Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் வேத ஆராய்ச்சி | Book of Acts Bible Study in Tamil | Part 1 | Jesus Sam

==================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் 1)
===================
    அப்போஸ்தலருடைய நடபடிகள் என்பது தான் சரியான வார்த்தை. சிலர் அப்போஸ்தலருடைய நடபடிக்கைகள் என்று சொல்லுவதுண்டு. இது தவறான வார்த்தையாகும்.

    இதைப்போலவே சிலர் வெளிப்படுத்தின விசேஷத்தை, வெளிப்படுத்தின சுவிசேஷம் என்று செல்லுவதும் உண்டு.

    வேதாகமத்தின் பெயர்கள், இடங்கள் போன்றவற்றை நாம் தெளிவாக அறிந்துகொள்ளுவது நல்லது.


அப்போஸ்தலர்கள் என்றால் யார்?
    அப்போஸ்தலர் என்ற வார்த்தையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். அப்போ என்றால் வெளியே என்று பொருள். ஸ்டெல்லோ என்றால் ஒரு செய்தியோடு அனுப்பப்படுகிறவர்கள்.

    ஒரு செய்தியோடு, குறிக்கோலோடு, நோக்கத்தோடு, பொறுப்போடு ஊழியத்திற்காக வெளியே அனுப்பப்படுகிறவர்கள் தான் அப்போஸ்தலர்கள்.

    அப்போஸ்தலர்களைப் பற்றி கொரிந்தியர், எபேசியர் போன்ற புத்தகத்திலும் நாம் படிக்க முடியும். இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அநேகர் தங்களை அப்போஸ்தலர்களாக அழைப்பதுண்டு. அப்போஸ்தல ஊழியம் என்ற ஊழியங்களும் உண்டு. இவர்களெல்லாம் இந்த அப்போஸ்தலருடைய நடபடிகளில் வருகின்ற அப்போஸ்தலர்கள் அல்ல.

    அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் குறிப்பிடுகின்ற அப்போஸ்தலர்கள் என்பது இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரெண்டு சீஷர்களை குறிக்கிறது.

    இயேசு கிறிஸ்து பன்னிரெண்டு சீஷர்களை தெரிந்துகொண்டார் அவர்கள் தான் அப்போஸ்தலர்கள். அவர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து நான்றுகொண்டு செத்துப்போனான். யூதாஸ் இருந்த இடத்தை பூர்த்தி செய்யும்படியாக மற்ற அப்போஸ்தலர்கள் மத்தியா, யோசேப்பு என்ற இரண்டு நபர்களை தெரிவு செய்து சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. (அப்போஸ்தலர் 1:23-26) அந்த நாள் முதல் மத்தியா பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

    மத்தியாவை தேர்வு செய்தது மற்ற அப்போஸ்தலர்கள்தானே தவிற ஆண்டவர் தெரிந்தெடுக்கவில்லை. பன்னிரெண்டாவது அப்போஸ்தலனாக ஆண்டவர் பவுலை தெரிந்தெடுத்தார். இந்த பன்னிருவரும் இயேசுவானவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு என்ன செய்தார்கள் என்பதையே இந்த அப்போஸ்தலர்கள் நடபடிகள் விளக்குகிறது.


    இந்த அப்போஸ்தலர்கள் தான் சபையை எருசலேமில் துவங்கினார்கள். இவர்கள் மூலமாகவே சுவிசேஷமானது சமாரியாவிற்கும், புறஜாதி மக்களுக்கும், உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமர்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

    ரோமர்களுக்கு சுவிசேஷம் சென்றடைந்து விட்டது என்றால், முழு உலகிற்கும் சுவிசேஷம் சென்றடைந்து விட்டதாகும். ஏனென்றால், உலகத்தின் பல நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தவர்கள் இந்த ரோமர்கள்.

    ஒரு தொழிலைத் துவங்கி அது நாடு முழுவதும் பரவவேண்டும் என்று நினைத்தால், அந்த தொழிலை அந்த நாட்டின் தலைநகருக்கு சென்றே துவங்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் ஒரு பொருள் சென்றடைய வேண்டுமானால், அந்த பொருள் சென்னையில் தான் விற்பனையை துவங்க வேண்டும்.

    சினிமாத்துறையில் இருக்கும் அனைவரும் சென்னை கோயம்போட்டில் இருப்பதை நாம் பார்க்க முடியும். காரணம் சென்னையில் அவர்கள் இருந்தால் மாத்திரமே முழு தமிழகத்தையும் அடைய முடியும்.

    அதைப்போலவே அப்போஸ்தலர்கள் காலத்தில் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமர்களுக்கு சுவிசுஷம் சென்றடைந்தால், அது முழு உலகத்திற்கும் சென்றடைந்ததாகும்.


    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒலிவமலையில் எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த ஒலிவ மலையில் எருசலேமில் அமைந்துள்ளது. அந்த எருசலேமில் தான் சபை உருவானது. எருசலேமில் துவங்கும் சபை எப்படி முழு உலகத்திற்கும் அதாவது எப்படி ரோமாபுரி வரை சென்றடைந்தது என்பதையே இந்த அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் நமக்கு விளக்குகிறது.


    இந்த புத்தகத்தில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை மாத்திரம் அல்ல, அந்த பன்னிரண்டுபேருக்கு துணையாக இருந்து ஊழியம் செய்த ஒருசிலரைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். எ.கா பர்னபா, பிலிப்பு (சமாரியாவில் ஊழியம் செய்தவர்), ஸ்தேவான், லூக்கா, சீலா, அப்பொல்லோ.


லூக்கா
    அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியவர் லூக்கா. லூக்கா என்பது ஒரு கிரேக்கப் பெயர். லூக்கா ஒரு கிரேக்கர். இவர் யூதர் அல்ல.

    அப்போஸ்தலர்கள் காலத்தில் அநேக கிரேக்கர்கள் யூதர்களாக மதம் மாறினார்கள். இப்படி மதம் மாறுகிறவர்களை புராசலிடோஸ் என்று அழைத்தார்கள்.

    இப்படி வேறு மதத்திலிருந்து யூதர்களாக மாறுகிறவர்கள் விருத்தசேதம் செய்துகொள்வார்கள். மற்ற யூத சட்டங்களையும் கடைபிடிப்பார்கள்.

    லூக்கா இயேசுவை ஏற்றுக்கொள்ளும் முன்பே யூதனாக மாறியவர். அப்படியானால் லூக்கா ஒரு யூதன். ஆனால், அவர் யூதனாக பிறக்கவில்லை.

    லூக்கா ஒரு மருத்துவர். அந்த நாட்களில் அநேக இடங்களில் மத்துவக் கல்லூரிகள் இருந்தன. உதாரணமாக, எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியாவிலும் கூட மருத்துவக் கல்லூரிகள் இருந்ததை நாம் பார்க்க முடியும்.

    லூக்கா ஒரு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, அங்கே மருத்துவம் படிக்கும்போது, அவருக்கு ஒரு நண்பர் கிடைத்தார். அவருடைய பெயர் தெயோப்பிலு.

    தெயோப்பிலு என்பதன் அர்த்தம் தேவனின் அன்பு. இந்த பெயரும் கிரேக்கப்பெயர். இவரும் ஒரு கிரேக்கர். லூக்காவைப்போலவே இவரும் கிரேக்கராக இருந்து யூதனாக மாறியவர்.

    மருத்துக் கல்லூரியில் படித்த லூக்கா, தெயேப்பிலு என்ற இருவரும் கிரேக்கராக இருந்து யூதனாக மாறியவர்கள். எனவே இருவரும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். கல்லூரி முடித்து தங்கள் இடங்களுக்கு திரும்பும்போது, இருவரும் தங்களுடைய விலாசத்தை பரிமாறிக்கொள்ளுகிறார்கள். இவர்களுக்கிடையே கடிதத்தொடர்பு இருந்து வந்தது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், இருவருமே ஒருவரை ஒருவர் கனம்பண்ணினார்கள்.


    இருவரும் தங்கள் இடங்களில் மருத்துவப்பணியை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நாட்களில் பவுலின் முதலாவது மிஷனெரி பயணத்தின்போது, பவுலின் உபதேசத்தைக் கேட்ட லூக்கா இரட்சிக்கப்பட்டு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.  லூக்கா இயேசுவை ஏற்றுக்கொண்டது மாத்திரம் அல்லாமல், சில நாட்களில் பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

    அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதிய லூக்கா, பேதுரு அங்கே சென்றார், பவுல் இங்கே சென்றார் என்று எழுதிக்கொண்டே வரும்போது, சில இடங்களில் நாங்கள் கப்பல் ஏறினோம், அங்கே சென்றோம், இங்கே சென்றோம் என்று எழுதுவார். அந்த இடங்களில் பவுலோடு சேர்ந்து லூக்காவும் ஊழியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுல்:
    பவுல் மிகச் சிறந்த கல்விமான். பெரிய செந்தவந்தனும் கூட. அந்த நாட்களில் உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கமாலியேல். இவர் தத்துவ ஞானியும் கூட. கிரேக்கரில் அநேகர் தத்துவ ஞானிகளாக இருந்தார்கள். இந்த கமாலியேல் மாத்திரமே யூதனாகவும், தத்துவ ஞானியாகவும் இருந்தவர். இவர் யூதன் என்பதால், நியாயப்பிரமாணங்களையும், சட்டங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். இவ்வளவு ஞானம் படைத்த ஒருவரிடம் கல்வி கற்க வேண்டுமானால், அவர் அதிகம் படித்திருக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு அதிகம் படித்திருந்தாலும், படித்த எல்லோரையும் கமாலியேல் தன்னுடைய மாணவனாக தெரிவு செய்ய மாட்டார். கமாலியேல் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே, ஒரு சில சிறந்தவர்களுக்கு மட்டுமே குருவாக இருந்து பாடம் கற்பித்தவர்கள். அப்படி உலக புகழ் பெற்ற ஞானியிடம் படித்தவர் இந்த பவுல்.

    இந்த பவுல் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்யும்போது, இவருடைய மொழிநடைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். மிகவும் படித்தவர் என்பதால், தன்னுடைய பிரசங்கங்களில் சரித்திரக் குறிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும், புவியியல் ஆராய்ச்சிக் குறிப்புகளையும் நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்.

    சான்றோனின் மொழிகள் சான்றோனுக்குத் தான் தெரியும் என்பது போல, பவுலின் பிரசங்கத்தைக் கேட்ட லூக்கா இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறார்.

    பவுல் மிகப்பெரிய கல்விமான். பவுலின் தகப்பன் பெரிய ஐசுவரியவான். பவுலின் குடும்பம் சமுதாயத்தால் மதிக்கப்பட்ட ஒரு குடும்பம். பவுல் ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினர். அலெக்சாண்ரியாவில் படித்தவர். இப்படிப்பட்ட பவுல் தனது நிருபத்தில் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன் என்று சொல்லுகிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊழியம் செய்ய ஆரம்பித்தார் பவுல்.

    பவுலின் ஊழியத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்ட லூக்கா மிகப்பெரிய பணக்காரர். இக்காலத்து ஊழியர்கள் ஆசைப்படுவதுபோல, லூக்காவின் பணத்தின் மீது ஆசைப்பட்டு, லூக்காவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் அல்ல இந்த பவுல். பவுல் பெரிய பணக்காரன் என்பதினால், தன்னோடு இருந்த எல்லோரையும் ஒரே மாதிரியாகவே ஏற்றுக்கொண்டார். லூக்கா பணக்காரர் என்றபடியினால், எல்லா காரியங்களிலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பது, அவரிடம் ஆலோசனை கேட்பது போன்ற காரியங்களை பவுல் செய்யவில்லை.

தெயோப்பிலு
    தெயோப்பிலுவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சிகராக ஏற்றுக்கொண்டார். இவர் யாருடைய பிரசங்கத்தின் மூலமாக ஆண்டவர் ஏற்றுக்கொண்டார் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், தெயோப்பிலு ஆண்டவரை ஏற்றுக்கொண்டபோது, அநேகர் அவரிடம் சென்று, நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் பல நாட்கள் ஜெபம் பண்ணினோம். நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள் என்று அநேகர் வந்து தெயோப்பிலுவை குழப்ப ஆரம்பத்தார்கள்.

    தெயோப்பிலு யார் சொல்லுவதை நம்புவது, யார் சொல்வது சரியானது என்று தெரியாமல், தன் நண்பரான லூக்காவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். நண்பனே, இயேசு என்ற ஒரு நபர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தாராம். அவரை நான் என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். அவரைப் பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன். அநேகர் வந்து அநேக கருத்துக்களைச் சொல்லி என்னை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு அந்த இயேசுவைப் பற்றி தெரிந்தால், நீ எனக்கு சொல் என்று கடிதம் எழுதுகிறார்.

    தெயோப்பிலுவின் கடிதத்தை பார்த்த லூக்காவிற்கு சந்தோஷம் நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டாயா! நானும் ஏற்றுக்கொண்டேன். எனக்கு ஆண்டவரைப் பற்றி அறிவித்தவர் மிகப்பெரிய கல்விமான். மிகப்பெரிய ஞானி. நான் ஆண்டவரைப் பற்றி தெளிவாக அறிந்துகொண்டேன். நான் உனக்கு அந்த இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி தெளிவாக, நேர்த்தியாக ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன் என்று அனுப்புகிறார். அதுதான் லூக்கா சுவிசேஷம்.

    லூக்கா முதலாம் அதிகாரத்தில், லூக்கா எப்படி துவங்குகிறார் என்றால்,
லூக்கா 1:1-4
    1. மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
    2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு, வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவகைளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
    3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்மென்று,
    4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

    லூக்கா சுவிசேஷம் முழுவதையும் வாசித்து அறிந்துகொண்ட தெயோப்பிலுவுக்கு அது மிகவும் ஆசீர்வாதமாய் இருந்தது. எனவே, இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுத லூக்கா ஆசைப்பட்டார். இரண்டாவது கடிதமாக அப்போஸ்தலர் நடபடிகளை லூக்கா தெயோப்பிலுவுக்கு எழுதுகிறார்.

    அப்போஸ்தலர் 1:2-ல் முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன் என்று வாசிக்கிறோம். முதலாம் பிரபந்தம் என்பது லூக்கா நற்செய்தி நூல். இயேசுவானவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் லூக்கா சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம். அதன் பின்பு, இரண்டாம் பகுதியாகிய இந்த அப்போஸ்தலர் நடபடிகளில் சீஷர்கள் என்ன செய்தார்கள். எப்படி சுவிசேஷம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது என்பதை லூக்கா எழுதுகிறது.


    அப்போஸ்தலர் 1:3-ல் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாளலவும் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமானார் என்று வாசிக்கிறோம். நாற்பது நாட்கள் என்றால், நாற்பது நாட்களும் இயேசுவானவர் அப்போஸ்தலர்களோடு இல்லை, அவ்வப்போது காட்சி கொடுத்தார். உயிர்த்தெழுந்த அன்று காட்சி கொடுத்தார், பின்பு எட்டு நாளைக்கு பின்பு காட்சி கொடுத்தார். அதன் பின்பு திபேரியா கடற்கரையில் காட்சி கொடுத்தார். இப்படி அவ்வப்போது மாத்திரமே இயேசுவானவர் சீஷர்களுக்கு காட்சி கொடுத்தார்.


    லூக்கா கி.பி. 60-க்கும் 62-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதுகிறார். இந்த காலத்திற்கு முன்பே பவுலும், பேதுருவும் மரித்துப்போனார்கள். அப்போஸ்தலர் இருபத்து எட்டாம் அதிகாரத்தைப் பார்த்தால் பவுல் ரோமாபுரிக்குச் சென்று அங்கே இரண்டு ஆண்டுகள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, தன்னிடத்தில் வருகிறவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார் என்பதோடு அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் நிரைவடைகிறது.

    லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதும்போது பவுலும் உயிரோடு இல்லை, பேதுருவும் உயிரோடு இல்லை. பவுல் நீரோ மன்னனின் காலத்தில், சிரைச்சேதம் பண்ணப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவர்களுடைய மரணத்தைக் குறித்து லூக்கா இந்த நிரூபத்தில் குறிப்பிடவில்லை. காரணம், மரணம் என்பது ஒரு முடிவைக் குறிக்கின்ற ஒன்றாகும்.  ஆவியானவர் பவுல் ஊழியம் செய்ததோடு இந்த நிரூபத்தை முடிக்கவேண்டும் என லூக்காவை ஏவினார்.

    அப்போஸ்தலர் 1:8-ல் சொல்லப்பட்டபடி சபையானது எருசலேமில் துவங்கி உலகின் தலைநகரமாகிய ரோமாபுரியை அடைந்து விட்டது. அன்று முதல் இன்றுவரை சுவிசேஷம் உலகில் பலபகுதிகளிலும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு முடிவற்ற ஒரு பணி என்பதை லூக்கா காட்டுகிறார்.

    அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடியும்.

    ஒன்று முதல் ஏழு அதிகாரங்கள் கொண்ட முதல் பகுதியில் சபை எருசலேமில் எப்படி உருவானது, எப்படி சபை பரவ ஆரம்பித்தது போன்ற காரியங்களை நாம் பார்க்க முடியும்.

    எட்டாம் அதிகாரத்திலிருந்து சுவிசேஷமானது எப்படி புறஜாதிமக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. எட்டாம் அதிகாரத்தில் பிலிப்பு என்பவர் சமாரியர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறார். ஒன்பதாம் அதிகாரத்தில் சவுல் என்ற பவுல் தனது ஊழியத்தை துவங்குகிறார். பவுல் மூன்று மிஷனெரி பிரயாணங்கள் மேற்கொள்ளுகிறார். அதன் மூலமாக புறஜாதிகளுக்கும் சுவிசேஷம் சென்றடைகின்றது. இருபத்து எட்டாம் அதிகாரத்தில் உலகத் தலைநகரம் ரோமாபுரிக்கு சுவிசேஷம் சென்றடைகிறது.


அப்போஸ்தலர் ஒன்றாம் அதிகாரம்
=====================
    அப்போஸ்தலர் 1:4-ல் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒரு புதிய உபதேசத்தை அறிமுகப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தார். மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த மூன்றரை ஆண்டு ஊழியத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி கற்றுக்கொடுத்தார். ஆனால், ஒருபோதும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து கற்றுக்கொடுக்கவில்லை.

    இயேசு கிறிஸ்து மரித்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் அந்த கடைசி வினாடிகளில் தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒரு புதிய காரியத்தை கற்றுக்கொடுக்கின்றார்.


ஞானஸ்நானம்:
    நாம் தண்ணீரைக் குடிக்கும்போது, தண்ணீர் நமக்குள்ளாக போகிறது. அது ஞானஸ்நானம் அல்ல. நாம் தண்ணீருக்குள் செல்வதே ஞானஸ்நானம்.

    இயேசுவானவர் பரிசுத்த அவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து பேசும் முன்பாகவே பரிசுத்த ஆவியானவர் சீஷர்களோடு இருந்தார்.

    யோவான் 20:22-ல் இயேசு சீஷர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூருகிறார். இயேசு கிறிஸ்து ஊழியம் செய்யும்போது பரிசுத்த ஆவியானவரைக் குறித்து சீஷர்களுக்கு போதித்தார். அப்படியானால் சீஷர்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார். இருப்பினும், நீங்கள் அனைவரும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசுவானவர் கற்றுக்கொடுக்கின்றார்.


    இயேசு ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னபோது, அவர்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் வந்துவிட்டார். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது நாம் பரிசுத்த ஆவிக்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது.

    நாம் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் நமக்குள்ளாக போகிறது. நாம் தண்ணீருக்குள் போகவில்லை. அதைப்போல பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பது பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வருவதைக் குறிக்கிறது.

    நான் ஒரு முறை வயிறு நிரம்ப தண்ணீர் குடித்தேன் என்பதற்காக இனி நான் தண்ணீர் குடிக்கமாட்டேன் என்பது பொருள் அல்ல. அதைப்போலவே பரிசுத்த ஆவியினால் நாம் ஒவ்வொரு நாளும் நிரப்பப்பட வேண்டும். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக வருகிறார்.

    ஒரு ஆற்றிலிருந்து எடுத்த தண்ணீரில் கொஞ்சம் நான் குடித்தேன் என்பதினால், அந்த ஆறு என் வயிற்றுக்குள்ளே போனதாக அர்த்தம் அல்ல. அந்த ஆற்றின் தண்ணீரில் கொஞ்சம் எனக்குள்ளாக போனது என்று பொருள். அதைப்போலவே பரிசுத்த ஆவியானவர் கடலைவிட மிகவும் பெரியவர், நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டேன் என்பதினால் முழு பரிசுத்த ஆவியானவரும் எனக்குள்ளே வந்தாக பொருள் அல்ல. பரிசுத்த அவியானவரின் ஒரு சிறிய பகுதி எனக்குள்ளாக இருக்கின்றார் என்று தான் பொருள்.

    நான் ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று ஆற்றிற்குள் குதிக்கிறேன் என்றால், அந்த ஆறுக்குள் நான் போனதாக அர்த்தம். அதைப்போலவே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியானவருக்குள் நான் போவதைக் குறிக்கிறது.

    சீஷர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள், அதாவது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக இருந்தார். அவர்கள் பரிசுத்த ஆவிக்குள் நுழைய வேண்டும், அதுதான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். அந்த ஞானஸ்நானத்தைப் பெறும்படி எருசலேமில் காத்திருங்கள் என்று ஆண்டவர் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.


    ஆண்டவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒரு புதிய உபதேசத்தைக் கற்றுக்கொடுக்கின்ற அந்த நேரத்தில், கூடியிருந்த சிலர் ஆண்டவரே இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். (அப்போஸ்தலர் 1:6)

    நியாயப்படி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்ன? எப்படி நாங்கள் அதை பெற்றுக்கொள்வது? எப்படி நாங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவோம்? இதுபோன்ற கேள்விகளைத் தான் அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.

    ஆனால் கூடியிருந்தவர்கள் மாறாக, ஆண்டவரே இந்த காலத்திலா, இஸ்ரவேலர்களுக்கு தனி நாடு கொடுப்பீர் என்று கேட்கிறார்கள்.

    இஸ்ரவேலர்கள் பல ஆண்டுகளாக மற்ற நாட்டின் கீழ் அடிமைகளாக இருக்கிறார்கள். தாவீது அரசனைப்போல ஒரு அரசன் வந்து, தாவீதைப்போல யுத்தம் செய்து, எதிரிகளை தோற்கடித்து எங்களுக்கு தனி நாடு கொடுப்பார் என்று இஸ்ரவேலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இயேசு கிறிஸ்து தங்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த இஸ்ரவேலர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாய் இருந்தது. இயேசுவின் காலத்தில் இஸ்ரவேலை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் ரோமர்கள். ரோமர்களிடமிருந்து இயேசு தங்களுக்கு விடுதலை கொடுப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், இயேசுவானவர் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்டார். நம்பிக்கையற்றுப்போய் இருந்த ஜனங்கள் இயேசு உயிர்த்தெழுந்து வந்து, ஒரு புதிய காரியத்தைக் கற்றுக்கொடுக்கும்போது, எப்போது எங்களுக்கு தனி நாடு கொடுப்பீர் என்று கேட்கிறார்கள்.

    உடனே, இயேசுவானர் இவர்கள் திருந்தாத ஜனங்கள் என்று நினைத்துக்கொண்டு, பிதாவானவர் எதை எப்பொழுது செய்ய நினைத்திருக்கிறாரோ, காலம் வரும்போது அதை செய்வார். அதை குறித்து நீங்கள் ஒன்றும் கேள்வி கேட்கத்தேவையில்லை என்று பதில் சொல்லுகிறார்.

    அப்போஸ்தலர் 1:8-ல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது என்று வாசிக்கிறோம். மூல பாஷையாகிய கிரேக்க பாஷையில் உங்கள் மேல் வரும்போது என்று எழுதப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகமத்திலும் கூட உங்கள் மேல் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.


அப்போஸ்தலர் 1:8
    பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

    இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நான்கு காரியங்களும் அப்போஸ்தலர் புத்தகத்திலேயே நிரைவேறிவிட்டது.

    அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் படிப்பறிவு இல்லாத பேதுரு பரிசுத்த ஆவியினால் பெலனடைந்து பிரசங்கித்த போது மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அப்படியானால் சபை எருசலேமில் துவங்கிவிட்டது. எருசலேமிலே சாட்சியை காத்துக்கொண்டார்கள்.

    பின்பு எருசலேமிலிருந்து யூதேயாவின் ஏனைய பிரதேசங்களான கலிலேயோ, பெயர்செபா போன்ற இடங்களுக்குச் சென்று சீஷர்கள் சுவிசேஷம் அறிவித்தார்கள். யூதேயா முழுவதிலும் சாட்சியாய் மாறினார்கள்.

    அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் பிலிப்பு என்பவர் சமாரியாவிற்கு சென்ற சுவிசேஷத்தை அறிவித்தார். சமாரியாவிலும் சாட்சியை காத்துக்கொண்டார்கள்.

    அப்போஸ்தலர் 9-ம் அதிகாரத்திலிருந்து பவுல் இயேசுவை ஏற்றுகொண்டு அந்தியோகியா, கொரிந்து, எபேசு, ஸ்பானியா போன்ற உலகின் பல நாடுகளுக்குச் சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். கடைசியில் பவுல் ரோமாபுரிக்கே சென்று சுவிசேஷத்தை அறிவிக்கத் துவங்கினார். ரோமாபுரிக்கு சுவிசேஷம் வந்துவிட்டது என்றால், முழு உலகத்திற்கும் வந்ததாகும். அப்படியானால், அப்போஸ்தலர் 1:8 அப்போஸ்தலர் நடபடிகளிலேயே நிறைவேறிவிட்டது.


    லூக்கா 24:50-ல் இயேசு கிறிஸ்து பெத்தானியா என்ற இடத்திலிருந்து பரமேரியதாக லூக்கா எழுதியுள்ளார். அதே லூக்கா அப்போஸ்தலர் 1:12-ல் இயேசுவானவர் ஒலிவமலையிலிருந்து பரமேரியதாக எழுதுகிறார்.

    புவியியல் தெரியாத அநேகர் வேதம் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டது என்று சொல்லுகிறார்கள். யோவான் 11:8-ன் படி எருசலேமிற்கும் பெத்தானியாவிற்கும் இடைப்பட்ட தூரம் இரண்டு மைல். இந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவாக இருக்கும் மலை தான் ஒலிவ மலை. (மாற்கு 11:1)

    இயேசு கிறிஸ்து ஒலிவமலையின் மையத்திலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர் எடுத்துக்கொள்ளப்படும்போது சுமார் 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டதை ஒரு பகுதியிலிருந்து பார்த்தவர்கள் இயேசு ஒலிவமலையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், மற்ற பகுதியிலிருந்து பார்த்தவர்கள் பெத்தானியாவிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று சொன்னார்கள்.

    இயேசு கிறிஸ்து ஒலிவ மலையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றாலும், பெத்தானியாவிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றாலும் இரண்டும் சரியானதாகும்.


    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, நாற்பது நாள் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகிறார். பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அப்படி எடுத்துக்கொள்ளப்படுகையில் சீஷர்களைப் பார்த்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறும் வரை எருசலேமில் காத்திருங்கள் என்று கூறுகிறார். எத்தனை நாள் சீஷர்கள் காத்திருந்தார்கள் என்றால் யூதர்கள் கணக்குப்படி ஏழு நாள் சீஷர்கள் எருசலேமில் காத்திருந்தார்கள்.

    அப்போஸ்தலர் 2:1-ல் பெந்தெகோஸ்தே என்னும் நாளில் சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். பெந்தெகோஸ்தே என்றால் ஐம்பது என்று பொருள்.

    பெந்தகோஸ்தே பண்டிகை என்பது பஸ்கா பண்டிகைக்கு அடுத்து வரும் ஐம்பதாவது நாளைக் குறிக்கிறது. யூதர்களைப் பொறுத்தவரை வாரத்தின் ஏழாம் நாளே ஓய்வு நாள். அதாவது யூதர்கள் சனிக்கிழமையைத் தான் ஓய்வு நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

    பஸ்கா பண்டிகையானது ஓய்வு நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பஸ்கா பண்டிகையின் ஓய்வு நாளிலிருந்து அடுத்த ஏழு ஓய்வு நாளுக்கு அடுத்து வரும் வாரத்தின் முதல் நாள், அதாவது ஞாயிறு கிழமை கொண்டாடப்படும் பண்டிகை அறுவடைப் பண்டிகை. அதாவது, பெந்தகோஸ்தே பண்டிகையாகும்.

    இயேசு கிறிஸ்து மரித்தது பஸ்கா பண்டிகைக்கு முந்தின நாள். அவர் உயிர்த்தெழுந்தது பஸ்கா பண்டிகைக்கு அடுத்த நாள். அதாவது வாரத்தின் முதல் நாள். இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் சீஷர்களுக்குத் தரிசனமானார். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு ஐம்பதாவது நாள் அறுவடைப் பண்டிகை அல்ல, பஸ்கா பண்டிகையிலிருந்து ஐம்பதாவது நாள் தான் அறுவடைப் பண்டிகை.

    அந்த அறுவடைப் பண்டிகை, அதாவது பெந்தகோஸ்தே என்னும் நாளில் தான் சீஷர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றார்கள். அபிஷேகம் என்பதும் ஞானஸ்நானம் என்பது ஒரே பொருளையே குறிக்கிறது.

    அபிஷேகம் என்பது ஒரு மனிதன் குடிப்பது அல்ல. ஒரு மனிதன் பாலைக் குடிக்கிறான் என்றால், அவன் பாலினால் அபிஷேகம்பண்ணப்படுகிறான் என்று பொருள் அல்ல. அந்த பாலை அவன் தலையில் ஊற்றி அது அவன் தடி வழியாக வழிந்தோட வேண்டும். அதுதான் அபிஷேகம்.

    சங்கீதம் 133-ல் இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலம் என்று வாசிக்கிறோம்.

    ஞானஸ்நானமும், அபிஷேகமும் ஒன்று தான் என்று கற்றுக்கொண்டோம். நாம் தண்ணீரைக் குடிப்பது ஞானஸ்நானம் அல்லது அபிஷேகம் அல்ல. வெளிப்புறத்தில் தண்ணீர் நம்முடைய தலையிலிருந்து சரீரம் முழுவதும் பரவுவதே அபிஷேகம் அல்லது ஞானஸ்நானம் ஆகும்.

    எதையாகிலும் ஒன்றைக் குடித்தால் தான் நிரம்ப முடியும். தலையில் எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும், அதன் மூலமாக நிரம்ப முடியாது. அதாவது, அபிஷேகம் என்பது நிரம்பக்கூடிய ஒன்று அல்ல. அபிஷேகத்தில் நிரம்புங்கள் என்று அநேகர் சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம்.

    அபிஷேகத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர, அபிஷேகத்தில் நிரம்ப முடியாது. அபிஷேகம் என்பது சரீரத்திற்குள் நிகழும் மாற்றம் அல்ல, சரீரத்திற்கு வெளியே நிகழும் மாற்றம்.



    அப்போஸ்தலர் 1:13-ல் சீஷர்கள் மேல் வீட்டில் ஏறினார்கள் என்று வாசிக்கிறோம். மேல் வீடு என்பது தாவீதின் கல்லறையைக் குறிக்கிறது. சீயோன் மற்றும் எருசலேம் இவை இரண்டும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த சீயோனில் தான் தாவீதின் கல்லரை இருந்தது.

    தாவீதின் கல்லரையை எசீன்ஸ் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பராமரித்து வந்தார்கள்.

    யார் இந்த எசீன்ஸ்கள் என்றால், மல்கியாவின் காலத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கும் இடைப்பட்ட நானூறு ஆண்டுகளை யூத வரலாற்றில் இருண்ட காலமாக கருதுகிறார்கள்.

    இந்த இருண்ட காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும்படியாக எருசலேம் தேவாலயத்தில் இருந்த ஆசாரியர்கள் தேசத்தின் தலைவர்களை நம்பி இருந்தார்கள். தேவாலயத்தில் ஆசாரியர்கள் மாத்திரமே செய்யும் வேலைகளை, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் செய்ய வைத்தார்கள் இந்த ஆசாரியர்கள்.

    தேவாலயத்தில் நடைபெறுகின்ற அநியாயத்தைப் வெறுத்த ஒருசில ஆசாரியர்கள் தேவாலயத்தை விட்டு புறப்பட்டு காடுகளில் வாழ ஆரம்பித்தார்கள். இவர்கள் தான் எசீன்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் கும்ரான் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களில் ஒருவர் தான் யோவான்ஸ்நானன்.

    இவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் தாவீதின் கல்லரை இருந்தது. இவர்கள் தான் தாவீதின் கல்லரைக்கு மேலாக ஒரு வீட்டைக் கட்டினார்கள். இந்த மேல் வீட்டில் தான் இயேசுவானவர் தனது சீஷர்களோடு இராவிருந்து (பஸ்கா விருந்து) அனுசரித்தார்.


    எசீன்ஸ்கள் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் மதித்தார்கள். எனவேதான், இயேசு தன் சீஷர்களை அனுப்பி பஸ்காவை ஆயத்தம்பண்ண இடம் கேட்டபோது அவர்கள் தயங்காமல் இடம் கொடுத்தார்கள். அந்த இடத்திற்குத்தான் இப்போது சீஷர்கள் வந்திருக்கிறார்கள்.


    எசீன்கள் என்பவர்கள் அனைவருமே ஆசாரியர்கள். தேவாலயத்தில் நடைபெறுகின்ற அநியாயமான காரியகளைப் பார்த்த இவர்கள், தேவாலயத்தைவிட்டு வெளியேறி, தங்கள் குடும்பங்களையும் விட்டு தனியாக வாழ ஆரம்பித்தார்கள். குடும்பங்களையும் விட்டு தனியாக இவர்கள் வாழ ஆரம்பித்ததால், அந்த எசீன்கள் கூட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருப்பதில்லை.

    இயேசு கிறிஸ்து பஸ்காவை ஆயத்தம்பண்ண தன்னுடைய சீஷர்களுக்கு கட்டளையிடும்போது, தண்ணீர் குடம் சுமந்துகொண்டு ஒருவன் போவான், அவனுக்கு பிறகே சென்று அவன் காண்பிக்கும் இடத்தில் பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்றார் இயேசு. யூத ஆண்கள் பொதுவாக தண்ணீர் குடம் தூக்க மாட்டார்கள். எசீன்கள் தனியாக ஆண்கள் மாத்திரம் வாழ்ந்ததினால், அவர்களே தண்ணீர் குடம் சுமந்தார்கள்.

    எசீன்களோடு ஸ்திரீகள் இல்லாதிருந்தாலும், அவர்கள் ஸ்திரீகளை ஏற்றுக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 1:13,14-ல் வாசிக்கிறோம், அந்த மேல்வீட்டில் சீஷர்களோடு அநேக ஸ்திரீகளும் கூடியிருந்தார்கள்.


    அப்போஸ்தலர் 1:15-ல் நூற்றிருபது பேர் கூடியிருந்த இடத்தில் பேதுரு எழுந்து நின்று பேசினார் என்று வாசிக்கிறோம். அத்துனை சீஷர்களும், ஸ்திரீகளும், ஜனங்களும் தங்கியிருக்கின்ற இடத்தில் ஏன் பேதுரு மாத்திரம் எழுந்து நின்று பேசினார்? பேதுருவுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார் என்று நாம் யோசிக்கலாம்.

    இத்தனை நாட்களாக பொது இடங்களில் பேசாத பேதுரு முதல் முறையாக பேசத்துவங்குகிறார். காரணம் என்னவென்றால், வயதுதான் காரணம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரைக் கட்டிலும் பேதுரு வயதில் மூத்தவர்.

    யூத ஆண்கள் பொதுவாக நாற்பது (40) வயதில் திருமணம் செய்வார்கள். இயேசு கிறிஸ்து தன்னுடைய முப்பதாவது (30) வயதில் ஊழியத்தை துவங்கினார். பன்னிரண்டு சீஷர்களை தெரிவு செய்தார். இந்த பன்னிரெண்டு சீஷர்களில் பதினொரு பேர் இயேசுவின் வயதை ஒட்டியவர்கள். பேதுரு மாத்திரமே அதிக வயது சென்றவர். இதை நாம் எப்படி அறிய முடிகிறது என்றால், இயேசுவின் சீஷர்களில் பேதுரு மாத்திரமே திருமணம் செய்திருந்தார். பேதுருவின் மாமிக்கு இயேசு சுகம் கொடுத்ததாக மத்தேயு 8:14,15-ல் வாசிக்கிறோம்.

    இதிலிருந்து தெரிகிறது பேதுரு திருணம் செய்திருந்தார். அவருடைய வயது நாற்பதை தாண்டியிருந்தது. இயேசுவின் மூன்றரையாண்டு ஊழியத்தில் இயேசுவிடம் அதிகமாக பேசியவர், அதிக கேள்விகள் கேட்டவர், இயேசுவுக்கே ஆலோசனைகள் கொடுத்தவர் இந்த பேதுரு. காரணம், இயேசுவை விட வயதில் மூத்தவராக இருந்தார் பேதுரு.

    அப்போஸ்தலர் 1:15-ம் வயதில் மூத்தவராகிய பேதுரு பேசத்துவங்கினார்.

    பேதுரு பேசத்துவங்கி, யூதாஸ் எங்களோடு கூட ஊழியத்தில் பங்குபெற்ற ஒருவனாய் இருந்தாலும், அவன் தற்கொலைசெய்து கொண்டதால், அவனுக்கு பதிலாக வேறு ஒருவரை தெரிவுசெய்ய வேண்டும் என்று கூறினார்.

    யோசேப்பு, மத்தியா என்ற இரண்டு நபர்களின் பெயர்களை எழுதி சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பேருக்கு வழுந்தது. உடனே, பதினொரு அப்போஸ்தலரோடு அவன் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

    மத்தியாவை சீஷர்கள் தான் தெரிவு செய்தார்களே தவிற ஆண்டவர் தெரிவு செய்யவில்லை. ஆண்டவர் பன்னிரெண்டாவது சீஷனாக தெரிவு செய்தது பவுலைத்தான் என்று அநேகர் நம்புகிறார்கள்.

    பதினொருவரும் யூதர்களின் அப்போஸ்தலர்களாக இருந்தார்கள். ஆனால், ஆண்டவர் பவுலை யூதர்களுக்கு மாத்திரம் அல்ல புறஜாதிகளுக்கும் அப்போஸ்தலனாக எடுத்து பயன்படுத்துகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.