Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | கடவுளின் தெரிந்தெடுத்தல் VS பிசாசின் தெரிந்தெடுத்தல் | Elijah Bible Study | Part 8 | Jesus Sam

=================
எலியா பாடம் எட்டு
==================
சாரிபாத்தில் எலியா
    கேரீத்திலே ஒவ்வொரு நாளும் காகங்கள் கொடுக்கின்ற உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த எலியாவை கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தை விட்டு வடக்கு புறமாக தீரு தேசத்தையும் கடந்து, சீதோன் என்னும் தேசத்திற்கு அனுப்புகிறார்.

    கேரீத்தில் தண்ணீர் வற்றியதும் எலியா வெகுதொலைவில் இருக்கக்கூடிய சீதோன் என்றும் தேசத்தில் உள்ள சாரிபாத் என்றும் ஊர் விதவையிடம் ஏன் செல்லவேண்டும்.

    எலியாவை பராமரிக்க இஸ்ரவேல் தேசத்தில் நல்ல மனிதர்கள் இல்லையா? அருகாமையில் உள்ள தீருவில் நல்ல மனிதர்கள் இல்லையா? இஸ்ரவேலிலும், தீருவிலும் விதவைகள் இல்லையா? ஆண்டவர் ஏன் சீதோன் தேசத்து சாரிபாத் ஊரில் உள்ள ஒரு விதவையிடம் எலியாவை அனுப்ப வேண்டும்.


சீதோன் தேசம்
    சீதோனியர்கள் பாகால் மெல்காட் என்ற தெய்வத்தை வணங்கி வந்தார்கள். சீதோனியர்கள் பலவிதமான மூடநம்பிக்கை கொண்டவர்கள். இந்த சீதோனியர்கள் விதவைகளை அதிஸ்டம் இல்லாதவர்களாக, துர்அதிஸ்டசாலிகளாக நினைத்தார்கள்.

    தமிழ் கலாச்சாரத்திலும் கூட விதவைகளை யாரும் மதிக்கமாட்டார்கள். திருமணம் போன்ற எந்த சிறப்பு நிகழ்ச்சிகளிலும் விதவைகளை முன்னிலைப்படுத்த விரும்பமாட்டார்கள்.

    தமிழர்களை விட சீதோனியர்கள் விதவைகளை மிக மோசமாக நடத்தினார்கள். சீதோனில் விதவைகள் மதிக்கப்படவில்லை, மிதிக்கப்பட்டார்கள்.

    சீதோன் தேசத்தில் ஒரு பெண் எவ்வளவு ஆஸ்திவைத்திருந்தாலும், அவளுடைய கணவன் இறந்துவிட்டாள், அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எல்லைப்புற பட்டணங்களுக்குச் சென்று, அங்குதான் வாழவேண்டும். சீதோனில் உள்ள எல்லைப்புற பட்டணங்களில் ஒன்று தான் இந்த சாரிபாத்.

    அந்த நாட்களில் ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் போர்புரிய வருகிறார்கள் என்றால், எந்த நேரத்தில் வருவார்கள் என்று தெரியாது. திடீரென எதிரிகள் தாக்க வந்தால், அவர்கள் முதலாவது எல்லைப் புறத்தில் உள்ளவர்களையே தாக்குவார்கள். எனவே, மிகப்பெரிய பொறுப்புக்களில் இருக்கின்றவர்கள், பணக்காரர்கள், தலைவர்கள் எவரும் எல்லைப்புறங்களில் வாழ மாட்டார்கள். சீதோன் தேசத்தைப் சுற்றிலும் உள்ள எல்லைப்பகுதிகளில் அதிகமாக விதவைகளும், சமுதாயத்தால் புறக்கனிக்கப்பட்டவர்களுமே வாழ்ந்து வந்தார்கள். இப்படி சீதோனியர்களால் ஒடுக்கப்பட்ட ஒரு விதவையின் வீட்டிற்குத் தான் எலியா சென்றார்.

ஆகாப் - யேசபேல்
    ஆகாப் ராஜா சீதோன் தேசத்து ராஜாவின் மகளைத் திருமணம் செய்திருந்தார். சீதோன் தேசத்து ராஜாவின் பெயர் யேத்பாகால். ஏத்பாகாலின் மகள் பெயர் யேசபேல்.

    இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாகிய ஆகாப், சீதோன் தேசத்து ராஜாவாகிய யேத்பாகால் என்பவரின் மகள் யேசபேலை திருமணம் செய்ததினால், சீதோன் தேசத்து இளவரணி யேசபேல், இஸ்ரவேல் தேசத்தின் ராணியாகிறாள்.

    இந்த யேசபேல் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்பையும், அவருடைய ஜனங்களையும் தங்கள் மதநம்பிக்கைக்குள் கொண்டு வருகிறாள். யெகோவா கர்த்தரை வணங்கிக்கொண்டிருந்த ஜனங்கள் யேசபேலின் செயலினால் பாகால்களையும், விக்கிரகங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். இந்த யேசபேல் தன்னை எதிர்த்த தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொலைசெய்தாள்.

    இஸ்ரவேலர்களை விக்கிரக ஆராதனைக்குள்ளாக நடத்தவும், இஸ்ரவேல் தேசத்திலுள்ள தீர்க்கதரிசிகளை (கடவுளுடைய ஊழியர்கள்) அழிக்கவும் சாத்தான் சீதோன் தேசத்து இளவரசியாகிய யேசபேலை பயன்படுத்தினான்.

    ஒரு தேசத்தின் முதல் பெண் என்பவள், ராஜாவின் மனைவி. ராஜாவின் மனைவி இறந்துபோனால், தேசத்தின் முதல் பெண்ணாக ராஜாவின் மகள் ஏற்படுத்தப்படுவாள்.

    அப்படியானால், சீதோன் தேசத்து முதல் பெண் யேத்பாகாலின் மனைவி. சரித்திர ஆராய்ச்சிப்படி ஆகாப் யேசபேலை திருமணம் செய்யும்போது, யேத்பாகாலின் மனைவி, அதாவது, யேசபேலின் தாய் உயிருடன் இல்லை. அப்படியானால், ஆகாப் யேசபேலை திருமணம் செய்தபோது, சீதோனின் முதல் பெண்ணாக இருந்தவள் இந்த யேசபேல்.

    ஆகாப் ராஜாவும், இஸ்ரவேல் ஜனங்களும் விக்கிரகங்களை ஆராதிப்பதற்காக சாத்தான் சீதோன் தேசத்து முதல் பெண்ணான யேசபேலை தெரிந்துகொண்டான்.

    இந்த யேசபேலை தோற்க்கடிக்க, இஸ்ரவேல் தேசத்தில் உள்ள பாகால் தீர்க்கதரிசிகள் நானூற்று ஐம்பது பேரையும் கொலைசெய்ய, இஸ்ரவேல் ஜனங்களை உண்மையான கர்த்தரின் பக்கம் மறுபடியும் கொண்டுவர ஆண்டவர் பயன்படுத்திய மனிதன் தான் இந்த எலியா.

    எந்த தேசத்திலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு பாகால் சிலைவழிபாடு வந்ததோ, அந்த தேசத்தில் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட, தேசத்தின் எல்லைப்புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்த, கடைசிவேலை உணவை சாப்பிட்டு மரித்துப்போக யோசனையாய் இருந்த அந்த பெண்ணின் மூலமாக கர்த்தர் எலியாவை போஷித்தார்.

    இஸ்ரவேல் தேசம் பாகாலை ஆராதிக்கும்படியாக பிசாசு சீதோன் தேசத்தின் முதல் பெண்ணை தெரிவு செய்தான். அதே சீதோன் தேசத்து கடைசி பெண்ணைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனான எலியாவை போஷித்தார்.


கர்த்தரே தெய்வம்
    சீதோன் தேசத்து கடைசி பெண்ணாகிய விதவையின் மூலமாக போஷிக்கப்பட்ட எலியா, பஞ்சக்காலம் முடிந்ததும், இஸ்ரவேலுக்குச் சென்று ஆகாப் ராஜாவுக்கு சவால் விடுக்கிறார்.

    ஒரு புறத்தில் இஸ்ரவேல் ஜனங்களும், ஆகாப் ராஜாவும், பாகாலின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளும் இருக்க, மறுபுறத்தில் எலியா ஒருவன் மாத்திரம் நின்றுகொண்டு இஸ்ரவேல் ஜனங்களுக்கும், ஆகாப்புக்கும், பாகால் தீர்க்கதரிசிகளுக்கும் சவால் விடுத்தார்.

    உண்மையான கடவுள் யார் என்பதை அறிந்துகொள்ள ஒரு போட்டி நடத்தப்பட்டது. எலியா பாகால் தீர்க்கதரிசிகள் நானூற்று ஐம்பதுபேரைப் பார்த்து சொல்லுகிறார், நாம் ஒரு பலி செலுத்துவோம். நீங்கள் உங்கள் பாகாலுக்கு பலிசெலுத்துங்கள், நான் எங்கள் உண்மை கடவுளுக்கு பலிசெலுத்துகிறேன். எந்த பலி அங்கிகரிக்கப்படுகிறதோ, அந்த தெய்வம் தான் உண்மையான தெய்வம் என்று எலியா சொன்னார்.

    இதைக் கேட்ட பாகாலின் தீர்க்கதரிசிகள், ராஜாவும், ஜனங்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், நாங்கள் நானூற்று ஐம்பது பேர் இருக்கின்றோம் என்ற தைரியத்தில் போட்டிக்கு ஒப்புக்கொண்டார்கள்.

    முதலில் பாகால் தீர்க்கதரிசிகள் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, தங்கள் சரீரங்களைக் கீரிக்கொண்டு தங்கள் தெய்வத்தை கூப்பிட்டார்கள். பாகாலிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இரண்டாவது எலியா தீர்க்கதரிசி ஒரு பலிபீடத்தை உண்டாக்கினார். ஆண்டவர் அக்கினியினால் பதில் கொடுக்கும்போது, அது வெப்பத்தினால் தானாய் நடந்தது என்று ஜனங்கள் நினைப்பார்கள் என்பதற்காக, எலியா பலிபீடத்தை நன்றாக தண்ணீரினால் ஈரமாக்குகின்றார். பலிபீடம் முழுவதும் தண்ணீரினால் நனைந்திருக்கிறது. பலிபீடத்தைச் சுற்றிலும் வாய்க்கால்களில் தண்ணீர் இருக்கின்றது.

    எலியா ஜெபித்த போது வானத்திலிருந்து அக்கினி வந்து, சர்வாங்க தகனபலியையும், விரகையும், கல்லையும், மண்ணையும் பட்சித்து, வாய்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

    எலியாவின் இச்செயல்களால் தேசத்தின் ஜனங்கள் அனைவரும் கர்த்தரே தெய்வம் என்பதை அறிந்து கொண்டார்கள். ஜனங்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்ட பின்பு, பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்று ஐம்பது பேரையும் கீசோன் ஆற்றண்டையிலே வெட்டிப்போட்டார்கள்.

    கர்த்தர் வெற்றி சிறந்தார். யேசபேல் தோற்கடிக்கப்பட்டாள். பாகால் வீழ்ந்துபோனது. பாகாலின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளும் கொலை செய்யப்பட்டார்கள்.

பிசாசின் தெரிந்தெடுத்தல்
    பிசாசு தனக்கென வேலைசெய்யும்படி உலகத்தில் தலைசிறந்தவர்களையும், ஞானிகளையும், அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும், செல்வந்தர்களையும், மருத்துவர்களையும், வக்கில்களையும், திறமைசாலிகளையும், புத்திசாலிகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்.

ஆண்டவரின் தெரிந்தெடுத்தல்
    பிசாசை தோற்க்கடிக்கும்படியாக கர்த்தர் உலகத்தில் பைத்தியக்காரர்களையும், ஏழைகளையும், விதவைகளையும், திக்கற்றவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும், திறமையற்றவர்களையும், செல்வாக்கு அற்றவர்களையும், ஞானம் இல்லாதவர்களையுமே பயன்படுத்தி வருகிறார்.

    அநேக ஊழியர்களை ஆண்டவர் பயன்படுத்துவதை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். சரியாக பாடத்தெரியாத, பேசத்தெரியாத, பொது இடங்களில் பேசுவது என்றால் பயந்து ஓடக்கூடிய, பேசவோ பாடவோ தைரியமில்லாத, சரியாக எழுதப்படிக்கத்தெரியாத நபர்களைக் கொண்டே ஆண்டவர் மிகச்சிறப்பான ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார்.

    இதை வாசிக்கின்ற அன்பு சகோதரரே, சகோதரியே எனக்கு திறமை இல்லை, ஞானம் இல்லை, பணம் இல்லை, பதவி இல்லை, பேசத்தெரியவில்லை, பாடத்தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களைக் கொண்டு தான் ஆண்டவர் பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    சிறந்த கல்விமான்களையும், ஞானிகளையும் எடுத்து பயன்படுத்தினால் அது அவர்களுக்குத்தான் பெருமை. ஒன்றுமே தெரியாத நம்மை எடுத்து உருவாக்கி, சிறந்த மனிதனாக மாற்றி, அநேகருக்கு பயனுள்ள பாத்திரமாக மாற்றுவதுதான் கர்த்தருக்கு பெறுமை.

    அந்த ஆண்டவரின் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்மை உயர்த்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுக்க அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.


எலியா பாடத்தின் சுருக்கம்
    எலியா என்ற தீர்க்கதரிசியை ஆண்டவர் ஆகாப் ராஜாவிடம் அனுப்பினார். மழையும் பனியும் தேசத்தில் வராது என்று கட்டளையிட்டார் என்று கற்றுக்கொண்டோம்.

    காகங்கள் மூலமாக கர்த்தர் எலியாவை போஷத்தார். நாமும் கூட கழுகுகளையும், நாரைகளையும், கடற்பறவைகளையும் நம்பி காகங்கள் மூலம் வருகின்ற ஆசீர்வாதங்களை இழந்துபோய்விடக்கூடாது என்று கற்றுக்கொண்டோம்.

    யோர்தான் போன்ற வற்றாத நிதியை நம்பி, கேரீத்கள் மூலம் கிடைக்கின்ற ஆசீர்வாதங்களை இழந்துபோய்விடக்கூடாது என்று கற்றுக்கொண்டோம்.

    கேரீத் வற்றியபோது எலியா கவலைப்படவில்லை ஆண்டவர் என்னை போஷிப்பார் என்று முழு நம்பிக்கை வைத்திருந்தார். நம்முடைய ஆசீர்வாதங்களும் குறைந்துபோகும்போது, ஆண்டவர் வேறு விதத்தில் நம்மை வழிநடத்துவார் என்று அறிந்து கொண்டோம்.

    சீதோனிய முதல் பெண்ணைக் கொண்டு பிசாசு இஸ்ரவேல் தேசத்தை விக்கிரக ஆராதனைக்குள்ளாக நடத்தினான். அதே சீதோன் தேசத்து கடைசி விதவையைக் கொண்டு கர்த்தர் தன் ஊழியக்காரன் எலியாவை போஷித்தார். நம்முடைய நினைவுக்கள் கர்த்தருடைய நினைவுகள் அல்ல. நம்முடைய முடிவுகள் மரண வழிகள். கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள் என்று அறிந்துகொண்டோம்.

    எலியா பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் விடுகின்றார், எலியா செலுத்திய பலியின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் கர்த்தரே தெய்வம் என்பதை அறிந்துகொள்கிறார்கள். பாகால் தீர்க்கதரிசிகள் அனைவரும் கொலைசெய்யப்பட்டார்கள் என்றும் அறிந்துகொண்டோம்.

    எலியாவைக் கொண்டு பெரிய காரியங்களை செய்த கர்த்தர், நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எலியாவைப்போல கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் சொல்லும் இடத்தில் நாம் அடங்கியிருக்கும்போது, நம்மைக் கொண்டும் தேசத்தை அசைக்க, தேசத்தை கட்டி எழுப்ப, தேசத்தை அவருக்கு சொந்தமாக மாற்ற அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக… ஆமென்..!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.