Type Here to Get Search Results !

தாயே, அதோ உனக்கு சுகம் தந்தவர் | Mother, there is the one who gave you happiness! | கிறிஸ்தவ கைப்பிரதி | Jesus Sam

==================
தாயே, அதோ உனக்கு சுகம் தந்தவர்!
================


அது ஒரு குக்கிராமம். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் பரம்பரைச் சொத்து விஷயமாக பல ஆண்டுகளாக ஒருவருக்கொருர் விரோதம் பாராட்டி வந்தனர். அச்சகோதரர்களில் ஒருவரான பிரபு என்பவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மற்ற சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து பிரபுவின் மனைியையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியே விரட்டி அந்தச் சொத்துக்கு சொந்தம் கொண்டாடினர்.

சில நாட்களுக்குள் பிரபுவின் மனைவியான அந்த ஏழை விதவைத்தாய் எலும்புருக்கி நோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாள். மருத்துவச் செலவுக்கும் கையில் பணமில்லை. எனவே எட்டு வயதே நிரம்பிய அவளது மூத்த மகள் ரூபி, அப்பகுதியிலுள்ள எல்லா மருத்துவர்களையும் அணுகி இலவசமாகத் தன் தாய்க்கு சிகிச்சையளிக்கும்படி வேண்டிக் கொண்டாள். பணமில்லாமல் சிகிச்சையளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். நம்பிக்கையற்ற இந்நிலையில் ரூபி தனது தாயின் ஒரே சொத்தாயிருந்த இரண்டு தங்க வளையல்களையும் விற்று சிகிச்சையளிக்க முடிவு செய்தாள். இதையறிந்த அவள மாமா அவ்வளையல்களைத் தான் விற்றுத் தருவதாகக் கூறி, அவளை ஏமாற்றி வளையல்களைக் கொண்டுபோய்விட்டார். அந்தோ பரிதாபம்!

எல்லாராலும் கைவிடப்பட்ட இச்சூழ்நிலையில் இச்சிறு பெண் ரூபி தன் தாய்க்கு சுகம் தரும்படி தன் முழு இருதயத்தோடு தங்கள் குடும்ப தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டாள். ஆனால் பதிலில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த தங்களது தாயை நினைத்து அவளும், பசியோடிந்த மற்ற குழந்தைகளும் அழ மட்டுமே முடிந்தது.

ஒருநாள் தங்கள் ஊருக்கு வந்த ஒரு குழுவினர் இயேசு என்பவரைக் குறித்த திரைப்படம் ஒன்றை திரையிடப்போவதாக ரூபி கேள்விப்பட்டாள். மற்ற சிறுவர்களோடு தானும் உட்கார்ந்து அப்படத்தைப் பார்த்தாள். இயேசுவின் வார்த்தைகளையும், அவருடைய அற்புதங்களையும், அவரின் வியத்தகு அன்பையும், அவருடைய பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையும் திரைப்படத்தின் மூலம் தெளிவாக அறிந்தாள்.

அப்படத்தின் முடிவில் ஜெபத்தோடு இயேசுவை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டாள். உற்சாகத்துடன் வீடு திரும்பி ரூபி, “அம்மா, அம்மா நான் அந்த மெய்யான கடவுளைச் சந்தித்தேன். அவர் உனக்கு நிச்சயம் சுகம் தருவார்“ என்று கூறியதோடு, அன்று இரவு முழுவதும் இயேசுவைக் குறித்து தான் பார்த்ததையும், கேட்டதையும் தன் தாய்க்கு விவரித்துச் சொன்னாள். என்னே ஆச்சரியம்! மறுநாள் காலை ரூபியின் தாய் தன் மரணப்படுக்கையிலிருந்து பூரண சுகத்துடன் எழுந்து உட்கார்ந்தாள். உடனே ரூபி அத்திரைப்படக் குழுவினரைக் கண்டு, தன் வீட்டுக்கு அழைத்து வந்து, தனது உறவினர்களையும் வரவழைத்து இயேசுவின் திரைப்படத்தை அவர்களும் காணும்படி செய்தாள். திரைப்படத்தில் இயேசு தோன்றும் போதெல்லாம், ”தாயே, அதோ உனக்கு சுகம் தந்தவர்!“ என்று ரூபி மகிழ்ச்சி பொங்க கூறினாள்.

பிரபுவின் எல்லாச் சகோதரர்களும் மனந்திருப்பி சுகமளிக்கும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். ரூபி அத்திரைப்படக் குழுவினரிடம், “இயேசு என் வீட்டிற்கு முன்பே வந்திருந்தால் என் தகப்பனார் மரித்திருக்கமாட்டார். என் தகப்பனை நான் இழந்துவிட்டேன். ஆனால் எங்கள் குடும்பத்தின் மற்ற 44 பேர் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இயேசுவின் அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று கூறினாள்.

“சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது“ (மாற்கு 10:14) என்று இயேசு சொன்னார்.

இதை வாசிக்கும் அன்பரே, இயேசு கிறிஸ்து உம்மையும் அழைக்கிறார். அவரை உம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது உமக்கு அவர் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் சுகத்தையும் அருளுவார்.

மேலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்பினால் கீழ்காணும் முகவரியில் எங்களோடு தொடர்பு கொள்ளவும்.

சென்னை இறையியல் கல்லூரி,
இலக்கியத் துறை,
14, வாடல் சாலை, கீழ்ப்பாக்கம்,
சென்னை – 600 010

செல்: 044-26412297
044-26480805
044-26413178
044-26427574

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.