Type Here to Get Search Results !

B Attitude | Matthew Five Bible Study | பாக்கிய வசனங்கள் விளக்கவுரை | Part 2 | Jesus Sam

====================
பாக்கிய வசனங்கள் (Matthew 5:1-11)
====================
    இயேசு கிறிஸ்து தான் முதல் பிரசங்கத்தை மலையின் மேல் அமர்ந்து செய்ததால், அதை மலைப்பிரசங்கம் என்பர். இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் பேசிய வார்த்தைகளை மத்தேயு 5,6,7-ம் அதிகாரங்களில் வாசிக்கலாம்.


    இந்த மலைப்பிரசங்கத்தின் முதல் பகுதி மத்தேயு 5:3-11 உள்ள பகுதியை பாக்கிய வசனங்கள் என்று சொல்லுவார்கள். இந்த பாக்கிய வசனங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அடிப்படையான ஒரு சத்தியம் ஆகும்.  இயேசு கிறிஸ்து பேசிய முதல் பிரசங்கத்தின் முதல் பகுதி இந்த பாக்கிய வசனங்கள். பாக்கியவான்களை ஆங்கிலத்தில் B Attitude என்பார்கள்.

    இந்த மலைப்பிரசங்கத்தை இயேசு உட்கார்ந்து தான் பேசினார் (மத்தேயு 5:1) என்று மத்தேயு குறிப்பிடுகிறார். காரணம், இயேசுவின் காலத்தில் யூத ரபீக்கள் உட்கார்ந்து தான் பேசினார்கள். ஜனங்கள் நின்று கொண்டு வார்த்தையை கேட்டார்கள்.

    சபை வரலாற்றில் யாரோ ஒருவர் சபை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில், சபை மக்களை அமர்ந்து வார்த்தையை கேட்கவும், பிரசங்கி நின்றுகொண்டு பேசவும் ஒரு புதிய முறையை ஏற்படு்தியுள்ளார்.

    இராஜாக்கள் பேசியதை எழுதும்போது அவர் வாயைத் திறந்து பேசினார் என்றே குறிப்பேட்டில் எழுதவேண்டும். அதுதான் சரியான முறை. இயேசு கிறிஸ்துவும் ராஜாவாக வந்தார் என்பதை காண்பிக்கும்படியாகவே மத்தேயு, இயேசு கிறிஸ்து வாயைத் திறந்து பேசினார் (மத்தேயு 5:2) என்று எழுதியுள்ளார்.

    இயேசு கிறிஸ்து ஒரு ரபீயாக (போதகராக) மாத்திரம் பேசவில்லை, அவர் ராஜாவாகவும் பேசுகிறார். நமது ராஜாவாகிய இயேசு கிறிஸ்து பேசிய முதல் பிரசங்கத்தில் உள்ள முதல் எட்டு குறிப்புகளைக் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    புதிய ஏற்பாடு எழுதப்பட்டது கிரேக்கு மொழியில். பாக்கியவான்கள் என்பதன் கிரேக்கப் பதம் மக்காரியோய் என்பதாகும். மக்காரியோஸ் என்பது ஒற்றைச் சொல். மக்காரியோஸ் என்பதன் பன்மை மக்காரியோய். மக்காரியோய் என்றால் சந்தோஷமான மற்றும் நின்மதியான என்று பொருள். நம்முடைய வாழ்க்கையில் எது இல்லையென்றாலும், சந்தோஷமும், நின்மதியும் இருந்தால் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும். தேவைக்கு அதிகமான பணம், அடுக்குமாடி வீடுகள், விலையுயர்ந்த வாகனங்கள் இவையனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் நின்மதியும், சந்தோஷமும் இல்லை என்றால் வாழ்க்கை வெறுமையாய் காணப்படும். பணம், வீடு, வாகனம் இவையனைத்தும் இல்லாமல், சந்தோஷமும் நின்மதியும் இருந்தால் வாழ்க்கை ஆசீர்வாதமாய் இருக்கும். சந்தோஷமும், நின்மதியும் நம்முடைய வாழ்க்கையில் இருந்தால் வேறு எது நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்றாலும் நாம் கவலைப்படமாட்டோம்.

எ.கா கதை: (1)
    விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் ஒருவர், தொலைதூர விமானத்தில் பரந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்து ஏங்குகிறார். என்னால் விமானத்தில் பிரயாணப்படமுடிவில்லையே என்று கவலைப்படுகிறார்.
    இருசக்கர வாகனம் வைத்திருக்கும் ஒருவர், விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் நபரைப் பார்த்து, எனக்கும் இப்படிப்பட்ட வாகனம் இல்லையே என்று ஏங்குகிறார்.
    சாதாரண மதிவண்டி வைத்திருக்கும் ஒரு நபர், இருசக்கர வாகனம் வைத்திருப்பவரைப் பார்த்து எனக்கு இப்படிப்பட்ட இருசக்கர வாகனம் இல்லையே என்று ஏங்குகிறார்.
    சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் ஒருவர், மிதிவண்டியில் செல்லும் நபரைப் பார்த்து, எனக்கு இப்படிப்பட்ட மிதிவண்டி இல்லையே என்று ஏங்குகிறார்.
    நடக்கமுடியாத சூழ்நிலையில் இரண்டு கால்களும் முடமான ஒருவர் தெருவில் நடந்து சென்ற நபரைப் பார்த்து, என்னால் இப்படி நடக்க முடியவில்லையே என்று ஏங்குகிறார்.

எ.கா (2)
    திருமணமாகாத ஒரு வாலிபன் எனக்கு திருமணம் நடந்தால் சந்தோஷமும் சந்தோஷமும் நின்மதியும் வந்துவிடும் என்று நினைக்கிறான்.
    திருமணத்திற்கு பின் அவன் எதிர்பார்த்த சந்தோஷமும் நின்மதியும் அவனுக்கு கிடைக்காததால், ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டால் சந்தோஷமும் நின்மதியும் கிடைக்கும் என்று நினைக்கிறான்.
    முதல் குழந்தை பிறந்த பின்பும் சந்தோஷம், நின்மதி கிடைக்காததால் இரண்டாவது குழந்தை பிறந்தால் சந்தோஷமும் நின்மதியும் கிடைக்கும் என்று நினைக்கிறான்.
    இரண்டு குழந்தைகள் பிறந்தும் சந்தோஷமும் நின்மதியும் கிடைக்காததால் அவர்கள் படித்து ஒரு நல்ல வேலைக்கு வந்தால் சந்தோஷமும் நின்மதியும் கிடைக்கும் என்று நினைக்கிறான்.
    இப்படி மனிதனுடைய வாழ்க்கையில் எதை செய்தாலும் அவனுக்கு சந்தோஷமும் நின்மதியும் கிடைப்பதில்லை. மனிதனுக்கு சந்தோஷத்தையும், நின்மதியையும் தரக்கூடிய எட்டு காரியங்களை இயேசு கிறிஸ்து தனது முதலாவது பிரசங்கத்தில் (மலைப்பிரசங்கம்) கற்றுக்கொடுக்கின்றார்.

    இந்த எட்டு பாக்கிய வசனங்களும் ஒன்றோடு என்ற தொடர்புடையவை.


மத்தேயு 5:3
    ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
    பரலோக ராஜ்யம் என்றால் கடவுளுடைய ராஜ்யம். கடவுளுடைய ராஜ்யத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷமும் நின்மதியும் உண்டு.

    ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்றால் ஆவிக்குறிய வாழ்க்கையில் பிச்சைக்காரர்களைப்போல வாழ்வது. எளிமை என்பது ஒரு பிச்சைக்காரன் நம்மிடம் பிச்சை கேட்கும்போது மிகவும் தாழ்மையாய் அதாவது எளிமையாய் கேட்பான். எளிமை என்பது பிச்சைக்காரனிடம் காணப்படும் குணத்தைக் குறிக்கிறது.

    ஆவிக்குறிய வாழ்க்கையில் பிச்சைக்காரர்களைப்போல இருப்பவர்கள் சந்தோஷமும் நின்மதியும் உள்ளவர்கள் என்று இயேசு கூறுகிறார். ஆவிக்குறிய வாழ்க்கையில் நாம் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    பிச்சைக்காரர்கள் தங்களுடைய நிலையைக் குறித்து, தங்களுடைய உடையைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள். பிச்சைக்காரர்கள் நாற்காலி இருந்தால் தான் உட்காருவேன் என்று சொல்ல மாட்டார்கள். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளுவார்கள். பிச்சைக்காரர்கள் எங்குவேண்டுமானாலும் அமர்ந்து உணவை சாப்பிடுவார்கள். உண்வு சாப்பிட எனக்கு மேஜை வேண்டும், நாற்காலி வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். இப்படியாக பிச்சைக்காரர்கள் தாழ்மையாக இருப்பார்கள். தாழ்மை என்பது அவர்களுடைய குணாதிசயம்.

    ஆவியில் எளிமை என்றால், பிச்சைக்காரர்களைப்போல ஆவியில் தாழ்மையாய் இருக்க வேண்டும். ஆவிக்குறிய நிலையைக் குறித்து பெருமைப்படாமல் இருக்க வேண்டும். ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லுதல், அந்நிய பாஷை பேசுதல் போன்ற வரங்கள் கிடைத்ததும், அவர்களுக்கு பெருமை வந்துவிடுகிறது. ஆவியில் பெருமையுள்ளவர்களின் பேச்சிலும் செயல்களில் வித்தியாசம் காணப்படும். எனக்குத்தான் கடவுளின் வரம் கிடைத்திருக்கிறது என்ற பெருமையில் பேசுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் சந்தோஷமும், நின்மதியும் இருப்பதில்லை. எத்தனை வரங்கள் தனக்கு இருந்தாலும் பிச்சைக்காரர்களைப்போல எளிமையாய் தாழ்மையாய் இருப்பவர்களே சந்தோஷமாகவும், நின்மதியாகவும் இருப்பார்கள்.

    பிச்சைக்காரர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்ற மனம் இருக்காது. பொதுவாக பிச்சைக்காரர்களுக்கு நாம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பிச்சை போடுவோம். அப்படிப்பட்ட பிச்சைக்காரனிடம் 200 ரூபாய் கொடுத்தால், இன்று எனக்கு தேவையான தொகை வந்துவிட்டது, இனி நான் பிச்சையெடுக்க மாட்டேன். நாளை பிச்சையெடுத்துக்கொள்கிறேன் என்று யோசிக்க மாட்டான். அந்த 200 ரூபாயையும் எடுத்து பையில் வைத்துக்கொண்டு, ஒன்று இல்லாதவன் போல மீண்டும் பிச்சை எடுக்க துவங்குவான்.

    பிச்சைக்காரனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அவன் திருப்தியடையமாட்டான். அதைப்போல கிறிஸ்தவர்களும் ஆவிக்குறிய ஆசீர்வாதங்கள், வரங்கள் எவ்வளவு பெற்றுக்கொண்டாலும், இன்னும் நான் பரிபூரணமடையவில்லை, எனக்கு இன்னும் கிருபை வேண்டும், இன்னும் வரங்கள் வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை வரங்கள் இருந்தாலும் மற்றவர்கள் முன்பாக தாழ்மையாய் நடந்துகொள்ள வேண்டும்.

    பிச்சைக்காரன் என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட மாட்டான். என்னுடைய உடை சரியாக இல்லை என்றால் ஜனங்கள் எனக்கு பிச்சை போடமாட்டார்கள். வலது புறத்தில் ஆடை கிழிந்திருந்தால், அதற்கு இணையாக இடதுபுறத்திலும் ஆடை கிழிந்திருக்க வேண்டும், அப்போது தான் ஜனங்கள் என்னை மதிப்பார்கள் என்று யோசிக்க மாட்டான். நான் மற்றவர்களிடம் பிச்சை கேட்கும்போது என் வாயிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக தினமும் பல் துளக்க மாட்டான். ஜனங்கள் என் கையைப் பார்த்தால் தவறாக நினைக்கக்கூடாது, எனவே நன்றாக கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். மனிதர்கள் என்னைக் குறித்து என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் பிச்சைக்கேட்கத்தான் செய்வேன் என்று பிச்சைக்காரன் நினைப்பான். அதைப்போலவே உண்மையான கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது.

    ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்றால், தாழ்மையாக இருக்க வேண்டும், ஆவியின் வரங்கள் அநேகம் இருந்தாலும் இன்னும் எனக்கு வரங்கள் வேண்டும், இன்னும் நான் ஆண்டவருடைய கிருபையால் நிரம்ப வேண்டும் என்ற ஏக்கத்தில் வாழ வேண்டும். யார் என்னைப்பற்றி என்ன நினைத்தால் என்ன? மற்றவர்களுக்காக நான் வாழவில்லை, நான் கிறிஸ்துவுக்காக வாழ்கிறேன் என்று வாழ வேண்டும். இவர்கள் தான் ஆவியில் எளிமையுள்ளவர்கள். இப்படி ஆவியில் எளிமையுள்ளவர்கள் தான் சந்தோஷத்தையும், நின்மதியையும் பெற்றுக்கொள்வார்கள்.


மத்தேயு 5:4
    துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.
    துயப்படுகிறவர்கள் என்றால் எல்லா சூழ்நிலையிலும் கவலைப்பட்ட வேண்டும், எனவே கிறிஸ்தவர்கள் சிறிக்க கூடாது என்று சில நினைக்கிறார்கள். ஆண்டவர் துயரம் என்பது நம்முடைய முக வாடலைக் குறித்து சொல்லவில்லை.

    இந்த எட்டு பாக்கிய வசனங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகள் என்று பார்த்தோம். ஆவியில் நாம் எளிமையாய் இருக்கும்போது வேதனை, துன்பம், துயரம் வரும். நாம் ஆவியில் தாழ்மையாய் இருக்கும்போது எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலர் நம்மை கிண்டல் செய்வார்கள். நாம் தாழ்மையாய் இருக்கும்போது சிலர் அதை சாதகமாக பயன்படுத்தி, நம்மை கீழே விலவைக்க முயற்சிப்பார்கள். மற்றவர்கள் என்ன பேசினால் எனக்கென்ன என்று நாம் பொறுமையாக இருந்தாலும், அவர்கள் பேசும் காரியங்களை கேட்கும்போது நமக்கு வேதனையாகவும், கவலையாகவும் இருக்கும்.

    நாம் ஆவிக்குறிய தாழ்மையில் இருக்கும்போது நமக்கு துயரங்கள் வருமாயின் நாம் அதை தாங்கிக்கொள்ளும்போது, கடவுள் நம்மை ஆறுதல் படுத்துகிறவராக இருக்கிறார்.

    மனிதன் ஒருபோதும் மற்ற மனிதனை ஆறுதல்படுத்த முடியாது. மனிதனுடைய ஆறுதல் தற்காலிகமானது. மனிதனுடைய ஆறுதல் முட்டாள்தனமானது. ஒருசிலர் நம்மை ஆறுதல்படுத்த வேண்டும் என்று தேவையில்லாத வார்த்தைகளை பேசுவார்கள். அதைக் கேட்கும்போது நமக்கு கோபம் தான் வரும்.

எ.கா நிகழ்வு:
    சிலருக்கு ஆறுதல் சொல்ல தெரியாது. ஒரு ஊழியரின் தாய் சரீர சுகவீனத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். தன் தாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கிறதை நினைத்து அந்த ஊழியர் மிகவும் கவலைப்பட்டார். அந்த நேரத்தில் ஒரு விசுவாசி அந்த ஊழியருக்கு ஆறுதல் சொல்ல வந்தார். அவர் இப்படியாக சொன்னார்: கவலைப்படாதீர்கள் ஐயா. இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கும் என்று எனக்கு தெரியும். உங்கள் கவலைகளை என்னால் எப்படி புரிந்துகொள்ள முடிகிறது என்றால், போன ஆண்டு என் வீட்டு நாய் ஒன்று சரீர சுகவீனத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. அது மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களும் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதே வேதனையைத்தான் இப்போது நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். கவலைப்படாதிருங்கள் என்று ஆறுதல் சொன்னாராம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தெரியாமலேயே ஆறுதல் சொல்லுவார்கள்.

    நம்முடைய துயர நேரத்தில் நம்மை ஆறுதல் படுத்த உலக மனிதர்களால் கூடாது. நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்ளவும் முடியாது. ஆவியில் எளிமையாய், தாழ்மையாய் இருப்பதின் நிமித்தம் நாம் துயரப்படும்போது, மனிதர்களுடைய ஆறுதல்களை நாம் தேடவேண்டிய அவசியம் இல்லை, கடவுளே நம்மை ஆறுதல் படுத்துகிறவராக இருக்கிறார்.


மத்தேயு 5:5
    சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்.
    சாந்தம் என்றால் அமைதியான நிலை. சிலர் எல்லா நேரங்களிலும் கோபமாகவே இருப்பார்கள். சிறிய சிறிய காரியங்களுக்கும் கோபப்படுவார்கள். சாந்தகுணம் என்பது சோர்வாக இருப்பது அல்ல, சாந்தகுணம் என்பது கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டிருப்பது. சாந்தமாக இருப்பது என்றால், சிறிக்கக்கூடாது, விளையாடக்கூடாது என்று பொருள் அல்ல. அதற்காக எல்லா நேரங்களிலும் இப்படியே இருந்து விடக்கூடாது.

மத்தேயு 5:6
    நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான். அவர்கள் திருப்தியடைவார்கள்.
    நீதி என்றால் கடவுளோடு சரியான உறவு கொள்வது. கடவுளோடு சரியான உறவு கொள்ள வேண்டும் என்ற பசியும், தாகமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுளோடு உறவு கொள்வது என்பது கடவுளோடு நாம் பேச வேண்டும். கடவுள் நம்மோடு பேச வேண்டும். அதாவது ஜெபிப்பதும், வேதம் வாசிப்பது. ஜெபிப்பதற்கும் வேதம் வாசிப்பதற்கும் ஆசை இருப்பதோடு மட்டுள்ளாமல் அதைக் குறித்த பசிதாகம் இருக்க வேண்டும்.

    எல்லோரும் ஜெபிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம். ஆனால் எல்லோரும் பரிதாகத்தோடு வாசிக்கிறோமா? என்று யோசிக்க வேண்டும். சிலர் பெற்றோர் கண்டிக்கிறார்களே என்பதற்காக ஜெபிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம். நாம் ஜெபித்து வேதம் வாசிக்காவிட்டால் கடவுளிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது என்பதற்காக நாம் ஜெபிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம். நாம் ஜெபிப்பதிலும், வேதம் வாசிப்பதிலும் பரிதாகமுள்ளவர்களாய் இருக்கும்போது நாம் பாக்கியவான் என்று இயேசு சொல்லுகிறார்.

    பசிவந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது பழமொழி. பரிவந்தால் எல்லாம் மறந்துபோகும். தாகம் எடுத்தால் தண்ணீரை குடிக்கும் வரை நின்மதி இருக்காது. இதைபோல கடவுளோடு பேசுவதற்கும், கடவுளின் வார்த்தைகளை கேட்பதற்கும் பரிதாகம் உள்ளவன் பாக்கியவான்.

    எப்படி ஒரு மனிதனால் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்க முடியாதோ, அதைப்போல ஜெபிக்காமல், வேதம் வாசிக்காமல் கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடாது. இந்த நிலைக்கு கிறிஸ்தவர்கள் வரும்போது அவர்கள் திருப்தியடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    இன்று மனிதர்களுடைய வாழ்க்கையில் எதை செய்தாலும் அதில் திருப்தி இல்லை.  ஆவிக்குறிய வாழ்க்கையில் திருப்தி கிடைக்க வேண்டுமென்றால், நாம் வேதம் வாசிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் பரிதாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


மத்தேயு 5:7
    இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
    நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனைகளும், வேதனைகளும் நம்மை துக்கப்படுத்த வேண்டும். இரக்கம் என்றால் மற்றவர்களுடைய வேதனையை புறிந்துகொள்ளும் தன்மை.

    இருதய கடினமுள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய வேதனைகள் வேதனைகளாகவே தெரியாது. மற்றவர்களுடைய கண்ணீர் இவர்களுக்கு கொஞ்சமும் வேதனையைத் தராது.

    உண்மையான கிறிஸ்தவன் மற்றவர்கள் மீது இரக்கம் வைப்பவனாக இருப்பான். மற்றவர்களுடைய வேதனையை புரிந்துகொள்ளுவான். மற்றவர்களுடைய கவலைகள் இவர்களையும் கவலைப்படுத்தும்.

    இரக்கமுள்ளவர்கள் மற்றவர்களுக்கு இரக்கம் செய்வார்கள். தங்களிடத்தில் இருக்கிறது என்றபடியினால் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள், அவர்களிடம் இல்லாதபடியினால் அவர்களுக்கு கொடுப்பார்கள். இருக்கிறது என்பதால் கொடுக்கிறேன் என்பது இரக்கமல்ல. அவர்களிடம் இல்லை என்றபடியினால் கொடுக்கின்றோமே அதுதான் இரக்கம்.

    நாம் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டும்போது, ஆண்டவர் நம்மீது இரக்கம் காட்டுவார். ஆண்டவர் நம்மீது இரங்கினால் தான் நமக்கு ஆசீர்வாதம்.


மத்தேயு 5:8
    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டு்ள்ளது. இருதயம் சுத்தமானது அல்ல. இருதயமானது திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. (எரேமியா 17:9)

    இருதயம் ஒருபோதும் தானாய் சுத்தமாய் மாறாது. இருதயத்திற்குள்ளே சுத்தம் வரவேண்டும் என்றால், இருதயத்திற்கும் சிந்தைக்கும் இருக்கின்ற பாலம் சரிசெய்யப்பட்டு, சிந்தையில் இருக்கின்ற நல்ல காரியங்கள் இருதயத்திற்கு அனுப்பப்படவேண்டும்.

    நல்ல காரியங்களை நாம் சிந்தையில் சேகரித்தால், சிந்தையில் இருக்கும் நல்ல காரியங்கள் இருதயத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    இருதயம் ஜனங்களோடு வெறுப்பைக் கொண்டுவரும், எரிச்சலைக் கொண்டுவரும், பொறாமையைக் கொண்டுவரும், பெருமையைக் கொண்டுவரும். இப்படியாக எல்லா அசுத்தங்களும் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.

    நம்முடைய சிந்தையில் இருக்கின்ற நல்ல காரியங்களை நாம் இருதயத்திற்கு அனுப்ப வேண்டும். கோபம் வரும் நேரங்களில் சிந்தையிலிருந்து, கோபம் கொள்ள வேண்டாம் என்ற செயல் இருதயத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இப்படியாக நம்முடைய இருதயம் கோபப்படும்போது, பெருமைப்படும்போது, எரிச்சலடையும்போது நம்முடைய சிந்தையிலிருந்து நாம் இருதயத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். கோபப்படாதே, எரிச்சலடையாது, பெருமைப்படாதே என்ற கட்டளைகளை நாம் சிந்தையிலிருந்து இருதயத்திற்கு அனுப்ப வேண்டும்.

    மூளையால் இருதயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உணர்வுகள் நம்மை ஆழக்கூடாது. நாம் உணவர்வுகளை ஆழ வேண்டும்.

    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  தேவனை நம்மால் பார்க்க முடியாது. நாம் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய் இருக்கும்போது கடவுளுடைய பிரசன்னத்தை நம்மால் உணர முடியும்.

    கடவுளுடைய பிரசன்னத்தை உணராவிட்டாலும், கடவுளின் பிரசன்னத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். கடவுளின் பிரசன்னத்தை உணர்தல் என்பது ஒரு நல்ல அனுபவம். கடவுளின் பிரசன்னத்தை நாம் உணர வேண்டுமானால் நம்முடைய இருதயத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

    சிந்தையில் இருந்து நல்ல காரியங்களை இருதயத்திற்கு அனுப்பினால் தான் இருதயத்தை கட்டுபடுத்த முடியும். சிந்தையிலிருந்து நல்ல காரியங்களை அனுப்ப வேண்டுமானால், சிந்தையில் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும். ஆண்டவர் அறுவெறுக்கக்கூடிய காரியங்கள் சிந்தையிலே இருக்குமானால், அவைகள் தான் இருதயத்தையும் நிரப்பும்.

    நம்முடைய வாழ்நாளில் நாம் எதில் அதிகம் நேரம் செலவிடுகிறோமோ, அவைகள் தான் நம்முடைய சிந்தையில் பதிவாகும். சிந்தையில் எது பதிவாகிறதோ, அதுதான் இருதயத்திற்கு அனுப்பப்படும்.

    நாம் கூடுதலாக ஆண்டவருடைய வார்த்தையை தியானிப்பதிலும், ஆண்டவர் படைத்த இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிடுவோம் என்றால், அந்த நல்ல காரியங்கள் நம்முடைய சிந்தையில் பதிவு செய்யப்படும். நல்ல காரியங்கள் சிந்தையிலிருந்தால், அவையே இருதயத்திற்கும் கொண்டு செல்லப்படும். இருயதம் சுத்தமாய் இருக்கும்போது நம்மால் கடவுளின் பிரசன்னத்தை உணர முடியும்.


மத்தேயு 5:9
    சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
    இந்த வசனத்தில் எழுதப்பட்டுள்ள சமாதானம் என்பது சண்டைக்கு எதிர்ச்சொல் ஆகும். எல்லா நேரங்களிலும் பிரச்சனை, பிரச்சனை என்று வாழ கூடாது. தொட்டால் பிரச்சனை, தொடாவிட்டால் பிரச்சனை, நின்றால் பிரச்சனை, உட்கார்ந்தால் பிரச்சனை, படுத்தால் பிரச்சனை, எழுந்தால் பிரச்சனை எப்போது பார்த்தாலும் சண்டை என்றே வாழக்கூடாது.

    சமாதானம் பண்ணுகிறவர்கள் என்றால், நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் செய்கின்ற காரியங்களால் சண்டைபோட வேண்டும் என்ற எண்ணம் வரும், அந்த நேரங்களில் நம்மை நாமே சமாதாப்படுத்த வேண்டும்.

    வேறு யாராவது சண்டை பண்ணிக்கொண்டிருந்தால் அவர்களையும் நாம் சமாதாப்படுத்த வேண்டும். நம்மோடு சண்டைக்கு வருபவர்களையும் நாம் சமாதாப்படுத்த வேண்டும்.

    நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் வாழும்போது கடவுளுடைய புத்திரர் என்ற அங்கிகாரத்தை பெறுகிறோம்.

    இயேசுவுக்கு பல்வேறு நாமங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர் சமாதானப் பிரபு. (ஏசாயா 9:6)


மத்தேயு 5:10
    நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
    முதல் பாக்கிய வசனத்திலும், எட்டாவது பாக்கிய வசனத்திலும் பரலோக ராஜ்யம் அவர்களுடைய என்று வாசிக்கிறோம். எட்டு பாக்கிய வசனங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை இது காட்டுகிறது.

    நீதி என்றால் கடவுளோடு சரியான உறவில் இருப்பது. கடவுளோடு உள்ள உறவு என்றால் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது. கடவுளோடு இருக்கின்ற சரியான உறவின் நிமித்தம் சில நேரங்களில் பிரச்சனைகள் வரும்.
    நாம் ஒழுங்காக ஜெபித்து, வேதம் வாசித்து, ஆராதனைகளில் கலந்துகொள்ளுகிறோம் என்றால், இரட்சிக்கப்படாதவர்கள் நம்மை துன்பப்படுத்துவார்கள். இரட்சிக்கப்படாத மற்றவர்கள் நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் நம்மை உபத்திரவப்படுத்துவார்கள்.
    கிறிஸ்தவர்கள் என்றபடியினால் நமக்கு இந்த பூமியிலே துன்பங்கள் உண்டு. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு விதத்திலும் கிறிஸ்தவர்களுக்கு துன்பம் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்றபடியினால் நாம் நின்மதியாக நம்முடைய தெய்வத்தை ஆராதிக்க முடியாது, நம்முடைய பிள்ளைகளை சரியான பள்ளியில் சேர்க்க முடியாது, சரியான தொழில் நமக்கு கிடைக்காது இதுபோன்ற உபத்திரவங்கள் கிறிஸ்தவர்களுக்கு உண்டு.

    நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், உலகத்தில் எனக்கு உபத்திரவம் இல்லை, பாடுகள் இல்லை என்று நாம் நினைத்தால் அது தவறு. கிறிஸ்தவர்களுக்கு நீதியின் நிமித்தம் துன்பம் கட்டாயம் உண்டு. ஆனால் முடிவிலே பரலோக ராஜ்யம் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்குறியது.


பாக்கிய வசனங்களின் சுருக்கம்
    1. ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிச்சைக்காரர்களைப்போல தாழ்மையாய் வாழ வேண்டும். ஆண்டவரைக் குறித்த காரியங்கள் எனக்கு இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு இருக்க வேண்டும். யார் என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை என்ற என்னம் நமக்கு இருக்க வேண்டும்.

    2. நாம் இப்படி வாழும்போது நமக்கு நிச்சயம் வேதனைகள் உண்டு. பிரச்சனைகள் உண்டு.

    3. பிரச்சனைகள் வருகின்றது என்றாலும், நாம் பொறுமையாய் சாந்தமாய் வாழ வேண்டும்.

    4. கடவுளோடு உள்ள உறவைக் குறித்த பசிதாகம் இருக்க வேண்டும். வேதம் வாசிப்பது, ஜெபிப்பது. நீதியின்மேல் பரிதாகமுள்ளவர்களாக இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையின் உண்மையான நின்மதி நமக்கு கிடைக்கும்.

    5. கடவுளோடு சரியான உறவில் இருப்பவன், வேதம் வாசித்து, ஜெபித்து கடளுவுக்கு பிரியமாய் வாழ்பவன், பிறருக்கு இரக்கம் காட்டுவான். மற்றவர்களுடைய பிரச்சனைகள் இவர்களை பாதிக்கும். மற்றவர்களுக்கு இரங்குகிறவர்கள் கடவுளிடமிருந்து இரக்கம் பெறுவார்கள்

    6. இருதயத்தில் சுத்தம் தேவை. திருக்கும் கேடும் உள்ள இருதயத்திற்கு சிந்தையிலிருந்து நல்ல காரியங்களை அனுப்ப வேண்டும். இப்படிப்பட்டவர்கள் கடவுளின் பிரசன்னத்தை உணர முடியும்.

    7. நாம் சமாதானமாய் வாழ வேண்டும். மற்றவர்களையும் சமாதாப்படுத்த வேண்டும். இப்படி செய்கிறவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்ற பாக்கியத்தைப் பெறுவார்கள்.

    8. கிறிஸ்தவர்களுக்கு உலகத்தில் துன்பங்களும், உபத்திரவங்களும் உண்டு. நீதியின் நிமித்தம் துன்பமும், உபத்திரவமும் வருமாயின் அவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள்.

    இந்த எட்டு காரியங்களும் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். இது வளர்ந்த கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தேவையானதாகும்.

    ஒருவன் புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றால் அவனுக்கு முதலாவது இந்த பாக்கிய வசனங்களை நன்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது இயேசுவின் முதலாவது பிரசங்கம். இதை நாம் ஒருநாளும் மறந்துவிடவும் கூடாது.

    இவை புதிய கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் என்று நினைத்து, மற்றவர்கள் இதை மறந்துவிடவும் கூடாது. சகல கிறிஸ்தவர்களும் இந்த பாக்கிய வசனங்களை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும்.

    இந்த எட்டு காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருந்தால், நம்முடைய வாழ்க்கை சந்தோஷமானதாகவும், நின்மதியானதாகவும் இருக்கும்.

    சொந்த வீடு இல்லாவிட்டாலும், வாகனம் இல்லாவிட்டாலும் எது இல்லையென்றாலும் நமக்கு தேவையானது சந்தோஷமும் நன்மதியும். இந்த சந்தோஷமும், நின்மதியும் வேண்டுமானால் இந்த எட்டு பாக்கியவசனங்களின் படி நாம் வாழ வேண்டும்.

    இயேசு கிறிஸ்து முதலாவது கற்றுக்கொடுத்த இந்த பாக்கியவசனங்களை கற்றுக்கொண்ட நாம் அதின்படி வாழ்ந்து சந்தோஷத்தையும், நின்மதியையும் பெற்றுக்கொள்வோம்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.