Type Here to Get Search Results !

Blessed verses | பாக்கிய வசனங்கள்| Bible Study in Tamil | Matthew 5:1-10 | Part 1 | Jesus Sam

======================
பாக்கிய வசனங்கள் (மத்தேயு 5)
=====================
    பாக்கிய வசனங்களை மத்தேயு நற்செய்தி நூல் ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள முதல் பத்து வசனங்களில் பார்க்க முடியும்.  இந்த தொகுப்பு பாக்கிய வசனங்களின் முதல் பகுதி ஆகும்.

    மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதியை இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு மாத்திரமே பேசினார். இயேசு கிறிஸ்து மலைக்கு ஏறியபோது, அவரோடுகூட சென்றவர்கள் சீஷர்கள் மாத்திரமே. மற்ற ஆண்கள், பெண்கள், வயது முதிந்தோர், சிறுவர்கள் இவர்களெல்லாரும் வரும் முன்பதாகவே இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் பேசத்துவங்கிவிட்டார்.


விசுவாசிக்கும், சீஷனுக்கும் உள்ள வித்தயாசம்:
விசுவாசி
    விசுவாசி என்றால் அவன் செல்லும் இடமெல்லாம் இயேசு அவனோடு கூட வருவார். விசுவாசி இப்படியாக ஜெபிப்பான்: ஆண்டவரே நான் என்னுடைய பணியை செய்யப்போகிறேன், என்னோடு நீர் வாரும். ஆண்டவரே எனக்கு உடல் பெலவீனமாக இருப்பதால் என்னால் ஆலயம் செல்ல முடியவில்லை, என்னோடு எனக்கு துணையாக நீர் இருப்பீராக. ஆண்டவரே, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை இருக்கின்றது, நான் என் உறவினரை பார்க்க புறப்படுகிறேன், நீர் என்னோடு வாரும். இப்படியாக விசுவாசி ஜெபிப்பான். விசுவாசியின் ஜெபத்திற்கும் ஆண்டவர் பதில்கொடுத்து அவன் செல்லும் இடமெல்லாம் அவனோடு கூட இருப்பார். காரணம், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை (எபிரெயர் 13:5) என்று அவர் வாக்குக்கொடுத்திருக்கிறார்.

சீஷன்
    சீஷன் என்றால் இயேசு செல்லும் இடமெல்லாம் இயேசுவுக்கு பின்செல்பவன். சீஷன் என்பவன் இயேசு இன்று என்ன செய்யப்போகிறார், அதற்கு நான் என்னை எப்படி தயார்படுத்திக்கொள்வது, இயேசு மலையில் ஏறப்போகிறாரா, வேறு பட்டணங்களுக்கு செல்லப்போகிறாரா, என்று கவனித்து இயேவுக்கு பின்செல்ல ஆயத்தப்படுவான்.

    இயேசு கிறிஸ்து மலையில் ஏறுகிறார் என்றால், விசுவாசி இயேசுவைப் பார்த்து சொல்லுவான். இயேசுவே: என்னுடைய காலில் பெலவீனம் இருக்கின்றது. என்னால் சரியாக நடக்க முடியாது. நேற்றுதான் மருத்துவரை சந்தித்தேன். மருத்துவர் அதிகதூரம் நடக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். என்னால் நடக்க முடியாது என்பது நியாயமான காரணம் தானே, அதனால் நான் உம்மோடு மலைக்கு வரை இயலாது, நீ என்னோடு இருந்து என்ன பாதுகாத்துகொள்ளும் என்று சொல்லுவான். இவன்தான் விசுவாசி.

    சீஷன் இயேசுவைப் பார்த்து சொல்லுவான். இயேசுவே: நீர் கடவுள், எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். எந்த நேரத்தில், எதை, எப்படி செய்ய வேண்டும் என்பதையும் நீர் அறிவீர்.  நீர் எங்கு செல்ல விருப்பமோ, அங்கு செல்லும். நான் உம்மைப் பின்பற்றிக்கொண்டு உம்மோடு கூட வருவேன். என் கால்களில் பெலவீனம் இருந்தாலும், என்னுடைய பலவீனத்திலே உம்முடைய பெலன் பூரணமாய் விலங்கும் (2 கொரிந்தியர் 12:9) என்று சொன்னீரே, நீர் என்னை பெலப்படுத்தும், நானும் உம்மோடு மலைக்கு ஏறுகிறேன் என்று சொல்லுவான். இவன் தான் சீஷன்.


    நாம் பாவிகளாய் இருக்கையில் இயேசு நம்மைத் தேடி வந்தார். அவருடைய அன்பை நமக்கு காண்பித்தார். அவருடைய சொந்த இரத்தத்தை சிந்தி நம்மை பரிசுத்தப்படுத்தினார். அவருடைய இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்தார். பரலோகம் செல்வதற்கான வழியையும் நமக்கு காண்பித்தார். இயேசு நம்மைத்தேடி வந்து, நமக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.

    அவரை ஏற்றுக்கொண்ட நாம், அவருடைய பிள்ளையாய் மாறியிருக்கிற நாம், இன்னும் இயேசு என்னைத்தேடி வருவார், என்னுடைய குறைகளை தீர்ப்பார் என்று நினைக்கக்கூடாது. நாம் அவரைத் தேடிச் செல்ல வேண்டும். இயேசு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்ய ஆயத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.


    இயேசு மலையின் மேல் ஏறி அமர்ந்தபோது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். நான் மலைக்கு சொல்லுகிறேன் என் பின்னே வாருங்கள் என்றோ, நான் செல்லும் இடமெல்லாம் என்னோடே கூட வாருங்கள் என்றோ இயேசு சீஷர்களிடம் சொல்லவில்லை. இயேசுவை கிறிஸ்துவாக ஏற்றுக்கொண்ட சீஷர்கள் அவர் எங்கு சென்றாரோ அங்கெல்லாம் சீஷர்களும் சென்றார்கள்.

    வாலிப ஆண் ஒருவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்றால், அந்த பெண் செல்லும் இடமெல்லாம் அவள் பின்னால் செல்லுவார். திருமணத்திற்கு பின்பு மனைவி தான் கணவனின் பின்னே வர வேண்டும். வேதம் நமக்கு அதைத்தான் கற்றுக்கொடுக்கிறது.

    எபேசியர் 5:23-ல் புருஷன் மனைவிக்கு தலையாய் இருக்கிறான் என்று வாசிக்கிறோம். தலையாகிய புருஷன் செல்லும் இடத்திற்கே சரீரமாகிய மனைவி செல்ல வேண்டும்.

    ஆபிரகாமின் பின்னே சாராள் போனதினால் இன்று இஸ்ரவேல் என்ற தேசம் உருவாகியிருக்கிறது. சாராள் பின்னே ஆபிரகாம் சென்றிருப்பாரானால் இஸ்ரவேல் என்ற தேசம் உருவாகியிருக்காது.

    ஈசாக்கு பின்னே ரெபேக்காள் சென்றதினால், இன்று இஸ்ரவேல் என்ற தேசம் உருவானது. ரெபேக்காள் பின்னே ஈசாக்கு சென்றிருப்பாரானால் இஸ்ரவேல் என்ற தேசம் காணப்படாமல் போயிருக்கும்.

    சாலொமோனின் பின்னே அவனுடைய மனைவிமார்கள் வந்திருப்பார்களானால் அவன் தவறான பாதையில் சென்றிருக்க மாட்டான். சாலொமோன் அவனுடைய மனைவிகளின் பின்னே சென்றதினால், ஜீவனுள்ள தேவனை மறந்து அந்நிய தெய்வங்களை (விக்கிரகங்களை) தேடிச் சென்றான்.

    இயேசு உட்கார்ந்தபோது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள் என்று வாசிக்கிறோம். ஒரு காதலன் காதலியைின் பின்னே அழைந்து திரிவதுபோல சீஷன் என்பவன் இயேசுவைத் தேடிச் செல்ல வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வருவதில்லை. ஏன் ஆலயத்திற்கு நான் வரவில்லை என்பதற்கு அவர்கள் அநேக காரணங்கள் வைத்திருக்கிறார்கள்.

    என் வீட்டிலிருந்து ஆலயம் வெகுதொலைவில் இருக்கிறது. எனவே என்னால் ஆலயம் வர முடியவில்லை. ஆலயம் நடைபெறும் நேரத்திற்கு என் வீட்டில் இருந்து ஆலயம் செல்ல பேருந்து வசதி இல்லை. எனவே என்னால் ஆலயம் வர முடியவில்லை. ஆலய ஆராதனையை தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கின்றோமே! பின்னே ஏன் ஆலயம் செல்ல வேண்டும். நாங்கள் ஆலயம் வருவதால் எங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது, எனவே எங்களால் ஆலயம் வர முடியவில்லை. ஞாயிறு ஒருநாள் தான் எங்களுக்கு விடுமுறையாய் இருக்கிறது, அந்த நாளில் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் எங்களால் ஆலயம் வரமுடியவில்லை. இப்படியாக பல காரணங்களை சொல்லுவார்கள் விசுவாசிகள்.

    ஆண்டவர் நம்மை விசுவாசிகளாய் அழைக்கவில்லை. ஆண்டவர் நம்மை சீஷர்களாகவே அழைத்திருக்கிறார். மத்தேயு 28:19-ல் ஆண்டவர் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்றே கட்டளையிட்டார். ஆண்டவர் நம்மை விசுவாசியாய் அழைக்காமல், சீஷனாகவே அழைத்திருக்கிறார். நாம் சீஷனாய் இருக்கின்றோமா? விசுவாசியாய் இருக்கின்றோமா?

    இயேசு கிறிஸ்து மலையின் மேல் ஏறும்போது ஒவ்வொரு சீஷனையும் அழைத்து நான் அந்த மலையின்மேல் ஏறப்போகிறேன் என்னோடு வாருங்கள் என்று சொல்லவில்லை.

    ஒருவேலை ஆண்டவர் மலையின்மேல் ஏறும்போது நாம் இருந்திருப்போமானால், ஆண்டவரே எந்த நேரத்தில் மலைக்கு ஏறப்போகிறீர்கள். சற்ற தாமதமாக மலையில் ஏறுங்களேன். வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லியிருப்போம். இயேசு ஒருவேலை மலை நேரத்தில் மலையில் ஏறியிருப்பாரானால், நாம் இயேசுவைப் பார்த்து, இயேசுவே: ஏன் இந்த நேரத்தில் மலையில் ஏறுகிறீர்கள், நாளை காளையில் ஏறலாமே என்று ஆலோசனை கொடுத்திருப்போம்.

    இயேசு மலையின் மேல் ஏறியபோது, அவருடைய சீஷர்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அவருக்கு பின்னே சென்று மலையில் ஏறினார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து மலையின் மேல் ஏறியபோது, சீஷர்கள் இயேசு மலைக்கு ஏறுவார் என்று எனக்கு தெரியாது. என்னிடம் யாரும் சொல்லவில்லை. இயேசு கிறிஸ்து மலையின் மேல் ஏறும்போது என்னிடம் சொல்லிவிட்டு ஏறவில்லை என்று காரணங்கள் சொல்லவில்லை. அவருடைய சீஷர்கள் இயேசு என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்து கொண்டு அவரின் பின்னே சென்றார்கள்.

    இன்று அநேக விசுவாசிகள் ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். காரணம், என்னிடம் யாரும் சொல்லவில்லை. ஊழியர் சரியாக அறிவிப்பு கொடுக்கவில்லை, பொறுப்பாளர்கள் என்னிடம் வந்து சிறப்பு ஆராதனை இருக்கிறது கலந்துகொள்ளுங்கள் என்று சொல்லவில்லை என்று காரணம் சொல்லுவார்கள்.

    ஆனால், சீஷர்கள் ஆலயத்தில் என்ன சிறப்பு ஆராதனை இருக்கிறது, எந்த நாளில் இருக்கிறது, எந்த நேரத்தில் இருக்கிறது என்று கேட்டு அறிந்து சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொள்ளுவார்கள். இவர்களே சீஷர்கள்.

    மத்தேயு 5:2-ல் அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து என்று வாசிக்கிறோம். இயேசு தனது சீஷர்களுக்கு மாத்திரமே வாயைத் திறந்து பேசினார். அப்படியானால், விசுவாசிகளிடம் இயேசு பேசமாட்டாரா என்று நீங்கள் கேட்கலாம். விசுவாசியிடமும் இயேசு பேசுவார். எப்படி பேசுவார் என்றால், சீஷர்கள் மூலமாக பேசுவார்.

    நேரடியாக இயேசு நம்மிடம் பேச வேண்டுமானால், இயேசு நம்மிடம் பொறுப்புகளை கொடுக்க வேண்டுமானால், ஆவிக்குரிய வரங்கள் வேண்டுமானால், ஊழியத்தில் ஆண்டவர் நம்மை எடுத்து பயன்படுத்த வேண்டுமானால், இயேசுவை முகம் முகமாய் பார்க்கின்ற அனுபவம் வேண்டுமானால் நாம் விசுவாசியாய் இராமல், சீஷனாய் இருக்க வேண்டும்.

    இயேசு கிறிஸ்து மூன்று ஆண்டுகளுக்கு பின்பு இந்த சீஷர்களிடமே அநேக பொறுப்புகளை கொடுத்தார். இந்த சீஷர்கள் தான் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலகத்தையே கலக்கினார்கள்.

    சீஷர்களும் சில நேரங்களில் தவறினார்கள். ஆண்டவருக்கு விருப்பமில்லாத காரியங்களை செய்தார்கள். பேதுருவை ஒரு முறை ஆண்டவர் “எனக்கு பின்னாகப் போ சாத்தானே” என்று கடிந்துகொண்டார். (மத்தேயு 16:23)

    இயேசு கிறிஸ்து காட்சிக்கொடுக்கப்படுகின்ற அந்த நேரத்தில், அவர் மிகவும அதிகமாய நேசித்த சீஷர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். (மத்தேயு 26:40)

    சீஷர்கள் தவறினாலும் இயேசு அவர்களை அதிகமாய் நேசித்ததினாலே அவர்களை நல்வழிப்படுத்தினார். தூங்குகிற சீஷர்களை எழுப்பினார். கடல் அலையில் அமிழ்ந்துபோவோம் (மாற்கு 4:39) என்று பயந்த சீஷர்களை காப்பாற்றினார். காரணம் விசுவாசியை விட சீஷர்களை ஆண்டவர் அதிகம் நேசித்தார்.

    விசுவாசிகள் ஜெபிக்கும்போது தங்களுக்காக மாத்திரம் ஜெபிப்பார்கள். விசுவாசிகள் ஆலயம் செல்லும்போது அவர்கள் பாதுகாப்பிற்காக இயேசுவும் அவர்களுக்கு பின்னே செல்ல வேண்டும். அவர்கள் வேலை ஸ்தலங்களில் இருக்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பாக இயேசு அவர்கள் அருகில் இருக்க வேண்டும். பிரயாணங்களில் இவர்களின் பாதுகாப்பிற்காக இயேசு அவர்கள் பின்னே வர வேண்டும். இதுவே விசுவாசிகளின் ஜெபம். விசுவாசிகள் இயேசுவை முன்னே நிறுத்த மாட்டார்கள். தங்கள் தேவைகளுக்காக இயேசு தங்களுக்கு பின்னே வரவேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் அனுதினமும் ஜெபிப்பார்கள், சரியாய் ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளுவார்கள். ஆனால் இவர்களுடைய வாழ்க்கையில் எந்த வித வளர்ச்சியையும் பார்க்க முடியாது. இவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம், சாமாதானம், நின்மதியும் இருக்காது. ஆண்டவரிடம் கேட்பார்கள், ஆண்டவரே நீர் எனக்கு என்ன நன்மை செய்தீர். எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையும் நீர் தரவில்லையே என்று முறையிடுவார்கள்.

    விசுவாசிகள் ஆண்டவருக்காக, ஊழியத்திற்காக, ஆலயத்திற்காக எதையாகிலும் செய்திருப்பார்களானால், ஆண்டவரே இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இந்த காரியத்தை உங்களுக்காக செய்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த காரியத்தை நான உமக்காக செய்தேன் (ஆலய பொருட்கள் வாங்கி கொடுப்பது. எ.கா: நாற்காலி, மின்விளக்குகள், மின் விசிரிகள், ஒலிப்பெருக்கி) செய்தேன் என்று பெருமையாக சொல்லுவார்கள்.

    சீஷர்கள் இயேசுவுக்காக எதை செய்தாலும் சொல்ல விரும்பமாட்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்தவர் இயேசு. அவரிடத்தில் வாங்கி அவருக்கு கொடுத்தேன். எல்லாம் அவருடைய கிருபை என்று சொல்லுவார்கள்.

    இயேசுவின் பின்னே சென்ற சீஷர்களை இயேசு பாதுகாத்து வழிநடத்தினார். இயேசு அவர்களை வைக்கவில்லை. இயேசு சீஷர்களை வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அநேக ஜனங்கள் கூடியிருந்த போது இயேசு சீஷர்களைப் பார்த்து நீங்களே இவர்களுக்கு போஜனம் கொடுங்கள் என்றார். உணவு வாங்கும்படி சீஷர்களை இயேசு கடைத்தெருவிற்கு அனுப்பினார்.

    இப்படி ஆண்டவர் எதை சொன்னாலும், என்ன வேலை செய்யச்சொன்னாலும் உற்சாகமாய், முழு மனதோடு செய்தவர்களே இந்த சீஷர்கள்.

பாக்கிய வசனங்கள்
    மத்தேயு 5:3-ல் சீஷர்களைப் பார்த்து இயேசு சொல்லுகிறார்: சீஷர்களே நீங்கள் மிகவும் ஏழைகள். ஆனால் நீங்கள் பாக்கியவான்கள்.  ஏனென்றால், நீங்கள் என்னைப் பின்பற்றுவதினால் பரலோக ராஜ்யத்தையே உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் என்று இயேசு சொல்லுகிறார்.

    மத்தேயு 5:4-ல் ஆண்டவர் சீஷர்களைப் பார்த்து, என் பின்னே வருகின்ற சீஷர்களே நீங்கள் துக்கமாய் இருக்கிறீர்கள். காரணம், நான் மற்ற ஜனங்களைப்போல நேரான பாதையில் செல்லவில்லை. மலையில் ஏறுகிறேன். உங்களுக்கு மிகவும் கலைப்பாக இருக்கும், நீங்கள் மிகவும் சோர்ந்துபோய் இருப்பீர்கள். தாகமாய் இருப்பீர்கள். பசியாய் இருப்பீர்கள். என் பின்னே நீங்கள் வரவேண்டுமானால் உங்களுக்கு துயரம் தான்.

    உலகத்தின் பின்னால் செல்பவர்களுக்கு மாறாக நீங்கள் மாற்று வழியில் செல்லும்போது உங்களுக்கு துயரம் வரத்தான் செய்யும். உலகம் முழுவதும் ஒரு நேர்கோட்டில் சென்று கொண்டிக்கும்போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நீங்கள் ஆண்டவரின் பின்னே செல்லும்போது சில நஷ்டங்களும், பாடுகளும், உபத்திரவங்களும், அவமனங்களும் வரும். அதனால் நீங்கள் துயரப்படுவீர்கள். நீங்கள் துயரத்தை அனுபவித்தாலும், ஒரு நாளில் நன் உங்கள் துயரத்திற்கு பதிலாக நித்திய ஆறுதலை தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    மத்தேயு 5:5 ஆண்டவரை நாம் ஏற்றுக்கொண்ட பின்பு, மற்றவர்கள் நம்மை கேலி செய்யும்போது, நம்மை வெறுக்கும்போது அவர்கள் மீது நமக்கு கோபம் வருவது இயல்பு. நாம் அந்த கோபத்தை அடக்கிக்ககொண்டு சாந்தகுணமுள்ளவர்களாய் இருக்கும்போது நாம் பூமியை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.

    மத்தேயு 5:6 நீதி என்பது இயேசுவைக் குறிக்கிறது. இயேசுவின் மீது நாம் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கும்போது, கிறிஸ்துவுக்காக நாம் உலகப் பொருட்களை இழக்கும்போது, அவர் நம்மை ஆசீர்வாதத்தினாலும், நம்மையினாலும், வரங்களினாலும், வார்த்தைகளினாலும் திருப்பிதியாக்குவார்.

    மத்தேயு 5:7 நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கும்போது ஆண்டவர் நம்மீது இரக்கம் காட்டுவார்.

    மத்தேயு 5:8 கடவுளை நாம் முகமுகமாய் தரிசிக்க வேண்டுமானால் நாம் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

    மத்தேயு 5:9 நாம் கடவுளுடைய பிள்ளைகளாக மாற வேண்டுமானால் நாம் மற்றவர்களோடு சமாதானமாய் வாழ வேண்டும்.

    மத்தேயு 5:10 நீதியாகிய கடவுளின் நிமித்தம் நாம் துன்பத்தை அனுபவிப்போமானால் பரலோக ராஜ்யம் நமக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது.

    மத்தேயு 5-ம் அதிகாரத்தில் இருக்கின்ற ஆசீர்வாதங்கள் விசுவாசிகளுக்கானது அல்ல. மத்தேயு 6-ம் அதிகாரத்தில் இயேசு பேசும்போது சீஷர்களுக்கும், விசுாவசிகளுக்கும் பேசுகிறார். ஆனால் 5-ம் அதிகாரத்தை இயேசு சீஷர்களுக்கு மாத்திரமே பேசினார்.

    ஆண்டவருடைய வருகையில் விசுவாசியும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவான். சீஷனும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவான். ஒருவேலை நான் இன்னும் விசுவாசியாய் மாறவில்லை என்றால், ஆண்டவருடைய சமுகத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே என்னை ஒரு விசுவாசியாய் மாற்றும் என்று கேட்போம்.

    நான் அநேக ஆண்டுகளாய் விசுவாசியாய் இருப்பேன் என்றால், நான் சீஷன் என் நிலையை அடைய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார். நம்முடைய பிள்ளை பத்து ஆண்டுகளாக முதலாம் வகுப்பிலேயே அமர்ந்திருந்தால் அதைப் பார்க்கின்ற நாம் சந்தோஷப்படுவோமா? இல்லையே. ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளாய் மாறிய நாம், என்று ஆண்டவருடைய சீஷனாக மாறப்போகிறோம். நம்முடைய விசுவாச வாழ்க்கையில் வளர்ச்சி காணப்பட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார். ஆண்டவரின் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே என்னை சீஷனாய் மாற்றும். உம்முடைய சித்தத்தை என் வாழ்க்கையில் நான் செயல்படுத்த அருள்புரியும் என்று ஜெபிப்போம். ஆண்டவர் நம்மை சீஷனாய் எடுத்து பயன்படுத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வாதிப்பாராக… ஆமென்…. !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.