=========
சொல் அறிமுகம்
=========
பரிசேயர்
பாபிலோன் சிறையிருப்பைத் தொடர்ந்து தேவனுடைய வசனத்திற்கு முதலிடம் கொடுத்து வாழ்கிற ஒரு சிறிய கூட்ட யூதர்கள் உருவானார்கள். ஹாசிடிம் (உண்மையுள்ள மக்கள்) என்ற பெயரில் இவர்கள் முதலில் அறியப்பட்டனர். இவர்களிலிருந்து தான் பரிசேயர் என்ற குழு உருவானது. பரிசேயன் என்ற சொல்லுக்கு “வேறுபட்டவன்” என்று பொருள். இவர்கள் பாவத்திலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் வேறுபட்டவர்களாக தேவனுடைய வசனத்திற்கு எழுத்தின்படியே கீழ்ப்படிவதற்காகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள். பரிசேயர்களின் வாழ்க்கை முறைமைகளின்படி சீகேம் பரிசேயர், இடறிவிழுகின்ற பரிசேயர், இரத்தம் சிந்துகின்ற பரிசேயர், கவசம் அணிகின்ற பரிசேயர், விசாரப்படுகின்ற பரிசேயர், பயப்படுகிற பரிசேயர், அன்புகூறுகிற பரிசேயர் என்று 7 குழுக்களாக இவர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர் என யூதர்களின் “தல்மூதுகள்” கூறுகின்றன. ஆவியின் அழிவின்மை, தூதர்களின் ஆள்த்தன்மை, மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை இவர்கள் விசுவாசிக்கிறவர்களாக இருந்தனர். மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உடையவர்களாக இவர்கள் விளங்கினர்.
சதுசேயர்
இவர்களுடைய துவக்கத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூறுவது இயலாது. எனினும் கி.மு 144 முதல் இவர்களை வரலாற்றில் காணலாம். பழைய ஏற்பாட்டு ஆசாரியனாக இருந்த “சாதுக்” என்பவரின் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள். இவர்களில் பெரும்பகுதியினர் செல்வந்தர்களும், ஆசாரிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுமாய் இருந்தனர். அரசியல் துறையில் இவர்களின் செல்வாக்கு தாக்கம் மிக அதிகமாக இருந்தது. உயிர்த்தெழுதல், தூதர்கள், பிசாசுகள், நியாயத்தீர்ப்பு, பாரம்பரியங்கள் ஆகியவற்றில் இவர்கள் நம்பிக்கையில்லாதவர்களாய் இருந்தனர். கி.பி. 70-க்கு பின் இவர்களைப் பற்றிய எந்தவித குறிப்பும் வரலாற்றில் கிடைக்கவில்லை.
செலோத்தியர்கள் (தீவிரவாதிகள்)
யூத சட்டங்களிலும் கர்த்தருடைய பணிகளிலும் அதிக தீவிரமும், வைராக்கியமும் உள்ளவர்களாய் இவர்கள் இருந்தனர். ரோமப் பேரரசைக் கவிழ்த்துவிட்டு தாவீதின் சிங்காசனத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காக தொடர்ச்சியான புரட்சிகளையும் போர்களையும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இவர்கள் எப்பொழுதுமே ரோம பேரரசிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். விருத்த சேதனமற்ற புறஜாதியாருக்கு தேவனுடைய மக்களான இஸ்ரவேலரை ஆட்சி செய்ய யாதொரு உரிமையும் இல்லை என்று இவர்கள் ஆணித்தரமாக நம்பியிருந்தது மட்டுமல்ல, அதையே மக்களுக்குப் போதித்தும் வந்தனர்.
சமாரியர்
கி.மு. 722-ல் சமாரியாவின் வீழ்ச்சிக்குப் பின் அசீரிய சிறையிருப்பிற்குக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரவேலருக்குப் பதிலாக சமாரியாவில் குடியேற்றப்பட்டவர்களே இவர்கள். புறஜாதியாருக்கு அங்கே சமாரியாவிலே எஞ்சியிருந்த இஸ்ரவேலரும் கலப்பு விவாகம் செய்து கொண்டதின் விளைவாக உருவான மக்கள் கூட்டமே சமாரியர். யூதர்கள் இவர்களை தேவனுடைய ஜனமாக அங்கீகரிக்கவோ அல்லது இவர்களோடு எவ்விதத் தொடர்புமோ வைத்திருக்கவில்லை. பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களை மட்டும் தேவ வசனமாக ஏற்றுக்கொண்டிருந்த இவர்கள் “கெர்சீம்” மலையில் தேவாலயத்தைக் கட்டி ஆராதனை செய்து வந்தனர். யூதர்கள் எருசலேமில் ஆலயம் கட்டி ஆராதித்து வந்தனர். யூதர்களால் வெறுக்கப்பட்ட ஒரு கூட்டமே சமாரியர்
எப்பிக்கூரியர்
கி.மு. 341 முதல் கி.மு. 270 வரை அத்தேனே பட்டணத்தில் வாழ்ந்திருந்த ஒரு தத்துவ ஞானியைப் பின்பற்றியவர்களே இவர்கள். “எப்பிகூரல்” (இன்பம் அனுபவிப்பதே சொர்க்கம்) என்பதே அவர்களது தத்துவம். பூமிக்குரிய வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் சுகபோகங்களுக்கும் அளவுக்கு அதிகமான முக்கயத்துவம் கொடுத்து, தேவனைப் பின்னால் எறிந்துவிட்டு வாழ்ந்தவர்களே இவர்கள். புசிப்போம், குடிப்போம், இன்பமாயிருப்போம் என்ற கொள்கைக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தவர்கள். (அப்போஸ்தலர் 17:18-ல் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.
ஸ்டோயிக்கர்
அத்தேனேயிலுள்ள “ஸ்டோயிக்கா” நகரத்தில் வாழ்ந்திருந்த “செனோ” (கி.மு. 335 முதல் கி.மு. 253 வரை) என்ற தத்துவ ஞானி தான் இந்த கொள்கையின் தோற்றுவிப்பாளர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயக்குகின்ற சக்தியை “லோகாஸ்” என்றும் இயற்கையின் விதிமுறைகளுக்கேற்ப வாழ்ந்தால் மனுஷீகமான எல்லா துக்கங்களிலிருந்தும் விடுதலை அடையலாம் என்றும் இவர்கள் கற்பித்து வந்தனர். (அப்போஸ்தலர் 17:18-ல் இவர்களைப் பறற்றி குறிப்பிடப்பட்டுள்ளது)
சனகெரீப் சங்கம்
பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களின் சமூக, சமய மற்றும் சகல காரியங்களையும் இயக்கிக் கொண்டிருந்தது இந்த “சனகெரீப்” சங்கமே ஆகும். 71 அங்கத்தினர்களைக் கொண்ட இச்சங்கத்தில் ஒரு மகா பிரதான ஆசாரியனும், 24 ஆசாரியர்களும், 24 மூப்பர்களும், 22 நியாயசாஸ்திரிகளும் இருந்தனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் எருசலேமிலிருந்த தேவாலயத்தின் தென்புறத்தில் இருந்த ஒரு அறையில்தான் இவர்கள் கூடிவந்தனர். மரண தண்டனையைத் தவிர மற்ற எல்லாத் தண்டனைகளையும் வழங்கக்கூடிய அனுமதி இவர்களுக்கு இருந்தது. இச்சங்கத்தின் சார்பில் ஏதாவது தீர்மானம் எடுக்க வேண்டுமானால் குறைந்தது 23 பேராவது கூடியிருக்க வேண்டும். கி.பி. 70-க்குப் பின் இச்சங்கம் தன் மதிப்பை இழந்துவிட்டது.
ஜெப ஆலயம் (சினகாக்)
பழைய ஏற்பாட்டில் ஜெப ஆலயங்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. பாபிலோன் சிறையிருப்பைத் தொடர்ந்துதான் ஜெப ஆலயங்கள் உருவாயின. 10 யூத ஆண்கள் இருந்தால் ஒரு ஜெப ஆலயத்தை ஆரம்பிக்க அனுமதி இருந்தது. புதிய ஏற்பாட்டில் ஜெப ஆலயங்களைப் பற்றி அதிகம் காணலாம். நியாயப்பிரமாணத்தைக் கற்பதற்கும் ஆராதனை செய்வதற்கும் கட்டப்பட்ட ஜெப ஆலயங்களில் பலிகள் செலுத்த அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஜெப ஆலயங்களில் பெண்களுக்கென தனி இருப்பிடங்கள் திரைச்சீலைக்குப் பின்னால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்த ஜெப ஆலயங்கள் நீதிமன்றங்களாகவும் செயல்பட்டு வந்தன.
நியாயசாஸ்திரிகள்
மோசேயின் நியாயப்பிரமாணத்தை நகல் எடுப்பதற்காகவும், கற்பதற்காகவும், கற்பிப்பதற்காகவும், வியாக்கியானம் செய்வதற்காகவும் பிரித்தெடுக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பான கூட்டமே இவர்கள். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் நியாயசாஸ்திரிகள் மக்களிடையே சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர்.
அர்த்தமு தேவி (தியானாள்)
சின்ன ஆசியாவிலுள்ள எபேசு நகரத்தில் அர்த்தமு தேவியினுடைய கோவில் இருந்தது. ஜுயல்ஸிற்கும் லெக்டோவிற்கும் மகளாகப் பிறந்த தியானாள் தேவதையாக வணங்கப்பட்டு வந்தாள். அசாதாரண உயரமும், சுற்றளவும் கொண்ட 100 தூண்களின் மேல் இத்தேவதையின் கோயில் கட்டப்பட்டு இருந்தது.
==========
அளவுகள்
==========
1. நீள அளவுகள்
நீள அளவுகளை முழம், கையளவு, சாண், விரற்கடை அளவு என்று பழைய ஏற்பாடு பிரித்துக் கூறுகின்றது.
முழம் – 0.5 மீட்டர்
சாண் – 23 சென்டி மீட்டர்
கையளவு – 8 சென்டி மீட்டர்
புதிய ஏற்பாட்டில் முழம் 45 சென்டி மீட்டராகக் கணக்கிடப்படுகிறது (அப்போஸ்தலர் 27:28)
2. தூர அளவுகள்
பழைய ஏற்பாட்டில் நீண்ட தூரம் என்பது சாதாரண அளவில் நிர்ணயிக்கப்படவில்லை. 3 நாள் தூரம் (ஆதியாகமம் 30:36). 7 நாள் தூரம் என்று தான் குறிக்கப்படுகின்றன.
புதிய ஏற்பாட்டில் நாழிகை என்பது 202.50 மீட்டர் தூரமாகும். ஓய்வுநாள் தூரம் என்பது 2000 முழத்திற்குச் சற்றே குறைவானதாகும்.
3. முகத்தல் அளவுகள்
பாத்திரங்கள் மூலம் அளக்கின்ற அளவை இவை குறிக்கின்றன
1 ஓமர் (ஹயர்) – 10 எப்பா (200 விட்டர்)
1 எப்பா – 10 ஓமர் (22 லிட்டர்)
1 செயா – 6 கப் (7.3 லிட்டர்)
2 ஓபர் – 2 லிட்டர்
1 கப் – 1 லிட்டர்
4. திரவ அளவுகள்
பெத் – 22 லிட்டர்
ஹின் – 1/6 பெத் (4 லிட்டர்)
லோக் – 1/73 ஹீன் (0.3 லிட்டர்)
5. எடை அளவுகள்
1 தாலந்து – 60 மினா (மானே) 34 கி.கிராம்
1 மினா – 50 சேக்கல் (0.6 கி.கிராம்)
1 சேக்கல் – 2 பெக்கா (11.5 கிராம்)
1 பெக்கா – 10 கேரா (5.5 கிராம்)
1 கேரா – 0.6 கிராம்
எபிரெய கால அட்டவனை
எபிரெயம் = ஆங்கிலம்
1. ஆபீப் [நிசான்] (மார்ச் – எப்ரல்)
2. சீன் (ஏப்ரல் – மே)
3. சீவான் (மே – ஜீன்)
4. தம்ளூஸ் (ஜீன் – ஜீலை)
5. அப் (ஜீலை – ஆகஸ்ட்)
6. ஏலூல் (ஆகஸ்ட் – செப்டம்பர்)
7. ஏதானிம் (செப்டம்பர் – அக்டோபர்)
8. பூல் (அக்டோபர் – நவம்பர்)
9. கிஸ்லேவ் (நவம்பர் – டிசம்பர்)
10. தோபேத் (டிசம்பர் – ஜனவரி)
11. செபாத் (ஜனவரி – பிப்ரவரி)
12. ஆதார் (பிப்ரவரி – மார்ச்)
மூன்று வருடம் கூடும்போது 13-வது மாதமாக ஆதார் 2 என்றொரு மாதம் கூடுதலாக காலெண்டரில் சேர்க்கப்பட்டிருக்கிறது
ஆங்கிலம் மற்றும் தமிழ் கால அட்டவணை
ஆங்கிலம் = தமிழ்
1. ஜனவரி (மார்கழி – தை)
2. பிப்ரவரி (தை – மாசி)
3. மார்ச் (மாசி – பங்குனி)
4. ஏப்ரல் (பங்குனி – சித்திரை)
5. மே (சித்தரை – வைகாசி)
6. ஜுன் (வைகாசி – ஆனி)
7. ஜுலை (ஆனி – ஆடி)
8. ஆகஸ்ட் (ஆடி – ஆவணி)
9. செப்டம்பர் (ஆவணி – புரட்டாசி)
10. அக்டோபர் (புரட்டாசி-ஐப்பசி)
11. நவம்பர் (ஐப்பசி – கார்த்திகை)
12. டிசம்பர் (கார்த்திகை – மார்கழி)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.