புதிய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்-2)
ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். புதிய ஏற்பாடு பாகம் இரண்டு. முதலாம் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி படித்து விட்டு இந்த இரண்டாம் பாகத்தை படிக்கவும்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பரிசேயர்,
சதுசேயர்
புதிய
ஏற்பாட்டில் பரிசேயரும், சதுசேயரும் இணைந்து தொன்னூற்று ஐந்து (95) முறை வருகிறார்கள். சதுசேயர் மட்டும் ஐந்து முறை வருகிறார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டில் இந்த பரிசேயர், சதுசேயரைப்
பற்றி நாம் பார்க்க முடியாது. பழைய ஏற்பாட்டில்
இல்லாத பரிசேயர்கள், புதிய ஏற்பாட்டில் எப்படி வந்தார்கள். இவர்கள் எப்படி உருவானார்கள் என்பதைக் குறித்து
சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
பரிசேயர்களும், சதுசேயர்களும் இரண்டு வெவ்வேறு
துருவம் கொண்டவர்கள். இவர்கள் இருவருடைய கருத்துக்களும்
முற்றிலும் வித்தியாசமானது. இவர்கள் இணைந்து
செயல்படவே மாட்டார்கள். இப்படிப்பட்ட பரிசேயரும்
சதுசேயரும் இரண்டு காரியங்களுக்கு இணைந்து செயல்பட்டார்கள். ஒன்று இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்பதற்காக,
மற்றொன்று பவுலை கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக.
பரிசேயர்கள்:
சவுல், தாவீது, சாலொமோன் என்ற மூன்று இராஜாக்கள்
முழு இஸ்ரவேலையும் ஆட்சி செய்தார்கள். சாலொமோனுக்கு
பின்பு தேசம் வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தெற்கு ராஜ்யத்தில் யூதா மற்றும் பெஞ்சமீன் கோத்திரத்தார்
இருந்தார்கள்.
வடக்கு ராஜ்யத்தில் ஒன்பது கோத்திரத்தார்
இருந்தார்கள். யோசுவா தேசத்தை பிரித்துக் கொடுக்கும்போது
காலேப்புக்கு தனி பகுதியை கொடுத்தார். அப்படியானால்,
வடக்கு ராஜ்யத்தில் ஒன்பது கோத்திரங்கள், பத்து பிரிவுகளாக இருந்தார்கள்.
வடக்கு ராஜ்யத்தில் ஒன்பது கோத்திரம்,
தெற்கு ராஜ்யத்தில் இரண்டு கோத்திரம் மொத்தம் பதினொரு கோத்திரங்கள். பன்னிரண்டாவது கோத்திரமான லேவி கோத்திரத்திற்கு
நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலில்
உள்ள பன்னிரண்டு பிரிவுகளுக்கும், ஒரு பிரிவிற்கு நான்கு லேவிய பட்டணங்கள் என்ற வீதம்
மொத்தம் முழு இஸ்ரவேலிலும் நாற்பத்து எட்டு லேவியப் பட்டணங்கள் இருந்தன. இந்த லேவியர்கள் லேவியப்பட்டணங்களில் வாழ்ந்துகொண்டு,
நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
தெற்கு ராஜ்யத்தில் இரண்டு கோத்திரங்கள்
இருந்ததால் தெற்கு ராஜ்யத்தில் எட்டு லேவிய பட்டணங்கள் இருந்தன.
வடக்கு ராஜ்யத்தில் ஒன்பது கோத்திரங்கள்
பத்து பிரிவுகளாக இருந்தன. பத்து பிரிவினருக்கும்
மொத்தம் நாற்பது லேவிய பட்டணங்கள் இருந்தன.
அப்படியானால் லேவியர்களில் அதிகமானோர் வடக்கு ராஜ்யத்தில் இருந்தார்கள். வடக்கு ராஜ்யத்தில் லேவியர்களை சேர்த்து மொத்தம்
பத்து கோத்திரங்கள். லேவியர்கள் முழுமையும்
வடக்கு ராஜ்யத்தில் இல்லை. சிலர் (எட்டு பிரிவினர்)
தெற்கு ராஜ்யத்தில் இருந்தார்கள்.
யூதா
ராஜ்யம்:
தெற்கு ராஜ்யம் என்று சொல்லப்படுகிற யூதா
ராஜ்யத்தை தாவீதின் சந்ததியினர் ஆட்சி செய்து வந்தார்கள். யூதா ராஜ்யத்தின் கடைசி ராஜா சிதேக்கியா. கி.பி. 586-ம் ஆண்டு பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்
யூதா ராஜ்யத்தை முற்றுகையிட்டு, யூதாவைக் கைப்பற்றினார்.
நேபுகாத்நேச்சார் ராஜா யூதா ராஜ்யத்தை
முற்றுகையிட்டு, ராஜ்யத்தை அடித்து நொருக்கி, தீயிட்டு கொழுத்தினான். எருசலேம் தேவாலயத்தையும் உடைத்து நொருக்கிப்போட்டான். யூதா ராஜ்யத்தில் உள்ள அனைவரையும் தனது நாட்டிற்கு
அடிமையாக இழுத்துச் சென்றான்.
பாபிலோனில் வாழ்ந்த இந்த யூதர்களை ஆவிக்குரிய
வழியில் நடத்துவதற்கு தேவாலயம் இல்லை. அப்பொழுது
யூதர்கள் சமுதாயத்தால் மதிக்கப்பட்ட சிலரை அவர்களிலிருந்து பிரித்தெடுத்து, இனி நீங்கள்
எங்களை ஆவிக்குரிய வழியில் வழிநடத்துங்கள் என்று சொன்னார்கள். இப்படி பிரித்தெடுக்கப்பட்டவர்களே இந்த பரிசேயர்கள்.
பரிசேயர்கள் எந்த கோத்திரத்தை சார்ந்தவர்களாக
இருப்பார்கள் என்றால், யூதா ராஜ்யத்தில் மூன்று
கோத்திரத்தார் இருந்தார்கள். யூதா, பென்யமீன்,
லேவி கோத்திரத்தில் சிலர். இம்மூன்று கோத்திரத்தில்
உள்ள சமுதாயத்தால் மதிக்கப்பட்ட நபர்களையே ஜனங்கள் பரிசேயராக தேர்வு செய்தார்கள். பரிசேயர்கள் இம்மூன்று கோத்திரத்தில் இருந்து மட்டுமே
உருவானார்கள்.
ஆரம்ப நாட்களில் மக்களால் ஏற்படுத்தப்பட்ட
பரிசேயர்கள், பின்நாட்களில் அவர்களின் தேவைக்கு ஏற்ப அநேகரை பரிசேயராக சேர்த்துக்கொண்டார்கள். பரிசேயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
ரபீ என்றால் போதகரே என்று அர்த்தம். அதாவது கற்றுக்கொடுப்பவர். ரபீமார்களை உருவாக்கியவர்கள் இந்த பரிசேயர்களே.
பரிசேயர்களுக்கென்று நியாயப்பிரமாணம் இல்லாததால்
அவரவர் அவரவருக்கு தெரிந்த கருத்துக்களை மக்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். மக்கள் இவர் தான் நன்றாகக் கற்றுக்கொடுக்கிறார்,
அவர் தான் நன்றாகக் கற்றுக்கொடுக்கிறார் என்று அநேகரை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில்
பரிசேயர்களுக்கிடையே காணப்பட்ட கருத்து வேறுபாட்டால், பரிசேயர்கள் ஷம்மாய் என்ற ஒரு நபரின் பின்னால் ஒரு குழுவும்,
கிளேல் என்ற ஒரு நபரின் பின்னால் ஒரு குழுவும்
என இடண்டு குழுவாக பிரிந்தார்கள்.
இந்த ஷம்மாய் குழுவைச் சேர்ந்தவர்கள் மிகவும்
கடுமையானவர்கள். இவர்கள் ஓய்வு நாளில் எந்த
வேலையும் செய்ய வேண்டாம் என்று மக்களுக்கு கற்பித்தார்கள். அதைக் கேட்ட ஜனங்கள் நடப்பதும் ஒரு வேலை தானே, நாங்கள்
நடக்கலாமா? நடக்க கூடாதா? என்று கேட்டார்கள்.
இதனால், இந்த சம்மாய் குழுவினர் ஓய்வு நாளில் இவ்வளவு தூரம் நடந்துகொள்ளலாம்
என்ற சட்டத்தை இயற்றினார்கள்.
ஷம்மாய் ஓய்வு நாளில் இவ்வளவு தூரமே நடக்க
வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதை ஜனங்கள் கிளேல் குழுவினரிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது கிளேல் குழுவினர் இல்லை, இல்லை அப்படியெல்லாம்
ஒன்று இல்லை, ஓய்வு நாளில் உங்கள் கழுதையாவது, எருதாவது குழியில் விழுந்தால் அதை தூக்கிவிடாமல்
இருப்பீர்களா? ஓய்வு நாளில் கட்டாய வேலைகளை
நாம் செய்து தான் ஆக வேண்டும் என்று கற்பித்தார்கள்.
இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் இயேசு
கிறிஸ்துவிடம் வந்து கேள்வி கேட்டார்கள். ஒருவன்
கேள்வி கேட்க வரும்போதே இவன் ஷம்மாய் குழுவைச் சேர்ந்தவனா? கிளேல் குழுவைச் சார்ந்தவனா?
என்பது இயேசுவுக்கு தெரியும். ஷம்மாய் குழுவிலிருந்து
ஒருவன் இயேசுவிடம் கேள்வி கேட்டாள் அதற்கு இயேசு இந்தக் கேள்விக்கு கிளேல் குழுவினர்
என்ன பதில் சொன்னார்களோ அதையே இயேசுவும் சொல்லுவார். கிளேல் குழுவில் இருந்து ஒருவன் வந்து கேள்வி கேட்டால்,
அதற்கு ஷம்மாய் குழுவினர் என்ன பதில் சொல்வார்களோ அதையே இயேசுவும் இவர்களுக்கு சொல்லுவார்.
பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவை வெறுக்க
காரணம், இயேசு கிறிஸ்து பரிசேயரில் ஒருவர் அல்ல.
ஆனால், இயேசுவைப் பார்த்து ஜனங்கள் நீர் ரபீ என்றார்கள். இதனாலேயே பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவை வெறுத்தார்கள்.
யூதா ராஜ்யத்தார் பாபிலோனில் இருக்கும்போது
அவர்களை ஆவிக்குரிய வழியில் வழிநடத்த பரிசேயர்கள் தேவைப்பட்டார்கள். எனவே, ஜனங்கள் பரிசேயர்களை ஏற்படுத்தினார்கள். பாபிலோனிலிருந்து ஜனங்கள் கி.மு. 516-ம் ஆண்டு யூதா
ராஜ்யத்திற்கு வந்துவிட்டார்கள்.
செருபாலேலின் தலைமையில் வந்தவர்கள் எருசலேமிலே
ஆலயத்தைக் கட்டி வைத்திருந்தார்கள். இப்பொழுது
தேவாலயம் இருக்கிறது, நியாயப்பிரமாணத்தை போதிக்க லேவியர்கள் இருக்கிறார்கள். இதை அறிந்த பரிசேயர்கள் இனி லேவியர்கள் பார்த்துக்கொள்வார்கள்
என்று பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
இந்த பரிசேயர்கள் அப்படி செய்யவில்லை. காரணம் அவர்களுக்குள் இருந்த பதவி ஆசை. இவர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்தார்கள்.
சதுசேயர்:
ஜனங்கள் சொந்த நாட்டுக்கு வந்த பின்னும்
பரிசேயன் நியாயப்பிரமாணத்தைக் கற்றக்கொடுக்கிறதை பார்த்த சாதோக் என்னும் ஆசாரியன் வெறுத்தான். ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க
ஆண்டவரால் தெரிவுசெய்யப்பட்ட லேவியர்களாகிய நாங்கள் இருக்க பரிசேயர்கள் எப்படி கற்றுக்கொடுக்க
முடியும் என்று அவர் ஆத்திரமடைந்தார்.
அவர் ஜனங்களைப் பார்த்து என் பெயர் சாதோக். சாலொமோன் தேவாலயத்தைக் கட்டிய பின்பு, முதல் பிரதான
ஆசாரியனாக சாதோக் என்ற நபரையே நியமித்தார்.
அந்த சாதோக் என்ற பெயரை ஆண்டவர் எனக்கு கொடுத்திருக்கிறார். நான் ஒரு லேவியன், நான் ஒரு ஆசாரியன் எனவே நான்
தான் இனி நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுப்பேன் என்று சொன்னான்.
சாதோக் ஒரு சில லேவியர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு
நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க துவங்கினான்.
இவர்கள் தான் சாதோக்கியர்கள். அதாவது
சதுசேயர்கள்.
வேதபாரகர்:
வேதபாரகர் என்பவர்கள் நியாயப்பிரமாணத்தை
எழுதுகிறவர்கள். பாரூக் ஒரு வேதபாரகன். எரேமியாயோடு கூட இருந்து எரேமியா புத்தகத்தை எழுதியவர்.
எஸ்றாவும் ஒரு வேதபாரகன். நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலைக் கைப்பற்றிய போது தேவாலயத்தை
உடைத்து நொருக்கினான். நியாயப்பிரமாணங்கள்
எல்லாவற்றையும் எரித்துவிட்டான். சிரையிருப்பிலிருந்து
திரும்பி வந்த ஜனங்கள் பாரூக்கின் தலைமையில் நியாயப்பிரமாணத்தை எழுத துவங்கினார்கள். எஸ்றாவின் காலத்திலேயே வேதபாரகர்கள் துவங்கினார்கள்.
வேதபாரகரும், சதுசேயரும் ஒருவரோடொருவர்
ஐக்கியமாக இருப்பார்கள்.
தேவாலயத்தின் பொறுப்பு முழுவதும் சதுசேயர்களிடம்
இருந்தது. ஏனென்றால் சதுசேயர்கள் அனைவரும்
லேவியர்கள். பரிசேயர்கள் அப்படி அல்ல. பரிசேயர்களில் அநேகர் யூதா, பென்யமீன் கோத்திரத்தாராக
இருந்தார்கள். சிலரே லேவியராக இருந்தார்கள்.
பரிசேயர்களுக்கு தேவாலயத்தில் பங்கு
அதிகம் இல்லை. இஸ்ரவேலர்கள் பாபிலோனில் வாழ்ந்த
போது, அவர்களை நல்வழிப்படுத்த ஜெப ஆலயங்களை துவங்கின பரிசேயர்கள், சிறையிருப்பிலிருந்த
வந்த பின்பு அந்த ஜெப ஆலய முறைமையை இஸ்ரவேல் நாட்டிலும் தொடர்ந்தார்கள்.
ஜெப ஆலய முறைமையை துவங்கியவர் எசேக்கியேல். துவங்கிய இடம் பாபிலோன்.
இஸ்ரவேலர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி
வந்த பின்பு, எருசலேமில் தேவாலயம் இருந்தது.
பாபிலோனில் ஜெப ஆலயம் நடத்திவந்த பரிசேயர்கள் தாங்கள் சொந்த நாட்டிற்கு வந்ததும்
ஜெப ஆலய முறைமையை கைவிட்டிருக்க வேண்டும்.
காரணம் இப்பொழுது தேவாலயம் இருக்கிறது.
பரிசேயர்கள் தங்களின் பதவி பரிபோய்விடுமே
என்று எண்ணி, தங்கள் சொந்த நாட்டிற்கு வந்த பிறகு ஜெப ஆலய முறைமையை கைவிடவில்லை. இஸ்ரவேலிலும் ஜெப ஆலயங்களை நடத்திவந்தார்கள். இதனால் பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் இடையே
அநேக கருத்து வேறுபாடுகள் இருந்தன.
சதுசேயர்கள் பாரம்பரியத்தை நம்பமாட்டார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தை மட்டுமே நம்புவார்கள். தேவதூதர்கள் இருப்பதாக நியாயப்பிரமாணத்தில் இல்லை
என்றும், மரித்த பின் நரகம் பரலோம் என்று இல்லை என்று ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்க துவங்கினார்கள். சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதிருந்தார்கள். பரிசேயர்கள் தேவதூதர்களை நம்பினார்கள்.
கி.மு-167-ம் ஆண்டு இஸ்ரவேலில் புரட்சி
வெடித்தது. அந்தியோகஸ் எபிபனர் என்று சொல்லப்படுகிற சிரியா தேசத்து மன்னன் எருசலேமிற்குள்
நுழைந்து, செயூஸ் தெய்வத்தின் சிலையை தேவாலயத்தில் வைத்து, அதற்கு பன்றிகளை பலியிட்டான். அப்பொழுது மட்டாதயஸ் என்பவர் தேவாலயத்தில் பிரதான ஆசாரியனாக இருந்தார்.
இந்த பிரதான ஆசாரியனின் மகன் எகூத் என்பவன் ஒரு சில வாலிபர்களை தன்னோடு
இணைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள் மலையில் ஒழிந்திருந்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இந்த எகூத் அநேக வாலிபர்களோடு
எருசலேமிற்குள் நுழைந்து, அந்தியோகஸ் எபிபனசை முறியடித்தான். எகூத் எருசலேமைக் கைப்பற்றியதால், எகூத் அவர்கள்
மத்தியில் தலைவனாக மதிக்கப்பட்டு வந்தார்.
இந்த எகூத்தின் காலத்தில் தான் பரிசேயர்கள், சதுசேயர்கள் அனைவரும் ஒரு அமைப்பாக
உருவானார்கள்.
வேதபாரகர் - நியாயப்பிரமாணத்தை எழுதுபவர்
பரிசேயர்
– நியாயப்பிரமாணத்தை போதிப்பவர்
சதுசேயர்
– ஆலயத்திதை நிர்வாகம் செய்தவர்கள்
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் சுமார் ஆறாயிரம்
பரிசேயர்கள் இருந்தார்கள்.
எசீன்ஸ்
(Essennes): (ஞானஸ்நானம் உருவான வரலாறு)
இவர்கள் லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர்கள். பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் இவர்கள் அனைவரையும்
எசீன்கள் வெறுத்தார்கள்.
கி.பி 167-ம் ஆண்டு அந்தியோகஸ் எபிபனர்
எருசமை கைப்பற்றினான். இரண்டு ஆண்டுகளுக்கு
பின்பு எகூத் என்பவன் இஸ்ரவேலுக்கு விடுதலையை பெற்றுத்தந்தான்.
எகூத் விடுதலையை பெற்றுத்தந்த பின்பு,
தேவாலயத்தில் இருந்த சதுசேயர்கள் இனி இதுபோன்ற நிலை தேவாலயத்திற்கும், தங்களுக்கும்
வர கூடாது என்று பயந்து, அப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருந்த கிரேக்கர்களையும், ரோமர்களையும்,
ரோமர்களால் இஸ்ரவேலை ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற எரோதுக்களையும் (ஏதோமியர்கள்) நாடிச்
சென்றார்கள். தேவாலயத்தில் லேவியர்கள் மட்டுமே
சென்று பணிவிடை செய்ய வேண்டிய இடங்களுக்கு கிரேக்கர்களையும், ரோமர்களையும், ஏரோதியர்களையும்
அனுமதித்தார்கள்.
இதை வெறுத்த ஒரு சில லேவியர்கள் தேவாலயத்தை
விட்டு சென்று விட்டார்கள். தேவாலயத்தை விட்டு
வெளியே வந்த லேவியர்கள் மக்களோடு வாழாமல், ஆங்காங்கே தனிதனியே வாழ துவங்கினார்கள். இவர்களுள் சிலர் மேல் வீட்டில் தங்கினார்கள். மேல் வீடு என்பது, தாவீதின் கல்லறைக்கு மேலாக ஒரு
வீட்டைக் கட்டி அங்கு வாழ்ந்து வந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
தேவாலயத்தை விட்டு வெளியே வந்த லேவியர்களில்
பெரும்பான்மையினர் கும்ரான் என்ற பகுதியில் வாழ்ந்தார்கள். இவர்கள் எசீன்ஸ்
என்று அழைக்கப்பட்டார்கள்.
ஞானஸ்நானம் முறையை ஏற்படுத்தியவர்கள்
இந்த எசீன்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் காலையும்
மாலையும் புனித ஸ்தானம் செய்வார்கள். இந்த
எசீன்கள் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிடுவார்கள். இவர்களுடைய பிரதான வேலை வேதாகமங்களை பிரதியாக்கம்
செய்வது. இவர்கள் அதிகமாக வெட்டுக்கிளியையும்,
காட்த்தேனையும் சாப்பிட்டார்கள். இவர்கள் அதிகமாக
மக்களோடு பேசமாட்டார்கள்.
தேவாலயத்தில் நடைபெறுகிற அறுவெறுப்புகளை
சகித்துக்கொள்ள முடியாமல் சில லேவியர்கள் இவர்களோடு வந்து சேர்ந்துகொள்ளுவார்கள். அப்படி இந்த எசீன்களோடு சேர்ந்த ஒரு நபர் தான் யோவான்ஸ்நானன்.
ஒரு நபர் எசீனாக வந்து சேர்ந்துவிட்டால்,
அவர் மீண்டும் தன் வீட்டிற்கு போக முடியாது.
தனது வீட்டைப் பார்க்க வேண்டும், பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால்,
எசீன்களின் தலைவரிடம் அனுமதி கேட்டு, வீட்டிற்கு சென்று வரவேண்டும். அப்படி வீட்டிற்கு செல்லும் வழியில் யாரிடமும் பேச
கூடாது. தனது குடும்பத்தாரிடமும் அதிகம் பேசக்கூடாது,
முக்கியமானவைகளை மாத்திரம் பேசிவிட்டு கும்ரான் பகுதிக்கு வந்துவிட வேண்டும்.
எசீன்கள் ஒவ்வொரு நாளும் தங்களை பரிசுத்தம்
பண்ணிக்கொண்டார்கள். ஆனால், நம்மைப்போல மற்ற
ஜனங்களையும் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. எசீனாக இருந்தாலும் மற்றவர்களையும் பரிசுத்தம் பண்ண
வேண்டும் என்று நினைத்தது அவர்களில் ஒருவனான யோவான்ஸ்நானன்.
யோவான்ஸ்நானன் உடுத்திய உடுப்பும்,
அவர் சாப்பிட்ட உணவும் அவர் ஒரு எசீன் என்பதைக் காட்டுகிறது. யோவான் ஜனங்களின் பாவங்களை சுட்டிக்காட்டியபோது,
அநேகர் மனம்திரும்பினார்கள். எசீன்கள் தங்களை
சுத்திகரிப்பதற்காக ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் தண்ணீருக்குள் மூழ்கி எழும் அந்த
முறையை யோவான்ஸ்நானன் ஜனங்களுக்கும் செய்கிறார்.
மனந்திருப்புகிற ஒவ்வொருவரையும் நீருக்குள் மூழ்கி எழும்பச் செய்தார்.
எசீன்கள் முறையை இயேசு கிறிஸ்துவும்
அங்கிகரித்து, அவரும் ஞானஸ்நானம் பெற்றார்.
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதுமல்லாமல், உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு
போகும்போது சீஷர்களிடம், அநேகரை சீஷராக்குங்கள் என்றும், அவர்களுக்கு பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள் என்றும் கற்றுக்கொடுக்கிறார்.
திரித்துவம்:
ஆண்டவர் மனிதர்களைப் படைப்பதற்கு முன்பாகவே
தேவதூதுர்களை படைத்தார். தூதர்களுக்கென தலைவர்களையும்
ஆண்டவர் ஏற்படுத்தினார். தூதர்களுக்கு தலைவர்களின்
ஒருவன் நான் கடவுளைவிட பெரியவனாக மாறுவேன் என்ற எண்ணம் வந்தது. அதாவது பெறுமை வந்தது. எனவே அந்த பிரதான தூதனை ஆண்டவர் பரலோகத்தில் இருந்து
பாதாளத்திற்கு அனுப்பினார்.
ஆண்டவர் மனிதனைப் படைத்து, அவனுக்காக ஒரு
தோட்டத்தையும் உண்டாக்கினார். தோட்டத்தின்
நடுவில் மனிதன் புசிக்கக்கூடாத கனியையும் ஆண்டவர் படைத்தார். ஆனால் மனிதன் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்படியாதவனாக
தோட்டத்தின் நடுவில் இருந்த பழத்தை புசித்துவிட்டான். ஆண்டவர் மனிதனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டார்.
ஆண்டவர் தூதன் பெருமை கொண்டதால் அவனனை
பரலோகத்திலிருந்து பாதாளத்திற்கு தள்ளினார்.
ஆனால் மனிதன் பாவம் செய்த போது ஆண்டவர் அவனை பாதாளத்திற்கு தள்ளவில்லை. காரணம் என்ன?
மனிதன் ஏதோன் தோட்டத்தில் வாழ்ந்தான். தோட்டம் முழுவதும் எத்தனை எத்தனையோ சுவை நிறைந்த
கனி மரங்கள் இருந்தன. ஆதாமும் ஏவாளும் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு விதமான கனியை புசித்து சந்தோஷமாக இருந்தார்கள். தோட்டத்தின் நடுவில் ஆண்டவர் புசிக்க வேண்டாம் என்று
சொன்ன கனியும் இருந்தது. அதை ஆதாமும் ஏவாளும்
ஒவ்வொரு நாளும் பார்த்திருப்பார்கள். ஆனால்
அதை புசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவில்லை. ஒரு நாள் விழத்தள்ளப்பட்ட தூதனாகிய பிசாசு அவர்களை
வஞ்சிக்கிறான். எனவே, அவர்கள் அந்த பழத்தை
சாப்பிட்டார்கள். அவர்களுக்காகவே அந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
பிசாசு ஆசை காட்டியதால் ஆதாமும், ஏவாளும்
பாவம் செய்தார்கள். பிரதான தூதனாக இருந்தவனுக்கு
பெருமை வரும்படி அவனுக்கு ஆசை காட்டியது யார்? பிரதான தூதுனுக்கு பெருமை என்ற ஆசை யாரும்
கற்றுக்கொடுக்கவில்லை. தானாகவே அவனுக்குள்
வந்தது. எனவே ஆண்டவர் தூதனுக்கு மனந்திரும்பும்
வாய்ப்பை கொடுக்கவில்லை.
ஆண்டவர் பிசாசுக்காகவே நரகத்தைப் படைத்தார். மனுஷனுக்காக ஆண்டவர் நரகத்தைப் படைக்கவில்லை. பிசாசினால் மனிதன் பாவத்திற்குள் விழுந்துவிட்டான். ஆண்டவர் நீதியுள்ளவர். நீதியுள்ள ஆண்டவர் பாவம் செய்த மனுஷனை பரலோகத்திற்கு
கொண்டு செல்ல முடியாது.
ஆண்டவருடைய நீதி சொல்லுகிறது, மனிதன் பாவம்
செய்தபடியால் பிசாசுக்காக உண்டுபண்ணின நரகத்திலே மனுஷன் தள்ளப்பட வேண்டும். ஆண்டவர் நீதியுள்ளவராக இருந்தாலும் அவர் கிருபையும்,
இரக்கமும் உள்ளவர். ஆண்டவருடைய நீதி பாவம்
செய்த மனுஷனை நரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னாலும், ஆண்டவருடைய கிருபைக்கு
மனுஷனை நரகத்திற்கு அனுப்ப மனதில்லை.
ஆண்டவருடைய நீதி தண்டனை கொடு என்று சொல்லுகிறது,
கிருபை வேண்டாம் என்று சொல்லுகிறது. அப்பொழுது
ஆண்டவருடைய பரிசுத்தம் வெளிப்படுகிறது.
எ.கா:
மகன் தவறு செய்யும்போது தகப்பனுக்கு மகனை தண்டிக்க வேண்டும் என்ற கோபம் வரும். அதே தகப்பனுக்கு இவன் என் மகன் அல்லவா, நான் எப்படி
இவனை தண்டிப்பேன் என்ற சிந்தையும் வரும்.
அதுபோலவே, ஆண்டவருடைய நீதிக்கும், கிருபைக்கும்
இடையே குளப்பம் வந்தது. இதனால் ஆண்டவருடைய
பரிசுத்தத்திற்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது, எனவே பரிசுத்தம் ஆண்டவருடைய நீதியையும்,
கிருபையையும் சமாதானப்படுத்துகிறது.
பரிசுத்தம் : ஏன் இந்த குலப்பம்
கிருபை : மனிதன் அறியாமல் பாவம் செய்துவிட்டான். அவனை பரலோகம் அழைத்து வர வேண்டும். ஏதேனும் வழி உண்டா?
நீதி : ஒரே ஒரு வழிதான்உண்டு. பாவம் செய்த மனிதன் பரலோகம் வர வேண்டுமானால், பாவம்
இல்லாத இரத்தம் சிந்தப்பட வேண்டும். அப்படி
பாவம் இல்லாத இரத்தம் பூமியிலேயே இல்லை. எனவே,
மனிதன் பரலோகத்திற்கு வருவதற்காக வாய்பு இல்லை.
கிருபை
: பாவம் இல்லாத நான் மனிதனாய் அவதறித்து, மனிதனுடைய தவறுக்காக
தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.
நீதி : கிருபை தெய்வத்துவத்தோடு கூட சென்று
மனிதனுக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது, முழுமையாக மனுஷனாக சென்று மனிதனுடைய தப்பிதங்களுக்கான
தண்டனையை ஏற்றுக்கொண்டால், மனிதன் பரலோகத்திற்கு வரமுடியம்.
(நீதி
சொல்லுகிற அனைத்து காரியங்களுக்கும் கீழ்ப்படிந்து கிருபை செயல்பட வேண்டும்)
கிருபை : சரி நான் சென்று மனுஷனுக்காக அடிக்கப்படுகிறேன்.
கடவுளுடைய நீதிக்கு செலுத்த வேண்டிய கிரயத்தை
செலுத்த, கடவுளுடைய கிருபை பரலோகத்தை விட்டு மனுஷனாக அவதறித்தது. இதை நடுநின்று நடத்தி வைப்பவர் பரிசுத்த ஆவியானவர்.
கடவுளுடைய
நீதி – பிதா
கடவுளுடைய
கிருபை – குமாரன்
கடவுளுடைய இந்த செயல்பாடுகளை மனிதன் புரிந்துகொள்ள
வேண்டும் என்பதற்காக பிதா என்றும், குமாரன் என்றும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுள்
ஒருவர். ஆனால் கடவுளுடைய நீதி என்பது வேறு,
கிருபை என்பது வேறு, பரிசுத்தம் என்பது வேறு.
கடவுளுடைய
நீதிக்கு ஒரு புறத்தில் கடவுளுடைய கிருபை இருக்கிறது, மறுபக்கத்தில் விசுவாசிகளாகிய
நாம் இருக்கிறோம். இதைத்தான் எபேசியரில் வாசிக்கிறோம்.
எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு.
ஞானஸ்நானம் (இயேசு கிறிஸ்து)
கிருபையாகிய
கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற வருகிறார். நீ எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அப்படியிருக்க நீர் என்னிடத்தில் ஞானஸ்நானம் பெற
வந்தீரே என்று யோவான் கிருபையாகிய கிறிஸ்துவைப் பார்த்து கேட்கிறான்.
யோவானுக்கு
கிருபையாகிய கிறிஸ்து பதில் சொல்லுகிறார், இப்பொழுது இடம் கொடு, இப்படி எல்லா நீதியையும்
நிறைவேற்றுவது (கடவுளுக்கு செலுத்த வேண்டிய நீதி) நமக்கு ஏற்றதாயிருக்கிறது.
கடவுளுடைய
நீதிக்கு தேவையானதை செலுத்த, கடவுளுடைய கிருபை மனுஷனாக இரங்கி வந்தது. கிருபையை விட நீதி உயர்ந்தது. எனவே, இயேசு கிறிஸ்து என் பிதா என்னிலும் பெரியவர்
என்று சொல்லுகிறார்.
மரியாளிடம்
தேவதூதன் சொல்லும் போது, பரிசுத்த ஆவியினால் நீ கர்ப்பவதியாவாய் என்று சொல்லுகிறார். இந்த காரியத்தை நடைமுறைப்படுத்துகிறவர் பரிசுத்த
ஆவியானவர். நாம் ஒரே தேவனை ஆராதிக்கிறோம். ஆனால் அவர் மூன்று தன்மைகளில் காணப்படுகிறார். நீதி, கிருபை, பரிசுத்தம்.
புதிய ஏற்பாட்டு பிரிவுகள்:
புதிய
ஏற்பாட்டில் இருபத்து ஏழு (27) புத்தகங்கள் உள்ளது. இவற்றை நாம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. சுவிசேஷப் புத்தகங்கள்:
சுவீசேஷ புத்தகங்கள் மொத்தம் நான்கு.
மத்தேயு,
மாற்கு, லூக்கா, யோவான்.
2. சரித்திரம் (வரலாறு) :
அப்போஸ்தலர்
நடபடிகள்
3. பவுலின் நிரூபங்கள்:
பவுலின் நிரூபங்கள் மொத்தம் பதினான்கு.
ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தயிர் கலாத்தியர், எபேசியர்,
பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு,
தீத்து, பிலேமோன், எபிரெயர்.
அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு பட்டணங்களில்
உள்ள சபைகளுக்கு ஒன்பது நிரூபங்களை எழுதுகிறார்.
கொரிந்து சபைக்கும், தெசலோனிக்கேயா சபைக்கும் இரண்டு நிரூபங்களை எழுதியுள்ளார்.
ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தயிர் கலாத்தியர், எபேசியர்,
பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர்
தீமோத்தேயு
என்ற இளம் வயது போதகருக்கு இரண்டு கடிதமும், தீத்து என்ற முதிர்வயதுடைய ஒரு போதகருக்கும்
ஒரு கடிதமும், பிலேமோன் என்ற நண்பருக்கு ஒரு கடிதமும் பவுல் எழுதுகிறார்.
எபிரெயர்
புத்தகத்தை எழுதியவர் பவுல். பதின் மூன்று
புத்தகங்களை பவுல் எழுதும்போது அந்த புத்தகத்தில் தான் தான் எழுதுவதாக குறிப்பிடுகிறார். ஆனால் எபிரெயர் புத்தகத்தில் மாத்திரம் தன் பெயரை
பவுல் குறிப்பிவில்லை. காரணம் எபிரெயர் புத்தகத்தை
பவுல் உலகம் எங்கு சிதறி இருக்கின்ற யூதர்களுக்காக எழுதுகிறார். எபிரெயர் புத்தகத்தில் தன் பெயரை குறிப்பிட வேண்டாம்
என்று நினைத்து அதில் குறிப்பிடாமல் எழுதியுள்ளார்.
பவுல்
கிரேக்க மொழியிலேயே இந்த பதினான்கு புத்தகங்களையும் எழுதினார். கிரேக்க மொழியில் நாம் பவுலின் நிரூபங்களை படித்தால்,
மற்ற நிரூபங்களில் பவுல் பயன்படுத்திய இலக்கிய நடைகள் எபிரெயர் புத்தகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எபிரெயர் புத்தகத்தையும் பவுலே எழுதியுள்ளார்
என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
4. பொதுவான நிரூபங்கள்:
பொதுவான
நிரூபங்கள் ஏழு. நான்கு நபர்கள் எழுதிய ஏழு
நிரூபங்கள் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது.
யாக்கோபு,
1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா
யோவான்
சுவிசேஷத்தையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் எழுதின யோவான் தான் இந்த 1, 2, 3 யோவான்
புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
5. தீர்க்கதரிசனம்:
வெளிப்பத்தின
விசேஷம்
சுவிசேஷங்கள்:
ஏன்
நான்கு சுவிசேஷங்கள். யோவான் 3:16-ல் வருகின்ற
எவனோ என்ற வார்த்தை உலகத்தில் உள்ள வொவ்வொரு தனி நபரையும் குறிக்கிறது. ஆண்டவர் சுவிசேஷத்தை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்
என்று விரும்புகிறார். ஒரு குடும்பமாகாவோ,
சபையாகவோ, நாடாகவோ இல்லாமல் ஒவ்வொரு தனி நபரும் ஆண்டவருடைய சுவிஷேசத்தைப் பற்றி அறிந்துகொள்ள
வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
மனோதத்துவ
அடிப்படையில் மனிதனின் மூளை அமைப்பு நான்கு வகைபடும். நான்கு விதமான மூளை படைத்த மனிதர்களுக்காக நான்கு
விதத்தில் சுவிசேஷம் எழுதப்பட்டுள்ளது.
1. முதல் முளை:
இந்த
மூளை படைபத்தவர்கள் எல்லா காரியங்களிலும் அக்கறை கொள்வார்கள். பொரும்பாலும் இந்த வகை மூளை அமைப்பு கொண்டவர்கள்
பெண்கள்.
எ.கா: ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை
பிறந்தது என்றால் எல்லோருக்கு அந்த நற்செய்தியை அறிவிப்பார்கள். ஒரு தகப்பன் தனது உறவினருக்கு அந்த நற்செய்தியை
அறிவிக்கும்போது, அந்த உறவினர் முதல் வகை மூளை படைத்தவராக இருப்பாரானால், அவர் அடுத்த
கேள்வி கேட்பார், குழந்தை ஆணா? பெண்ணா?. அடுத்து
இன்னும் ஒரு கேள்வி கேட்பார் குழந்தையின் எடை எவ்வளவும்? குழந்தை குருப்பா? சிவப்பா?
முதல்
வகை மூளை படைத்தவர்கள் எந்த காரியம் என்றாலும் அதை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக அநேக கேள்விகளை கேட்பார்கள்.
எ.கா: ஒரு நபருக்கு தலைவலி இருந்ததாம். அவர் சுகமானதும் ஆலயத்தில் வந்து சாட்சி சொல்ல வருகிறார்
என்றால், அந்த நபர் முதல் வகை மூளை படைத்தவராக இருந்தால் அவர் இப்படித்தான் சாட்சி
சொல்லுவார்.
கர்த்தருடைய
பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
என்னுடைய சாட்சி நான் சுருக்கமாக சொல்லுவதற்கு கர்த்தர் எனக்கு கிருபை தந்த
படியால் கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு எட்டு முப்பதுமணியளவில் இடது பக்கமாக லேசாக
தலைவலி ஆரம்பித்தது. இப்படியாக கதையை ஆரம்பித்து,
தலை வலி சரியானதை அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பதாக சபையார் அனைவருக்கும் தலைவலி
ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு அனைத்து காரியங்களையும்
தெளிவாக சொல்லுவார்கள்.
இந்த
முதல் வகை மூளை படைத்தவர்களிடம் எனக்கு தலை வழிக்கிறது என்று சொன்னால் அதற்கும் அவர்கள். அப்படியா? எப்பொழுது இருந்து வலிக்கிறது. காலையிலிருந்தா? மத்தியானத்திலிருந்தா? இப்படி கேள்விக்கு
மேல் கேள்வி கேட்பார்கள்.
எந்த
ஒரு காரியம் நடந்தாலும் அதை முழுமையாக சொல்ல வேண்டும், முழுமையாக கேட்க வேண்டும் என்று
விரும்புவார்கள் இந்த முதல் வகை மூளை படைத்தவர்கள்.
இப்படிப்பட்ட
மனிதர்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் மத்தேயுவை பயன்படுத்தி
மத்தேயு சுவிசேஷத்தை எழுதவைக்கிறார்.
மத்தேயு
5-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் மலைக்கு
ஏறினார். சீஷர்கள் அருகில் வந்தார்கள். அவர் உட்கார்ந்தார். வாயை திறந்து பேசினார் என்று வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியாளர் இந்த முதல் வகை மூளை படைத்தவர்களுக்காக
அவர் எங்கு போனார், எங்கு வந்தார், எப்படி வந்தார், எப்படி போனார், எப்படி பேசினார்,
உட்கார்ந்து பேசினாரா? எழுந்து நின்று பேசினாரா? வாயை திறந்து பேசினாரா? வாயை மூடி
பேசினாரா? இது போன்ற காரிங்களை அவர் தனது நற்செய்தி நூலில் எழுதினார்.
2. இரண்டாவது மூளை:
இரண்டாவது
மூளை அவசர மூளை. எதை செய்தாலும் அவசரமாக (துரிதமாக)
செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த
இரண்டவாது வகை மூளை படைத்தவர்கள் பெரும்பாலும் வாலிபர்கள்.
எ.கா: ஒரு நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
தொலைபேசி மூலமாக சொல்லுகிறார்கள் என்றால், மிகவும் எளிமையாக சுருக்கி HBD என்று அனுப்புவார்கள். இவர்களால் Happy Birth Day என்று அனுப்ப கூட முடியாது. அவசர மூளை.
காலை வணக்கம் சொல்ல வேண்டுமானால், GM என்று அனுப்புவார்கள்.
இப்படிப்பட்ட
அவசர மூளை படைத்தவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஆண்டவர் மாற்கு என்ற வாலிபனை தெரிந்து
கொண்டார். மாற்கு பர்னபாவின் உறவினன். மாற்கு சுவிசேஷம் மிகவும் சுருக்கமாக, வாலிபர்கள்
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
மாற்கு
சுவிசேஷத்தில் இரண்டாம் அதிகாரத்திலேயே கப்பர்நகூமில் ஆண்டவர் செய்த அற்புதங்களைப்
பற்றி எழுதப்பட்டிருக்கும். பதினான்காம் அதிகாரத்திற்குள்ளாகவே
ஆண்டவர் மிரித்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு சென்றுவிட்டார். அந்த அளவிற்கு மிகவும் சுருக்கமான கருத்துக்களை
மாற்கு எழுதுகிறார்.
மாற்கு
சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் இருப்பார், திடீர் என்று எருசலேம் வருவார். இப்படி அங்கும் இங்கும் அடுத்து அடுத்து மாறிக்கொண்டிருப்பதை
பார்க்க முடியும்.
எ.கா: இந்த இரண்டாவது மூளை படைத்த ஒரு
நபருக்கு எட்டு ஆண்டுகளாக தீராத வியாதி சுகமடைந்து விட்டால், அவர் சாட்சி சொல்லுவதற்காக
ஆலயத்திற்கு வருவார்.
கடந்த
எட்டு ஆண்டுகளாக பெலவீனத்தில் இருந்தேன். கர்த்தர்
பெலன் தந்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். இப்படி அவசரமாக சொல்லி சென்று விடுவார்கள்.
இப்படிப்பட்ட
மூளை படைத்தவர்களும் நற்செய்தியை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மாற்கு
நற்செய்தியாளரை பயன்படுத்தினார்.
3. மூன்றாவது மூளை:
மூன்றாவது மூளை படைத்தவர்களும் முதலாவது வகை மூளை படைத்தவர்களும்
ஏறக்குறை ஒரே வகையை சார்ந்தவர்கள். இந்த வகை
மூளை படைத்தவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பார்கள்.
எ.கா: இந்த வகை மூளை படைத்தவர்கள் தலைவலி
சுகமானதை சாட்சியாக சொல்லும்போது, இந்த பிரகாரமாக சொல்லுவார்கள்.
கர்த்தருடைய
பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். கடந்த வெள்ளிக்கிழமை
இரவு எட்டு மணியளவில் எனக்கு லேசாக தலை வலித்தது, நான் தலைவலி சரியாக வேண்டும் என்ற
கர்த்தரிடத்தில் ஜெபித்தேன். நான் அந்த மத்திரரை
எடுத்தேன், இந்த மாத்திரை எடுத்தேன். என்று
சொல்லுவார்கள்.
இந்த
வகை மூளை படைத்தவர்களும், எல்லா காரியங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முதல் மூளையைப் போல அல்ல, படித்தவர்கள் அல்லவா
தேவையான காரியங்களை மாத்திரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
இப்படிப்பட்ட
நபர்களும் நற்செய்தியை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மருத்துவம் படித்து
பட்டம் பெற்ற லுக்கா என்ற மருத்துவரைப் பயன்படுத்தி ஆண்டவர் லூக்கா நற்செய்தியை எழுதுகிறார்.
லூக்காவும்,
தெயோப்பிலுவும் கிரேக்கர்கலாக இருந்து யூதர்களாக மாறியவர்கள். இப்படி மாறுகிறவர்களை பிராசலிடோஸ் என்று அழைத்தார்கள்.
இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள்
இருவரும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். தெயோப்பிலு இயேசுவை ஏற்றுக்கொண்டபோது அநேகர் இயேசுவைப்
பற்றி நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஏனென்றால், அவர் ஒரு பெரிய மருத்துவரானபடியால்.
இப்படிப்பட்ட
படித்த நபர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டவர் படித்த லூக்கா
என்ற மருத்துவரை பயன்படுத்தி லூக்கா சுவிசேஷத்தை எழுதுகிறார்.
4. நான்காம் வகை மூளை:
நான்காம்
வகை மூளை படைத்தவர்களின் பாதங்கள் தரையிலேயே பாடாது. ஆவியிலேயே மிதப்பார்கள். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதை ஆவிக்குரிய
ரீதியாகவே பேசுவார்கள். ஆவியில் நிரம்பியவர்கள்
என்பதால், பேசும்போது கூட காத்துதான் வாயிலிருந்து வரும். சத்தம் வராது.
எ.கா: இப்படிப்பட்ட நபர்கள் தலைவலி சுகமானதை சாட்சி சொல்லுகிறார்கள்
என்றால், கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு
ஸ்தோத்திரம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு எட்டுமணியளவில்
சத்துருவானவன் என் வீட்டிற்குள் வந்தான். என்
தலையை ஆட்டி படைத்தான். சத்துருவின் கிரியையை
அழிக்கும்படியாக நான் நேர் முழங்காலில் நின்று ஜெபித்தேன். சத்துருவின் கிரியைகளை அழிக்க உபவாச ஜெபம் இருந்தேன். இப்படியாக துவங்குவார்கள்.
இப்படிப்பட்டவர்கள்
உலகப்பிரகாரமாக எந்த ஒரு காரியத்தையும் நேசிக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் ஆவிக்குரிய ரீதியாகவே பார்ப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை வந்தாலும்,
இது கணவன், மனைவி சண்டை இல்லை, பிசாசின் கிரியைகள் என்று சொல்லுவார்கள்.
தேவையில்லாத
காரியங்களுக்கெல்லாம் ஆவிக்குரிய அர்த்தங்களை எடுத்துக்கொண்டு, ஆண்டவர் தான் அனுமதித்தார்,
பிசாசுதான் கிரியை செய்கிறான் என்று சொல்லுவார்கள்.
இப்படிப்பட்ட
நபர்களையும் ஆண்டவர் நேசிக்கிறபடியால், இவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்
என்பதற்காக ஆண்டவர் யோவான் நற்செய்தியாளரை பயன்படுத்துகிறார்.
யோவானுக்கு
மிகுந்த சந்தோஷம். இயேசுவோடு கூட இருந்த சீஷன். இயேசு செய்த அனைத்து காரிங்களையும் எழுத வேண்டும்
என்று யோவானுக்கு ஆசை. நான் சொல்லுகிற காரியத்தை
மாத்திரம் தான் நீ எழுதவேண்டும் என்று ஆவியானவர் யோவானுக்கு கட்டளைகொடுக்கிறார். யோவான் நெருங்கிய சீஷன் என்பதால் எல்லாவற்றையும்
எழுதவேண்டும் என்று அவருக்கு விருப்பம் இருந்தது.
ஆனால் ஆவியானவர் அதற்கு அனுமதிக்கவில்லை.
எனவேதான் யோவான் தன் நற்செய்தியை முடிக்கும்போது இயேசு செய்த அநேக காரியங்கள்
இன்னும் இருக்கிறது. அதை எழுதினால் பூமியில்
இடம் கொள்ளாது என்று முடிக்கிறார்.
உவமை
என்பதன் சரியான அர்த்தம் பொய் கதை. ஜனங்களுகு்கு
புரிய வேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து அநேக பொய் கதைகளை அதாவது கற்பனை கதைகளை கூறினார். ஆவியில் மிதப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து அநேக பொய்
கதைகளை சொன்னார் என்றால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, யோவான் நற்செய்தியில் இயேசு கூறிய ஒரு உவமைமையும்
நாம் பார்க்க முடியாது.
இயேசு
கிறிஸ்து நானே என்று பயன்படுத்தின ஏழு இடங்களை நாம் இங்கு பார்க்க முடியும்.
1. ஜீவ அப்பம் நானே. (யோவான் 6:35)
2. வெளிச்சம் நானே. (யோவான் 8:12)
3. நானே வாசல். (யோவான் 10:9)
4. நானே நல்ல மேய்ப்பன். (யோவான்
10:11)
5. நானே வழி. (யோவான் 14:6)
6. நானே திராட்டைச்செடி. (யோவான்
15:1)
7. நானே உயிர்த்தெழுதல். (யோவான்
11:25)
இயேசு
கிறிஸ்து எத்தனையோ அற்புதங்களை செய்திருக்கிறார்.
ஆனால் ஏழு அற்புதங்கள் மட்டுமே யோவான் சுவிசேஷத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த ஏழு அற்புதத்தில் ஐந்து அற்புதங்களை மற்ற நற்செய்திகளில்
நாம் பார்க்க முடியாது.
1. கானா ஊர் கல்யாணம் (யோவான்
2:1-11)
2. கப்பர்நகூமில் உள்ள நூற்றுக்கு அதிபதியின்
மகன் (யோவான் 4:46-51)
3. பெதஸ்தா குளத்தில் வியாதிஸ்தன்
4. பிறவிக் குருடன் (யோவான் 9:1-7)
5. லாசரு உயிரடைந்தது (யோவான்
11:1-45)
6. உயிர்த்தெழுந்த பின்பு வலது பக்கம்
சென்று பிடித்த மீன் அற்புதம் (யோவான்
21:1-11)
யோவான்
3:16-ல் சொல்லப்பட்ட எவனோ என்ற வார்த்தையின் படி, அவன் உலகத்தில் எந்த மூனளயில் இருந்தாலும்
அவனுக்காகவும் ஆண்டவர் மரித்தார் என்பதை அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர்
நான்கு விதமான மூளை படைத்த மனிதர்களுக்கு நான்கு விதமான முறைகளில் நற்செய்தியை எழுதிக்கொடுத்துள்ளார்.
புதிய ஏற்பாட்டு ஆய்வு இரண்டாம் பாகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கம் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமானால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அதையும் நீங்கள் பதிவு செய்யவும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.