தலைப்பு:
இழந்ததைப் பெற்றுக்கொண்ட இளைய குமாரன்
இயேசு கிறிஸ்து உவமையாக அநேக காரியங்களை
மக்களோடு பேசினார். அப்படி பேசிய உவமைகளில்
ஒன்றுதான் இந்த லூக்கா 15:11-32 வரை உள்ள வசனங்களில் உள்ள
உவமை. இந்த உவமையைக் குறித்து இந்த
தொகுப்பில் தியானிப்போம்.
உவமை என்பது ஒரு காரியத்தை புரிந்துகொள்வதற்காக வேறு ஒரு
உதாரணத்தை சுட்டிக்காட்டுவது.
இந்த உவமையை அநேகர் கெட்ட குமாரனின் உவமை என்று
அழைப்பவர். இவ்வுவமையை மந்திருப்பிய
மைந்தன் அல்லது இளைய குமாரனின் உவமை என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதாக
இருக்கும்.
ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் இளைய மகன் தன் தகப்பனிடம் இருந்து ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை வாங்கிக்கொண்டு தூரதேசம் பிரயாணம் போகிறான். மூத்தவன் தகப்பனோடு வாழ்ந்து வருகிறான். இளையவன் எல்லாவற்றையும் துன்மார்க்கமாய் செலவழித்தான். அவன் செலவழித்து முடித்த போது, அந்த தேசத்தில் பஞ்சம் வந்தது. பசியினால் அவன் மிகவும் வேதனைப்பட்டான். பன்றியின் உணவாகிய தவிடும் அவனுக்கு கிடைக்காதிருந்தது. அவன் தன் தகப்பனிடம் கூலிக்கு வேலை செய்கிறவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களே, எனக்கு ஒருவேலை உணவு கிடைக்கவில்லையே என்று நினைத்து, தன் தகப்பனிடம் கூலிக்காரனாக வேலைசெய்வோம் என்று எண்ணி, தன் தகப்பனை சந்திக்க வருகிறான். தகப்பன் மகனை தூரத்திலே வருகிறதைப் பார்த்து ஓடிச்சென்று அவனை கட்டி அனைக்கிறார். மாத்திரமல்ல நான்கு விதமான ஆசீர்வாதங்களை அவனுக்குக் கொடுக்கிறார். அந்த நான்கு விதமான ஆசீர்வாதங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திப்போம்.
தகப்பன் என்பவர் நம்முடைய பரம பிதாவைக் குறிக்கிறது. குமாரன் என்பது அவருடைய பிள்ளைகளாகிய நம்
ஒவ்வொருவரையும் குறிக்கிறது.
1. வஸ்திரம் (மேன்மை)
லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன்
ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக்
கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப்
பாதரட்சைகளையும் போடுங்கள்.
குமாரன் இழந்த வஸ்திரத்தை தகப்பன் அவனுக்குக் கொடுத்தான். வஸ்திரம் என்பதை மேன்மையைக் குறிக்கிறது.
யோசேப்பு
பழைய ஏற்பாட்டில் யோசேப்பு என்பவனுக்கு அவனுடைய தகப்பன்
யாக்கோபு உலகத்தின் பலவருணமான வஸ்திரத்தைக் கொடுத்தார். யாக்கோபுக்கு பன்னிரண்டு ஆண் பிள்ளைகள்
இருந்தார்கள். அந்த பன்னிரண்டு
குமாரர்களில் யோசேப்பை மேன்மையான காட்ட வேண்டும் என்பதற்காகவே யாக்கோபு பலவருணமான
அங்கியை அவனுக்கு கொடுத்தார்.
அவனுடைய சகோதரர்கள் அவனை இஸ்மவேலர்களிடத்தில் இருபது வெள்ளிக்காசுக்கு
அடிமையாக விற்றுப்போட்டார்கள். யோசேப்பிடம்
இருந்த பலவருண வஸ்திரம் பிடுங்கப்பட்டு, அடிமையின்
வஸ்திரம் கொடுக்கப்பட்டது. (ஆதியாகமம் 37:28)
இஸ்மவேலர்கள் யோசேப்பை எகிப்து தேசத்திலுள்ள
பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரிடம் விற்றுப்போட்டார்கள். போத்திபாரின் வீட்டில் யோசேப்பிற்கு வேலைக்காரன் வஸ்திரம் கொடுக்கப்பட்டது. (ஆதியாகமம்
37:36)
போத்திபாரின் வீட்டில் இருந்த யோசேப்பு போத்திபாரின்
மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்கு கைதியின் வஸ்திரம் கொடுக்கப்பட்டது.
கைதியாய் இருந்த யோசேப்பை கர்த்தர் நினைத்தருளினார். யோசேப்பிற்கு பார்வோனின் கண்களில் கிருபை கிடைக்கும்படி
செய்தார். பார்வோன் மன்னனின் மூலமாக முழு எகிப்து
தேசத்திற்கும் அதிகாரி என்ற மேன்மையான வஸ்திரத்தை
கர்த்தர் கொடுத்தார். (ஆதியாகமம் 41:44)
உலக மனிதனாகிய யோசேப்பின் தகப்பன் யாக்கோபு
யோசேப்பிற்கு உடுத்தின வஸ்திரத்தை உலகம் அவனிடமிருந்து பரித்துக்கொண்டது. பலவிதமான வஸ்திரகங்களை அவனுக்கு கொடுத்தது. முடிவில் கர்த்தர் கொடுத்த அந்த மேன்மையான வஸ்திரத்தை
யோசேப்பிடமிருந்து யாராலும் பரிக்க முடியவில்லை.
நம்முடைய வாழ்விலும் கூட பணத்தினால், செல்வாக்கினால்,
பதவியினால் நாம் சம்பாதித்த அனைத்து பொருட்களும், மேன்மையும் ஒரு நாள் நம்மை விட்டு
சென்றுவிடும். இந்த இளைய குமாரனைப்போல நாம்
ஆண்டவரிடம் திரும்பி வரும்போது அவர் தரும் மேன்மையான வஸ்திரத்தை யாராலும் பரிக்க முடியாது.
2. மோதிரம்
(அதிகாரம்)
லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன்
ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி,
இவன் கைக்கு மோதிரத்தையும்
கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
இரண்டாவதாக மனம் திரும்பிய குமாரனுக்கு தகப்பன் மோதிரத்தை கொடுக்கிறார். மோதிரம் என்பது அதிகாரத்தைக் குறிக்கிறது. மகன் என்ற அதிகாரத்தை இழந்த இளைய குமாரனுக்கு இவன் என்னுடைய குமாரன் என்ற அதிகாரத்தைக் தகப்பன் கொடுத்தார்.
யோவான் 1:12
அவருடைய நாமத்தின்மேல்
விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு
அதிகாரம் கொடுத்தார்.
உலகத்தில் என்னை விசுவாசிக்கிறவர்கள் என்னுடைய
பிள்ளைகள் என்று சொல்லுகிற ஒரு தெய்வம் நம்முடைய அருள்நாதர் இயேசு கிறிஸ்து மட்டுமே.
நாம் அவரிடம் திரும்பி வரும்போது அவருடைய பிள்ளை என்ற மேலான அதிகாரத்தை ஆண்டவர் நமக்குத்
தருகிறார்.
மொர்தெகாய்
எஸ்தர் சரித்திரத்தில் வாசிக்கிறோம், ஆமான் என்னும்
பிரதானிகளின் தலைவன் ஒருவன், மக்களை
சரிசெய்யப் போவதாக கூறி, ராஜாவை ஏமாற்றி, லஞ்சம் கொடுத்து, ராஜாவின் மோதிரத்தை
ராஜாவிடமிருந்து வாங்குகிறான்.
ராஜாவின் மோதிரம் ஆமானின் கைக்கு கிடைத்ததும், ராஜாவின் முழு
அதிகாரமும் ஆமானுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆமான் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, முழு யூத ஜனங்களையும் அழிக்க
சதித்திட்டம் தீட்டுகிறான். (எஸ்தர் 3:13)
எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் ஜெபத்தினாலும், யூத ஜனங்களின்
ஜெபத்தினாலும் அந்த ஆமானின் சதித்திட்டம் மாறுதலாய் முடிந்தது. ஆமானும் அவன் குடும்பமும் கொலை செய்யப்பட்டார்கள்.
(எஸ்தர் 7:10) (எஸ்தர் 9:13)
ராஜா ஆமானுக்கு கொடுத்த மோதிரத்தை, மொர்தெகாய்க்கு கொடுக்கப்படுகிறது. அதாவது முழு தேசத்தின் அதிகாரமும் யூதனாகிய மொர்தெகாய்க்கு
கொடுக்கப்படுகிறது. (எஸ்தர் 8:2)
நாமும்கூட இளைய குமாரனைப்போல நம்முடைய குற்றங்களை
உணர்ந்தவர்களாய், ஆண்டவரைத் தேடி வரும்போது, ஆண்டவர் நமக்கு மோதிரத்தை அதாவது அதிகாரத்தை
தருகிறார்.
லூக்கா 10:19
இதோ, சர்ப்பங்களையும்
தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல
வல்லமையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளையாய்
மாறும் போது ஆண்டவர், சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் நமக்கு கொடுக்கிறார்.
நாம் சாத்தானையும், அவனுடைய கிரியைகளையும்
மேற்கொள்ள வேண்டுமானால் நாம் அவருடைய பிள்ளைகளாய் மாற வேண்டும்.
எண்ணாகமம் 23:23 அ
யாக்கோபுக்கு
விரோதமான மந்திரவாதம் இல்லை,
இஸ்ரவேலுக்க விரோமான குறிசொல்லுதலும்
இல்லை.
நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கும்போது
நாம் எந்த ஒரு மந்திர, மாந்திரிகத்திற்கும் பயப்படவேண்டியதில்லை. நமக்கு விரோதமாக எழும்புகிற எல்லா பிசாசின் பிரியைகளையும்
அவர் அழிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
3. ஆகாரம்
(தேவையை சந்தித்தார்)
லூக்கா 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
மூன்றாவதாக தகப்பன் இளைய மகனுக்கு ஆகாரம்
கொடுத்தார். பசியினால் வந்த குமாரனுக்கு திருப்தியான உணவைக் கொடுக்கிறார். தேவையை சந்திக்கிறார்.
நாமும் அவருடைய சமுகத்தில் வந்து நம்மை அர்ப்பணிக்கம்போது
நம்முடைய தேவையையும் அவர் சந்திக்க வல்மையுள்ளவராய் இருக்கிறார். நமக்கு இன்னது தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருடைய சமுகத்திற்கு வரும்போது அவர் நம்மை
வழிநடத்தி, நம்முடைய தேவைகளை சந்திக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
4. பாதரட்சை (தேவ சுவிசேஷம்)
லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன்
ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு
உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப்
பாதரட்சைகளையும் போடுங்கள்.
நான்காவதாக இளைய குமாரனுக்கு தகப்பன் பாதரட்சையைக்
கொடுக்கிறார். பாதரட்சை என்பது சுவிசேஷம் அறிவித்தலைக்
குறிக்கிறது.
மோசே
யாத்திராகமம் 3:4,5
4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர்
கண்டார். முட்டிசெடியின் நடுவிலிருந்து
தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
5.
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக.
உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி
என்றார்.
ஆண்டவர் மோசேயின் பாதரட்சைகளை கழற்றிப்போடக் சொல்லுகிறார். அவனுக்கு புதிய பாதரட்சையைக்
கொடுக்கிறார். அதாவது சுவிசேஷம் என்னும்
புதிய பாதரட்சையைக் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் நானூற்று முப்பது ஆண்டுகள்
அடிமைகளாக வாழ்ந்ததால், அவர்களுடைய சொந்த தெய்வத்தை மறந்துவிட்டு, எகிப்திய
தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.
எகிப்தியர்கள் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு தெய்வங்களை
வைத்திருந்தார்கள். கால்நடைகளுக்கு ஒரு
தெய்வம், விவசாயத்திற்கு ஒரு தெய்வம், பிரயாணத்திற்கு ஒரு தெய்வம், நோய்கள் குணமாக
ஒரு தெய்வம் என பல தெய்வங்களை எகிப்தியர் வணங்கினார்கள். எகிப்தியர் வணங்கின அத்துணை தெய்வங்களையும்
எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களும் வணங்கினார்கள்.
கால்நடைகள் நன்றாக வளர, விவசாயம் ஆசீர்வதிக்கப்பட, பிரயாணங்கள்
சரியாய் முடிய, வியாதிகள் சுகமடைய என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு எகிப்திய
கடவுள்களை இஸ்ரவேலர்கள் வணங்கி வந்தார்கள்.
மோசே மலைக்கு சென்று நாற்பது நாட்களாகியும் மோசே திரும்பிவராததால்,
அவர்கள் மோசே மரித்துப்போனார் என்று எண்ணி, அவர்கள் எகிப்திலே பிரயாணத்திற்காக
வணங்கி வந்த பொன் கன்றுக்குட்டியை செய்து வணங்க ஆரம்பித்தார்கள். இந்த பொன்கன்றுக்குட்டி நம்மை கானான்
தேசத்திற்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பினார்கள்.
இப்படி எகிப்திய தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிய
இஸ்ரவேலர்கள், தாங்கள் அடிமைத்தனத்தில் விடுபட வேண்டும் என்பதற்காக மாத்திரம்
ஆபிரகாமின் கடவுளே, ஈசாக்கின் கடவுளே, யாக்கோபின் கடவுளே என்று வணங்குவார்கள்.
இப்படி எகிப்திய கடவுள்களை வணங்கிக்கொண்டிருந்தவர்களை இரட்சிக்க
வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தை மோசேக்கு
கொடுத்தார்.
ஏசாயா 52:7
சமாதானத்தைக் கூறி,
நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம்
பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலையின்மேல்
எவ்வளவு அழகாயிருக்கிறது.
நாமும்கூட ஆண்டவரிடம் திரும்பி வரும்போது, சுவிசேஷம் என்னும்
பாதரட்சையை ஆண்டவர் நமக்குக் கொடுக்கிறார்.
சுவிசேஷம் அறிவித்தல் என்பது நம்மேல் விழுந்த கடமை. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கட்டாயம்
கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்த நான்கு ஆசீர்வாதங்களை நாம் பெறவேண்டுமானால்,
நாம் இளைய குமாரனைப்போல ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும்.
மூத்த மகன் தகப்பனோடு கூட இருந்தான். ஆனால், அவனுக்கு வஸ்திரம், மோதிரம், ஆகாரம், பாதரட்சை
கொடுக்கப்படவில்லை. இந்த மூத்த குமானைப்போலவே
அநேகர் இன்னும் பாரம்பரிய கிறிஸ்தவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
மூத்தமகன் தகப்பனுடைய வீட்டிலேயே வாழ்ந்தான்.
ஆனால் அவனுக்கு இந்த நான்கு ஆசீர்வாதத்தில் எந்த ஒரு ஆசீர்வாதமும் கிடைக்கவில்லை. அவன் வீட்டிற்குள் வந்ததாகவும் வேதத்தில் எழுதப்படவில்லை.
நாமும் பாரம்பரிய கிறிஸ்தவராக இருக்கிறோம்,
கிறிஸ்தவ பெயர் வைத்திருக்கிறோம் என்பதற்காக நம்மை ஆண்டவர் ஆசீர்வதிக்கமாட்டார், பரலோகம்
அழைத்துச் செல்லமாட்டார். அவருடைய பிள்ளையாய்
நாம் மனம்திரும்பி வரும்போதே அவர் நம்மை ஆசீர்வதித்து மேன்மையையும், அதிகாரத்தையும்
தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
இளைய மகனைப்போல மனந்திரும்பி கர்த்தருடைய
சமுகத்திற்கு வரும்வோம், அவர் தரும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்வோம்.
கடவுள் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.