Type Here to Get Search Results !

One Of The Two | இருவரில் ஒருவர் | Tamil Christian Sermon Points | Sunday Service Message in Tamil | Jesus Sam

========================
தலைப்பு: இருவரில் ஒருவர்
========================
1 கொரிந்தியர் 9:24
    பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப்பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

    பந்தைய சாலையில் அநேகர் ஓடினாலும், முதலாவதாக இலக்கை தொடுகின்ற நபருக்கே பரிசு வழங்கப்படும். இது தான் உலக நீதி.
கடவுளுடைய நீதிபடி, பரலோகம் என்ற இலக்கை அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். யார்? யார்? தங்களுடைய வாழ்க்கையை வெற்றியாய் வாழ்ந்து முடிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஆண்டவர் பரலோக ராஜ்யத்தை திறந்து வைத்திருக்கிறார்.

    முதலில் வருபவர்களுக்கு மாத்திரம் பரலோகம் அல்ல. நேர்த்தியான முறையில் வாழ்க்கை ஓட்டத்தை ஓடி, இலக்கை அடைந்த அனைவருக்கும் பரலோகம் நிச்சயம்.

    மத்தேயு 24:40,41 வசனங்களில் வாசிக்கிறோம், வயல் வெளியில் இருக்கின்ற இருவரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். எந்திரம் அறைக்கின்ற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
இப்படியாக இருவரில், ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறித்து இந்த பதிவில் தியானிப்போம்.

1. இரண்டு குற்றவாளிகள் (லூக்கா 23:39-43)
இயேசுவின் சிலுவை அருகே இரண்டு குற்றவாளிகள்
    பொதுவாக மனிதர்கள் அநேக நேரங்களில் கோபம் கொள்வதுண்டு. நாம் வீட்டில் பொழுது போக்குக்காக இணையதளத்தில் குறும்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும்போது அல்லது இணையத்தில் எதையேனும் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும்போது, இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டால், நம்மை அறியாமலேயே கோபம் கொள்கிறோம். அந்த குறும்படத்தை பார்ப்பதன் மூலமாக நமக்கு எந்த பயனும் இல்லை என்றாலும், இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டதால் இணையதளத்தின் முதலாளியை திட்டுகிறோம். மாதம் மாதம் கட்டணம் செலுத்த சொல்லுகிறான், சரியாக இணையதள சேவையை அவனால் கொடுக்க முடியில்லை என்று கோபம் கொள்கிறோம்.

    இந்தியாவில் அதிக பட்ச தண்டனையாக குற்றவாளியை தூக்கு மரத்தில் ஏற்றி கொலை செய்வார்கள். அந்த குற்றவாளியை தூக்கு மரத்தில் ஏற்ற கொண்டு செல்லும்போது, மிகவும் அமைதியாக, பொறுமையாக செல்ல மாட்டார். கத்தி கூக்சலிட்க்கொண்டே தூக்கு மேடைக்கு செல்லுவார். அப்படி அவர் தூக்கு மேடைக்கு செல்லும்போது ஒவ்வொருவரையும் கோபத்தில் திட்டுவார்.

    தூக்கு மேடையில் ஒரு கைதி இருக்கப்போவது ஒரு சில நிமிடங்களே. அந்த சிறிய நேரத்தில் அவரின் கூக்குரல் பெரியதாக இருக்கும். தனக்கு தண்டனை வழங்கின நீதிபதியையும், தன்னை தூக்கி மாட்டி கொலைசெய்யப்போகும் அதிகாரிகளையும் சபித்துக்கொண்டே தூக்குமேடைக்கு செல்லுவார். இந்த குற்றவாளியைவிட பெரிய குற்றம் செய்தவர்கள், அரசியல்வாதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை பார்த்த இவர், என்னை மட்டும் இப்படி அநியாயமாக கொலைசெய்கிறதே இந்த அரசு என்று கத்தி கூச்சலிடுவார்.
அதைப்போலவே இயேசுவின் காலத்தில் மிகவும் கொடுமையான தண்டனையாக இருந்தது இந்த சிலுவை மரணம். சிலுவை மரத்தில் ஒருமனிதனை அறையும்போது, அவர் மிகவும் அமைதியாக என்னை சிலுவையில் அறையுங்கள் என்று சொல்ல மாட்டார். மிகவும் கத்தி கூச்சலிடுவார்.

    தன்னை சிலுவை தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த ரோம அதிகாரிகளையும், சிலுவை மரத்தில் தூக்கிப்போட்ட போர்வீரர்களையும் சபித்துக்கொண்டே இருப்பார்.

    ஒருவரை தூக்கிட்டு கொலை செய்தால் அவரின் உயிர் சில நிமிடங்கிளில் பிரிந்துவிடும். ஆனால், ஒரு மனிதனை சிலுவையில் அறைந்தால் அந்த மனிதனின் உயிர் உடனே பிரிவது இல்லை. பல மணி நேரங்கள் அவர் சிலுவை மரத்தில் தொங்குவார்.

    தான் உண்மையில் தவறு செய்திருந்தாலும், தன்னை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்த ஒவ்வொருவரையும் தவறான வார்த்தைகளை சொல்லி பேசுவார்.

    இயேசுவின் சிலுவைக்கு அருகில் இரண்டு கல்லர்கள் அறையப்பட்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்து தவறு செய்யாதவர். ஆனால் அந்த குற்றவாளிகள் தவறு செய்தவர்கள். இரு குற்றவாளிகளும் நியாயப்படி தண்டிக்கப்படுகிறார்கள். இருப்பினும் இவர்களைப்போலவே குற்றம் செய்த பரபாரஸ் என்பவரை ரோம அரசாங்கம் விடுதலை செய்ததல்வா? இதைப்பார்த்த அந்த குற்றவாளிகளின் இருதயத்தில் எப்படிப்பட்ட என்னம் தோன்றும் யோசித்துப்பாருங்கள். யார் யாரையோ இந்த அரசாங்கம் விடுதலை செய்கிறதே என்னை மட்டும் இப்படி சிலுவை மரத்தில் தூக்கி கொலைசெய்கிறார்களே என்று நினைத்து, தங்கள் இருதயத்தின் பாரத்தால் தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

    இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் வரை அவரிடம் எந்த குற்றமும் இல்லை. சிலுவையில் மரண வேதனைப்படும்போதாவது ஏதாவது தவறான வார்த்தைகளை பேசுவார் என்றே, பிரதான ஆசாரிகளும், வேதபாரகர்களும், மூப்பர்களும் இயேசுவின் சிலுவை மரத்தின் அருகே நின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவன்:
    இப்படியாக சிலுவையில் தொங்கிய குற்றவாளிகளில் ஒருவன், எல்லோரையும் இகழந்து பேசியதுபோலவே, இயேசுவையும் இகழ்ந்து பேசினான்.

    நீ கடவுளானால் உன்னையும் விடுவித்து என்னையும் விடு, நான் வேதனைப்படுகிறேன் என்று இயேசுவையும் இகழ்ந்தான்.

லூக்கா 23:39
    அன்றியும் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

மற்றொருவன்:
    மற்ற கள்ளனோ, தன்னுடைய மரணத்தருவாயிலும் கூட மிகவும் தாழ்மையாய் இயேசுவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தில் என்னை நினைத்தருளும் என்று ஜெபித்தான்.

லூக்கா 23:42
    இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

    மற்ற கள்ளன்: தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று தெரிந்தபோதிலும், தனக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டான். ஆண்டவரிடம் தன்னை அர்ப்பணித்தவனாக அந்த பரதீசு வாழ்க்கையில் சேரும் பாக்கியம் பெற்றான்.

லூக்கா 23:43
    இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    நம்முடைய வாழ்க்கையிலும் கூட சில நேரங்களில் ஏற்படுகின்ற தோல்விகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் நாம் நினைத்துக்கொண்டு கடவுளை தூசிக்கிறவர்களாக, கடவுளை இகழ்கிறவர்களாக காணப்படுகின்றோம்.

    நம்முடைய குடும்ப உறவுகளில் யாரேனும் மரித்துப்போனால், கடவுள் ஏன் இப்படி செய்தார், கடவுளே இல்லை என்று அந்த முதலாவது கள்ளனைப்போல நாம் கடவுளை இகழந்து பேசுகிறோம்.

    இந்த இரண்டாவது கள்ளனைப்போல, எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை உண்மையாய் தேடும்போது, முழு மனதோடு தேடும்போது, பாடுகளின் மத்தியில், வேதனையின் மத்தியில் கடவுளை உண்மையாய் ஆராதிக்கும்போது நாமும் கள்ளனைப்போல பரதீசு வாழ்க்கையை அதாவது பரலோக வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.


2. இரண்டு மனுஷர்: (லூக்கா 18:10-14)
பரிசேயன், ஆயக்காரன்
பரிசேயன்:
    பரிசேயர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் மக்களுக்கு போதிப்பதற்காக கடவுள் லேவியர்களை நியமித்தார். யூதா, பென்யமீன் கோத்திரங்களாகிய தெற்கு ராஜ்யத்தில் லேவியர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

    இந்த தெற்கு ராஜ்யம் கி.மு. 586-ல் பாபிலோனின் ராஜாவாகிய நோபுகாத்நேச்சாரால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுது யூதா, பென்யமீன் கோத்திரங்களும், இவர்களுக்கு நியாயப்பிரமாணத்தை கற்றுக்கொடுக்கின்ற சில லேவியர்களும் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    அந்த நாட்களில் அவர்கள் ஆராதிப்பதற்கு தேவாலயம் இல்லாததால் வீடுகளில் ஆராதனை நடத்தி வந்தார்கள். பாபிலோனியர்களால் கொண்டு செல்லப்பட்ட தெற்கு ராஜ்யத்தின் புத்திரரில் நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும், கட்டளைகளையும் நன்கு அறிந்த மனிதர்கள் ஜெப ஆலயங்கள் துவங்கி அங்கு ஆராதனை நடத்த ஆரம்பித்தார்கள். அப்படி உருவானவர்களே இந்த பரிசேயர்கள்.

    தேவாலயமும், நியாயப்பிரமாணமும், ஆராதனை ஒழுங்கும் இல்லாத பாபிலோனிய நாட்டில் அனுபவத்தின் மூலமாக ஆராதனை நடத்தும்படியாக தெரிவு செய்யப்பட்டவர்களே இந்த பரிசேயர்கள்.

    யூதா, பென்யமீன் கோத்திரத்தார் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டு 70 ஆண்டுகள் பாபிலோனில் இருந்தார்கள். பின்பு, கடவுளின் கிருபையினால் மீண்டும் எருசலேம் திரும்பினார்கள். இப்போது எருசலேமில் தேவாலயம் இருக்கிறது. ஆசாரியர்கள், லேவியர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் இந்த பரிசேயர்கள் ஜெப ஆலய முறைமையை கைவிடவில்லை. ஜெப ஆலயங்களிலும் ஆராதனை நடத்தி வந்தர்கள்.

    பரிசேயர்கள் ஜனங்களால் நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டார்கள். நியாயப்பிரமாணங்களையும், கற்பனைகளையும், கட்டளைகளையும் நன்கு அறிந்தவர்கள். ஜனங்கள் அவர்களை பெரிதும் மதித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பரிசேயன் தேவாலயத்தில் ஜெபிக்க சென்றபோது, இப்படியாக ஜெபித்தான்.

லூக்கா 18:11,12
    11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
    12. வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

    பரிசேயன் உலகத்தின் பார்வைக்கு மிகவும் நல்லவன். வெளிப்புறத் தோற்றத்தில் அவனை மிஞ்சும் பரிசுத்தவான் இருக்க முடியாது. ஆனால் பரிசேயனின் உள்ளத்தில் பெருமையும், அகந்தையும், ஆனவமும் காணப்பட்டது.  இதை மனிதர்கள் அறியாவிட்டாலும் எல்லாம் வல்ல இறைவன் அறிவார்.

ஆயக்காரன்:
    ஆயக்காரர்கள் என்பவர்கள் வரி வசூலிப்பவர்கள். இயேசுவின் காலத்தில் முழு உலகையும் ஆட்சி செய்தவர்கள் ரோமர்கள். ரோமர்களால் முழு உலகிற்கும் சென்று மாதமாதம் வரி வசூலிக்க முடியாததால், ரோமர்கள் அந்த அந்த பகுதியில் உள்ள ஒரு பணக்காரரை தெரிவு செய்து அவரிடம் அந்த பகுதியில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் தேவையான ஒருவருட வரிப்பணத்தை வாங்கிச் செல்வார். அந்த பணக்காரர் ஒவ்வொரு மாதமும் அந்த மக்களிடம் வரியை வசூலித்துக்கொள்ளவேண்டும். இவர்களே ஆயக்காரர்கள்.

    ஆயக்காரர்கள் ஒரு குடும்பத்திற்காக ரோம அரசாங்கத்திற்கு செலுத்தின தொகையைக் காட்டிலும் பல மடங்கு தொகையை அக்குடும்பத்தாரிடம் வசூலித்தார்கள். இவர்கள் ரோம அரசின் அங்கிகாரம் உடையவர்கள் என்பதால் ஜனங்கள் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்க துணியவில்லை.

    அநேக ஆயக்காரர்கள் ஜனங்களிடம் அநியாயமாய் வரி வசூல் செய்தாலும், சில ஆயக்காரர்கள் உண்மையும் உத்தமமுமாய் தங்கள் பணியை செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

    அநேக ஆயக்காரர்கள் அநியாயமாய் மக்களிடம் வரியை வசூலிப்பதால் ஆயக்காரர்களை ஜனங்கள் வெறுத்தார்கள்.

    இப்படிப்பட்ட ஆயக்காரன் ஒருவன் ஜெபிக்கும்படி தேவாலயம் வருகின்றான். அவன் இப்படியாக ஜெபிக்கின்றான்,

லூக்கா 18:13
    ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

    தேவாலயத்திற்கு வந்து ஜெபித்த இந்த ஆயக்காரன் உண்மையில் அநியாயமாய் மக்களிடம் வரிவசூலித்தானா இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து தன்னுடைய பாவங்களை ஆண்டவருடைய சமுகத்தில் அறிக்கையிட்டு ஜெபித்தான்.

    உலகத்தின் பார்வையில் அவன் ஒரு பாவியாக, அநியாயக்காரனாக இருந்தாலும், கடவுளின் பார்வையில் அவன் நீதிமானாகக் காணப்பட்டான். கடவுள் மனிதனுடைய தோற்றத்தையும், உயரத்தையும், அழகையும் பார்கிறவர் அல்ல. கடவுள் இருதயத்தைப் பார்க்கின்றவர்.

    ஆயக்காரனின் ஜெபம் தாழ்மையுள்ளதாய் இருந்தது. தன்னை முழுவதுமாக கர்த்தருடைய சமுகத்தில் தாழ்த்தி, தன் பாவங்களை அறிக்கையிட்டு ஜெபித்தான்.

ஆயக்காரனே நீதிமான்:
லூக்கா 18:14
    அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

    பரிசேயன் ஜனங்களால் நீதிமான் என்று அழைக்கப்பட்டான். வேத வசனங்களை கற்றுத் தேறினவனாகவும், ஜனங்களுக்கு கருத்தாய் போதிக்கிறவனாகவும் இருநதான். அப்படிப்பட்ட பரிசேயனின் உள்ளத்தில் பெருமை காணப்பட்டபடியினால் அவனை கர்த்தர் நீதிமான் என்று அழைக்கவில்லை.

    தனக்கு நியமிக்கப்பட்டதை விட அநியாயமாய் மக்களிடம் வரிவசூலித்துக்கொண்டிந்த ஆயக்காரன், ஜனங்களால் வெறுக்கப்பட்ட ஆயக்காரன், தன் தப்பிதங்களை உணர்ந்து, தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தபோது, ஆண்டவர் அவனுடைய பாவங்களை மன்னித்து, அவனை பரிசுத்தப்படுத்தி, நீதிமானாக்கினார்.

    பரிசேயன் அல்ல, ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டிற்கு திரும்பிச்சென்றான்.

    நாமும் கூட அநேக நேரங்களில் இந்த ஆயக்காரனைப்போல நான் தான் இதை செய்தேன், என்னால் தான் இதை செய்ய முடிந்தது என்று பெருமை கொள்கிறோம். பெருமையுள்ளவர்களுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

    கடவுள் விரும்பாத பெருமை என்ற குணம் நம்மிடையே காணப்படுமானால், ஆண்டவருடைய சமுகத்தில் நம்மை அர்ப்பணித்து, ஆயக்காரனை போல தாழ்மையின் சிந்தையை வளர்த்துக்கொள்வோம்.



3. இரண்டு சகோதரி: லூக்கா 10:38-42
மார்த்தாள், மரியாள்
    இயேசு கிறிஸ்து மார்த்தாள், மரியாள், லாசரு என்பவர்கள் இருந்த பெத்தானியா கிராமத்திற்கு வந்தபோது, மார்த்தாள் இயேசுவை தன் வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொண்டாள்.

    மார்த்தாளின் விருப்பத்திற்கு இனங்க இயேசு மார்த்தாளின் வீட்டில் தங்கும்படி சென்றார்.

மார்த்தாள்:
    இயேசு கிறிஸ்துவை தன் வீட்டில் ஏற்றுக்கொண்ட மார்த்தாள், வீட்டு வேலைகளை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். உலக இரட்சகர் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்க, மார்த்தாள் அவருடைய வார்த்தையை கேட்க ஆசைப்படாமல், வீட்டு வேலைகளை செய்வதில் மிகவும் கவனமாக இருந்தாள். கடவுளுடைய வார்த்தையைக் காட்டிலும் உலகப்பிரகாரமான பொறுப்புகள் மார்த்தாளுக்கு பெரிதாக தெரிந்தது.

மரியாள்:
    மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள், உலகப்பிரகாரமாக அநேக பொறுப்புகள், வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஆண்டவருடைய வார்த்தையை கேட்பதில் அதிக கவனம் செலுத்தினாள்.

லூக்கா 10:41,42
    41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
    42. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

    நாமும் கூட அநேக நேரங்களில் மார்த்தாளைப்போல உலக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறவர்களாக இருக்கிறோம்.

    நம்முடைய படிப்பை குறித்து, எதிர்காலத்தைக் குறித்து, பிள்ளைகளைக் குறித்து, கடன் பாரத்தைக் குறித்து, நல்ல வேலை கிடைக்கவில்லையே என்பதைக் குறித்து, எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்று நாம் யோசித்து கவலைப்படுவதுண்டு.

    மரியாள் ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்ததுபோல, நாமும் நம்முடைய கவலைகளை மறந்தவர்களாக ஆண்டவருடைய வேதத்தை தியானிப்பதிலும், ஜெபிப்பதிலும் நேரத்தை செலவிடும்போது, நம்முடைய குறைகளை அவர் நிறைவாக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.


4. இரண்டு மருமகள்:
ரூத், ஓர்பாள்
ரூத் 1:14
    எலிமலேக்கு நகோமி என்ற தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களின் பெயர் மக்லோன், கிளியோன். இவர்கள் மோவாப் தேசத்தில் பெண்கொண்டார்கள். அவர்களின் பெயர் ரூத், ஓர்பாள். எலிமலேக்கு, மக்லோன், கிளியோன் மூவரும் மரித்த போது, நகோமி தன் தன் மருமகள் ரூத், ஓர்பாளோடு தாயகம் திரும்ப தீர்மானித்தாள்.

    இவ்விரண்டு மருகள்களில் ரூத் மாத்திரமே கடவுளுடைய ராஜ்யத்தை தெரிவு செய்தாள். ஓர்பாள் உலகத்தின் பின்னால் சென்றுவிட்டாள்.


5. இரண்டு குமாரர்:
லூக்கா 15:20,28
    ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இளையவன் தன் தகப்பனின் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்துப்போட்டான். இருப்பினும் தன் பாவங்களை உணர்ந்து தன் தகப்பனிடம் மன்னிப்பு கேட்டபோது, மன்னிப்பை பெற்றுக்கொண்டான். தன் சகோதரன் வீட்டிற்கு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த சகோதரன், கடைசிவரை வீட்டிற்குள் வந்ததாக நாம் லூக்கா 15-ம் அதிகாரத்தில் வாசிக்க முடியாது.

    தன் பாவங்களை அறிக்கை செய்த இளைய மகன் ஏற்றுக்கொள்ளப்பட்டான். தன் சகோதரை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த மகன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.



6. இரண்டு சகோதரர்:
காயீன், ஆபேல்
ஆதியாகமம் 4:3-6
    முதல் மனிதன் அதாமுக்கு காயீன், ஆபேல் என்னும் இரண்டு குமாரர் இருந்தார்கள்.  இவ்விரும் கர்த்தருக்கு காணிக்கை படைத்தார்கள். காயீனின் காணிக்கையை கர்த்தர் அங்கிகரிக்கவில்லை. ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கிகரித்தார். இவ்விருவரில் காயீன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆபேல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.



7. இரட்டைப் பிள்ளைகள்:
ஏசா, யாக்கோபு
ஆதியாகமம் 25:23,24
ரோமர் 9:13
    ஈசாக்குக்கு ஏசா, யாக்கோபு இரண்டு குமாரர் இருந்தார்கள்.  இவ்விருவரில் இளைய மகன் யாக்கோபையே ஆண்டவர் தெரிந்துகொண்டார். கர்த்தர் யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தார் என்று ரோமரில் வாசிக்கிறோம். இவ்விருவரில் யாக்கோபு ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏசா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இருவரில் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் வேதத்தில் உள்ள கதாப்பாத்திரங்களைக் குறித்து அறிந்துகொண்டோம். இவ்விருவரில் நாம் யாரைப்போல் வாழ்கின்றோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
    ஆண்டர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.