Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | எலியாவும் சாரிபாத் விதவையும் | Prophetic Elijah Bible Study | Part 7 | Jesus Sam

================
எலியா பாகம் ஏழு
=================
சாரிபாத் ஊர்
    கேரீத் துரவிலே எலியா சில மாதங்கள் தங்கியிருந்தார். கேரீத்தில் தண்ணீர் வற்றிப்போன பின்பு எலியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.


1 இராஜாக்கள் 17:9
    நீ எழுந்து, சீதோனுக்கு அடுத்த சாரிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு.

    எலியாவிற்கு பிரியமான ஒரு வார்த்தையை அங்கே ஆண்டவர் சொல்லுகிறார். வெளிதேசங்களுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஊழியம் செய்ய அழைப்பு வந்தால் எந்த ஊழியருக்குத் தான் சந்தோஷம் வராது. அப்படிப்பட்ட ஒரு அழைப்பு ஆண்டவர் மூலமாகவே எலியாவிற்கு கிடைக்கின்றது.

    இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எலியாவை கர்த்தர் அழைத்து சீதோன் என்ற நாட்டிற்கு புறப்படச் சொன்னார். இஸ்ரவேல் நாட்டிலிருந்து வடக்குப்புறமாக சென்றால், தீரு என்ற நாட்டை பார்க்க முடியும். இந்த தீரு நாட்டையும் கடந்து மேலே சென்றால் சீதோன் என்ற நாடு வரும்.

    எலியாவிற்கு பதிலாக நாம் அங்கே இருந்திருப்போமானால், ஆண்டவரே கேரீத் வற்றியதற்காக உமக்கு நன்றி. கேரீத் வற்றிப்போனதினால் என்னை வெளிநாட்டிற்கு அனுப்புகிறீர். சீதோன் நாட்டில், சாரீபாத் என்ற ஊர் மிகப்பெரிய ஊராகத்தான் இருக்கும். அங்கு உள்ள ஏதோ ஒரு பணக்காரனின் உள்ளத்தில் நீ பேசியிருப்பீர். அவர் தான் எனக்கு உணவு கொடுத்து, என்னை பராமரிக்கப்போகிறார், கேரீத்தில் எனக்கு இருந்த அந்த சந்தோஷத்தைக் காட்டிலும், சாரிபாத்தில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கப்போகிறேன் என பலவிதமான எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழும்பியிருக்கும்.

    இந்த காலத்தில் இருப்பது போன்று விமான வசதிகள், பேருந்து வசதிகள் அந்த நாட்களில் இல்லை. எங்கு சென்றாலும் நடந்தே தான் செல்ல வேண்டும். இஸ்ரவேலைக் கடந்து, தீருவைக் கடந்து, சீதோனுக்கு போவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சீரு சீதோன் தேசங்கள் பாலைவனப் பிரதேசனங்கள். பாலைவனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டுமானால் மிகவும் கடினம்.

    நீ சீதோனில் உள்ள சாரிபாத் என்ற ஊருக்குச் புறப்படு. அங்குள்ள ஒரு விதவையைக் கொண்டு உன்னை போஷிப்பேன் என்று ஆண்டவர் எலியாவிடம் சொன்னார்.


    ஒரு வேலை எலியா யோசித்திருக்கலாம், ஆண்டவரே நான் ஒரு ஊழியக்காரன். நான் எப்படி விதவையின் வீட்டில் தங்க முடியும். என்னைப் பார்க்கின்ற மக்கள் என்னை தவறாக நினைப்பார்களே என்று யோசித்திருக்கலாம்.

    ஆண்டவர் கேரீத்திலிருந்து சாரிபாத் ஊரில் உள்ள விதவையின் வீட்டிற்கு என்னை அனுப்புகிறார் என்றாள், அவள் நிச்சயம் ஒரு பெரிய பணக்காரியாகத்தான் இருக்க வேண்டும். அவளுக்கு அநேக வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் இருப்பார்கள்.  சூழ்நிலை காரணமாக கணவனை இழந்திருப்பாள், நான் அங்கு சென்றதும், எனக்கு தனியாக ஒரு அறையை ஒதுக்கி, தினமும் எனக்கு உணவு கொடுத்து நன்றாக கவனித்துக்கொள்வாள், எனக்கென வேலை செய்வதற்கு அநேக வேலையாட்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வசதியான வீட்டைத்தான் ஆண்டவர் எனக்கு தெரிவு செய்து வைத்திருப்பார் என்று எலியா யோசித்திருக்கலாம். எலியா இடத்தில் நாம் இருந்திருப்போமானால், அப்படித்தான் நினைத்திருப்போம். இப்படி பலவித கனவுகளோடு சாரிபாத் வந்த எலியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    எலியா சாரிபாத் பட்டணத்து ஒலிமுகவாசலண்டை வந்தபோது அங்F ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். 1 இராஜாக்கள் 17:10-ல் ஒரு விதவை என்று தமிழ் வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஆனால், மூல பாஷையில் அந்த விதவை என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த பெண்ணை பார்த்ததும், இந்த பெண் தான் ஆண்டவர் என்னை போஷிக்கும்படியாக தெரிவு செய்த பெண் என்பதை எலியா ஆவியில் புரிந்துகொள்ளுகிறார். அந்த பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கிறதை பார்த்த எலியாவின் மனத்திற்குள் ஒருவித அதிர்ச்சி வந்திருக்கும்.

    விறகு பொறுக்குவது என்பது வேலைக்காரர்களின் வேலை. எஜமான்கள், எஜமாட்டிகள் விறகு பொருக்கமாட்டார்கள். அந்த விதவையே விறகு பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் என்றால், அவளுக்கு வேலைக்காரர்கள் இல்லை என்பதை எலியா உணர்ந்து கொள்ளுகிறார். வேலைக்காரர்கள் இல்லாததால், அவள் ஒரு ஏழை என்பதையும் எலியா புரிந்துகொள்ளுகிறார்.

    பலவிதமான கனவுகளோடு, எதிர்பார்ப்போடு வந்த எலியா, இந்த விதவையை பார்த்தவுடன் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாய் இருந்திருக்கும். அந்த ஏழை விதவையின் வீட்டில் சாப்பிடுவதற்கு கேரீத் எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூட எலியா யோசித்திருக்கலாம்.

    ஒரு சபை விசுவாசி ஒரு பிரபலமான ஒரு ஊழியரிடம் சென்று, ஐயா நீங்கள் எங்கள் திருச்சபைக்கு ஒரு சுவிசேஷ கூட்டம் நடந்த வரவேண்டும். மூன்று நாள் கூட்டம் அது. அநேக விசுவாசிகள் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுவார்கள். மூன்று நாளும் உங்களை சிறப்பாக நாங்கள் கவனித்துக் கொள்ளுவோம். உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்போம் என்று சொன்னால், அந்த ஊழியர் எவ்வளவு தாழ்மையான ஊழியராக இருந்தாலும், அவருக்குள்ளாக ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படும். அந்த திருச்சபையார் என்னை எப்படி பராமரிப்பார்கள் என்று தெரியவில்லை, அவர்கள் சொல்வதைப் பார்த்தால், மிகச் சிறப்பாக பராமரிப்பார்கள் என்ற என்னம் மனதில் தோன்றும்.

    எலியாவிடம் நீ சாரிபாத்துக்குப் போ, நான் ஒரு விதவையைக் கொண்டு உன்னை போஷிப்பேன் என்று சொன்னது ஆண்டவர். அப்படியானால், எலியாவிற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்திருக்கும். சாரிபாத்துக்கு வந்து பார்த்தால், ஒரு ஏழை விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த எலியா ஆண்டவரே நீ என்னை மறுபடியும் கேரீத்திற்கே அழைத்துச் சென்றவிடும் என்று சொல்லியிருந்தாலும், சொல்லியிருக்கக்கூடும்.

    எலியா சாரிபத் வந்து விட்டார், விறகு பொறுக்கிக் கொண்டிருக்கின்ற விதவை தான் ஆண்டவர் என்னை பராமரிக்கும்படியாக ஏற்படுத்தின விதவை எனவும் அறிந்துகொண்டார். எலியாவிற்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும், எங்கள் ஆண்டவர் எங்களோடு பேசுகிறவர், எனக்கு தரிசனமாகி சாரிபாத் விதவை உன்னை போஷிப்பாள் என்று சொல்லிவிட்டார். ஆனால், அந்த விதவை ஒரு அந்நிய தேசத்துப் பெண். அந்த பெண்ணிடம் ஆண்டவர் ஒரு தீர்க்கதரிசி உன்னிடம் வருவான், அவனை நீ நன்றாக பராமரித்துக்கொள் என்று சொல்லியிருப்பாரா? என்ற கேள்வி எலியாவிற்கு வந்திருக்கும்.

    தமிழ் வேதாகமத்தில் எலியா அந்த விதவையிடம் சென்று பேசினார் என்று வாசிக்கிறோம். எப்படி பேசினார் என்று நாம் யோசிக்க வேண்டும். எலியா இஸ்ரவேல் நாட்டில் வாழ்ந்தவர், எபிரெய மொழி அறிந்தவர். ஆனால் சீதோனியர்கள் பேசுகின்ற சீதோனிய மொழி அறியாதவர். அந்த விதவைக்கு சீதோனிய மொழி தெரியும், ஆனால் எபிரெய மொழி தெரியாது. எலியா நிச்சயம் சைகையின் மூலமாகத்தான் அந்த பெண்ணிடம் பேசியிருக்க வேண்டும்.

    ஆண்டவர் அந்த விதவைக்கு தரிசனமாகி, என்னைப் பற்றி சொல்லியிருப்பாரா என்று அறிந்து கொள்ள விரும்பிய எலியா, அந்த விதவையின் அருகில் சென்று சைகையின் மூலமாக கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டிருப்பார்.

    அந்த விதவை எலியாவை எந்த கோலத்தில் பார்த்திருப்பாள் என்று யோசித்துப்பாருங்கள். எலியா புதிய உடை அணிந்து, அழகாக தலைவாரி, நறுமணத்தைலங்கள் பூசிக்கொண்டு வந்திருக்க மாட்டார். குறைந்தது மூன்று நான்கு நாட்கள் பாலைவனத்தில் பிரயாணம் செய்து வந்திருக்கிறார். சரீரம் முழுவதும் தூசுபடிந்து, முடிகளெல்லாம் ஒன்றோடொன்று பின்னி தான் வந்திருப்பார். இவருடைய உடையைப் பார்க்கும்போது இவர் ஒரு சீதோனியன் அல்ல என்பதையும் அந்த விதவை அறிந்திருப்பாள்.

    ஏதோ ஒரு அந்நிய தேசத்தான் தண்ணீர் தானே கேட்கிறான் கொடுப்போம் என்று நினைத்து தண்ணீர் எடுக்க தன் வீட்டிற்கு புறப்படும்போது, எலியா அந்த விதவையைப் பார்த்து, கொஞ்சம் அப்பமும் உன் கையில் எனக்கு கொண்டு வா என்று கேட்கிறான்.

    இதைக் கேட்ட அந்த விதவை என்ன யோசித்திருப்பாள். யாரோ ஒரு அந்நியன், பிரயாணத்தில் கலைத்துப்போய் இருப்பான் என்று நினைத்து தண்ணீர் கொடுக்க சம்மதித்தோம், இப்பொழுது இவன் உணவும் கேட்கிறானே என்று கோபமடைந்திருப்பாள்.

    எ.கா கதை - பாலைவனத்தில் ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மேல் பிரயாணம் செய்தான். இரவு நேரமானதும், ஒரு கூடாரத்தைப்போட்டு, அதின் அருகே தன் ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு, கூடாரத்திற்கு படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில், ஒட்டகம் அந்த மனிதனைப் பார்த்து: வெளியே குளிர் அதிகமாக இருக்கிறது, என் தலையை மாத்திரம் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ளவா? என்று கேட்டது. தலை மாத்திரம் தானே வைத்துக்கொள் என்று அவன் சொன்னான். நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஓட்டகம் கூடாரத்திற்குள் வந்தது, அந்த மனிதன் கூடாரத்தை விட்டு துரத்தப்பட்டான். இந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    அதைப்போலத்தான் இங்கே எலியா விதவையிடம் முதலில் தண்ணீர் கேட்டான், அவள் சரி கொண்டு வருகிறேன் என்று சொன்னதும் கொஞ்ம் அப்பமும் கேட்கிறான். இதைக்கேட்ட அந்த விதவை, என்னிடம் இருப்பதே ஒருபிடி மாவும், கொஞ்சம் எண்ணையும், அதை சமைத்து சாப்பிட்டு, நானும் என் பிள்ளையும் மரித்துப்போகப்போகிறோம். அதை சமைக்கத்தான் கொஞ்சம் விறகு பொறுக்கிக்கொண்டிருக்கிறேன். இதில் நான் எப்படி உனக்கு அப்பம் கொடுக்க முடியும் என்று அவள் சொல்லுகிறாள்.

    அந்த பெண் கணவனை இழந்த ஒரு விதவை. ஒருவேலை என் கணவன் உயிரோடு இருந்திருப்பாரானால், இந்த பஞ்சத்தில் நான் சாகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனக்கென்று யாரும் இல்லாததால், நான் இந்த கடைசி உணவை சாப்பிட்டுவிட்டு, மரிக்கப்போகிறேன், என்னிடம் இருந்த எல்லாம் முடிந்துவிட்டது என்று பாரத்தோடு, ஏக்கத்தோடு அழுதுகொண்டே அந்த விதவை எலியாவிடம் சொல்லியிருப்பாள்.


    அப்படிப்பட்ட ஒரு விதவையைக் கொண்டே கர்த்தர் எலியாவை போஷித்தார். பஞ்சக்காலம் முடியும் வரை எலியா அந்த விதவையின் விட்டில் தான் இருந்தான். பஞ்சக்காலம் முடியும் வரை அந்த விதவையின் வீட்டில் மா செலவழியவுமில்லை, எண்ணெய் குறையவுமில்லை.

ஏசாயா 55:8
    என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

    ஆண்டவர் என்னை இப்படித்தான் நடத்துவார், இப்படித்தான் போஷிப்பார் என்று நாம் நினைக்கலாம். நம்முடைய நினைவுகள் கர்த்தருடைய நினைவுகள் அல்ல. அவர் எல்லாவற்றையும், சரியாய் நேர்த்தியாய் செய்கிறவர்.

நீதிமொழிகள் 14:12
    மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள்.

    நாம் சுயமாக ஆண்டவர் என்னை இந்த பாதையில் தான் நடத்துவார் என்று நினைப்போமானால், அதின் முடிவுகள் மரணத்தைக் கொண்டு வரும். அவர் நம்மை நடத்துவாரானால் அதின் முடிவுகள் நித்தியமானதாக இருக்கும்.

    ஆண்டவர் என்னை இப்படித்தான் போஷிப்பார் என்று சற்றும் யோசித்திருக்கமாட்டார் எலியா. மொழி தெரியாத, வேறு காலாச்சாரப் பிண்ணணி கொண்ட, வேறு தெய்வத்தை ஆராதித்துக்கொண்டிருந்த, ஒரு ஏழை விதவையைக் கொண்டே எலியாவை போஷிக்க ஆண்டவர் விரும்பினார். நம்முடைய நினைவுகளை விட அவருடைய நினைவுகள் வித்தியாசமானது.

    ஒருபிடி மாவும், கொஞ்சம் என்னையும் இருக்கிறது, இதை சாப்பிட்டுவிட்டு நானும் என் பிள்ளையும் மரிக்கப்போகிறோம் என்று அந்த விதவை சொன்னபோது, எலியா ஒரு வித்தியாசமான பதிலை கொடுக்கின்றார். நானும் என் பிள்ளையும் சாகப்போகிறோம் என்று நீ நினைக்கிறாய், அந்த கொஞ்சம் மாவில் முதலாவது எனக்கு ஒரு அப்பம் கொண்டு வந்தால், தேசத்தில் பஞ்சம் முடியும் வரை உன் வீட்டில் மாவும், எண்ணெயும் குறைந்து போவதில்லை என்று எலியா சொல்லுகிறார்.

    எலியாவின் வார்த்தையைக் கேட்ட அந்த விதவை, முதலாவது அடையை செய்து எலியாவிற்கு கொண்டுவந்தால், பஞ்சம் முடியும் வரை அந்த எலியாவும் உயிரோடு பாதுகாக்கப்பட்டார், எலியாவின் மூலமாக அந்த விதவையும், விதவையின் மகனும் பாதுகாக்கப்பட்டார்கள்.

    கர்த்தர் நாம் விரும்புகிறபடி, நாம் எதிர்பார்க்கின்ற படி நம்மை ஆசீர்வதிக்காமல், நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்திலேயே நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.

    எலியாவிற்காக ஒரு விதவையை ஆயத்தப்படுத்தின தேவன், நமக்காகவும், நம்மை ஆசீர்வதிக்கவும் முன்னமே திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார். அவருடைய கரத்தின் கீழ் அடங்கியிருப்போம். அவர் தருகின்ற நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்...!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.