அருளுரை
இறை வேண்டல்
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; இங்கே கூடியிருக்கும் அனைவரின் எண்ணங்களும் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். அர்ப்பணும், நீசனுமான பயனற்ற பாத்திரன் நான், அடியாளை தற்பரன் எடுத்து பயன்படுத்தும், எங்களோடு நீர் பேசும், மீட்பர் பாதம் பணிந்து கெஞ்சுகிறோம், நல்ல கடவுளே. ஆமென்.
மீண்டுமாய் உங்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நாளின் ஊழ்கத்திற்கென்று எடுத்துக்கொண்ட தலைப்பு
”உன் கடவுளைச் சந்திக்க தயாராயிரு!”
"Prepare to meet your God!"
நாம் வாசிக்கக்கேட்ட திருமொழிகளிலே ஆமோஸ் இறைவாக்கினர் இஸ்ரவேல் மக்களுக்கு கடவுளின் எச்சரிப்பை அறிவிக்கிறார். அந்நாட்களில் இஸ்ரவேல் மக்கள் நான், என் குடும்பம் என்ற சுயநலத்திலும் சுகவாழ்விலும் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட இஸ்ரவேல் மக்களை கடவுள் தம் நீதியான தண்டனைத் தீர்ப்பின் மூலம் அவர்களை திரும்ப அழைக்க முயற்சிக்கிறார். ஆனால், இஸ்ரவேலரோ தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, கடவுளை சந்திக்க தயாராயிரு என இறைவாக்கினர் எச்சரிப்பத்தை இங்கு நாம் பார்க்க முடிகிறது. இதை வாசிக்கக்கேட்ட திருமறைப் பகுதியிலிருந்து மூன்று தலைப்பின் அடிப்படையில் நாம் சிந்திப்போம்.
1. முதலாவதாக கடவுளின் தண்டனை
(First One, God's Punishment)
ஆமோஸ் பிரிவு 4, 9 முதல் 11 வரையுள்ள திருமொழிகளிலே கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தண்டனைத் தீர்ப்பைக் குறித்து பார்க்கிறோம். வெப்பக்காற்று, நோய்கள், பஞ்சம், வெட்டுக்கிளிகள், மழையின்மை போன்ற இயற்கையின் வழியான தண்டனைகளையும், யுத்தம், வாலிபர்களின் மரணம், பாளையங்களில் பின நாற்றம் போன்ற சமூக அரசியல் வழியான தண்டனைகளையும் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த போதும் அவர்கள் கடவுளின் பக்கம் திரும்பவில்லை. இன்னும் ஒருபடி அதிகமாய், சோதோம் கொமோராவின் மக்களை கடவுள் அழித்ததுபோல. இஸ்ரவேல் மக்களில் சிலரை அழித்த போதும் இஸ்ரவேலர் கடவுளின் பக்கம் திரும்பவில்லை என்று பார்க்கிறோம்.
2. இரண்டாவதாக கடவுளுடைய அழைப்பு
(Second One God's Calls)
இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்களை கடவுள் பலமுறை பொறுத்தருளினார் என்று பார்க்கிறோம். வாசிக்கக் கேட்ட ஆமோஸ் 4-ஆம் பிரிவில் இஸ்ரவேல் மக்கள் என் பக்கம் திரும்பவில்லை என்ற பதம் சுமார் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் மனம் திரும்பவில்லை என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஆகவே, இறைவாக்கினர் “கடவுளை சந்திக்க தயாராய் இருங்கள்” என்று எச்சரிக்கிறதையும் இங்கே பார்க்க முடிகிறது.
3. மூன்றாவதாக கடவுளுடைய மகத்துவம்
(Third One, God's the greatness of God)
ஆமோஸ் இறைவாக்கினர் இறுதியாக கடவுளுடைய மகத்துவத்தை விளக்குகிறார்.
- கடவுள் மலைகளை உருவாக்கியவர்,
- கடவுள் காற்றுகளை உருவாக்கியவர்,
- கடவுள் தனது சிந்தனையை மனிதனுக்கு வெளிப்படுத்துகிறவர்,
- கடவுள் காலைப் பொழுதை காரிருளாக மாற்றுகிறவர்,
- கடவுள் பூமியின் உயர்ந்த இடங்களில் நடப்பவர் என கடவுளின் மகத்துவங்களை ஆமோஸ் இறைவாக்கினர் மிக ஆழமாக விவரிக்கிறார்.
இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த கடவுளைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாய் இருங்கள் என்றே ஆமோஸ் இறைவாக்கினர் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவாக்குரைத்தார். ஆமோஸ் இறைவாக்கினரின் இறைவாக்குகளை இஸ்ரவேல் மக்கள் புறக்கணித்தனர். ஆகவே இஸ்ரவேல் மக்கள் பேரழிவைச் சந்தித்தனர். இந்த நவீன காலத்தில் பாவத்தை தண்ணீரைப் போல் அருந்திக்கொண்டிருக்கும் நம்மையும் கடவுள் தமது திருமொழிகளின் வழியாக எச்சரிக்கிறார், அழைப்பு விடுக்கிறார். கடவுளின் அழைப்பின் சத்தத்தைக் கேட்ட நாம், கடவுளின் சித்தம் செய்ய நம்மை அர்ப்பணிக்கின்றோமா? இல்லை, இஸ்ரவேல் மக்களைப்போல அழைப்பின் சத்தத்தை புறக்கணிக்கின்றோமா? சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அன்று இஸ்ரவேல் மக்களை எச்சரித்த கடவுளின் வார்த்தை “உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு” என்பதே, அதே வார்த்தை இன்று இந்த வழிபாட்டில் கலந்துகொண்டிருக்கின்ற நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தொனிக்கட்டும்.
நாம் நம்முடைய சிந்தனைகளினாலும், சொல்லாலும், செயலாலும், கடவுளிடமாய் திரும்பி, அவரைச் சந்திக்க ஆயத்தப்படுவோம். பிறரையும் ஆயத்தப்படுத்துவோம். கடவுள் இந்த புதிய நாளில் அவருடைய ஆற்றலாலும், வல்லமையாலும் நம் ஒவ்வொருவரையும் எடுத்து பயன்படுத்துவாராக. ஆமென்.
இறைவேண்டல்
ஒருவிசையாய் தலைகளைத் தாழ்த்தி, கண்களை மூடி, ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம்...
மனுஷனின் நினைவுகளை வெளிப்படுத்துகின்ற கடவுளே இஸ்ரவேல் மக்களைப்போல நாங்கள் இல்லாமல், உம்முடைய அழைப்பிற்கு ஏற்ற பாத்திரமாய் வாழ எங்களுக்கு உதவி புரியும். ஆமென்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.