தியானம்:
தலைப்பு: "முழு மனதோடு இறைவனிடம் திரும்புதல்"
இந்த நாளிலும் ஓசேயா இறைவாக்கினர் நூல் 7-ஆம் பிரிவு, 8-16 திருமொழிகளை மையமாகக் கொண்டு, முழு மனதோடு இறைவனிடம் திரும்புதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஆண்டவரின் திருமொழிகளைத் தியானிப்போம்.
ஓசேயா 7:8-16 உள்ள திருமொழியில், இஸ்ராயேல் மக்களின் ஆவிக்குரிய கலப்படத்தை இறைவாக்கினர் ஒசேயா எச்சரிக்கிறார். 8-ஆம் திருமொழியில் கொடுக்கப்பட்டுள்ள "திருப்பப்படாத அப்பம்" என்ற சொல் இஸ்ரவேல் மக்களின் இரட்டை மனதைக் குறிக்கிறது. இஸ்ராயேல் உண்மைக் கடவுளை மறந்து, தங்களை அழைத்த எல்லாம் வல்ல இறைவனை மறந்து, வேற்று நாட்டு (எகிப்து, அசீரியா) மக்களின் தெய்வங்களை, தங்களுக்கு தெய்வங்களாக மாற்றிக்கொண்டு, ஆன்மீக தைரியத்தை இழந்தார்கள்.
இந்தப் பகுதியில் எப்பிராயீம் என்ற சொல் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும். சாலோமோனின் நாள்களுக்குப் பின்பு, இஸ்ராயேல் நாடு வடநாடு, தென்நாடு என்று இரண்டு நாடுகளாக பிரிகின்றது.
கீழ்பகுதியில் உள்ள இரண்டு குலங்கள் தென்நாடு என்றும், மேல் பகுதியில் உள்ள பத்து குலங்கள் வடநாடு என்றும் அழைக்கப்பட்டது.
தென்நாட்டை யூதா என்றும் அழைப்பர்.
வட நாட்டை சமாரியா என்றும், இஸ்ரவேல் என்றும், எப்பிராயீம் என்றும் அழைப்பர். வடநாட்டில் உள்ள பத்து குலங்களில் எப்பிராயீம் குலம் மிகவும் பெரியது. எனவே இஸ்ராயேல் நாடு அந்த பெரிய குலமான எப்பிராயீம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.
ஓசேயா இறைவாக்கினர் நூலில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள எப்பிராயீம் என்பது வடக்கு நாட்டு பகுதியான பத்து குலங்களை உள்ளடக்கிய இஸ்ராயேல் மக்களையே குறிக்கிறது.
வடக்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ராயேல் மக்களுக்கே ஓசேயா இறைவாக்கினர் அனுப்பப்பட்டார்.
1. கலப்படமான இருதயம் (திருமொழி 8)
இஸ்ரயேல் இறைவனையும், அந்நிய தெய்வங்களையும் பின்பற்றி, "திருப்பப்படாத அப்பமாக" ஆனார்கள். நாமும் உலக ஆசைகளுடன் கலந்தால், ஆவிக்குரிய பயனற்றவர்களாக மாறுவோம் (மத்தேயு நற்செய்தி 6:24)
2. ஆவிக்குரிய மயக்கம் (திருமொழி 9)
"இஸ்ரவேல் மக்கள் உண்மை கடவுளை மறந்து அதாவது யாலே கடவுளை மறந்து, வேற்று நாட்டுத் தெய்வங்களையும், வேற்று நாட்டு அரசர்களையும் தேடியதால், வேற்று நாட்டவர் இஸ்ரவேலின் ஆற்றலை உண்டு தீர்த்தார்கள்; ஆனால், இஸ்ரவேலோ அதை உணரவில்லை." பாவத்தால் இழந்த ஆவிக்குரிய பலத்தை இஸ்ரயேல் உணரவில்லை. நாம் இறைவனுடைய வார்த்தையைத் தேடாவிட்டால், ஆவிக்குரிய மயக்கத்தில் விழுவோம்.
3. நிறைவாக மனந்திரும்புதலின் தேவை (திருமொழி 14-16)
"இஸ்ரவேல் மக்கள் முழு உள்ளத்தோடு கடவுளை நோக்கித் தேடவில்லை." இஸ்ரயேலின் வருத்தம் மேலோட்டமானது. அவர்கள் தங்கள் பாடுகளை, துன்பங்களை குறித்தே மனம் வருந்தினார்கள். உண்மையான மனந்திரும்புதல் அவர்களிடத்தில் இல்லை. உண்மையான மனந்திரும்புதல் என்பது, முழு இதயத்தோடு யாவே மாத்திரமே ஒரே கடவுள் என்று நம்புவதாகும்.
நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் கலப்படம் உள்ளதா? இன்று முழு இதயத்துடன், முழு சிந்தையோடும் இறைவனிடம் திரும்பி, அவருடைய அருளினால் புதுப்பிக்கப்படுவோம். ஆமென்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.