Type Here to Get Search Results !

Abraham Depth Study Part 3 | ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி | Tamil Bible Study | Jesus Sam

=================
ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி (பகுதி-3)
=================
    ஆண்டவரும் மீட்பரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  ஆபிரகாமைப் பற்றிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.  மூன்றாம் பாகம்.  முதல் இரண்டு பாகங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கை தொட்டு படிக்கவும், பின்பு இந்த மூன்றாம் பாகத்தைப் படிக்கவும்.




    நெகேவ் என்ற இடத்தில் பஞ்சம் வந்ததால், ஆபிரகாம் அங்கிருந்து எகிப்து தேசத்திற்கு புறப்படுகின்றான். எகிப்தின் அரசன் அழகான பெண்களை விரும்பக்கூடிய ஒரு அரக்கன். திருமணம் செய்யாத ஒரு அழகான பெண் இருப்பாளானால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் அவளை அவளுடைய தாய் தகப்பனிடமிருந்து விளைகொடுத்து வாங்கிவிடுவான். ஒருவேலை அந்த அழகான பெண்ணிற்கு திருமணம் செய்து கொண்டவள் என்றால், அவள் புருஷனை கொலை செய்து அவளை தனக்கு மனைவியாக்கிக்கொள்வான்.
    எகிப்தின் மன்னனாகிய பார்வோனைப் பற்றி நன்கு அறிந்தவன் இந்த ஆபிரகாம். ஊர் என்ற தேசத்தில் வாழும்போது அநேக முறை இந்த எகிப்து தேசத்திற்கு அவன் வந்திருக்கிறான்.
    எகிப்து தேசத்தைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தாலும், தன் மனைவியை பார்வோன் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, நான் உயிர்பிழைத்தால் போதும் என்ற நோக்கில், எகிப்திற்கு வருகிறான் ஆபிரகாம். தான் மரிக்க கூடாது என்பதற்காக தன் மனைவி சாராளை பார்த்து: நீ என்னை உன் கணவன் என்று சொல்லாமல், உன் சகோதரன் என்று சொல் என்கிறான்.
    எகிப்து தேசதத்திற்குள் சென்றதும், சாராளின் அழகைப் பார்த்த பார்வோன், அவளை தனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டான். சாராள் ஆபிரகாமை தன் சகோதரன் என்று சொன்னதினிமித்தம், ஆபிரகாமிற்கு பார்வோனிடமிருந்து, அநேக வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், கழுதைகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் வெகுமானமாக கொடுக்கப்பட்டது. (ஆதியாகமம் 12:16)

    ஆபிரகாமின் மனைவி சாராளை, பார்வோன் தன் மனைவியாக்கிக்கொண்டதின் நிமித்தம், ஆண்டவர் பார்வோனை அநேக வாதைகளால் வாதித்தார். (ஆதியாகமம் 12:17)
    ஆதியாகமம் 12:19-ல் “இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே” என்று பார்வோன் சொன்னதாக தமிழ் வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல, ஆங்கில வேதாகமத்தில் (KJV) நான் அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேனே என்றே எழுதப்பட்டுள்ளது. சிங்கலத்திலும் நான் அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேனே என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் வேதாகமத்தில் மாத்திரம் கொஞ்சம் கௌரவமாக மனைவியாகக் கொண்டிருப்பேனே என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரெய மொழியிலும் மனைவியாக எடுத்துக்கொண்டேனே என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
    பார்வோன் சொல்லுகிறான், ஐயோ, நீ சாராளை உன் சகோதரி என்று சொன்னபடியினால் நான் இவளை திருமணம் செய்துகொண்டேனே என்று சொல்லுகிறார். சில மொழிகளில் அவைகள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில மொழிகளில் ஆபிரகாமை கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக அதை கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
    எகிப்திய வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், சாராள் பார்வேனுக்கு பதினெட்டு (18) மாதங்கள் மனைவியாக இருந்தால் என்பதை அறிய முடிகிறது. பதினெட்டு மாதங்கள் சாராள் பார்வோனுக்கு மனைவியாக இருந்தால் என்று வேதத்தில் இல்லை. அதை ஒருவேளை நாம் நம்பாவிட்டாலும், மூல பாஷையில் சாராள் பார்வோனுக்கு மனைவியாய் இருந்தால் என்று எழுதப்பட்டுள்ளது. அதை நாம் நம்பிதான் ஆக வேண்டும்.
    இந்த பதினெட்டு மாதங்களில் எத்தனை முறை பார்வோனும், சாராளும் இரதங்களில் பிரயாணம் செய்திருப்பார்கள். எத்தனை முறை குடும்ப உறவிலே ஈடுபட்டிருப்பார்கள்.
    ஆபிரகாமிற்கும் சாராளுக்கு திருமணமாகிய முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் இருக்கும். இவர்களுக்கு குழந்தை இல்லாததற்கு காரணம் ஆபிரகாமா? சாராளா? என்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. ஆனால் சாராள் பார்வோனுக்கு மனைவியான பின்பு, பார்வோன் மூலமாகவும் தனக்கு குழந்தை உண்டாகாததால், சாராளுக்கு தெரியவந்தது, எனக்கு குழந்தை இல்லாமல் இருப்பதற்கு நான் தான் காரணம். என்னிலே தான் குறை இருக்கிறது என அறிந்த சாராள், பிற்காலத்தில் ஆபிரகாமைப் பார்த்து: ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளை என்னிடத்திலிருந்து பிறக்கப்போவதில்லை, ஆகவே நான் உமக்கு ஆகாரைத் தருகிறேன் என்று சொல்லி, சாராள் அடிமைப்பெண் ஆகாரை ஆபிரகாமிற்கு மனைவியாகக் கொடுத்தாள். ஆபிரகாம் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, ஆண்டவரின் கேட்டு சொல்லுகிறேன் என்று சொல்லவுமில்லை. உடனே ஆகாரை திருமணம் செய்து, அவளோடு குடும்ப உறவிலே ஈடுபட்டார் ஆபிரகாம். ஆபிரகாமிற்கு ஆகார் மூலம் பிறந்தவனே இஸ்மவேல். இதற்க்கெல்லாம் காரணம், சாராள் பார்வோனுக்கு மனைவியாக ஒரு சில மாதங்கள் வாழ்ந்ததே.
    ஆபிரகாமின் இந்த செயல், தன் மனைவியை விற்றுத் தின்றதற்கு சமானம். சாராளின் நிமித்தம் ஆபிரகாமிற்கு அநேக வெகுமதிகள் கிடைத்தது. தன் சுய இலாபத்திற்காக தன் மனைவியையே விலைபேசியவன் இந்த ஆபிரகாம். ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இப்படிப்பட்ட ஆபிரகாமையே ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் ஆதி தகப்பனாக மாற்றினார். விசுவாசிகளின் தகப்பனாக மாற்றினார்.
    இப்படி கேவலமான ஆபிரகாமை ஆண்டவர் ஏன் தெரிவு செய்ய வேண்டும். ஆபிரகாமை விட நல்லவர்கள் வேறு யாரும் இல்லையா?

    ஆபிரகாமின் இச்செயல்கள் நிமித்தம் ஆபிரகாம் எகிப்திலிருந்து விரட்டப்பட்டார். (ஆதியாகமம் 12:20)
    எகிப்திலிருந்து வந்த ஆபிரகாம் மீண்டும் நெகேவ் என்ற இடத்திற்கே வருகிறார். இந்த இடத்தில் பஞ்சம் இருந்தபடியினாலேயே எகிப்திற்கு செல்ல புறப்பட்டார். இப்போது பதினெட்டு மாதங்கள் கழிந்துவிட்டன. பஞ்சங்கள் முடிந்துவிட்டது. எனவே, தான் முன்பு இருந்த அதே நெகேவ் என்ற இடத்திற்கு ஆபிரகாம் வந்து சேர்ந்தார்.
    ஆபிரகாம் பெரிய பணக்காரன். பார்வோன் கொடுத்த வெகுமதியினால் மேலும் செல்வந்தனானான். ஆபிரகாம் மிருகஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று ஆதியாகமம் 13:2-ல் வாசிக்கிறோம். ஆஸ்திகள் அநேகம் இருந்தாலும் அவனுடைய மனதில் நின்மதி இல்லை.

    மீண்டும் ஆபிரகாம் பிரயாணப்பட்டு தான் இரண்டாவதாக தங்கியிருந்த மலைப்பிரதேசமான பெத்தேலுக்கு வருகிறார். அதன் பின்பு தான் முதல் முதல் பலிபீடம் கட்டின இடமாகிய சீகேமிற்கு வருகிறார். கடைசியாக கடவுள் தன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசத்திற்கு வந்து சேர்ந்தான் ஆபிரகாம். (ஆதியாகமம் 13:3,4)
    ஆபிரகாம் கடவுள் தனக்கு வாக்குக்கொடுத்த இடத்திற்கு வந்துவிட்டான். ஆனால் ஆநேகர் ஆண்டவர் தங்களுக்குக் குறித்த இடத்திற்கு வராமல் அழைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் கடவுள் தங்களுக்கு குறித்த இடத்திற்கு வரும் முன்னமே மரித்தேபோய்விடுகிறார்கள். ஒருவேளை கடவுள் உங்களை உணர்த்துவாரானால், நீங்கள் இருக்கின்ற இடம், கடவுளுக்கு பிரியமில்லாத இடமாக இருக்குமானால், இன்றே கடவுளிடமாய் திரும்பிவிடுங்கள். இவ்வளவு காலம் ஆண்வடர் விரும்புகிற பாதையில் நாம் நடக்காமல் இருக்கலாம், ஆபிரகாமைப்போல கொஞ்சம் பிந்தியாவது ஆண்டவர் பக்கமாக திரும்புவோம். என்றைக்குமே ஆண்டவரின் பக்கம் திரும்பாமல் இருப்பதைவிட, கொஞ்சம் பிந்தியாவது அவரின் பக்கம் திரும்புவது நல்லது.

ஆபிரகாம் மற்றும் லோத்து:
    கடவுள் தனக்கு குறித்த இடத்திற்கு ஆபிரகாம் வந்த பிறகும் ஆபிரகாம் தவறு செய்கிறான். அதன் மூலமாக மிகப்பெரிய ஆசீர்வாதத்தை இழந்துபோகிறான்.
    ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வந்தது. அப்பொழுது ஆபிரகாம் லோத்தை அழைத்து: நீ இடதுபுறம் போனால் நான் வலது புறம் போகிறேன், நீ வலது புறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன் என்று சொல்லுகிறார். (ஆதியாகமம் 13:8,9)
    ஆபிரகாமின் இந்த காரியத்தைப் பார்க்கும்போது ஆபிரகாம் பெரிய கொடை வல்லல் போலவும், ஒரு சுயநலமற்ற பொதுநலவாதியாகவும் தெரிகிறது.
    இங்கே ஆபிரகாம் செய்த தவறு என்னவென்றால், இப்போது ஆபிரகாம் இருக்கின்ற இடம் ஆபிரகாமின் தேசம் அல்ல. அது கர்த்தருடைய தேசம். கர்த்தர் ஆபிரகாமிடத்தில் இந்த தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று சொல்லுகிறார். (ஆதியாகமம் 12:7)
    ஆண்டவர் ஆபிரகாமின் சந்ததிக்கு தருவேன் என்று சொன்ன தேசத்தை ஆபிரகாம், தன் அண்ணன் மகன் லோத்திற்கு விட்டுக்கொடுக்கின்றான். தன் சொத்தை தான் நாம் விட்டுக்கொடுக்க முடியும். ஆபிரகாம் கடவுள் தன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசத்தை தாராள குணம் படைத்தவர் போல விட்டுக்கொடுக்கின்றார்.
    நாம் லோத்திற்காக கர்த்தரை துதிக்க வேண்டும். லோத்து ஒரு சரியான தீர்மானத்தை எடுத்தார். இந்த இடம் கர்த்தர் என் சிறிய தகப்பனாகிய ஆபிரகாமிற்கு கொடுத்த இடம். எனவே நான் இந்த இடத்தை விட்டு புறப்பட்டுபோகிறேன் என்று ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்தார். லோத்தின் இந்த நல்ல குணத்தினாலேயே ஆண்டவர் லோத்தை கடைசி வரை பாதுகாத்தார்
    லோத்து கர்த்தர் தன் சிறிய தகப்பனுக்கு கொடுத்த இந்த தேசத்தில் இருக்கக்கூடாது என்று சரியான தீர்மானம் எடுத்தாலும், கடைசியில் அக்கிரமும் கொடுமையும் நிறைந்த சோதோம் கொமோராவை தெரிவு செய்து பிழையான தீர்மானத்தை எடுக்கின்றான். (ஆதியாகமம் 13:10)

    ஆபிரகாமின் இந்த செயல்களால் ஆபிரகாம் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை இழந்துபோனார்.
    ஆதியாகமம் 13:14-16 இந்த வசனங்களை நாம் வாசித்தால், ஆண்டவர் ஆபிரகாமிற்கு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கொடுத்தார் என்று நினைக்கத்தோன்றும். ஆனால், அப்படியல்ல, ஆபிரகாமின் ஆசீர்வாதம் குறைக்கப்பட்ட இடம் இந்த வசனம்.
    ஆண்டவர் ஆரம்பத்தில் ஆபிரகாமிடம் நான் உனக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்றார். இப்பொழுது எவ்வளவு கொடுத்தார் என்று பார்ப்போம், ஆபிரகாம் இப்பொழுது இருக்கின்ற இடம் சீகேமில் இருக்கின்ற மோரே என்னும் சமபூமி. ஆபிரகாமை ஆண்டவர் மலைக்கு ஏறச்சொல்லவில்லை, கற்பாறையின் மேல் ஏறச்சொல்லவில்லை, மரத்தின் மீது ஏறச்சொல்லவில்லை ஆபிரகாம் இருக்கின்ற அந்த சமபூமியிலிருந்து நான்கு திசைகளிலும் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார் என்று சொன்னார்.
    ஒரு சமவெளியிலிருந்து ஒரு மனிதனால் வெரும் கண்களைக் கொண்டு சுமார் பத்து மைல் தூரம் மாத்திரமே நன்றாக பார்க்க முடியும். வடக்கே பத்து மையில், தெற்கே பத்து மயில் என்றால் வடக்கிலிருந்து தெற்காக மொத்தம் இருபது மைல் தூரம். கிழக்கே பத்து மைல். மேற்கே பத்து மைல். அப்படியானல், கிழக்கிலிருந்து மேற்காக மொத்தம் இருபது மைல் தூரம். மேலிருந்து கீழாக இருபதுமைல், இடமிருந்து வலமாக இருபது மைல் என்றால் மொத்தம் நானூறு சதுர மைல் ஆகும். ஒரு சமவெளியிலிருந்து நன்றாக கண்பார்வை தெரியக்கூடிய மனிதனால் நானூறு சதுர மைல் தூரத்தை மாத்திரம் தான் பார்க்க முடியும். இந்த நானூறு மைல் தூர இடைவெளியில் தான் பூமியின் தூளத்தனையான சந்ததி அடங்கப்போகிறது.
    யோசுவாவின் காலத்தில் யோசுவா அநேக தேசங்களை கைப்பற்றினார். தாவீதின் காலத்தில் தாவீதும் அநேக தேசங்களை கைப்பற்றினார். இவை எல்லாவற்றையும் சேர்த்தாலும் அவை இந்த நானூறு சதுர மைல் தூரத்தில் அடங்கும். அன்றிலிருந்து இன்று வரை இஸ்ரவேலர்கள் தேசத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், ஆண்டவர் ஒரு பெரிய சந்ததி வாழ்வதற்கு கொடுத்த இடம் ஒரு குறிப்பிட்ட இடம் மாத்திரமே.
    ஆதியாகமம் 13:17ல் ஆண்டவர் ஆபிரகாமிடம் நீ எவ்வளவு தூரத்தைப் பார்த்தாயோ, அவ்வளவு தூரத்தையும் நடந்து வா நான் அதை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்றார்.
    பின்பு ஆபிரகாம் பிரயாணப்பட்டு மம்ரேயின் சமபூமியைச் சேர்ந்தான். இந்த இடம் கடவுள் ஆபிரகாமிற்கு கொடுத்த இடத்தில் ஒன்று. முதலில் சமபூமியில் வாழ முடியாது என்று மலைப்பிரதேசத்திற்கு ஓடின ஆபிரகாம், கடைசியாக கடவுள் தனக்குக் கொடுத்த சமபூமியில் தங்கினார்.
    இப்படிப்பட்ட ஒரு மனிதனை தெரிவு செய்து, இந்த மனிதன் மூலமாக ஆண்டவர் ஒரு சந்ததியை எழுப்ப வேண்டுமா? ஏன் வேறு யாரும் இருக்கவில்லையா? இருந்தார்கள். யார் அவர்கள்.

    ஆபிரகாம் வாழ்ந்த அந்த கானான் தேசத்திற்குள்ளேயே ஒரு அழகான தேசம் இருந்தது. ஒரு சிறிய தேசம் அது. இந்த காலத்தைப்போல அந்த நாட்களில் தேசம் என்றால் பரந்து விரிந்த நிலப்பரப்பு அல்ல. இந்த காலத்தில் இருக்கின்ற ஒரு பெரிய பட்டணத்தைப்போன்றது.
    எருசலேம் என்பது முற்காலத்தில் ஒரு தேசமாக இருந்தது. பின்நாட்களில் அது ஒரு நகரமாக மாற்றப்பட்டது. எருசலேம் ஒரு தேசமாக இருந்தபோது அதற்கு கொடுக்கப்பட்ட பெயர் சாலெம்.

    ஆபிரகாமின் மறுமகனாகிய லோத்தை ஒரு சில ராஜாக்கள் பிடித்துக்கொண்டு போய் சிறைபிடித்து வைத்திருந்த போது, ஆபிரகாம் போய் அவர்களை காப்பாற்றிக்கொண்டு வருகிறான். அந்த நேரத்திலே சாலேம் என்ற தேசத்தின் ராஜாவாக இருந்த மெல்கிசெதேக் என்பவர் ஆபிரகாமை சந்திக்க வருகின்றார். மெல்கிசெதேக் என்றால் நீதியின் ராஜா என்று பொருள். மெல்கிசெதேக் ஒரு பிரதான ஆசாரியனாகவும் இருந்தார். இந்த மெல்கிசெதேக்கிற்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கின்றார். (ஆதியாகமம் 14:20)
    மோசேயின் சகோதரன் ஆரோன். இவன் லேவி கோத்திரத்தான். இந்த ஆரோனை ஆண்டவர் முதல் பிரதான ஆசாரியனாக ஏற்படுத்தினார். அன்றிலிருந்து ஆரோனின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் பிரதான ஆசாரியர்களாகவும், மற்ற லேவிகோத்திரத்தைச் சார்ந்த ஆண்கள் ஆசாரியர்களாகவும் ஆண்டவர் ஒரு முறையை உண்டாக்கினார். இவை நடந்தது நியாயப்பிரமாணத்தின் காலத்தில். நியாயப்பிரமாணம் வந்ததே மோசேக்கு பிறகு தான்.
    மோசே வருவதற்கு முன்பதாகவே ஆசாரியத்துவம் இருந்தது, பிரதான ஆசாரியத்துவம் இருந்தது. அந்த ஆசாரியன் தான் மெல்கிசெதேக். இவர் ஒரு ராஜாவாகவும் இருந்தார். இயேசு கிறிஸ்துவும் மெல்கிசெதேக்கின் முறைமையில் வந்த ஒரு ஆசாரியன். இதை நாம் எபிரெயர் 6:20-7:28-ல் வாசிக்கலாம்.
    மெல்கிசெதேக் கடவுளுக்கு பிரியமான ஒரு மனிதன். கடவுளுக்கு ஆராதனை செய்து, பலிகளை செலுத்திவந்த ஒரு ஆசாரியன். நீதியின் ராஜா. இவருடைய ஆட்சியின் கீழ் இருக்கின்ற ஜனங்கள் எல்லோருமே முறையாக ஆண்டவரை ஆராதிக்கக்கூடியவர்கள். உண்மையான கடவுளை அறிந்திருந்தவர்கள். இவர்கள் சாலேம் என்ற எருசலேமிலே வாழ்ந்து வந்தார்கள். சாலேம் என்ற இடம் ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்ட கானான் தேசத்திலே இருக்கின்றது.
    இப்படி கடவுளை உண்மையாய் ஆராதிக்கக்கூடிய மெல்கிசெதேக் இருக்கத்தக்க, அந்த சாலேமின் தேசத்தார் இருக்கத்தக்க, ஆண்டவரை அறிந்த அவரை ஆராதிக்கின்ற ஒரு அருமையான ஜனக்கூட்டம் இருக்கத்தக்க, இவர்களைக் கொண்டு கடவுள் தனக்கான ஒரு தேசத்தை உருவாக்குவதை விட்டுவிட்டு, பாபிலோனில் வாழ்ந்துகொண்டிருந்த ஆபிரகாமை ஆண்டவர் கொண்டுவந்து, அவன் எத்தனையோ முறை கீழ்ப்படியாமல் போனபோதும், அப்படிப்பட்டவனைக் கொண்டு ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் என்ன?

பாபிலோன்
    பாபிலோன் என்பது பிசாசு இந்த உலகத்திலே அவனுக்காக தெரிந்துகொண்ட ஒரு தலைநகரம். இந்த உலகத்திலே சாத்தானுக்கென்று ஒரு தலைநகரம் இருக்குமானால், அது பாபிலோன். இந்த பாபிலோனைத் தான் சாத்தான் தெரிவு செய்து, அதிலே நிம்ரோத் என்ற ஒருவனை பயன்படுத்தி, அந்த பாபிலோனிலே இருந்து தன்னுடைய அனைத்து அசுத்தங்களையும் உலகம் முழுவதும் பரவச் செய்து, அன்று தொட்டு இன்று வரை, ஏன் இனி பாபிலோன் அழிக்கப்படும் வரை பாபிலோனை தலைநகராகக் கொண்டு இயங்குகின்றான் சாத்தான்.
    அந்த சாத்தானை கேவலப்படுத்துவதற்காக ஆண்டவர், அந்த சாத்தானின் தலைநகரமாகிய பாபிலோனிலே இருந்து ஒரு கீழ்ப்படியாத, தன் மனைவியை விற்றுத் திண்ணக்கூடிய ஒரு மனிதனை தெரிவு செய்து, அவன் மூலம ஒரு ஜாதியை உண்டாக்கி, அந்த ஜாதியார் தவறு செய்கின்ற போதெல்லாம் அவர்களை தண்டித்தும், கண்டித்தும் உருவாக்கி, அவர்களைக் கொண்டே தன்னுடைய திட்டத்தையும், சித்தத்தையும் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டார் நம்முடைய ஆண்டவர். இதுதான் நம்முடைய ஆண்டவரின் இரகசியம்.
    தன்னை வணங்கிக்கொண்டிருந்த, உண்மையாய் தன்னை ஆராதித்துக்கொண்டிருந்த மெல்கிசெதேக்கையும் அவனுடைய ஜனங்களையும் பயன்படுத்துவதை விட, சாத்தானுடைய கோட்டைக்குள்ளே புகுந்து, அங்கே சாத்தானுடைய தூதுவர்களில் ஒருவனை எடுத்து, காலம் போனாலும் பரவாயில்லை என்று, அவனை திருத்தி எடுத்து அவன் மூலமாக ஒரு தேசத்தை உருவாக்கி, அதே தேசத்தைக் கொண்டு சாத்தானையும் சாத்தானுடைய தேசத்தாரையும் குழப்பிக்கொண்டிருக்க விரும்பினார் நம்முடைய ஆண்டவர்.
    ஆபிரகாமைப்போல கீழ்ப்படியாமல், ஆண்டவருக்குக் கீழ் அடங்கியிருக்காமல், தன் சுயம் சொல்லுகிறபடி அழைந்துதிரிகின்ற உங்களையும் ஆண்டவர் எடுத்து பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கிறார்.
    ஒழுங்காய் கீழ்ப்படிந்து, எல்லா காரியங்களையும் சிறப்பாய் நேர்த்தியாய் செய்கின்ற ஒரு மனிதனை எடுத்து பயன்படுத்துவது லேசான கரியம். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒன்றுக்கும் உதவாதவனை எடுத்து ராஜாக்களுக்கு முன்பாகவும், அதிகாரிகளுக்கு முன்பாகவும் நிறுத்துகின்றவர் நம்முடைய ஆண்டவர். பாவத்திலும் அசுத்தத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மையும் ஆண்டவர் எடுத்து பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கின்றார். நாம் எப்பேர் பட்டதவறான பாதையில் நடந்து கொண்டிருந்தாலும் நம்மையும் அவர் பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கின்றார். அவருடைய கரத்தில் நம்மை அர்ப்பணிக்கும்போது அவர் நம்மை உயரத்தில் தூக்கி நிறுத்துகிறவராய் இருக்கின்றார். அதற்காக நாம் தவறு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
    ஆபிரகாம் கீழ்ப்படியாமல், அங்கும் இங்கும் அழைந்து திரிந்து கொண்டிருந்தவன், அவரை முழுமையாய் அறிந்துகொண்ட பின்பு, அவர் என்ன சொன்னாலும் கேட்டு கீழ்ப்படிய ஆரம்பித்தார். முன் உன் தேசத்தை விட்டு, உன் தகப்பன் வீட்டை விட்டு புறப்பட்டு வா என்று ஆண்டவர் சொன்னபோது அதை தன் தகப்பனுக்கு அறிவித்து, கீழ்ப்படியாமல் இருந்த ஆபிரகாம், பின்நாட்களில் அதைவிட கொடுமையான காரியத்தை ஆண்டவர் சொன்னபோது, உன் மகனை எனக்கு தகனபலியாக பலியிடு என்று சொன்னபோது, தன் மனைவியிடம் கூட சொல்லாமல் அதிகாலமே எழுந்து மகனையும், வேலைக்காரரையும், கழுதையையும் எடுத்துக்கொண்டு மோரியா மலைக்குச் புறப்பட்டார். தன் மகனை பலிகொடுப்பதற்கு கத்தியையே ஓங்கினான்.
    கீழ்ப்படிதல் என்றால் என்ன என்று தெரியாத ஒருவனுக்கு ஆண்டவர் கீழ்ப்படிதலை கற்றுக்கொடுத்து, கீழ்ப்படிதலின் சிகரமாக மாற்றினார் ஆண்டவர்.
    ஆண்டவர் போஷிப்பார் என்ற விசுவாசம் இல்லாமல் தன் மனைவியை விற்றுத்தின்ற மனிதனை விசுவாசத்தின் தந்தையாக மாற்றினார் ஆண்டவர்.
    ஒன்றுக்கும் உதவாத ஒரு வியாபாரியைப் போல நடந்துகொண்ட ஆபிரகாமை ஆண்டவர் தன்னுடைய நண்பனாக மாற்றினார்.

    ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் ஆபிராமாக அழைத்திருக்கிறார். நம்மைக்கொண்டு ஆண்டவர் ஒரு சந்ததியை உருவாக்கப்போவதில்லை. ஆனால், ஆபிராமை ஆண்டவர் ஆபிரகாமாக மாற்றி சாத்தானை வெட்கப்படச்செய்தாரே, அதைப்போல ஆண்டவர் நம்மையும் நாம் இருக்கின்ற இடத்திலிருந்து எடுத்து, இந்த உலகத்திற்கு பிரகாசிக்கிற ஒலியாக மாற்ற, சாத்தானை வெட்கப்படுத்த அவர் விரும்புகிறார். அவருடைய கரத்தில் நம்மை ஆர்ப்பணிப்போம், அவர் நம்மை உயர்த்துவார், ஆசீர்வதிப்பார். அமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.