Type Here to Get Search Results !

New Testament Bible Study Part 5 | புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து | புதிய ஏற்பாட்டு கண்ணோட்டம் | வேத ஆராய்ச்சி | Jesus Sam

புதிய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்-5)

     ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து.  இந்த ஐந்தாம் பாகத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கும், கொரிந்தியருக்கும் எதிய நிரூபங்களைக் குறித்து அறிந்து கொள்வோம்.

    புதிய ஏற்பாட்டு ஆய்வு முதல் நான்கு பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-யை கிளிக் செய்து வாசிக்கவும்.

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)

புதிய ஏற்பாட்டு ஆய்பு பாகம் மூன்று (3)

புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் (4)

ரோமர்: கிறிஸ்தவ மூல உபதேசங்கள்

கொரிந்தியர்ஞானஸ்நானம் | கர்த்தருடைய பந்தி | திருமணம் | முக்காடு | அன்பு | அந்நிய பாஷை | விபச்சாரம் 

ரோமர்:

            பவுல் ரோமாபுரியில் உள்ள சபைக்கு கடிதம் எழுதுகிறார்.  அந்த நாட்களில் ரோமாபுரியில் ஒரு சபை மாத்திரமே இருந்தது.  இந்த நாட்களில் ஒரு ஊழியர் ரோமாபுரி சபைக்கு கடிதம் எழுதுகிறார் என்றால், ரோமாபுரியில் உள்ள எந்த சபைக்கு எழுதுகிறார் என்று குறிப்பிட வேண்டும்.  அந்த நாட்களில் ரோமாபுரியில் ஒரே சபை மாத்திரமே இருந்தது.

            ரோமாபுரியில் மாத்திரம் அல்ல கொரிந்து, கலாத்தியா, எபேசு, பிலிப்பு, கொலோசே, தெசலோனிக்கே போன்ற அனைத்து பட்டணங்களிலும் ஒரே சபை மாத்திரமே இருந்தது.

            பவுல் முதன் முறையாக ரோமாபுரிக்கு நிருபத்தை எழுதுகிறார்.  காரணம், ரோமாபுரி உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த நகரம்.  சுவிசேஷம் ரோமாபுரிக்கு சென்றடைந்தால், ரோமாபுரியிலிருந்து உலகம் முழுமைக்கும் விரைவில் சென்றடையும்.  உலகின் பல நாடுகளிலிருந்து ஜனங்கள் வியாபார நோக்கத்திற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் ரோமாபுரிக்கு வந்து செல்வது வழக்கம்.

            உலகத் தலைநகராகிய ரோமாபுரிக்கு இரண்டு முக்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பவுல் நிருபம் எழுதுகிறார்.

முதலாவதாக சபைக்கு தேவையான மூல உபதேசங்களை பவுல் எழுதுகிறார்.  நாம் ஒரு காரியத்தை புதிதாக துவங்குகிறோம் என்றால், அந்த காரியத்தைக் குறித்ததான யாப்பு நம்மிடம் இருக்க வேண்டும்.  நாம் என்ன செய்யப்போகிறோம், எதன் அடிப்படையில் அதை செய்யப்போகிறோம், எந்த நம்பிக்கையில் அதை செய்யப்போகிறோம் என்ற யாப்பு நம்மிடம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும், ஒவ்வொரு தனி நிருவனங்களுக்கும் ஒரு யாப்பு உண்டு.  எந்த நம்பிக்கையில் நாங்கள் இதை கொண்டு செல்லப்போகிறோம் என்ற யாப்பு இருக்கும்.

இந்திய அரசு யாப்பு:  இது ஒரு ஜனநாயக குடியரசு நாடு.  இந்த நாட்டின் பெயர் இந்தியா.  யாரெல்லாம் இந்திய நாட்டின் குடிமகனாக இருக்க முடியும் என்ற ஒரு சட்ட வரைமுறை இடம் பெற்றிருக்கும்.

ஒரு யாப்பில் இரண்டு முக்கிய காரியங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.  முதலாவது அவர்களுடைய நம்பிக்கை, இரண்டாவதாக அவர்களுடைய சட்ட திட்டம்.  இவையனைத்தும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வித்தியாசத்தில் இருக்கும்.

 

            ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலைக்கொண்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்கு தேவையான மூல உபதேசத்தை ரோமர் புத்தகத்தில் எழுதுகிறார்.  யூத மார்க்கம் என்றால் அவர்கள் ஒரு இன மக்கள், ஒரே மொழி பேசக்கூடியவர்கள், ஒரே கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள்.

            கிறிஸ்தவம் என்பது அப்படி அல்ல, உலகில் பிறந்த எந்த மனிதனும் கிறிஸ்தவனாக மாற முடியும்.  பல இனத்தைச் சேர்ந்தவர்கள், பல மொழி பேசக்கூடியவர்கள், பல கலாச்சாரத்தை கொண்டவர்கள், பல பாரம்பரியங்களை பின்பற்றுகிறவர்கள் தான் இந்த கிறிஸ்தவர்கள்.  இவர்களுக்கு ஒரு மூல உபசேதம் வேண்டும்.  இல்லையென்றால், நாங்கள் சொல்லுவதுதான் சரி என்று ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் புதிய புதிய நடைமுறைகளை கொண்டுவருவார்கள்.  எனவே, கிறிஸ்தவம் இந்த நம்பிக்கையில், இந்த சட்டதிட்டத்தின் அடிப்படையில் செயல்படவேண்டும் என்பதை நமக்கு வழியுறுத்தும்படியாக ரோமர் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

            கிறிஸ்தவர்கள் என்பது ஒரு இன மக்கள் கூட்டத்தை குறிப்பது இல்லை.  உலகில் உள்ள அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள்.  அவர்கள் அனைவருக்குமான ஒரு மூல உபதேசத்தை எழுதவேண்டுமானால், பல காலாச்சாரங்களைப் பற்றி அறிந்த ஒருவரே எழுத முடியும்.  அப்படி பல கலாச்சாரங்களைப் பற்றி அறிந்த ஞானியாக இருந்தவர் பவுல்.

            பவுல் சிரியாவில் உள்ள தர்சிஷில் பிறந்தவர். இவர் குடும்பத்தின் சொந்த ஊர் எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா.  அலெக்சாண்டிரியா நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் படித்த பண்டிதர்.  பரிசேயர்கள் குடும்பத்திலிருந்து வந்ததால், யூத மதத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவர்.  உயர் படிப்பை கமாலியேல் என்று சொல்லப்படக்கூடிய சிறந்த பேராசிரியரிடம் படித்தவர்.  கமாலியேலிடம் உயர்படிப்பு படித்தவர்கள் ஒரு சிலர் மாத்திரமே.  அவர்களில் ஒருவர் அப்போஸ்தலனாகிய பவுல்.

பவுல் சிரியாவில் பிறந்ததால் சிரியமொழி கற்றிருந்தார்.  எகிப்தில் வளர்ந்ததால் எகிப்திய மொழி கற்றிருந்தார்.  ரோமகுடியுரிமை பெற்றிருந்ததால் லத்தின் மொழியையும் கற்றிருந்தார்.  பரிசேயன் என்பதால் எபிரெய மொழியையும் கற்றிருந்தார்.  அராமிய மொழி பேசக்கூடிய எருசலேமில் வசித்ததால் அராமிய மொழி கற்றிருந்தார்.  சர்வதேச மொழியாகிய கிரேக்க மொழியையும் கற்றிருந்தார்.  பவுல் ஒரு பன்மொழி பண்டிதர்.

ஆலோசனை சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் சட்டங்கள், விதிமுறைகள், யாப்புக்களைப்பற்றி நன்கு அறிந்தவர்.  இப்படிப்பட்ட ஒரு நபரைக் கொண்டு ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கான அதாவது சபைக்கான மூல உபதேசத்தை எழுதுகிறார்.

ரோமர் புத்தகத்தில் முதலாம் அதிகாரம் முதல் பதினொன்றாம் அதிகாரம் வரை சபைக்கான மூலஉபதேசங்கள் இடம் பெற்றுள்ளது.  யூதர்களின் பின்னனி, பழைய ஏற்பாடு, இயேசுவின் உபதேசம் இவையெல்லாம் நன்கு அறிந்த சிறந்த ஞானம் படைத்த ஒரு மனிதனால் மாத்திரமே ரோமர் புத்தகத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை புரிந்துகொள்ள முடியும்.

ரோமர் பன்னிரண்டாம் அதிகாரம் முதல் பதினாறாம் அதிகாரம் வரை பிரயோகரீதியான சட்ட திட்டங்கள் இடம்பெற்றிருக்கும்.

 

 

கொரிந்தியர்:

            அக்கிரமங்கள் அதிகம் நடைபெறுகின்ற பட்டணங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் பட்டணம் கொரிந்து பட்டணம்.  கொரிந்து ஒரு செல்வச்செழிப்பான பட்டணம்.  கொரிந்து பட்டணத்தில் இரண்டு துறைமுகங்கள் இருந்தது.  கப்பல் பிரயாணம் செய்யக்கூடிய வணிகர்கள் வந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தங்கி ஓய்வு எடுக்கக்கூடிய துறைமுகங்கள் கொரிந்து பட்டணத்தில் இருந்தது.  இத்துரைமுகத்தில் ஐரோப்பா, ஆசியா, சீனா போன்ற பல நாட்டு செல்வந்தர்கள் வந்து தங்குவார்கள்.  ரோமப் பேரரசின் நெடுஞ்சாலை இந்த கொரிந்து வழியே சென்றது.  இதனால் அநேக தரைவழி வியாபாரமும் இந்த கொரிந்தின் மூலமாக நடைபெற்றது.

            பல வெளிநாட்டு வியாபாரிகள் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால், வெளிநாட்டு மனிதர்களை அடிப்படையாக கொண்ட வியாபாரங்களே கொரிந்தில் அதிகம் இருந்தது.  கொரிந்து நகரத்தின் தெருக்கல் முழுவதும் விடுதிகளும், உணவகங்களும் அதிகம் காணப்பட்டது.  எ.கா: பாண்டிச்சேரி

            வெளிநாட்டு வணிகர்கள் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் கொரிந்து பட்டணத்தில் விபச்சார விடுதிகளும் அதிகம் இருந்தது.  அனைத்து விடுதிகளிலும் விபச்சாரிகளை பார்க்க முடியும்.  அந்த அளவிற்கு விபச்சாரத்தில் மூழ்கி இருந்த பட்டணம் தான் இந்த கொரிந்து பட்டணம்.

            அனைத்து விடுதிகளிலும் விபச்சாரம் பெருகியிருப்பதால் யாராவது குடும்பமாக வந்து தங்க நினைத்தால், அவர்கள் விடுதிகளை அதிகம் விரும்பமாட்டார்கள்.  இப்படிப்பட்டவர்களும் வந்து தங்க வேண்டும் என்பதற்காக கூடாரங்கள் செய்து கொடுப்பார்கள்.  விழாக்காலங்களில் அநேக நாட்டு மக்கள் கொரிந்து பட்டணத்திற்கு வருவதால், விடுதிகளில் அனைவருக்கும் இடம் கிடைப்பத்தில்லை.  விடுதிகளில் இடம் கிடைக்காதவர்களும் கூடாரங்களை தேடிச் செல்லுவார்கள்.  கொரிந்து பட்டணத்தில் கூடாரத்தொழில் செய்பவர்களும் அதிகமாக இருந்தார்கள்.

            கூடாரத்தொழிலானது கொரிந்து பட்டணத்தில் மாத்திரம் காணப்பட்ட ஒரு தொழில்.  அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்தில் மாத்திரமே கூடாரத்தொழில் செய்து வந்தார்.

 

            கொரிந்து பட்டணத்தில் இருந்த மக்கள் அதிக செல்வம் படைத்தவர்கள்.  ஆனால் கல்வி ஞானம் இல்லாதவர்கள்.  வெளிநாட்டு மனிதர்கள் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால்,  அதை மையமாக வைத்தே அனைத்து வியாபாரங்களும் அங்கு இருந்தது.  அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதை விட, தங்களோடு சேர்ந்து தொழிலை கற்றுக்கொண்டால் தாங்கள் செய்து வந்த தொழிலை செய்து கொள்வார்கள் என்று எண்ணி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள்.

            அதிக செல்வம் படைத்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது கடினமான காரியம்.  கல்வியறிவு இல்லாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதும் கடினமான காரியம்.  இவை இரண்டும் காணப்பட்ட இடம் தான் கொரிந்து.

            எ.கா: ஒரு வேதாகம கல்லூரியில் அநேக மாணவர்கள் படித்து வந்தார்கள்.  ஒரு மாணவனின் தகப்பனார் படிப்பறிவு இல்லாதவர்.  அவர் தன் மகனோடு பேசவேண்டும் என்பதற்காக அலைபேசி நிலையாத்திற்கு சென்று, கல்லூரி பேராசிரியர் எண்ணை அழைத்தார்.  அந்த நேரத்தில் கல்லூரி பேராசியர் வெளிநாட்டில் இருந்தார்.  தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வருவதால் அந்த பேராசியர் அழைப்பை எடுக்கவில்லை.  பேராசியர் வெளிநாட்டில் இருப்பதால் அந்த அழைப்பை எடுத்தால் பேராசிரியருக்கும் பணம் செலவழியும், அந்த கல்வியறிவு இல்லாத தகப்பனுக்கும் பணம் செலவழியும்.  பலமுறை அழைப்பு வந்துகொண்டே இருந்ததால், பேராசியர் அழைப்பை எடுத்தார்.  அந்த தகப்பனார், ஐயா நான் என் மகனோடு பேச வேண்டும் என்றார்.  அதற்கு பேராசியர் ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.  உங்கள் மகனிடம் நீங்கள் பேசவேண்டுமானால், கல்லூரி எண்ணை அழையுங்கள் என்று கூறினார்.  அதற்கு அந்த தந்தை சரி ஐயா என்று சொல்லிவிட்டு, ஐயா சிறிது நேரம் தான் பேசவேண்டும் கொஞ்சம் சிரமத்தை பாராமல் கொடுங்கள் என்றாராம்.  அந்த தகப்பனுக்கு வெளிநாடு என்றால் என்ன என்றே தெரியவில்லை.  இப்படி படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாம் ஒரு காரியத்தை புரியவைப்பது என்பது கடினமான காரியம்.

 

ஞானஸ்நானம்:

            கொரிந்து பட்டணம் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்த பட்டணம்.  இரவும், பகலும் அங்கு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.  அப்படிப்பட்ட நபர்களுக்கு ஆக்கில்லாவும், பிரிஷ்கில்லாவும் சுவிசேஷம் அறிவித்தார்கள்.   பவுல் கொரிந்து பட்டணத்தில் பதினெட்டு மாதங்கள் தங்கி சுவிசேஷம் அறிவித்தார்.  அக்கிரமம் நிறைந்த பட்டணம் என்பதால் கொரிந்து பட்டணத்து மக்களுக்கு பவுல் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை.  வேறொரு இடத்திலிருந்து கொரிந்துவுக்கு வந்த கிறிஸ்புவுக்கும், காய்பாவுக்கும் மட்டுமே பவுல் ஞானஸ்நானம் கொடுத்தார்.  (1 கொரிந்தியர் 1:15)

 

கர்த்தருடைய பந்தி:

            கொரிந்து பட்டணம் செல்வம் நிறைந்த பட்டணம்.  நாளையதினம் கர்த்தருடைய பந்தி ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்று பவுல் சபையில் அறிவிப்பு கொடுத்தார்.  அதைக்கேட்ட ஜனங்கள் வெளியிடங்களில் நடைபெறுகிற பந்தியில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லி, மறுநாள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே உணவு தயார்படுத்தி கொண்டுவந்து விட்டார்கள்.  மறுநாள் சபையில் பவுல் கர்த்தருடைய பந்திக்கு ஆயத்தப்படுவோம் என்று சொன்னபோது, அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவை எடுத்து உண்பதற்கு தயாரானார்கள்.  இப்படிப்பட்ட நபர்களுக்கு பவுல் சொல்லுகிறார், புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? கர்த்தருடைய பந்தியை ஏன் இப்படி தவறாக நினைக்கிறீர்கள் என்று கடிந்துகொள்ளுகிறார்.

 

திருமணம்:

            அந்த நாட்டு சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும் வரையிலும் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும்.  திருமணத்திற்கு பின்பு பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் அங்குள்ள பெண்கள் வெளிநாடுகளில் இருந்து ஓய்வெடுக்க வருகின்ற வணிகர்களை திருமணம் செய்ய ஆரம்பித்தார்கள்.  சிலநாட்களில் அந்த நபர் தங்கள் சொந்த தேசத்திற்கு சென்றவுடன், இந்த பெண்கள், இனி பெற்றோருடைய வார்த்தையைக் கேட்டு நடக்கவேண்டிய கட்டாயம் இல்லை.  தங்கள் மனவிருப்பப்படி வாழலாம்.

            இப்படிப்பட்ட கொரிந்து பட்டணத்திற்கு மாத்திரமே பவுல், திருமணம் செய்யாதவர்கள் என்னைப்போல திருமணம் செய்யாமலேயே இருந்து விடுங்கள் என்று சொல்லுகிறார். (1 கொரிந்தியர் 7:8)  பவுல் திருணம் செய்திருந்தார்.  ஆனால் கொரிந்தியருக்கு நிருபம் எழுதும்போது பவுலுக்கு மனைவி இல்லை. 

 

முக்காடு:

            கொரிந்து பட்டணத்திலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு தேவதையின் கோயில் இருந்தது.  இந்த கோயிலில் ஆயிரம் தேவதாசிகள் இருந்தார்கள்.  இவர்களுடைய வேலை இலவசமாக விபச்சாரம் செய்ய வேண்டும்.  இந்த தேவதாசிகள் இலவசமாய் விபச்சாரம் செய்கிறதை பார்த்த அந்த தேவதை கொரிந்து பட்டணத்தை ஆசீர்வதிக்கிறது என்ற நம்பிக்கை கொரிந்து மக்களிடம் இருந்தது.

            இப்படிப்பட்ட தேவதாசிகளின் அழகைப்பார்த்து, வெளிநாடுகளில் இருந்து வருகின்ற வணிகர்கள் அவர்களை கடத்திச்செல்வார்கள்.  தேவதாசிகளின் எண்ணிக்கை குறைந்தால், தேவதை கோபித்துக்கொள்ளும் என்று எண்ணி, எத்தனை தேவதாசிகள் குறைந்திருக்கிறார்களோ, அத்தனை புதிய விபச்சாரிகளை அழைத்து அவர்களை தேவதாசிகளாக மாற்ற வேண்டும்.  அதற்காக நியமிக்கப்பட்ட மனிதர்கள் கொரிந்து பட்டணத்திற்குள் சென்று அங்குள்ள விபச்சாரிகளை பார்த்து நீ தேவதாசியாக வருகிறாயா? என்று கேட்பார்கள்.

            இப்படி கேட்டகூடிய நபர்கள், கொரிந்து பட்டணத்திற்கு பொருட்களை வாங்க வருகின்ற குடும்ப ஸ்திரீகளிடமும் கேட்டார்கள்.  இதனால் கோபமடைந்த குடும்ப ஸ்திரீகள் ரோம அரசரிடம் புகார் தெரிவித்தார்கள்.  இதனால் ரோம அரசாங்கள் ஒரு சட்டத்தை இயற்றியது.

            விபச்சார ஸ்திரீயாக இல்லாத குடும்ப ஸ்திரீகள் தெருக்களுக்கும், பொது இடங்களுக்கும் வரும்போது அவர்கள் முக்காடு அணிய வேண்டும்.  அப்படி முக்காடு அணிந்த ஒரு பெண்ணைப் பார்த்து அந்த நபர்கள் நீ தேவதாசியாக வருகின்றாயா என்று கேட்டால், கேட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரோம அரசாங்கம் சட்டம் இயற்றியது.

            கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகள் முதலில் தெருக்களிலும், மரத்தடியிலும் ஆராதனை நடத்தி வந்தார்கள்.  அப்படி அவர்கள் ஆராதனை நடத்தும்போது ஸ்திரீகள் முக்காடு போடாததை பார்த்த அந்த தேவதையின் கோயிலைச் சார்ந்தவர்கள், ஆராதனை செய்யக்கூடிய ஸ்திரீகளை அழைத்து நீ தேவதாசியாக வருகிறாயா? என்று கேட்டார்கள்.  இதை அறிந்த பவுல் சபைக்கு வருகிற ஸ்திரீகள் முக்காடு அணிந்து வரவேண்டும் என்று எழுதுகிறார்.  வேரு எந்த நிருபத்திலும் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று பவுல் கூறவில்லை.

            1 கொரிந்தியர் 11:10-ல் தூதர்களின் நிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.  அது தேவதூதர்களை குறிக்கவில்லை.  தேவதையின் கோயிலில் இருந்து வந்து தேவதாசியாக வருகிறாயா என்று கேட்பவர்களை குறிக்கிறது.  அவர்கள் உன்னைப் பார்த்து தேவதாசியாக வருகிறாயா என்று கேட்க கூடாது என்பதற்காக நீ சபையில் முக்காடு அணிந்துகொள் என்று பவுல் எழுதுகிறார்.

            பெண்கள் முக்காடு போடுவதும், போடாததும் அவர்களுடைய சுய விருப்பம்.  கட்டாயம் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று வேதத்தில் சட்டம் எழுவும் இல்லை.

 

அன்பு:

            கொரிந்தில் அதிகமாக காணப்பட்ட அன்பு பாலியல் ரீதியான அன்பு.  இப்படிப்பட்ட மனிதர்களுக்கு தான் பவுல் உண்மையான அன்பைப்பற்றி எழுதுகிறார்.  அன்பு எப்படிப்பட்டது என்றும், எந்த அன்பு நிலையானது என்று பவுல் 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் எழுதுகிறார்.

 

அந்நிய பாஷை:

            கொரிந்து பட்டணம் பல இன மொழிகள், மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு இடம்.  எல்லா மக்களும் கிரேக்க மொழி பேசினாலும். அவர்கள் தாய் மொழியையும் பேசுவார்கள்.  உலகில் எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும் தங்கள் தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.  பலமொழி பேசும் ஜனங்கள் கொரிந்திற்கு வந்து சென்றதால், ஒரு மொழி பேசக்கூடியவர்கள் மற்ற மொழி பேசுகிறவர்களை கேலிசெய்தார்கள். 

            பிற மொழி பேசுகிறவர்களை கேலி செய்து கொண்டிருந்தவர்கள், சபை ஆராதனையில் அந்நிய பாஷை பேசுகிறவர்களையும் கேலிசெய்ய ஆரம்பித்தார்கள்.  இப்படிப்பட்ட கொரிந்து பட்டணத்திற்கே பவுல் சபையில் அந்நிய பாஷை பேசவேண்டாம் என்று எழுதுகிறார்.

 

விபச்சாரம்:

            கொரிந்து பட்டணம் விபச்சாரம் நிறைந்த பட்டணம் என்பதால், விபச்சாரம் ஒரு தவறல்ல என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள்.  சமுதாயத்தாலும், சட்டத்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது.

            எ.கா: இந்த காலத்தில் அநேக நாடுகளில் Living Together சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

            கொரிந்து பட்டணத்தில் ஒரு தகப்பனின் இரண்டாவது மனைவியோடு, முதல் மனைவிக்கு பிறந்த மகன் சேருவது சாதாரணமாக இருந்தது.  இப்படிப்பட்ட மனிதர்களை சமுதாயம் ஏற்றுக்கொண்டாலும், திருச்சபையில் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பவுல் எழுதுகிறார்.

 

கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபம்:

            பவுல் கொரிந்து பட்டணத்தில் தங்கி சுவிசேஷம் அறிவித்தபோது இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள், பவுல் திரும்பிச் சென்றதும் பாவத்துக்குள் விழுந்துவிட்டார்கள்.  பவுல் எழுதிக்கொடுத்த முதல் நிருபம் கொரிந்து பட்டணத்தில் வாசிக்கப்பட்டபோது அநேகர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  இவையனைத்தையும் பவுல் இங்கே நம்மோடு தங்கியிருக்கும்போது நாம் கடைபிடித்தோம்.  இப்பொழுது பவுல் நம்மோடு கூட இல்லையே, இப்பொழுது நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்.  பவுல் என்ன அவ்வளவு பெரிய மனிதனா என்று சொல்லி, அநேகர் பவுலுக்கு விரோதமாக எழும்பினார்கள்.

            இதைக் கேள்விப்பட்ட பவுல், ஒரு அப்போஸ்தலனுக்குரிய உரிமை, அதிகாரம் என்றால் என்ன? என்பதை வெளிப்படுத்தும்படியாக கொரிந்தியருக்கு இரண்டாம் நிருபத்தை எழுதுகிறார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.