சங்கீதம் 56:8
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர். என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும். அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
முற்காலத்தில் இராணுவ வீரர்கள் போன்ற தங்கள்
சொந்த இடத்தை விட்டு வெளியிடங்களில் தங்கி வேலை செய்யக்கூடியவர்கள் பல ஆண்டுகள் கழித்து
தங்கள் குடும்பத்தினரை சந்திக்க வருவார்கள்.
அப்பொழுது குடும்பத்தில் உள்ள அம்மா, மனைவி, என ஒவ்வொருவரும் அந்த நபரின் பிரிவால்
தாங்கள் வடித்த கண்ணீரை ஒரு துருத்தியில் சேகரித்து அந்த மனிதரிடம் காண்பிப்பார்கள். அந்த நபரை பிரிந்து அம்மாவும், மனைவியும் வடித்த
கண்ணீரை வைத்து இவர்கள் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று அவர் புரிந்துகொள்ளுவார்.
அரசர்கள் போருக்கு செல்லும்போது, அவரின்
பிரிவை தாங்க முடியாத மக்களும், அமைச்சர்களும் கண்ணீரைத் துருத்திகளில் சேகரித்து,
மன்னன் திரும்பி வரும்போது அதை மன்னனுக்கு காண்பித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
இந்த கண்ணீர் துருத்தியானது அநேக புதை பொருள்
ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாவீதின் வாழ்க்கையில் அவருக்கு எத்தனையோ
போராட்டங்கள் இருந்தது, எத்தனையோ எதிரிகள் அவரை கொலை செய்ய தேடினார்கள், தாவீதோடு கூட
இருந்தவர்களே அவரை கொலை செய்ய எத்தனித்தார்கள், பல திசைகளிலிருந்து தாவீதுக்கு கஷ்டங்களும்,
துன்பங்களும் வந்தது. தாவீதின் வாழ்க்கையில்
எல்லா சூழ்நிலைகளிலும் அவர் கண்ணீர் வடித்துக்கொண்டே இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய கண்ணீரை தன் மனைவியிடமோ, பெற்றோரிடமோ,
பிள்ளைகளிடமோ காட்டவில்லை, மாறாக ஆண்டவருடைய சமுகத்தில் வைத்தார்.
ஏனென்றால், நம்முடைய ஆண்டவர் கண்ணீரைக் காண்கிறவர்,
கண்ணீரைத் துடைக்கிறவர், நமக்காக கண்ணீரை வடிக்கிறவர் என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார்.
தாவீதின் குடும்ப எதிரிகள்:
தாவீது சவுலின் மகளை திருமணம் செய்ததால்,
சவுலின் குடும்பத்தில் ஒருவாராகிறார். தாவீதின்
மாமா சவுல் தாவீதை பல முறை கொலை செய்ய முயற்சித்தார்.
தாவீதின் ஆட்சிக்காலத்தில், தாவீதின் மகன்
அப்சலோம் தாவீதை கொலைசெய்ய வகைதேடினான்.
தாவீதின் இளமை முதல், முதுமை வரை தாவீதோடு
கூட இருந்த படைவீரன் யோவாப், தாவீதின் கடைசி காலத்தில், தாவீது விரும்பாத ஒரு நபரை
ராஜாவாக அபிஷேகம் செய்ய திட்டமிடுகிறார்.
இவர்கள் தாவீதின் குடும்பத்தில் இருந்து
கொண்டு தாவீதுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள்.
மோசே கானான் தேசத்திற்குள் நுழையவில்லை. ஆனால், கானான் தேசத்தை பார்த்தார். கானான் தேசத்தின் எல்லை அளவை ஆண்டவர் மோசேக்கு கொடுத்தார். ஆனால், ஆண்டவர் மோசேக்கு காண்பித்த எல்லை அளவுகளில்,
சில பகுதிகளை மட்டுமே யோசுவா கைப்பற்றினார்.
மற்ற பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிய பெருமை தாவீதையே சேரும். தாவீதின் காலத்தின் தான் ஆண்டவர் மோசேக்கு காண்பித்த
முழு கானான் தேசத்தையும் இஸ்ரவேலர்கள் சுதந்தரித்தார்கள். தாவீது மேற்கொண்ட ஒவ்வொரு போரின் போதும், அநேக எதிரிகள்
தாவீதுக்கு இருந்தார்கள். அத்துனை நபர்களையும்
மேற்கொள்ளும் அதிகாரத்தை ஆண்டவர் தாவீதுக்கு
கொடுத்தார். காரணம், தாவீதின் கண்ணீர் ஜெபம்.
நாமும் கூட நம்முடைய கண்ணீரை அவருடைய சமுகத்தில்
ஊற்றி ஜெபிக்கும்போது, நம்முடைய மன வேதனை என்னவாக இருந்தாலும், நம்முடைய பாரங்கள் என்னவாக
இருந்தாலும், நம்முடைய விருப்பங்கள் என்னவாக இருந்தாலும் ஆண்டவர் அதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராய்
இருக்கிறார்.
ஒரு பிள்ளை தான் ஆசைப்பட்ட ஒரு பொருளை தகப்பனிடம்
அழுது பெற்றுக்கொள்வதுபோல, நாமும் நம்முடைய தேவைகளை கண்ணீரோடு கேட்கும்போது, ஆண்டவர்
மனமிரங்கி நம்முடைய ஜெபத்தைக் கேட்டு அற்புதம் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
1. கண்ணீரைக்
காண்கிறவர்:
நம்முடைய ஆண்டவர் கண்ணீரைக் காண்கிறவர்.
I. எசேக்கியா
எசேக்கியா என்பவர் யூதர்களின் அரசன். இவர் இருபத்து ஒன்பது (29) ஆண்டுகள் தேசத்தை ஆட்சி
செய்தார். இந்த எசேக்கியா தாவீதைப்போலவே சிறப்பாக
ஆட்சி செய்த ஒரு மன்னன். மோடைகளையும், விக்கிரகங்களையும்
உடைத்து போட்டார். இவருக்கு முன்பாக எத்தனையோ
அரசர்கள் மேடைகளையும், விக்கிரக தோப்புகளையும் உடைத்ததுண்டு. ஆனால் எந்த ஒரு மன்னனும் மோசே நிருத்தின சர்ப்பத்தின்
சிலையை தகர்த்துப்போடவில்லை. மோசே நிறுத்தின
சர்ப்பத்தின் சிலையை உடைத்துப்போட்ட பெருமை இந்த எசேக்கியா மன்னனையே சாரும்.
எசேக்கியாவின் பதினான்காம் (14) வருஷத்தில்
அசீரியாவின் ராஜா யூதாவின் கடவுளை நிந்தித்து படையெடுத்து வந்தபோது, எசேக்கியா ஆலயத்தில்
அமர்ந்து ஜெபித்து போர்செய்யாமல் வெற்றி பெற்றார். தேவதூதர்கள் ஒருலட்சத்து என்பதினாயிரம் அசீரியர்களை
வெட்டி வீழ்த்தினார்கள்.
அசீரியாவின் ராஜா நினிவேக்கு தப்பி ஓடியபோது
தனது இரண்டு மகன்களால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
எசேக்கியாவின் ஆட்சி காலத்தில் உண்மைக் கடவுளை
ஆராதிக்கும் மக்கள் அதிகமானார்கள்.
எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணத்தருவாயில்
இருக்கும் போது ஏசாயா தீர்க்கதரிசி, நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்,
நீர் பிழைக்கமாட்டீர் என்று சொல்லி சென்று விட்டார்.
அப்பொழுது எசேக்கியா ராஜா தன் மனைவியிடமோ,
பிள்ளைகளிடமோ, அமைச்சரிடமோ, மருத்துவர்களிடமோ, ஏசாயா தீர்க்கதரிசியிடமோ சென்று கண்ணீர்
சிந்தவில்லை.
சுவர்புறமாக திரும்பிக்கொண்டு கர்த்தரை நோக்கி
அழுது ஜெபிக்கிறார்.
2
இராஜாக்கள் 20:3 | ஏசாயா 38:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து,
உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா
மிகவும் அழுதான்.
எசேக்கியாவின் கண்ணீரின் ஜெபத்தைக் கர்த்தர்
பார்த்தார்.
II. ஆகார்: (ஆதியாகமம் 21: 14-20)
ஆகார் எகிப்து அரண்மனையில் அடிமையாய் வாழ்ந்த
ஒரு ஸ்திரீ. ஆபிரகாம் எகிப்துக்கு வந்தபோது,
எகிப்து பார்வோன் மன்னன் ஆபிரகாமின் மனைவி சாராளை தன் மனைவியாக எடுத்துக் கொண்டான். பார்வோனின் இச்செயலினால் எரிச்சலடைந்த ஆண்டவர்,
பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். இதினால் பயமடைந்த பார்வோன், ஆபிரகாமின் மனைவி சாராயை
ஆபிரகாமோடு அனுப்பிவிடுகிறார். அப்படி அனுப்பும்போது,
அநேக கால்நடைகளையும், வேலையாட்களையும் பார்வோன் ஆபிரகாமிற்கு கொடுக்கிறார். அப்படி ஆபிரகாமின் அடிமையாக வந்தவள் தான் இந்த ஆகார்.
ஆபிரகாமிற்காக, ஆபிரகாமின் கடவுள் பார்வோன்
மன்னனையே தண்டித்தார் என்றால், ஆபிரகாம் மிகவும் பெரியவர், நீதிமான் என்பதை ஆகார் அறிந்து
வைத்திருந்தாள்.
சில நாட்களில் ஆபிரகாம், சாராளின் சுய ஆசைக்காக
ஆகார் ஆபிரகாமிற்கு மனைவியாகிறாள். ஆகார் ஆபிரகாமிற்கு
ஒரு குமாரனையும் பெற்றுக்கொடுக்கிறாள்.
ஆபிரகாமின் நூறாவது வயதில் ஆபிரகாமின் மனைவி
சாராள் ஆபிரகாமிற்கு ஒரு குமாரனைப் பெற்றபோது, ஆபிரகாமும், சாராளும் இணைந்து, ஆகாரையும்,
ஆகாரின் குமாரனையும் வீட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். ஆபிரகாம் மிகப்பெரிய செல்வசீமான். அப்படிப்பட்ட ஆபிரகாம் தன் இரண்டாவது மனைவியாகிய
ஆகாரை வீட்டை விட்டு அனுப்பும்போது, சில பொருட்களையோ, பணத்தையோ கொடுத்திருக்கலாம். ஆனால், அப்பமும், தண்ணீரும் மாத்திரம் கொடுத்து
அனுப்பிவிடுகிறான்.
ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும் வீட்டிலிருந்து
அனுப்பிவிட்டபோது, இருவரும் பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் கண்ணீர் சிந்துகிறார்கள்.
ஆதியாகமம் 21:16
பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று, எதிராக அன்பு பாயும்
தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
ஆகாரின் மீது எந்த தவறும் இல்லை. தனக்கு திருமண ஆசை இருப்பதாக ஆகார் எங்கும் சொல்லவில்லை. ஆபிரகாமும், சாராளும் அவர்களுடைய சுய விருப்பதிற்காக
ஆகாரை மறுமனையாட்டியாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்ததும் ஆகாரையும், அவளுடைய மகன் இஸ்மவேலையும்
வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்கள்.
எகிப்திலே பார்வோனுக்கு அடிமையாக இருந்த
ஆகார், ஆபிரகாமும் அவருடைய குடும்பமும் பக்திமான்கள், நீதிமான்கள் என்று எண்ணி அவர்களுக்கு
பின்னாக வந்திருப்பாள். ஆனால் அந்த ஆபிரகாமே
அவளுக்கு துரோகம் செய்கிறான். ஆனாலும் ஆண்டவர்
ஆகாரைக் கைவிடவில்லை.
நாமும் கூட இந்த ஆகாரைப்போல கைவிடப்பட்ட
ஒரு நிலமையில் இருக்கலாம். மனிதர்களை நம்பினால்
என்றாவது ஒருநாள் அவர்கள் நம்மைக் கைவிட்டுவிடுவார்கள். அதுதான் மனிதனின் இயல்பு. யார் நம்மைக் கைவிட்டாலும், கைவிடாத ஒரு நேசர் நமக்கு
உண்டு. அவர் தான் எம்பெருமான் இயேசு கிறிஸ்து.
உலக மனிதர்களை நம்பி, அவர்கள் எனக்கு உதவுவார்கள்
என்று எண்ணி, மனிதர்களை தேடி சென்ற நாட்கள் போதும். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதை இழந்திருந்தாலும்,
நாம் ஆண்டவருடைய சமுகத்தில் வந்து கண்ணீர் சிந்தி ஜெபிக்கும்போது, எசேக்கியாவின் கண்ணீரைக்
கண்ட ஆண்டவர், ஆகாரின் கண்ணீரைக் கண்ட ஆண்டவர் நம்முடைய கண்ணீரையும் காண்கிறவராக இருக்கிறார்.
2. கண்ணீரைத்
துடைக்கிறவர்:
நம்முடைய ஆண்டவர் கண்ணீரைக் காண்கிறவர் மாத்திரம்
அல்ல. கண்ணீரைத் துடைக்கிறவராகவும் இருக்கிறார். நாம் கண்ணீர் சிந்தும்போது, அழாதே மகனே, மகளே என்று
நம்மைத் தேற்றுகிறவராக, நம்முடைய கண்ணீரைத் துடைக்கிறவராகவும் நம்முடைய இருக்கிறார்.
I. எசேக்கியா:
எசேக்கியாவின் கண்ணீரை ஆண்டவர் துடைத்தார்.
2
இராஜாக்கள் 20:5 | ஏசாயா
38:5ஆ
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக்
கண்டேன். இதோ, உன் நாட்களோடே பதினைந்து
வருஷம் கூட்டுவேன்.
எசேக்கியாவின் கண்ணீரைக் கண்ட ஆண்டவர், அவருடைய
கண்ணீரைத் துடைக்கும் வண்ணமாக மரிக்கும் தருவாயில் இந்த அந்த எசேக்கியாவிற்கு பதினைந்து
ஆண்டுகளை கூட்டிக்கொடுத்தார்.
II. ஆகார்:
ஆதியாகமம் 21:17அ
தேவன் பிள்ளையின் சத்தத்தைக்
கேட்டார்.
ஆகாரின் ஆழுகையின் சத்தத்தையும், இஸ்மவேலின்
சத்தத்தையும் ஆண்டவர் கேட்டார். தேவையை சந்தித்தார். அனாதையாய் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அந்த ஆகாரையும்,
இஸ்மவேலையும் ஆண்டவர் ஆசீர்வதித்து, பெரிய ஜாதியாய் மாற்றினார்.
ஆதியாகமம் 21:18ஆ
அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்
என்றார்.
வெளிப்படுத்தல் 21:4அ
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.
எசேக்கியாவின் கண்ணீரைத் துடைத்த ஆண்டவர்
நம்முடைய கண்ணீரைத் துடைக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். அவருடைய சமுகத்தில் நம்முடைய தேவைகளை, பாரங்களை,
மன வேதனைகளை இரக்கி வைக்கும்போது அவர் அதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
3. கண்ணீர்
சிந்துகிறவர்:
நம்முடைய ஆண்டவர் நம்முடைய கண்ணீரைப் பார்க்கிறவர்
மாத்திரம் அல்ல, நம்முடைய கண்ணீரைத் துடைக்கிறவர் மாத்திரம் அல்ல, நமக்காக கண்ணீர்
சிந்தக்கூடியவர் நம்முடைய ஆண்டவர்.
லாசரு மரித்த போது மரியாளும், கூடியிருந்த
யூதர்களும் கண்ணீர் சிந்தி கதருகிறதைப் பார்த்து ஆண்டர் இயேசு கிறிஸ்துவும் கண்ணீர்
சிந்துகிறார்.
யோவான் 11:32-36
33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும்
இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
35. இயேசு கண்ணீர் விட்டார்.
நாம் கண்ணீர் சிந்தும்போது நமக்காக கண்ணீர்
சிந்தக்கூடிய ஒரு தெய்வம் உண்டு என்றால் அது எம் அருள்நாதர் இயேசு கிறிஸ்து மாத்திரமே.
நாம் இந்த இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு
அவருடைய பிள்ளையாய் நாம் மாறும்போது, நம்முடைய கஷ்டங்களை அவருடைய கஷ்டமாக நினைத்து
நம்மோடு கூட நடந்து வருகிறவர், நமக்காக கண்ணீர் சிந்துகிறவர், நம்முடைய கண்ணீரை மாற்றுகிறவர்
நம்முடைய ஆண்டவர்.
சகரியா 2:8ஆ
உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
சவுல்:
சவுல் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தியபோது,
இயேசு சவுலை சந்திக்கிறார். சவுலிடம் சவுலே,
சவுலே நீ கிறிஸ்தவர்களை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று ஆண்டவர் கேட்கவில்லை. நீ என்னை
ஏன் துன்பப்படுத்துகிறாய் என்றே கேட்கிறார்.
அப்போஸ்தலர் 9:4
அவன் தரையிலே விழுந்தான்.
அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை
ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
நம்முடைய கஷ்டத்தை அவருடைய கஷ்டமாக எண்ணுகிறவர்
நம்முடைய ஆண்டவர். எனவே அவருடைய சமுகத்தில்
நம்முடைய கண்ணீரை ஊற்றும்போது, அது ஒருநாளும் வீணாய் தரையிலே விழுவதில்லை. அதற்கான பிரதிபலனை ஆண்டவர் நமக்கு நிச்சயம் தருவார்.
இன்றும் ஆண்டவர் கண்ணீர்
சிந்துகிறார்:
உலகில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும்
என்பதற்காகவே இயேசு கிறிஸ்து மனிதனாக அவதறித்து, தன்னுடைய கடைசி சொட்டு இரத்தம் வரை
சிந்தினார். ஆண்டவருடைய அன்பைப் புரிந்துகொள்ளாமல்,
எத்தனை எத்தனையோ ஜனங்கள் இன்று தங்களுடைய சுய இச்சைகளின்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டுமே, அவர்களும் என்னை
ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று சொல்லி, ஆண்டவர் இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கிறார்.
மக்களுக்காக கண்ணீர் சிந்துகிற ஒரு தெய்வம்
உண்டு என்றால் அது நம்முடைய இரட்சகர் மட்டுமே.
அவருடைய கண்ணீரைத் துடைக்கிறவர்களாக நாம் நம்மால் இயன்றவரை ஆண்டவருடைய சுவிசேஷத்தை
அறிவிப்போமா?
நம்முடைய சுற்றியுள்ள மனிதர்கள், உறவினர்கள்,
ஆலயத்திற்குவராமல் இருப்பார்களானால், ஆண்டவரை தேடாமல் இருப்பார்களானால் அவர்களுக்காக
நாம் பாரப்பட வேண்டும். அவர்களையும் ஆலயத்திற்கு
அழைத்து வர வேண்டும்.
அழிந்துபோகிற ஜனங்களுக்காக கண்ணீர் சிந்துகிற
ஆண்டவருடைய கண்ணீரை நாம் துடைக்கும்போது நம்முடைய கண்ணீரை அவர் துடைக்க வல்லமையுள்ளவராய்
இருக்கிறார்.
நம்முடைய கண்ணீரை ஆண்டவர் மாற்றி, நம்மை
இரட்சித்து அந்த பரலோகப் பாதைக்கு நேராய் நம்மை நடத்தினதுபோல, நாமும் இரட்சிக்கப்படாத
ஆத்துமாக்களுக்காக திறப்பிலே நிற்போம், கண்ணீரோ ஜெபிப்போம். ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.