Type Here to Get Search Results !

Abraham & Isaac | ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுதல் | Abraham History Part 4 | Tamil Bible Study | Jesus Sam

=================
ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி (பகுதி-4)
=================
    ஆண்டவரும், மீட்பரும், அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  ஆபிரகாம் பற்றிய ஓர் ஆழமான ஆராய்ச்சி தொகுப்பு.  பாகம் நான்கு (4).  முதல் மூன்று பாகத்தை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-கை பயன்படுத்தி வாசிக்கவும்.


ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுதல்
    ஆபிரகாம் ஈசாக்கை பலிசெலுத்த அழைத்துச் சென்றார் என்ற நிகழ்வு, கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. இந்நிகழ்வு எனக்கு தெரியவில்லை என்றால், நான் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்று பொருள். அந்த அளவிற்கு கிறிஸ்தவர்களுக்கு நன்கு பரிச்யமான ஒரு நிகழ்வு தான் இது.
    ஒரு நாள் ஆண்டவர் ஆபிரகாமை அழைத்து, நீ உன் மகனை எனக்காக பலியிடு சென்று கட்டளையிட்டார். ஆபிரகாம் ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவராக, தன் மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மலைக்கு ஏறுகிறார். மலையிலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதின்மேல் ஈசாக்கை கிடத்தினார். ஆபிரகாம் ஈசாக்கை பலிகொடுக்க கத்தியை நீட்டிய அந்த நேரத்தில், ஆண்டவர் இடைபட்டு, ஆபிரகாமே நிறுத்து, உன்னுடைய இச்செயல்கள் மூலமாக நீ எனக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிகிறாய் என்று நான் அறிந்துகொண்டேன் என்று சொல்லுகிறார். பின்பு கொம்புகள் மாட்டப்பட்டு கத்திக்கொண்டிருக்கிற ஒரு ஆட்டை ஆண்டவர் ஆபிரகாமிற்கு காண்பிக்கிறார். ஆபிரகாம் ஈசாக்கிற்கு பதிலாக அந்த ஆட்டை பலிசெலுத்துகிறார். பின்பு ஆபிரகாமும், ஈசாக்கும் சந்தோஷமாக தங்கள் இடத்திற்கு திரும்பி வருகிறார்கள். இதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த கதை.

    ஆதியாகமம் 22:1-ல் இந்த காரியங்கள் நடந்த பின்பு என்று வாசிக்கிறோம். அப்படியானால், முன்பு ஓர் காரியம் நடந்திருக்கின்றது. ஆபிரகாம் அபிமெலேக்கு என்கின்ற ஒரு மனிதனோடு ஒரு உடன்படிக்கை பண்ணுகிறார். ஆபிரகாம் அங்கேயே தங்கி வாழவும் துவங்குகிறார். அந்த இடத்தின் பெயர் பெயர்செயபா.
    பெயர்செபாவிலிருந்து வடக்கு நோக்கி மேலே சென்றால், எபிரோன் காணப்படும். எபிரொனிலிருந்து இன்னும் மேலே சென்றால் எருசலேம் காணப்படும்.
    இந்த காரியங்கள் நடந்த பின்பு என்றால், ஆபிரகாம் பெயர்செபாவிலே தங்கி, ஒரு நல்ல தோப்பை உண்டுபண்ணி, அந்த பெலிஸ்தியர்களோடு வாழ்ந்துகொண்டிருந்த போது ஆண்டவர் ஆபிரகாமை சோதித்தார்.
    பெலிஸ்தியரின் ஏடுகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால், ஆபிரகாம் இந்த பெயர்செபாவிலே தங்கியிருந்த நாட்கள் பன்னிரண்டு ஆண்டுகள். அப்படியானால், மகன் ஈசாக்கின் வயது பன்னிரண்டு. ஈசாக்கின் வயது பன்னிரண்டாக இருக்கும்போது கர்த்தர் ஆபிரகாமை சோதித்தார்.

    ஆபிரகாமும் சாராளும் திருமணம் செய்து, பல ஆண்டுகள் குடும்பமாக வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆண்டவர் வாக்குக்கொடுத்தது உண்மைதான், இருந்தாலும் பல ஆண்டுகள் காத்திருந்தும் ஆபிரகாமிற்கு குழந்தை கிடைக்கவில்லை. ஆபிரகாமின் மனைவி சாராள் என் மூலமாக ஆபிரகாமிற்கு குழந்தை கிடைக்கப்போவதில்லை, நான் வயது சென்ற கிழவியாகிவிட்டேன், ஆண்டவர் வாக்குப்பண்ணின குழந்தை வேறு பெண்ணின் மூலமாகத்தான் ஆபிரகாமிற்கு கிடைக்கும் என்று நினைத்து, எகிப்திய அடிமைப்பெண் ஆகாரை ஆபிரகாமிற்கு மனைவியாக கொடுத்தாள். ஆபிரகாம் ஆகாரோடு சேர்ந்தான், அவள் அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள். அவன் பெயர் இஸ்மவேல்.
    அதன் பின்பு அநேக ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டவர் வாக்குக்கொடுத்தபடியே ஆபிரகாமிற்கும் சாராளுக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவன் பெயர் ஈசாக்கு.

    ஒரு காதல் ஜோடி இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோம். அவர்கள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காதலன் காதலியைப் பார்த்து சொல்லுவான், நீ தான் என் உலகம், என் உலகத்தில் நீ மாத்திரமே பேரழகி, உன்னைப்போன்ற அழகியை இவ்வுலகில் நான் கண்டிதில்லை என்று காதலன் தன் காதலியை வர்னித்து பாடுவான். அதைப்போலவே காதலியும் காதலனை வர்னித்து பாடுவாள். காதலனை பார்க்காமல், பேசாமல் காதலியால் இருக்க முடியாது, காதலியை பார்க்காமல், பேசாமல் காதலனால் இருக்க முடியாது. எப்படியோ பெற்றோரை சம்மதிக்க வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு அவர்களின் அன்பு இன்னும் அதிகமாய் இருக்கும். இன்னும் அதிகமாக இருவரும் தங்களை கொஞ்சிக்கொள்ளுவார்கள்.
    ஆனால், ஒரு ஆண்டு கழித்து, ஒரு குழந்தை பிறந்துவிட்டால், கணவன் மனைவியின் மீது அன்பு செலுத்துவதை மறந்துவிட்டு, அத்துனை அன்பையும் அக்குழந்தைக்கே செலுத்துவான், அதைப்போலவே மனைவியும் தன் கணவனை மறந்துவிட்டு, தன் முழு அன்பையும் அக்குழந்தையிடமே காட்டுவாள்.
    திருமணமாகி ஒரு ஆண்டில் குழந்தை பிறந்தாலே இவ்வளவு அன்பு காட்டுகின்ற பெற்றோர், சில ஆண்டுகள் குழந்தையில்லாமல், அநேக ஊழியர்களையும் மருத்துவர்களையும் சந்தித்து, அநேக முறை உபவாசித்து ஜெபித்து, ஒரு ஒன்பது பத்து ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு குழந்தை பிறக்குமானால், கணவன் மனைவியை மறந்தேபோய்விடுவான், இரவும் பகலும் அந்த குழந்தையையே கொஞ்சிக்கொண்டிருப்பான். அதைப்போலவே மனைவியும் கணவனுக்கு செய்துகொடுக்க வேண்டிய கடமைகளையும் மறந்து அக்குழந்தையையே கொஞ்சிக்கொண்டிருப்பாள்.

    ஈசாக்கு பிறந்த போது, ஆபிரகாமின் வயது நூறு. சாராளின் வயது தொண்ணூறு. அப்படியானால், ஈசாக்கின் பிறப்பு மூலமாக இவர்களின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஆபிரகாம் சாராள் இடத்திற்கு சென்று அவர்களின் மனநிலையை நாம் ஆராய அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் எப்படி சந்தோஷப்பட்டிருப்பார்கள்.
    ஆபிரகாம் பெரிய பணக்காரன். பாபிலோனில் இருந்து புறப்படும்போதே ஆபிரகாம் பணக்காரன். எகிப்தின் ராஜா அநேக வெகுமதிகளை ஆபிரகாமிற்கு கொடுத்தான். இங்கே பெயர்செபாவிலே ஒரு தோப்பையே உண்டுபண்ணினான் என்று வாசிக்கிறோம். அப்படியானால் நூற்றுக்கணக்கான வேலையாட்கள் ஆபிரகாமிற்கு இருந்திருப்பார்கள். அவர்களின் தேவைகளை சந்திப்பதிலும், அவர்களை கொண்டு ஆடு, மாடுகளை பராமரிப்பதிலும், அவர்களைக் கொண்டு தோப்புகளை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்ட ஆபிரகாம், ஈசாக்கு பிறந்த பின்பு தன் வேலைக்காரர்கள் வேலைகளை சரியாக செய்கிறார்களா என்று பார்க்க கூட சென்றிருக்க மாட்டார். அப்படியாக அந்த பிள்ளையை கொஞ்சியிருப்பார்.
    ஈசாக்கு வளர்ந்து நடக்க ஆரம்பித்திருப்பான். அப்பொழுது ஆபிரகாம் தான் கற்றறிந்த புதிய எபிரெய மொழியை ஆசை ஆசையாக அவனுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். நூறு வயது ஆபிரகாம் அவனோடு கூட தினமும் விளையாடியிருப்பார். எங்கு சென்றாலும் ஈசாக்கை தூக்கிக்கொண்டு சென்றிருப்பார்.
    ஈசாக்கு பெரியவனான போது ஆபிரகாம் ஈசாக்கிற்கு யுத்த பயிற்சி கற்றுக்கொடுத்திருப்பார். ஆபிரகாம் ஒரு யுத்த வீரன். ஒரு முறை தன் அண்ணன் மகன் லோத்துவை சில ராஜாக்கள் சிறைபிடித்து விட்டார்கள். அப்பொழுது ஆபிரகாம் வேலைக்காரர் 300 பேரோடு சென்று அந்த ராஜாக்களை தோற்கடித்து லோத்தைக் காப்பாற்றிக்கொண்டு வந்த வீரன்.
    இப்படியாக ஈசாக்கை வைத்து ஆபிரகாமும் சாராளும் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார்கள். ஆபிரகாமும், சாராளும் எது செய்தாலும் அது ஈசாக்குக்கானதாகவே இருந்திருக்கும்.

    இப்படியாக ஆபிரகாம் 12 ஆண்டுகள் ஈசாக்கை நேசித்து, அவனுக்காகவே வாழ்ந்து வந்தார். ஈசாக்கின் பன்னிரண்டாவது வயதில் ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தார். ஆண்டவர் ஆபிரகாமே என்று அழைத்த மாத்திரத்தில், ஆபிரகாம் மிகவும் சந்தோஷத்தோடு, இதோ இருக்கிறேன் ஆண்டவரே. என் வாழ்வை மலரச் செய்தவரே, என் வாழ்வை ஒளிரச்செய்தவரே. இன்பம் தந்தவரே, சொல்லும் ஐயா உம்முடைய வார்த்தைக்காக காத்திருக்கிறேன் என்று ஆசையாய் சொல்லியிருப்பார்.
    ஆண்டவர் பிரதியுத்திரமாக: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை எனக்காக தகனபலியாக பலியிடு என்று சொன்னார்.
    ஒரு வேலை நாமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்போம், அப்பாலேபோ சாத்தானே, கடவுளைப்போல ஒளியன் தூதன் வேஷத்தை தரித்துக்கொண்டு என்னிடம் வந்து, என் மகனை பலிகேட்கிறாயா, இயேசுவின் நாமத்தினாலே ஓடி என்னை விட்டு என்று சொல்லியிருப்போம்.
    ஆண்டவர் மறுபடியும் வந்து சொல்லியிருப்பார்: மகனே நான் தான் பேசுகிறேன். உன் மகனை எனக்காக பலியிடு என்று சொல்லியிருப்பார். இல்லை ஆண்டவரே இல்லை, என் உள்ளுணர்வு பேசுகிறது என்று நினைக்கிறேன். பொறும் நாதா! பொறும் மீண்டும் ஒரு முறை சொல்லும், என் மகனை அழைத்துச் சென்று அவனோடு சேர்ந்து சர்வாங்க தகனபலியிட வேண்டுமா? ஆண்டவரே என்று கேட்டிருப்போம்.
    அதற்கு ஆண்டவர்: இல்லை மகனே, உன் மகனைத் தான் எனக்காக பலியிட வேண்டும் என்று சொல்லியிருப்பார். அதற்கு நாம் மறுமொழியாக: ஆண்டவரே என் மகனுக்கு பதிலாக என்னையாகிலும் எடுத்துக்கொள்ளும், என் மகனை விட்டுவிடும் என்று சொல்லியிருப்போம்.
    ஆண்டவர் மீண்டும் மீண்டும் வந்து: உன் மகனை எனக்காக பலியிடு என்று சொல்வாரானால், என் மகனை பலிகேட்கின்ற கடவுள் எனக்கு தேவையில்லை என்று கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உலகத்தின் பின்னால் சென்றிருப்போம்.

    ஆபிரகாம் ஆண்டவரின் வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படிந்தார். ஆண்டவர் ஆபிகாமிடம் மோரியா தேசத்திற்கு சென்று ஈசாக்கை பலியிட சொன்னார். 2 நாளாகமம் 3:1-ல் வாசிக்கிறோம், எருசலேமிலே சாலமோன் தேவாலயம் கட்டின அந்த இடத்தில் தான் ஆண்டவர் ஆபிரகாமை தன் மகனாகிய ஈசாக்கை பலியிட வேண்டும் என்று சொன்னார்.
    எருசலேம் என்ற பட்டணத்தில் தான் மோரியா என்ற மலை இருக்கிறது. பெயர்செபா கீழ் புறத்தில் உள்ளது. பெயர்செபாவிலிருந்து வடக்கு நோக்கி மேலே சென்றால் மோரியா வரும். அதாவது எருசலேம் வரும். இந்த பெயர்செபாவிற்கும் மோரியா மலைக்கும் இடையே எபிரோன் என்னும் இடம் இருக்கிறது.
    ஆண்டவர் தனக்கு கட்டளையிட்ட மறுநாளே ஆபிரகாம் தன் மகனை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்கு செல்ல புறப்பட்டார். மோரியா தேசத்திலே ஆபிரகாம் பலிசெலுத்த பலிபீடம் கட்டிய அந்த இடம் இந்த காலத்தில் ஒலிவமலை என்று அழைக்கப்படும் இடம். ஆபிரகாமின் காலத்தில் அந்த இடத்திற்கு ஒலிவமலை என்ற இருக்கவில்லை. எருசலேம் என்ற பெயரும் இருக்கவில்லை. இவைகள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பெயர்கள். ஆபிரகாமின் காலத்தில் அந்த இடத்திற்க மோரியா என்று தான் பெயர் இந்தது.
    இந்த மோரியா என்ற இடத்தில் ஜனங்கள் வாழவில்லை என்று நாம் நினைப்பது தவறு. அங்கே ஜனங்கள் வாழ்ந்து வந்தார்கள்.

    ஆபிரகாம் சில ராஜாக்களை தோற்கடித்து லோத்தை மீட்டுக்கொண்டு வந்தபோது சாலேமின் ராஜா ஆபிரகாமிற்கு எதிர்கொண்டு போய் அப்பமும் திராட்சைரசமும் கொடுக்கிறார். சாலேமின் ராஜாவுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலேயும் தசமபாகம் கொடுத்தார்.
    இந்த சாலேம் என்ற ஊர்தான், இந்த மோரியா மலை இருக்கின்ற அந்த இடம். அப்படியானால், மோரியா என்ற இடத்தை ஆட்சி செய்தது மெல்கிசெதேக்கு. மெல்கிசேதேக்கு யார்? சாலேமின் ராஜா மற்றும் கடவுளின் பிரதான ஆசாரியர். இந்த மோரியா மலையில் தான் மெல்கிசெதேக்கு ஆண்டவருக்கு பலிகொடுத்து வந்தார், ஏற்கனவே ஆண்டவருக்கு ஆராதனை செய்யப்பட்டு வந்த இடம் தான் இந்த மோரியா.
    பிற்காலத்தில் தாவீது எபூசியர்களுடைய கையிலிருந்து இந்த பிரதேசத்தைக் கைப்பற்றின பிறகு, மெல்கிசேதேக்கின் காலத்தில் இருந்த அந்த சாலேம் மறுபடியும் வருவதாக என்று அர்த்தம் கொள்ளும் எருசலேம் என்று தாவீது பெயர் வைத்தார். சாலேம் என்றால் தேவனோடு கொண்டுள்ள உறவின் சமாதானம் என்று பொருள்.
    எருசலேம் என்ற இடம் மெல்கிசேதேக்கு வாழ்ந்து, ஆண்டவருக்கு அங்கு பலிசெலுத்தி வந்த இடம். அங்கு தான் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றார்.

    ஆபிரகாமைப்போல ஒரு நல்லவன் இந்த உலகத்தில் இல்லை. ஆண்டவர் சொன்ன மாத்திரத்தில் அப்படியே ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்.

    ஆபிரகாம் பலியிட சென்ற போது பழைய ஏற்பாடு இல்லை. பழைய ஏற்பாடு துவங்கினதே யாத்திராகமம் 20-ம் அதிகாரத்தில் தான். பலிசெலுத்தும் முறைகள், யார் பலிசெலுத்த வேண்டும், எப்படி பலிசெலுத்த வேண்டும் என்ற முறைகள் அனைத்தும் யாத்திராகமம் 20-ம் அதிகாரத்திற்கு பின்பே இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆண்டவர் கற்றுக்கொடுக்கின்றார்.
    ஆபிரகாம் இஸ்ரவேலரின் முறைப்படி ஈசாக்கை பலிசெலுத்த ஆயத்தப்படவில்லை, மெல்கிசெதேக்கின் முறைப்படி ஈசாக்கை பலிசெலுத்த ஆயத்தப்பட்டார். மெல்கிசேதேக்கின் பலிசெலுத்தும் முறை வித்தியாசமானது.

மெல்கிசேதேக்கின் பலி:
    அந்த ஆட்டின் மேல் அந்த ஆட்டை எரிக்கப்போகின்ற விறகுக் கட்டைகளை அடுக்கி, அந்த ஆட்டை சுமக்கப்பண்ணி, மோரியா மலைக்குப் போய், மலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதிலே விறகுக் கட்டைகளை அடுக்கி, ஆட்டை அதில் வைத்து வெட்டி, பின்பு எறிக்க வேண்டும். பின்பு அந்த பலிபீடத்தை உடைத்துப்போட வேண்டும். இன்னும் ஒரு சர்வாங்க தகனபலிக்கு இன்னும் ஒரு பலிபீடம் கட்டப்பட வேண்டும். இப்படித்தான் மெல்கிசேதேக்கு பலிசெலுத்தி வந்தான்.
    யாத்திராகமம், லேவியராகமம் புத்தகத்தை வாசித்து அதில் சர்வாங்க தகனபலிகள் எப்படி செலுத்தப்பட்டதோ அதைப்போல ஆபிரகாம் செலுத்தினார் என்று நாம் நினைக்கக் கூடாது. ஆபிரகாம் இஸ்ரவேலரின் முறைப்படி பலிசெலுத்தவில்லை. மெல்கிசேதேக்கின் முறைப்படி பலிசெலுத்தினார்.
    ஆபிரகாம் ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்திருந்தாலும், தன் மகனை அழைத்து மோரியா மலைக்கு சென்று பலிபீடம் கட்டி தன் மகனை அதில் கிடத்தும் வரை மனதிற்குள்ளாக வேதனைப்பட்டு, வேதனை தாங்க முடியாமல், மனதிற்குள்ளேயே அழுது, வெளியே தெரிந்தால் மகன் கண்டுபிடித்துவிடுவான் என்று எல்லா வேதனைகளையும் பாடுகளையும் தன் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு இருந்திருப்பார். தன் வாழ்நாளில் தாங்கமுடியாத வேதனையை அந்த மூன்று நாட்களும் அவர் அனுபவித்திருப்பார். சரியாக தூங்கியிருக்க முடியாது, ஒரு பைத்தியக்காரனைப்போல மாறியிருப்பான் ஆபிரகாம்.
    ஆண்டவர் தன்னோடு பேசினபின்பு மறுநாள் காலையில் விறகுளை அடுக்கிக்கொண்டு, தன் மகனையும் அழைத்துக்கொண்டு, இரண்டு வேலைக்காரர்களை மாத்திரம் தன்னோடு அழைத்துக்கொண்டு ஒரு பைத்தியக்காரனைப்போர யாரிடமும் உண்மையை சொல்ல முடியாமல், மனதிற்குள்ளாகவே வைத்துக்கொண்டு, அழுதுகொண்டு சென்றிருப்பார்.
    சாராளுக்கு நன்றாகவே தெரியும், என் கணவன் ஆண்டவரோடு பேசுகிறவன். ஆண்டவர் ஏதேனும் வெளிப்பாட்டை கொடுத்திருப்பார், அதற்காகத்தான் மகனையும், வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு எங்கோ புறப்படுகிறார் என்று யோசித்திருப்பார். ஆனால் ஒரு துளியளவும் கூட ஈசாக்கை பலியிடத்தான் ஆபிரகாம் சென்றிருக்கிறார் என்பதை சாராள் அறிந்திருக்க மாட்டாள்.
    பெயர்செபாவிலிருந்து மோரியாவிற்கு மூன்று நாள் பிரயாண தூரம். செல்லும் வழியில் ஈசாக்கு தன் தகப்பன் கையைத் தான் பிடித்துக்கொண்டு நடந்திருப்பான். ஆபிரகாம் மனதில் தாங்கமுடியாத வேதனை வந்திருக்கும். ஐயோ நான் ஆசை ஆசையாய் வளர்த்த மகனை நான் கொலை செய்யப்போகிறேனே என்று யோசித்திருப்பான்.
    ஆண்டவர் பலியிடு என்று சொன்ன பின்பு மீண்டும் ஆபிரகாமிடம் வந்து பேசவில்லை. மகனே கலங்காதே, ஏன் வேதனைப்படுகிறாய், தைரியமாய் உன் மகனை பலியிடு என்று சொல்லவில்லை. ஆண்டவர் ஆபிரகாமோடு கூடு தான் இருந்தார். ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆண்டவர் அதன்பின்பு பேசியது ஆபிரகாம் ஈசாக்கின் மீது கத்தியை நீட்டிய போதுதான்.
நம் ஆண்டவருக்கென்று சில பலக்கங்கள் உண்டு. சரியா நேரத்தில் மாத்திரம் தான் பேசுவார்.
    ஆபிரகாம் யோசித்திருப்பார், இப்போதாவது ஆண்டவர் என்னிடம் பேசி, மகனை பலியிட வேண்டாம் என்று சொன்னால் நன்றாக இருக்குமே, என் மகனை நானே எப்படி கொலை செய்ய முடியும். இப்படியும் ஒரு கடவுள் சொல்லுவாரா? இப்படியாக பல நினைவுகள், சிந்தனைகள் ஆபிரகாமின் மனதிற்குள்ளாக ஓடியிருக்கும்.
    ஆபிரகாமிற்கு வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராத தனிமை உணர்வு வந்திருக்கும். தன்னை ஒரு வில்லனாக பாவித்திருப்பார். ஆபிரகாம் மறுநாள் அதிகாலையில் எழுந்து புறப்பட்டான் என்று வாசிக்கிறோம். மூன்று நாள் பிரயாணத்தில் மோரியா மலையை அடைந்தார்கள். மூன்று நாள் என்பது பகல் முழுவதும் நடந்து செல்லுவார்கள். சூரியன் மறைந்த உடன் அங்கே ஒரு கூடாரம்போட்டு தூக்குவார்கள். பின்பு மறுநாள் காலையில் எழுந்து புறப்படுவார்கள். மூன்று நாள் பிரயாணத்தின் போதும் இரவு நேரத்தில் ஆபிரகாம் தூங்கியிருக்க மாட்டார்கள். வேலைக்காரர்கள் நன்றாக தூங்கியிருப்பார்கள். ஈசாக்கு நன்றாக தூங்கியிருப்பான். ஈசாக்கு இன்றுதான் முதல் முறையாக தன் தகப்பனோடு கூட தூர பிரயாணம் வருகின்றான். எனவே, அவனுக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    ஆதியாகமம் 22:5-ல் ஆபிரகாம் வேலையாட்களைப் பார்த்து நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம் மட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்று சொல்லுகிறார். இது ஆபிரகாம் விசுவாசத்தினால் சொல்லவில்லை. ஈசாக்கை பலியிடும் நேரத்தில் ஆண்டவர் ஈசாக்கிற்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் என்ற விசுவாசம் ஆபிரகாமிற்கு மட்டுமல்ல நமக்கு இருந்திருந்தாலும் நாமும் நம்முடைய பிள்ளைகளை பலிசெலுத்த தயங்காமல் கொண்டு சென்றிருப்போம். திரும்பி வருவோம் என்று ஆபிரகாம் சொன்னது விசுவாச வார்த்தை அல்ல, திரும்பி வருவேன் என்று சொல்லியிருந்தால் வேலைக்காரர்கள் அப்படியானால், நீங்கள் மட்டும் தான் வருவீர்களா? ஈசாக்கை என்ன செய்யப்போகிறீர்கள். ஆட்டுக்குட்டியையும் நாம் கொண்டுவரவில்லையே, ஒருவேலை ஈசாக்கைத் தான் பலியிடப்போகிறீர்களோ என்று அநேக கேள்விகள் கேட்டிருப்பார்கள். ஒருவேலை அவர்கள் கேட்கவில்லை என்றாலும், வேலைக்காரர்களுக்குள்ளாக ஒரு சந்தேகம் வந்துவிடும். எனவே தான் ஆபிரகாம் நானும் பிள்ளையாண்டானும் திரும்பி வருவோம் என்று சொன்னார்.
    ஆதியாகமம் 22:7,8-ல் ஈசாக்கு ஆபிரகாமைப் பார்த்துக் கேட்கிறார், தகப்பனே நம்மிடத்தில் நெருப்பு, கட்டைகள் எல்லாம் இருக்கிறது தகன பலிக்கு ஆடு எங்கே என்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம்: ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லுகிறார். இதையும் ஆபிரகாம் விசுவாசத்தினால் சொல்லவில்லை. ஒருவேலை ஆண்டவர் குறித்த இடத்திற்கு செல்லும் முன்பதாக ஆபிரகாம் ஈசாக்கிடம் உன்னைத்தான் நான் பலியிடப்போகிறேன் என்று சொல்லியிருப்பாரானால், ஈசாக்கு தன் தகப்பனை விட்டு ஓடிப்போயிருப்பான். எனவே என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஆபிரகாம் ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லுகிறார். இது விசுவாச அறிக்கை அல்ல.

    ஆபிரகாமும் ஈசாக்கும் ஆண்டவர் தங்களுக்கு குறித்த இடத்தை வந்து அடைந்தார்கள். ஆபிரகாம் பலிபீடத்திற்கான கட்டைகளை அடுக்க ஆரம்பித்தான். ஈசாக்கு மிகவும் சந்தோஷமாக தன் தகப்பனுக்கு பலிபீடம் கட்ட கற்களை எடுத்துக்கொடுத்திருப்பான். என் தகப்பன் என்னைத்தான் பலியிடப்போகிறார் என்று ஈசாக்கிற்கு தெரியாது.
    ஆபிரகாம் பலிபீடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதின் மேல் கட்டைகளை அடுக்கிவைத்து, ஈசாக்கு எதிர்பாராத நேரத்தில் ஆபிரகாம் அவனைப் பிடித்து அந்த பலிபீடத்தின் மேல் கிடத்தியிருப்பான். ஆபிரகாம் ஈசாக்கை கட்டி, பலிபீடத்தின் மேல் வைத்த பின்பு, மகனே உன்னைத்தான் நான் பலியிடப்போகிறேன் என்று சொல்லியிருப்பார். அந்த நேரத்தில் ஈசாக்கின் மனநிலை எப்படி இருந்திருக்கும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆபிரகாம் ஒரு தீவிரவாதி அல்ல, ஒரு பயங்கரவாதி அல்ல. ஈசாக்கின் தகப்பன். அவனுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்.
    ஒரு பிள்ளை தன் தகப்பனிடம் இருக்கும்போதே அதிக தைரியத்தை உணருவான். ஒரு குழந்தை இந்த உலகில் மற்ற மனிதர்களை நம்புவதை தன் தகப்பனையே முழுமையாக நம்புவான். அப்படிப்பட்ட தகப்பனாகிய ஆபிரகாம் ஈசாக்கை பலிபீடத்தில் கட்டி வைத்ததும் ஈசாக்கின் மனநிலை எப்படி இருந்திருக்கும். ஈசாக்கு கத்தியிருப்பான், அழுதிருப்பான். என் தகப்பனின் கையில் நான் மரிக்கப்போகிறேன் என்று ஈசாக்கு கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டான்.

    கடைசியாக ஆபிரகாம் தன் மகனை கொலை செய்வதற்கு கத்தியையும் ஓங்கிவிட்டான். உலகத்தில் எந்த ஒரு தகப்பனாலும் இப்படிப்பட்ட ஒரு செயலை செய்ய முடியாது. ஆனால் ஆபிரகாம் கடவுளுக்காக எதையும் செய்ய துணிந்தான்.
    ஆபிரகாம் ஈசாக்கிற்கு நேராக கத்தியை ஓங்கின நேரத்தில், கர்த்தருடைய தூதனானவர் ஆபிரகாமை கூப்பிட்டார். ஆபிரகாமிற்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் காண்பிக்கிறார். ஆபிரகாம் மிகவும் சந்தோஷத்தோடு தன் மகனை பலிபீடத்திலிருந்து இரக்கிவிட்டு, அந்த ஆட்டை கொண்டுவந்து ஈசாக்கிற்கு பதிலாக பலியிடுகின்றார். ஆபிரகாம் தன் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராத ஒரு சந்தோஷத்தையும், நிம்மதி பெருமூச்சும் விட்டிருப்பான்.
    ஆபிரகாம் தன் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுகிறார். அந்த ஆட்டின் கொம்பின் மூலமாக ஒரு எக்காளத்தை செய்கிறார். முதல் முதலில் எக்காளம் செய்தவர் இந்த ஆபிரகாம். ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டார். யேகோவாயீரே என்றால் கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று அர்த்தம்.
    ஈசாக்கின் நிலையை நாம் யோசித்துப்பார்ப்போம். ஆபிரகாம் ஈசாக்கை பலிபீடத்திலிருந்து இரக்கிவிட்ட மாத்திரத்தில் ஈசாக்கு ஆபிரகாமை விட்டு எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடியிருப்பான். சரித்திரத்தின் படி அன்று தான் ஈசாக்கு ஆபிரகாமை நேசித்த கடைசி நாள். அதற்கு பின்பு ஈசாக்கு ஆபிரகாமோடு வாழவில்லை.
    மோரியா மலையிலிருந்து பெயர்செபாவிற்கு செல்ல மூன்று நாள் செல்லும். அந்த மூன்று நாளும் ஆபிரகாமின் அருகில் கூட ஈசாக்கு வந்திருக்க மாட்டான். அந்த மூன்று நாள் இரவும் ஆபிரகாம் தன் மகனை பலிசெலுத்தவில்லையே என்ற சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்கியிருப்பான். ஆனால் ஈசாக்கிற்கு மூன்று நாள் இரவும் தூக்கம் வந்திருக்காது.
    ஈசாக்கு தன் தகப்பன் தன்னை கொல்ல நினைத்ததை அவனோடு கூட வந்த வேலைக்காரரிடம் சொல்லியிருப்பானோ என்னவோ தெரியவில்லை. ஆனால், தன் வீட்டிற்கு அருகில் வந்ததும் ஓடிச் சென்று தன் தாயை கட்டி அனைத்துக்கொண்டு ஆபிரகாம் செய்த எல்லாவற்றையும் சொல்லியிருப்பான்.
    மகன் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட சாராள், ஆபிரகாமை எப்பயெல்லாம் கடிந்துகொண்டாள், எப்படியெல்லாம் ஆபிரகாமை தரகுறைவாக பேசினால் என்று இஸ்ரவேலர்களின் புனித நூல்களாகிய தல்மோட், மிஸ்னா, கெமாரா போன்ற புத்தகங்களில் வாசிக்க முடியும். அன்றிலிருந்து சாராள் ஆபிரகாமோடு வாழவில்லை. ஆபிரகாமோடு சண்டையிட்டு தன் மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு ஆபிரகாமின் வீட்டைவிட்டு கிளம்பினால் சாராள்.
    ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கு பிறக்கும் முன்பதாக எபிரோன் என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள். இந்த எபிரோனுக்கு நான்கு பெயர்கள் உண்டு. கீரியாத்அர்பா, மம்ரேயின் சமபூமி, எபிரோன், சீகேம் இந்த நான்கு பெயர்களும் ஒரே இடத்தைத்தான் குறிக்கிறது. இந்த இடத்திலே ஏத்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த ஏத்தியர்களின் மத்தியில் கொஞ்ச நாட்கள் ஆபிரகாமும் சாராளும் வாழ்ந்து வந்தார்கள். வீடுகட்டி வாழவில்லை, கூடாரம்போட்டு வாழ்ந்தார்கள். (ஆதியாகமம் 13:18)
    இந்த எப்ரோனிலே அவர்கள் வாழ்ந்தபோதுதான் லோத்தை சில ராஜாக்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரோடு கூடப்போய் அந்த ராஜாக்களை தோற்க்கடித்து, லோத்தைக் காப்பாற்றினான். அதன் பின்பு ஆபிரகாம் இந்த எப்ரோன் என்ற இடத்திற்கு வரவில்லை. பெயர்செபாவிற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டான்.

    பெர்செபாவில் தான் ஆபிரகாமிற்கும் ஆகாருக்கும் இஸ்மவேல் என்ற குழந்தை பிறக்கிறது. இந்த பெயர்செபாவில் தான் ஆபிரகாமிற்கும் சாராளுக்கும் ஈசாக்கு என்ற பிள்ளை பிறக்கிறது.

    ஆபிரகாமின் வீட்டை விட்டு வெளியேறிய சாராள், தன் மகனை அழைத்துக்கொண்டு எப்ரோனுக்குப்போய் அங்கே தாங்கள் முன்பு கூடாரம்போட்டிருந்த இடத்திலே கூடாரம்போட்டு அந்த ஏத்தியர்களோடு வாழ ஆரம்பித்தாள். அதன்பின்பு இருபத்து ஐந்து ஆண்டுகள் சாராள் உயிரோடு இருந்தாள். சாராள் உயிரோடு இருந்த நாள் முழுவதும் எப்ரோனிலே தங்கியிருந்தாள். அவளோடு கூட ஈசாக்கும் தங்கியிருந்தான். ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.
    ஆதியாகமம் 22:19-ல் ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான் என்று வாசிக்கிறோம். ஆதியாகமம் 23:2-ல் கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள் என்று வாசிக்கிறோம்.
    ஆதியாகமம் 23:2-ல் அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி ஆழுதான் என்று வாசிக்கிறோம். அப்படியானால், சாராள் மரிக்கும்போது ஆபிரகாம் சாராளோடு இல்லை. சாராள் மரித்துப்போன செய்தியை கேட்ட ஆபிரகாம் பெயர்செபாவிலிருந்து வந்து எபிரோனிலே சாராளின் சரீரத்தைக் கண்டு, தன் மனைவிக்காக புலம்பி அழுதான்.

    சாராளை அடக்கம்பண்ணுவதற்காக அந்த ஏத்தியர்களிடத்தில் ஆபிரகாம் ஒரு நிலத்ததை வாங்குகிறான். ஆபிரகாம் முன்னே இத்தேசத்தில் வாழ்ந்ததினாலும், அவன் பெரிய செல்வந்தன் என்றபடியினாலும் ஏத்தியர்கள் ஆபிரகாமைப் பார்த்து: எங்கள் ஆண்டவனே நீர் மகா பிரபு, உங்கள் மனைவியை அடக்கம் செய்வதற்கு நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. எங்கள் இடத்தில் நீங்கள் தாராளமாக உங்கள் மனைவியை அடக்கம் செய்யலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு ஆபிரகாம்: என் மனைவியின் கடைசி நாட்களில் நான் அவளோடு இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அவளுடைய அடக்கத்தையாகிலும் நான் சிறப்பாய் செய்ய வேண்டும் என்று யோசித்து, அந்த நிலத்திற்கான முழு கிரயத்தையும் ஏத்தியர்களிடம் கொடுத்து அந்த நிலத்தை வாங்கி, அந்த இடத்திலே தன் மனைவியை ஆபிரகாம் நல்லடக்கம் செய்தான்.
    ஆபிரகாம் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு தன் மகனை பார்க்கிறார். இப்போது ஈசாக்கிற்கு முப்பத்து ஏழு வயது. பன்னிரண்டு வயதில் ஆபிரகாம் தன் மகனைப் பார்த்தது, அதன் பின்பு இப்பொழுதுதான் தன் மகனை பார்க்கின்றார். இருபத்து ஐந்து ஆண்டுகள் சென்ற பின்பும் ஈசாக்கு தன் தகப்பனைப் பார்க்க பயந்தான். ஈசாக்கு தன் வாழ்நாளின் கடைசி வரை ஒரு பயந்த சுபாவமுள்ள மனிதனாகவே வாழ்ந்தார்.
    பிற்காலத்தில் ஈசாக்கு தன் வேலைக்காரரோடு ஒரு இடத்தில் கிணறு வெட்டும்போது அங்கே குடியிருக்கிறவர்கள் அது எங்களுடைய கிணறு என்று சொல்லும்போது, அங்கேயிருந்து புறப்பட்டு வேறொரு இடத்திற்கு சென்றுவிடுவான். ஈசாக்கு தான் அந்த கிணற்றை வெட்டினான். ஆனால் மற்றவர்கள் வந்து கேட்கும்போது அவர்களோடு யுத்தம் செய்து, இது நான் வெட்டின கிணறு என்று சொல்லமாட்டான். உடனே, அங்கிருந்து புறப்பட்டுவிடுவான். இப்படியாக கடைசிவரை ஈசாக்கு பயந்த சுபாவமுள்ள மனிதனாகவே வாழ்ந்தான்.
    சாராள் மரித்த பின்பு, ஆபிரகாம் ஈசாக்கை தன்னோடு அழைத்துக்கொண்டு போக நினைத்தான். ஆனால் ஈசாக்கு தன் தகப்பனோடு செல்லவில்லை. தன் தாயின் கூடாரத்திலேயே தங்கியிருந்தான்.

    ஈசாக்கிற்கு நாற்பது வயதானபோது ஆபிரகாம், நான் ஒரு பெண்ணை கொண்டுவந்து ஈசாக்கிற்கு கொடுத்தாள் அவன் திருமணம் செய்யமாட்டான் என்று யோசித்து, தன் வேலைக்காரனாகிய எலியேசரை அழைத்து, என் தேசத்திற்கும் என் இனத்தாரிடத்திற்கும் சென்று என் மகன் ஈசாக்கிற்கு ஏற்ற ஒரு பெண்ணை அழைத்துவா என்று சொல்லி அனுப்புகிறார்.
    எலியேசர் ரெபேக்காள் என்ற ஒரு பெண்ணை தன் எஜமானின் மகனுக்கு மனைவியாக அழைத்துவந்தான். திருமணம் என்பது பொதுவாக தகப்பனின் வீட்டில் தான் நடைபெற வேண்டும். ஆதியாகமம் 24:67-ஐ வாசிப்போமானால், ஈசாக்கு ரெபேக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டு போய், அவளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டான். ஈசாக்கின் திருமணத்தில் ஆபிரகாம் சம்பந்தப்படவே இல்லை. தன் தாயின் கூடாரத்தில் தான் ஈசாக்கு ரெபேக்காளை திருமணம் செய்கிறான்.

    ஈசாக்கு ரெபேக்காளை திருமணம் செய்த பின்பு, ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்தான். தமிழ் வேதாகமத்தில் ஆதியாகமம் 25:1-ல் ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான் என்று வாசிக்கிறோம். ஆனால், மூல பாஷையாகிய எபிரெயு பாஷையில் விவாகம்பண்ணினான் என்றே எழுதப்பட்டுள்ளது.

    ஆபிரகாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து ஈசாக்கை பலிசெலுத்த தீர்மானித்ததினால், ஆபிரகாமிற்கு தன் மகனோடு வாழும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தன் மனைவியோடு வாழும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆபிரகாம் தன் கடைசி காலத்தில் பிள்ளையில்லாதவனைப் போலவே வாழ்ந்துவந்தார். ஆபிரகாம் ஒரு பெண் பைத்தியமாக இருந்திருந்தால், சாராள் தன்னைவிட்டுப் பிரிந்துபோன உடனேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பார். ஆனால் ஆபிரகாம் அப்படி செய்யவில்லை. சாராள் மரித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு, தன் மகனுக்கு ஒரு துணையைத் தேடித்தந்த பின்பே ஆபிரகாம் ஒரு பெண்ணை திருமணம் செய்தான்.

    ஆண்டவர் ஆபிரகாமை சோதித்ததினால் ஆபிரகாமால் தன் குடும்பத்தோடு கடைசிவரை வாழ முடியவில்லை. நாம் ஒருவேலை நினைக்கலாம் ஆண்டவர் சாராளின் உள்ளதில் பேசி, சாராளை ஆபிரகாமோடு வாழ வைத்திருக்கலாமே. ஆனால் ஆண்டவர் ஏன் அப்படி செய்யவில்லை. ஆண்டவர் சில காரியங்களை அனுமதிக்கும்போது அதை நம்மால் ஏற்றுக்கொள் முடியவில்லை. நாம் ஏன் என்று கேட்பதற்கு தகுதியற்றவர்கள்.
    இதைப்போன்ற ஒரு நிகழ்வு தான் யோபுவின் வாழ்க்கையிலும் வந்தது. யோபுவின் எல்லா சொத்துக்களும் அழிந்துபோயின. பத்து குமாரரும் மரித்துப்போனார்கள். மீண்டுமாக எல்லா செத்துக்களும் இரண்டு மடங்காய் யோபுவிற்கு கிடைத்தது உண்மை தான். மீண்டும் பத்து குமாரர் பிறந்தார்கள் உண்மைதான். ஆனால் தன் குமாரர் பத்து பேரும் ஒரே நாளில் மரித்துப்போனார்களே, அந்த துயரம் யோபுவின் வாழ்வை பாதித்திருக்கும் அல்லவா? மீண்டும் பத்து பிள்ளைகள் பிறந்திருந்தாலும் மரித்தவர்கள் உயிரோடு வரவில்லையே. அவர்களை நினைத்து நினைத்து எத்தனை நாள் யோபு கலங்கியிருப்பான். ஆண்டவர் செய்யும் சில காரியங்களை நாம் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடியாது. அவரின் தீர்மானப்படி தான் இன்னும் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

    ஆபிரகாமைப்போல நாம் மிகப்பெரிய தியாகிகள் அல்ல. ஆபிரகாமிடம் கேட்டதைப்போல ஆண்டவர் நம்மிடம் எதையும் கேட்கவில்லை. ஆபிரகாமை ஆண்டவர் சோதித்ததைப்போல நம்மில் ஒருவரையும் அவர் சோதிக்கவில்லை.
    ஆண்டவர் நம்மிடம் எதைக் கேட்கிறார், உன் மகனை எனக்காக பலியிடு என்று கேட்கிறாரா? இல்லை. உன் மகனை ஊழியத்திற்கு அனுப்புவாயா என்று தானே கேட்கிறார்? உனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் நாமம் அறியாத ஜனங்களுக்கு என்னைப் பற்றி அறிவிப்பாயா? என்று தானே கேட்கிறார்.

    நாம் அனைவரும் ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததிகள் என்று சொல்லுகிறோமே? ஆபிரகாமிடம் காணப்பட்ட அர்ப்பணம் நம்மிடம் காணப்படுகின்றதா?

    ஆபிராகம் தன் மகனை பலியிட சென்றபோது எவ்வளவு வேதனைப்பட்டாரோ, அதைப்போலவே பிதாவானவரும் தன் ஒரே பேரான குமாரனை நம்முடைய பாவங்களுக்காக பலியாக கொடுக்கும்போதும் வேதனைப்பட்டார். யாராவது நம்முடைய பிள்ளையை சமுதாயத்தின் முன்பாக நிர்வாணமாய் நிறுத்தினால், நம்முடைய உள்ளம் எவ்வளவு வேதனைப்படும். இயேசுவை நிர்வாணமாய் சிலுவையில் அறைந்தார்கள். அதைப்பார்த்துக்கொண்டிருந்த பிதாவுக்கு எப்படி இருந்திருக்கும்.

    என்னை உருவாக்கி, என்னை அழைத்த, என்னை தெரிந்துகொண்டு தன் ஒரே பேரானை குமாரனையும் எனக்காக பலியாக்கின அந்த கர்த்தாதி கர்த்தருக்காக நான் என்ன செய்திருக்கிறேன். நான் என்ன செய்யப்போகிறேன். நம்மை நாமே யோசித்துப்பார்ப்போம். அவர் நமக்காக தன் சொந்த குமாரனையே இவ்வுலகத்திற்கு அனுப்பினாரே. அதைவிட பெரிய தியாகத்தையா நம்மிடம் கேட்டார். அதைவிட பெரிய ஒரு காரியத்தையா ஆண்டவர் நம்மிடம் கேட்டார்.
    ஆண்டவர் உங்களை ஊழியத்திற்கு அழைப்பாரானால் உங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுங்கள். முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ உங்களை ஊழியம் செய்ய ஆண்டவர் ஏவுவாரானால் உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணியுங்கள். ஆண்டவர் உங்களைக் கொண்டு பெரிய காரிங்கள் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.