===================
உத்தம சீஷன் தோமா
===================
தோமா என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவர். மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு கூட இருந்தவர். இந்த காலத்தில் தோமாவைக் குறித்து ஜனங்களுக்குள்ளே அநேக தவறான புரிதல்கள் இருந்து வருகிறது. இந்த தோமாவை சந்தேகத்தின் தோமா என்றும் சொல்லுவார்கள்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை சந்திக்க வந்தார். அப்பொழுது தோமா சீஷர்களோடு இல்லை. தோமா சீஷர்களிடத்தில் வந்தபோது, பத்து சீஷர்களும் இயேசுவைக் கண்டோம் என்று சொன்னார்கள். ஆனால் தோமா நம்பவில்லை. இயேசுவின் விரலில் கையைவிட்டுப் பார்த்தால் தான் நம்புவேன் என்று சொன்னார். இயேசு தோமாவைப் பார்த்து: தோமாவே நீ கண்டதினால் விசுவாசிக்கிறாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு தோமாவை கடிந்து கொண்டார். தோமாவே நீ காணாமல் விசுவாசியாததால் நீ பாக்கியவான் அல்ல என்று இயேசு சொன்னார். எனவே, தோமா ஒரு சந்தேகப்படும் நபர் என்று அநேகர் நம்புகிறார்கள்.
தோமா ஒரு சந்தேகப்படும் நபர் அல்ல. தோமா செய்தது சரியே. இந்தக் கட்டுரையில் தோமாவைக் குறித்துதான் தெளிவாக அறிந்துகொள்ள இருக்கிறோம்.
தோமாவைக் குறித்து யோவான் 11 மற்றும் யோவான் 20 இந்த இரண்டு அதிகாரங்களில் மாத்திரமே வாசிக்க முடியும். தோமா என்ற வார்த்தை எபிரெய மொழி வார்த்தை. தோமா என்ற எபிரெய பதத்தின் கிரேக்க பதம் திதிமு. வேதத்தில் திதிமு என்னப்பட்ட தோமா என்று வாசிப்போம். (யோவான் 11:16 | 20:24 | 21:2)
இயேசுவின் சீஷன் சீமோனுக்கு இயேசு கேபா என்று பெயர் வைத்தார். கேபா என்பது எபிரெய மொழி பதம். கேபா என்பதன் அர்த்தம் சிறிய கூலாங்கள். சிறிய கூலாங்கள் என்பதன் கிரேக்க பதம் பெட்ராஸ். இந்த பெட்ராஸ் என்ற வார்த்தையைத்தான் தமிழில் பேதுரு என்றும், ஆங்கிலத்தில் பீட்டர் என்றும் அழைப்பர். கேபா என்பது எபிரெய மொழி. பேதுரு என்பது கிரேக்க மொழி. இரண்டும் வெவ்வேறு பெயர்கள் அல்ல ஒரே பெயர் தான். இதன் அர்த்தம் சிறிய கூலாங்கள்.
இதைப்போலவே திதிமு என்றாலும், தோமா என்றாலும் அதன் அர்த்தம் ஒன்றே. திதிமு அல்லது தோமா என்றால் இரட்டையன் என்று அர்த்தம். தோமா இரட்டையரில் இரண்டாவதாக பிறந்தவர். எனவே இவருக்கு இரட்டையன் என்ற பெயர் வந்தது.
இந்த தோமா இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, இயேசு கிறிஸ்துவின் தீவிர சீஷனாக மாறினார். சில நேரங்களில் மற்ற சீஷர்களை விட அதிக ஆர்வம் கொண்ட நபராக இந்த தோமா காணப்பட்டார்.
யோவான் 11
லாசரு என்ற நபர் சுகவீனமாய் இருந்தபோது, லாசரு சுகவீனப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டது. லாசரு சுகவீனமாய் இருக்கிறார் என்று அறிந்த பின்பும், இயேசு தான் தங்கியிருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார். ஏனென்றால், லாசரு மரிக்க வேண்டும், அடக்கம் பண்ணப்பட வேண்டும், பின்பு நான் சென்று அவனை உயிரோடு எழுப்ப வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.
பெத்தானியாவிற்கு இயேசு அடிக்கடி சென்று வந்தார். பெத்தானியா கிராம மக்களுக்கு இயேசு யார் என்று நன்றாகத் தெரியும். பெத்தானியாவில் இருந்தவர்கள் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று வகை தேடிக்கொண்டிருந்தார்கள். லாசரு மரித்த செய்தியை கேள்விப்பட்ட இயேசு பெத்தானியாவுக்கு போவோம் வாருங்கள் என்றார். பெத்தானியாவில் இருந்தவர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடியதை அறிந்த சீஷர்கள் பெத்தானியாவிற்கு போவதை விரும்பவில்லை. இயேசுவை கொலைசெய்கிறவர்கள் நம்மையும் கொலை செய்வார்கள் என்று பயந்தார்கள்.
இயேசுவின் சீஷர்கள் அனைவரும் பயந்து கொண்டிருக்க, சீஷர்களில் ஒருவரான தோமா, பதினொருவரையும் பார்த்து: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்று சொல்லுகிறார். (யோவான் 11:16) இங்கு மற்ற பதினொரு சீஷர்களுக்கு இல்லாத தைரியம் தோமாவுக்கு இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. பெத்தானியாவில் உள்ளவர்கள் இயேசு கிறிஸ்துவை கொலைசெய்வார்களானால், அவரோடே சேர்த்து நம்மையும் கொலை செய்யட்டும் என்று இயேசுவுக்காக வைராக்கியமாய் இருந்தவர் இந்த தோமா.
பேதுரு யோவானிடம் சொல்லியிருப்பார், யோவானே நீதான் இயேசுவுக்கு அன்பான சீஷன் எனவே, நீ இயேசுவிடம் சென்று, ஆண்டவரே நீர் மாத்திரம் பெத்தானியா போய் வாரும். நாங்கள் இங்கேயே உமக்காக காத்திருப்போம் என்று சொல்லு என்று சொல்லியிருப்பார்.
யோவான் யூதாஸ்காரியோத்திடம், நாம் இயேசுவோடு கூட பெத்தானியா போவோமா என்று கேட்டிருப்பார். அதற்கு யூதாஸ் நீங்கள் முன்னாக போங்கள், கொஞ்சம் காணிக்கைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. நான் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று கணக்கு பார்த்துவிட்டு பின்னாக வருகிறேன் என்று சொல்லியிருப்பார். இப்படியாக சீஷர்கள் ஒருவரை ஒரு பார்த்து பேசிக்கொண்டிருப்பார்கள். காரணம் பெத்தானியா சொல்வதற்கு சீஷர்கள் பயந்தார்கள். இயேசுவோடு சேர்த்து நம்மையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சினார்கள்.
இப்படி சீஷர்கள் அனைவரும் பயந்து கொண்டிருந்த நேரத்தில் தோமா தைரியமாக, அவரோடு கூட மரிக்கும்படி நாமும் பெத்தானியா போவோம் வாருங்கள் என்று சொல்லுகிறார்.
இயேசு கிறிஸ்துவை பெத்தானியாவில் கொலைசெய்ய வகை தேடினார்கள் என்று வேதத்தில் எழுதப்படவில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். யோவான் 11:8-ல் யூதர்கள் இயேசுவை கல்லெறியத் தேடினார்கள் என்று வாசிக்கிறோம். இந்த யூதர்கள் என்பது பெத்தானியாவில் உள்ள யூதர்களையே குறிக்கிறது. பெத்தானியாவில் இருந்தவர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடாதிருந்தால், தோமா இந்த வார்த்தையை சொல்ல வேண்டிய தேவை இல்லை. இயேசு செய்த அனைத்து காரியங்களையும் எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்களை உலகம் கொல்லாது என்று யோவான் தனது நிருபத்தின் முடிவில் எழுதுகிறார். (யோவான் 21:25). இயேசு சாப்பிட்டார், தூங்கினார், நடந்தார் என்று எல்லா காரியங்களையும் எழுதினால் உலகம் கொள்ளாது. தோமா சீஷர்களைப் பார்த்து: அவரோடே கூட மரிக்கும்படி போவோம் வாருங்கள் என்று சொன்ன அந்த வார்த்தையை வேதத்தில் எழுதினாலே, வாசிக்கிற கிறிஸ்தவர்கள், இயேசுவுக்கும் சீஷர்களுக்கும் பெத்தானியாவில் ஆபத்து இருந்தது என்பதை புரிந்துகொள்வார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் அதை மாத்திரம் யோவான் மூலமாக வேதத்தில் எழுதியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது, அவருடைய சீஷர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். சீஷர்களில் ஒருவரும் அவரை உண்மையாய் விசுவாசிக்கவில்லை. சீஷர்கள் இயேசுவின் மீது போலியான நம்பிக்கையே வைத்திருந்தார்கள். எனவே தான், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சீஷர்கள் ஓடிவிட்டார்கள் என்று நாம் யோசிக்கிறோம்.
இப்படி சொல்லுகின்ற நாம் சீஷர்களை விட நல்லவர்கள் அல்ல. இயேசுவின் காலத்தில் ரோமர்கள் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். இயேசுவை கொலைசெய்ய இழுத்துச் சென்றது போல, நிச்சயமாக அவரோடு கூட இருந்தவர்களையும் கொலைசெய்வார்கள் இந்த ரோமர்கள். இயேசுவை பிடித்த அந்த நாளில் இருந்து நம்மை எப்போது கைது செய்வார்கள் என்று தெரியவில்லையே, நம்மை எப்போது கொலை செய்வார்கள் என்று தெரியவில்லையே என்று ஒவ்வொரு நாளும் சீஷர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
அப்படி பயந்த சூழ்நிலையிலும், இயேசுவுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள பேதுரு காய்பாவின் அரண்மனை வரை செல்லுகிறார். நாம் அங்கே இருந்திருப்போமானால், இயேசு கெத்சமனேயில் கைது செய்யப்பட்ட அந்த நேரமே எருசலேமை விட்டு வேறு ஏதாவது தேசத்திற்கு ஓடியிருப்போம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யோவான் சிலுவைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இயேசுவின் தாயும் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். யோவான் ரோமர்களுக்கு பயந்து ஓடியிருந்தாலும், இயேசுவின் உயிர் பிரியும் நேரத்தில் அவரோடு கூட இருந்தவர்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பதினொருவரும் கலிலேயாவை சார்ந்தவர்கள். யூதாஸ்காரியோத்துவை தவிர மற்ற பதினொருவரும் கலிலேயர்கள். இயேசு சிலுவையில் அறைந்த இடம் எருசலேம். சீஷர்கள் பயந்து பூட்டப்பட்ட அறையில் ஒழிந்து இருந்தாலும், அவர்கள் எருசலேமில் தான் இருந்தார்கள். இயேசு கொலைசெய்யப்பட்டார், நாம் நம்முடைய சொந்த வேலைகளை செய்ய கலிலேயாவுக்கு புறப்படுவோம் என்று அவர்கள் தங்கள் இடங்களுக்கு செல்லவில்லை. இயேசு மரித்து மூன்று நாள் சென்ற பின்பும் சீஷர்கள் எருசலேமில் தான் இருந்தார்கள். இயேசுவை போர்ச்சேவகர்கள் பிடித்தது, அவரை சாட்டையால் அடித்தது, பிலாத்து கைகலைக் கழுவி இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தது எல்லாவற்றையும் பார்த்த சீஷர்கள், பயந்து எருசலேமைவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல், இயேசு மரித்து மூன்று நாள் சென்ற பின்பும், எருசலேமிலே பூட்டப்பட்ட அரையிலே இருந்தார்கள்.
இயேசு மரித்து மூன்று நாளுக்கு பின்பு, சீஷர்களை சந்திக்கும்படி வருகிறார். அப்பொழுது பத்து சீஷர்கள் பூட்டப்பட்ட அறைக்குள் இருக்கிறார்கள். தோமா மாத்திரம் வெளியே எங்கோ சென்றிருக்கிறார். ஏதேனும் பொருட்கள் வாங்குவதற்கோ, யாரையேனும் சந்திப்பதற்கோ தோமா மாத்திரம் வெளியே சென்றிருக்கின்றார். அப்பொழுது இயேசு அவர்களுக்கு தரிசனமானார்.
பத்து சீஷர்களும் இருந்த பூட்டப்பட்ட அறைக்குள் இயேசு வந்து, உங்களுக்கு சமாதானம் என்றார். கைகளிலும், கால்களிலும் இருந்த காயத்தை காட்டுகின்றார். பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்கனை அனுப்புகிறேன் என்றார். அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். (யோவான் 20:21,22)
அன்று சீஷர்களுக்கு இயேசு காட்சி கொடுத்ததுபோல இன்றும் அநேகருக்கு காட்சி கொடுக்கிறார். அனால் அநேக ஊழியர்கள், சுவிசேஷகர்கள் இயேசுவை கண்டேன், கர்த்தரைக் கண்டேன் என்று தங்கள் பெயர் பெருமைக்காக பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தரைக் கண்ட ஒரு மனிதனால் சாதாரணமாக பேச முடியாது. சாதாரணமாக செயல்பட முடியாது.
வெளிப்படுத்தல் 1:17-ல் வாசிக்கிறோம், இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த சீஷன், இயேசுவுக்கு அன்பாய் இருந்த சீஷன் (யோவான்): நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன் என்று சொல்லுகிறார். ஆனால் இன்று சிலர் கர்த்தர் என் அறைக்கு வந்தார், என்னோடு பேசினார், என்னோடு விளையாடினார், என்னோடு தூங்கினார், என் கரத்தைக் பிடித்துக் கொண்டு என்னை பரலோகத்திற்கு அழைத்துச் சொன்றார், பரலோகத்தில் நான் ஆபிரகாமைப் பார்த்தேன், சாராளைப் பார்த்தேன், தாவீதைப் பார்த்தேன், தாவீது இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டிருந்தார் என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தரைப் பார்த்தேன் என்று யார் சொன்னாலும் நாம் நம்பக்கூடாது. நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள் என்று ஏசாயா 2:22-ல் வாசிக்கிறோம். தன்னோடு இருந்த பத்து சீஷர்கள் இயேசுவை கண்டோம் என்று சொன்னபோதும் தோமா நம்பவில்லை. தோமா செய்தது சரியே. நாசியில் சுாவசம் உள்ள பத்துபேர் சொல்லுகிறார்கள் கர்த்தரைக் கண்டதாக, ஆனால் தோமா நம்பவில்லை.
இன்றும் கர்த்தரை நம்மால் பார்க்க முடியும். தேவதூதர்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் யாராவது ஒருவர் கர்த்தரைக் கண்டேன் என்று சொன்னால் நம்ப வேண்டாம். அவர்களுடைய வாழ்க்கையில் கர்த்தரைக் கண்டதின் கனி இருக்கிறதா என்று மாத்திரம் பார்ப்போம். அவர்கள் கர்த்தரைக் கண்டதை நம்ப வேண்டாம். காரணம் அவர்களும் நாசியில் சுவாசம் உள்ளவர்கள்.
பத்து சீஷர்கள் கர்த்தரைக் கண்டோம் என்று சொன்னபோது, நான் நம்பமாட்டேன். நான் அவருடைய கைகளிலும், கால்களில் உண்டான காயங்களை தொட்டுப் பார்த்தால் மாத்திரமே நம்புவேன் என்று சொல்லுகிறார் தோமா.
ஒரு ஊழியக்காரன் என்பவன் இந்த தோமாவைப்போன்றே இருக்க வேண்டும். எதையும் சீக்கிரத்தில் நம்பிவிடக்கூடாது. எல்லாவற்றையும் ஆராய்ந்து நலமானதை பற்றிக்கொள்ள வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:21)
யாராவது தங்கள் பிரச்சனைகளை சொல்லும்போது ஊழியர்கள் அதை ஆராய வேண்டும். உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆராய வேண்டும்.
உத்தம ஊழியனாய் இருப்பதற்கு, மாசற்ற ஊழியக்காரனாய் இருப்பதற்கு, கடவுளின் வார்த்தையை சரியாய் பகுத்து போதிப்பதற்கு, வெட்கப்படாத ஊழியக்காரனாய் இருப்பதற்கு ஊழியர்கள் வேதத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்.
மறுபடியும் எட்டு நாளைக்கு பின்பு இயேசு சீஷர்களை தரிசித்தார். அப்போது தோமாவும் அவர்களோடு கூட இருந்தார். இங்கே தோமாவின் பெயர் குறிப்பிடப்பட்டதன் காரணம், மற்ற பத்துபேரை விட இப்போது, இந்த இடத்திலே தோமா முக்கியமான நபர். இந்த தோமாவுக்காகவே எட்டு நாளைக்கு பின்பு இயேசு சீஷர்களிடம் வந்தார். ஒருவன் கடவுளின் காரியங்களை ஆராச்சி செய்ய முற்பட்டாள் அவனுக்காக கர்த்தர் இரங்குவார். (யோவான் 20:26)
இயேசுவின் கைகயிலும், கால்களிலும், விலாவிலும் தொட்டு ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்று தோமா நினைத்தார். எட்டு நாளைக்கு பின்பு வந்த இயேசு தோமாவைப் பார்த்து, கடினமான வார்த்தைகளை பேசவில்லை. ஏன் நம்பவில்லை என்று கேட்கவில்லை. தன்னுடைய கைகளையும், கால்களையும், விலா எலும்பையும் காண்பித்து, தோமாவே வந்து ஆராய்ச்சி செய், நான் உனக்கு அதிகாரம் தருகிறேன் என்று இயேசு சொன்னார். ஆராய்ச்சி செய்து நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை அறிந்துகொள் என்று அவனுக்காகவும் இயேசு தரிசனமானார். (யோவான் 20:27)
யோவான் 20:28-ல் தோமா இயேசுவைப் பார்த்து என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். மாம்சத்தில் வந்த இயேசுவை ஆண்டவர் என்று அநேகர் அழைத்தார்கள். ஆனால் ஒருவரும் தேவன் என்று அழைக்கவில்லை. முதல் முதலில் மாம்சத்தில் வந்த இயேசுவை தேவன் என்று அறிக்கை செய்தவன் இந்த தோமா.
யெகோவாவின் சாட்சிக்காரர்கள் இயேசு கடவுள் அல்ல என்று சொல்லுகிறார்கள். ஆனால் இங்கே தோமா இயேசுவை, தேவன் என்று சாட்சி கொடுக்கிறார்.
யெகோவாவின் சாட்சிக்காரர்கள் சொல்வதுபோல, இயேசு கடவுளாக இல்லாமல் இறைதூதனாக இருந்திருந்தால், இயேசு தோமாவைப் பார்த்து: நான் தேவனல்ல, நீ ஏன் என்னை தேவன் என்று சொல்லுகிறாய் என்று அதட்டியிருக்க வேண்டும்.
தோமாவைப் பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார்: நீ என்னை கண்டதினால் விசுவாசிக்கிறாய். நான் உயிர்த்தெழுந்ததை மாத்திரம் அல்ல, நான் கர்த்தர் என்பதை மாத்திரம் அல்ல, நான் தேவன் என்பதை நீ ஒருவனே விசுவாசித்தாய் என்று இயேசு சொல்லுகிறார். எட்டு நாளைக்கு முன்பு என்னைப் பார்த்த பத்து சீஷர்களும் நான் தேவன் என்பதை அறிந்துகொள்ளவில்லை. தோமாவே நீ ஆராய்ச்சி செய்ததினால் நான் தேவன் என்பதை நீ மாத்திரம் அறிந்துகொண்டாய்.
தோமாவே நீ என்னை ஆராய்ச்சி செய்து, என்னைக் கண்டு, நான் தேவன் என்பதை விசுவாசிக்கிறாய். காணாமலிருந்தும் என்னை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு சொல்லுகிறார்.
இங்கே ஆண்டவர் எதை சொல்லுகிறார் என்றால், காணாமலிருந்தும் நான் தேவன் என்று விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார்.
இயேசுவை தேவன் என்று விசுவாசிக்கிறவர்கள் மாத்திரமே பாக்கியவான்கள். யெகோவாவின் சாட்சிக்காரர்கள் பாக்கியவான்கள் அல்ல. அவர்கள் இயேசுவை தேவன் என்று இன்றளவும் விசுவாசிப்பதில்லை.
இயேசு கர்த்தர் மாத்திரம் அல்ல. இயேசுவானவர் தேவன். இந்த வெளிப்பாட்டை முதல் முதலில் பெற்றவர் தோமா. இப்படிப்பட்ட மேன்மையான தோமாவைப் பார்த்து நாம் சந்தேகத்தின் தோமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
இந்த தோமா பெர்சியாவிலே சில ஆண்டுகள் ஊழியம் செய்தார். பின்பு இந்தியாவிற்கு வந்து சுவிசேஷம் அறிவித்தார். இன்றைய தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் என்று அழைக்கப்பட்டது. கேரளாவிலே தனது ஊழியத்தை ஆரம்பித்த தோமா, சென்னையில் வைத்து பிராமிணர்களால் கொலைசெய்யப்பட்டார். ஒரு முறை அவர் இலக்கைக்கும் சென்று சுவிசேஷம் அறிவித்ததாக சரித்திரத்தில் நாம் வாசிக்கிறோம்.
தோமா பேதுரு சொல்வதையும் நம்பத்தயாராக இல்லை, யோவான் சொல்வதையும் நம்பத்தயாராக இல்லை. தானாக ஆராய்ச்சி செய்து இயேசுவே தேவன் என்று முதல் முதலில் அறிந்துகொண்டார். உலக சரித்திரத்தில் இயேசுவை தேவன் என்று அறிக்கை செய்த முதல் மனிதன் இந்த தோமா. நாமும் ஆண்டவருக்குள்ளாக நிலைத்திருந்து, அவருடைய வேதத்தை ஆராய்ச்சி செய்யும்போது, தோமாவைப்போல அநேக ரகசியங்களை அறிந்துகொள்ள முடியும். ஆண்டவருடைய பிள்ளைகள் ஊழியர் சொல்வதையோ, தீர்க்கதரிசிகள் சொல்வதையோ கேட்டு நம்பக்கூடாது. தோமாவைப்போல ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!..
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.