Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | Elijah Bible Study Part 1 | Jesus Sam

=================
எலியா (பாகம் – 1)
==================
    ஆகாப் என்ற இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து எலியா தீர்க்கதரிசி: சில ஆண்டுகள் தேசத்திலே மலையும், பனியும் பெய்யாது என்று கடவுள் சொன்னதாக சொல்லுகிறார். இதைச் சொன்ன எலியாவுக்கும் எத்தனை ஆண்டுகள் மலை பெய்யாது என்று தெரியாது. கேட்ட ராஜாவுக்கும் எத்தனை நாட்கள் பழையும், பனியும் பெய்யாது என்று தெரியாது. கடவுள் எலியாவிடம் சொன்னதை, எலியா ஆகாப் ராஜாவிடம் சொன்னார். 1 இராஜாக்கள் 17:1-ல் வருஷங்களில் என்ற பன்மை வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேசத்தில் பழையும் பனியும் பெய்யாதிருக்கப்போகிறது என்று ராஜாவுக்கும் எலியாவிற்கும் தெரியும்.


    எத்தனை ஆண்டுகள் பஞ்சம் இருக்கப்போகிறது என்று ஆகாப்புக்கும், எலியாவுக்கும் தெரியாது என்றாலும், இப்போது அது நடந்து முடிந்த சரித்திரம் அல்லவா. இப்போது நாம் சரித்திரத்தின் படி ஆராய்ந்தால், பஞ்சம் இஸ்ரவேல் தேசத்திலே மூன்றரை (31/2) ஆண்டுகள் இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டவர் ஏன் இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆகாப் ராஜாவுக்கும் கொடுக்க வேண்டும். அப்படி இஸ்ரவேல் ஜனங்கள் என்ன தவறு செய்தார்கள். நியாயத்தீர்ப்பு என்ற உடன் வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பை நாம் நினைக்க வேண்டாம். பழைய ஏற்பாட்டிலும் ஆண்டவர் பல இடங்களில் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் தீர்த்தார். நோவாவின் காலத்தில் ஆண்டவர் முழு உலகத்தையும் நியாயம் தீர்த்தார் என்று ஆதியாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். இப்படியான ஒரு நியாயத்தீர்ப்பு தான் இப்போது இஸ்ரவேல் தேசத்திற்கும் வந்தது.

    இஸ்ரவேல் தேசம் என்றால் எலியாவின் காலத்தில் பன்னிரண்டு கோத்திரங்கள் அல்ல. சாலொமோன் ராஜாவின் ஆட்சிக்காலம் முடியும் வரை இஸ்ரவேல் என்றால் அது பன்னிரண்டு கோத்திரங்கள் அடங்கிய முழு தேசத்தையும் குறிக்கும். சாலொமோனுக்கு பின்பு, சாலொமோனின் மகன் ரெகோபெயாம் அரசாட்சியை எடுத்த போது, இஸ்ரவேல் தேசம் இரண்டாக பிரிந்தது. இவற்றை இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என்று சொல்லுவார்கள். ரெகோபெயாம் காலத்தில் பத்து கோத்திரங்கள் இணைந்து வடக்கு ராஜ்யமாகவும், மீதமுள்ள இரண்டு கோத்திரங்கள் தெற்கு ராஜ்யமாகவும் பிரிக்கப்பட்டது. தெற்கு ராஜ்யத்தில் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் இருந்தன. மீத பத்து கோத்திரங்களும் வடக்கு ராஜ்யத்தில் இருந்தது,

    தென்பகுதியில் உள்ள யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் தங்களை இஸ்ரவேல் தேசம் என்று சொல்லாம் யூதா தேசம் என்று சொல்லிக்கொண்டார்கள். சாலொமோனின் காலத்திற்கு பின்பு யூதா ராஜ்யம், யூதா தேசம் என்று வேதத்தில் எழுதப்பட்டிருந்தால் அது தெற்கு பகுதியில் உள்ள யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் குறிக்கும்.

    வடக்கு பகுதியில் உள்ள மற்ற பத்து கோத்திரங்கள் ஒன்றாக இணைந்து தங்களை இஸ்ரவேல் தேசம் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்களுடைய நிலப்பகுதி வடக்கே தாண் முதல் தெற்கே பெத்தேல் வரை இருந்தது. சாலொமோனின் ஆட்சிக்கு பின்பு இஸ்ரவேல் தேசம் என்று வாசித்தால் அது சமஸ்த இஸ்ரவேலையும் குறிக்காமல், யூதா, பென்யமீன் கோத்திரத்தைத் தவிற மற்ற பத்து கோத்திரங்களைக் குறிக்கும்.

    இந்த வடக்கு ராஜ்யத்தை மொத்தம் பத்தொன்பது (19) ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். இந்த வடக்கு ராஜ்யத்தின் முதல் ராஜா யெரொபெயாம். இந்த வடக்கு ராஜ்யத்தை கி.மு.722-ம் ஆண்டு அசீரியர்களால் கைப்பற்றப்படும் வரை மொத்தம் பத்தொன்பது ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். இந்த பத்தொன்பது ராஜாக்களில் ஒருவர் தான் இந்த ஆகாப் ராஜா.

    இந்த ஆகாப்பின் காலத்தில் தேசத்தில் மிகப்பெரிய பஞ்சம் வந்தது. வேதாகமத்தில் ஆண்டவர் ஜனங்களுக்கு கொடுத்த தண்டனையில் அதி பயங்கரமான தண்டனை இந்த பஞ்சம் என்று சொல்லப்படுகிறது.

    நோவாவின் காலத்தில் வெள்ளம் முழு உலகத்தையும் அழித்துப்போட்டது. இது மிகவும் பயங்கரமான நியாயத்தீர்ப்பாய் இருந்தாலும், வெள்ளத்தில் சிக்கி மரித்தவர்களின் உயிர் சில மனித்துளிகளில் அவர்களை விட்டுப்பிரிந்துவிடும்.

    சோதோம் கொமோரா என்ற பட்டணத்தை ஆண்டவர் அக்கினியினால் பட்சித்தது மிகவும் பயங்கரமான நியாயத்தீர்ப்பு என்றாலும், பட்டணத்தில் உள்ள அனைவரும் ஒரு சில விநாடிகளில் அக்கினிக்கு இறையாகியிருப்பார்கள்.

    ஆகானும் அவனுடைய குடும்பத்தாரும் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டார்கள். அந்த நேரத்தில் அந்த குடும்பத்தாருக்கு அது வருத்தமாக இருந்தாலும், கல்லெறிந்து கொலை செய்யும்போது அவர்களின் உயிர் சில மனித்துளிகளில் அவர்களை விட்டுப் பிரிந்துவிடும்.

    மரணம் என்பது ஒரு இனிமையான காரியம் அல்ல. அகாலமரணங்கள் ஏற்படும்போது துன்பம் இருக்கும் உண்மைதான். மரணத்தைவிட பெரிய துயரம் என்னவென்றால், ஜனங்களை உயிரோடே வைத்து சாகடிப்பது.

    பஞ்சம் என்றால் ஒரு சாதாரணமான காரியம் அல்ல.  ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமானால் அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று தண்ணீர். தண்ணீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது.

    ஒருசில ஆண்டுகள் இஸ்ரவேல் தேசத்தில் மழை பெய்யாது என்றால், அவர்களுடைய விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும். இஸ்ரவேல் தேசம் மழையை நம்பி விவசாயம் செய்யும் தேசம். விவசாயம் அழிக்கப்பட்டால் உணவு பற்றாக்குறை ஏற்படும். உணவுக்காக மனிதர்கள் அங்கும் இங்கும் அழைந்து திரிவார்கள். கொஞ்சம் உணவு கிடைத்தாலும் எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி காயப்படுத்துவார்கள். மற்றவர்களை கொலைசெய்து அவர்களுடைய மாமிசத்தை உணவாக்குவோம் என்ற எண்ணமும் அவர்களுடைய உள்ளத்தில் எழும்ப துவங்கும்.

    வெள்ளத்தினால் ஜனங்களை அழிப்பது, அக்கினியினால் ஜனங்களை அழிப்பது, கல்லெறிந்து கொலை செய்வது போன்ற மரண தண்டனைகளை விட கொடுமையான தண்டனை பஞ்சத்தினால் ஜனங்களை வாதிப்பது. மழையும் பனியும் இல்லை என்றால் ஜனங்கள் உயிரோடு இருந்துகொண்டே தினம் தினம் செத்துக்கொண்டிருப்பார்கள்.

    ஆண்டவர் இதுவரை யாருக்கும் கொடுத்தராத இந்த கொடுமையான தண்டனையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார் என்றால், இதுவரை யாரும் செய்திராத மிகவும் மோசமான பாவத்தை இஸ்ரவேல் ஜனங்கள் செய்திருக்க வேண்டும். எனவே தான், ஆண்டவர் இவ்வளவு பெரிய தண்டனையை இஸ்ரவேல் ஜனங்களின் மீது செலுத்துகிறார்.
    
    1 இராஜாக்கள் 16:30-ல் வாசிக்கிறோம் ஆகாப் ராஜா தனக்கு முன்னிருந்த எல்லா ராஜாக்களைப் பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்.

    நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் செய்த பாவங்களை ஆகாப் செய்த பாவங்களோடு ஒப்பிடுகையில் பெரொபெயாம் செய்த பாவம் கொஞ்சமானது என்று ஆண்டவர் சொல்லுகிறார். அப்படியானால் யெரொபெயாம் என்ன பாவங்களை செய்தார் என்று தியானிக்க வேண்டும்.

    சாலொமோனுக்கு பின்பு தேசம் இரண்டாக பிரிந்தபோது, வடக்கு ராஜ்யத்திற்கு ராஜாவாய் வந்தவன் தான் இந்த யெரொபெயாம். வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரவேல் ஜனங்கள் முக்கிய பண்டிகைகள், முக்கிய நிகழ்வுகளின்போது தெற்கு பகுதியில் உள்ள எருசலேம் தேவாலயத்திற்கு சென்றால், வடக்கு பகுதியில் உள்ள ஜனங்களும் தெற்கு பகுதியில் உள்ள ஜனங்களும் சமாதானமாகிவிடுவார்கள் என்று நினைத்து, வடக்கு ராஜ்யத்திலேயே வடக்கு எல்லை தாணிலும், தெற்கு எல்லை பெத்தேலிலும் இரண்டு கோயில்களை கட்டினான்.

    யாத்திராகமம் 32-ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனை நோக்கி தங்களுக்கு ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்துதருமாறு கேட்டார்கள். பொன் கன்றுக்குட்டி என்பது எகிப்தியர் தங்கள் பிரயாணங்கள் சிறப்பாய் அமைய வேண்டும் என்பதற்காக ஆராதித்து வந்த தெய்வம். இத்தெய்வத்தின் பெயர் ஓப்புஸ் தெய்வம். இஸ்ரவேல் புத்திரர் நானூற்று முப்பது (430) ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்ததால், எகிப்தியரின் தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பாலைவனத்தில் பிரயாணப்படும்போது, மோசே மலைக்குச்சென்று திரும்பி வராததால், அவர்கள் எகிப்தில் ஆராதித்து வந்த அந்த பொன் கன்றுக்குட்டியை செய்யுமாறு ஆரோனை கேட்டுக்கொண்டார்கள்.

    அப்படிப்பட்ட இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைத்தான் யெரொபெயாம் தான் மற்றும் பெத்தேலில் வைத்தான். வடக்கு ராஜ்யத்தில் உள்ள ஜனங்கள் தெற்கு ராஜ்யத்தில் உள்ள தேவாலயத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காக யெரொபெயாம் எருசலேம் தேவாலயத்தில் எந்தெந்த தினங்களில் பண்டிகைகள் நடைபெறுமோ, அந்தந்த தினங்களில் இந்த இரண்டு கோயில்களிலும் பண்டிகைகளை நடத்தினான்.

    தெற்கு ராஜ்யத்தில் உள்ள எருசலேம் தேவாலயத்தில் ஆசாரிய வேலை செய்ய கடவுள் லேவி கோத்திரத்தை தெரிவுசெய்திருந்தார். ஆனால், வடக்கு ராஜ்யத்தில் யெரொபெயாம் நிறுத்தின இரண்டு கோயில்களில் ஆசாரிய வேலை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற புதிய நடைமுறையை இவன் கொண்டு வந்தான்.

    எல்லோருக்கும் ஆசாரிய வேலை செய்யும் உரிமை கொடுக்கப்பட்டதால், ஜனங்கள் உண்மைக்கடவுளை மறந்து, பொய்யான சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள். இந்த யெரொபெயாமின் செயல்களால் கர்த்தர் கடும்கோபம்கொண்டார்.

    இத்தனை பொல்லாங்கு செய்த யெரொபெயாமின் பாவங்கள் ஆகாப்பின் பாவங்களோடு ஒப்பிடுகையில் சிறியதாக இருந்ததாம். அப்படியானால் இந்த ஆகாப் எவ்வளவு பெரிய அக்கிரமம் செய்திருப்பான் என்று யோசித்துப்பார்க்க வேண்டும்.

    ஆகாப் சீதோனிய ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை திருமணம் செய்தான். தங்கள் இனத்தில் ஒரு பெண்னை திருமணம் செய்யாமல், வேறு தேசத்து ராஜாவின் மகளை ஆகாப் திருமணம் செய்தான். இதனால் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்தாரா? என்றால் இல்லை.

    ஆகாப் மாத்திரம் அல்ல, இன்னும் அநேகர் வேறுதேசத்து பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தை எழுதிய மோசே, எத்தியோப்பிய தேசத்து ஆசாரியன் மகளை திருமணம் செய்தான். (எண்ணாகமம் 11). உலகத்தில் அதிக ஞானம் படைத்த சாலொமோன் ராஜா அந்நிய ஸ்திரீகளை திருமணம் செய்திருந்தார். இன்னும் அநேகர் அந்நிய ஸ்திரீகளை திருமணம் செய்தார்கள். இவர்களெல்லோரும் வேறு பெண்களை திருமணம் செய்திருக்க, ஆகாப் வேறுதேசத்து பெண்ணை திருமணம் செய்ததால் கர்த்தர் இவ்வளவு பெரிய பஞ்சத்தை தேசத்தின்மேல் வரச்செய்திருப்பாரா? இல்லை.

    ஆகாப் செய்த இரண்டு பிரதான பாவம் என்னவென்றால், அந்நிய நுகத்தில் திருமணம் செய்தது மற்றொன்று பாகால் சிலைகளை தேசத்திற்குள் கொண்டு வந்தது. இந்த இரண்டு பாவங்களையும் மற்ற ராஜாக்களும் செய்திருக்க ஏன் ஆண்டவர் அந்த ஆகாப்பின் நாட்களில் மாத்திரம் முழு தேசத்தையும் பஞ்சத்தினால் கலங்கவைக்க வேண்டும்?

    மற்ற ராஜாக்கள் செய்த விக்கிரக ஆராதனையை விட ஆகாப் செய்த விக்கிரக ஆராதனை மிகவும் மோசமானது. இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவின் தலைமையில் கானான் தேசத்திற்குள் நுழைந்தபோது கானான் தேசத்தில் ஒருசில மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஏவியர், எபூசியர், எமோரியர், கானானியர் இவர்களெல்லோரும் கானான் தேசத்தில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கென தனித்தனி தெய்வங்கள் இருந்தன. இன்னும் இந்த கானான் தேசத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு தெய்வமும் இந்த கானான் தேசத்தில் இருந்தது. அந்த தெய்வத்தின் பெயர் பாகால்.

    பாகால் என்பது ஒரு ஆண் தெய்வம். பாகால் என்றால் கானானிய மொழியில் கர்த்தர் என்று அர்த்தம். எபிரெய மொழியிலே யெகோவா என்றால் கர்த்தர் என்று சொல்லுகிறோமோ, அதைப்போல கானானிய மொழியில் பாகால் என்றால் கர்த்தர் என்று பொருள். கானான் தேசத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனி குலதெய்வங்கள் இந்தாலும், கானானியர் அனைவரும் இந்த பாகால் தெய்வத்தை வணங்கி வந்தார்கள்.

    இஸ்ரவேலர்கள் கானானை கைப்பற்றிய போது பாகால் தெய்வம் படிப்படியாக தேசத்ததைவிட்டு துரத்தப்பட்டது. பாகால் தெய்வத்தை வணங்கிக்கொண்டிருந்த எரிகோ முதலாவது விழுந்தது. பின்பு ஆயி பட்டணம் விழுந்தது. கொஞ்சம் கொஞ்மாக பாகால் தெய்வத்தை வணங்குகின்ற ஏவியர்கள், கானானியர் அனைவரும் விழுந்தார்கள். இப்படியாக பாகால் தெய்வம் படிப்படியாக காகானை விட்டு அகற்றப்பட்டது. கடைசியாக சீயோனை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த எபூசியர்களும் தாவீது ராஜாவின் காலத்தில் விழுந்தார்கள்.

    தாவீது ராஜாவின் காலத்தில் ஆண்டவர் ஆபிரகாமிற்கு சொல்லியிந்தபடி முழு கானான் தேசமும் இஸ்ரவேலர்களுக்கு சொந்தமானது. கானான் தேசத்தில் உள்ள அத்துனை பாகால் தெய்வங்களும் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டது.

    சீதோன் தேசத்தில் வாழ்ந்தவர்கள் அநேக தெய்வங்களை வணங்கினாலும், மெல்காட் என்ற ஒரு பிரதான தெய்வத்தையும் வணங்கி வந்தார்கள். இந்த மெல்காட் தெய்வம் ஒரு பெண் தெய்வம். இந்த சீதோனியர்கள் தங்கள் மெல்காட் தெய்வத்தோடு, கானானிய தெய்வமான பாகால் தெய்வத்தையும் இணைத்து பாகால் மெல்காட் என்ற தெய்வத்தையும் வணங்க ஆரம்பித்தார்கள்.

    அநேக ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய தேசத்திலிருந்து துரத்தப்பட்ட பாகால் தெய்வத்தை மீண்டுமாக ஆகாப் சீதோன் தேசத்திலிருந்து கொண்டு வந்தான்.

    ஆகாப் ஒரு புதிய பாவத்தை செய்யவில்லை. புதிய ஒரு விக்கிரக ஆராதனை முறையை பின்பற்றவில்லை. முன்னமே இஸ்ரவேல் தேசத்திலிருந்து துரத்தப்பட்ட அந்த பாகால் தெய்வத்தை, சீதோனிய ஸ்திரீ யேசபேல் மூலமாக மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டுவந்தான்.

    நம்மை பாவத்தில் விழ வைக்க வேண்டுமானால், புதிய ஒரு பாவத்தை நமக்கு கற்றுக்கொடுப்பது பிசாசுக்கு கடினமான காரியம். எனவே, பிசாசு தந்திரமாக நாம் எந்த பாவத்திலிருந்து மீண்டு வந்தோமோ அந்த பாவத்தை மீண்டும், மீண்டும் நமக்கு உணர்த்துவான். ஆகாப்பின் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது.

    தாவீதின் காலத்தில் முழு இஸ்ரவேல் தேசத்திலும் இருந்து துரத்தப்பட்ட பாகால் தெய்வத்தை ஆகாப் மீண்டுமாக இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்ததினால் ஆண்டவர் ஆகாப்பையும், இஸ்ரவேல் ஜனங்களையும் பஞ்சத்தினால் வதைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.