Type Here to Get Search Results !

சிறு பெண் பிள்ளைகள் சிறப்பு ஆராதனை | Special worship for women kids | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
ஆலடிபட்டி குருசேகரம்
சிறு பெண் பிள்ளைகள் சிறப்பு ஆராதனை
(பெண் குழந்கைள் ஞாயிறு)


ஆரம்ப ஜெபம்:

பாமாலை:

வழிபாட்டிற்கு அழைப்பு
நடத்துனர்: சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது சீயோன் மலை மகிழ்வதாக. யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக. நமது படைப்பாளரை, பராமரிப்பவரை, இரட்சகரை, நமது குமாரத்திகளோடும், குமாரரோடும் குடும்பங்களோடும் தொழுவோம் வாருங்கள்.

சபையார்: ஆண்டவரே, எங்களை வழிநடத்தும்.

நடத்துனர்: மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் அதில் வாழ்வனவும் ஆண்டவருடையவை. உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து இப்பூவுலகிற்கு இறங்கி வந்து தம்மையே ஜீவபலியாக ஒப்புவித்து மனித குலத்தை விடுவித்ததற்காக உம்மைப்போற்றுகிறோம்.

சபையார்: தந்தையாம் கடவுளே, உம்மைப் போற்றுகிறோம்.

நடத்துனர்: நம் தினசரி வாழ்க்கையில் நம்மை ஆறுதல்படுத்தி, வழிநடத்தி ஊக்குவித்துக் கடவுளின் ராஜ்யத்துக்கு நம்மை வாரிசுகளாகப் பரிசுத்த ஆவியானவர் நம்மை இயக்குகிறார்.

சபையார்: பரிசுத்த ஆவியாராகிய கடவுளே, உம்மைப் போற்றுகிறோம்.

நடத்துனர்: நம் ஆலயங்களிலும் குடும்பங்களிலும் பங்காளர்களாக இருக்கும் சிறுமிகளை நன்முறையில் உமது ஒளி மிகுந்த திருவசனத்திற்கு ஏற்ப வளர்க்க நீர் தந்த பொறுப்புக்காக இந்த நன்னாளில் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வழிபாட்டின் மூலமாக, எங்கள் மத்தியில் வாழும் சிறுமிகளுக்கு எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கவும், நாங்கள் உமது இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படவும், உதவி அருளும். இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம்.

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், ஆண்டவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் திருமுன் வாருங்கள். கடவுள் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவாகிய கடவுகள் விரும்புகிறார்.

பாவ அறிக்கை
நடத்துனர்: நமது பாவங்களை இறைவனுக்கு முன்பாக அறிக்கை செய்வோம். ஒவ்வொரு மன்றாட்டிற்கு பின் சபையார் “ஆண்டவரே, எங்களை மன்னியும்” என்று சொல்லும்படியாக கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் குமாரர்களையும், குமாரத்திகளையும் சமமாக நடத்த தவறிய குற்றத்தையும், உமது சொந்த சாயலாக அவர்களை படைத்ததை நாங்கள் மறந்து விட்டதையும்.

சபையார்: ஆண்டவரே, எங்களை மன்னியும்.

நடத்துனர்: சிறுமிகள் குடும்பத்திற்கும், வாழ்க்கைக்கும் பாரம் என்று கருதி எங்கள் அணுகுமுறையில் அலட்சியமாக இருந்த தருணங்களுக்காக.

சபையார்: ஆண்டவரே, எங்களை மன்னியும்.

பொதுவான பாவ அறிக்கை
பாவ மன்னிப்பு (குருவானவர்) : இறைவனாகிய தந்தை தாமே உங்களையும், உங்கள் குடும்பங்களையும் மன்னித்து பலப்படுத்திக் கடவுளின் ராஜ்யத்துப் பிரதிநிதிகளாக சேர்த்துக்கொள்வாராக.

பொதுவான ஸ்தோத்திர ஜெபம்
சர்வவல்லமையுள்ள கடவுளே, சர்வ ஜீவதயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும், மற்றெல்லா மனிதருக்கும். தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும் நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும், காப்பாற்றியதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்களை உமது ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச்செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதாக்காலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

வேத வாசிப்பு:
    யோபு 42:10-17
    அப்போஸ்தலர் 16:16-18
    மத்தேயு 15:21-28

    சங்கீதம் 45:8-14

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

சிறப்பு பாடல்:

அருளுரை: பெண் குழந்தைகளை பாதுகாத்தல்

மகிழ்விக்கும் மன்னா:

அறிவிப்பு:

காணிக்கை பாடல்:

காணிக்கை ஜெபம்:

மன்றாட்டு ஜெபம்
நடத்துனர்: பரிசுத்த வேத வசனங்களின்படி பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை தியானித்த நாம் சிறுமிகளுக்காக சிறப்பாக தேவனை நோக்கி மன்றாடுவோம்.

ஒவ்வொரு மன்றாட்டிற்கு பின்னும் சபைாயர் ”எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா” என்று மறுமொழி அளிக்க வேண்டிக்கொள்கிறோம்.

உலகில் உள்ள சிறுவர்கள் சிறுமிகளுக்காகவும், குறிப்பாக சிறுமியருக்காக கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட முறையில் வளரவும், குற்ற உணர்வோ தாழ்வு மனப்பான்மையோ உணராதபடி கடவுளின் ராஜ்யத்தின் வாரிசுகளாக எழும்ப அவர்களுக்கு உம் ஆசியை வழங்குமாறு வேண்டுகிறோம்.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா.

நடத்துனர்: சரீர சுகவீனம், துன்புறுத்தலினால் கஷ்டப்படுவோர், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் பரிதபிக்கும் நிலையில் இருப்பவர்கள், இந்நிலையில் இருந்து விடுபட காத்திருப்போர் ஆகியோருக்கு விடுதலையையும் வாழ்வாதாரத்தையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா

நடத்துனர்: அனாதை சிறுமிகள், கல்வி வசதியும் மருத்துவ வசதியும் மறுக்கப்பட்டவர்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆபத்தான தொழிற்சாலை இடங்களில் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்காக வேண்டுகிறோம். இத்தகைய சிறுமிகளின் நலனுக்காக உழைப்பவர்களை ஆசீர்வதிக்க மன்றாடுகிறோம். இத்தகைய சேவையில் நாங்களும் பங்காளர்களாக இருக்க உமது உதவியையும், ஊக்கத்தையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா.

நடத்துனர்: ஆண்டவரே எங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய சூழ்நிலைகளில் கிறிஸ்தவ கோட்பாடுகளுடன் வளர உதவியருளும். எங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்வின் உரிய நோக்கங்களை உணர்ந்து கொள்ள நீர் வழிநடத்த வேண்டிக்கொள்கிறோம்.

சபையர்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா

நடத்துனர்: சிறுமிகள் தாங்கள் பெண் பிள்ளைகளாய் பிறந்ததற்காய் ஒருபோதும் வருந்தாமலும், அவர்களுக்கு குடும்பங்களிலும், சபையிலும் உதவக்கூடிய சூழ்நிலைகள் உரிமைகள் மறுக்கப்படாமலும் இருக்க உம்மை வேண்டிக்கொள்கிறோம் ஆண்டவரே.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா

நடத்துனர்: நமது பேராய பெண்கள் விடுதிகளுக்காகவும், வளர்ப்பு பெற்றோர்களுக்காகவும், விடுதி பொறுப்பாளர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறோம். நம் சிறுமியர் கிறிஸ்தவ பண்புகளை கற்று செழித்து வளர்ந்து நம்முடைய குடும்பங்களிலும், திருச்சபைகளிலும் தூண்களாக விளங்க வேண்டுகிறோம் ஆண்டவரே.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா

நடத்துனர்: நமது பேராயத்தில் நடைபெறும் பல்வேறு ஊழியங்களுக்காகவும், பேராயருக்காகவும் அவருடைய தலைமைத்துவத்துக்காகவும், ஊழியத்துக்காகவும், உள்ளூர் போதகர்களுக்காகவும், அவர்களுடைய ஊழியங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறோம் கர்த்தாவே.

சபையார்: எங்கள் தாழ்மையான மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் இறைவா.

நடத்துனர்: நம்பிக்கையின் கடவுளே, நீதியின் கடவுளே. உமது திருமைந்தனின் படைப்பில் உம் தலையீட்டுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் அவர் சிறுவர்களை மிகவும் நேசிக்கிறார். சமத்துவமின்மை, மனிதரின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் உமது திருக்கரங்களினால் புது நம்பிக்கையின் வாழ்வு பெற வேண்டிக்கொள்கிறோம். குறிப்பாக பெண்கள் நியாயத்தோடும், சுயமரியாதையோடும், அன்போடும், சமுதாயத்தில் வளரவும், அவர்கள் வாழ்வு உமக்கு சுகந்த வாசனையாக, உமது படைப்பில் இயேசு கிறிஸ்துவின் மூலம் அமைய வேண்டிக்கொள்கிறோம். உம்மோடும் பரிசுத்த ஆவியோடும், இயேசு கிறிஸ்து வாழ்ந்து அரசாண்டு ஒரே கடவுளாக இன்றும் என்றும் ஜீவிக்கிறார். ஆமென்.

பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக நம்மை அர்ப்பணிப்போம்:
பொதுவாக நம் சமுதாயத்தில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் அதிக மகிழ்ச்சி காணப்படுகிறது. ஆனால் பெண் பிள்ளைகள் பிறந்தால், கவலையும், வருத்தமும் காணப்படுகிறது. சிறுமிகளைப் படிக்கவைத்து வேலையில் அமர்த்துவது பொருள் ரீதியாக இழப்பாக கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின் பெண் குழந்தைகள் பெற்றோரை பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்வர். அநேக கிராமங்களில் வறுமை கல்வி அறிவு இல்லாமை மூடநம்பிக்கை காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு தருவதில்லை. படிக்கின்ற பெண் பிள்ளைகளும் படிப்பை நிறுத்திம்படி வற்ப்புறுத்தப்பட்டு விவசாய வேலையிலும், வீட்டு வேலையிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எதிர்மாறாக ஆண் பிள்ளைகள் முன்னிறுத்தப்பட்டு கரிசனையோடு வளர்க்கப்படுகிறார்கள். கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், பெண் பிள்ளைகளோ பெற்றோருக்கும், கணவருக்கும், பிள்ளைகளுக்கும் எங்கிருந்தாலும் தங்களுடைய தன்னலமற்ற பங்கினை அளிக்கும் போது நம்முடைய அலட்சிய அணுகுமுறை துரதிஷ்டமானது. ஆகவே, நாம் எல்லா விதத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை நம் பெண் பிள்ளைகளுக்கும் கொடுப்போம். நம் பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக உழைப்போம். பெண் பிள்ளையின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்துக்கு நாம் உழைக்க இந்த பெண் குழந்தை ஞாயிற்றில் நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தருடைய ஜெபம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

நிறைவு ஜெபமும் ஆசீர்வாதமும்:

நிறைவு பாடல்:

God Bless You

நாள்: 17/11/2024
இடம்: சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயம். ஆலடிபட்டி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.