புதிய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்-3)
ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை என் அன்பின் வாழ்த்துக்கள். பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று. இந்த பாகத்தில் ஆயக்காரர்களைப் பற்றியும், இயேசுவின் வளர்ப்பு தகப்பன் யோசேப்பு என்ன வேலை செய்தான் என்பது பற்றியும், இயேசுவின் காயங்கள் பற்றியும் அறிந்துகொள்வோம். முதல் இரண்டு பாகத்தை வாசிக்காதவர்கள் கீழு உள்ள லிங்யை பயன்படுத்தி, முதல் இரண்டு பாகங்களை வாசித்த பின்பு இந்த மூன்றாம் பாகத்தை வாசிப்பீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
ஆயக்காரர்கள் | இயேசு கிறிஸ்து செல்வந்தர் | இயேசு பிறந்த செய்தி ஏன் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது | இயேசு ஏன் பெத்லகேமில் பிறந்தார் | இயேசுவின் காயங்கள்
ஆயக்காரர்கள்:
ஆயக்காரர்கள் என்றால் வரிவசூலிப்பவர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள்
ரோமர்கள். ஆயக்காரர்கள் ஜனங்களிடம் வரிப்பணத்தை
வசூலித்து அதை ரோமர்களுக்கு செலுத்தி வந்தார்கள்.
ஆயக்காரர்களை இஸ்ரவேல் ஜனங்கள் அறுவெறுத்தார்கள். ஆயக்காரர்களை கொலை குற்றம் செய்த நபரை பார்ப்பதுபோல
பார்த்தார்கள்.
எ.கா: நமது அனைவரின் வீட்டிலும் மின்சார
இணைப்பு கட்டாயம் இருக்கும். இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை மின்சாரத்துறையில் இருந்து ஒரு நபர் வந்து, நமது மின்இணைப்பை பார்த்து, நாம்
கடந்த நாட்களில் பயன்படுத்தின மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு எவ்வளவு தொகை நாம் அரசாங்கத்திற்கு
செலுத்த வேண்டும் என்று கூறுவார். நாம் அவர்மீது
கோபம்கொள்ளவோ, எரிச்சலடையவோ மாட்டோமே. ஆனால்
இதைப்போன்று ஜனங்களிடம் வரிப்பணம் வாங்கி ரோமர்களிடம் செலுத்திய ஆயக்காரர்களை ஜனங்கள்
ஏன் வெறுத்தார்கள்.
லூக்கா 15-ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து
ஆயக்காரன் வீட்டில் சாப்பிட்ட போது, ஜனங்கள் இயேசுவானவர் ஆயக்காரரும் பாவிகளுமான இவர்களுடைய
வீட்டிற்கு போகிறாரே என்று முறுமுறுத்தார்கள்.
எஸ்தர் 1:1-ல் வாசிக்கிறோம் பெர்சியர்கள்
உலகில் நூற்று இருபத்து ஏழு நாடுகளை கைப்பற்றியிருந்தார்கள். பெர்சியர்களை கிரேக்கர்கள் தோற்கடித்ததால், பெர்சியர்களுக்கு
சொந்தமான நூற்று இருபத்து ஏழு நாடுகளும் கிரேக்கர்களுடையதாக மாறியது. கிரேக்கர்கள் பெர்சியர்களை தோற்க்கடித்ததோடு மட்டுமல்லாமல்,
பெர்சியர்கள் கைப்பற்றாத மற்ற உலக நாடுகளையும் கைப்பற்றினார்கள்.
கிரேக்கர்களை தோற்க்கடித்த ரோமர்கள், கிரேக்கர்கள்
கைப்பற்றின அனைத்து நாடுகளையும் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் முழு உலகமும் ரோமர்களின்
கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
ரோமர்களுடைய காலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா
போன்ற கண்டங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பொழுது
உலகில் இருந்த ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என்ற மூன்று கண்டங்களும் ரோமர்களின் கட்டுப்பாட்டிற்குள்
வந்தது. அதாவது முழு உலகமும் ரோமர்களின் கட்டுப்பாட்டுக்குள்
வந்தது.
ரோம் நகரம் இத்தாலியில் உள்ளது. இத்தாலி என்பது ஒரு சிறிய நாடு. ஆனால் உலகையே ஆழுகை செய்த நாடு. ரோம் நாட்டில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு, முழு உலகத்தையும்
ஆழுகை செய்வது ரோமர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது.
முழு உலகத்திலும் உள்ள அனைத்து இடங்களுக்கும்
சென்று ரோமர்கள் வரிப்பணத்தை வசூலிப்பது அவர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது. ரோமர்கள் ஒவ்வொரு பட்டணத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும்
அந்த இடத்திலேயே வாழ்கின்ற ஒரு செல்வந்தனை ஆயக்காரனாக நியமித்தார்கள். இந்த ஆயக்காரர்கள் அந்த பகுதியில் உள்ள ஜனங்கள்
அனைவருக்கும் தேவையான ஒருவருட வரியை ரோம அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். பின்பு, ஜனங்களிடம் ஒவ்வொரு மாதமாக சென்று அந்த
வரிப்பணத்தை வசூலித்துக்கொள்ள வேண்டும்.
இப்படி தெரிவு செய்யப்பட்ட ஆயக்காரர்களுக்கு
ரோம அரசின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டு, ரோமக்குடியுரிமை கொடுக்கப்படும். இந்த ஆயக்காரர்கள் வரிப்பணம் செலுத்த வேண்டியதில்லை. ரோம அரசாங்கம் கொடுத்த சான்றிதழை பயன்படுத்தி அந்த
பகுதியில் வாழ்கின்ற மக்களிடம் அவர் வரிப்பணத்தை வசூலித்துக்கொள்ளலாம்.
உதாரணமாக சகேயு என்ற ஆயக்காரனை எடுத்துக்கொள்வோம். சகேயு எரிகோ பட்டணத்தில் உள்ள அனைவருக்குமான ஒருவருட
வரியை ரோம அதிகாரியிடம் செலுத்த வேண்டும்.
அப்படியானால், சகேயு எப்படிப்பட்ட பணக்காரனாக இருந்திருப்பான் என்று யோசித்துப்பாருங்கள்.
ஆயக்காரர்கள் என்றாலே பணக்காரனாகவே
இருப்பார்கள். ரோமர்கள் அந்த பகுதியில் உள்ள
அனைவருக்கும் தேவையான ஒருவருட வரியை செலுத்தும் அளவிற்கு பணம் வைத்திருந்த பெரும் செல்வந்தர்களையே
ஆயக்காரராக நியமித்தார்கள். இயேசுவின் சீஷர்களின்
ஒருவரான மத்தேயுவும் ஒரு ஆயக்காரன். இவருடைய
உண்மையான பெயர் லேவி. இவரும் மிகப்பெரிய செல்வந்தன்.
உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டு
வரி ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.
எரிகோ பட்டணத்தில் சுமார் ஐநூறு வீடுகள் இருக்குமானால், அனைவருக்குமான ஒரு வருட
வரியை சகேயு ரோம அதிகாரியிடம் செலுத்த வேண்டும்.
பின்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீடாக சென்று, ஒரு குடும்பத்தில் நூறு ரூபாய்
என்ற வீதத்தில் வசூலித்துக் கொள்ளலாம். அப்படியானால்
ஒரு குடும்பத்தில் இருந்து, ஒரு வருடத்திற்கு ஆயக்காரருக்கு கிடைக்கும் தொகை ஆயிரத்து
இருநூறு ரூபாய்.
ஒரு குடும்பத்திற்காக சகேயு ரோம அதிகாரியிடம்
செலுத்திய தொகை ஆயிரம் ரூபாய். அந்த குடும்பத்தில்
இருந்து இவருக்கு கிடைக்கும் தொகை ஆயிரத்து இருநூறு ரூபாய். ஒரு குடும்பத்திலிருந்து சகேயுவிற்கு இருநூறு ரூபாய்
லாபம். சகேயுவும் வரிப்பணம் செலுத்த வேண்டியது
இல்லை.
இப்படி செய்து வந்த ஆயக்காரர்கள் பணத்தின்
மீது ஆசைவைத்து, ஜனங்களிடம் அநியாயமாய் பணத்தை வசூலிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாதத்தின் முதல் தேதியில் ஒரு நபர் அந்த மாதத்திற்கான
வரிப்பணம் நூறுரூபாயை செலுத்தியிருப்பாரானால், அதே நபரிடம் ஒருவாரம் சென்று நீ இந்த
மாதம் வரிப்பணம் செலுத்தவில்லை, சீக்கிரமாக செலுத்து என்று கேட்பார், அவர்கள் இல்லை
இல்லை நான் செலுத்திவிட்டேன் என்று சொல்வார்களானால், இல்லை நீ இந்த மாதம் செலுத்தவில்லை,
நீ செலுத்தாவிட்டால் உனக்கு தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பார். அந்த நபரும் பயந்து, அதே மாதத்தில் இரண்டாவது முறை
நூறு ரூபாய் வரியாக செலுத்துவார். மீண்டும்
ஒரு வாரம் என்று நீ இந்த மாதம் வரிப்பணம் செலுத்தவில்லை, விரைவாக செலுத்தாவிட்டால்,
என் அடியாட்கள் உன்னையும், உன் குடும்பத்தையும் வாரினால் அடிப்பார்கள் என்று எச்சரிப்பார். இப்படியாக மனிதர்களை ஏமாற்றி, பயமுறுத்தி சம்பாதித்து
வந்தார்கள் இந்த ஆயக்காரர்கள்.
ஆயக்காரர்களின் அநீதியை ஜனங்கள் யாரிடமும்
சொல்லமுடியாது. ஆயக்காரர்கள் ரோம குடியுரிமை
பெற்றவர்கள். ரோமர்கள் ஜனங்களின் கருத்துக்களை
விட ரோமக்குடியுரிமை பெற்ற ஆயக்காரர்களையே நம்புவார்கள். இந்த காரணங்கலாலேயே, ஆயக்காரர்களை
ஜனங்கள் வெறுத்தார்கள்.
இப்படி மக்களுக்கு அநியாயம் செய்யக்கூடியவர்களில்
ஒருவனான ஆயக்காரன் சகேயுவை பார்த்து ஆண்டவர் நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று
சொன்னார். ஒருவருடைய வீட்டில் தங்குவது என்பது
இஸ்ரவேலர்களின் கலாச்சாரப்படி அவரை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம். அநியாயம் செய்யக்கூடிய சகேயு வீட்டிற்குள் இயேசு
போகிறாரே என்று ஜனங்கள் இயேசுவை முறுமுறுத்தார்கள். இயேசுவை சகேயு தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டதால், அவன்
உள்ளம் மாறியது. தன் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு
கேட்டான், செய்த அநியாயத்தை சரிசெய்தான்.
இயேசு
கிறிஸ்து செல்வந்தர்:
இயேசு கிறிஸ்து ஏழைக் குடும்பத்தை சார்ந்தவர்
என்று அநேகர் நினைக்கிறார்கள். உண்மையில் இயேசுவின்
தகப்பன் மிகப்பெரிய செல்வந்தன். தாவீதின் சந்ததியில்
வந்தவர் யோசேப்பு. யூதர்கள் பாபிலோனியர்களால்
சிறைபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், இப்போது யூதர்களின் ராஜாவாக இருப்பவர் இந்த யோசேப்பு. யோசேப்பு ஒரு தச்சர் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் நாம் நினைக்கக்கூடிய தச்சர் அல்ல. மிகப்பெரிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், மாளிகைகளை
அமைக்கும் நிபுணர். இவருக்குக் கீழாக நூற்றுக்காணக்கான
வேலையாட்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து
ஏழ்மையின் கோலமாக மாட்டுத்தொழுவத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஏழை அல்ல. ராஜா வம்சத்தை
சார்ந்த செல்வந்தனுக்கு மகனாக பிறந்தார்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் சாதாரணமானவர்கள்
அல்ல. அவர்களும் மிகப்பெரிய பணக்காரர்கள். பேதுரு மிகப்பெரிய பணக்காரர். ரோமர்கள் தங்கள் அரண்மனைகளை கட்டுவதற்காக கொரிந்து
பட்டணத்திலிருந்து கற்களை எடுத்துச்சென்றார்கள்.
அந்த கொரிந்து பட்டணத்திலிருந்து கற்களை கொண்டுவந்து பேதுரு தன் வீட்டைக் கட்டினார்
என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. மத்தேயுவும்
மிகப்பெரிய கோடீஸ்வரர். இப்படி இயேசுவின் சீஷர்கள்
அனைவரும் பணக்காரராகவே இருந்தார்கள்
இயேசு
பிறந்த செய்தி ஏன் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது:
இயேசு ஏழையாய் பிறந்ததால், ஏழைகளாகிய மேய்ப்பர்களுக்கு
நற்செய்தி தூதர்களால் அறிவிக்கப்பட்டது என்று நாம் நினைக்கிறோம். மேய்ப்பர்களை விட ஏழைகள் இஸ்ரவேலிலே இருந்திருப்பார்கள்
அல்லவா? ஏன் தூதன் அவர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை அறிவிக்கவில்லை.
மேய்ப்பர்களுக்கு, நாங்கள் மேய்ப்பர்கள்
என்ற தொழில் இருந்தது. எத்தனை பேர் வேலை இல்லாமல்
இருந்திருப்பார்கள், எத்தனை பேர் வியாதியோடு இருந்திருப்பார்கள், அவர்களுக்கு ஏன் நற்செய்தியை
தூதன் அறிவிக்கவில்லை. பெதஸ்தா குளத்தில் அநேகர்
வியாதியோடும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையிலும் இருந்தார்கள். அவர்களுக்கு ஏன் நற்செய்தியை தூதன் அறிவிக்கவில்லை.
இயேசு
ஏன் பெத்லகேமில் பிறந்தார்:
1.
தாவீதின் குமாரனாக தாவீது பிறந்த பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்பதற்காக இயேசு பெத்லகேமில்
பிறந்தார்.
2.
இஸ்ரவேல் முழுவதிலும் கோதுமைகள் விழைந்தாலும், அதிஉயர்ரக கோதுமைகள் எப்பிராத்தா என்ற
கிராமத்திலேயே கிடைத்தது. இந்த கோதுமையிலிருந்து
அதிஉயர்ரக அப்பம் அநேக இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதி உயர்ரக கோதுமை இங்கு கிடைத்ததால், அந்த இடத்திற்கு
பெத்லகேம் என்ற பெயர் வந்தது. பெத்லகேம் என்றால்
அப்பத்தின் வீடு என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து
ஜீவ அப்பமாக வந்தார். ஜீவ அப்பமாக வந்த இயேசு
உயர்ரக அப்பமாக, உயர்ரக கோதுமை விளையக்கூடிய பெத்லகேமில் பிறந்தார்.
3. ”இதோ உலகத்தின் பாவங்களை சுமந்து
தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் 1:29-ல் வாசிக்கிறோம். இஸ்ரவேல் தேசத்தில் அநேக வகையான ஆடுகள் இருந்தன. இவற்றில் அதிஉயர்ரக ஆடுகள் நொக்கோட் என்று சொல்லப்படக்கூடிய ஆடுகள். இந்த ஆட்டுகள் பெரும்பாலும் பெத்லகேமிலேயே காணப்பட்டது. தாவீது சிறுவயதில் இந்த நொக்கோட் வகை ஆடுகளையே மேய்த்துகொண்டிருந்தார். இயேசு கிறிஸ்து அதிஉயர்ரக ஆட்டுக்குட்டியாய் வரவேண்டும்
என்பதற்காக, அதிஉயர்ரக ஆட்டுக்குட்டிகள் காணப்படுகின்ற பெத்லகேமில் பிறந்தார்.
உலகத்திலேயே தன் பிள்ளையை பெற்று வளர்க்கத்தெரியாத
ஒரே விலங்கு செம்மறியாடு. செம்மறியாடு கர்பமாய்
இருக்கும்போது, அதின் மேய்ப்பர்கள் அந்த ஆட்டை மாத்திரம் தனியாக கவனித்து வளர்ப்பார்கள். செம்மறியாடு குட்டியை ஈனும்போது, செம்மறியாட்டிற்கு
மனிதனின் உதவி கட்டாயம் தேவை. செம்மறியாட்டிற்கு
குட்டியை சரியாக சுத்தம் செய்ய தெரியாது. எப்படி
பிரசவிப்பது என்று தெரியாது. மேய்ப்பர்கள்
தான் எல்லா வேலையையும் செய்வார்கள்.
இயேசு கிறிஸ்து உயர்ரக ஆட்டுக்குட்டியாய்
பிறந்ததால், அங்கு மேய்ப்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, தூதன் மேய்ப்பர்களுக்கு
சென்று அறிவிக்கிறார்.
இயேசுவின் காயங்கள்:
நம்முடைய
கைகளினாலும், கால்களினாலும் செய்த பாவங்களுக்காக இயேசு சிலுவையில் கைகளிலும், கால்களிலும்
அடிக்கப்பட்டார் என்று அநேக சொல்லுவார்கள்.
ஆனால் அது உண்மை அல்ல.
நாம்
நம்முடைய முதுகினால் என்ன பாவம் செய்தோம், ஆண்டவருடைய முதுகில் முப்பத்து ஒன்பது அடி
அடித்தார்களே.
நம்முடைய
வாயினால், கண்களினாலும், காதுகளினாலும் எத்தனை பாவங்களை செய்கிறோம். அவர் வாயிலும், கண்ணிலும், காதுகளிலும் அடிவாங்கவில்லையே.
இயேசு
கிறிஸ்து சிலுவையில் தொங்கும்போது, தாகமாயிருக்கிறேன் என்றார். இந்த வார்த்தை ஆத்துமாக்களை குறித்த தாகம் என்று
அநேகர் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல.
நமக்கு
ஒரு காயம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் ஒரு தாகம் ஏற்படும். அதைப்போலவே, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும்போது,
அவருடைய சரீரத்தில் பல இடங்களிலிருந்து இரத்தம் வழிந்தது. சரீரத்தின் வேதனையின் நிமித்தமாகவே ஆண்டவர் தாகமாயிருக்கிறேன்
என்று சொன்னார்.
இந்த மூன்றாம் பாகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன். இந்த பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதையும் பதிவு செய்யுங்கள்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.