Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | Elijah Theological Message | Bible Study Tamil | ஆழமான வேத ஆராய்ச்சிக் கட்டுரை | பாகம் 2 | Jesus Sam

=================
எலியா (பாகம் – 2)
==================
    ஆகாப் ராஜாவின் அப்பா பெயர் உம்ரி. இந்த உம்ரி, தெற்கு ராஜய்த்திற்கு எருசலேம் தலைநகரமாய் இருப்பது போல, வடக்கு ராஜ்யத்தில் உள்ள பத்து கோத்திரங்களுக்கும் தலைநகரம் வேண்டும் என்று யாக்கோபு தரிசனம் கண்ட அந்த இடத்தை வடக்கு ராஜ்யத்திற்கு தலைநகரமாக ஏற்படுத்தினான்.


    அந்த இடத்தில் தான் யாக்கோபின் கிணறு இருந்தது. புதிய ஏற்பாட்டில் இந்த யாக்கோபின் கிணற்றில் தான் ஆண்டவர் சமாரிய ஸ்திரீக்கு சுவிசேஷம் அறிவித்தார். (யோவான் 4)

    இந்த இடத்தை உம்ரி பத்து கோத்திங்கள் அடங்கிய இஸ்ரவேல் தேசத்திற்கு தலைநகரமாக உருவாக்கினான். பின்பு தன்னுடைய பெயரையே அந்த தலைநகருக்கு நியமித்தான். தமிழிலே சொல்ல வேண்டுமானால் உம்ரி பத்து கோத்திரங்கள் அடங்கிய வடக்கு ராஜ்யத்திற்கு உம்ரிபுரம் அல்லது உம்ரி நகரம் என்று பெயர் வைத்தான். நகரம் அல்லது பட்டணம் என்றால் எபிரெய மொழியிலே சம் என்று அழைப்பார்கள். அப்படியானால் உம்ரி தலைநகரமாக்கிய இடத்திற்கு சம்உம்ரி என்று பெயர். இதைத்தான் நாம் சமாரியா என்று சொல்லுகிறோம்.

    வடக்கு ராஜ்யத்திற்கு சமாரியா என்ற தலைநகரை உருவாக்கிய இந்த உம்ரி தான், ஆகாப் என்னும் தன்னுடைய மகனுக்கு சீதோனிய ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தில் யேசபேலை விவாகம் செய்து கொடுத்தான். இந்த யேசபேலின் மூலமாகவே சீதோனியர் வழிபட்டு வந்த அந்த பாகால் மெல்காட் என்ற தெய்வம் இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

    ஒரு கல்லூரியில் மாணவர்கள் தவறு செய்தால் முதல் முறை கல்லூரி பேராசிரியர்கள் அவனை மன்னித்துவிடுவார்கள். இரண்டாவது முறையும் ஆதே தவறை அவன் செய்வானானால், கல்லூரி நிர்வாகம் அவனுக்கு தண்டனை வழங்கும். மூன்றாவது முறையும் அவன் அதே தவறை செய்வானானால் அவனை கல்லூரியிலிருந்து நீக்குவதே சிறந்ததாகும்.

    அதைப்போலவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் முறை பாவம் செய்யும்போது ஆண்டவர் மன்னித்தார். எந்த பாவத்தை ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்தை விட்டு துரத்தினாரோ, அதே பாவத்தை ஆகாப் இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டு வந்ததினால் ஆண்டவர் ஆகாப்பையும், ஜனங்களையும் பஞ்சத்தினால் வாதித்தார்.

    நம்முடைய வாழ்க்கையிலும் கூட பிசாசானவன் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை அனுமதிப்பதுண்டு. பிசாசுசானவனுக்கு ஒரு மனிதனை பாவத்தில் விழ வைக்க வேண்டுமானால், புதிய ஒரு பாவத்திற்குள் அவனை விழ வைப்பது கடினம். எனவே, நாம் இரட்சிக்கப்படும் முன்பு எந்த பாவத்தை செய்தோமோ, அதே பாவத்தை மீண்டும் மீண்டும் நம் கண் முன்பாக வந்து நிறுத்துவான்.

    ஒரு மனிதன் ஒன்று கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பிசாசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒருவன் கடவுளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிசாசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றான் என்பதற்காக அவன் பிசாசுபிடித்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மனிதன் எப்பொழுது கடவுளுடைய கட்டுப்பாட்டை இழந்துபோகிறானோ, அப்பொழுதே பிசாசின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்துவிடுகிறான். அவன் படித்தவனாகவோ, படிக்காதவனாகவே, ஏழையாகவோ, பணக்காரனாகவோ, விஞ்ஞானியாகவோ, பெலவீனனாகவோ எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவன் பிசாசின் ஆட்சிக்கு உட்பட்டவன்.

    எந்த ஒரு மனுஷன் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறானோ, அந்த நேரத்திலே அவனுக்குள் இருந்த அசுத்த ஆவிகள் அவனை விட்டு போய்விடுகிறது.

    மத்தேயு 13:43-ல் வாசிக்கிறோம் அசுத்த ஆவி ஒரு மனுஷனைவிட்டு புறப்பட்டு போய், வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து, திரும்பி அந்த மனிதனை பார்க்கும்போது, அது நன்றாக கூட்டி பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு வெறுமையாய் இருந்தால், அந்த அசுத்த ஆவி தன்னிலும் பொல்லாத ஏழு ஆவிகளை கூட்டிக்கொண்டு வந்து அந்த மனுஷனுக்குள் நுழைந்துவிடும். அப்பொழுது அந்த மனுஷனின் முன்நிலமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்நிலமை அதிக கேடுள்ளதாய் இருக்கும் என்று வாசிக்கிறோம்.

    ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவராக இருப்பார் என்றால், அவர் இரட்சிக்கப்பட்ட பின்பு நான் குடிக்கிறவர்கள் மத்தியில் சென்று ஆண்டவரைப் பற்றி அறிவிக்க போகிறேன் என்று செல்லக்கூடாது. ஏனென்றால், அது அவன் விட்டுவந்த பாவம் என்பதால், மீண்டும் அதே இடத்திற்கு செல்லும்போது அந்த பாவம் அவனை தொடரும். நான் அபிசேகத்தில் நிரைந்திருக்கிறேன், அந்நிய பாஷை பேசுகிறேன், ஆவியின் வரங்கள் எனக்கு உண்டு, இவையனைத்தும் இருக்கிறது என்ற வறட்டு தைரியத்தில் நாம் போவோமானால் நாம் எவ்வளவு பெரிய நீதிமானாக இருந்தாலும் நாம் பிசாசின் வலையின் விழுந்துபோவது நிச்சயம்.

    அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு கற்றுக்கொடுக்கிறார் நாம் சோதனைக்கு விலகி ஓட வேண்டும். நம்மைவிட பரிசுத்தத்திலும், அநுபவத்திலும், கல்வியிலும், ஞானத்திலும், திறமையிலும் பெரியவரான பவுல், நாம் சோதனைக்கு விலகி ஓடவேண்டும் என்று சொல்லுகிறார். நான் பவுலைவிட நீதிமான், சோதனையை மேற்கொள்வேன் என்று நாம் பழைய பாவத்தின் அருகில் செல்வோமானால் அது நம்மை மேற்கொள்ளும். நம்முடைய முன்நிலமையிலும் பின்நிலமை அதிக கேடுள்ளதாக இருக்கும்.

    யாக்கோபு தனது நிரூபத்தில் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறாரே. அப்படியானல் நாம் சோதனைகளை எதிர்த்து நிற்க வேண்டுமே என்று தவறாக புரிந்துகொள்ள கூடாது. (யாக்கோபு 4:7)

    சோதனை என்பது வேறு, பிசாசானவன் வேறு. சோதனை என்பது பிசாசானவனால் கொண்டுவரப்படுவது. சோதனை நம்முடைய மாம்சம் சம்பந்தப்பட்டது.

    பிசாசை நாம் எதிர்த்து நிற்க நம்மிடம் இயேசுவின் நாமம், இயேசுவின் இரத்தம், கர்த்தரின் வார்த்தை இவைகளைக் கொண்டு நாம் பிசாசை ஜெயிக்க முடியும்.

    தன் வாழ்நாளில் மதுபானத்தை அருந்தாத ஒரு நபர் இரட்சிக்கப்பட்ட பின்பு அவரை மதுபானம் அருந்த வைப்பது கடினமான காரியம். ஆனால், இரட்சிக்கப்படும் முன்பு நன்றாக மது அருந்தக்கூடிய, மதுபானத்தின் சுவை அறிந்த ஒருவரை மீண்டுமாக மதுவுக்கு அடிமைப்படுத்துவது லேசானது.


    எலியா ஆகாப்பிடம் வந்து மழையும் பனியும் பெய்யாது என்று சொன்னபோது, ஆகாப்பிற்கு அது வேடிக்கையாக இருந்திருக்கும். இந்த எலியா என்பவர் இஸ்ரவேல் தேசத்தை சார்ந்தவர் அல்ல. எலியா கீலேயாத்தின் குடிகளில் வாழ்ந்தவர். எலியா மெல்கிசேதேக்கின் வம்சத்தில் வந்தவர். எலியாவைப்போலவே எத்திரோ, பிலேயாம் இவர்களும் மெல்கிசேதேக்கின் வம்சத்தில் வந்தவர்கள். இவர்கள் இஸ்ரவேலர்கள் அல்ல, யூதர்களும் அல்ல. ஆனால் கடவுளை ஆராதித்து வந்த ஒரு கூட்டத்தார்.

    எத்திரோ என்பவர் ஒரு ஆசாரியன். ஆனால் அவர் மீதியானிய தெய்வங்களுக்கு பலிசெலுத்தி வந்த ஆசாரியர் அல்ல. யெகோவா கடவுளின் ஆசாரியன். ஆனால் இவர் இஸ்ரவேலர் அல்ல. ஆனால் கடவுளின் அசாரியன்.

    அதைப்போல பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும் இஸ்ரவேல் நாட்டைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருந்தவர். இவரும் மெல்கிசேதேக்கின் வம்சத்தில் வந்தவர் என்று நம்பப்படுகிறது.

    எலியா ஆகாப்பிடம் யெகோவா கடவுள் சொல்லும் வரை தேசத்தில் மழையும், பனியும் பெய்யாது என்று சொன்னபோது, என்னையே எதிர்த்து பேசுகிறாயா? எனக்கு சவால்விடுகிறாயா? என்று சொல்லி, அங்கேயே ஆகாப் எலியாவை  கொலைசெய்திருக்க முடியும். ஆகாப் அப்படி செய்யாததற்கு காரணம், ஆகாப் வணங்கி வந்த பாகால் தெய்வம் காலநிலைகளை கட்டுப்படுத்தும் தெய்வம். தேசத்திற்கு செழிப்பை கொடுக்கும் தெய்வம். இந்த தெய்வத்தின் மூலம் தான் நம்முடைய தேசத்தில் ஏற்ற நேரத்தில் மழையும், ஏற்ற நேரத்தில் பனியும் பொழிகிறது என்று ஆகாப் நம்பியிருந்தான்.

    ஆகாப் பாகால் தெய்வங்கள் எனக்கு துணை என்ற தைரியத்தில் எலியா சொன்னதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எலியா சொன்னபடியே தேசத்தில் மழையும், பனியும் பொழியாதபோது, ஆகாப் பாகாலின் தெய்வங்களுக்கு பூஜைகளையும், புனஜ்காரங்களையும் செய்கிறான். பாகால் தெய்வம் காலநிலைகளை கட்டுப்படுத்தும் தெய்வம். எனவே, அந்த தெய்வம் நிச்சயம் நமக்கு மழையைக் கொடுக்கும் என்று அவன் நம்பினான். அநேக நாட்கள் சென்றும் தேசத்தில் மழை பொழியாததால், ஆகாப் கோபம் கொண்டு சேவகர்களை அனுப்பி, எலியாவை அழைத்துவரச் சொன்னான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.