Type Here to Get Search Results !

சாம்பல் புதன் லெந்து காலம் என்றால் என்ன? | What is Lent Day's? | Bible Study in Tamil | தவக்காலம் இளையுதிர்காலம் | Bible Sermon Points | Jesus Sam

=============
சாம்பல் புதன்
=============
சாம்பல் புதன் என்பது வேதத்திற்கு புறம்பானது, கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனையோ, லெந்து நாட்களையோ அனுசரிப்பது முற்றிலும் தவறானது என்று அநேகர் நினைக்கிறார்கள்.

லெந்து நாட்களை அனுசரிப்பது தவறானது என்று சிலர் சொல்ல காரணம், லெந்துநாட்களைப்பற்றியும், சாம்பல் புதனைப் பற்றியும் வேதாகமத்தில் நாம் எங்கும் வாசிக்க முடியாது. வேதாகமத்தில் இல்லை என்பதால் நாம் அதை அனுசரிக்க கூடாது என்று அநேகர் போதித்தும் வருகிறார்கள்.

நாம் ஒவ்வொரு வருடமும் நம்முடைய பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். கிறிஸ்தவர்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்க வில்லை. நம்முடைய முன்னோர்கள் பிறந்த நாளை சிறப்பாக அனுசரிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் ஒவ்வொரு வருடரும் நம்முடைய விசுவாசத்தைப் புதுப்பித்துக்கொள்வதற்காக நம்முடைய முன்னோர்கள் காட்டிய முன்மாதிரியே இந்த லெந்து காலங்கள். லெந்து நாட்களில் நாம் வேதத்திற்கு மாறாக எந்த காரியத்தையும் செய்வதில்லை, ஆண்டவருக்குள்ளாக இன்னும் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லையே.


சாம்பல் என்பது துக்கத்தின் அடையாளம். ஆதிகாலத்தில் மனிதர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்த சாம்பலை பூசிக்கொண்டார்கள்.

வேதாகமத்தில் சாம்பல் பயன்படுத்தின சிலர்:
1. தாமார்
    2 சாமுவேல் 13:19

2. யோபு
    யோபு 42:5,6

3. எரேமியா
    சாம்பலில் புரண்டு மனந்திரும்ப அழைப்பு விடுக்கிறார்.
    எரேமியா 6:26

4. மொர்தெகாய்
    எஸ்தர் 4:1

5. நினிவே மக்கள்
    யோனா 3:5,6

6. தானியேல்
    தானியேல் 9:3,4

7. இயேசு கிறிஸ்து
    பாவத்திலிருந்து மனந்திரும்ப சாம்பலில் அமர கற்றுக்கொடுத்தார்.
    மத்தேயு 11:21
    லூக்கா 10:13

சாம்பல்:
    1 இராஜாக்கள் 21:27
    2 நாளாகமம் 20:3
    எஸ்தர் 4:3
    ஏசாயா 58:50
    தானியேல் 9:6

லெந்து காலம்:
கிறிஸ்தவ பாரம்பரியப்படி நாற்பது நாட்கள் லெந்து நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. லெந்து நாட்களின் முடிவில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூறுகிறோம்.

வேதத்தில் வாசித்தால் இயேசு கிறிஸ்து நாற்பது நாட்கள் உபவாசம் இருந்ததற்கும், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதற்கும் இடையே மூன்று ஆண்டுகள் இருக்கின்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன் உபவாசம் இருக்கவில்லை. அதற்காக நாம் லெந்து நாட்களை அனுசரிக்க வில்லை. நாற்பது நாட்கள் நம்மை சரிபடுத்திக்கொள்வதற்காகவும், நம்மை பரிசோதித்து பார்ப்பதற்காகவும் நாம் லெந்து நாட்களை கடைபிடிக்கின்றோம்.

லெந்து காலத்திதை இளையுதிர் காலம் என்றும், வசந்த காலம் என்றும் அழைப்பர்.

லெந்து காலத்தில் ஒரு மரத்தில் உள்ள இளைகள் அனைத்து உதிர்ந்து புதிய இளைகள் தோன்றும். ஒவ்வொரு வருடமும் மரத்தில் உள்ள பழைய கிளைகள் உதிர்த்து, புதிய இளைகள் தோன்றி, மரம் அழகாக காட்சியளிக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நமது உள்ளத்திலும் பழைய பாவக் கறைகள் நீங்கி, நம்மை புதுப்பித்துக்கொள்வதற்காக, நம்மை சீர்படுத்துவதற்காக, அழகுபடுத்துவற்காக நம்முடைய திருச்சபை முன்னோர்கள் ஒவ்வொரு வருஷமும் நாற்பது நாட்களை தெரிவு செய்து அதை அனுசரித்து வந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் லெந்து காலங்கள் எந்த நாட்களில் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் காலாண்டர்: மாசி, பங்குனி, சித்திரை

ஆங்கில காலாண்டர்: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்

எபிரெய காலாண்டர்: சேபாத், ஆதார், நிசான்

வேதாகமத்தில் பழைய வாழ்க்கை முறையிலிருந்து புதிய வாழ்க்கை முறைக்கு (மனிதர்களை நல்வழிப்படுத்த) மனிதர்களை மாற்ற ஆண்டவர் நாற்பது என்ற எண்ணை அதிகம் பயன்படுத்தினார்.

1. நோவாவின் காலத்தில் பாவத்திலும், அக்கிரமத்திலும் வாழ்ந்த மனிதர்களை ஆண்டவர் அழித்து புதிய உலகை உருவாக்குவதற்காக நாற்பது நாட்கள் பூமியில் மழையைக் கட்டளையிட்டார்.
    ஆதியாகமம் 7:2

2. இஸ்ரவேலர்கள் எகிப்தில் நானூற்று முப்பது வருஷம் அடிமைகளாக இருந்தார்கள். அவர்களை மோசேயின் தலைமையில் ஆண்டவர் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் வழிநடத்திக் கூட்டிச் சென்றார். நாற்பது ஆண்டுகளுக்கு பின்பு அடிமைகளாக இருந்த ஜனங்கள் பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்தை சுதந்தரித்தார்கள்.
    உபாகமம் 8:2,4

3. வானந்திரத்தில் பயணப்பட்டு வந்த இஸ்ரவேலர்கள் மோசே மழைக்கு சென்று திரும்பி வராததால் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை செய்து அதை வழிபட துவங்கினார்கள். ஜனங்களின் இந்த அக்கிரமத்தை நீக்கும்படியாக மோசே கர்த்தரிடம் நாற்பது நாட்கள் ஜெபித்தார்.
    யாத்திராகமம் 34:27,28

4. இயேசு தனது முப்பதாவது வயது வரை சாதாரண மனிதனாகவே பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்தார். முப்பதாவது வயதில் இயேசு ஞானஸ்நானம் பெற்று, நாற்பது நாட்கள் உபவாசமிருந்த பின்பே கிறிஸ்துவாக மாறினார்.

முப்பது வயது வரை தன்னை பெற்று வளர்த்த தாயை அம்மா என்று அழைத்த இயேசு நாற்பது நாள் உபவாசத்திற்கு பின்பு கிறிஸ்வின் தன்மை உடையவராக, தன் தாயை ஸ்திரீயே என்று அழைக்கிறார். (யோவான் 2:4)


இயேசு கிறிஸ்து நாற்பது நாள் உபவாசம் இருந்ததின் மூலமாக பிசாசின் கிரியைகளை ஜெயித்தார்.
1. மாம்ச இச்லை (கல்லை – அப்பம்)

2. கண்களின் இச்சை (தேவதூதர்கள் காப்பாற்றுவார்கள்)

3. ஜீவனத்தின் பெருமை (உலகம் முழுவதையும் உனக்கு தருகிறேன்)

வேதாகமத்தில் ஆண்டவர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர, ஒரு புதிய ஆரம்பத்தை துவங்க நாற்பது என்ற எண்ணை பயன்படுத்தினார். இதை வைத்தே ஆதி திருச்சபையின் தலைவர்கள் நம்மை பரிசோதித்து பார்ப்பதற்காக, நம்மை திருத்திக்கொள்வதற்காக நாற்பது நாட்களை நியமித்தார்கள்.


தவக்காலத்தின் வரலாறு:
அப்போஸ்தலர்கள் காலத்திலேயே ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின நாற்பது நாட்கள் உபவாச நாளாக அனுசரிக்கப்பட்டது. ரோமர்களின் அடக்கு முறை காரணமாக இவைகள் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.

கி.பி. 325-ம் ஆண்டு நிநேயா மாமன்றத்தின் மூலமாக காண்ஸ்டன்டைன் காலத்தில் லெந்துகாலம் என்ற தவக்காலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.

ஆதிகாலத்தில் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய நாற்பது நாட்கள் வேதத்தைக் குறித்து போதித்து, உபவாசத்திலும், ஜெபத்திலும் அவர்களை ஊக்கப்படுத்தி, ஈஸ்டர் பண்டிகையன்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

கிறிஸ்து ஞானஸ்நானத்திற்கு பின் நாற்பது நாட்கள் உபவாசித்ததை மையமாக கொண்டு, ஆதி திருச்சபையினர் புதிதாக ஞானஸ்நானம் பெற விரும்பிகிறவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின நாற்பது நாட்கள் வேதத்தைக் குறித்து கற்பித்து, ஜெபத்திலும், உபவாசத்திலும் அவர்களை வழிநடத்தினார்கள்.

கொலை, திருட்டு, விபச்சாரம், வேசித்தனம், பல திருமணம் போன்ற தவறு செய்தவர்கள் திருச்சபையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் திருவிருந்தில் பங்குபெற தடை விதித்திருந்தார்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகள் கர்த்தருடைய பந்தியில் சேர விரும்பினால், அவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின நாற்பது நாட்கள் சாக்கு உடை அணிந்து கொண்டு, சாம்பல் பூசிக்கொண்டு உபாவசத்திலும் ஜெபத்திலும் தரித்திருக்க வேண்டும். இப்படி நாற்பது நாட்கள் இருந்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையன்று திருவிருந்தில் பங்குபெறலாம்.

கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை தவக்காலம் துவங்கும் நாள் ஞாயிறு கிழமையாக இருந்தது. அந்த நாளை குவாட்ராக்கெஸிமா என்று அழைத்தார்கள்.

கி.பி. 601-ல் போப்-கிரகோரி இதை ஈஸ்டர் பண்டிகைக்கு 46 நாளைக்கு முன் வரும் புதன் கிழமைக்கு மாற்றினார். இந்த புதன் கிழமையையே சாம்பல் புதன் என்று அழைக்கிறோம். சாம்பல் புதனில் இருந்து ஈஸ்டர் பண்டிகை (ஞாயிறு) வரை உள்ள எல்லா நாட்களையும் சேர்த்தால் மொத்தம் நாற்பது ஆறு நாட்கள் வரும். இடைப்பட்ட ஞாயிற்று கிழமைகளை கழித்தால் நாற்பது நாட்கள் வரும். இந்த சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் பண்டிகை வரை உள்ள நாட்களையே போப்-கிரகோரி தவக்காலம் அல்லது லெந்து காலமாக அனுசரிக்க தீர்மானம் இயற்றினார்.

குற்றம் செய்தவர்களும், புதிதாக ஞானஸ்நாம் பெற விரும்புவோரும் தவக்காலத்தை அதாவது லெந்து காலத்தை அனுசரித்து வந்தார்கள். கி.பி 601-ல் போப்-கிரிகோரி என்பவர் ரோமர் 3:12,23-ன் படி அனைவரும் இந்த தவக்காலத்தை அனுசரிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.

ரோமர் 3:12,23
    12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை.
    23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

சாம்பல் புதன் எப்படி தீர்மானிக்கப்படுகிறது:
நிசேயா பெருமன்றத்தின் தீர்மானப்படி சந்திரனின் சுழற்சியை வைத்து சாம்பல் புதன் தீர்மானிக்கப்படுகிறது.

இரவும் பகலும் சமமாய் உள்ள மார்ச் 21-ம் தேதிக்கு பின்வரும் முழுநிலவுக்கு அடுத்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாக அனுசரிக்கப்படும். இந்த முழு நிலவு மாறி மாறி வருவதால் ஈஸ்டர் பண்டிகை மாறி மாறி வருகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின நாற்பது ஆறாவது நாள் சாம்பல் புதன் ஆராதனையாகும்.

பெரும்பாலும் பிப்ரவரி 4-ம் தேதியிலிருந்து மார்ச் 10-ம் தேதிக்கு இடைப்பட்ட ஏதோ ஒரு புதன் கிழமை சாம்பல் புதனாக அனுசரிக்கப்படும்.

பெரும்பாலும் மார்ச் 22-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட ஏதாவது ஒரு ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாக அனுசரிக்கப்படும்.

லெந்து காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்:
1. தீர்மானங்களை நினைவு கூற வேண்டும்
1. ஞானஸ்நானம்:
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, இந்த குழந்தையை கர்த்தருக்கு ஏற்ற வழியில் நடத்துவேன் என்ற ஆண்டவர் முன்னிநிலையில் வாக்குறுதி அழித்தோம். அந்த தீர்மானத்தில் நான் நிலைத்திருக்கிறேனா?

2. திடப்படுத்தல்:
திடப்படுத்தலின் போது ஒவ்வொருவரும் இந்த திடப்படுத்தலின் மூலமாக கர்த்தருக்கு சாட்சியாய் நான் வாழ்வேன் என்றும், திருச்சபைக்கும், சமுதாயத்திற்கும், உண்மையுள்ளவனாக இருப்பேன் என்றும், திருச்சபையின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் தீர்மானம் செய்தோம். அந்த தீர்மானத்தில் நாம் உருதியாய் இருக்கிறோமா?

3. திருமணம்:
திருமணத்தின் போது ஒவ்வொரு தம்பதியினரும், என் வாழ்நாளின் முடிவு வரை உன்னை நேசிப்பேன், அன்பு காட்டுவேன், பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்தோம். அந்த தீர்மானத்தில் நாம் உறுதியாய் இருக்கிறோமா?

ஆண்டவர் நமக்கு கிருபையாய் கொடுத்த இந்த லெந்து நாட்களில் நம்மை நாம் சற்று பரிசோதித்து பார்ப்போம். ஆண்டவருடைய சமுகத்திற்கு முன்பாக நாம் எடுத்த தீர்மானங்களில், அதாவது உறுதிமொழிகளில் நாம் சரியாய் நடக்கிறோமா?

2. லெந்து காலத்தின் மூன்று தூண்கள்:
மத்தேயு 6:18
    அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

1. ஜெபம்:
நாம் விசுவாச வாழ்வில் இன்னும் அதிகமதிகமாய் வளர ஜெபம் மிகவும் அவசியம். என்னுடைய ஜெபவாழ்க்கையில் நான் சரியாய் இருக்கிறேனா?

2. உபவாசம்:
கடவுளுக்கு முன்பாக என்னை நான் வெறுமையாக்கி, இந்த தவக்காலத்தில் நான் கிறிஸ்துவுக்காக எதையெல்லாம் இழக்கின்றேனோ அதை காணிக்கையாக படைக்க வேண்டும்.

எ.கா: இந்த லெந்து நாட்களில் நான் மாமிசம் சாப்பிடாமல் இருக்க தீர்மானித்திருக்கிறேன் என்றால், நான் வாரம் ஒரு முறை மாமிசம் சாப்பிடும் நபராக இருந்தால், நான் சாப்பிடாமல் இருந்த அந்த தொகையை காணிக்கையாக படைக்க வேண்டும்.

மத்தேயு 6:16
    நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள். அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்கச் சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 7:5
    உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்

3. தானதர்மம்
இந்த தவக்காலத்திலாவது நம்மால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நம்மை விட வசதி வாய்ப்பில் குறைந்தவர்கள் இவ்வுலகில் ஏறாழம் ஏறாழம். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை நாம் செய்ய வேண்டும்.

அன்பு இல்லாமல் ஒருவருக்கு நாம் உதவி செய்ய முடியும். ஆனால், கொடுக்காமல் உதவி செய்யாமல் ஒருவர் மீது நாம் அன்பு செலுத்த முடியாது. நம்மால் இயன்றதை இந்த தவக்காலத்தில் மற்றவருக்கு கொடுத்து, அவர்கள்மீது அன்பு செலுத்துவோம்.

1 யோவான் 3:17
    ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

சாம்பல் புதனைப் பற்றியும், லெந்துகாலங்களைப் பற்றியும் அறந்துகொண்ட நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, நம்மை சரிசெய்துகொள்வோம். இந்த தவக்காலங்களில் நம்மை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய பிள்ளையாய் மாறுவோம். நம்முடைய குற்றங்கள் குறைகளை அவருடைய சமுகத்தில் அறிக்கையிடுவோம். ஆண்டவர் நம்முடைய வாழ்வின் தேவைகளை சந்தித்து ஒரு புதிய மாற்றத்தை, புதிய நன்மைகளை இந்த தவக்காலங்கள் மூலமாக நமக்கு தந்து நம்மை வழிநடத்துவார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.