அருளுரை (Sermon)
இறை வேண்டல்
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; இங்கே கூடியிருக்கும் அனைவரின் எண்ணங்களும் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். அர்ப்பணும், நீசனுமான பயனற்ற பாத்திரம் நான், அடியாளை தற்பரன் எடுத்து பயன்படுத்தும், எங்களோடு நீர் பேசும், மீட்பர் பாதம் பணிந்து கெஞ்சுகிறோம், நல்ல கடவுளே. ஆமென்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலேயே மீண்டுமாய் உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்குத் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இந்த நாளிலும் ஒசேயா இறைவாக்கினர் நூல் 8-ம் பிரிவு, 1-7 வரை உள்ள திருமொழிகளைக் குறித்து அறிந்துகொள்வோம்.
இந்த உரையாடலானது கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் இடையேயான உரையாடல் ஆகும்.
இஸ்ராயேல் மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காகவே ஓசேயா இறைவாக்கினர் கடவுளால் அனுப்பப்பட்டார். ஓசேயா இறைவாக்கினர் சிலை வழிபாட்டினை கடுமையாக கண்டித்தவர். கடவுளை விட்டு சென்ற இஸ்ராயேல் மக்களுக்கு கடவுள் தண்டனை வழங்குவார், ஆயினும் இறுதியில் அன்பே நிலைத்திருக்கும் என்பது இந்நூலின் செய்தியாகும்.
முதலாம் திருமொழியில் கழுகு ஒன்று ஆண்டவருடைய வீட்டின் மேல் பறந்து வருகின்றது என்று பார்க்கிறோம்.
இப்பகுதியில் ஆண்டவருடைய வீடு என்பது இஸ்ராயேல் மக்களைக் குறிக்கிறது, கழுகு என்பது அசீரியர்களின் படையைக் குறிக்கிறது.
இஸ்ராயேல் மக்கள் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவர்களாக, ஆண்டவரை மறந்து, கடவுள் வெறுக்கும் தீமையான காரியங்களைச் செய்தபடியினால், கடவுள் அவர்களை அசீரியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
இஸ்ராயேல் மக்கள் எந்தெந்த காரியங்களிளெல்லாம் கடவுளை காயப்படுத்தினார்கள் என்று பார்ப்போம்.
1. முதலாவதாக: மீறினார்கள்
எதை மீறினார்கள் என்றால் கடவுளின் வார்த்தையை மீறினார்கள் (1)
ஒன்றாம் திருமொழியில் இஸ்ராயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையையும், திருச்சட்டத்தையும் மீறினார்கள் என்று பார்க்கிறோம்.
இஸ்ராயேல் மக்கள் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய வாழ்வியல் முறை எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு கடவுள் வகுத்துக் கொடுத்திருந்தார். அவைகள் அனைத்தும், அவர்களுடைய இருதயத்தில் இருந்தது, ஆனால், அவர்களுடைய செயல்களில் அவை வெளிப்படவில்லை. கடவுளின் வார்த்தைக்கு எதிராகவே அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
2. இரண்டாவதாக: மறந்தார்கள் (4)
யாரை மறந்தார்கள் என்றால் யாவே கடவுளையே மறந்தார்கள்:
நான்காம் திருமொழியில், இஸ்ராயேல் மக்கள் கடவுளை மறந்து தங்களுக்கென ஒரு அரசரை ஏற்ப்படுத்திக்கொண்டார்கள்.
எகிப்து தேசத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை அழைத்து வந்து, ஒவ்வொரு நாளும் சரியான பாதையில் வழிநடத்தி வந்த கடவுளையே மறந்தார்கள்.
நாமும் கூட நம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களிலும், வாழ்வின் முடிவுகளை எடுக்கும் நேரங்களிலும் கடவுளை மறந்துவிடுகிறோம். ஆண்டவரை முன்வைக்காத எந்த காரியமும் அது முட்டாள்தனமான காரியமே.
3. மூன்றாவதாக: மாறினார்கள் (4,5)
ஐந்தாம் திருமொழியில் இஸ்ராயேல் மக்கள் உண்மைக்கடவுளை மறந்து தங்களுக்கென கன்றுக்குட்டிகளை உருவாக்கினார்கள் என்று பார்க்கிறோம்.
இஸ்ராயேல் மக்களுக்கு கடவுள் கொடுத்த பத்து கற்பனைகளில் முதலாவது கற்பனையே, என்னை தவிர வேறு தெய்வங்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்பதே. அதை மறந்தவர்களாக தங்களுக்கென வெள்ளியினாலும் பொன்னினாலும் சிலைகளை செய்து வழிபட தொடங்கிய இவர்கள், யாவே கடவுளையே மாற்றி கன்றுக்குட்டியை தம் தெய்வமாக வழிபட்டார்கள்.
இப்படி, கடவுளையே மாற்றும் அளவிற்கு துணிகரம் அவர்களிடம் காணப்பட்டது.
Conclusion:
இப்படி இஸ்ராயேல் மக்கள் கடவுளுடைய வார்த்தையை மீறினவர்களாக, கடவுளையே மறந்தவர்களாக, கடவுளை காயப்படுத்திவிட்டு, பிறகு கடவுளிடமிருந்து நன்மையை எதிர்பார்க்கிறார்கள்.
7-ம் திருமொழியில், காற்றை விதைத்துவிட்டு, அதாவது பாவத்தை விதைத்து விட்டு, ஆசீயை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு கடும் புயலையே அனுப்புவேன், அதாவது தண்டனையையே அனுப்புவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
இதை உணர்த்தும் படியாகவே ஒன்றாம் திருமொழியில் எக்காலத்தை ஊது, என்று கடவுள் சொல்லுகிறார். இது இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிப்பின் சத்தமாகும்.
தீமையை விதைத்துவிட்டு, நன்மையை கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். தீமையை விதைப்பவர்கள் தீமையை தான் அறுக்க முடியும் என்று கடவுள் சொல்லுகிறார்.
யோபு 4:8
யோபு நான்காம் பிரிவு எட்டாம் திரு மொழியில், தீவினையை உழுது, தீங்கினை விதைத்தவர் அதையே அறுப்பர் என்று வாசிக்கிறோம்.
இஸ்ராயேல் மக்களைப்போல, நாமும் பல நேரங்களில் கடவுளை மறந்து, கடவுளுடைய வார்த்தையை மீறி, உலகத்திற்கு செவிசாய்கின்றோம். கடவுள் விரும்பாத தீமையான காரியங்களை நாம் செய்துவிட்டு, கடவுள் எனக்கு நன்மை செய்வார், ஆசீர் வழங்குவார் என்று எதிர்பார்ப்பது கூடாத காரியம் ஆகும்.
கடவுளுடைய பிள்ளைகளாக அவருடைய திருப்பணியை செய்யும்படி அழைக்கப்பட்ட நாம், கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, தீமைகளை விட்டு விலகி கடவுளை உண்மையாய் வழிபடும்போது, கடவுள் நமக்கு ஆசீர் வழங்குகிறவராய் இருப்பார்.
கடவுளின் விருப்பத்தை அறிந்து, அவருடைய சத்தம் கேட்டு, சித்தம் செய்ய நம்மை தத்தம் செய்வோம்.
இத்திரு வார்த்தைகளின் வழியே, கடவுள் நம்மை அவருடைய திருப்பணியில் எடுத்து பயன்படுத்துவாராக. ஆமென்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.