத்து எதிர்கால சந்ததிக்கு ஓர் அறைகூவலையும் வைக்கிறார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் உங்கள் இருதயத்தில் பலங்கொண்டு தைரியமாயிருங்கள்“ என்கிறார்.

இதே சங்கீதத்தைத் தான் இயேசுவும் நினைவு கூர்ந்து உரக்கக் கத்தி கூறியது. தன்னுடைய ஒப்படைப்பை மட்டும் மனதில் கொண்டு, தனக்கு நம்பிக்கையூட்டுவது மட்டுமாக இயேசு கருதவில்லை. எதிர்காலத்தில் தன்னைப்போல் துன்பங்களை எதிர்கொள்பவர்களுக்கும் மாறாக நம்பிக்கையூட்டும் செய்தியாகவே இயேசு இதனை கூறுகின்றார். எனவேதான் இயேசுவைப் போன்றே ஸ்தேவான் தனது ஆவியை கடவுளிடம் ஒப்படைத்தார் (அப்போஸ்தலர் 7:59,60) பவுலும் தனது வாழ் முடிக்கும் பொழுது, “ஓட்டத்தை முடித்தேன்“ எனது போராட்ட வாழ்வு பொருளுள்ளது என்று உறுதிசெய்கிறார் (2 தீமோத்தேயு 4:17). கிறிஸ்துவுக்காய் வாழ்ந்த அன்னை தெரசா, கிரஹம்ஸ்டெயின்ஸ், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அருட்சகோதரிகள் இத்தகைய போராட்ட வாழ்வையே மேற்கொண்டார்கள். 1863-ம் ஆண்டு சாதியத்தை தாங்கிப்பிடித்த தனது அருட்பணி இயக்கத்தை விட்டு உயர்வான நோக்கத்திற்காக மயிலாடு துறை (அன்றைய மாயூரம்) என்ற ஊரிலிருந்து வெளியேறி அலைந்து திரிந்து தன்னை நம்பிய ஆதரவற்ற பிள்ளைகளுடனும் தனது குடும்பத்துடனும் தேராகு போன்று கால்நடையாய் நூற்றுக்கணக்கான மைல் தூரத்தைக் கடந்து தனது பிள்ளைகளையும் இழந்து நல்ல போராட்டத்தைப் போராடி பெத்தானிய என்ற இடத்தில் (மேல் பட்டாம்பாக்கம்) சாதியற்ற அருட்பணியைத் துவக்கிய கிறிஸ்டோபர காரல என்பாருக்கும் இத்தகைய நம்பிக்கையே மேலோங்கி நின்றது. கைவிடப்பட்டாலும் ஆண்டவரின் இருப்புநிலை தனனைத் தாங்குகிறது என்ற அசைகக முடியாத நம்பிக்கை.

எப்பொழுது இயேசு தனது உயிரை ஒப்படைத்தார்? எல்லாம் நிறைவேறின பின்பு அதாவது கடவுளுக்கும் மானுடத்திற்கும் இடையே இருந்த தடைச் சுவர் தகர்க்கப்பட்டது. அதன் அடையாளமே எருசலேம் கோயிலின் திரைச்சீலை இரண்டாய் கிழிந்தது. தூயதிருத்தலம் காணக்கூடாதபடி அது மறைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அது விலக்கப்பட்டது. கடவுளுக்கும் மானுடத்திற்கும் இடையே மீண்டும் உறவு புதுப்பிக்கப்பட்டுவிட்டது.

சூரியன் தன் ஒளியைத் தரவில்லை, எங்கும் இருள் சூழ்ந்தது. சிலுவை மரணம் பாவ இருளை அகற்றியதாக கிறிஸ்தவ நம்பிக்கையாயிற்றே இதுவென்ன தலைக்கீழாய் உள்ளது என்று யோசிக்கலாம். விடியும் முன் ஒரு காரிருள் இலுக்குமாம் நள்ளிரவுப் பொழுதில் அப்படியிருந்திருக்குமோ. அல்லது யோவான் நம்பிக்கையில் உலகின் அனைத்துப் படைப்புகளுமே வார்த்தையின் வழியாய் (கிறிஸ்துவின் வழியாய்) (யோவான் 1:3) படைக்கப்பட்டனவே. படைப்புகளில் ஒன்றான சூரியன் தன்னைப் படைத்தவர் படும் பாடுகளை வேதனைகளைக் காணச் சகிக்காமல் கண்களை மூடிக் கொண்டதால் ஏற்பட்ட இருளோ? ஆனால் ஒன்று எகிப்தில் விடுதலைக்கு முன்னர் இருள் ஏற்பட்டது. அது இஸ்ரயேல் மக்களின் கடவுளின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகும். எகிப்தின் கடவுள் சூரியன். சூரியனையே ஒளிகொடுக்காமல் தடை செய்ததன் வழியே எகிப்தியருக்கு தங்கள் கடவுளின் ஆற்றலை மோசே வெளிப்படுத்தினார். அந்த விடுலைக்கு முன்னர் ஓர் இருள். இங்கே இயேசுவின் வழியே கிடைக்கும் மீட்புக்கு முனபு ஓர் இருள்.

மகா சத்தம்:
நான்காவது வார்த்தை மற்றும் ஏழாவது வார்த்தையை மட்டுமே அவர் உரக்கக் கத்தியுள்ளார். ரோம அரசியல் உலகமும் சமய உலகமும் நன்கு அறியவேண்டும் என்று இயேசு விரும்பியிருப்பாரோ. தனக்கும் தன் கடவுளுக்கும், தன் தந்தைக்கும் இடையேயான உறவை எந்த சூழலிலும் பிரிக்க இயலாது என்பதை துன்புறும் நேரத்திலும் துணிந்து கத்துகின்றார். “என் கடவுள் தப்புவிக்க வல்லவர்…. தப்புவியாமற்போனாலும்…. (தானியேல் 3:17) அத்திமரம் துளிர்விடாமற் போனாலும் (ஆபகூக் 3:17) நான் கர்த்தரையே சேவிப்பேன் என்ற நம்பிக்கையை இயேசுவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நம்பிக்கைதான் சிலுவையின் கீழே நின்ற போர்ச் சேவகர்களையும், நூற்றுக்கதிபதிகளையும் சிந்திக்கத் தூண்டியிருக்கும். கடவுள் நம்பிக்கை என்பது என்ன? கடவுள் என்பது யார்? என்பதை உலகம் அறிய இந்த மகா சத்தம் உதவியிருக்க வேண்டும்.

வாழ்வு ஒப்படைப்பு:
ஆறாம் வார்த்தை பணிநிறைவின் வார்த்தை. ஏழாம் வார்த்தை வாழ்வு நிறைவின் வார்த்தை. இயேசு தான் சந்தித்த பாடுகளினூடே எவ்வித கோபமோ, எரிச்சலோ, அவநம்பிக்கையோ இல்லாமல் எதிர்கொண்டு அதனை நிறைவு செய்கிறார்.

இயேசு ஒப்படைத்தது திருமுழுக்கின் பொழுது பெற்றுக் கொண்ட தூய ஆவியல்ல. மாறாக படைப்பின் பொழுது கடவுள் மானுடத்தின் நாசியில் தந்தாரே ”உயிர்“. அந்த உயிர் கடவுளுக்குச் சொந்தமானது. வாழ்வின் ஆதாரம் கடவுளே என்று இயேசு உலகிற்கு உணர்த்திய வார்த்தை.

மத்தேயுவும், மாற்கும் உயிர்விட்டார் என்று எழுதுகின்றனர். ஆனால் லூக்காவும் யோவானும் ஒப்படைத்தார் என்று எழுதுகின்றனர். ஒப்படைத்தல் என்பது மீண்டும் பெற்றுக்கொள்ளுதல் என்ற நம்பிக்கையுடன் ஒப்படைத்தல் 2 மக்கபேயுவில் 7-ஆம் அதிகாரத்தில் ஒரு தாய் தன் ஏழு பிள்ளைகளையும் சித்ரவதை செய்து கொல்லுவதை கண்டு அவளும் மாண்டாள். அப்பொழுது அவள், “என் பிள்ளைகளை நான் மீண்டும் பெறுவேன்“ என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு பிள்ளையாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள் (2 மக்பேயு 7:21). தன் பிள்ளைகளிடம் உங்கள் உயிரை கடவுளுக்காய் கடவுளிடம் ஒப்படையுங்கள். மீண்டும் பெறமுடியும் என்றாள். அதே அனுபவத்தில் இயேசுவும் ஒப்படைத்தார். அல்லது வேறு பணிக்கு ஆயத்தம் என்று பொருள் உள்ளது. உயிர்த்தெழுதலுக்கு ஆதாரமாகவே உயிரை இயேசு கடவுளிடம் ஒப்படைத்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார்.

இயேசு உறங்கும் முன்னர் இளமையிலிருந்து செய்த இறைவேண்டல் மீண்டும் துயிலெழுவோம் என்ற நம்பிக்கையுடன் அதே இறை வேண்டலை இப்பொழுதும் மிகுந்த நம்பிக்கையுடன் செய்துள்ளார்.

நாம் ஒவ்வொரு நாளும் இவ்வுயிரைப் பெறுகின்றோம் எனில் கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்று பொருள். கிறிஸ்து நம்முடன் இருக்கும்பொழுது நம்மால் பொருளற்று வாழமுடியுமா? கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் நமக்குத் தந்துள்ள தூயஆவியும் துணை நிற்கின்றதல்லவா? நல்ல போராட்டத்தை போராட ஆயத்தப்படுவோம். ”ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்று மானிட மகன் நம்மைப் பார்த்து அழைக்க சாட்சிகளை உருவாக்குவோம். அதற்கு உயிருள்ளவர்களாக உணர்வுள்ளவர்களாக வாழுவோம். உயிருக்கு அஞ்சத் தேவையில்லை (மரண பயம்) உயிருள்ளவரை நீதியின் பணியைச் செய்வோம் என்று உறுதியேற்போம்.
______________________
அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்
ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் ஆயர்.
தமிழ்நாடு இறையியல் கல்லூரி,
குருக்குள் இறையியல் கல்லூரிகளின் இணை பேராசிரியர்.
புதிய ஏற்பாடு இவரது துறை.
செராம்பூர் பல்கலைக் கழகத்திற்காக, “இயேசுவின் ஒருங்கிணைப்புப் பணி”, “காணாமல் போன ஆடுகள்” ஆகிய ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்.
புதிய பார்வையில் மக்கள் வாழ்வியலுடன் திருமறையை விளக்குவது இவர் சிறப்பு.
BEST (Biblical Education for Soul / Social Transformation)
என்ற அமைப்பை நடத்திவருகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.