Type Here to Get Search Results !

புனித வெள்ளி ஆராதனைப் பாடல்கள் | Good Friday Service Song Lyrics | Jesus Sam

============
புனித வெள்ளி
ஆரானைப் பாடல்கள்
==============
பாடல் அட்டவனை
1) என் அருள் நாதா
2) கூர் ஆணி தேகம் பாய
3) துயருற்ற வேந்தரே
4) உருகாயோ நெஞ்சமே நீ
5) பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
6) ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து
7) குருசினில் தொங்கியே
8) சரணம் சரணம் அனந்தா 
9) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
10) சிலுவை சுமந்த உருவம்
11) எங்கே சுமந்து போகிறீர்
12) சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
13) விந்தை கிறிஸ்தேசு ராஜா!
14) அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
15) அன்பே கல்வாரி அன்பே
16) என் ஜனமே மனந்திரும்பு


பாடல் 1
பாமாலை 103
என் அருள் நாதா
1. என் அருள் நாதா இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்,
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!


பாடல் 2
பாமாலை 115
கூர் ஆணி தேகம் பாய
1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்

2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்

3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்

4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை

5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்

6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்


பாடல் 3
பாமாலை 118
துயருற்ற வேந்தரே
1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே;
எண்ணிறைந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்

3. தெய்வ ஏக மைந்தனார்,
அபிஷேக நாதனார்,
‘தேவனே, என் தேவனே,
எந்தனை ஏன் கைவிட்டீர்?’
என்றுரைக்கும் வாசகம்
கேள், இருண்ட ரகசியம்

4. துயர் திகில் இருண்டே
சூழும்போது, தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்;
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர்


பாடல் 4
பாமாலை 59
உருகாயோ நெஞ்சமே நீ
1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?


பாடல் 5
பாமாலை 350
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே

3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே


பாடல் 6
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான்
    - ஏறுகின்றார்

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்
    - ஏறுகின்றார்

3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே
    - ஏறுகின்றார்

4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்
    - ஏறுகின்றார்

5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்
    - ஏறுகின்றார் 

6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க
    - ஏறுகின்றார்


பாடல் 7
குருசினில் தொங்கியே
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
    - குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
    – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ
    – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார்
    – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ
    – குருசினில்


பாடல் 8
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா

சரணங்கள்
1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே
சென்று பல பாடுபடவும் தயவானார்
    - சரணம்

2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்
தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான்
    - சரணம்

3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி
பாதகனை யோ? இறையை யோ? விட என்றான்
     - சரணம்,

4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று
திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார்
    - சரணம்

5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே
தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் கொடுத்தான்
    - சரணம்

6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக‌
காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான்
    - சரணம்


பாடல் 9
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை
    - பாவிக்கு

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே
    - பாவிக்கு

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ
    - பாவிக்கு

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா
    - பாவிக்கு


பாடல் 10
சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா
    - சிலுவை சுமந்த 

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே
    - சிலுவை சுமந்த 

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார்
    - சிலுவை சுமந்த 

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்
    - சிலுவை சுமந்த 

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார்
    - சிலுவை சுமந்த 


பாடல் 11
எங்கே சுமந்து போகிறீர்
எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

1) எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

2) தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

3) வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

4) தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

5) வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

6) மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து


பாடல் 12
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்


பாடல் 13
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை-2

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே
    - விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன்
    - விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன்
    - விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்
    - விந்தை


பாடல் 14
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்


பாடல் 15
அன்பே கல்வாரி அன்பே
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே


பாடல் 16
என் ஜனமே மனந்திரும்பு
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்

2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர

3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே

4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.