Type Here to Get Search Results !

Christian Doctrines Part 3 | கிறிஸ்தவ மூல உததேசங்கள் பாகம் மூன்று | Christian Must Important News | Jesus Sam

கிறிஸ்தவ மூல உபதேசங்கள் (பாகம் மூன்று)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் மூன்று.  இந்த மூன்றாம் பாகத்தில் திருவிருந்து குறித்தும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும், முழுமையான பரிசுத்தத்தைக் குறித்தும், சபை ஆராதனையைக் குறித்தும் அறிந்துகொள்ள இருக்கிறோம்.  

    முதல் இரண்டு பாகங்களை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்து வாசிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்





திருவிருந்து | பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் | முழுமையான பரிசுத்தம் | சபை ஆராதனை


8. திருவிருந்து (கர்த்தருடைய பந்தி):

            இயேசுவானவர் தாம் காட்டிக்கொடுக்கப்படுகின்ற அந்த இராத்திரியில் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு சீஷர்களுக்கு கொடுத்து நீங்கள் வாங்கி புசியுங்கள் என்று சொன்னார். அப்பம் என்பது இயேசு கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும்.  ரசம் என்பது இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கும்.

            யூதர்கள் அப்பத்தை சாப்பிட்டதும் தண்ணீர் அருந்துவார்கள்.  திராட்சை ரசம் என்பது மனமகிழ்ச்சிக்காக அருந்தக்கூடிய ஒன்று.  யூதர்கள் தினமும் தங்கள் வீடுகளில் அப்பம் சாப்பிட்டுவிட்டு, திராட்சைரசம் குடிப்பவர்கள் அல்ல.

            இந்தியாவில் பாரம்பரிய உணவாக அரிசி உணவு இருப்பது போல, யூதர்களின் பாரம்பரி உணவு அப்பம் ஆகும்.  பொதுவாக யூதர்கள் அப்பத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீரையே குடிப்பார்கள்.

            ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுவதற்கு முன்பு சீஷர்களோடு உணவு அருந்தும்போது, முதலாவதாக அப்பத்தைக் கொடுக்கின்றார்.  அப்பத்தை தன்னுடைய சரீரமாக நினைவுபடுத்துகிறார்.  அதாவது அப்பம் என்பது இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு அடையாளம்.  மரணம் என்பது துக்கமான ஒரு காரியம்.

            இயேசு கிறிஸ்துவை சாதாரணமாக சிலுவையில் அறையவில்லை.  சிலுவையில் அறையும் முன்பதாக முதுகில் முப்பத்து ஒன்பது முறை வாரினால் அடித்தார்கள், முட்கிரீடம் சூட்டினார்கள், கன்னத்தில் அறைந்தார்கள், துப்பினார்கள், நிர்வானமாய் சிலுவையில் அறைந்தார்கள், தெருவோரத்தில் அனைவரும் பார்க்கும்படியாக அவரை சிலுவையில் அறைந்தார்கள்.  இவைதான் அந்த அப்பத்தின் அடையாளம்.  நான் வருமளவும் இதை நினைவுகூறுங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறினார்.

            இயேசு கிறிஸ்து இவ்வளவு கோரமாக சிலுவையில் அறையப்பட்டாலும், அதோடு அவருடைய வாழ்க்கை முடிந்துபோய்விடவில்லை.  இயேசு மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்தார்.  இது மகிழ்ச்சியான செய்தி. அந்த மகிழ்ச்சியையும் நாம் நினைவுகூற வேண்டும் என்பதற்காக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்பத்தையும், ரசத்தையும் கொடுக்கின்றார்.

            சில பாரம்பரிய திருச்சபைகளில் அப்பத்தை சபையார் எல்லோரும் அருந்துவார்கள், ரசத்தை ஊழியர்கள் மாத்திரமே அருந்துவார்கள்.  ஆண்டவர் நமக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை.  ஒவ்வொரு ஊழியனும், ஒவ்வொரு விசுவாசியும் அப்பத்தையும், ரசத்தையும் அருந்த வேண்டும் என்பதே ஆண்டவர் நமக்கு கொடுத்த பிரமாணம்.

            ஒரு சில சபைகளில் தினமும் திருவிருந்து ஆராதனை நடத்துவார்கள்.  சில சபைகளில் மாதத்திற்கு ஒரு முறை திருவிருந்து ஆராதனை நடத்துவார்கள்.  இவற்றில் எது சரியானது என்று நாம் யோசிக்கத்தேவையில்லை.  அவைகள் ஒவ்வொரு சபையைப் பொருத்தும் வேறுபடும்.  ஆண்டவர் நமக்கு கொடுத்த கட்டளை என்னவென்றால், திருவிருந்து என்பது எல்லா சபைகளிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

            எத்தனை மாதத்திற்கு ஒரு முறை திருவிருந்து அனுசரிக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை திருவிருந்து அனுசரிக்க வேண்டும் என்று சொல்லுவது கிறிஸ்தவ மூல உபதேசத்தின் கடமை அல்ல.  மூல உபதேசம் என்பது சபையில் திருவிருந்து ஆராதனை நடைபெற வேண்டும் என்பதே.  ஒவ்வொரு திருச்சபையிலும் திருவிருந்து ஆராதனை முறைகள் வித்தியாசப்படும். 

            1 கொரிந்தியர் 11:23-ம் வசனத்தை ஒவ்வொரு திருவிருந்து ஆராதனைகளிலும் நாம் வாசிப்பது வழக்கம்.

            கிறிஸ்தவ மூல உபதேசம் என்பது ஒவ்வொரு விசுவாசியும் திருவிருந்தை நம்ப வேண்டும், திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும்.

 

9. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்:

            பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவர்களுக்கு கட்டாயமான ஒன்றாகும்.  அப்போஸ்தலர் ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவானவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறும் வரை எருசலேமில் காத்திருங்கள் என்று சொல்லுகிறார்.

லூக்கா 24:49

            என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.  நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

அப்போஸ்தலர் 1:3,4

            3. அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

            4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்.  நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

            இந்த வசனத்தின் படி பரிசுத்த ஆவயின் ஞானஸ்நானம் என்பது உண்டு.  பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு அடையாளமாக ஆவியானவர் அந்நிய பாஷையைக் கொடுக்கின்றார்.  அந்நிய பாஷை என்று ஒன்று உண்டு என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் நம்ப வேண்டும்.

            ஒரு விசுவாசியோ, ஒரு திருச்சபையோ அந்நிய பாஷை பேசவில்லை என்றால் அதில் ஏதும் தவறுகள் இல்லை.  ஏனென்றால், அந்நிய பாஷை என்பது ஒரு வரம்.  ஒருமனிதனை அந்நிய பாஷை பேசு என்று கட்டாயப்படுத்துவதும் தவறானது.

            அந்நிய பாஷையை எல்லோரும் பேசவேண்டும் என்பது மூல உபதேசம் அல்ல.  அது ஒரு வரம்.  ஆனால் அந்நிய பாஷை உண்டு என்பதை ஒவ்வொரு ஊழியனும், கிறிஸ்தவனும் நம்ப வேண்டும்.

            அந்நிய பாஷை பேசும் வரம் ஒருவனுக்கு கிடைத்து விட்டதால் அவன் பரிசுத்தவன் என்று நாம் செல்லமுடியாது.  அந்நியபாஷை பேசிக்கொண்டு அநியாயம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

            அந்நிய பாஷையின் வரம் இல்லாமல், கர்த்தரை உண்மையாய் நேசித்து வாழுகிறவர்களும் உண்டு.

            அந்நியபாஷையின் வரம் கிடைக்காத அநேகர், எனக்கு அந்நியபாஷையின் வரம் கிடைத்து விட்டது என்று சொல்லி, தங்கள் சுயத்தைப் பேசுகிறவர்களும் உண்டு.  பரிசுத்தமான அந்நிய பாஷையை அநியாய பாஷையாக மாற்றுகிறவர்களும் உண்டு.

            வேதத்தின்படி பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும், அதற்கு அடையாளமாகிய அந்நியபாஷையும் இருக்கின்றன என்பது உண்மை.  அதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

 

10. முழுமையான பரிசுத்தம்

            இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிசேகத்தைப் பெற்ற நாம் முழுமையாக இன்னும் பரிசுத்தமாக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும்.  நாம் எவ்வளவு நேரம் ஜெபித்தாலும், உபவாசித்தாலும், அந்நியபாஷைகள் பேசினாலும் நாம் இன்னும் முழுமையாய் பரிசுத்தமாகவில்லை.  பரிசுத்தமாக்கப்படுதலின் படிமுறையில் இருக்கிறோம்.

            நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் பரிசுத்தம் அதிகமாயும், நாளைய தினத்தை விட இன்றைய தினம் பரிசுத்தம் குறைவாயும் நாம் வாழ வேண்டும்.  ஒவ்வொரு நாளும் நாம் ஆவியிலும், பரிசுத்தத்திலும் வளர்ச்சியடைய வேண்டும்.

எபிரெயர் 12:14

            யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவும் நாடுங்கள், பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரை தரிசிப்பதில்லையே.

 

1 பேதுரு 1:15,16

            15. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்

            16. நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாய் இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

 

1 தெசலோனிக்கேயர் 5:23,24

            23. சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.  உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுதாக.

            24. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 

 

1 யோவான் 2:6

            அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடக்கிறபடியே தானும் நடக்க வேண்டும்.

 

            நாம் ஒவ்வொருநாளும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய வேண்டும்.  பரிசுத்தத்தின் முழுமையை அடைந்தவர்கள் இந்த உலகத்தில் வாழ தகுதியானவர்கள் அல்ல. 

            சில பரிசுத்தவான்கள் இளம் வயதிலேயே மரித்துப்போகிறார்கள்.  அவர்கள் அனைவரும் பரிசுத்தத்தில் முழுமையடைந்தபடியினால் ஆண்டவர் அவர்களை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

            அப்படியானால் தற்போது ஊழியம் செய்து கொண்டிருக்கின்ற பரிசுத்தவான்கள் அனைவரும் முழுமையான பரிசுத்தவான்கள் அல்ல என்று நாம் சொல்ல முடியாது.

            நாம் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  சோர்வுகள், பெலவீனங்கள், வியாதிகளின் மத்தியில் நாம் கடவுளைவிட்டு பின்வாங்கவேண்டிய சூழ்நிலை வருலாம்.  தவறுவது மனித இயல்பு.  நாம் வழிதவறினாலும் மீண்டும் எழும்ப வேண்டும்.  நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று நீதிமொழிகள் 24:16-ல் வாசிக்கிறோம்

            பூமியில் வாழ்கின்ற ஒருவரும் முழுமையான பரிசுத்தவான் அல்ல.  ஒருவன் பரிசுத்தவான் என்றாலே அவன் ஒவ்வொருநாளும் பரிசுத்தத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம். 

 

11. சபை ஆராதனை

            கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சபையோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும்.  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சபைக்கு மாரிக்கொண்டிருக்க கூடாது.

            சில கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய சபைக்கு செல்லுவார்கள். அதற்கு அவர்கள் ஒரு காரணமும் வைத்திருப்பார்கள்.  அந்த சபையில் ஊழியர் சரியில்லை, நிர்வாகம் சரியில்லை.  சபை விசுவாசி சரியில்லை.  ஆடியோ சிஸ்டம் சரியில்லை.  இப்படியாக எதையாவது குறை சொல்லிக்கொண்டு சபையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

            அப்படிப்பட்டவர்கள் ஒரு காரியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.  குறைகள் இல்லாத சபைகளே இல்லை.  எல்லா சபைகளிலும், எல்லா ஊழியரிடமும் ஏதோ ஒரு குறை உண்டு.  சிலர் சபைகளில் உள்ள குறைகளை பார்த்துவிட்டு சபைக்கு செல்லுவதையே நிறுத்திவிடுகிறனர்.

            இவையனைத்தும் பிசாசின் கிரியைகள்.  சபை கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்டது.  அப்படிப்பட்ட சபையை விட்டு நம்மை பிரிக்கும்படியாக பிசாசானவன் சபையில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டி சபைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்று கற்றுக்கொடுக்கிறான்.

 

எபேசியர் 1:22,23

            22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவான சரீரமாகிய சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

 

எபேசியர் 2:22

            அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

 

எபிரெயர் 12:23

            பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேரானர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும்.

 

            பிசாசானவன் சபை ஆராதனையை சீர்குலைப்பதற்காக அநேக குறுக்கு வழியை பயன்படுத்துகிறான்.  சிறுவர் கூடுகை, வாலிபர் கூடுகை, ஆண்கள் கூடுகைள், பெண்கள் கூடுகை, வீட்டுக் கூட்டம் இதுபோன்ற கூடுகைகளை இதுதான் சபை என்று மக்களை நம்பவைக்கிறான்.

            சபை ஆராதனையில் ஜெபம், துதி, ஆராதனை, கர்த்தருடைய வார்த்தை இவையனைத்தும் இடம் பெற்றிருக்கும்.  இவை அனைத்தும் சிறப்பு கூட்டங்களிலும் நடைபெறுவதால் அநேகர் இவையும் சபை ஆராதனை என்று நினைக்கிறார்கள்.

            மத்தேயு 18:20-ல் இரண்டு மூன்று பேர் கூடும் இடங்களில் ஆண்டவர் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.  இவ்வசனத்தை பிடித்துக்கொண்டு அநேகர் சபை ஆராதனை தேவையில்லை என்று சொல்லுகிறார்கள்.

            இரண்டு மூன்று பேர் கூடும்போது ஆண்டவர் வருவார்.  ஆனால் அவை சபை ஆராதனை அல்ல.

            1 கொரிந்தியர் 3:17-ல் நீங்களே அந்த ஆலயம் என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு, அநேகர் நம்முடைய சரீரம் ஆலயமாய் இருக்கும்போது நாம் ஏன் சபை ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

            நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  பிதாவின் ஆலயம் சபை ஆராதனை.  குமாரனின் ஆலயம் ஜெபக்கூட்டங்கள்.  அதாவது இரண்டு அல்லது மூன்று நபர்கள் கூடும் இடம்.  ஆவியானவரின் ஆலயம் என்பது நம்முடைய சரீரம்.

            இதைப் புரிந்துகொள்ள விடாமல் பிசாசானவன், அநேக வஞ்சனையான வார்த்தைகளினாலே சபையை பாலாக்கிக்கொண்டிருக்கின்றான்.  வீட்டில் இருந்தபடியே ஆண்டவரை ஆராதிக்கலாம், சபைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்று பிசாசானவன் போதிக்கிறான்.

            இந்த நவீன காலகட்டத்தில் சபை அராதனையை தடைசெய்ய வேண்டும் என்பதற்காக பிசாசானவன் சில கிறிஸ்தவ தொலைக்காட்சி நிறுவனங்களையே பயன்படுத்துகிறான்.

            சபை ஆராதனைகளை நேரலை செய்வது தவறல்ல.  அநேகர் வியாதியினால் படுத்த படுக்கையில் இருக்கிறார்கள், எத்தனையோ நாடுகளில் ஆராதனை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அப்படிப்பட்ட மக்கள் நேரலை ஆராதனையில் கலந்துகொள்ளலாம்.  அது அவர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாய் இருக்கும்.

            ஆனால் இதை காரணமாக வைத்துக்கொண்டு சபைக்கு வரக்கூடிய எல்லா வசதிகளும் இருக்கக்கூடிய சிலர் சோம்பேரித்தனத்தினால் சபை ஆராதனையில் கலந்துகொள்வதை நிறுத்திவிடுகிறார்கள்.

            கிறிஸ்தவர்களாகிய நாம் அனைரும் ஏதாவது ஒரு சபையின் கீழ் அடங்கியிருக்க வேண்டும்.  கோயில் மாடுகளைப் போல அங்கும் இங்கும் அழைந்து திரிந்துகொண்டிராமல், ஏதேனும் ஒரு சபையின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்.

    கிறிஸ்தவர்களின் அடிமைபடையான மூல உபதேசங்களைக் குறித்து அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.  இப்பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.  ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உங்கள் சந்தேகங்களையும் கருத்துப்பலகையில் பதிவு செய்யவும்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.