Type Here to Get Search Results !

ஆசைகள் | பிரசங்க குறிப்புகள் | Tamil Christian Message | Jesus Sam

தலைப்பு: ஆசைகள்

1 யோவான் 2:18

          உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்.  தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

இச்சை இப்பதத்தை ஆசை என்றும் சொல்லலாம்.  உலகத்தில் அநேக கவர்ச்சிகரமான காரியங்கள் உண்டு.  இவை அனைத்தும் ஒளிந்துபோகக்கூடிய ஒன்று.  உலக ஆசைகளை நாம் வெறுத்து ஆண்டவருடைய சித்தத்தை அறிந்து செயல்படும்போது நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும்.

          பிசாசானவன் நமக்கு ஏற்படுத்துகிற ஆசைகளில் சிலவற்றைக் குறித்து பார்ப்போம்.



1. உலக ஆசை

மத்தேயு 6:33

          முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.  அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்.

உலக ஆசைகளை நாம் வெறுத்துவிட்டு ஆண்டவரைத் தேடுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும். 



தேமா:

1 தீமோத்தேயு 4:10

          ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து,…..

தேமா பவுலோடு இணைந்து ஊழியம் செய்த ஒரு நபர்.  ஊழியத்தைவிட உலகத்தின் மீது ஆசை வைத்ததால், ஊழியத்தை தொடராமல் உலகத்தின் பின்னால் சென்று விட்டான்.

          இந்தக் காலத்திலும் அநேக ஊழியர்கள் வசதி வாய்ப்புகளை தேடியும், ஆடம்பர வாழ்க்கையைத் தேடியுமே ஊழியத்திற்கு வருகிறார்கள்.  சில ஊழியர்களுக்கு இவைகள் கிடைக்கின்றது.  ஆனால் ஆடம்பர வாழ்க்கை கிடைக்காத அநேக ஊழியர்கள், உலகத்தின் மீது ஆசை வைத்து பின்வாங்கிச் சொன்று விடுகின்றனர்.

 

லோத்தின் மனைவி

ஆதியாகமம் 19:26

          அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

          லோத்தின் மனைவி ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், உலகத்தின் மீது ஆசை கொண்டவளாக பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூணாய் மாறுகிறாள்.

          தமிழ் வேதாகமத்தில் உப்புத் தூண் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ஆனால், அது உப்புத் தூண் அல்ல.  அநேகர் அந்த இடத்தில் அந்த உப்புத்தூண் இன்னும் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

          நாம்மில் அநேகர் எரிமலை எப்படி வெடிக்கும் என்பதை தொலைக்காட்சிகளிலோ சமூக ஊடகங்களிலோ பார்த்திருக்கக்கூடும்.  எரிமலை வெடித்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு அந்த அக்கினி குளம்பு பரவ துவங்கும்.

          லோத்தின் காலத்தில் சோதோம் கொமோரா பட்டணத்தில் வானத்திலிருந்து அக்கினியும், கந்தகமும் விழுந்தது.  வானத்திலிருந்து விழுந்த அக்கியியும், கந்தகமும் விழுந்த வேகத்தில் அநேக இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.  எனவேதான், தூதன் லோத்திடம் சீக்கிரமாய் ஓடிச்சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்ற சொன்னார்.

லோத்துவும் அவன் இரண்டு குமாரத்திகளும் ஓடுகிறார்கள்.  ஆனால் லோத்தின் மனைவியோ உலத்தின் மீது ஆசை வைத்தவளாக தான் வசித்த இடமும், சேர்த்து வைத்த செல்வங்களும் அழிந்துகொண்டிருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தாள்.  அவள் திரும்பிப் பார்த்த அந்த நேரத்தில் கொந்தளித்து வந்த அக்கினியும், கந்தகமும் அவளை மூடிப்போட்டது.  அந்த அக்கினியில் அவள் கருகி சாம்பலானாள்.  இதுதான் தமிழ் வேதாகமத்தில் உப்புத்தூண் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

          நாம் உலகத்தின் மீது ஆசை வைத்தவர்களாக இருக்கிறோமா?  இல்லையென்றால் ஆண்டவர் மீது ஆசை வைத்திருக்கிறோமா? என்ற ஆராய்ந்து பார்ப்போம்.

          ஓய்வு நாளன்று ஆண்டவரை ஆராதிக்க ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோமா? இல்லையென்றால், நாம் வேலைக்கு சென்றால், கூலி கிடைக்குமே, ஆலயத்திற்கு செல்வதால் நமக்கு என்ன பயன் இருக்கிறது என்ற நினைக்கிறோமா?

பிலிப்பியர் 3:11

          அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்.  குப்பையுமாக எண்ணுகிறேன்.

          பவுலைப்போல நாம் கிறிஸ்துவின் மீது ஆசை வைத்தவர்களாக, அவருக்காக உலகத்தையும் அதின் இன்பத்தையும் நஷ்டமாக எண்ணும்போது ஆண்டவர் நம்மைக்கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

2. பண ஆசை:

1 தீமோத்தேயு 6:10

          பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.


          பணம் எல்லா தீமைக்கும் வேர் என்று பவுல் கற்றுக்கொடுக்கவில்லை.  பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது என்று பவுல் கூறுகிறார்.  நாம் நம்முடைய குடும்பத்திற்காக, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை சம்பாதிக்கலாம்.  ஆனால், நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்.

         

யூதாஸ்காரியோத்து

அப்போஸ்தலர் 1:18

          அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்.  அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

          யூதாஸ்காரியோத்து இயேசுயோடு இருந்த சீஷர்களில் ஒருவனாக இருந்தாலும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால், நின்மதியை இழந்து தற்கொலை செய்து கொண்டான்.

 

பிலேமோன்:

          பிலேயாம் என்பவர் ஒரு தீர்க்கதரிசி.  இவர் இஸ்ரவேல் நாட்டைச் சார்ந்தவர் அல்ல.  இவரைக் குறித்து நாம் எண்ணாகமம் 22-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

          மோவாபின் ராஜாவாகிய பாலாக் இஸ்ரவேல் ஜனங்களை சபிப்பதற்காக பிலேயாமை அழைக்கிறார்.  முதல் முறை வர மறுத்த பிலேயாம், இரண்டாவது முறை உமக்கு அதிக பணத்தைக் கொடுத்து, உம்மை கணப்படுத்துகிறேன் என்று சொன்னதும், புறப்பட்டுச் சென்று விடுகிறான்.

2 பேதுரு 2:15,16

          15. செம்மையான வழியை விட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்.  அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,

          16. தன்னுடைய அக்கிரத்தினிமித்தம் கடிந்து கொ்ளப்பட்டான்.  பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரியிளுடைய மதிகேட்டைத் தடுத்தது.

          பிலேயாமைப்போல அநேகர் பண ஆசைகளில் விழுந்து கிடக்கிறார்கள்.  நம்முடைய தேசத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சங்கள் தலைவிரித்து ஆடுகிறது.  நாம் எந்த ஒரு வேலையை சுலபமாக செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக லஞ்சம் கொடுத்து தான் அந்த காரியத்தை முடிக்க முடிகிறது.

          இப்படி பண ஆசைகள் நிறைந்த இந்த உலகத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பண ஆசை இல்லாதவர்களாக, ஆண்டவர் எனக்கு கொடுத்திருக்கிற ஊதியம் போதும் என்று வாழும் போது, சிறிய ஊதியமாக இருந்தாலும் அதை ஆண்டவர் ஆசீர்வதித்து நம்மை வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

          எத்தனையோ பணக்காரர்கள் கோடிகோடியாக பணத்தை சம்பாதித்துவிட்டு, நின்மதியைத் தேடி அழைகிறார்கள்.  சரியான உறக்கம் இல்லாமல் வேதனைப்படுகிறார்கள்.  மன அழுத்ததிற்குள்ளாக தள்ளப்படுகிறார்கள்.    பணம் ஒருபோதும் மனிதனுக்கு நின்மதியையும், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுப்பதில்லை.

நீதிமொழிகள் 30:9

          நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும், தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும்.

          நீதிமொழிகளிலே சொல்லப்பட்டள்ளதைப்போல நாம் ஐசுவரியவானாக வேண்டும் என்று ஆசைப்படாமல், ஆண்டவர் மீது ஆசை வைத்தவர்களாக, ஆண்டவரே ஒவ்வொரு நாளும் எனக்குத் தேவையானதை எனக்கு அளந்துகொடும் என்ற அவரிடம் கேட்போம்.

          நமக்கு இன்னது தேவை என அறிந்த தகப்பன் அவர். (மத்தேயு 6:8) அவர் அதினதின் காலத்தில் நம்மை நேர்த்தியாய் வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

          பண ஆசையை நாம் வெறுத்து, கடவுளின் மீது ஆசை வைக்கும்போது அவர் நம்மை செம்மையாய் வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

3. பதவி ஆசை:

          இந்த அநித்தியமான உலகில் அனைத்து துறைகளிலும் பதவி ஆசை காணப்படுகிறது.  ஊழியப்பாதையிலும், பொருளாதாரத்திலும் பதவி ஆசை அனைவரிடமும் காணப்படுகிறது.

 


அப்சலோம்: (2 சாமுவேல் 15-ம் அதிகாரம்)

          தாவீதின் மகன் அப்சலோமிற்கு, தகப்பன் ராஜாவாக இருக்கும்போதே தாவீதை தள்ளிவிட்டு தான் ராஜாவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  அப்சலோமின் பதவி ஆசையால் இளம் வளதிலேயே அப்சலோம் மரித்துப்போனான்.

யோசுவா:

          மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வருகையில், மோசேக்கு உதவி ஊழியனாக இருந்தவர் யோசுவா.

மோசேயை விட யோசுவா ஒரு வேலை திறமைசாலியாக இருந்திருக்கலாம்.  மோசே ஜனங்களை வழிநடத்த ஒவ்வொரு முடிவுகளை எடுத்தபோது, மோசேயை விட சிறந்த ஆலோசனை யோசுவாவிற்கு இருந்திருக்கலாம். யோசுவா தலைமைத்துவத்திற்கு ஆசைப்படவில்லை.  பொறுமையோடு காத்திருந்தார்.  ஒரு ஆண்டுகள், இரண்டு ஆண்டுகள் அல்ல பதினான்கு ஆண்டுகள் மோசேயின் உதவி ஊழியனாக யோசுவா வேலை செய்தார்.

          மோசே மரித்த பின்பு ஆண்டவர் யோசுவாவின் தலைமையின் ஜனங்களை வழிநடத்தினார்.  பதினான்கு ஆண்டுகள் மோசேயின் உதவி ஊழியனாக இருந்த யோசுவா, மோசே மரித்த பின்பு இஸ்ரவேல் ஜனங்களை இருபத்து ஐந்து ஆண்டுகள் வழிநடத்தி கானான் தேசத்தை சுதந்தரிக்கச் செய்தார்.

          யோசுவாவைப்போல நாமும் பதவி ஆசை இல்லாதவர்களாக ஆண்டவர் நமக்கென்று குறிக்கப்பட்ட நாட்கள் வரை அடங்கியிருக்கும்போது ஆண்டவர் ஏற்ற நேரத்திலே நம்மை உயர்த்துவார்.  யோசுவாவை உயர்த்தினவர் நம்மையும் உயர்த்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

லூசிபர் தூதனின் பதவி ஆசை

ஏசாயா 14:12,13,14

          12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

          13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்.  வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

          14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

          அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே என்பது பிரதான தூதனைக் குறிக்கிறது.

          பரலோகத்தில் தூதர்கள் இருக்கிறார்கள்.  தூதர்களில் அநேக பிரிவுகள் உண்டு.   தூதர்கள் எல்லோருக்கும் தலைவனாக ஆண்டவர் ஒரு தூதனை ஏற்படுத்தினார்.  அந்த தூதன் ஆண்டவருக்கு மோலே உயரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  அந்த தூதனுக்கு இருந்த பதவி ஆசையின் நிமித்தமாக ஆண்டவர் அவனை பாதாளத்தில் தள்ளினார்.

          பதவி ஆசை பிடித்த அந்த தூதனுக்காகவே ஆண்டவர் நரகத்தை ஏற்படுத்தினார்.  அந்த பிரதான தூதன் சாத்தானாக நரகத்திற்கு தள்ளப்பட்டான்.  அந்த சாத்தான் நான் மாத்திரம் நரகத்தில் வேதனைப்பட்டால் போதாது என்று, மனிதர்களையும் அந்த நரகத்திற்கு பாத்திரவான்களாக மாற்றுவதற்காக மனிதர்களுக்கு பதவியின் மீதும், பணத்தின் மீதும், உலகத்தின் மீதும் ஆசையை ஏற்படுத்துகிறான்.

          இந்த சாத்தானின் தந்திரங்களுக்கு நாம் விலகி உலக ஆசைகளை வெறுத்து வாழும்போது, இம்மையில் ஆசீர்வாதத்தையும், மறுமையில் ஆண்டவர் நமக்காக ஆயத்தம்பண்ணின நித்திய ஜீவனையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நீதிமொழிகள் 28:20

          உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.

          உலகத்தில் உள்ள பணம், பொருள், பதவி மீது உள்ள ஆசைகளை நாம் வெறுத்து ஆண்டவர் மீது ஆசை வைப்போம். ஆண்டவர் நமக்கு ஆயத்தம் செய்து வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை இம்மையிலும், மறுமையிலும் பெற்ற மகிழ்வோம்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.