ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலேயே மீண்டுமாய் உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆமோஸ் இறைவாக்கினர் நூலை நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம். ஆமோஸ் இறைவாக்கினர், சீர்கெட்ட தலைமுறைக்கும், நாற்றமெடுக்கும் சமுதாயத்திற்குமே இறைவாக்குரைக்கிறார். ஆமோஸ் இறைவாக்கினர் பொதுவாகக் குறிப்பிடுவது நீதியைத் தான். நீதி தண்ணீரைப் போல் வழிந்தோடட்டும், நேர்மை நீரோடையைப் போல் பாய்ந்தோடட்டும் என்றே ஆமோஸ் வீரமுழக்கமிடுகிறார். அநீதியாக நடக்கும் மக்களுக்கு அறிவுப் புகட்டுகிறார். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைக்கத் தெரியாதவர். ஆனாலும் கடவுளின் அருளால் இறைவாக்கு உரைக்கும் கருவியாகிறார். கி.மு. 8-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த ஆமோசின் இறைவாக்குகள் உருவாகின. ஆமோஸ் இறைவாக்கினர் ஆண்டவரின் நீதியை வழுவாது எடுத்துரைக்க ஏற்படுத்தப்பட்டவர். இவர் இரண்டாம் எரொபொவாம் காலத்தில் இறைவாக்கு உரைத்திருக்கின்றார். ஏழை மக்களை ஒடுக்கி அவர்களை நசுக்கும் நிலையைக் கண்டித்து ஆமோஸ் இறைவாக்கு உரைத்துள்ளார்.
பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் நீதி நெறியை மறந்து, வாழ்வு வேறு, வழிபாடு வேறு என்றும், கடவுள் சுகபோக வாழ்வை தருவார் என்றும் வாழ்ந்த மக்களுக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார்.
எனக்குத் தரப்பட்ட இப்பகுதியிலிருந்து ஆண்டவரின் வழக்கு அல்லது இஸ்ரயேலின் அழிவு என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த பகுதியை தியானிப்போம்.
ஏசாயா, ஒசேயா, மீக்கா போன்ற இறைவாக்கினர் போலவே ஆமோசுக்கும் இறைவாக்கு கொடுக்கப்பட்டது. இந்த செய்திகள் இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் பொருந்தக்கூடியது. ஆனால், இவ்வாக்கு சமாரியாவுக்கு முன் எருசலேமைச் சுட்டுகிறது என்றும் கூறலாம்.
முதலாம் திருமொழி: உடன்படிக்கையை மறத்தல்
சீயோனின் நகரத்தார் வளமையிலும், செழுமையிலும், செல்வாக்கிலும் சிறந்தோங்கினர். செல்வத்தோடு சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்தனர். உடன்படிக்கையின் மதிப்பீடுகளை முற்றிலும் மறந்துவிட்டனர். சீயோனின் சுகபோக வாழ்க்கை சமாரியாவையும் மிஞ்சிவிட்டது. எனவே அவர்களுக்கு எதிராக சாபங்களை உரைக்கின்றார் ஆமோஸ்.
இரண்டாம் திருமொழி: இறுமாப்பாய் வாழ்ந்தனர்
பெலிஸ்திய நாடான கல்னேக்கு, ஆமோத் இரண்டும் ஆராமின் அதாவது சீரியாவின் முக்கிய நகரங்கள். ஆமோசின் பார்வையில் சமாரியா, எருசலேம் மக்களின் வாழ்க்கைத் தரம் பிற சமயத்தவரைவிட உயரவில்லை. ஆனால், இம்மக்கள் தங்களுக்கு இணையாக யாரும் இல்லை என்று இருமாப்பில் வாழ்ந்தனர்.
மூன்றாம் திருமொழி: மறைவான பாவம், சோம்பல்
இஸ்ரயேலின் ஒழுக்க சரிவிற்கு இரண்டு காரணங்கள் கொடுக்கப்படுகின்றன. அவை: சோம்பல், மறைவான பாவம். பணக்காரர்கள் வேலை செய்யாமல், வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவர்களின் மறைவான பாவம். பல காரணங்களைக் காட்டி, நாள் பார்த்து, நேரம் பார்த்து வேலை செய்வதில் சோம்பல் கொள்ளுகிறார்கள். இதனாலே வன்முறையின் ஆட்சி வரும் என ஆமோஸ் இறைவாக்கு உரைக்கிறார்.
நான்காம் திருமொழி: உணவு மயக்கம்
சோம்பித் திரியும் இஸ்ரவேல் மக்கள் அறுசுவை உணவை உண்டு, தந்தத்தினால் அலங்கரிக்கப்பட்ட மரக்கட்டிலில், பஞ்சனையில் படுத்து உறங்குகினார்கள். பலர் ஆண்டிற்கு மூன்று முறை திருநாளில் மட்டுமே இறைச்சி உண்பார்கள். ஆனால், உயர்குடி மக்கள் தினமும் மூன்றும் வேலையும் இறைச்சி உண்பர். அவர்களிடம் செல்வம் இருக்கிறது. அவர்களைப் பார்த்து, ஐயோ, கேடு என்கிறார் இறைவாக்கினர்.
ஐந்தாம் திருமொழி: இசை மயக்கம்
இங்கு செல்வந்தரின் இசை மயக்கம் கூறப்பட்டுள்ளது. அவர்கள் உணவு, மது, மாது என மயங்கினர். இப்போது இசையில் மயங்கி புதுப்புது இசையை கண்டிறிய முனைகிறார்கள் என்று ஆமோஸ் கூறுகிறார்.
ஆறாம் ஏழாம் திருமொழி: தீச்செயல் செய்வோரின் அழிவு
இஸ்ரவேலர் செலுமையில் தீச்செயலை கடைபிடிப்பதாகவும், பொருட்களை வீணாக்குவதாகவும் ஆமோஸ் எழுதுகிறார். பொதுவாக கிண்ணத்தில் திராட்சைப்பழச்சாறு குடிப்பது இஸ்ரவேலரின் வழக்கம். தீச்செயல் செய்யும் செல்வந்தர்களோ கோப்பையில் அதிக அளவு திராட்சைப்பழச்சாறு குடிப்பதையே விரும்பினார்கள். அதைப்போலவே உடலை சுத்தமாக வைக்க எண்ணை தடவுவது இஸ்ரவேலரின் வழக்கம். ஆனால் இவர்கள் நறுமணத் தைலங்களை தொலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தினார்கள். தன்னிடம் வேலை செய்வோருக்கு உண்ண உணவும் கொடுப்பதில்லை. ஆகவே, அவர்கள் வேறோடே அழிக்கப்பட வேண்டும் என ஆமோஸ் இரைவாக்குரைக்கிறார்.
இன்றைய சூழலோடு ஒப்பிடும் போது விழிம்புநிலை உள்ள மக்கள் ஒடுக்கப்படுகிறதையும், அவர்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாததையும் நாம் நினைவில் கொள்வோம்.
உணவு மயக்கம் இன்று அதிகரித்துவிட்டது. நம் உணவு அறையில் நாம் எவ்வளவு உணவுகளை வீணாக்குகிறோம் என்று சிந்திப்போம். வீணாகும் உணவு ஏதோ ஒன்று, இரண்டு நபரின் பசியைப் போக்கலாம்.
சுகபோக வாழ்க்கையால் உடன்படிக்கையை மறக்கிறோமா? இருமாப்பாய் வாழ்கிறோமா? மறைவான பாவத்தில், சோம்பலில் இருக்கிறோமா? உணவு, இசை மயக்கத்தில் இருக்கிறோமா? செழுமையில் தீமை செய்கிறோமா? என சிந்தித்து நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைப்போம்.
இசை மயக்கமும் இன்று அதிகரித்துவிட்டது. அந்த மயக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்திப்போம்.
கடவுள் தாமே இந்த வார்த்தைகள் மூலமாக நம் அனைவரோடு இடைபடுவாராக. ஆமென்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.