Type Here to Get Search Results !

குருத்தோலை ஞாயிறு வரலாறு | History of Palm Sunday | Gospel Sermon Tamil | Jesus Sam

===========
குருத்தோலை ஞாயிறு
============
இயேசுவானவர் சிலுவையில் அறையப்படுவற்கு, ஒரு வாரத்திற்கு முன் வாரத்தின் முதல் நாளில் கழுதை பவனியாக எருசலேமிற்கு சென்றது முதல், சிலுவையில் மரிக்கும் வரை உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறித்து இந்த தொகுப்பில் நாம் தியானிக்கலாம்.


நான் கிறிஸ்தவனாய் இருக்கிறேன். சிறு வயது முதல் ஆலயத்திற்கு வருகிறேன் இது எனக்கு தெரியாதா? என்று ஒருவேலை நீங்கள் யோசிக்கலாம். இந்த ஒருவாரம் என்ன நடந்தது, அதன் பின்னனி சத்தியம் என்ன என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

இயேசு கிறிஸ்து ஏன் கழுதையின் மேல் பயணம் செய்தார்? இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கழுதை எப்படிப்பட்ட வாகனம்? என்ற உண்மையான அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், நாம் நமது கற்பனைக்கு ஏற்ற விதத்தில் அவற்றை புரிந்துகொள்வோம்.

இயேசு கிறிஸ்து ஏன் கழுதையில் பயணம் செய்தார் என்ற உண்மையான காரணம் நம்மில் அநேகருக்கு தெரிந்திருப்பதில்லை.

இயேசு ஏன் கழுதையின் மேல் பயணம் செய்தார் என்ற உண்மையை அறிந்துகொள்ளாத நாம், கழுதையைப் பற்றி நமக்கு என்ன தெரியுமோ? அதை நம் கற்பனையில் கொண்டுவந்து, அதுதான் உண்மை என்று நம்புகிறோம்.

பொதுவாக இராஜாக்கள் குதிரையில் வருவார்கள். ஆனால் இயேசு கழுதையிலே வந்தார். அப்படியானால் இயேசு தாழ்மையாக வந்தார் என்று நாமே கற்பனை செய்து கொள்வோம்.

உண்மையில் அக்காலத்தில் வீரர்களும், நல்ல சரீர பெலம் கொண்டவர்களும், வேகமாய் பிரயாணம் செய்ய விரும்புகிறவர்களுமே குதிரையை பயன்படுத்தினார்கள்.

அக்காலத்தைய Racing Car தான் குதிரை. ஆனால் Luxury Car என்பது கழுதை. அக்காலத்தில் யாரேனும் கழுதையில் பிரயாணப்படுவார்களானால், அவர்கள் சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்களும், பெரிய வசதியுள்ளவர்களுமாய் தான் இருப்பார்கள்.

சீமானாய் இருந்த ஆபிரகாம் கழுதையைப் பயன்படுத்தினார் என்றும், தாவீது ராஜா சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் செய்யும்போது, சாலொமோனை கழுதையிலே ஏற்றினார் என்றும் வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

கழுதைகளிலே வர்கங்கள் உண்டு. பொதி மூட்டைகளை சுமப்பதற்கு, பாரமான பொருட்களை சுமப்பதற்கும் கழுதைகள் இருந்தன. ஆனால் இயேசுவானவர் ஏறிச்சென்றது அந்த கழுதை அல்ல.

தமிழில் நாம் வேதத்தை படிக்கும்போது, அங்கே எந்த கழுதையைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. எபிரெய கலாச்சாரம் தெரிந்தவர்களுக்குத் தான், எந்த வகையான கழுதையில் இயேசுவானவர் பயணம் செய்தார் என்பது புரியும்.

ஒரு ஏழை குடிமகனுக்கு கார் என்றால், எல்லாமே கார்தான். கார் என்றால் நான்கு நபர்கள் சந்தோஷமாக பயணம் செய்யலாம் என்பது தான் அவருக்குத் தெரியும்.

ஆனால் பணக்காரர்களுக்குத் தான், அந்த கார் எந்த வகையான கார், அதில் என்ன என்ன வசதிகள் உண்டு, கார்களில் எத்தனை வர்க்கங்கள் உண்டு போன்ற அனைத்து தகவல்களும் ரெியும். (எ.கா Ladies Car, Youth Car, Sprits Car, Family Car)


இயேசு ஏன் கழுதையில் பயணம் செய்தார்? அடுத்த ஒருவாரம் அவருக்கு என்ன நடந்தது என்பதைக் குறித்த உண்மையான சத்தியத்தை குறித்து விளக்கமாக அறிந்துகொள்வோம்.

இயேசு கிறிஸ்து எங்களுக்காக பாடுபட்டார், இரத்தம் சிந்தினார்? என்று எல்லோருக்கும் தெரியும். கெட்சமனே தோட்டத்தில் வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் வெளியேறியபோதுதான் இயேசு கிறிஸ்து பாடுபட ஆரம்பித்தார் என்று நாம் நினைப்பதுண்டு.

இயேசுவைக் கைது செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே அவர் எவ்வளவு பாடுபட்டார். எவ்வளவு மனவுலைச்சளுக்குள்ளானார் என்பதைக் குறித்து நாம் அறிந்திருப்பதில்லை.

பஸ்கா பண்டிகை:
பஸ்கா பண்டிகை என்பது இஸ்ரவேலர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை. வருஷத்தின் முதலாவது பண்டிகை. பஸ்கா பண்டிகையை இஸ்ரவேலர்கள் ஓய்வு நாளில் தான் அனுசரிப்பார்கள். இந்த பண்டிகையின் நாட்களில் உலகமெங்கும் சிதறியிருக்கின்ற யூதர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு வருவார்கள். எப்போது வருவார்கள் என்றால், பஸ்கா பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னமே வந்துவிடுவார்கள்.

இயேசுவானவர் கழுதை குட்டியில் ஏறி எருசலேமிற்கு வந்த நாள் வாரத்தின் முதல் நாள். அதாவது ஞாயிற்றுக் கிழமை. அதற்கு முந்தின நாள் ஓய்வு நாள் [இஸ்ரவேலர்கள் ஏழாம் நாள் (சனி) ஓய்வு நாளாக அனுசரிப்பார்கள்].

இஸ்ரவேலர்கள் ஓய்வு நாளில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகமாக பிரயாணிக்க மாட்டார்கள். அப்படியானால், பஸ்கா பண்டிகைக்கு முந்தின ஓய்வு நாளுக்கு முன்னமே, உலகமெங்கும் சிதறியிருக்கின்ற யூதர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள நகர் புறங்களுக்கு வந்துவிடுவார்கள்.

இப்படி வருபவர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளில் தங்குவார்கள். அல்லது வாடகை வீடுகளில் தங்குவார்கள். அல்லது கூடாரங்களைக் கொண்டு வந்து, வெளியே கூடாரங்களை அடித்து தங்குவார்கள்.

வெள்ளிக்கிழமை மாலைக்குள் எல்லோரும் எருசலேமின் புறநகர் பகுதிக்கு வந்துவிடுவார்கள். மறுநாள் ஓய்வு நாள். ஓய்வுநாளில் அவர்கள் பிரயாணப்பட மாட்டார்கள்.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதல் நாள் ஞாயிறு அன்று புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு, மிகவும் சந்தோஷமாக எல்லோரும் எருசலேமிற்குள் நுழைவார்கள்.

மேல வாத்தியங்கள் வாசித்துக்கொண்டு ஒரு கூட்டத்தார் வருவார்கள். சிலர் பாடல் பாடிக்கொண்டு வருவார்கள். எருசலேம் நகரமே ஒரு விழாக்கோலம் பூண்டிருக்கும். அந்த நேரத்தில் தான் இயேசுவானவர் கழுதையின் மேல் பவனியாக வந்தார்.

பஸ்கா பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயாவில் இருந்தார்கள். கலிலேயாவிலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை தான் எரிகோவிற்கு வந்தார்கள். மறுநாள் ஓய்வு நாள். அடுத்த நாள் வாரத்தின் முதல் நாள்.

ஓய்வு நாள் மாலையில் இயேசுவானவர் ஒரு திட்டம் போடுகிறார். சரியாக வெள்ளிக் கிழமை மாலை 03:00 மணிக்கு இயேசுவின் உயிர் பிரிய வேண்டும். இயேசுவானவர் தன்னுடைய மரணம் சரியான நேரத்தில், சரியான விதத்தில் இருக்க வேண்டும் என மிகவும் திட்டமிட்டார்.

தான் ஒரு குற்றவாளியாக மரிக்கப்போவதில்லை, பஸ்கா ஆடாக மரிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மனிதரின் பாவங்களுக்காகவும் மரிக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரியும்.

நம்முடைய இந்தியர்களின் கலாச்சாரப்படி ஒரு நாளின் துவக்கம் என்பது நள்ளிரவு 12:00 மணி. ஆனால் யூதர்களின் ஒரு நாள் துவக்கம் என்பது மாலை 06:00 மணி. இந்தியாவில் நள்ளிரவு 12:00 மணிக்கு ஒரு நாள் துவங்குகிறது என்றால், நம்முடைய ஒரு நாளின் முதல் உணவு என்பது காலை உணவு. ஆனால் இஸ்ரவேலர்களில் ஒரு நாளின் முதல் உணவு என்பது இரவு உணவு.

இஸ்ரவேலர்களின் ஓய்வு நாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி வரை. அப்படியானால் பஸ்கா பண்டிகை துவங்கும் நேரம் வெள்ளிகிழமை மாலை 06:00 மணி.

இஸ்ரவேலர்கள் பஸ்கா பண்டிகை அன்று உண்ணும் முதல் உணவு வெள்ளிக்கிழமை இரவு உணவு. இரவு உணவு மாலை 07:00 மணிக்கெல்லாம் அவர்கள் சாப்பிடுவார்கள். அப்படியானால், வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்கெல்லாம் அவர்கள் பஸ்கா ஆட்டை அடிக்க வேண்டும்.

பஸ்கா ஆடானது வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்கெல்லாம் அடிக்கப்படும். ஆட்டின் கடைசி சொட்டு இரத்தமும் (முழுவதும்) வெளியேறிய பின்பே, அதை சமைத்து புசிப்பார்கள். (யூதர்கள் இரத்தத்தை சாப்பிட மாட்டார்கள்)

இயேசுவானவர் பஸ்கா ஆடாக மரிக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்கு தனது சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி அவர் மரிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் நாட்களில் எத்தனையோ விதமான மரண தண்டனைகள் இருந்தன. எல்லா மரண தண்டனையிலும், குற்றவாளியின் இரத்தம் முழுவதும் வெளியேறி அவர் மரிக்க மாட்டார்.

சிலுவை மரத்திலே ஒருவர் தூக்கப்படுவாரானால், அவரின் இரத்தம் முழுவதும் வெளியேறி அவர் மரிப்பார். மற்ற மரண தண்டனைகளில் இரத்தம் முழுவதும் சரீரத்திலிருந்து வெளியேறுவதில்லை.

கழுத்தை வெட்டுதல், கல்லெறிந்தல், போர் வீரன் வாழால் குத்துதல், அடித்து கொலை செய்தல் போன்ற பல விதமான மரண தண்டனைகள் அந்த நாட்களில் நடைமுறையில் இருந்தது. இவ்விதமாய் ஒருவர் மரிப்பாரானால், அவரின் சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி அவர் மரிப்பதில்லை.

இயேசுவானவர் வரும் வெள்ளிக்கிழமை மாலை மரிக்க வேண்டும், முழு இரத்தமும் தரையிலே சிந்தி மரிக்க வேண்டும், அப்படியானால் சிலுவை மரத்தில் தான் மரிக்க வேண்டும்.

சிலுவை மரத்தில் ஏற்றி மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் அந்த நாட்களில் ரோமர்களுக்கு மாத்திரமே இருந்தது. அப்படியானால், ரோமர்கள் தான் இயேசுவுக்கு மரணதண்டனை நியமிக்க வேண்டும்.

ஆனால் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறவர்களும், கைது செய்கிறவர்களும், மரண தண்டனைக்கு உட்படுத்துகிறவர்களும் யூதர்களாக இருக்க வேண்டும்.

யூதர்கள் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமானால், யூதர்கள் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கம் அளவிற்கு இயேசுவானவர் அவர்களை தூண்ட வேண்டும்.

இது பஸ்கா வாரமாய் இருக்கிறபடியினால், யாரையும் மரண ஆக்கினைக்குட்படுத்த யூதர்கள் விரும்ப மாட்டார்கள். இயேசுவானவர் எவ்வளவு அதிகமாய் யூதர்களுக்கு விரோதமாய் செயல்பட்டாலும், பஸ்கா பண்டிகையை முடித்துவிட்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம் என்று தான் யூதர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால், யூதர்களுக்கு பஸ்கா பண்டிகை என்பது அவ்வளவு முக்கியமான பண்டிகை.

இயேசுவானவர் என்னதான் குழப்பம் விலைவித்தாலும், பஸ்கா பண்டிகைக்கு பின்பு, அவரை கொலை செய்ய யூதர்கள் தீர்மானித்துவிட்டால், இயேசுவானவர் பஸ்கா ஆடாக மரிக்க முடியாது.

யூதர்களின் முக்கிய பண்டிகையான பஸ்கா பண்டிகை இருக்க, பண்டிகையை ஒதுக்கிவைத்துவிட்டு யூதர்கள் இயேசுவை கொலைசெய்ய வகை தேட வேண்டும். யூதர்கள் அவரை கொலை செய்ய நினைத்தாலும், ரோமர்களின் மரண தண்டனையாகிய சிலுவை மரத்தில் தான் இயேசுவானவர் கொலை செய்யப்பட வேண்டும். அதுவுமல்லாமல், வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்குள்ளாக இயேசுவானவர் மரிக்க வேண்டும். இவைகள் எல்லாம் சரியாக நடைபெறவேண்டுமானால், என்னென்ன காரியங்களை செய்ய வேண்டும், எப்படி யூதர்களை தூண்ட வேண்டும்  என்று இயேசுவானவர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும்.

இவையனைத்தும் சரியாக நேர்த்தியாக நடைபெற வேண்டுமானால், பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர், சதுசேயர் இவர்கள் அனைவரும், பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதை விட, இயேசுவை கொலை செய்வது முக்கியமானது என்று யோசிக்கும் அளவிற்கு இயேசுவானவர் நடந்துகொள்ள வேண்டும்.

யூதர்கள் முக்கியமாக அனுசரிக்கும் பண்டிகைகள் மொத்தம் ஏழு பண்டிகைகள். இவைகளில் நான்கு பண்டிகைகள் தொடர்ந்து வரும் பண்டிகைகள். முதலாவது ஓய்வு நாளில் பஸ்கா பண்டிகை. மறுநாள் வாரத்தின் முதல் நாளில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை. அதற்கு அடுத்த நாள் அசைவாட்டும் பண்டிகை. பஸ்கா பண்டிகையிலிருந்து ஐம்பதாவது நாள் அறுவடை பண்டிகை. இந்த நான்கு பிரதான பண்டிகைகளும் சிறப்பான நடைபெற வேண்டுமானால், பஸ்கா பண்டிகை சிறப்பாக நடைபெற வேண்டும். (முதல் கோணல் முற்றிலும் கோணல்)

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பஸ்கா பண்டிகையை விட்டுவிட்டு, இந்த யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார்களா? நிச்சயமாக இல்லை.

ஆனால் யூதர்கள் இவையனைத்தையும் மறந்து, இயேசுவை கொலை செய்துவிட்டு, நாம் பஸ்காவை அனுசரிப்போம் என்று நினைக்கும் அளவிற்கு இயேசுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இவைகளை மனதில் கொண்டவராகத் தான் இயேசுவானவர் தனது சீஷர்கள் இருவரை அழைத்து எதிரே இருக்கிற கிராமத்திற்குச் சென்று, கழுதையைக் கொண்டு வரச் சொல்லுகிறார்.  அவர்கள் சென்று கழுதையை அவிழ்க்கும்போது, இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொன்ன உடனேயே அவர்கள் கழுதையை அவிழ்த்துக் கொடுத்து விடுகிறார்கள்.  காரணம் என்னவென்றால், இது பஸ்கா பண்டிகை நேரம்.  பண்டிகையிலே ஏதோ பிரதான ஆசாரியர், வேறு யாரேனும் முக்கியமான நபர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைத்து, கழுதையின் உரிமையாளரும் கொடுத்துவிடுகிறார்.

இயேசுவானவர் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு கிழமை கழுதையின் மேல் பவனியாக எருசலேமிற்குள் நுழைகிறார்.  இயேசுவானவர் எருசலேமிற்குள் நுழையும் அதே நேரத்தில் சிதறியிருக்கிற யூதர்கள் அனைவரும் எருசலேமிற்குள் மிகவும் சந்தோஷமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி புறதேசத்திலிருந்து எருசலேமிற்குள் நுழைந்து கொண்டிருக்கிறவர்களுக்கு இயேசு யார் என்று தெரியாது.  கழுதையின் மேல் பவனியாக வருகின்ற இயேசுவானவர், தனது சீஷர்களை ஓசன்னா! ஓசன்னா! என்று சொல்லச் சொல்லுகிறார்.

கழுதையின் மேல் ஒருவர் பவனி வருகிறார், சுற்றி இருக்கும் ஜனங்கள் ஓசன்னா ஓசன்னா என்று அவரை புகழ்ந்து பாடுகிறார்கள் என்று நினைத்த ஜனங்கள், இவர் யாரோ முக்கியமானவராக இருப்பார் என்று நினைத்து, அவர்களும் ஓசன்னா, ஓசன்னா என்று பாட ஆரம்பித்தார்கள்.  சந்தோஷத்தின் மிகுதியினால் தங்கள் வஸ்திரங்களையும், மரக்கிளைகளையும் விரித்து இயேசுவை வரவேற்க ஆரம்பித்தார்கள்.  சீஷர்களும், எருசலேமிற்குள் நுழைந்து கொண்டிருந்த ஜனங்களும், செய்த காரியம் எருசலேம் நகரத்தையே ஆச்சரியப்பட வைத்தது.

இதைப் பார்த்த பிரதான ஆசாரியன், யார் வருகிறார், ஏன் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்று கேட்டு விசாரித்த போது, இதற்கு காரணம் நசரேயனாகிய இயேசு என்று அறிந்துகொள்கிறார்.  எனவே இயேசுவின் மீது பிரதான ஆசாரியர்களும், மத தலைவர்களும் கோபம் கொள்கிறார்கள்.

கழுதை பவனியாக வந்து, எருசலேம் நகரத்தையே ஆச்சரியப்பட வைத்த இயேசுவானவர், அதோடு நின்றுவிடவில்லை, எருசலேம் தேவாலயத்திற்குள் நுழைந்து, கோபமடைந்தவராக கொள்ளுகிறவர்களும், விற்கிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி விடுகிறார்.  காசுக்காரருடைய பலகைகளைக் கழித்துப்போடுகிறார்.  புறா விற்கிறவர்களின் ஆசனங்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.  இவைகளையெல்லாம் கேள்விப்பட்ட பிரதான ஆசாரியரும், சங்கத்தாரும் இயேசுவின் மீது பயங்கரமாக கோபமடைகிறார்கள்.

இயேசுவானவரின் இச்செயல்களால் எருசலேம் தேவாலயம் மிகவும் அமர்க்கலமானது.  தேவாலயத்திலிருந்து எல்லோரும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒருசிலர் காசுக்காரரின் பலகைகளிலிருந்து விழுந்த காசுகளை பொருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தேவாலயத்திற்கு வெளியே குருடரும், சப்பாணிகளும் உட்கார்ந்திருப்பது வழக்கம்.  தேவாலயத்தில் இப்படி ஒரு குழப்பம் நிகழ்ந்ததைக் கண்ட குருடர்களும், சப்பாணிகளும் உள்ளே என்ன நடக்கிறது என்று கேட்டு அறிந்துகொள்கிறார்கள்.  தேவாலயத்திற்குள்ளே இயேசுவானவர் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்ட குருடரும், சப்பானிகளும் தேவாலயத்திற்குள் சென்றால், இயேசுவின் மூலமாக சுகம் பெற்றுக்கொள்ளலாம் என்று விசுவாசித்து, தேவாலயத்திற்குள் நுழைகிறார்கள்.

தேவாலயம் கலவரமாக இருப்பதால், ஒரு கூட்டத்தார் தேவாலயத்திலிருந்து வெளியே ஓடிவருகிறார்கள்.  சுகம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தார் தேவாலயத்திற்குள் செல்கிறார்கள்.

அந்நாட்களில் குருடர்களும், சப்பாணிகளும் தேவாலயத்திற்குள் நழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.  தேவாலயம் கலவரத்தால் நிறைந்திருந்ததால், யாருக்கும் தெரியாது என்று எண்ணி, குருடர்களும், சப்பாணிகளும் இயேசுவைப் பார்ப்பற்காக தேவாலயத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.

குருடர்களும், சப்பாணிகளும் தேவாலயத்திற்குள் வந்ததை கேள்விப்பட்ட பிரதான ஆசாரியரும், ஆலோசனை சங்கத்தாரும், இதற்கு காரணமானவர் இயேசு தான் என்று அறிந்தபோது, இனி நாம் சும்மா இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று மூர்க்க கோபமடைந்து, இயேசுவை தண்டிக்க நினைக்கிறார்கள்.

அங்கே இருந்த சிறு பிள்ளைகள் அனைவரும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! ஓசன்னா என்று பாடல் பாடி ஆண்டவரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.  இதைப் பார்த்து, கோபமடைந்த பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவினிடத்தில் வந்து, சிறுவர்களை அமைதலாக இருக்கச் சொல்லும் என்று சொன்னார்கள்.  அதற்கு இயேசுவானவர், இவர்கள் பேசாதிருந்தால், இந்த கல்லுகளும் கூப்பிடும் என்று மறுஉத்தரவு சொல்லுகிறார்.  இதைக்கோட்ட பிரதான ஆசாரியரும், வேபாரகரும் கடும்கோபமடைந்தார்கள்.

பஸ்கா பண்டிகை நெருங்குகிற இந்த நேரத்தில் தேவாலயத்தில் இப்படி ஒரு குழப்பத்தை ஒரு மனிதன் ஏற்படுத்துகிறான் என்றால், அவன் உயிரோடு இருந்தால், நாம் மனநிறைவோடு பண்டிகையை அநுசரிக்க முடியாது.  முதலில் நாம் இவனைக் கொன்றுவிட்டு பின்பு பண்டிகையை ஆசரிப்போம் என்று தீர்மானிக்கிறார்கள்.

இப்படி ஒரு முடிவை பிரதான ஆசாரியர்களும், ஆலோசனை சங்கத்தாரும் எடுக்க வேண்டும், பஸ்கா பண்டிகைக்கு முந்தின நாள் வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்கெல்லாம் நான் மனுக்குளத்தின் பாவத்திற்காக சிலுவையில் மரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இயேசுவானவர் இப்படிப்பட்ட காரியத்தை, பஸ்கா பண்டிகைக்கு முந்தின ஓய்வு நாளில் செய்தார்.

குருத்தோலை ஞாயிறு என்பது, இயேசு சந்தோஷமாக எருசலேமிற்குள் நுழைந்த நாள் அல்ல.  தனது மரணத்தை தாமே தீர்மானித்து, அது இந்த நேரத்தில், இந்த விதத்தில், இப்படித்தான் நடைபெற வேண்டும் என்று இயேசு தீர்மானித்து, அதற்கான ஆயத்தமாக செய்ததுதான் இந்த காரியங்கள்.

குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கின்ற நாம், அவரின் பாடுகளையும் நினைவுகூற அழைக்கப்படுகின்றோம்.  சிலுவை மரத்தில் மாத்திரம் இயேசுவானவர் பாடுகளை அனுபவிக்கவில்லை.  அதற்கு ஒருவாரத்திற்கு முன்பே பாடுகளை அனுபவிக்க துவங்கினார் என்பதுதான் உண்மை.

இந்த கிறிஸ்வின் பாடுகளை நினைவுகூருகிற நாம், உண்மையான கிறிஸ்தவனாய் நான் வாழ்கின்றேனா? என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பரிசுத்தம் காணப்படுகின்றதா? என்பதை சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.

உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய்! என்று கேட்கும் ஆண்டவரின் அறைகுவள், உங்கள் இருதயத்தில் தினமும் தொனிக்கட்டும்.  அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, மீட்கப்பட்ட நாம், அவருக்காக பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

கிறிஸ்துவுக்காய் சாட்சியாய் வாழுவோம், அவருக்காக எழும்பி பிரகாசிப்போம்.  கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!  ஆமென்!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.