Type Here to Get Search Results !

திருவிருந்து ஆராதனை முறை | Sunday Holy Communion Service | Jesus Sam

===============
திருவிருந்து ஆராதனை முறை (C.S.I)
==============
ஒரு பாட்டுப் பாடவும்

நின்றபடியே ஜெபம் செய்வோம்

நாம் நின்றபடியே கடவுளைத் தொழுவோம், திருவிருந்து ஆராதனை முறைமையைப் பின்பற்றுவோம்.

    எல்லா இருதயங்களையும் எல்லா விருப்பங்களையும், எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளே, நாங்கள் ஆண்வரிடத்தில் பரிபூரணமாய் அன்பு கூரவும், உமது பரிசுத்த நாமத்தை உத்தமமாய் மகிமைப்படுத்தவும் உமது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எங்கள் இருதயத்தின் சிந்தனைகளைச் சுத்தம் பண்ணியருள எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாக வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.


பின்பு எல்லோரும் சேர்ந்து பாட அல்லது சொல்ல வேண்டியது
    உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்மேல் பிரியமும் உண்டாவதாக. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய தேவனே, உம்மைத் துதிக்கிறோம். உம்மைப் புகழுகிறோம். உம்மை வணங்குகிறோம். உம்மை மகிமைப்படுத்துகிறோம். உமது சிறந்த மகிமையினிமித்தம் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.

கர்த்தராயிருக்கிற ஒரே பேரான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே, கர்த்தராகிய பராபரனே, பிதாவின் சுதனே, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறவரே, எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும். தேவானாகிய பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவரே எங்களுக்கு இரங்கும்.

நீரே பரிசுத்தர், நீரே கர்த்தர், இயேசுகிறிஸ்துவே, தேவரீர் ஒருவரே, பரிசுத்த ஆவியோடே தேவனாகிய பிதாவின் மகிமையிலே உன்னதமானவராயிருக்கிறீர். ஆமென்.

நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நமது ஆண்டவர் தொகுத்து அருளியது:
    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னதாவது: இஸ்ரவேலே கேள்: உன் கடவுளாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் கடவுளாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல பிறரிடத்திலும் அன்புகூவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்தே. (மாற்கு 12, மத்துயு 22)

    கர்த்தாவே எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நாம் இப்பொழுது கடவுளுடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும் ஆண்டவரின் திருச்சரீரத்தையும் (திருஉடலையும்) இரத்தத்தையும் பெற்றுக்கொள்ளவும், இங்கே கூடி வந்திருக்கிறோம். உத்தம மனஸ்தாபத்தோடும், உண்மையான விசுவாசத்தோடும் ஆண்டவரிடத்தில் கிட்டிச் சேருவதற்காக கடவுளுடைய கிருபையைத் தேடி முழங்காற்படியிட்டு, மௌனமாக (ஜெப நிலமையிலே) நம்மை நாமே சோதித்து அறிவோமாக.


(எல்லோரும் முழங்காற்படியிட்டு சற்றுநேரம் அமைதியாயிருந்தபின் குரு சொல்வது)
    நமது பாவங்களினிமித்தம் முழு இருதயத்தோடே உண்மையாய் மனஸ்தாபப்பட்டு, பிறரிடத்தில் அன்பும் சிநேகமுமாயிருந்து, இனி கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, புதிதாக்கப்பட்டவர்களாய், அவருடைய பரிசுத்த மார்க்கத்தில் நடப்போம் என்று தீர்மானித்திருக்கிற நாம், நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சர்வவல்லமையுள்ள கடவுளோடு ஒப்புரவாகும்படி, மறுபடியும் நமது பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிடுவோம்.

பின்வரும் கவியை பாடலாம்:
கீர்த்தனை - 121
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே
தூய ஆவியே –கன நேய மேவியே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே

(அல்லது)

பாமாலை - 292
நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன் வந்தேன்

யாவரும் சேர்ந்து சொல்வது:
    பரமபிதாவே, உமக்கு விரோதமாகவும், எங்கள் அயலாருக்கு விரோதமாகவும், பாவஞ்செய்தோமென்று அறிக்கையிடுகிறோம். ஒளியில் நடவாமல், இருளில் நடந்துவந்தோம், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும் தீமையை விட்டு விலகவில்லை. எங்களுக்கு இரங்க வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம். இயேசுகிறிஸ்துவினிமித்தம், எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை சுத்திகரித்து எங்கள் மனச்சாட்சியை உயிர்ப்பித்தருளும். உமது பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனிப் புது ஜீவனுள்ளவர்களாய் உமக்கு ஊழியம் செய்யத்தக்கதாக மற்றவர்களுக்கு மன்னிக்க எங்களுக்கு உதவிபுரியும். ஆமென்.

குரு எழுந்து நின்று சொல்வது:
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் அருளப்படுகிற கிருபை நிறைந்த அருள்வார்த்தையைக் கேளுங்கள்:

    வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

    தேவன் (கடவுள்) தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ (விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ), அவன் (அவர்கள்) கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவைத்) தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

    பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தைத உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. (1 தீமோத்தேயு 1:15)

    ஒருவன் பாவஞ்செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே. (1 யோவான் 2:1,2)

சற்றுநேரம் அமைதியாய் இருந்தபின் குரு சொல்வது:
    நம்முடைய பரம பிதாவிகிய சர்வவல்லமையுள்ள கடவுள், உத்தம மனஸ்தாபத்தோடும் உண்மையான விசுவாசத்தோடும் தம்மிடத்திற்கு மனந்திரும்பி, தங்கள் சகோதர, சகோதரிகளின் குற்றங்களை மன்னிக்கிற யாவருக்கும் பாவமன்னிப்பை அருளிச் செய்வோம் என்று மிகுந்த இரக்கமாய் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் உங்களுக்கு இரங்கி, உங்ககள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, அவைகளினின்று உங்களை விடுதலையாக்கி, சகல நன்மையிலும் உங்களை உறுதிப்படுத்தி, நிலைநிறுத்தி, உங்களை நித்திய ஜீவக்கரையில் சேர்ப்பாராக.

ஆமென். தேவரீருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.

கர்த்தர் உங்களோடிருப்பாராக

அவர் உமது ஆவியோடுமிருப்பாராக

ஜெபம் செய்வோம்
    அந்நாளுக்குரிய சுருக்க ஜெபத்தை வாசிக்கவும். அல்லது சுருக்க ஜெபம் செய்யவும்.

திருமறைப் பாடங்கள் படிக்கக் கேட்போம்.

1. பழைய ஏற்பாட்டு பகுதி

2. சங்கீத புத்தகம்

3. நிருபப் பகுதி

4. சுவிசேஷ பாடம்


சபையார் உட்காரந்திருக்க, அருளுரையாற்றப்படும்


நிசேயா விசுவாசப்பிரமாணம்
    (பின்பு எல்லாரும் எழுந்துநின்று, நிசேயா விசுவாசப்பிரமாணத்தைச் சொல்ல அல்லது பாட வேண்டும்)
நாம் யாரும் எழுந்து நின்று, நமது விசுவாசத்தை நிசேயா விசுவாசப்பிரமாணத்தின் வழியாய் உறுதி செய்வோம்.
    வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன்.

    ஒரே கர்த்தருமாய், கடவுளின் ஒரே பேரான குமாரனுமாயிருக்கிற, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர். தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்க்கடவுளில் மெய்க்கடவுளானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர். பிதாவோடே ஒரே தம்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியாராலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார். நமக்காகப் பொந்தியு பிலாத்துவின் காலத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். தேவ வாக்கியங்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க, மகிமையோடே திரும்ப விருவார். அவருடைய இராஜ்யத்துக்க முடிவில்லை.

    கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத்தொழுது ஸ்தோத்திரிக்கப்படுகிறவருமாய். தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்தப் பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.

கடவுள் தாமே நாம் அறிக்கை செய்த இந்த பற்றுருதியில் வாழ்நாள் முழுவதும் நாம் தொடர்ந்து பயணிக்க அருள்புரிவாராக. ஆமென்.

(அல்லது அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணத்தைக் கூறலாம்)

அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம்
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.
    அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
    பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறோம். ஆமென்.

    நாம் இந்த விசுவாசத்தில் கடைசிவரை நிலைத்திருக்க ஆண்டவர் தாமே நமக்கு அருள்புரிவாராக. ஆமென். (யாவரும் அமருவோம்)



லித்தானியா ஜெபம்
    எல்லா மனிதருக்காகவும், ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் செய்து, தோத்திரங்களைச் செலுத்த வேண்டுமென்று கற்பித்தருளின சர்வ வல்லமையுள்ள கடவுளே.

    எங்களை் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே

    எங்குமுள்ள திருச்சபைக்குத் தேவரீர் உண்மையும், ஐக்கியமும் ஏகசிந்தையுமுள்ள மனதை, இடைவிடாமல் அருளிச்செய்யும்:

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே

    உம்முடைய திருநாமத்தை அறிக்கையிடுகிற யாவரும், உமது பரிசுத்த வசனத்தின் சத்தியத்தைக் குறித்து இசைந்த மனதுள்ளவர்களாயிருந்து, தைரியத்தோடும் உண்மையோடும் அதற்கு சாட்சி பகர அனுக்கிரகஞ் செய்யும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    சகல தேசத்தாரையும், நீதியின் பாதையிலும், சமாதான வழியிலும் நடத்தியருளும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    நாங்களும், மற்றெல்லா மனிதரும், தேவபக்தியோடும், சாந்தத்தோடும் ஆளப்படும்படி, மனிதருடைய விஷயங்களில் அதிகாரம் வகிப்பவர்களையும், விசேஷமாய் இந்தியக் குடியரசின் ஜனாதிபதியையும், எங்களை ஆளுகிறர்களையும், உமது பரிசுத்தமும் சமாதானமுமான ஞானத்தால் நடத்தியருளும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே

    எல்லாப் பேராயர்களும், குருக்களும், டீக்கன்களும், விசேஷமாக நமது தென்னிந்திய திருச்சபையின் பிரதம்ப பேராயரும், நமது திருமண்டிலத்தின் பேராயரும், தங்கள் நடக்கையினாலும், போதகத்தினாலும், சத்தியமும் ஜீவனுமுள்ள உமது பரிசுத்த வசனத்தைப் பிரசித்தப்படுத்தி, உமது பரிசுத்த சாக்கிரமெந்துகளை, ஒழுங்காயும் செம்மையாயும் கொடுக்க, அவர்கள் அனைவருக்கும் உமது கிருபையை அருளிச்செய்யும்:

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    சகல தேசத்தாருக்குள்ளும், உமது சுவிசேஷம் பரவும்படி உழைத்துவரும் யாவரையும் வழிநடத்தி, ஆசீர்வதித்து, எல்லாக்கல்விச் சாலைகளையும், வித்தியாலயங்களையும், வைத்திய சாலைகளையும், உமது ஆவியானவரால் பிரகாசிப்பித்தருளும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    உமது பரம ஆதரவினாலே, நாங்கள் பஞ்சத்தினின்றும் வறுமையினின்றும் காக்கப்பட்டு, பூமியின் நற்பலன்களை, அதனதன் காலத்தில், நன்றியறிதலான இருதயத்தோடு அனுபவிக்கும்படி, எங்களுக்குக் கிருபை செய்தருளும்:

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    உம்முடைய ஜனங்கள் எல்லாரும், விசேஷமாய் இவ்விடத்தில் கூடிவந்திருக்கிற இந்தச் சபையாரும், சாந்த இருதயத்தோடும், தகுந்த வணக்கத்தோடும், உமது பரிசுத்த வசனத்தைக் கேட்டு, உட்கொண்டு தங்கள் வாழ்நாளெல்லாம், பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய், உமக்கு உத்தம ஊழியஞ்செய்ய, அவர்களுக்கு உமது பரம கிருபையைக் கொடுத்தருளும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    நிலையில்லாத இந்த ஜீவியகாலத்தில், துன்பம், துக்கம், வறுமை, வியாதி முதலான உபத்திரவங்களால் வருத்தப்படுகிற யாவரையும், உமது தயவினாலே தேற்றி ஆதரித்தருளும்.

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

    உம்மில் விசுவாசமும், பயபக்தியுமுள்ளவர்களாய் ஜீவத்துப்போன உமது அடியார் எல்லாருக்காகவும், நாங்கள் உம்மைத் துதித்து, அவர்களோடேகூட நாங்களும், உமது பரம இராஜ்யத்தில் பஙகு பெறும்படி அவர்கள் காட்டிய நல்மாதிரிகயைப் பின்பற்ற, எங்களுக்குக் கிருபை செய்தருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்:

    எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே.

இரண்டாவது லித்தானியா ஜெபம்
    பரத்திலிருந்து வரும் சமாதானத்திற்காகவும், நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகவும், கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக:

    கர்த்தாவே, கிருபையாயிரும்.

    அகில லோக சமாதானத்திற்காகவும், கடவுளுடைய பரிசுத்த சபைகளின் நல்வாழ்வுக்காகவும், அவைகளின் ஒருமைப்பாட்டுக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.

    கர்த்தாவே, கிருபையாயிரும்.

    நம்முடைய பேராயர்களும் மற்றெல்லாப் பணிவிடைக்காரரும், விசேஷமாய் தென்னிந்திய திருச்சபையின் பிரதம்ம பேராயரும், நமது திருமண்டிலத்தின் பேராயரும், நல்ல இருதயத்தோடும், சுத்த மனசாட்சியோடும் தங்கள் பணிவிடையை நிறைவேற்றக் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.

    கர்த்தாவே, கிருபையாயிரும்

    நமது தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர், அதிகாரம் விகிப்பவர் எல்லாருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்.

    கர்த்தாவே, கிருபையாயிரும்.

    வியாதியஸ்தர், உபத்திரவப்படுவோர், துக்கப்படுவோர், மரணத்தறுவாயிலிருப்போர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்.

    கர்த்தாவே, கிருபையாயிரும்.

    ஏழைகள், பட்டினியாயிருப்போர், அனாதைகள் (ஆதரவற்றோர்), விதவைகள் (கைம்பெண்கள்),  உபத்திரவப்படுவோர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.

    கர்த்தாவே, கிருபையாயிரும்.

    அந்தகாரத்தினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடையய மகத்துவங்களைக் காண்பிக்கும் பொருட்டாக, நமக்காகவும், கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைபண்ணும் யாவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.

    கர்த்தாவே, கிருபையாயிரும்.


லித்தானியாவுக்குப் பின் குரு சொல்வது
நிறைவு ஜெபம்
    சர்வ வல்லமையுள்ள கடவுளே, சகல ஞானத்திற்கும் காரணரே, நாங்கள் வேண்டிக்கொள்வதற்கு முன் எங்கள் அவசியங்கள் உமக்குத் தெரியும். நாங்கள் அறியாமல் கேட்கிறோம் என்பதும் உமக்குத் தெரியும். கர்த்தாவே எங்கள் பலவீனங்களைப் பார்த்து இரங்கி, நாங்கள் எங்கள் அபாத்திரத்தினிமித்தம் துணிந்து கேட்கக் கூடாதவைகளையும், எங்கள் குருட்டாட்டத்தினிமித்தம் கேட்கத் தெரியாதவைகளையும், உம்முடைய குமாரனும் எங்கள் கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவின் புண்ணியங்களினிமித்தம் எங்களுக்கு அனுக்கிரகத்தருளும். ஆமென்.

(அல்லது)

    சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, திருச்சபையின் முழுச் சரீரத்தையும் உமது ஆவியானவரால் ஆண்டு பரிசுத்தப்படுத்துகிறவரே, உமது திருச்சபையில் எல்லா நிலைமையிலுள்ள மனிதருக்காகவும், உமது சந்நிதியில் நாங்கள் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் அங்கீகரித்தருளும். ஒவ்வொரு அங்கத்தினரும் தன் தன் அழைப்பிலும், பணிவிடையிலும் உண்மையோடும் தெய்வ பக்தியோடும் உமக்கு ஊழியஞ் செய்ய அனுக்கிரகிக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.


பின்பு முதல் ஆசீர்வாதத்தை குரு சொல்வது:
    நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், பிதாவாகிய கடவுளுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், நம் அனைவருரோடும் கூட இன்றும் என்றும் சதாக்காலங்களிலும் நின்று நிலைத்திருப்பதாக. ஆமென்.


அப்பம் பிட்குதல்
எல்லாரும் எழுந்து நிற்க, குரு சொல்வது
    இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும, எவ்வளவு இன்பமுமானது. (சங்கீதம் 133:1)

    அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்கு பெறுகிறபடியால், அநேகரான நாம், ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். (1 கொரிந்தியர் 10:17)

    நான் அவருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன். (சங்கீதம் 27:6)

சமாதானம், இங்கே கொடுக்கலாம். இருபக்கமும் இருப்போரை வாழ்த்துதல்

ஒரு பாட்டு பாடப்படும்: நற்கருணைப்பாடல்

எல்லாரும் இன்னும் நின்றுகொண்டிருக்க, குரு சொல்லுவது:
    பரிசுத்த பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில் பிரவேசிப்பதற்கு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உமது அருமையான குமாரனின் இரக்கத்தினால் எங்களுக்கு உண்டு பண்ணினீரே: நாங்கள் அபாத்திரராயினும் அவர் மூலமாக உம்மண்டை வருகிறோம். எங்களையும் எங்கள் அர்ப்பணிப்புகளையும் உம்முடைய நாம மகிமைக்காக அங்கீகரித்து உபயோகிக்கும்படியாக தாழ்மையோடு வேண்டிக்கொள்ளுகிறோம். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள். உமது கரத்தில் வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.

    அர்ப்பணிப்புகள் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது தங்கள் இடங்களுக்குத் திரும்புவார்கள்

ஜெபம் செய்வோம் (சேர்ந்து சொல்லுவோம்)
குருவும் ஜனங்களும் முழுங்காற்படியிட்டுச் சேர்ந்து சொல்லுவது:
    இயேசுவே. உத்தம பிரதான ஆசாரியரே. நீர் உமது சீஷர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்தது போலவே, எங்கள் மத்தியிலும் பிரசன்னமாகி அப்பத்தைப் பிட்கையில் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். நீரே பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும், சதாகாலமும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிறீர். ஆமென்.

குரு இப்பொழுது எழுந்து நிற்பார்

ஆயர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

சபை: அவர் உமது ஆவியோடும் இருப்பாராக!

ஆயர்: உங்கள் இருதயத்தை உயர்த்துங்கள்

சபை: எங்கள் இருதயத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்

ஆயர்: நம்முடைய ஆண்டவராகிய கடவுளுக்குத் தோத்திரம் செலுத்தக்கடவோம்

சபை: அப்படிச் செய்வது தகுதியும் நீதியுமாயிருக்கிறது

ஆயர்: ஆண்டவரே, பரிசுத்த பிதாவே, சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, நாங்கள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறது, தகுதியும் நீதியும் எங்களுக்கு விசேஷித்த கடமையுமாயிருக்கிறது.

    உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் வானங்களையும் பூமியையும் அவகைளிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தீர். மனிதனையும் உமது சாயலாக உண்டாக்கினீர். அவன் பாவத்தில் விழுந்த போது புது சிருஷ்டியின் முதற்பலனாக நீர் அவனை மீட்டுக்கொண்டீர்.

    ஆதலால் தூதரோம், பிரதான தூதரோடும், பரம சபையனைத்தோடும் நாங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைப் புகழந்து மேன்மைப்படுத்தி, சேனைகளின் கர்த்தராகிய தேவனே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கிறன. உன்னதமானவராகிய தேவரீருக்கே மகிமை உண்டாவதாக என்று இடைவிடாமல் உம்மைத் தோத்திரிக்கிறோம்.

    கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும் வருகிறவருமானவர் தோத்திரிக்கப்பட்டவர். உன்னதத்திலே ஓசன்னா.

    ஆம் பிதாவே! நீர் பரிசுத்தர், நீர் தோத்திரிக்கப்பட்டவர். தேவரீர் மனிதரில் உருக்கமாய் அன்பகூர்ந்து, உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து எங்கள் தன்மையைத் தரித்துக்கொள்ளவும், சிலுவையில் மரித்து எங்களை மீட்டுக்கொள்ளவும் அவரைத் தந்தருளீனீரே: அவர் சிலுவையில் ஒரே தரம் தம்மைத்தாமே ஏகபலியாக ஒப்புக்கொடுத்துச் சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்வதற்கு நிறைவும், பூரணமும், போந்ததுமான பலியையும், காணிக்கையையும், பரிகாரத்தையும் செலுத்தினதுமல்லாமல், தமது அருமையான மரணத்தை என்றைன்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து, தாம் திரும்ப வருமளவும், நாங்கள் அதை அனுசரித்துவரும்படி தமது பரிசுத்த சுவிஷேசத்தில் கட்டளையிட்டருளினாரே: அவர் தாம் காட்டிக்காடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே *அப்பத்தைப எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்: என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். அப்படியே, போஜனம் பண்ணினபின்பு அவர் +பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள் இது பாவமன்னிப்புண்டாகும்படி உங்களுக்காகவும், அநேகருக்காகவும் சிந்தப்படுகிற, புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்: இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்று திருவுளம்பற்றினார். ஆமென்.

*குருவானவர் அப்பம் வைத்திருக்கும் தட்டைக் கையில் எடுப்பார்
+இப்பொழுது குரு பாத்திரத்தை கையில் எடுப்பார்

    கர்த்தாவே, உமது மரணத்தை நினைவுகூறுகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பிவரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே, உமக்கே ஸ்தோத்திரம் உன்டாவதாக.

    ஆதலால், பிதாவே, உமது குமாரனாகிய எங்கள் ஆண்டவரின் அருமையான பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூர்ந்து, உமது அடியார்களாகிய நாங்கள் அவருடைய கட்டளையின்படியே அவர் திரும்பவருமளவும், அவரை நினைவுகூர்ந்து இதைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின பூரண மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

    கர்த்தாவே, எங்கள் ஆண்டவரே, உம்மைத் துதிக்கிறோம். உம்மைப் புகழுகிறோம். உம்மை மனிமைப்படுத்துகிறோம்.

    இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயுமிருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உமது பரிசுத்த ஆவியால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு பிரார்த்திக்கிறோம். நாங்களெல்லாரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்களாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும், தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும் அவரோடும் பரிசுத்த ஆவியோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு அவர் மூலமாய்ச் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

குரு முழங்காற்படியிடலாம்.
    நமது இரட்சகராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்ட தைரியத்தோடே சொல்லுவோம்:
    பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

எல்லாரும் முழங்காலில் நின்று சற்றுநேரம் அமைதியாய் இருக்கவும்
    (கர்த்தருடைய பந்தியிலே சேருவதற்கு தகுதியற்ற நம்மை, கர்த்தர் தகுதிப்படுத்தும்படியாக, தாழ்மையின் ஜெபத்தை பயபக்தியோடு கூட நாம் ஏறெடுப்போம்)

    இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத்துணியாமல், தேவரீருடைய அவளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேசையின் கீழ் விழும் துணிக்கைகளைம் பொறுக்கிக்கொள்ள நாங்கள் பாத்திரர் அல்லர். ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ் செய்கிற இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால் கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும் எங்கள் பாவமுள்ள சரீரமும் ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்றவிதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.

குரு எழுந்து நின்று அப்பத்தை பிட்டுச் சொல்லுவது
    நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருகு்கிறதல்லவா?

இச்சமயத்தில் கீழ்கண்ட கீதம், சொல்ல அல்லது பாடப்படலாம்

    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.

    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.

    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே உமது சமாதானத்தை தாரும்.

குரு செல்ல வேண்டியது:
    (பரிசுத்தமானவைகள் பரிசுத்தமானவர்களுக்கு.  கர்த்தருடைய பந்தி ஆயத்தமாயிருக்கிறது.  பங்குபெற உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்)


எல்லோரும் பங்கு பற்ற பின் சபையார் முழங்காளில் நிற்க, கரு சொல்லுவது
    கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமுமாகிய சாக்கிரமெந்தை விசுவாசத்தினால் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம் அவருக்குத் தோத்திரம் செலுத்துவோமாக.

    கீழ்க்கண்ட ஜெபத்தை குருவானவர் தனியாகவோ அல்லது எல்லாரும் சோர்ந்தோ சொல்லலாம் அல்லது பாடலாம்
    சர்வ வல்லமையுள்ள கடவுளே, பரம பிதாவே, உமது நேச குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள், எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, அவருடைய விலைமதியாத திருச்சரீரமும் இரத்தமுமாகிய ஞான ஆகாரத்தால் எங்களைப் போஷித்திருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து, நித்திய ஜீவனை எங்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிறீர். அளவிடப்படாத இந்த நன்மைகளுக்காக உம்மைத் தோத்திரிக்கிறோம். சரீரமும் ஆத்துமாவுமாகிய எங்களை பரிசுத்தமும் ஜீவனுமுள்ள பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இதுவே நாங்கள் செய்யத்தக்க ஆத்மீக ஆராதனை. நாங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் தேவரீருடைய நன்மையும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, எங்கள் மனம் புதிதாகிறதினாலே, மறுரூபமாகும்படி எங்களுக்கு அருள்புரியும். கடைசியில் நாங்கள் உமது பரிசுத்தவான்கள் அனைவரோடும் உமது நித்திய ராஜ்யத்தின் ஆனந்தத்தை அடையத்தக்கதாக இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க எங்களுக்குக் கிருபை செய்யும். உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாய்ச் சதா காலமும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இவைகளை வேண்டிக்கொள்ளுகிறோம்.

    ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும் ஞானமும் தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

பின் குரு கடைசி ஆசீர்வாதம் கூறுகிறார்
ஆசீர்வாதம்
    எல்லா புத்திக்கும் மேலான தேவசமானாம் உங்களோடே இருந்து, நீங்கள் தேவனையும், அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும் அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் இருதயத்தையும் சந்தையையும் காக்கக்கடவது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.

நிறைவு கீதம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.