Type Here to Get Search Results !

ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி | Part 1 | An in-depth study of Abraham | Bible Study in Tamil | Jesus Sam

==================
ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி (பகுதி-1)
==================
    ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்ட ஆபிரகாம் என்ற நபரைக் குறித்து நாம் ஆழமாக அறிந்துகொள்வோம்.  ஆபிரகாமைக் குறித்த தெளிவான விளக்கங்களின் முதல் பாகம்.  
    வேதத்தில் வாழ்ந்த அநேக மனிதர்களில் ஆபிரகாம் என்ற நபரைத் தெரியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. அனைவருக்கும் பரிச்சயமான நபர் தான் இந்த ஆபிரகாம். இந்த ஆபிரகாமை ஆண்டவர் அழைத்து ஜாதிகளின் பிதாவாக மாற்றினார். ஆபிராம் என்று அழைக்கப்பட்ட இவனை ஆண்டவர் ஆபிரகாமாக மாற்றினார். ஆபிரகாம் என்றால் ஜாதிகளின் தந்தை என்று பொருள்.
    கிறிஸ்தவர்கள் என்றாலும் யூதர்கள் என்றாலும் இவர்களுக்கு முற்பிதாவாக திகழுகின்றவர் இந்த ஆபிரகாம். ஆபிரகாமை முற்பிதா அல்லது ஆரம்ப தந்தை என்றும் அழைப்பர்.
    ஆபிராகாமின் வழி வந்தவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த இஸ்ரவேலர்களிடமிருந்தே இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்தார். கிறிஸ்தவர்கள் இயேசுவை உடையவர்களாக இருக்கின்றார்கள். நாம் கிறிஸ்தவர்கள் என்றபடியினால் நாம் ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியினராய் இருக்கின்றோம். இஸ்ரவேலர்களுக்கு எப்படி ஆபிரகாம் ஒரு முக்கியமான நபராக திகழ்கின்றாறோ, அதைப்போலவே கிறிஸ்தவர்களுக்கும் ஆபிரகாம் ஒரு முக்கியமான நபர் ஆவார். காரணம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். ஆபிரகாம் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய தகப்பன் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.

    ஆபிரகாம் கல்தேயா என்ற தேசத்தில் உள்ள ஊர் என்ற பட்டணத்தைச் சார்ந்த ஒருவர். இவரை ஆண்டவர் தெரிந்தெடுத்து, இவருடைய சந்ததியினருக்கு எபிரெயர் என்ற பட்டத்தையும் கொடுத்து, இவருடைய சந்ததியிலிருந்து கடவுளே மனிதனாக பூமிக்கு வந்து, இன்றைக்கும் அந்த ஆபிரகாமின் சந்ததியின் மூலமாக கர்த்தர் உலகத்தில் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார். இதிலிருந்து இந்த எபிரெயர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது நமக்கு தெரிகிறது.

    நம்முடைய ஆண்டவர் வித்தியாசமான ஆண்டவர். இந்த உலகத்தில் இருக்கின்ற பல தேசங்களில் ஏதேனும் ஒரு தேசத்தை தெரிந்துகொண்டு அவர்களை தன் ஜனமாக்கிக்கொண்டு, அவர்கள் மூலமாக இந்த உலகத்திற்கு வரவேண்டும் என்று நினைக்காமல். தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றும்படியாக கடவுள் தனக்கென ஒரு தேசத்தை ஆவரே உருவாக்கினார்.

    நோவாவின் காலத்திற்கு பின்பு ஜனங்கள் அனைவரும் ஒன்றினைந்து பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள். இச்செயல் ஆண்டவரின் பார்வைக்கு செம்மையானதாய் தோன்றாததால், ஜனங்களின் பாஷைகளை ஆண்டவர் தாறுமாறாக்கினார். அதுவரை ஒரே இடத்தில் கூடிவாழ்ந்த ஜனங்கள் வெவ்வேறு இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டு, பல தேசங்களை உருவாக்கினார்கள்.
    இப்படி பல தேசங்கள் உலகில் இருக்கத்தக்க, அவற்றில் ஒன்றை ஆண்டவர் தன்னுடைய தேசமாக தெரிந்தெடுத்திருக்கலாம். இப்படிச்செய்யாமல், ஒரு மனிதனை தெரிவு செய்து, அந்த ஒரு மனிதன் மூலமாக ஒரு தேசத்தையே ஆண்டவர் உருவாக்கினார். இது ஆண்டவரின் தனித்துவமான கிரியையை வெளிப்படுத்துகின்றது.
    இப்படி ஒரு மனிதன் மூலமாக ஆண்டவர் உருவாக்கிய தேசத்தைக்கொண்டு உலகத்திற்கே சவால் விடுத்தார், இன்றும் சவால் விடுத்துக்கொண்டிருக்கின்றார் நம்முடைய ஆண்டவர்.
    இன்ரவேல் என்ற தேசம் என்று உருவானதே அன்று முதற்கொண்டு இன்று வரை கர்த்தரை வெறுக்கின்ற தேசங்களுக்கும், கர்த்தரை அறியாத தேசங்களுக்கும், பிசாசுக்கும், பிசாசின் தூதுவர்களுக்கும் சிம்ம சொப்பணமாக விளங்கிக்கொண்டிருக்கின்றது இந்த இஸ்ரவேல் தேசம்.

    ஆபிரகாம் ஒரு பாபிலோனியன். கல்தேயா தேசம் என்பது ஒரு பாபிலோனிய தேசம். அதைத்தான் மெசப்பத்தாமியா என்பர். மெசப்பத்தாமியாவில் தான் பாபிலோன் இருந்தது. உலக சரித்திரத்தின் படி உலகில் தோன்றிய முதல் கலாச்சாரம் அல்லது முதல் நாகரீகம் என்பது மெசப்பத்தாமியா நாகரீகம். அதாவது பாபிலோனிய நாகரீகம். ஐபிராத்து மற்றும் டைகிரீஸ் என்று சொல்லப்படுகின்ற இரண்டு நதிகளுக்கு இடையிலே அமைந்த ஒரு நாகரீகம் தான் இந்த மெசப்பத்தாமியா நாகரீகம்.
    இந்த மெசப்பத்தாமியா நாகரீகத்திற்கு பிறகே நயில்நதி நாகரீகம், சிந்து வெளி நாகரீகம் என்ற பல நாகரீகங்கள் தோன்றின. முதல் நாகரீகம் தோன்றின அந்த மெசப்பத்தானியா என்ற நாகரீகத்தில் இருந்த ஒரு நாடுதான் பாபிலோன். இந்த பாபிலோன் நாட்டில் உள்ள ஊர் என்ற பட்டணத்தில் இருந்து தான் ஆண்டவர் ஆபிரகாமை தெரிவுசெய்தார்.

    ஆபிரகாமை ஆண்டவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆபிரகாமை விட நல்லவன் இந்த உலகில் வாழவில்லையா? ஆபிரகாமைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று யாராவது நம்மிடம் கேட்டால், நாம் உடனே சொல்லுவோம்: ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை, கீழ்ப்படிதலன் சிகரம், கர்த்தருடைய நண்பன், கர்த்தருக்காக தன் ஒரே பேரான குமாரனை பலிசெலுத்தியவன், உன் தகப்பன் வீட்டையும், உன் தேசத்தையும், ஜனங்களையும் விட்டு புறப்படு என்று ஆண்டவர் சொன்ன போது உடனே புறப்பட்டவர் என்று ஆபிரகாமைப் பற்றி நமக்கு தெரிந்த காரியங்களை சொல்லுவோம்.
    ஒரு வியாபாரியைப்போல ஆண்டவரிடம் பேரம் பேசிய ஒரே நபர் இந்த ஆபிரகாம். சோதோம் கொமோராவை ஆண்டவர் அழிக்க வந்தபோது, ஆபிரகாம் ஆண்டவரிடம் ஐம்பது நீதிமான்களின் நிமித்தம் நகரத்தை அழிப்பீரோ என்று கேட்கிறார். ஆண்டவர் ஐம்பது நீதிமான்களின் நிமித்தம் நகரத்தை அழிக்க மாட்டேன் என்று சொன்னபோது, தொடர்ந்து ஆபிரகாம் நாற்பது நீதிமான், முப்பது நீதிமான், பத்து நீதிமான் என்று குறைத்துக்கொண்டே வந்தார். ஒரு நண்பனிடம் பேசுவதுபோல ஆண்டவரிடம் பேசியவர் இந்த ஆபிரகாம்.
    ரோமர் நான்காம் அதிகாரத்தில் பவுல் ஆபிரகாமைப்பற்றி மிகவும் அருமையாக எழுதுகிறார். ஆபிரகாம் விருத்தசேதனத்தினால் அல்ல, கிரியைகளினால் அல்ல, நியாயப்பிரமாணத்தினால் அல்ல விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டார் என்று பவுல் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். இப்படியாக புதிய ஏற்பாட்டிலும் மகிமைப்படுத்தப்பட்டு வருகின்றார் இந்த ஆபிரகாம்.

    இந்த அளவிற்கு ஆபிரகாம் சிறந்து விளங்கிய ஒரு மனிதனாக காணப்பட்டாலும், இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறந்த மனிதனே அல்ல. மிகவும் மோசமான மனிதன். இப்படிப்பட்ட போசமான, கேவலமான மனிதனையே ஆண்டவர் ஒரு சிறந்த மனிதனாக மாற்றினார். யூதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாகவும் மாற்றினார்.

    ஆபிரகாமைப்பற்றி படிக்க வேண்டுமானால் நாம் ஆதியாகமம் 12-ம் அதிகாரத்திலிருந்து படிப்பது உண்டு. ஆதியாகமம் 12-ம் அதிகாரத்திற்கு முன்பே ஆபிரகாமைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதையும் நாம் தியானித்தால் மட்டுமே ஆபிரகாமைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

    தேராகு என்ற ஒரு மனிதன் இருந்தார். இந்த தேராகுவிற்கு ஆரான், ஆபிராம், நாகோர் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். தேராகுவும் அவன் குமாரர் மூவரும் கல்தேயாவில் உள்ள ஊர் என்ற பட்டணத்தில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகப்பெரிய ஐசுவரியவான்கள்.
    ஒருநாள் ஆபிரகாமிற்கு நோவாவின் கடவுள் தரிசனமானார். பாபிலோனில் அநேக தெய்வங்கள் இருந்தன. பாபிலோனியர்கள் நிம்ரோத்தின் காலத்தில் இருந்து அநேக தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். பாபிலோனில் தான் பிசாசானவன் மதங்களை உருவாக்கினான். பாபிலோனில் தான் முதல் முதலாக விக்கிரக ஆராதனை உருவானது. உலகத்தில் முதல் ராஜா தோன்றிய இடம் பாபிலோன். பாபிலோனின் முதல் ராஜா கில்காமேஸ். இவனை வேட்டைக்காரன் என்று அழைப்பார்கள். வேட்டைக்காரன் என்ற பெயர் தான் நிம்ரோத்.

    இப்படிப்பட்ட இடத்தில் தான் தேராகு வாழ்ந்து வந்தார். பாபிலோனியர்கள் நெருப்புக்கு ஒரு தெய்வும், சூரியனுக்கு ஒரு தெய்வம், சந்திரனுக்கு ஒரு தெய்வம், தண்ணீருக்கு ஒரு தெய்வம் என்று அநேக தெய்வங்களை வைத்திருந்தார்கள்.
    இப்படி பல தெய்வங்களை வணங்கிக்கொண்டிருந்த பாபிலோனியர்களுக்கு நோவாவின் தெய்வத்தைப் பற்றியும் தெரியும். நோவாவின் தேவனையும் அவர்கள் ஒரு தெய்வமாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அவர் மாத்திரமே தெய்வம் என்று அவர்கள் நம்பிவில்லை.
    இப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் ஆபிரகாம் என்ற மனிதரோடு நோவாவின் கடவுள் பேசினார். கடவுள் ஆபிரகாமோடு கணவில் வந்து பேசினாரா? நேரில் வந்து காட்சி கொடுத்தாரா? என்று நமக்கு தெரியாது.

    பாபிலோனிய கலாச்சாரத்தின் படி ஒரு குடும்பத்தின் தலைவர் கணவன். பிள்ளைகள் திருமணம் செய்திருந்தாலும் தகப்பன் மரித்த பின்பே பிள்ளைகளுக்கு தலைமைப்பொறுப்பு கொடுக்கப்படும். ஆபிரகாம் குடும்பத்தின் தந்தை தேராகு. தேராகின் தீர்மானமே குடும்பத்தில் நடைமுறைபடுத்தப்படும்.
    ஆபிரகாமிற்கு நோவாவின் கடவுள் தரிசனமாகி, உன் தேசத்தையும், உன் தகப்பன் வீட்டையும், உன் இனத்தையும் விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ என்று சொன்னபோது ஆபிரகாமால் அதற்கு கீழ்ப்படிய முடியவில்லை.
    ஆபிரகாம் நோவாவின் கடவுள் தன்னிடத்தில் சொன்னவற்றை தன் தந்தையிடம் தெரிவிக்கிறார். தந்தை தேராகு ஆபிரகாமின் வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை. நாம் இங்கு மிகவும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதைவிட்டு நாம் எங்கும் செல்ல முடியாது என்று மறுத்துவிடுகின்றார். பாபிலோனிய கலாச்சாரப்படி ஆபிரகாமால் தந்தையை மீறி செயல்படமுடியவில்லை.
    ஆபிரகாம் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டுமானால், தகப்பனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும். எனவே, தான் ஆண்டவர் உன் தகப்பன் வீட்டையும் விட்டு புறப்படு என்று சொன்னார். (ஆதியாகமம் 12:1)
    ஆண்டவர் ஆபிரகாமிடம் தன் தகப்பனுடைய வீட்டை விட்டு வர சொன்னதின் காரணம்: ஆபிரகாமிற்கு கடவுளே தலைவராக இருக்க விரும்பினார். எனவே, உலகப்பிரகாரமாக இருக்கின்ற தலைமைத்துவத்தை விட்டு வெளியே வா என்று ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தார். இப்போது ஆபிரகாமின் குடும்ப தலைவர் தேராகு. தேராகு மரித்த பிறகு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மூத்த மகனாகிய ஆரானுக்கு கொடுக்கப்படும். எனவே, நீ இந்த உலகப்பிரகாரமான தலைமைத்துவத்தை விட்டு வெளியே வா என்று ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தார்.
    ஆண்டவர் ஆபிரகாமிடம் மாத்திரம் சொன்ன அந்த காரியத்தை ஆபிரகாம் தன் தகப்பனுக்கும் அறிவித்து, ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டான்.
    தேராகுவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து ஆபிரகாம் கல்தேயாவிலேயே வாழ்ந்து வருகின்றார். சில ஆண்டுகளுக்குப் பின்பு ஆபிரகாமின் அண்ணன் ஆரான் மரித்துப்போகிறான்.
    அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இருப்பதைப்போல அந்நாட்களில் ஓசோன் படலம் பாதிப்படையவில்லை, தொழிற்சாலைகள், வானங்கள், எரிபொருள் கசிவு, சுற்றுச்சூழல் மாசுபாடு இவையெல்லாம் அந்த காலத்தில் இல்லாததால், அன்றைய காலத்து மக்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள்.
    இப்படிப்பட்ட அந்த காலத்தில் தந்தையாகிய தேராகு உயிரோடு இருக்கும்போதே மூத்த மகன் ஆரான் மரித்துப்போனான். ஆரான் மரித்தது இயற்கை மரணம் அல்ல. அகாலமரணம். அக்காலத்து மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது, ஒரு குடும்பத்தில் அகாலமரணம் ஏற்பட்டால் அக்குடும்பத்தினர் ஏதோ தவறு செய்துவிட்டார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். இன்றைக்கும் அநேகர் இப்படி நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
    ஆரானின் மரணம் தேராகுவை வெகுவாகப் பாதித்துவிட்டது. ஏதோ ஒரு தெய்வம் கோபித்துக்கொண்டதினால் தான் என் மூத்த மகன் மரித்துப்போனான் என்று தனக்குள்ளே சிந்திக்க தொடங்கினார் தேராகு. அப்பொழுது தான் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆபிரகாம் சொன்ன காரியம் தேராகிற்கு நினைவிற்கு வந்தது.
    ஆபிரகாமோடு பேசிய நோவாவின் தெய்வம் தான் நம்மை தண்டித்துவிட்டது. இந்த இடத்தை விட்டு போங்கள் என்று நோவாவின் கடவுள் சொன்னபோது நாம் கீழ்ப்படியாததால் நோவாவின் கடவுள் நம்மை தண்டித்துவிட்டார் என்று நினைத்து, நாம் இன்னும் இங்கேயே இருப்போமானால் மற்ற பிள்ளைகளையும் இழக்க நேரிடும் என்று பயந்து, உடனே ஊர் என்ற கல்தேயர் தேசத்தை விட்டு புறப்பட்டான் தேராகு.
    ஆண்டவர் ஆபிரகாமிடம் உலகப்பிரகாரமான தலைமைத்துவம் உனக்கு வேண்டாம். நானே உனக்கு தலைவராய் இருக்கிறேன். நீ உன் குடும்பத்தை விட்டு வெளியே வா என்று சொன்னார். ஆனால் ஆபிரகாம் கீழ்ப்படியவில்லை. ஆரானின் மரணத்தின் நிமித்தம் தேராகு கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்படுகின்றார். ஆபிரகாமும் தேராகோடு பின்செல்கின்றார்.
    அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் வாழ்வாதார தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் ஆற்றங்கரை ஓரமாகவே வாழ்ந்து வந்தார்கள்.
    ஆபிரகாம் வாழ்ந்த இடத்திலிருந்து தென்மேற்கு திசையில் சென்றால், ஆண்டவர் ஆபிரகாமிற்கென தெரிவுசெய்த கானான் தேசம் வந்துவிடும். ஆனால், ஆபிரகாமிற்கும் தேராகிற்கும் அது தெரிய வாய்ப்பில்லை. ஆண்டவர் நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று சொன்னாரே தவிர, கானான் தேசத்திற்கு தான் உன்னை அழைத்துக்கொண்டு போவேன் என்று சொல்லவில்லை.
    தேராகும் அவன் குடும்பத்தாரும் தாங்கள் வசித்த இடத்திலிருந்து வடமேற்கு திசையாக ஐபிராத்து (யூப்ரடிஸ்) நதியோரமாக பிரயாணப்பட்டார்கள். இந்த ஐபிராத்து நதியோரமாக அவர்கள் வந்த போது, ஐபிராத்து நதியின் கிளை நதி ஒன்றை கண்டார்கள். அந்த இடம் விவசாயத்திற்கும், குடியிறுப்புக்கும் மிகவும் அழகான சிறப்பான ஒரு இடமாக இருந்தது. உடனே தேராகு இங்கேயே தங்கிவிடுவோம் என்று தீர்மானித்தார். அந்த இடத்திற்கு தேராகு, தான் மரித்துப்போன குமாரன் ஆரானின் பெயரை வைத்தார். அந்த இடத்திலே இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த ஆரான் என்ற இடத்திலே தேராகு மரித்துப்போனார்.

    தேராகு மரித்த பின்பு குடும்பத்தின் தலைமைப்பொறுப்பு யாருக்கு கொடுக்கப்படும் என்றால் ஆபிரகாமிற்கே கொடுக்கப்படும். மூத்த அண்ணன் ஆரான் மரித்துப்போனதினால், குடும்பத்தில் அடுத்து மூத்த ஆண் ஆபிரகாம். எனவே குடும்பத்தின் தலைமைப்பொறுப்பு ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்டது.
    தேராகு மரித்த பின்பு நாம் கடவுள் சொன்ன இடத்திற்கு புறப்படுவோம் என்று ஆபிரகாம் தீர்மானிக்கின்றார். இதுவரை கீழ்படிந்தவர் ஆபிரகாம் அல்ல, ஆபிரகாமின் தகப்பன் தேராகு. ஆண்டவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கீழ்படியவில்லை, தன் குமாரன் ஆரான் மரித்ததினால் பயந்து கீழ்படிந்தார் தேராகு.

    ஆண்டவர் சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவர் தனக்கு மாத்திரம் சொன்ன காரியத்தை தன் தகப்பனுக்கு அறிவித்து காலத்தை வீணடித்த ஒரு மனிதனை கர்த்தர் ஏன் தெரிந்கொள்ள வேண்டும். ஆண்டவர் தனக்கு கொடுத்த கட்டளைக்கு கீழ்படியாமல் ஆபிரகாம் தன் வாழ்வில் முப்பது ஆண்டுகளை வீணடித்தார். இப்படிப்பட்ட ஆபிரகாமை விட நல்லவர்கள் வேறு யாரும் அந்நாட்களில் வாழவில்லையா?

    ஆண்டவர் ஏன் ஆபிரகாமை தெரிவு செய்தார்.  ஆபிரகாம் எப்படிப்பட்டவன்.  என்பதை எடுத்த பாகங்கள் மூலமாக அறிந்துகொள்வோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.