Type Here to Get Search Results !

பரிசுத்தத்தின் அவசியம் | Why is Holiness Necessary? | ஆழமான பிரசங்க குறிப்புகள் | Tamil Bible Sermon Points | Jesus Sam

====================
தலைப்பு: பரிசுத்தம்
=====================
1 தெசலோனிக்கேயர் 3:13
    இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.


    நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் ஒரு நாள் வருவார். கிறிஸ்து வரும்போது பிதாவுக்கு முன்பாக பரிசுத்தமாய் வாழ்ந்த தம்முடைய சபையை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வார்.

    கிறிஸ்துவின் இரகசிய (இரண்டாம்) வருகையில் நாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமானால், நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும்.

    நம்முடைய சரீரத்தை சுத்திகரிக்க உலகத்தில் அநேக விதமான மருந்துகளும், எண்ணெய்களும், மூலிகைகளும் உள்ளன.

    நம்முடைய ஆத்துமாவை நாம் சுத்திகரிக்க வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரின் துணையினால் மாத்திரமே முடியும். நாம் அனைவருக்கும் பரலோகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான ஆயத்தம், பரிசுத்தம் நம்மிடம் காணப்படுகின்றதா? என்று யோசித்துப் பார்க்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

    இந்த தொகுப்பில் நாம் ஏன் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்றும், எவைகளில் நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்றும் கற்றுக்கொள்வோம்.

I. பரிசுத்தத்தின் அவசியம்
1. பரிசுத்தமே பரமனின் மாதிரி:
1 பேதுரு 1:15,16
    15. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
   16. நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

    நம்மை அழைத்தவர் பரிசுத்தராய் இருக்கிறபடியினால் நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும். நாம் தாயின் கருவில் (ஏசாயா 46:3) உருவாகும் முன்னமே கர்த்தர் நம்மை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். நம்மை முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:30). கடவுளின் அழைப்பை பெற்றுக்கொண்ட நாம் அவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.

யோவான் 8:46அ
    என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?

    பாவம் நிறைந்த இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ்வது என்பது மிகவும் கடினம். இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரைப்போலவே நாம் பரிசுத்தமாய் வாழு வேண்டும்.

    நாம் பரிசுத்தமாய் வாழ பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்கு அவசியம். ஒவ்வொரு நாளும் நாம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள, பரிசுத்த ஆவியானவரின் துணையை வேண்டி ஜெபிக்க வேண்டும்.

    நம்முடைய தேவைகளுக்காக மாத்திரம் நாம் ஜெபிக்காமல், பரிசுத்தமாய் வாழ கர்த்தர் நமக்கு துணை செய்யும்படியாகவும் ஜெபிக்க வேண்டும்.


2. பரிசுத்தமானரை தரிசிக்க பரிசுத்தம் அவசியம்:
எபிரெயர் 12:14
    யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

    நாம் ஆலயத்திற்கு வருகின்றோம், ஆராதனையில் கலந்துகொள்ளுகின்றோம், ஆனால் நம்முடைய ஆத்துமாவில் பரிசுத்தம் இல்லையென்றால், நம்முடைய ஆராதனை வீணானதாக இருக்கும். நம்முடைய ஆத்துமாவில் கள்ளம் கபடு காணப்படுமானால் அது ஆண்டவருக்கும் நமக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கும்.

ஏசாயா 59:2
    உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

    நம்முடைய பாவங்களும், அக்கிரமங்களுமே நம்முடைய ஜெபம் கேட்கப்படாததற்கு தடையாய் இருக்கிறது. அநேக நேரங்களில் என் ஜெபத்தை கர்த்தரை கேட்கவில்லை? என்னை மாத்திரம் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார்? என் ஜெபத்திற்கு மாத்திரம் ஏன் பதில் கிடைப்பதில்லை? என்று நாம் புலப்புவதுண்டு.

    நாம் நம்முடைய அக்கிரமங்களையும், பாவங்களையும் கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கையிட்டு, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் மாறும்போது, நம்முடைய ஜெபத்திற்கு அவர் பதில்தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார். நாம் பரிசுத்தமுள்ளவனாய் / பரிசுத்தமுள்ளவளாய் வாழும்போது பரிசுத்த கடவுளிடம் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.


3. பரலோக பாக்கியம் பெற பரிசுத்தம் அவசியம்
2 பேதுரு 3:11-14

    நமக்காக மரித்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்ற இறைவன், எப்படி சென்றாறோ அப்படியே மறுபடியும் வறுவார். கர்த்தர் வரும்போது அவருடைய வருகையில் காணப்பட வேண்டுமானால் நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் வாழ வேண்டும். பரிசுத்தம் இல்லாமல் பரலோக பாக்கியம் பெறுவது கூடாத காரியம்.




II. எவைகளில் பரிசுத்தம் தேவை:
    நாம் கர்த்தருக்கு முன்பாக எல்லா காரியங்களிலும் பரிசுத்தமுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். மிகவும் குறிப்பாய் நாம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய இரண்டு காரியங்களைக் குறித்து தியானிப்போம்.

1. கண்களில் பரிசுத்தம்:
மத்தேயு 6:22,23
    22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
    23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்.

    கண்ணானது சரீத்தின் விளக்கு என்று ஆண்டவர் கூறுகின்றார். நம்முடைய வீட்டில் நமக்கு பிடித்த, நாம் விரும்புகின்ற அநேக பொருட்கள் இருக்கலாம். நாம் இரவு நேரத்தில் நம்முடைய வீட்டிற்குள் நுழையும்போது, வீட்டில் அநேகம் பிடித்த பொருட்கள் நம்மிடம் இருந்தாலும் நாம் முதலாவதாக மின் விளக்கையே தேடுவோம் (Light Switch).

    எனக்கு பிடித்த விளையாட்டுப் பொருட்கள் வீட்டில் இருக்கிறது என்றபடியினால், நான் அதை முதலாவது எடுத்துவிட்டு பின் மின்ஒளியை இயக்கமாட்டேன். முதலாவதாக மின்விளக்கை இயக்கிவிட்டே எனக்கு பிடித்த பொருளை எடுப்பேன்.

    எனக்கு பிடித்த உணவு வீட்டில் இருக்கிறது என்பதினால் சாப்பிட்டுவிட்டு மின்விளக்கை இயக்குகிறேன் என்று நாம் சொல்லமாட்டோம். மின்விளக்கை ஏற்றிவிட்டே நாம் சாப்பி உட்காருவோம்.

    இப்படியாக நம்முடைய வீட்டில் நமக்கு பிடித்த எத்தனை பொருட்கள் இருந்தாலும் நாம் முதலில் தேடுவது மின்விளக்கைத்தான்.

    இதைப்போலவே நம்முடைய சரீரத்தில் அநேக உறுப்புகள் இருந்தாலும் இவையனைத்தும் சரியாக இயங்க வேண்டுமானால் நம்முடைய கண் சரியானதாக இருக்க வேண்டும். நம்முடைய கண் கெட்டதாய் இருந்தால் நம்முடைய சரீரம் முழுவதும் கெட்டதாய் இருக்கும். நம்முடைய கண்களை நாம் பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.

    நாம் கண்களின் மூலமாக எதைப் பார்க்கின்றோமோ, அதை மூலைகள் உள்வாங்குகின்றன, மூலையின் தூண்டுதலாள் மற்ற உறுப்புக்கள் செயல்படுகின்றன.

உண்மை நிகழ்வு:
    அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பள்ளி மாணவன் பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர் ஒருவரை குத்தி கொலை செய்துவிட்டான். அவனிடம் காவலர்கள் விசாரித்த போது, நான் சினிமா படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளை இரவு முழுவதும் பார்த்து இதற்காக பயிற்சி எடுத்தேன் என்று கூறினான்.

    நாம் கண்கள் மூலமாக பார்க்கின்ற ஒவ்வொரு காரியங்களும் நம்முடைய ஆழ்மனதில் பதிவு செய்யப்படுகின்றன. நம்முடைய பார்வையில் அதாவது கண்களில் நாம் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும்.

    அநேகர் கண்பார்வை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆண்டவர் நமக்கு கிருபையாய் கொடுத்த கண்களை நாம் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.

1. அலைபேசி:
    இந்த விஞ்ஞான உலகத்தில் அலைபேசி மூலமாக இளைஞர்கள் ஆண்டவர் அறுவெறுக்கின்ற அநேக காட்சிகளை கண்டு கழிக்கின்றார்கள். கண்களை தவறாக வழிக்கு பயன்படுத்துகின்றார்கள்.

    இரவு பகலாக அலைபேசிகளில் பேசுவதற்கும், வீடியோ கேம் விளையாடுவதற்கும் நமக்கு நேரம் இருக்கின்றது, ஆண்டவருடைய வேதத்தை வாசிப்பதற்கு நேரம் இல்லை.

    நாம் அலைபேசியில் விளையோடும்போது நம்முடைய சரீர பெலவீனங்கள் நமக்கு நினைவிற்கு வருவதில்லை. ஆனால் வேதத்தை எடுத்து வாசிக்க துவங்கினால், கண்களில் வலி ஏற்படுகின்றது, முதுகுவலி ஏற்படுகின்றது, குறுக்குவலி ஏற்படுகின்றது. இப்படியாக பல காரணங்களை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

2. தொலைக்காட்சிப்பெட்டி:
    தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்து இரவு முழுவதும் தொடர் நாடகம் பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும், விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதற்கும் நமக்கு நேரம் இருக்கின்றது. ஆலய ஆராதனையில் கலந்துகொள்ள நேரமில்லை. ஆலய ஆராதனையில் தேவஊழியர் பத்து நிமிடம் அதிகமாக ஆராதனை நடத்தினால், ஏன் ஆராதனையை தாமதாக முடிக்கிறீர்கள், நேரத்திற்கு சரியாய் ஆராதனையை முடித்துவிடுங்கள் என்று சொல்லுகிறோம்.

3. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு:
    இளைஞர்கள் கண்களின் இச்சைக்குள்ளாக அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்பாலினர் ஒருவரை கண்ணோடு கண்பார்த்துவிட்டால் அந்த ஒரு வினாடியை வைத்து தங்கள் முழு வாழ்க்கையையும் தீர்மானித்துவிடுகின்றார்கள்.

சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:3ஆ
    சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.

    சிம்சோன் பாவத்தில் விழுந்ததன் காரணம் கண்களின் இச்சை. கண்களின் இச்சையினால் சிம்சோன் தன்னுடைய பெலன் அனைத்தையும் இழந்துபோனான். பெலிஸ்திய பெண்ணை இச்சித்ததினால் அதே பெலியஸ்திய பெண் மூலமாக அவனுடைய வாழ்க்கையும் அழிந்துபோனது.

    சிம்சோன் கண்களினால் பாவம் செய்ததினால், பெலிஸ்தியர்களால் கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்டு மரித்துப்போனான்.

    இந்த சிம்சோனைப்போல இன்றும் அநேகர் வாலிப ஆண், பெண் பிள்ளைகள் கண்களின் இச்சையில் விழுந்து வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

    தூரத்திலிருந்து ஒருவரை நாம் பார்க்கும் போது அவர் செய்கின்ற அனைத்து காரியங்களும் நன்றாக இருப்பது போன்றே தெரியும். அருகில் சென்று அவர்களோடு இருப்பவர்களுக்கு மாத்திரமே அவர்களின் உண்மை முகம் தெரியும். இதைப் புரிந்துகொள்ளாத இளம் வாலிபர்கள் கண்களின் இச்சையினால் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நாம் கண்களின் இச்சைக்கு விலகியோடி, பரமனின் மாதிரியாம் பரிசுத்தத்தை தரித்துக்கொள்ளும்போது மாத்திரமே பரலோக மேன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.


2. வார்த்தையில் பரிசுத்தம்:
எபேசியர் 4:29
    கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

    மற்றவர்களை காயப்படுத்தக்கூடிய அனைத்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளே. கூடுமானால் மற்றவர்களை சந்தோஷப்படுத்தக்கூடிய வார்த்தைகளை பேசுங்கள், இல்லாவிட்டால் பேசாமலேயே இருப்பது உத்தமம் என்று பவுல் நமக்கு கற்றுக்கொடுக்கின்றார்.

    நம்முடைய வாயின் வார்த்தைகள் மூலமாகவும் நம்முடைய பரிசுத்தத்தை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.

1. சாலொமோன்:
நீதிமொழிகள் 17:28
    பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான். தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

    பேசாதிருந்தால், மூடர்களும் ஞானவான்களாக மாறுவார்கள் என்று சாலொமோன் ராஜா கற்றுக்கொடுக்கின்றார்.

    குடும்பத்தில், நண்பர்கள் மத்தியில், உறவினர்கள் மத்தியில் யார் அதிகம் கேழிசெய்யப்படுவார்கள் என்றால், அதிகம் பேசுகிறவர்கள் தான். பேசாமல் அமைதியாய் இருப்பவர்களை யாரும் கேழி கிண்டல் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்களாக இருந்தாலும் அவர்களை மற்றவர்கள் மதிப்பார்கள்.

கணவன் – மனைவி (லூஸ்):
    கணவன் மனைவியை ஏதோ கோபத்தில், ஏன் லூசு மாதிரி செய்கின்றாய் என்று சொன்னாள். மனைவிமார்கள் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதலாக இருந்தால், வீட்டில் எந்த வாக்குவாதமும் (சண்டையும்) இராது.

    ஆனால், கணவன் லூசு என்று சொல்லும்போது, மனைவிமார் அமைதியாக இருக்க மாட்டார்கள். பதிலுக்கு என்னை லூசு என்று சொல்லுகிறாயா? நீ ஒரு லூசு, உங்க அப்பா ஒரு லூசு, உங்க அம்மா ஒரு லூசு, உங்க தம்பி ஒரு லூசு என்று சொல்லி குடும்பத்தில் பெரிய குலப்பத்தையே உண்டுபண்ணிவிடுவார்கள்.

    கணவன் அதிகம் பேசும்போது மனைவியும், மனைவி அதிகம் பேசும்போது கணவனும் அமைதலாக இருந்தாலே குடும்பத்தில் எந்த குலப்பமும் வருவதில்லை.

மாமியார் மருமகள் சண்டை:
    ஒரு குடும்பத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தினமும் சண்டை. ஒரு நாள் மருமகள் ஒரு முனிவரை சந்தித்து, ஐயா எனக்கும் என் மாமியாருக்கும் இடையே உள்ள சண்டைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று கேட்டாள். அதற்கு முனிவர் ஒரு பாத்திரத்தில் மருந்தைக் கொடுத்து, இந்த மருந்தை பத்திரமாய் உன் வீட்டிற்கு எடுத்துச் செல். உன் மாமியார் எப்பொழுதெல்லாம் சண்டைக்கு வருகிறார்களோ, அப்பொழுதெல்லாம் இந்த மருந்தில் கொஞ்சம் எடுத்துக்கொள். உன் மாமியார் உன்னோடு சண்டையிடும்போது மருந்தை வாயில் ஊற்றிக்கொள், மாமியார் சண்டையை நிறுத்தும் வரை மருந்து வாயில்தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

    மருமகளும் இனி என் வீட்டில் சண்டை இருக்காது என்ற சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தாள். மாமியார் அடியே சீக்கிரம் வீட்டை சுத்தப்படுத்து என்று சண்டையை ஆரம்பித்தாள், மருமகள் உடனே கையிலிருந்த மருந்தில் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக்கொண்டாள். மாமியார் சொல்லுகின்ற காரியங்கள் ஒன்றொன்றாய் செய்துகொண்டு, வாயில் மருந்து இருந்ததால் மதில் பேசமுடியாமல் பொறுமையாய் இருந்தால். கொஞ்ச நேரத்தில் மாமியாரும் பேசுவதை நிறுத்திவிட்டாள். பின்பு மருமகள் மருந்தை விழுங்கிவிட்டாள். நாட்கள் உருண்டோடியது, வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை குறைய ஆரம்பித்தது.

    வீட்டில் இருந்த மருந்து குறைந்துபோனது, மருமகள் இனி சண்டை வரக்கூடாது என்பதற்காக விரைந்து முனிவரிடம் சென்றாள், ஐயா இன்னும் கொஞ்சம் மருந்து தாருங்கள், மருந்து முடிந்துவிட்டது என்று கேட்டாள்.

    அதற்கு முனிவர் மகளே அது மருந்து அல்ல, நாம் அன்றாட அருந்துகின்ற குடினீர் தான். உன் மாமியார் பேசும்போதெல்லாம் நீ அந்த குடிநீரை வாயில் வைத்திருந்தபடியினால், நீ மறுவார்த்தை ஒன்றும் பேசியிருக்க மாட்டாய். எனவே, உன் குடும்பத்தில் சண்டை இல்லை என்று முனிவர் சொன்னார். மருமகள் அதிர்ந்துபோனால்.

    இதைப்போலவே நம்முடைய வாழ்க்கையிலும் அநேக பிரச்சனைகளுக்கு நம்முடைய வாயின் வார்த்தைகளே காரணமாய் இருக்கின்றது. நம்முடைய வாயின் வார்த்தைகளில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். வாயின் வார்த்தைகளில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

2. இயேசு கிறிஸ்து
மத்தேயு 12:36
    மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் பரலோகத்தில் பதிவுசெய்யப்படுகின்றது. உலக கணிணிகளில் பதிவு செய்யப்படுகின்ற டேட்டாக்களை நாம் எளிதில் நீக்கிவிட (அழிக்க) முடியும். ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதிற்குமான டேட்டா பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நியாயத்தீர்ப்பு நாளில் நாம் பேசின ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும். எனவே வாயின் வார்த்தைகளில் கவனம் தேவை.

3. பவுல்
1 கொரிந்தியர் 15:33ஆ
    ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

4. யாக்கோபு
யாக்கோபு 3:8,-11
    8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
    9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
    10. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
    11. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்கமா?

    இவ்வளவு முக்கியத்துவம் நிரைந்த நம்முடைய வாயின் வார்த்தைகளில் நாம் ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

    நிலத்துக்கடியில் தோண்டுவோம் என்றால் சில இடங்களில் நன்னீரும், சில இடங்களில் உப்பு நீரும் கிடைக்கின்றது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஒரு நாள் உப்பு நீரும், மறுநாள் நன்னீரும் கிடைப்பதில்லை. ஆனால் நம்முடைய சரீரத்திலும் ஒரே ஒரு வாயைத்தான் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வாயின் மூலமாக நாம் கர்த்தரைத் துதித்துப்பாடுகின்றோம். அநே வாயின் மூலமாக மற்ற மனிதர்களை சபிக்கவும் செய்கின்றோம்.

    நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பேசும்போது நம்முடைய வாயின் வார்த்தைகள் எந்த அளவிற்கு மோசமானதாக இருக்கின்றது என்பதை யோசித்துப்பாருங்கள்.

    நம்முடைய வாயின் வார்த்தைகளில் நாம் ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

    நாம் ஏன் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பது பற்றியும், எவைகளில் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பது பற்றியும் இக்குறிப்பில் அறிந்துகொண்டோம். தொடர்ந்து நாம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம். பரமனின் பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்வோம்

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.