Type Here to Get Search Results !

எலியாவும் எலிசாவும் | Prophet Elijah VS Elisha | Bible Study | Christian Message Notes in Tamil | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

=====================
எலியாவும், எலிசாவும்
======================
    எலியாவும், எலிசாவும் வெவ்வேறு காலகட்டத்தில், மரித்துப்போன இரண்டு மகன்களை உயிரோடு எழுப்பியவர்கள். எலியா ஒரு மகனை உயிரோடு எழும்பிய நிகழ்வை 1 இராஜாக்கள் 17-ம் அதிகாரத்தில் பார்க்க முடியும். எலிசா ஒரு மகனை உயிரோடு எழுப்பிய நிகழ்வை 2 இராஜாக்கள் 4-ம் அதிகாரத்தில் பார்க்க முடியும்.


1 இராஜாக்கள் 17
    தேசத்தில் பஞ்சம் வந்தபோது எலியா கேரீத் என்னும் துரவிலே, காகங்கள் மூலம் தனக்கு கிடைத்த உணவை உண்டு வந்தார். தாகத்திற்கு கேரீத்தின் தண்ணீரை பயன்படுத்தினார். கேரீத்தில் தண்ணீர் வற்றியபோது, ஆண்டவர் எலியாவை சாரிபாத் என்னும் ஊருக்கு புறப்படச் சொன்னார்.

    எலியா சாரிபாத் ஊர் எல்லையில் ஒரு விதவையைப் பார்த்தார். அவள் விறகு பொருக்கிக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று எலியா கேட்டார். அவள் தண்ணீர் எடுக்க செல்லும் நேரத்தில், எலியா அந்த பெண்ணை அழைத்து, கொஞ்சம் அப்பமும் கொண்டு வா என்று கூறினார்.

    அந்த பெண் எலியாவைப் பார்த்து: ஐயா தேசத்திலே கொடிய பஞ்சம், எங்களிடம் இருந்த உணவும் செலவழிந்துவிட்டது. கடைசியாக இருக்கின்ற கொஞ்சம் மாவிலே, நானும் என் மகனும் அப்பம் சுட்டு சாப்பிட்டு மரித்துப்போகப் போகிறோம் என்றாள்.

    எலியா அந்த பெண்ணை பார்த்து: உனக்கு இருக்கின்ற கொஞ்சம் மாவிலே, முதலாவது ஒரு அப்பத்தை சுட்டு, எனக்கு கொடு. பின் உன் வீட்டிலே மாவும், எண்ணையும் குறைவதில்லை என்று கூறினார்.

    எலியா ஒரு தேவ மனிதன் என்பதால், அவனுடைய வார்த்தைக்கு இனங்கி, அவனுக்கு ஒரு சிறிய அப்பத்துண்டை கொடுக்க அவள் உடன்பட்டாள்.

    ஒருவேளை அந்த விதவை இருந்த இடத்தில் நாம் இருந்திருப்போமானால், எலியாவைப் பார்த்து, முதலில் மாவையும், எண்ணையையும் அதிகரிக்கச் செய்யும், பின்பு நான் உமக்கு ஒரு அப்பம் செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருப்போம்.

    ஆண்டவருடைய ஆலயத்திற்கு கொடுக்கும் போதும், ஆண்டவரே என்னை ஆசீர்வதியும், தொழிலிலே நல்ல முன்னேற்றத்தைத் தாரும், பின்பு உம்முடைய ஊழியத்தை தாங்குகிறேன் என்று தான் நாம் ஜெபிப்பதுண்டு.

    ஆனால், அந்த விதவை அப்படி செய்யவில்லை, எலியாவின் வார்த்தைக்கு இடனங்கி, முதலாவது அடையை சுட்டு எலியாவிற்கு கொண்டு வந்தாள். பின்பு பஞ்ச காலம் முடியும் மட்டும் விதவையின் வீட்டில் மாவும், எண்ணையும் குறையவில்லை.

    நாம் இல்லாமையிலிருந்து கொடுக்கும்போது, ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    சாரிபாத்தில் இருந்த விதவை தீர்க்கதரிசியின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினால் அவளும், அவள் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். கொடிய பஞ்சத்திலும் ஆண்டவர் அவர்களை போஷித்து வழிநடத்தினார்.

2 இராஜாக்கள் 4
    எலிசா என்ற தீர்க்கதரிசி சூனேம் என்ற ஊருக்கு செல்ல புறப்பட்டார். சூனேம் ஊரிலே ஒரு பெண் எலிசாவை தன் வீட்டில் தங்கும்படியும், தன்னோடு உணவருந்தும்படியும் வருந்தி அழைத்தாள். இவள் மிகவும் வசதி படைத்தவள். இவள் விதவை அல்ல. இவளுடைய கவணனுக்கு அநேக கானிநிலங்கள் இருந்தன.

    எலிசா சூனேம் ஊருக்கு வரும்போதெல்லம் இந்த பெண்ணின் வீட்டிலே தங்கிவந்தான். அந்த பெண் எலிசாவுக்காக மேல் வீட்டிலே ஒரு அறை உண்டுபண்ணி வைத்திருந்தாள். ஒவ்வொரு முறை எலிசா சூனேம் ஊருக்கு வரும்போது, அந்த பெண் எலிசாவை அன்போடு ஏற்றுக்கொண்டாள்.



    எலியா தீர்க்கதரிசிக்கு சாரிபாத் என்னும் விதவை, ஒன்றும் இல்லாமையிலும் கொடுத்தாள். எலிசா தீர்க்கதரிசிக்கு சூனேம் ஊர் ஸ்திரீ தனக்கு இருந்த ஐசுவரியத்தின் நிமித்தம் கொடுத்தாள். சாரிபாத் விதவை எலியாவிற்கு அடை செய்து கொடுத்தாள். சூனேம் ஊர் பெண் எலிசாவிற்கு அறைவீட்டையே கொடுத்தாள்.

    இருவரும் கொடுத்த எண்ணிக்கையிலே வித்தியாசங்கள் இருக்கின்றது. ஆனால் அவர்களின் எண்ணம் ஒன்றாக இருந்தது.

    ஆண்டவர் சொல்லுகிறார் அவனவன் தன் தன் திராணிக்கு தக்கதாக கொடுக்க வேண்டும். நிறைய இருக்கிறவர்கள் நிறைய கொடுக்க வேண்டும். குறைய இருக்கிறவர்கள் குறைய கொடுக்க வேண்டும்.

    சாரிபாத் ஊர் விதவையின் மகனும் மரித்துப்போகிறான். சூனேம் ஊர் பெண்ணின் மகனும் மரித்துப்போகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது. பணம் இருந்தாலும் இல்லையென்றாலும், வசதி இருந்தாலும் இல்லை என்றாலும் எல்லோருக்கும் ஒரே விதமான பிரச்சினைகள் தான் வரும். விதவையின் மகனும் மரித்துப்போகிறான், செல்வந்தியின் மகனும் மரித்துப்போகிறான்.

    எலியாவிற்கு கொடுத்து, பராமரித்த விதவையின் மகன் மரித்தபோது அவள் எலியாவிடம் வந்து கதறி அழுகிறாள். எலியாவின் மனம் உருகிறது. எனவே, எலியா விதவையின் மகனை உயிரோடு எழுப்பினான். நீங்கள் ஆண்டவருக்காக கொடுக்கிறவர்களாக இருப்பீர்களானால், உங்களுடைய வேதனையை பார்க்கின்ற ஆண்டவரின் மனம் உருகும். உங்களுடைய வாழ்விலும் அவர் அற்புதம் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    எலிசா ஒவ்வொரு முறை சூனேம் ஊருக்கு வரும்போதும், தன்னை ஏற்றுக்கொண்டு பராமரித்த பெண்ணின் குடும்பத்திற்கு எதையாகிலும் செய்ய வேண்டும் என்று யோசித்தார். தன் வேலைக்காரனை அழைத்து விசாரித்த போது, அவளுக்கு பிள்ளை இல்லை என்று அறிந்து கொண்டார். உடனே அப்பெண்ணை அழைத்து அடுத்த முறை நான் வரும்போது உனக்கு ஒரு மகன் இருப்பான் என்று சொல்லுகிறார்.


    எலிசாவின் வார்த்தையின்படியே அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். அவள் மிகவும் ஆசையாக அந்த குழந்தையை வளர்த்து வந்தாள். தீடீரென ஒரு நாள் அந்த மகன் மரித்துப்போனான். தன் மகன் மரித்துப்போனபோது, அவள் தன் கணவனிடம் கூட சொல்லாம், தன் கணவனிடம் ஒரு வேலையாளையும், கழுதையையும் கேட்டு வாங்கி, கர்மேல் பர்வதத்தில் இருக்கும் எலிசாவை பார்க்க விரைந்தாள். காரியத்தை அறிந்துகொண்ட எலிசா மிகவும் பாரப்பட்டு அப்பெண்ணின் மகனை உயிரோடு கூட எழுப்பினான்.

    சாரிபாத் விதவையின் விசுவாசம் அவளுடைய மகனை உயிரோடு எழுப்பவில்லை. அவள் தேவ ஊழியரை பராமரித்ததினால், அந்த ஊழியர் மூலமாக கர்த்தர் அவள் வீட்டிலே மிகப்பெரிய ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டார்.

    சூனேம் ஊர் பெண்ணின் விசுவாசம் அவள் மகனை உயிரோடு எழுப்பவில்லை. விசுவாசித்ததினால் தான் அப்பெண் தன் கழுதையை எடுத்துக்கொண்டு எலிசாவை பார்க்க புறப்பட்டாள் என்று நாம் யோசிக்கலாம். சூனேம் ஊர் பெண் எலிசாவிடம் அறிவித்தால் என் மகன் பிழைத்துக்கொள்வான் என்று எண்ணி, எலிசாவிடம் செல்லவில்லை, இவள் ஒரு பணக்கார பெண். இவள் எலிசாவிடம் சென்று, நான் உம்மிடம் பிள்ளை வேண்டும் என்று கேட்டேனா, நீர் தான் பிள்ளையை கொடுத்தீர், ஆனால் இப்போது அந்த குழந்தை மரித்து விட்டது என்று எலிசாயோடு சண்டையிடும்படியாகத்தான் அவள் புறப்பட்டாள்.

    இன்றும் அநேகர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஊழியர்களை நேசிப்பார்கள். ஊழியர்களுக்கு காணிக்கை கொடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது ஊழியர்களை திட்டுவார்கள். உங்களால் தான் எனக்கு இப்படி நடந்தது. உங்கள் ஜெபத்தினால் தான் என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட வேதனைகள் வந்தது என்று சொல்லுவார்கள்.

    சூனேம் ஊர் பெண்ணின் விசுவாசத்தினால் அல்ல, அவள் ஆண்டவருடைய ஊழியருக்கு கொடுத்த விதத்தினால் அவளுடைய மகன் உயிரோடு எழுப்பப்பட்டான்.

    நாம் எல்லாம் இருக்கிறது என்று கொடுக்கலாம், ஒன்றும் இல்லாமையிலும் கொடுக்கலாம், நாம் எந்த விதத்தில் கர்த்தருக்காக கொடுக்கிறோமோ, அந்த விதத்தில் ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக… ஆமென்…..!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.