Type Here to Get Search Results !

கழு மரத்தில் கிறிஸ்துவின் வாக்கு | Word pf Christ from Impalement | Solomonvictus | Jesus Sam

I. தந்தையே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்
(லூக்கா 23: 34)
மன்னிக்கவேண்டும்! யாரை மன்னிக்கவேண்டும், எப்போது மன்னிக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியவர் இயேசுநாதர். நம் ஆண்டவர் எல்லா தவறுகளையும் அப்படியே மன்னித்துவிட்டவர் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப ஓர் அறவியலைப் பின்பற்றியவர். மன்னிப்பு யாருக்கு தேவை என்பதை ஆழமாக உணர்ந்தவர். நம் நவீன நுாற்றாண்டில் பொதுமன்னிப்பு (Amnesty) வழங்கிய முதல் தலைவர் தென்ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆவர். யாருக்கு இந்த பொது மன்னிப்பு? என்பதை இவர் தன் அரசியல் வாழ்வில் ஓரளவு விளக்கிக் காட்டினார். இனவெறி கொண்ட ஆதிக்க வெள்ளையர்களுக்கு அவர் கறுப்பர்கள் சார்பாக மன்னிப்பு வழங்கினார்.

சிலுவையில் அறைவதற்கு முன்பும், அறைந்த பின்பும், இம்மிப் பிசகாமல் அரசின் உத்தரவை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருந்த ஒருகூட்ட அதிகாரக் கும்பலை ஆண்டவர் அங்கு பார்க்கிறார். அதனை அலசிப் பார்க்கிறார். ஒரு நீதியற்ற அமைப்பு அந்நிகழ்வின் பின்னணியில் இயங்குவதைப் புரிகிறார். இருப்பினும், இவர்கள் வெறும் அம்புகள்தான். எய்தவர்கள் வேறு ஒரு கும்பல் என்ற முடிவுக்கு வருகிறார். தவறான வழிகாட்டிகளுக்கு, தவறான தலைமைக்கு அவர்கள் நுாறு விழுக்காடு ஒப்படைப்போடு செயல்படும் கீழ்மட்ட மக்களை நினைத்து வருந்துகிறார். சிலுவையில் அறையப்பட்டு வேதனையில் தொங்கும் நிலையிலும் இவர்களுக்காக இயேசுநாதர் பரிதாபப்படுகிறார். 'இவர்கள் யார்?' என பவுலடியாரும் அலசுகிறார். பவுல் கூறும்போது 'மகிமையின் ஆண்டவர்' என அவர்களுக்குத் தெரியாததால் இயேசுவைச் சிலுவையில் அறைந்தனர் (1கொரி.2:8). அதாவது, கீழ்மட்டஅரசு, சமய அதிகாரிகள் சரியான உண்மையை அறியாமல் இயேசுவைக் கொன்றனர் என பவுலும் ஏற்கிறார்.

இந்த மன்னிப்பு வழியாக இன்று நாம் யாருக்கு விசுவாசமாக, உண்மையாக ஒப்படைப்போடு பணியாற்றுகிறோம் என்ற அடிப்படைக் கேள்வியைக் கேட்க ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக பல நேரங்களில் மக்கள் கண்மூடித்தனமாக தமது அதிகாரிகளின் ஆணைகளை நிறைவேற்றுகின்றனர். அரசு ஆணைகளால் தீவிரவாதிகள் என யார் அடையாளம் காட்டப்படுகின்றனரோ அவர்கள் மீது இயந்திர துப்பாக்கி போன்று அதிகாரிகளும், காவலர்களும், இராணுவத்தினரும் தம் கடமைகளை நிறைவேற்றுகின்றனர். இக்கூலிப்படைகள் தங்களுக்குரிய உணவையும், உடையையும், உழைப்பையும் கொடுத்த கபடற்ற மக்களை சில வேளைகளில் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர், சுட்டுத் தள்ளுகின்றனர். இராணுவத்திலும், காவல்துறையிலும் பலர் தண்ணிபோட்டு தம் கடமையை செய்கின்றனர். காரணம் தம் தார்மீகக் கடமைகளை சிந்திக்காமல், ஆணைகளை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறார்கள். எல்லோரும் அப்படி இல்லைதான். தெரிந்து, திட்டமிட்டு குற்றமிழைத்தவர்க்கும், எதேச்சையாக, தற்செயலாக உணர்ச்சி வசப்பட்டு குற்றமிழைத்தவர்க்கும் நீதித்துறை தண்டனையில் வேறுபாடு / காட்டப்படுவது உண்டு (Cold, premeditated, preplanned, wanton, willful acts vs emotional, unplanned). ஆனால் இக்கூலிப்படைகளின் கண்கள் முன்பு இதுகுறித்த எந்த வேறுபாடும் தெரிவதில்லை.

ஆண்டவர் இயேசுவைப் பொறுத்தவரை இப்படிப்பட்டப் பலர் தாங்கள் செய்வதை அறியாமல் 'கடமை' என்ற பெயரில் செயல்படும் குழுவினரில், தன்னைக் காயப்படுத்திய கும்பலும் ஒன்று எனக் காண்கிறார். ஆனால் ஆளுவோரால் எதிரி யார் என அடையாளம் காட்டப்பட்டாலும், அதனைப் புரிந்து பணியாளர் சம்பளம் வாங்கினாலும், கடவுள் பயத்தோடு வேலைசெய்த ஒரு சில நிகழ்வுகளை விவிலியத்திலும் காணலாம். 1) பார்வோனின் மருத்துவச்சிகள் பலர் பொய் சொல்லியே பல எபிரேயக் குழந்தைகளைக் காப்பாற்றினர் (யாத். 1:17), 2) கீழைநாட்டு முன்று ஞானியர் ஏரோதுவை நிராகரித்து உண்மைச் செய்தியை மறைத்தனர். இந்தியாவில் சிப்கோ இயக்கம் பெண்கள் VS கணவன்மார் இடையே போராட்டம் (Radical disobedience).

இது போன்று எது கடவுள் வாக்கு, எது சாத்தானின் உத்தரவு என்பதை பகுத்தறிவதில் நமக்கு ஆழ்ந்த ஞானம் தேவைப்படுகிறது. கடவுளின் அருளால் மட்டுமே ஞானம் பெறமுடியும்.

மன்னிப்பை யார் வழங்குவது? எனும் கேள்வி வருகிறது. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனித குமாரனுக்கு அதிகாரம் உண்டு எனக்கூறிய ஆண்டவர், இப்போது தந்தையிடம் அவர்களுக்காக மன்னித்திட கேட்கிறார் (மத். 9:6, மாற்.2:10, லூக்.5:24). பூவுலகில் பாடுபடும் ஒவ்வொரு மக்களின் பிரதிநிதியாக, எண்ணற்ற பலிக்கடாக்களின் பிரதிநிதியாக ஆண்டவர் தம் தந்தையிடம் வேண்டுகிறார். பூமியில் கட்டவிழ்ப்பது விண்ணுலகிலும் கட்டவிழ்க்கப்படும். பாவத்தை அறிக்கையிடாதவர்க்கு மன்னிப்பு வழங்கலாமா? மனமாற்றம் இல்லாமல் மன்னிப்புகூடாது என்பார் பேராயர் டெஸ்மண்டு டுடு (Desmond Tutu). ஆக, இது ஒருவழிப் பாதை அல்ல. மனந்திரும்புதல் இல்லாத பாவமன்னிப்புக்கு வாய்ப்பு உண்டா? ஆண்டவர் ஒட்டு மொத்த நிகழ்வைப் பார்க்கிறார். மொத்தத்தில் ஒருவித கூட்டுபாவம் இங்கு அடங்கியுள்ளதாகக் காண்கிறார் (Corporate sin). இதில் ஈடுபடுவோர் பெரும்பாலரும் செம்மறியாட்டு மந்தைபோல எந்த திறனாய்வு இன்றிச் செயல்படுவர். இவர்களைக் குறித்து ஆண்டவர் பரிதாபப்படுகிறார்.

செம்மறியாட்டு மனோபாவம் (mass mentality), திறனாய்வற்ற, மந்தை உளவியல்/மனப்பான்மை, தொலைக் காட்சி நுகர்வு பண்பாடு போன்றவற்றில் எது சமுகவிலை, எது உயிரினச்சூழல் விலை போன்றப்புரிதல் இருப்பதில்லை. இன்று பெப்சி (Pepsi) எனும் செயற்கை மெதுபானம் குடிக்கும் ஒவ்வொரு முறையும், தந்தையே இவர்கட்கு மன்னியும் தாங்கள் குடிப்பது இன்னதென்று அறியாமல் குடிக்கின்றனர் என ஆண்டவர் நினைப்பதாகவே நாம் பார்க்கவேண்டும். இப்படிப்பட்டவர்களை ஆண்டவர் நேரடியாக தடுக்க முடியவில்லை. உண்மையாகவே நம் எதிரி யார் எனத் தெளிவாகப் புரியாமல் பிறரைப் பகைக்கிறோம். நம்மை யார் பிரிக்கின்றனர்?

இதற்கு யார்யார் திட்டம் போடுகின்றனர்? உண்மையானப் பகைவர் யார் என சிந்திக்கவே நமக்கு நேரமில்லை. நாமும் நம் அரசுகளின், அதிகாரிகளின் ஆணைகளைக் கண்மூடித்தனமாக நிறைவேற்றத் துடிக்கிறோம். இவ்வாறே நாம் மகிமையின் ஆண்டவர் யார் எனத் தெரிந்தும் ஆண்டவரைத் தினம் தினம் சிலுவையில் அறையவில்லையா? ஆண்டவர் நம்மைப் பார்த்து, இவர்களை மன்னியும் என்று கூறும் அளவுக்கு நாம் செயல்படவில்லையா? ஆண்டவர் நம்மைப் பார்த்து பரிதாபப்படவில்லையா?

நாம் எதிரிகளை மன்னிக்க முடியாத ஒரு நெருக்கடியில் எப்போதும் வாழ்கிறோம். பணத்திற்காகக் கொலை செய்யும் கூட்டத்தினரும் இதைத்தான் செய்கின்றனர். தீமையின் கருவிகளாக கடவுளின் பிள்ளைகள் சில நேரங்களில் மாறமுடியும். 'ஆண்டவரே அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்' எனும் அசிசியின் பிரான்சிசின் இறைவேண்டல் அன்றாடம் நமக்குத் தேவை. தன்னை நேரடியாகத் தாக்கி, சிலுவையில் அறைந்தவர்களை, 'என் எதிரிகளே இல்லை' எனப் புரிந்த ஆண்டவர், இவர்களை உருவாக்குகிற சக்திகளை, அமைப்புகளை தெளிவாக அடையாளம் காண அழைக்கிறார். ஆண்டவர் இயேசுவின் உள்ளத்தை அணிந்து மற்றவர்களை, அயலவரை மன்னிக்க நம்மால் முடியுமா? நம் கண்ணோட்டம் மாறாமல் சாத்தியமில்லை.

இயேசுநாதரின் ஆழமான அரசியல் பார்வையை இன்று நாம் வெறும் சமயப்பார்வையாக மாற்றிக் கொண்டுள்ளோம். யார் நமது எதிரி? யாரைத் தீயோனாகக் கருத வேண்டும்? யாரை நண்பனாகக் கருத வேண்டும்? என்பதின் அறைகூவலே இந்த மன்னிப்பின் திருவாக்கியம்.




II. இன்று நீர் என்னோடு பேரின்ப வீட்டில் (பரதீசு) இருப்பீர் என உறுதியாக கூறுகிறேன்
(லூக்கா 23:43)
இரு குற்றவாளிகளுக்கு நடுவில் இயேசுவை சிலுவையில் அறையக் காரணம் என்ன? இரு புறமும் இரு கொரில்லா போர்வீரர்கள், அல்லது செலேத்திய தீவிரவாதிகள் என திருமறை வெளிச்சத்தில் நம்மால் ஒரளவு யூகிக்கமுடியும். இவர்கள் அரசியல் கைதிகளா? தீவிரவாதிகளா, போராளிகளா? என்ற தெளிவு தரப்படவில்லை. குற்றவாளிகள் என இருவரும் என தீர்ப்பிடப்பட்ட பின்னர், இயேசுவின் செயல்களும் அரச துரோக குற்றங்களே என செய்தி பரப்பச் செய்து, மற்றவர்க்கு எச்சரிக்கையும், பயமூட்டலையும் அளிக்க அரசு முனைந்தது.

அரசத் துரோக போராளிகளாக, குற்றவாளிகளாக தீர்ப்பிடப்பட்ட இருவரிடையே எத்தனை வேறுபாடுகள். ஒரே வகையான குற்றவாளிகளிடையே இருவிதமான அணுகு முறைகள். ஒருவர் இயேசுவை வெறுக்கிறார். ஒருவர் கவர்ச்சி யடைகிறார். இயேசுவை ஏளனம் செய்த முதல் குற்றவாளியின் மேசியாவைப் பற்றிய புரிதல் வேறு (23:39). இரண்டாம் குற்றவாளியின் புரிதல் வேறு. முதலாம் வகையினர் பிறர் சாகும்போதுகூட மற்றவர்களை ஈனப்படுத்துவது, கிண்டல் செய்வது, தரம் தாழ்த்தி மதிப்பிடுவது ஆகிய பண்புகொண்டோர். மேலும், 'எங்களைப் போன்ற சிறப்பு தந்திரம், சித்தாந்தம் (strategy) இல்லாதவர்கள், அரசியல் பார்வை இல்லாதவர்கள்' என பிறரைப் பார்ப்பது என அமைந்திருந்தது. 'இயேசு என்ற புதுஇயக்கம் ஒரு தனிநபரோடு முடிந்துவிடும். அதற்கு மரபு சார்ந்த புரட்சித் தன்மை இல்லை, இரத்தக் களரியோ, வன்முறையோ இல்லை. இது ஒரு போலிப்புரட்சி' (fake revolution) எனக் கருதினான் முதலாமவன். ஆனால் இயேசு அவனைக் கண்டிக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை, மாறாக அவனையும் மன்னித்துவிட்டார்.

குற்றவாளியென தீர்ப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாம் நபர் மனிதநேயம் கொண்ட ஒரு குற்றவாளி. இயேசுவையும் அவர் அணுகுமுறையும், குற்றமின்மையும், அவருக்காக அருகில்

நின்ற மக்களின் பதட்டத்தையும் சிலுவையிருந்து பார்த்து சிந்தித்தவர். கல்லுக்குள் ஈரம் கொண்டவர். முதலாமவர் இயேசுவை வசைபாடும் போது, இவர் அவரின் குணநலனைப் பாராட்டத் தொடங்கினார். 'நாம் தொடங்கிய அரசியல் கலவரத்தைவிட, இயேசுவின் இயக்கம் ஒருமக்கள் புரட்சியாக மாறப்போகிறது' என புரிந்து கொண்டார். இந்த அன்பின் புரட்சிதான் ஒருகாலத்தில் உலகை ஆளப்போகிறது என உள்ளத்தில் கண்டுகொண்டார். முதலாவது குற்றவாளியைக் கண்டித்தார்.

முதல் குற்றவாளியின் அணுகுமுறை ஒருவிதத்தில் கடைத்தரமானது. தானும், தன்னைச் சார்ந்தவர்கள் மட்டுமே சரியானவர்கள், உயர்ந்தவர்கள் எனக் கருதும் உயர்வு மனப்பான்மை கொண்டவர். தேசிய இன இயக்கங்களிடையே எப்போதும் சில போட்டிகள் உண்டு. 'இவர் எங்கள் குழுவினரைப் பிரித்து தம்மிடம் இழுத்தவர்தானே' என இயேசுவையும் முதலாமவன் ஒருவேளை பார்த்திருக்கலாம் (லூக்.6:14-15) வெறுப்பு அரசியல் (hate politics), வெறுப்புப் பேச்சு (hate speech) இன்றும் நம்மிடையே மலிந்துள்ளன. இந்த வெறுப்பு அரசியலை கிறித்தவர்கள் தாண்டியுள்ளோமா? இறையியல் கற்றோரிடம்கூட சிலர், எம் கல்லுாரியின் சித்தாந்தமே, அணுகுமுறையே சிறந்தது எனப் பெருமை பேசுவது உண்டு. இவைகளின் நடுவே, எதிரியிடமும் நல்ல இதயம் உள்ளது. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' எனப் பார்ப்பதற்கும் ஒரு பரந்த இதயம் வேண்டும்.

எனவேதான், வெளிப்படையாக உம்முடைய அரசியல் ஆட்சி உரிமையில் (political kingdom) என்னை நினைத்தருளும் எனக்கூறினார் இரண்டாமவர். எனவே ஆண்டவர் பதிலளிக்கும்போது, 'நீ என்னோடு சேர்ந்து இன்று பரதீசில், அதாவது சமயஞ் சார்ந்த நிறைவானதொரு இடத்தில் இருப்பாய்' என உறுதி கூறுகிறார். பரதீசு விவிலியத்தில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல். ஓர் இன்பமான, நீதியர்கள் வாழும் இடமாக (abode of righteous people-2Cor. 12:3), தெளிவற்ற இடமாக சித்தரிக்கப்படுகிறது. ஒருவேளை அன்றைய புரிதலில்,

ஆன்மாக்கள் இளைப்பாறும் இடமாக இருக்கலாம். ஆதியாகம் தொடக்கநூலில் 'பரதீசு' என்பதை மனித சமூகம் படைக்கப்பட்ட காலம், சூழல், இயற்கையின் சிறந்த அருட்கொடை நிறைந்த ஒரு சூழலைக் குறித்திருக்கலாம் (ஏதேன்). 'இன்றைக்கு' என்ற வார்த்தை 24 மணிநேரத்தில் என்றதொரு நேரகாலத்தைக் குறிக்காமல், நீ என் இடத்திற்கு அருகில் உள்ளாய் ('you are very closer to my place'), நீ என்னோடு உள்ளாய் ('you are with me') என்பதாகவும் பார்க்க வேண்டும் என விளக்கவுரையாளர் கருதுகின்றனர். இதனை ஒரு இறை-இணைவு அனுபவம் (mystic experience) எனவும் பார்க்கலாம்.

'அடியேனை நினைத்துக் கொள்ளும்' என்றக் குறிப்பு விவிலியத்தில் பல இடங்களில் வருகின்றன. பலர் பதவி, பணம், செல்வாக்கு வருமுன் பிறரிடம் நல்ல நண்பர்களாக இருப்பர். பின்னர் மறந்து விடுகின்றனர். சிலருக்கு மட்டும்தான் பழைய நினைவு, பழைய கடின அனுபவங்கள், உதவிகள் நினைவுக்கு வரும். ஒரு பானபாத்திரக்காரன் நினைவிலிருந்து யோசேப்பு சிலகாலம் அகன்றான் (ஆதி.40:14இ,23). தாவீது போக்கிரிகளுடன் திரியும் காலத்தில், 'கடவுள் நன்மை செய்யும்போது அடியாளை நினைத்துக் கொள்ளும்' என்றார் அபிகாயில் (1சாமு. 25:30-31). தாவீதும் மறக்கவில்லை.

கிறித்தவர் பிறரை எவ்வாறு எடைபோடுகின்றனர், எவ்வாறு தீர்ப்பிடுகின்றனர் எனப் பார்க்கும்போது, பாரபட்சமின்றி எல்லோரையும் பாராட்டும் எண்ணம் பொதுவாக வருவதில்லை. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். சிலுவையில் தொங்கிய இரண்டாம் குற்றவாளி திருமுழுக்கு எடுக்கவில்லை, திடப்படுத்தல் இல்லை, வல்லசெயல் இல்லை, புதிய பரவசமொழி இல்லை, ஆனால் ஒரே ஒரு நற்செய்தி வாக்கால் அவர் மனமாற்றம் அடைகிறார். காரணம் அவர் மற்றவர்களை எதிர்மறையாக பார்க்காமல் மனிதராக பார்க்க ஆரம்பித்தார். இயேசுவின் பரதீசு வாழ்வில் பங்கு பெற்றார். இரண்டாம் போராளியும், சிலுவையருகே நின்ற நூற்றுக்கதிபதியும் 'இவ்வளவு காலம் ஒரு நல்ல மனிதருக்கு (இயேசு) எதிராக நாம் செயல்பட்டுவந்த நிகழ்வுகள் வன்முறைக்கு வித்திடும் கருவிகளாகவே நம்மை

வழிநடத்தின' என்பதை பின்னரே புரிந்தனர். ஆண்டவரின் பணியே அவர்கட்கு குற்ற உணர்வினை ஏற்படுத்தி, அவர்கள் நிமிர்ந்து நடக்க வழிபெறப்பட்டது. இயேசுவின் சாவிலும் புதிய மானுட உறவு, புதிய சமுகத்தின் மலர்ச்சி, எழுச்சியைக் காணமுடிகிறது.

ஆண்டவரின் ஆட்சியில், நிலைவாழ்வில் எப்படிப் பட்டவர்கள் பங்குபெற முடியும்? மேற்கண்ட இருவரில் யாரைப்போன்ற அணுகுமுறை, வாழ்வுமுறை நம்மிடையே உள்ளது? பதவியினாலும், பட்டத்தினாலும், பணத்தாலும், வழிபாட்டாலும் பரதீசைப் பெற முடியாது. திருச்சபை சடங்கு களினால் மட்டுமே ஆண்டவரோடு இணைந்து வாழ முடியாது. திறந்த மனப்பான்மை, நல்லவர்களை ஏற்கும் பண்பு, பழைய தவறான வாழ்வைக் குறித்த குற்ற உணர்வு இப்பண்புகளே நம்மை ஆண்டவரோடு வாழ வழி வகுக்கும்.



III. அம்மா இவரே உம் மகன்.. தாய்.. இவரே உம்
(யோவான் 19:26-27)
சிலுவையின் அருகில் தாய் மரியாள் நிற்பதான ஒரு செய்தி யோவானில் மட்டுமே கூறப்படுகிறது. ஆண்டவர் இயேசுவால் அவர் தாய் வாழ்வில் பெரிதாக எதையும் அடையவில்லை. இருப்பினும் மரியாள், 'முதலில் விசுவாசித்தவளே பாக்கியவதி எனும் கூற்றால் ஆறுதலடைந்து வாழ்ந்தவள் அவள் (லூக்.1:45). கணவர் இழந்த சூழல், தன் மூத்த மகனால் தனக்கு எந்த வருமான முமில்லை. இவைகளை ஆண்டவரும் தன் உள்ளத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தார் என்பவை சிலுவையில் அவர் வார்த்தைகளால் வெளிப்பட்டன. மாறாக, அத்தாய் அதிக துயரங்களையும், வலிகளையும், பொறுப்புகளையும் அன்றாடம் அனுபவித்தார். சிமியோன் கூறியது போன்று படிப்படியாக மரியாளின் இதயத்தில் பட்டயம் ஊடுருவியது (லூக்.2:34-35). ஒரே நேரத்தில் பட்டயம் ஊடுருவுவதை காட்டிலும் படிப்படியாக இதயத்தில் ஊடுருவியது கொடிய வாழ்வு ஆகும். பண்டிகையன்று எருசலேம் கோவிலில் நடந்த தாய்-மகன் உரையாடல், கானாவூர் திருமணம் (தாயின் உறவினர்) அன்று மரியாவின் பரிந்துரையைக் கண்டித்தது (nepotism), இதர குழந்தைகளோடு தம்மை தாய் சந்திக்க வந்தபோது, யார் எனக்கு தாய், சகோதரர்கள் (லூக். 8:19-21), யார் என் தாய், சகோதரர்? (மத். 12:48) எனக் கேள்வி எழுப்பியது, தன் தாயின் சகோதரி, சலோமி அவரது இருமகன்களுக்கும் சிறப்பு இடம் கிடைக்க வேண்டினாள். அதுவும் மறுக்கப்பட்டது. மத்தேயு ஆசிரியர் கூற்றுப்படி, அதே பெண்மணியும் வலதுபுறமும் இடதுபுறமும் யார் பொறுப்பு பெறுவர் என்பதைத் தம் சிலுவைக்காட்சியால் பாடம் புகட்டும்படி அங்கு நிறுத்தப்படுகிறார்.

இயேசுவுக்கு அவர் கால சமுக பலிக்கடாக்கள் முன்னுரிமை பெறத்தக்கவர்கள். அவர்களே அவரது அகண்ட குடும்பத்தினர் (Extended family). இதன் காரணமாகவே அவரது சொற்கள் கொஞ்சம் காட்டமானவைகளாக காணப்பட்டன. ஒருவேளை

குடும்பத்தின் தேவையற்ற தலையிட்டின் வழி தமது பொதுவாழ்வு, சமுக மாற்றத்திற்கான திட்டம் தடைபடலாம் என நினைத்தாரா? குடும்பத்தை வெறுக்க கூறினாரா? 'குடும்பத்தை வெறுக்காவிடில் என்னிடம் சீடராக இருக்க முடியாது என்றவர் (லூக். 14:26, மத். 12:48). தாய்தந்தையை இழந்தால் அடுத்த வாழ்வில் பல மடங்கு கிடைக்கும் உறவுகள் என்று நினைத்தாரோ? (மத். 15:4-6). இருப்பினும், கொர்பான் காணிக்கை கொடுத்து தாய் தந்தையருக்குரிய கடமையை தவிர்க்கலாம் என்பதை எதிர்க்கிறார் (மாற்.7:8-13). பொது வாழ்வா, குடும்பவாழ்வா என்றதொரு நெடிய போராட்டம். (இங்கு கத்தோலிக்க சபைப் பிரிவினரின் இல்வாழ்க்கை துறப்பு குறிப்பிடத்தக்கது). ஆண்டவர் பழைய ஏற்பாட்டுத் திருவாக்கியங்களை மனதில் பதிந்து வைத்து, சிந்தித்து கொண்டிருந்தவர். பத்து கற்பனைகளில் பெற்றோரை கனம் பண்ணுவதையும், கற்பனையை நிறைவேற்றுவதையும், தாயையும் தந்தையையும் சபிப்போனின் தீபம் காரிருள் வேளையில் அணைந்து போகும் என்ற வாக்கியங்களையும் (நீதி.20:20) சிலுவையில் ஒருவேளை அவர் அசைபோட்டுக் கொண்டிருந் திருக்கலாம்.

இங்கு சிலுவையின் அருகில் அம்மாவைப் பற்றிய நினைவு திடீரென எழுந்த ஒரு நினைவல்ல. இரத்தம் இழந்து சோர்வான வேளையில் வாழ்நாளில் தன்னிடம் விம்மிப் பொருமிக் கொண்டிருந்த உணர்வின் வெளிப்பாடு. தன் அம்மாவைக் கவனிக்கும் பொறுப்பை சரியாக கையாளவில்லையோ என்ற ஒருவித குற்ற உணர்வு. எனவே, யோவானின் கையில் அம்மாவைப் பற்றியப் பொறுப்பை ஒப்படைக்கிறார். சாகப்போகிறவனின் (one who is dying) பாரத்தை சுமப்பதால், வாக்குறுதி கொடுத்து ஒருவர் கவலைகளைப் பகிர்வதால் ஆசீர்வாதம் வருவதாக யோபு கூறுகிறார் (யோபு 29:13). இது போன்ற ஒருபெரிய ஆசிர்வாதத்தை யோவான் பெற்றுக் கொள்கிறார். தாய் மரியாள் என்ன யோசித்துக் கொண்டிருந் திருப்பார்? சிலுவை அடிவாரத்தில் இந்தப்பொறுப்பை ஒப்படைத்தால் மரியாளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டதா என்ன? அதுவும் இல்லை. இரத்தபாசம், தொப்பிள் கொடி உறவு

ஆகியவை எளிதாக உதறிவிடக் கூடியதா என்ன? முதலாம் அற்புதத்தையும், சிலுவைக் காட்சியையும் ஒப்பிட்டு நினைத்திருக்கலாம். முதலாம் அற்புதத்தில் மரியாள் கண்முன்பு தண்ணீர், திராட்சைப் பானமாக மாறியது; ஆனால் சிலுவையில் இப்போது சிவப்பு இரத்தம் தண்ணீராக மாறியது (வெளியேறியது). இருப்பினும் ஒரு தார்மிக உதவிக்கான அங்கீகாரம் கிடைத்ததை அவர் பின்னர் உணர்ந்திருக்கலாம். இன்று நம் நிலைமை என்ன? அகண்ட குடும்ப உறவுக்காக இயேசுவின் சொந்த குடும்பம் தியாகம் செய்யப்படுகிறது. கடைசிவரை புதிய உறவில், புதிய குடும்பம், புதிய சமுதாயத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். சிலுவையிலும் தன் பொறுப்பை மறக்க முடியாத நம் ஆண்டவர். ஆனால் நம்மில் பலர் சிலுவையை அடையாமலே பொறுப்பை, கற்பனையை மீறுவதைக் குறித்து அக்கரையில்லை. பெருகிவரும் இன்றைய முதியோர் இல்லங்கள் சூழலில், 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அன்றே உணர்ந்த ஆண்டவர் நமக்கு ஒரு முன்மாதிரி எபேசுவில் உள்ள திருத்துாதுவர் யோவானின் கல்லறையை மரியாளின் கல்லறையாக பாவித்து இன்றும் மரியாதை செய்யப்படுகிறது (Harpers Commentary 13:6, p.1074).

ஆண்டவர் இயேசுவின் மரணநேரத்தில் புது சமூக உறவு உருவாகிய ஒரு காட்சியை நாம் இங்கு காண்கிறோம். பழைய உறவுகள் உடைகின்றன. இதுவரை நெருக்கமான அமர்ந்த சீடர்களில் பெரும்பானவர்களின் தலைமறைவு நேரம்; யூதரல்லாத பிற இன பெண்களின் இருப்பு நிலை; புதிய நம்பிக்கையாளர்கள் உருவாதல் (நூற்றுவர் தலைவர்); சிலுவை அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் நெருங்குதல்; யோவான்-மரியா எனும் புதிய மகன்-தாய் புதிய உறவு ஏற்படுதல் ஆகிய அனைத்தும் புது சமூக உறவு உருவாகிய (new community emerges) காட்சியை பிரதிபலிக்கின்றன.



IV. என் கடவுளே என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்? என மகா சத்தமாய்க் கூறினார்
(மத்தேயு 1.27:46, மாற்கு 15:33-39, சங்கீதம் 22:1)
சிலுவைச்சாவு என்பது ஒரு நீண்டகொடுர மரண வேதனை. வெயில் ஏற ஏற வலியின் உச்சமும் அதிகரிக்கும். இதனை உரோமையர் தம் கடைசி அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். இயேசுநாதர் ஒருவிதத் தனிமையை உணரத் தொடங்கினார். கைவிடப்படுதலை உணரத் தொடங்கினார். அப்போது அவருக்குள் நின்ற பாடலின் ஒரு திருவாக்கியமே, 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்' (சங். 22:1). இந்தத் திருமொழி பல கிறித்தவர்களுக்கும், இசுலாமிய நண்பர்களுக்கும் இடறலாக உள்ளது. எகோவா சாட்சியினரைப் பொறுத்தவரை, இவ்வாக்கியத்தால் இயேசுநாதரை கடவுளுக்கு இணையாகப் பார்க்க முடியாது என்கின்றனர். கிறித்தவரில் பலருக்கும் தோல்வியடைந்த ஒருவரை, பிறரிடம் உதவி கேட்பவரை எப்படி நம்முடைய துன்பத்திற்கு நிவராணியாகக் கருத முடியும்? என்கின்றனர். இயேசுநாதரை இயலாதவராக, கண்ணீர் வடிப்பவராக, மறைந்து தப்பிச் செல்பவராக, பசியுள்ளவராக நற்செய்திநூல் ஆசிரியர்கள் பல இடங்களில் காட்டியுள்ளனர். எனவே இயேசுவின் இந்த வாக்கியம் அவர்மீது பற்று வைத்திருக்கும் அனைவரையும் இடற வைக்கும் ஒரு கேள்வியாகும். இயேசுநாதர் நமக்கு வெளிப்படுத்திய கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிதல் அவசியம். சிந்தனை ரீதியாக கொஞ்சம் வேறுபாடு கொண்டவர் பலருக்கு இடறலைத் தந்த இந்த திருவாக்கியமே, பல கிறித்தவர்களுக்கு ஆழத்தைத் தந்துள்ளது. பலருக்கு இடறலாக (பைத்தியமாக) இருந்த சிலுவையே கிறித்தவர்க்கு வலுவாக மாறியுள்ளது (1கொரி.1:23-25). பலருக்கு சாபமான சிலுவை மரணமே நமக்கு புனித வெள்ளியாக உருவெடுத்துள்ளது (உபாகமம் 21:22-23, கலாத்தியர் 3:13-14).

ஆண்டவர் தம் தந்தையாகிய கடவுளிடம் கேட்ட இக்கேள்வி, நம்பிக்கை இழந்ததால் எழும்பிய கேள்வியா?

வலியில் வந்ததா? தோல்வியால் வந்ததா? சந்தேகத்தால் எழுப்பியக் கேள்வியா? ஒருபோதும் இல்லை! இதுபோன்ற கைவிடப்படும் நிலையும், இதுபோன்றக் கேள்வியும் எல்லா நீதிமான்களுக்கும் ஒருநாள் வரும் (யோபு உட்பட) என்பது அவருடைய உறுதியான எண்ணம். குறிப்பாக, மானிடமகன்கூட தாம் அடையப்போகும் துன்பக்கிண்ணம் தன்னை விட்டு நீங்கட்டும் என அவரும் விரும்பினார் (மத்.26:39). 'நீதியினிமித்தம் துன்புறுவோர் பாக்கியவான்கள் (மத்.5:10) என்ற ஆரம்பகால வாக்கியங்கள் போல, தன்னுடைய துன்பத்தை ஏற்க அவர் ஏற்கனவே தயாராகி விட்டார். 'கடைசிநேரத்தில் கடவுள் காப்பாற்றுவார்' என்ற அனுபவம் 90 விழுக்காடு மக்களுக்கு நடக்கவில்லை. எனவேதான் 'பச்சைமரத்திற்கு இந்தப்பாடு எனில் பட்டமரத்திற்கு என்னப் பாடோ?' என்று சிலுவைப் பயணத்தைப் பின்தொடர்ந்த மக்களைப் பார்த்து எச்சரித்தார். இயேசு 100 விழுக்காடு மனிதராக வாழ்ந்தார் என்பதற்கு இவ்வாக்கியம் ஒரு சான்று.

சிலுவை மரத்தில் ஏற்றி, ஆணி அடித்து, முகத்தில் துப்பி, சபித்து நிற்கும் ஒரு கூட்டத்திற்கு இயேசுவின் இந்த வார்த்தைகள் ஒருவிதத்தில் அவர்கள் தங்கள் செயலை ஆதரிப்பதாகவே அமைந்திருக்கும். ஆனால் பக்தியுள்ளோர்க்கும், நீதிமான் களுக்கும் எப்போதும் நல்லவை நடப்பதில்லை. தொடர்ந்து அவர்கள் அதிக சோதனைக்கு உட்படுத்தப்படுவர். பல நேரங்களில் நல்லவர் விண்ணப்பங்கள் கேட்கப்படுவதில்லை. தானியேல் நூலின் சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோவின் அனுபவமும் அப்படித்தான். நெருப்புச் சூளைக்கு அவர்களைக் கொண்டு செல்லும்வரைக் கடவுளைக் காணோம். நீதிமான்கள் பெரும்பாலும் நெருக்கப்படும்போது இதே அனுபவத்தைதான் உணருகின்றனர். சங்கீதம் 22 இதனையே வலியுறுத்துகிறது. நீதிமான்கள் வழிபடும் ஆண்டவர்கூட இகழப்படுகிறார் (சங்.22:8). ஆனாலும், அந்த சங்கீதம் நம்பிக்கையின் உச்சத்தில் முடிகிறது. இதுபோன்ற நேரங்களில் விவிலியம் காட்டும் (திரித்துவ) கடவுளும், தம் பிள்ளைகளை சிறிதுநேரம் கைவிட வேண்டிய, முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்தை முன்னிட்டு வேதனையடைகிறார்.

ஆண்டவராகிய இயேசு யாருக்காக கைவிடப்பட்டார்? தன்னுடைய வாழ்விற்காக குரல் கொடுத்தால் அவர் கைவிடப்பட்டாரா அல்லது எளிய, நிதிமான்களுக்காக குரல் கொடுத்ததால் கைவிடப்பட்டாரா? ஆக, முழு மானிடத்தின் நீதிமான்களுக்காக கைவிடப்பட்ட நிலையை உணர்ந்தார். பவுலுக்கு நடந்த அற்புதம்கூட இயேசுவுக்கு கிட்டவில்லை. ஆனாலும் அவர் முழுமையாக கைவிடப்படவில்லை என்ற உண்மை பின்னரே பலருக்கு தெரியவருகிறது.

இதுபோன்ற கைவிடப்படும் நிலை மனித வாழ்வில் நம் அனைவருக்கும் அடிக்கடிவரும். தரையில் போட்ட மீனைப்போல் துடிதுடிக்க வேண்டிய சில நேரங்கள் கடவுளால் அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவர் தம் குழந்தைக்கு ஊசி போடும்போது, அந்த வலியைக் காணும் தாய் தன் முகத்தை மறைப்பதில்லையா? கடவுளின் அன்பின் முகம் (தாய்-குழந்தை போன்று) மறைக்கப்படுகிறது. ஒரு பேராயர் என்னிடம் கூறினார். 'இயேசுவை தெய்வமாக பார்ப்பது மிக எளிது ஆனால், அவரை மனிதராக பார்ப்பது மிக கடினம்'. இயேசு சாதாரண மனிதருக்குரிய சராசரி துன்பங்களையும், கைவிடப்படுதலையும் தாமே உணர்ந்ததினாலே, சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் (எபிரே.2:18). இருப்பினும் அவர் கடந்து சென்ற எல்லா கடினப் பாதைகளையும் நம்மால் கடக்க முடியவில்லை.

துன்பம் வரும் என நினைத்தே நல்லவைகளைச் செய்வது நம் கடமை. சில வேளைகளில் கடவுள்கூட நம்மைக் கைவிடலாம், தம் முகத்தை மறைக்கலாம் என நினைத்தே, நேர்மையான செயல்களைச் செய்வது கடவுளின் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய அறைகூவலாகும். அதனையே ஆண்டவர் கிறிஸ்துவும் அனுபவித்தார். அதுபோன்ற நிலையிலும் நாம் உறுதியாக நிற்க கடவுள் அருள்செய்வாராக!



V. வேதவாக்கியம் நிறைவேற 'தாகமாயிருக்கிறேன்' என்றார்
(யோவான் 19:28)
பெரும்பாலான நம் இலெந்துகால அருளுரைகள் இயேசுவின் இந்தத் தாகத்தை ஆன்மீகத் தாகமாகவே, ஆன்மாக்களை ஈர்க்கும் ஒரு தாகமாகவே பார்க்கின்றன. சாவின் விளிம்பில் இருப்பவர்க்கும், இரத்தம் முழுமையாக இழந்தவர்க்கும், வெயிலின் உச்சகோரத்தை அனுபவித்தவர்க்கும் தாகம் என்பது ஒரு ஆன்மிகத்தேடுதல் அல்ல என்பதை முதலில் புரியவேண்டும். அது உடல் ரீதியான வேதனையின் குரல். நாவின் வறட்சியின் குரல் ஆகும். படுக்கையில் சாவுக்கு காத்திருப்போரின் நாவில் தண்ணீர் ஊற்றுவது தமிழகத்தில் ஒரு வழக்கு. தன் குருதியை முற்றிலும் வடியவிட்டபின் தாகம், இழப்பு, சோர்வு, தண்ணீர் இழப்பு, தளர்ச்சி, அச்சூழலில் இயல்பாக ஏற்பட்ட பசி ஆகியவை தவிர்க்க இயேசுவுக்கு முடியாதவைகளாகிவிட்டன. 'வேதவாக்கியம் நிறைவேற' எனும் யோவானின் சொற்கள் சங்கீதத்தில் (69:3,21) வரும் வாக்கியங்களை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம்.

யூதர்களைப் பொறுத்தவரை தாகம், தண்ணீர் போன்ற சொற்களின் வலிமை அவர்கட்டு நன்குத் தெரியும். பாலைவன, மணற்பாங்கான நாட்டில் தண்ணீருக்கு எத்தனை கடினப்பாடுகள் உண்டு என்பதை இஸ்ரேல் நாட்டிற்கு சென்றவர்க்கும் நன்குத் தெரியும். பலர் இன்றும் கூரையில் விழும் பனியின் தண்ணீர் சொட்டுகளை அவர்கள் வீட்டுக்கு அடியில் சேகரிப்பதுண்டு.

இயேசுவுக்கு 'தாகம்' என்ற சொல் புதியதன்று. சமாரியப் பெண்ணைக் கிணற்றினருகே கண்டு தாகத்துக்கு தண்ணீர் கேட்டவர் இயேசு (யோ.4:7). லாசரு - செல்வந்தன் உவமையில் 'தன் நாவு வறண்டு இருக்கிறது' என்ற குரல் வருகிறது. செல்வந்தன் -லாசரு உவமையில், ஒரு சொட்டு நீரை லாசரு விரலால் அளித்து, தம் நாவை நனைக்க வேண்டுகிறான் செல்வந்தன் (லூக். 16:25). தன் பெயரில் ஒரு கலசம் தண்ணீரை யாருக்கு வழங்கினாலும் பலன் உண்டு என்றார். எனவேதான் தீர்ப்பு காலத்தில்கூட

அப்படிப்பட்ட செயல்களால் கடவுள் கணக்கு கேட்பார் என்பதை ஆண்டவர் குறிப்பிடுகிறார். மத். 25:35-ல் நான் தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள் எனவும், மத்.25:42-ல் நான் தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்க்கவில்லை எனவும் தீர்ப்பு வழங்கியதாக ஒரு குறிப்பு வருகிறது.

'ஒருவர் தாகமாயிருந்தால் என்னிடம் வந்து பானம் பண்ணலாம்' என்றவர், ஏன் இப்போது சிலுவையில் 'தாகமாயிருக்கிறேன்' என்றார். ஏன் முரண்பாடுகள்? இந்த முரண்பாட்டுக்குக் காரணம் நம் மரபு விளக்கங்களே! இதனை ஏசா.55:1-2 பகுதியின் நிறைவேறுதலாகக்கூட யோவானும் பார்த்திருக்கலாம். எல்லாவற்றையும் 'ஆன்மீகத்தாகம்' என விளக்குவதால் வந்த விளைவு இது. மாறாக, இதனை சிலுவையில் ஏற்பட்ட தாகம், நாவு வறண்டுவிட்ட சூழலில் கூறப்பட்ட ஒரு மிகக் கொடிய அனுபவம் என்றுதான் கூற முடியும்.

ஒருமுறை தாவீதுக்கும் தாகம் வந்தது (2சாமு.23:15). தம் தாகத்தை கூறியபின் அவரது தொண்டர்கள் ஒரு குவளை தண்ணீர் எதிரிகளின் முகாமிலிருந்து கொண்டு வந்தனர். அதனை தாவீது மண்ணிலே ஊற்றிவிட்டார். ஏனெனில் அவர் அதன் சமூக விலையைப் பார்க்கிறார். எதிரியின் முகாமிலிருந்து எடுத்த தண்ணீர் ஒரு மனித உயிருக்கு நிகரானது என்ற முடிவுக்கு வருகிறார். இதுவும் ஒரு முரண்பாடு. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் நம் மரபு விளக்கங்களே.

இயேசுவின் தாகத்தை வெளிப்படையாக சிலுவையில் கூறியதால் போர்வீரர்கள் ஒரு கடமைக்காக, சம்பளத்திற்காக, சட்டத்திற்காக எதையோ ஒன்றை கொடுக்க முனைந்தனர். தாகத்தை புரிந்தும் தண்ணீர் கொடுக்கவில்லை. கேட்டபின் கொடுக்கவில்லை என்ற சட்டச் சிக்கல், மனித உரிமை சிக்கல் வேண்டாம் என எதையோ ஒன்றை கொடுக்க முனைந்தனர். ஆனால் அவரால் குடிக்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. தாகத்திற்கு மக்கள் தண்ணீர் கேட்கலாம், ஆனால் சாராயமும் தண்ணீர்தான், பெப்சி கோலாவும் தண்ணீர்தான். கசப்பு கலந்த காடியும் தண்ணீர்தான் என பல நேரங்களில் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. கடமைக்காக செய்யும் தற்காலிகத் தீர்வுகள்

குறித்து ஆண்டவர் திருப்தியடைவதில்லை. எனவேதான் ‘தாங்கள் செய்வதை தங்களுக்கே தெரியவில்லை' என்றார்.'

இயேசுவின் தாகம் அவருக்கான தாகம் மட்டுமல்ல, உலகில் ஒட்டு மொத்த எளிய மக்களின் தாகமும்கூட. இயேசுநாதருக்குக் கொடுப்பதும், தேவைப்பட்ட மக்களுக்கு தண்ணீரை வழங்குவதும், அடிப்படை வசதியை வழங்குவதும், கடவுளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு சமமாகும். உலகில் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் கடவுளின் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக பூமியைத் துளையிட்டு நாம் தண்ணீர் எடுக்க விரும்பினால் பக்கத்து நபர்கள் பாதிக்க வாய்ப்புண்டு. பல ஆயிரம் கோடி ஆண்டுகளாக நிலத்தடியில் பொதுவுடமைச் சொத்தாக, வைப்புநிதி போன்று சேமிக்கப்பட்ட நீர், இன்றைய தலைமுறைக்கான விற்கப்படக்கூடிய கடைச்சரக்காக மாற்றப் பட்டுள்ளது. எதிர்கால தண்ணீர் பஞ்சம் தவிர்க்க முடியாததாக உருவாகி வருகிறது. தண்ணீர் மறுக்கப்பட்டால் வாழ்வும் மறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆண்டவரின் தாகம் இன்னும் தொடர்கிறது!



VI. இயேசு காடியை வாங்கின பின்பு 'முடிந்தது' என்றுச் சொல்லி தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்
(யோவான் 19:30)
ஏனைய மூன்று சமநோக்கு நற்செய்தி நூற்களில் இயேசு மகாசத்தமாய் கூப்பிட்டு உயிர்விட்டதாகவும், அதனை இன்னும் விளக்கமாக யோவான் 'முடிந்தது' என கூறினதாகவும் குறிப்புகள் வந்துள்ளன. மிகக்குறைந்த எழுத்துக்களால் ஆன சொல் 'முடிந்தது' எனலாம். ஆனால் ஆழமான பல அர்த்தங்கள் உள்ள ஒருசொல்.

அவர் முழுமையாக முடித்தார் எனக் கூறாமல், என பணிகளை முடித்தேன், கடமைகளை நிறைவேற்றினேன் என்றார் (not completed but finished/ accomplished).

1) தந்தையின் உதவியுடன் முடித்தேன்:- கடவுள் தொடங்கியதை அவர் முடித்தார் எனவும் பார்க்கலாம். இது தோல்வி நிறைந்த வார்த்தையல்ல, தைரியமாக, நம்பிக்கையோடு கூறிய வார்த்தையாகும். தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை முடித்தார் (யோ. 17:4). எனவேதான் 'என்னை அனுப்பியவரின் சித்தத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு' என்றார் (யோ.4:34). தன் தந்தையாகிய கடவுளுக்கு முழுமையாக கீழ்படிந்த ஒரு வாழ்வு. அவர் கீழ்ப்படிதலின் உச்சகட்டம் சிலுவைச்சாவில் முடிந்தது. தந்தையின் இதயத்தை வெளிப்படுத்தும் ஒரு பணி முழுமையாக முடிந்தது. மனிதரிடையே கடவுளை வேறோரு விடுதலைக் கண்ணோட்டத்தில் காட்டும் பணி நிறைவுற்றது. கடவுளைத் தேடுகிற எல்லாராலும் எளிதில் உணரக்கூடிய, நிறைவைப் பெறக்கூடிய, அமைதியைப் பெறக் கூடியவராக காட்டப் பட்டார். கடவுளை நெருங்க அதிகாரப் படிநிலையோ, ஆழ்தியானமோ, சமய மரபுகளோ தேவையில்லை. அவர் பணியே அநியாயமாக துன்புறுவோரோடு தன்னை அடையாளப் படுத்துவதும், கடினப்பாடுகள் உள்ளோரின் குரலைக் கேட்பதும், அவர் கண்ணீரைக் காண்பதும், பலிக்கடாவாக ஆக்கப்பட்டோரை தாங்குவதுமாகும்.

2) இவ்வுலக மனித வாழ்க்கையை முடித்தேன்: ஒரு மானிடனாக வாழ்ந்ததில் எத்தனை அனுபவம் - தனித்துவம், பிறப்பு, வளர்ப்பு, போதனை, ஏழைகள்பால் அடையாளப் படுத்தல், துன்பம், பசி, தாகம், கண்ணீர், பாடு, கைவிடப்படல், சிலுவை ஆகியவை அனைத்தையும் அவர் ருசிபார்த்தார். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' நம்மைப்போல எல்லாப் பாடுகளையும் அனுபவித்து, சோதிக்கப்பட்டதால் இன்னும் உதவிசெய்யும் மனப்பக்குவம் அவரிடம் அதிகரித்தன (எபிரே. 2:18,4:15). தொழுவத்தில் பிறப்பு, எகிப்துக்கு தப்பியோடல், தலைச்சாய்க்க இடமில்லாத வாழ்க்கை, திருமணமில்லாத புதுகுடும்ப உறவுகள், இவை அனைத்தாலும் ஆண்டவர் இயேசுவை கடவுளின் குமாரன் என நம்புவதைவிட அவர் ஒருமனிதர் எனக் கூறுவது மிகக்கடினம் என்றார் பேராயர் கேசரி. எல்லா சோதனைகளையும் ஆண்டவரும் துணிந்து சந்தித்தார். பல நேரங்களில் சோதனைகளைத் தவிர்க்கவே சோதனை வந்தது. கெத்சமனே தோட்டத்தில்கூட அந்தச் சோதனை வந்தது. மனிதராகச் சிலுவையைச் சந்தித்தார். அவர் உயிரை யாரும் எடுக்கவில்லை (யோ.10:18). இவ்வுலக மனித வாழ்க்கையை முடித்தார்.

3) முடிவுக்கே ஒரு முடிவு கொண்டுவந்தேன்: 'நானே தொடக்கமும் இறுதியுமாயிருக்கிறேன்' என்றவர் தனக்கு அளிக்கப்பட்ட பணிக்கு ஒரு முடிவு கொண்டுவந்தார். கொடுக்கப்பட்டப் பணியை முடிக்கும் ஒருகாலம். மனிதரின் பணிநிறைவு தவிர்க்கவியலாதது. அதுபோன்று தொடக்க நூலில் ஆறுநாட்களும் படைப்பு பணியாற்றியபின் நிறைவாக முடித்து கடவுள் ஒய்வு எடுத்தார் (2:1). அதுபோன்று தம் பணிக்கு ஆண்டவர் ஒரு நிறைவு கொண்டு வந்தார். மேலும், மரணபயத்திற்கு ஒரு முடிவு கொண்டுவந்தார் (எபிரே.2:14-15) தீயோனின் வலிமைக்கும், சாவின் கொடுக்குக்கும் அவர் ஓர் எல்லை வகுத்தார் (கொலோசெயர் 2:14-15).

மொத்தத்தில் ஆண்டவர் கூறிய முடிவு ஒர் இறுதி முடிவல்ல. இன்னொரு வரலாற்றின் தொடக்கம். பாவிகள், அன்னியர், மாசுபட்டோர், பரதேசிகள், ஒரங்கட்டப்பட்டோர் என்பார்க்கு

இனி வாழ்வு இல்லை என நினைக்கும் மனிதரின் செயலுக்கு ஆண்டவர் ஒரு முடிவை, இல்லை. விடியலைக் கொண்டு வருகிறார். ஆண்டவருக்கு முடிவைக்கொண்டு வர நினைத்தோர்க்கு, கடவுள் ஒரு முடிவைக் கொண்டுவந்து, அதனை புதுத்தொடக்கமாக, வசந்தகாலமாக மாற்றினார். ஒரங்கட்டப் பட்ட கற்களை தலைக்கற்களாக மாற்றும் காலம். ஆண்டவர் இயேசு கூறும் முடிவு, ஒர் இடைக்கால முடிவு. ஆரம்பத்திற்கும் கடைசிக்கும் (அல்பா-ஒமேகா) இடையில் ஒரு முடிவை கொண்டு வருகிறார். முழுமையை நோக்கிய புதிய வாழ்வின் தொடக்கம், புதிய பார்வையின் தொடக்கம், புதிய சிந்தனையின் தொடக்கம், புதிய உறவின் தொடக்கம், புதிய மதிப்பிடுகளின் தொடக்கம், புதிய சமயத்தின் (மதத்தின்) தொடக்கம், கடவுளைப் பற்றிய புதிய புரிதலின் தொடக்கம். நாம் அனைவரும் நல்லவர்களாக மாறவேண்டிய காலத்தின் தொடக்கம். அவரது முடிவு ஏமாற்ற மளிக்கும் முடிவு அல்ல மாறாக, அவர் பணியை மகிழ்வாக ஒப்படைக்கும் ஒரு நிகழ்வு



VII. 'பிதாவே என் ஆவியை உம் கையில் ஒப்படைக்கிறேன்'
(லூக்கா 23:44-46)
ஆண்டவரின் கடைசி சிலுவை வாக்கியம்கூட ஒரு திருப் பாடலின் வரிகளே! (சங்கீதம் 31:5). புதிய ஏற்பாட்டில் ஸ்தோவான்கூட இதுபோன்ற ஒருவேண்டுதலைக் கூறி தன் ஆவியை (உயிரை) விட்டதாகப் பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 7:59-60). ஒவ்வொரு யூதரும் மூன்று நேரங்களில் இதுபோன்ற வேண்டுதலைக் கூறுவராம்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இவ்வாறு செய்வர்.

வழக்காடு மன்றங்கள், விசாரணை நேரங்களில் இவ்வாறு செய்வர்.

மரண நேரங்களில், இறுதிகட்டத்தில் இவ்வாறுசெய்வர்.

இயேசுவும் சங்கீதக்காரனைப் போன்றும், ஒரு யூதனைப் போன்றும் இந்த இறைவேண்டலைச் செய்து தன் ஆவியைத் தந்த கடவுளிடமே திரும்ப ஒப்படைக்கிறார். அவர் வாழ்ந்த பல நேரங்களில் இயேசுநாதரின் வார்த்தைகளைக் கொண்டு அவர் தற்கொலை செய்யப்போகிறார் எனப் புரளி கிளப்பப்பட்டது (யோவான் 8:22). ஆனால் அவர் ஒர் உண்மையான கோதுமை மணியே என்பதை இறுதியில் நிருபித்துவிட்டார் (யோவான் 12:24).

ஒருமுறை அமெரிக்க அய்க்கிய நாட்டின் இறையியல் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் ஒரே மகன் (வயது 23) ஒரு விசித்திர நோயால் சாக நேர்ந்தது. ஒரு சில நாட்கள் கழித்து அவர் தமது மாணவரிடம் அதனைப் பகிர்ந்து கொண்டபோது, 'கிறித்தவ வாழ்வு என்பது இரு சிலுவை வாக்கியங்களிடையே நடைபெறுகிறது. 'என் கடவுளே என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்?' 'தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்' என்றார். அதாவது, கைவிடப்படுதலுக்கும்-ஒப்படைத்தலுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்றார்.

ஒப்படைப்பு என்பதே பொதுவாக நமக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கும் ஒன்று. பதவியை ஒப்படைப்பதில் பலருக்கு மகிழ்ச்சி இருப்பதில்லை. ஒப்படைப்பதில் ஒருவித பயம், ஒரு பாதுகாப்பின்மை இருப்பதால் பலர் ஓடி மறைந்துவிடுவதும் உண்டு. கணக்கு ஒப்படைக்கும்போது சரியாக ஒப்படைப்பதில்லை. சிலர் தங்கள் பதவிகாலத்தில் வைத்திருந்த அலுவலகக் குறிப்புகளை, கணக்குகளை கணினியிலிருந்து அழித்துவிட்டு சென்ற நிகழ்வுகள் திருச்சபைக்குள்ளேயே நடந்துள்ளன. தன் பொறுப்பை ஒப்படைக்குமுன் கருவூலத்தைக் காலிசெய்து ஒப்படைப்பாரும் உண்டு. பணி ஓய்வுபெறுவதும், பணிகளை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதும் ஒருவித சூன்ய உணர்வைத் தருவது எல்லாருக்கும் வழக்கம். பலர் பணி ஒப்படைத்த அடுத்தநாளில் மரணமடைந்த நிகழ்வுகளைக்கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்தியச் சூழலில் மிக மூத்தவர்கள் இறக்கும்போது சாவியை, ஆவணங்களை, உயிலை (Will) தம் பிள்ளைகளிடமோ, தமக்கு பிரியமானவர்களிடமோ ஒப்படைப்பர். ஆனால் இங்கு கடைசி சொத்தாகிய தன் உயிரைக்கூட தந்தையிடம் ஒப்படைக்கிறார். ஆனால் ஆண்டவர் 33½ வயது மட்டுமே வாழமுடிந்த ஒர் இளவலாக, வாலிபராக தன் தந்தையிடம் தன் கடைசி ஒரே சொத்தாகிய உயிரையும் ஒப்படைக்கிறார். அவரிடம் இழப்பதற்கும், அதிகமாக ஒப்படைப்பதற்கும் எதுவும் இல்லை (யோ.10:17-18). இதனை ஒப்படைப்பு என்பதா? சரணடைதல் என்பதா? பரமாத்மாவுடன் இணைதல் என்பதா (இறை இணைவு)? தந்தைக்குள் அடங்குதல் என்பதா? பல்வேறு கோணங்களில் இந்த இணைவைப் பார்க்கலாம்.

தான் தொடர்ந்து செய்ய நினைத்திருந்த பணிகளை தன் தந்தையிடம் ஒப்படைக்கிறார். 'நான் மட்டுமே தகுதி வாய்ந்தவன்' எனக்கூறி நீண்ட வருடங்களாக தமது பணிகளை ஒப்படைக்காமல் காலம் கடந்துபவர் அல்ல அவர். இளைய தலைமுறைக்கு வழி விலக வேண்டும், அடுத்த தலை முறையினர் இன்னும் நன்றாக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. கடவுளின் பணி

என்பது ஒரு முடிவுற்ற பணியல்ல. தூய ஆவியாரின் பணி முடிவில்லாத பணி! அவர்களின் பணி தொடர வேண்டுமானால், என்னுடைய பணியை ஒப்படைத்துதான் ஆக வேண்டும். 'தான் போகாமல் சகாயர் உங்களிடம் வரமாட்டார்' (யோவான் 16:17). தூயஆவியாரின் தொடர் பணிகளுக்காக தன் பணியை தந்தையிடம் ஒப்படைத்தார்.

இயேசு நாதர் தம் ஒப்படைப்பில் எந்தவொரு இழப்பையும் காணவில்லை. அனைவரின் வாழ்வும் கடவுளுக்குள் மறைக்கப் பட்ட வாழ்வாகும். அதனைப் பவுல் அடிகள் கூறும்போது 'உங்கள் உயிர் கிறிஸ்துவோடுகூட கடவுளுக்குள் மறைந்திருக்கிறது' என்கிறார் (கொலோ.3:3). மொத்தத்தில் சாவின் பயத்திலிருந்து விடுதலை பெற்றவராக ஆக்கினைத் தீர்ப்பைப் பற்றி சந்தேகமற்றவராக, தந்தையின் பணியை யார் தடுத்தாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மிக்கவராக அவர் வாழ, நாமும் வாழக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
__________________________
ஆசிரியர்: அருட்பணி. முனைவர். சாலமன் விக்டசு 
அலைபேசி: 9843992900
மின்னஞ்சல்: solomonvictus@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.