Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் வேத ஆராய்ச்சி | Acts Bible Study in Tamil | The Feast of Pentecost | பேதுருவின் முதல் பிரசங்கம் | Jesus Sam

=====================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் இரண்டு)
====================
    அப்போஸ்தல் 2:1-ல் பெந்தெகோஸ்தே என்னும் நாளில் சீஷர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள் என்று வாசிக்கிறோம்.


பெந்தெகோஸ்தே:
    பெந்தெகோஸ்தே என்றால் ஐம்பது என்று பொருள். பஸ்கா பண்டிகையிலிருந்து ஏழு ஓய்வு நாட்களுக்கு பின்வரும் வாரத்தின் முதல் நாள் அதாவது ஐம்பதாவது நாள் ஆகும். (யூதர்கள் முறைப்படி சனிக்கிழமையே ஓய்வு நாள்). பெந்தெகேஸ்தே நாள் என்பது யூதர்களுடைய பண்டிகை நாள்.

    ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடியிருந்தார்கள் என்று வாசிக்கிறோம். எங்கே கூடியிருந்தார்கள் என்றால், அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தில் அவர்கள் கூடியிருந்த அந்த மேல் வீட்டில் (அப்போஸ்தலர் 1:13) தான் இப்போதும் ஒருமனப்பட்டிருந்தார்கள்.

    தாவீதின் கல்லறைக்கு மேல் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் தான் சீஷர்கள் கூடியிருந்தார்கள். அதைத்தான் வேதத்தில் மேல் வீடு என்று வாசிக்கிறோம்.


    அப்போஸ்தலர் 1:15-ல் மேல் வீட்டில் நூற்றிருபது பேர் (120) கூடியிருந்தார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து பரமேரும்போது அங்கே கூடியிருந்தவர்கள் சுமார் 500 பேர். நீங்கள் எருசலேமில் காத்திருங்கள் என்று இயேசு அங்கே கூடியிருந்த எல்லோருக்குமே சொன்னார். ஆனால் கீழ்ப்படிந்தவர்கள் 120 பேர் மாத்திரமே.

    இன்றும் வார்த்தையைக் கேட்கிற அனைவரும் கீழ்ப்படிகிறதில்லை. சிலர் மாத்திரமே கீழ்ப்படிகிறார்கள். பலர் வார்த்தையை கேட்கும்போது ஆசையாய் ஏற்றுக்கொள்கிறார்கள், கீழ்ப்படிய தவறிவிடுகிறார்கள்.


    அப்போஸ்தலர் 2:3-ல் பரிசுத்த ஆவியானவர் அக்கினிமயமான நாவுகள் போல அவர்கள் மேல் வந்து அமருகிறார்.

    அப்போஸ்தலர் 2:4-ல் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாகச் சென்று அவர்களை நிரப்புகிறார். பின்பு அவர்கள் வெவ்வேறு பாஷைகளை பேசத் தொடங்கினார்கள்.


    அப்போஸ்தலர் 2:5-ல் உலகமெங்கும் இருக்கிற யூதர்கள் எருசலேமிலே கூடினார்கள் என்று வாசிக்கிறோம்.

    கி.மு.722-ல் வடக்கு ராஜ்யம் என்று சொல்லப்படுகின்ற இஸ்ரவேல் ராஜ்யம், (பத்து கோத்திரங்கள்) அசீரியர்களால் சிரைபிடிக்கப்பட்டது. இக்காலத்தில் இந்த வடக்கு ராஜ்யத்தில் உள்ள பத்து கோத்திரத்து இஸ்ரவேலர்கள் உலகின் பல தேசங்களுக்கு சிதறடிக்கப்பட்டார்கள்.

    அப்படி சிதரடிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை எருசலேமுக்கு வருவார்கள். அப்படி அவர்கள் எந்த எந்த நாடுகளிலிருந்து வந்தார்கள் என்று தான் அப்போஸ்தலர் 2:9-11 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
    இங்கே சொல்லப்பட்ட நாடுகள் அனைத்தும் இப்போது எந்த பெயரால் அழைக்கப்படுகிறது என்று அறிந்துகொள்வோம்.

    பார்த்தர் => பார்த்தியா (மத்திய கிழக்கு நாடு)

    மேதர் => மேதியா (இப்போதைய ஈரான் பிரதேசம்)

    எலாமீத்தர், மெசொப்பொத்தாமியா => ஈரான் பிரதேசம்

    யூதேயா => எருசலேமிற்கு அருகில் உள்ள பிரதேசம்

    கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா => தற்போதைய லெபெனான், சிரியா, துருக்கியின் கிழக்கு பகுதி

    பம்பிலியா, எகிப்து, சிரேனே => ஆப்பிரிகாவில் உள்ள நாடுகள்

    ரோமாபுரி => ஐரோப்பா

    யூத மார்க்கத்தமைந்தவர்கள் => வேறு மதத்திலிருந்து யூதனாய் மாறியவர்கள்

    கிரேத்தர், அரபியர் => சவுதி பிரதேசம்


    இங்கே பார்த்தால் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் வாழ்கின்ற மக்களும் எருசலேமிற்கு வந்திருக்கிறார்கள்.

    உலகத்தில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்டிக், அண்டார்டிக்.

    இந்த ஏழு கண்டங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்ற இரண்டு கண்டங்களும் இப்பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்டது. இயேசுவின் காலத்தில் இந்த இரண்டு கண்டங்களில் யாரும் வாழவில்லை.

    ஆர்டிக் கண்டத்திலும், அண்டார்டிக் கண்டத்திலும் மனிதர்கள் இன்றும் வாழவில்லை. ஆர்டிக் கண்டத்தில் பனிக்கரடிகள் மட்டுமே வாழ்கின்றன. அண்டார்டிக் கண்டத்தில் பென்குயின் மாத்திரமே வாழ்ந்து வருகின்றன.

    இயேசுவின் காலத்தில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டகங்களில் மாத்திரமே மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

    அந்த மூன்று கண்டத்தில் வாழ்கின்ற யூதர்கள் அனைவரும் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் எருசலேமில் கூடியிருந்தார்கள். அப்படியானால் உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள யூதர்கள் அன்று எருசலேமில் கூடியிருந்தார்கள்.


    இத்தனை ஜனங்கள் அங்கே கூடியிருந்தார்கள் என்றால், அவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரே மொழி பேசியிருக்க மாட்டார்கள். இந்தியாவில் மாத்திரமே 1270-ம் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக சொல்லுகிறார்கள். மூன்று கண்ட மக்களும் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மொழி பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள்.


    உலகமெங்கும் சிதரிப்போன யூதர்கள் எருசலேமில் என்ன செய்தார்கள்:

    இஸ்ரவேலர்களின் முக்கிய பண்டிகைகள் மொத்தம் ஏழு. இந்த ஏழு பண்டிகைகளில் மூன்று பண்டிகைகள் தொடர்ந்து வரக்கூடியவை.

    முதலாவது பஸ்கா பண்டிகை. பஸ்கா பண்டிகைக்கு மறுநாள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை. புளிப்பில்லாத அப்பப்பண்டிகை மொத்தம் ஏழு நாள் நடைபெறும். புளிப்பில்லாத அப்பப்பண்டிகை முடியும் முன்னமே, புளிப்பில்லா அப்பப்பண்டிகை தொடங்கின மறுநாளே அசைவாட்டும் பண்டிகை அனுசரிப்பார்கள். அசைவாட்டும் பண்டிகையை முதற்கனி பண்டிகை என்றும் அழைப்பர்.

    இந்த அசைவாட்டும் பண்டிகைக்கு பின்வரும் 47-வது நாள், அதாவது பஸ்கா பண்டிகைக்கு பின்வரும் 50-வது நாள் அறுவடைப் பண்டிகை (பெந்தேகோஸ்தே பண்டிகை) அனுசரிப்பார்கள்.

    பஸ்கா பண்டிகைக்கு ஏழு நாளைக்கு முன்பே உலகமெங்கும் இருக்கின்ற யூதர்கள் எருசலேமிற்கு வருவார்கள். இப்படி வருகிறவர்கள் பஸ்கா பண்டிகைக்கு பின்வரும் 50-வது நாள் அறுவடைப் பண்டிகை முடிந்த பின்பே தங்கள் சொந்த ஊருக்குப் புறப்படுவார்கள். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்கள் உலகமெங்கும் உள்ள யூதர்கள் எருசலேமில் தங்கியிருப்பார்கள்.

    உலகமெங்கும் உள்ள யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு மாதங்கள் எருசலேமுக்கு வந்து அங்கேயே தங்கியிருப்பார்கள். தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிளோ, வாடகை வீடுகளிளோ, கூடாரங்களிளோ தங்கள் வசதிற்கு ஏற்ப ஆங்காங்கே தங்கி பண்டிகைகளில் கலந்துகொள்வார்கள்.

    வருடந்தோறும் நடைபெறுகின்ற இந்த பண்டிகைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே உலகமெங்குமுள்ள யூதர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை இந்த பண்டிகை காலங்களுக்காக செலவிடுவார்கள். வசதி படைத்தவர்கள் கழுதைகளிலும், குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் வருவார்கள். வருடம் தவறாமல் கலந்து கொள்ளுகிறவர்களும் உண்டு. இரண்டு ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வருபவர்களும் உண்டு. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது எருசலேமிற்கு சென்று இந்த பண்டிகைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை, கணவுகளோடு வருபவர்களும் உண்டு.


    இப்படி சிதறிப்போன யூதர்கள் அனைவரும் பஸ்கா பண்டிகைக்கு ஏழு நாளைக்கு முன்பு மிக உற்சாகமாக, ஆனந்தத்தோடு எருசலேமுக்கு வருவார்கள். அப்படி அவர்கள் வரும்போது தான் இயேசுவானவர் ஒரு கழுதையின் மேல் ஏறி பவணியாக வந்தார்.

    உலகமெங்குமுள்ள யூதர்கள் எருசலேமுக்கு வரும்போது அவர்களுக்கு இயேசு யார் என்று தெரியாது. இயேசு கழுதையில் அமர்ந்திருக்கிறார், அவருடைய சீஷர்கள் ஓசன்னா.. ஓசன்னா என்று சொல்லுகிறார்கள். இதைப் பார்த்த சிதறடிக்கப்பட்ட யூதர்கள், இவர் ஏதோ முக்கியமான நபராக இருப்பார் என்று நினைத்து, சீஷர்கள் சொல்லுவதுபோலவே அவர்களும் ஓசன்னா, ஓசன்னா என்று பாடி குறுத்தோலைகளையும், சால்வைகளையும் விரித்து அவரை வரவேற்றார்கள்.


    இப்படி கொண்டாட்டமாக எருசலேமுக்கு வரும் யூதர்கள் பஸ்கா பண்டிகை, புளிப்பில்லாத அப்பப்பண்டிகை, அசைவாட்டும் பண்கைகளை முடித்துவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட மாட்டார்கள். இன்னும் சில நாட்களில் வர இருக்கின்ற அந்த அறுவடைப் பண்டிகைக்கும் இருந்துவிட்டே தங்கள் ஊர்களுக்குச் செல்வார்கள்.

    பஸ்கா பண்டிகையிலிருந்து 50-வது நாள் அறுவடைப்பண்டிகை அன்று தேவாலயத்திற்கு சென்று, பண்டிகைகள் முடிவடைந்த பின்பு எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். எருசலேமுக்குள் நுழையும்போது சந்தோஷமாக உள்ளே நுழைந்தவர்கள் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்பும்போது வருத்தத்தோடு புறப்படுவார்கள்.

    அப்படி அவர்கள் சொல்லும்போது எருசலேமிற்கு வெளியே தான் சீயோன் இருக்கிறது. அந்த சீயோனில் தான் தாவீதின் கல்லறை இருக்கின்றது.

    பண்டிகைகள் முடிந்து தங்கள் இடங்களுக்கு திரும்புகின்ற யூதர்கள் தாவீதின் கல்லறைக்குள் சென்று, தங்கள் அனுதாபங்களை தெரிவிப்பதுண்டு. தாவீது இஸ்ரவேலின் மிகச் சிறந்த அரசன். அவரைப்போல ஒரு அரசன் வருவான் என்றே அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தாவீதின் குமாரன் வருவார் என்று இயேசுவைக் குறித்தே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது. இதை உணராத யூதர்கள் தாவீதின் குமாரன் இயேசு அல்ல. தாவீதின் குமாரன் வருவார் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று நம்புகிறார்கள்.

    அவர்கள் தங்கள் இடங்களுக்கு செல்லும்போது தாவீதின் கல்லறையைப் பார்த்து, தாவீது அரசரே உம்முடைய ஆட்சியை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். உம்மைப்போல ஒரு அரசர் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லி தங்கள் அநுதாபங்களை கல்லறைக்கு முன்பாக தெரிவிப்பார்கள். தாவீதின் கல்லறையை ஒரு புனித ஸ்தலமாகவும் அவர்கள் கருதினார்கள்.

    கூட்டம் கூட்டமாக ஜனங்கள் தங்கள் தேசத்திற்கு செல்லும்போது, தாவீதின் கல்லறையின் அருகில் வந்தவுடன் மிகவும் அமைதியாக இருப்பார்கள். தாவீதின் கல்லறையைத் தொட்டு, தங்கள் அனுதாபங்களை தெரிவிப்பார்கள்.

    இன்றும் யூதர்கள் தாவீதின் கல்லறைக்குச் சென்று ஜெபிக்கிறார்கள். தாவீதின் கல்லறைக்கு சென்று வர ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவரவருடைய பாதையில் சென்று, தாவீதின் கல்லறையைத் தொட்டு, தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுத்துவிட்டு வருவது இன்றும் இஸ்ரவேலர்களின் வழக்கமாக இருக்கிறது.

    தாவீதின் கல்லறைக்கு மேல் இருந்த அறைவீட்டில் இன்றும் அநேகர் யூத நியாயப்பிரமாண சட்ட புத்தகங்களை வாசிப்பது உண்டு.

    இப்படி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் அனைவரும் தாவீதின் கல்லறைக்கு மிகவும் அமைதியாக வந்து, தங்கள் அநுதாபங்களை தெரிவித்துச் செல்லும் அந்த நேரத்தில் தான், மேல் வீட்டில் கூடியிருந்த அனைவரும் ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளை பேசினார்கள்.

    இதைப் பார்த்த யூதர்கள், மேல் வீட்டில் இருந்தவர்களைப் பார்த்து இவர்களுக்கு குடித்து வெறிக்க வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்த அமைதியான இடத்திலா இப்படி குடித்து வெறித்து கத்துவது என்று கோபப்படுகிறார்கள்.

    கொஞ்ச நேரத்தில் மேல் வீட்டிலே இருப்பவர்கள் யார்? ஏன் இப்படி கத்துகிறார்கள் என்பதை கேட்டு அறிந்துகொள்ளுகிறார்கள். அவர்கள் கத்துவதை கவனித்துப்பார்த்தால் அவர்கள் கிரேக்க மொழியில் கத்தவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மொழிகளிலே கத்துகிறார்கள்.

    இதைப் பார்த்த யூதர்களுக்கு ஒரே அதிர்ச்சி. மேல் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், யூதர்கள் அல்லவா? கலிலேயாவைச் சார்த்தவர்கள் அல்லவா? படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லவா? அப்படியிருக்க நம்முடைய ஜென்ப பாஷைகளை இவர்கள் பேசுகிறார்களே என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

    இங்கே நாம் அறிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், அந்நிய பாஷை என்பது ஒரு வரம். மேல் வீட்டிலே கூடியிருந்தவர்கள் அந்நிய பாஷை பேசியபோது அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களுக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்பது புரிந்தது.

    அப்போஸ்தலர்கள் காலத்தில் மாத்திரம் அல்ல, இன்றும் அந்நிய பாஷை பேசும் வரம் உண்டு. நாமும் அந்நிய பாஷை பேச முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    இன்றும் விசுவாசிகள், ஊழியர்கள், சுவிசேஷகர்கள் அந்நிய பாஷை பேசுகிறார்கள். சில உண்மையில் பேசுகிறார்கள். பலர் பொய்யாயும் பேசுகிறார்கள். 1 கொரிந்தியர் 14:40-ல் பவுல் கொரிந்தியருக்கு எழுதுகிறார் சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்படக்கடவது.

    நாம் ஒருவேலை அந்நிய பாஷையில் ஜெபிக்கிறவர்களாக இருந்தால், நம்முடைய ஜெபமும், ஆராதனை முறைகளும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும் இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம்.

    ஒருசிலருடைய ஆராதனை முறைகளும், ஜெபங்களும் ஒழுங்கின்மையாக காணப்படுவதினால், புறஜாதியார் கிறிஸ்தவமே இப்படித்தான் என்று ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தையும் இழிவுபடுத்துகிறார்கள். நாம் ஆண்டவரைத் துதிப்பதில் தவறில்லை, ஆராதிப்பதில் தவறில்லை, அந்நிய பாஷை பேசுவதில் தவறில்லை ஆனால் அவைகள் ஒழுங்கும் கிரமமுமாய் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் கிறிஸ்தவ சமுதாயம் உள்ளது.

    நான் ஆவியில் நிரப்பி ஜெபிக்கிறேன், அந்நிய பாஷை பேசுகிறேன் என்பது சரி. ஆனால், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எனக்கு இருக்கிறது. நான் ஆவியில் நிரம்பியிருக்கிறேன், என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பிழை. பேதுரு பேசத்தொடங்கிய போது, ஜனங்கள் (120 பேர்) அனைவரும் அமைதலாய் அவருடைய வார்த்தைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

    சீஷர்கள் பேசியத்தைக் கேட்ட ஜனங்கள் குழப்பத்தில் இருந்தார்கள். யார் இவர்கள், இவர்களால் எப்படி நம்முடைய பாஷைகளை பேச முடிந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த சீஷர்கள் சந்தோஷப்படவில்லை, உடனே அவர்களின் நடுவிலே பேதுரு எழுந்து பேசத்துவங்கினார்.


    அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் தான் பேதுரு முதல் முதல் பிரசங்கிக்க ஆரம்பித்தார். படிப்பறிவு இல்லாத பேதுரு, இயேசு தங்களோடு இருக்கும்போது பொது மேடைகளில் தைரியமாக பேசாத பேதுரு, முதல் முதலில் தைரியமாக பேசினார்.

    பேதுருவின் முதல் பிரசங்கத்தைக் கேட்ட யூதர்கள் தங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.

    ஒரு சிறந்த பிரசங்க முறையில் என்னென்ன அம்சங்கள் காணப்படுமோ அத்தனை அம்சங்களும் பேதுருவின் முதல் பிரசங்கத்தில் இருந்தது.

    ஒருவர் கடவுளின் வார்த்தையை பிரசங்கிக்கிறார் என்றால், அந்த வார்த்தை கேட்போரின் உள்ளத்தில் கிரியை செய்ய வேண்டும். வார்த்தையை கேட்கிறவர்கள் இருதயத்தில் குத்தப்பட வேண்டும். ஏதோ கடமைக்காக ஆங்காங்கே வேத வார்த்தைகளை எடுத்துக் கொண்டு பேசக் கூடாது. பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்ட அனைவரும் தங்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள்.

    ஒரு சிறந்த பிரசங்கியானவன், கூடியிருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். பேதுரு பேசத்துவங்கும்போது கூடியிருந்த அனைவரும் அவருடைய வார்த்தையை கேட்கும்படியாக கூடியிருந்தவர்கள் அல்ல. பேதுருவைக் குறித்தும், மேல் வீட்டில் இருந்தவர்களைக் குறித்தும் அவர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயமும் இல்லை. அவர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள் என்றே நினைத்தார்கள்.

    நாம் ஒருவருடைய பிரசங்கத்தை கேட்கவேண்டும் என்று ஆசையாய் சென்று, அவர் என்ன சொல்லுவார் என்று ஆழமாய் கவனிப்பது என்பது வேறு. ஆனால், பேதுரு பேசத்தொடங்கியபோது, பேதுருவைக் குறித்த நல்ல அபிப்பிராயம் அங்கே கூடியிருந்தவர்களுக்கு இல்லை.  அப்படிப்பட்டவர்கள் பேதுரு பேசியதைக் கேட்டு இருதயத்தில் குத்தப்பட்டார்கள்.

    அங்கே கூடியிருந்த அனைவரும் பேதுருவின் வார்த்தையை கேட்கும்படியாக அங்கே கூடியில்லை, இரண்டு மாதங்களாக எல்லா பண்டிகைகளையும் முடித்துவிட்டு மிகவும் வருத்தத்தோடு தங்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்கள். தங்கள் அநுதாபங்களை தெரிவிப்பதற்காக தாவீதின் கல்லறைக்கு வந்தவர்கள். ஒருவன் பேசுவதை கேட்கவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாத அந்த ஜனங்கள், பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக மனந்திரும்பினார்கள்.


    ஒரு பிரசங்கம் என்றால் அதில் முன்னுரை இருக்க வேண்டும். உட்தலைப்புகள் இருக்க வேண்டும். உட்தலைப்புகளுக்கு ஏற்ற ஆதார வசனம் இருக்க வேண்டும். இவையனைத்தும் பேதுருவின் முதல் பிரசங்கத்தில் இருந்தது.

    பேதுரு மூன்று உட்தலைப்புகளைக் கொண்டு பேதுகிறார். மூன்று உட்தலைப்புகளுக்கும் மூன்று வேத வசனத்தை ஆதாரமாக அவர் எடுத்துக்காட்டுகிறார்.

    1. யோவேல் 2:28-32
    2. சங்கீதம் 16:8-11
    3. சங்கீதம் 110:1

முன்னுரை
    பேதுரு உரத்த சத்தமாய், நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்கள் அல்ல என்றே பேசத்துவங்குகிறார். பேதுரு தனது முன்னுரையின் மூலமாக ஜனங்களை சிந்திக்க வைக்கிறார்.

    பொழுது விடிந்து மூன்றாம் மணி வேலையாய் இருக்கிறதே என்று பேதுரு சொல்லுகிறார். யூதர்களின் கணக்குப்படி ஒரு நாளில் பகல் பொழுது காலை 6 மணிக்கு துவங்குகிறது. 3-ம் மணி வேலை என்பது, இந்திய கணக்கப்படி காலை 9 மணி.

    இப்பொழுது காலை 9 மணி. எவனாவது இந்த காலை நேரத்தில் மது அருந்துவானா என்று பேதுரு சொல்லுகிறார். பொதுவாக எல்லா கலாச்சாரங்களிலும் மது அருந்துபவர்கள் இரவு நித்திரைக்கு முன்பதாக அருந்துவது வழக்கம்.

    இங்கே பேதுரு இது காலை நேரமாய் இருக்கிறது, இவர்கள் குடித்து வெறித்தவர்கள் அல்ல என்று தன் முன்னுரையை துவங்குகிறார்.

    மேல்வீட்டில் சுமார் 120 பேர் கூடியிருந்தார்கள். 120 பேரும் குடித்து வெறித்திருக்கிறார்கள் என்றே ஜனங்கள் நினைத்தார்கள். அப்படியானால் பேதுரு, எழுந்து நின்று என்ன சொல்லியிருக்க வேண்டும், நாங்கள் குடித்து வெறித்தவர்கள் அல்ல என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.

    எந்த குடிகாரனும் நான் குடித்திருக்கிறேன் என்று உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டான். எவ்வளவு குடித்திருந்தாளும் நான் குடிக்கவில்லை என்று தான் சொல்லுவான். பேதுரு எழுந்து நின்று உரத்த சத்தமாய் சொல்லுகிறார், இவர்கள் குடித்து வெறித்தவர்கள் அல்ல. இவர்கள் என்று சொல்லி தன்னை அந்த குழுவிலிருந்து பிரித்துக்காட்டுகிறார். காரணம் அப்பொழுதுதான் ஜனங்கள் நம்முடைய வார்த்தையை கேட்க விரும்புவார்கள். இப்படியாக மிக நேர்த்தியாக தன்னுடைய உரையைத் துவங்கினார் பேதுரு.

    பேதுரு கடவுள் தனக்கு கொடுத்த ஞானத்தினால், தன்னுடைய முன்னுரையின் மூலமாக சூழநின்ற அனைவரையும் சிந்திக்க வைக்கிறார்.


முதல் தலைப்பு
    அங்கே கூடியிருந்த அனைவரும் யூதர்கள். யூதர்களுக்கு நியாயப்பிரமாண புத்தகம் மிக முக்கியமான புத்தகம். யூதர்கள் தீர்க்கதரிசனங்களையும், தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தையும் முக்கியமானதாக கருதினார்கள்.

    பேதுரு முதலாவதாக நம்முடைய தீர்க்கதரிசி யோவேல் சொன்ன வேத வாக்கியம் இன்றை தினம் நிறைவேறினது என்று பேசத்துவங்கினார். பேதுருவின் வார்த்தையைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் மிதந்தார்கள். (யோவேல் 2:28-32)

    பேதுரு யோவேல் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்து அதை விளக்கப்படுத்தினபோது, அதைக் கேட்ட யூதர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

    ஒரு சிறந்த பிரங்கி என்பவன், ஒரு வசனத்தை எடுத்து ஜனங்களுக்கு விளக்கப்படுத்தும்போது அந்த கருத்து வித்தியாசமானதாக, ஜனங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விளக்கமாக இருக்க வேண்டும். நம்முடைய பிரசங்கத்தை கேட்கின்ற ஜனங்கள் இந்த வசனத்திற்கு இப்படியும் ஒரு விளக்கம் உண்டோ என்று ஆச்சரியப்பட வேண்டும். பேதுருவின் பிரசங்கத்தில் அந்த சிறப்பும் காணப்பட்டது.

    ஜனங்கள் நம்முடைய பிரசங்கத்தை ஆழமாக கவனிக்க வேண்டுமானால், நாம் தேர்வு செய்யும் தலைப்புகளும், வசனங்களும் ஜனங்கள் யோசிக்காத விதத்தில் இருக்க வேண்டும். நாம் வசனத்தை எடுத்து வாசிக்க சொல்லும்போது, இந்த வசனத்திலிருந்து எப்படி இவரால் பேசமுடியும் என்ற யோசனை ஜனங்களுக்கு வரவேண்டும். ஜனங்கள் எதிர்பார்த்திராத, வித்தியாசமான ஒரு வசனத்தை அல்லது ஒரு தலைப்பைக் கொண்டு நாம் அவர்களோடு பேசும்போது மாத்திரமே நாம் ஜனங்களை நம் பக்கமாக திருப்ப முடியும்.

    யோவேல் 2:28-32 ல் உள்ள வசனத்தை பேதுரு சத்தமாக உரைக்கிறார். இதை அப்போஸ்தலர் 2:17-21-ல் பார்க்கலாம்.

    ஒரு பிரசங்கி ஒரு வசனத்தை எடுத்து ஜனங்களை வாசிக்க சொல்லும்போது ஒரு சிலர் சத்தமாக, ஏற்ற இரக்கத்துடன், நேர்த்தியாக வாசிப்பார்கள். ஒருசிலர் வாசிப்பதைப் பார்த்தால், அருகில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட அவர்கள் என்ன வாசிக்கிறார்கள் என்பது புரியாது.

    எனவே பிரசங்கி என்பவர் வசனத்தை சொல்வதோடு மாத்திரம் அல்ல அந்த வசனத்தை, தானே சத்தமாக வாசித்து ஜனங்களுக்கு விளக்கப்படுத்த வேண்டும்.

    யோவேல் தீர்க்கதரிசி சொன்னபடியே நடந்தது என்று பேதுரு சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால், யோவேல் சொன்ன அந்த தீர்க்கதரிசனத்தை பேதுரு அப்படியே வாசித்து காண்பிக்கிறார்.

    இந்த வசனத்தை வாசித்த பின்பு பேதுரு, யோவேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிரைவேறிற்று. அதை நீங்கள் கண்டீர்கள். ஆனால் உணரவில்லை என்று பிரசங்கிக்கிறார்.


இரண்டாம் தலைப்பு
    எந்த தவறும் செய்யாத இயேசுவை நீங்கள் பிடித்து கொலை செய்தீர்கள். அவரை தேவன் உயிரோடு எழுப்பினார் என்று சொல்லி பிரசங்கித்தார்.

    இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார் என்பதை விளங்கப்படுத்த சங்கீதம் 16:8-11 இந்த வசனத்தை பேதுரு விளங்கப்படுத்துகிறார். (அப்போஸ்தலர் 2:25-28)

    அப்போஸ்தலர் 2:29-ல் பேதுரு பிரசங்கிக்கும்போது தாவீதைக் குறித்தும், அவன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான் என்றும் பேசுகிறார். காரணம், கூடியிருந்தவர்கள் அனைவரும் யூதர்கள். தாவீதின் கல்லறைக்கு வந்து மரியாதை செலுத்திவிட்டு தங்கள் இடங்களுக்கு திரும்பிச்செல்ல வந்தவர்கள். அந்த கல்லறைக்கு மேலே நின்று கொண்டு தாவீதைப் பற்றி பேசுகிறார். ஏனென்றால், இதன் மூலமாக மக்களுடைய கவனத்தை இன்னும் நம்பக்கமாக திருப்பமுடியும் என்பதினால்.


மூன்றாவது தலைப்பு
    சங்கீதம் 110:1-ல் இருந்து பேசுகிறார். வேத வியாக்கியானம் என்பது வேத வசனம் வேத வசனத்தினாலே வியாக்கியானப்படுத்தப்பட வேண்டும்.

    வைரத்தை வைரத்தைக் கொண்டே புடமிட வேண்டும். இரும்பை கூர்மையாக்க இரும்பைத் தான் பயன்படுத்த வேண்டும். அதைப்போலவே வேத வசனத்தை வேத வசனம் கொண்டே வியாக்கியானம் செய்ய வேண்டும்.

    இதையும் பேதுரு தன் பிரசங்கத்தில் கொண்டு வருகின்றார். சங்கீதம் 16:8-11 வரை பிரசங்கித்து அதை வியாக்கியானப்படுத்த சங்கீதம் 110:1-யை பயன்படுத்துகிறார்.

    பேதுரு மிகச் சிறந்த வேத வியாக்கியளாலன் மற்றும் பிரசங்கிவியளாலன்.


    பேதுரு பேசியதைக் கேட்ட ஜனங்கள் அனைவரும் பேதுருவைப் பார்த்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். பேதுரு பிரசங்கத்தை முடித்த பின்பு, யார் யார் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். யார் யார் உங்களை ஒப்புக்கொடுக்கிறீர்கள் என்று பேதுரு கேட்கவில்லை. ஜனங்கள் அவர்களாக வந்து தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

    அநேக கள்ள உபதேசிகள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது என்பது தவறானது. இயேசுவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பிரசங்கிக்கிறார்கள். இயேசுவின் ஞானஸ்நானம் என்றாலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றாலும் இரண்டுமே ஒன்றுதான். அப்போஸ்தலர் நடபடிகளில் இயேசுவின் ஞானஸ்நானம் என்று வந்தால், அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையே குறிக்கிறது.

    அன்றைய தினம் ஏறக்குறைய மூவாயிரம் (3000) பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெந்தெகோஸ்தே என்றால் யூதர்களின் அறுவடை பண்டிகை. அந்த அறுவடைப் பண்டிகை அன்று இயேசுவானவர் தன்னுடைய அறுவடையை துவங்கினார். பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் அறுவடை செய்யப்பட்டார்கள் அதாவது சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.


    அப்போஸ்தலர் 2-ல் சபை உருவானது. சபையின் உறுப்பினார்கள் உபதேசத்திலும், ஜெபத்திலும், அப்பம் பிட்குதலிலும் (ஒருவித ஐக்கியம், திருவிருந்து அல்ல), அந்நியோநியத்திலும் உறுதியாய் தரித்திருந்தார்கள்.

    விசுவாசிகள் அனைவரும் அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள்.

    இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினம் சபைகளிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

    இதை வாசிக்கிற ஊழியர்கள் ஒருவேலை உங்கள் சபையில் விசுவாசிகள் பெருகவில்லை என்றால், இந்த ஆதி அப்போஸ்தலர்களிடம் காணப்பட்ட குணாதிசங்கள் உங்கள் சபையில் இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள். அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தை ஆழமாக தியானியுங்கள். ஒரு புதிய விசுவாசி சபைக்கு வருகிறான் என்றால், அவனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் உங்கள் சபை இருக்கின்றதா? என்று யோசித்துப்பாருங்கள். இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் சேர்க்கிறவர் ஆண்டவர். அப்படி சேர்க்கப்படுவதற்கு நம்முடைய சபை ஆயத்தமாக இருக்கிறதா? ஆதித் திருச்சபை இயங்கியதுபோல நம்முடைய திருச்சபை இயங்குகிறதா? என்று சிந்தித்து பார்ப்போம்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்….. !


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.