Type Here to Get Search Results !

ஆண்டு நிறைவு ஸ்தோத்திர ஆராதனை | பழைய வருட ஆராதனை | Tamil Christian Message Sermon Outline | Preaching Points | Jesus Sam

===================
ஆண்டு நிறைவு ஸ்தோத்திர ஆராதனை
===================



நாம் எதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும்

1. ஜெபத்தைக் கேட்ட கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

சங்கீதம் 65:2

  ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

   நம்முடைய ஆண்டவர் உயிருள்ளவர்.  நாம் அவரிடம் ஏறெடுக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அவர் செவிகொடுத்து கேட்கிறவராக இருக்கிறார்.  நாம் ஏறெடுக்கம் விண்ணப்பங்கள் அவருடைய சமுகத்திற்கு பிரியமாய் இருந்தால் அந்த காரியத்தை நமக்கு நிறைவேற்றுகிறவராயும் இருக்கியார்.

 இந்த வருடத்தின் துவக்கம் முதல் இந்த நாள் மட்டும் நாம் ஏறெடுத்த எத்தனையோ ஜெபங்களுக்கு ஆண்டவர்  பதில் கொடுத்திருப்பார்.  அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.  நிறைவேறாத ஜெபங்களுக்காக தொடர்ந்து விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டும்.

 

2. ஜீவன் தந்து பாதுகாத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:

  மருத்துவமனைக்கு சென்று பார்த்தால், அங்கு ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட வியாதியோடும், வேதனையோடும் கலங்கி, கண்ணீர் வடிக்கிறதை நாம் பார்க்க முடியும்.

 விபத்துக்களினால் கைகளை இழந்து, கால்களை இழந்து, சரீரத்தில் பெலவீனத்தோடு அநேகர் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 எத்தனையோ மனிதர்கள் நீங்காத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நாம் நல்லவர்கள் என்பதனால் அல்ல, அவர் நம்மீது கிருபை வைத்ததால் இந்த நாள் மட்டும் நமக்கு நல்ல சரீர சுக பெலனைத் தந்து வழிநடத்தி வருகிறார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் நம்மோடு கூட இருந்த எத்தனையோ மனிதர்கள் இப்பொழுது நம்மோடு இல்லை.  ஆனால் ஆண்டவர் நமக்கு இந்த நாள்வரை ஜீவனை இலவவமாய்க் கொடுத்திருக்கிறார்.

   அற்புதமாய் தேவனுடைய ஊழியத்தை செய்த எத்தனையோ இளம் ஊழியர்கள் கடந்த நாட்களில் இவ்வுலக வாழ்வை விட்டு கடந்து சென்றிருக்கிறார்கள்.

  என்ன காரணம் என்றே தெரியாமல் எத்தனையோ வாலிபர்களும், சிறுவர்களும் கடந்த ஆண்டு மரித்திருக்கிறார்கள்.

    நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மனிதனுடைய ஜீவன் எப்போது அவனைவிட்டுப் பிரியும் என்று தெரியாது.  இருந்தாலும் ஆண்டவர் நம்மை வழிநடத்தி, பாதுகாத்து ஒரு புதிய வருடத்திற்குள்ளாக நுழையக்கூடிய பாக்கியத்தை தந்திருக்கிறார்.  அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

 

3. நம்மை ஆதரித்து வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:

ஆதியாகமம் 48:15

 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

  இந்த வருடத்தில் நமக்கு அநேக தேவைகள் இருந்திருக்கலாம்.  தேவைகளை சந்தித்த கர்த்தருக்கு நாம் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.

   அடுத்த வேலை உணவிற்கு நான் என்ன செய்வேன் என்று ஏங்கின தருனங்கள் உண்டு,

   கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே என்று புலம்பின நாட்கள் உண்டு,

    எனது மகன், மகள் ஆசையாய் கேட்ட பொருளை வாங்கித் தரமுடிய வில்லையே என்று ஏங்கின காலங்கள் உண்டு,

     திருமணக் காரியத்திற்காகவோ, படிப்பின் காரியத்திற்காகவோ பணம் கட்ட முடியாமல் தவித்த காலங்கள் உண்டு,

  வேலைவாய்ப்புகள் சரியாக இல்லையே, எப்படி என் குடும்பத்தை வழிநடத்தப்போகிறேன் என்று கலங்கி நாட்கள் உண்டு,

  ஆனாலும் இவை எல்லவாற்றையும் கடந்து, இந்த வருடத்தின் முடிவுவரைக்கும் நம்மை வழிநடத்தி வந்த கர்த்தாதி கர்த்தருக்கு நாம் நன்றி பலிகளை ஏறெடுக்க வேண்டும்.

 

4. குற்றங்களை மன்னித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

எண்ணாகமம் 14:19அ

      உமது கிருபையினுடைய மகத்துத்தின்படியேயும், எகிப்தை விட்டது முதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும்,

  இந்த வருடம் முழுவதும் நாம் செய்த குற்றங்களை பட்டியலிடுவோமானால், நாம் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள்.  ஆண்டவருக்கு விரோதமாகவும், மனிதர்களுக்கு விரோதமாகவும் எத்தனையோ தப்பிதங்களை நாம் செய்திருக்கிறோம்.  இருப்பினும் அவை எல்லாவற்றையும் மன்னித்து ஆண்டவர் நம்மை சுகமாய் வாழ வைத்திருக்கிறார்.  அதற்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

  

வேதத்தில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி சிலர்:

1. எலியேசர்: காரியத்தை வாய்க்கப்பண்ணின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

ஆதியாகமம் 24:27

 என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை.  நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான்.

       திருமணம் என்பது ”ஆயிரம் காலத்துப் பயிர்” என்று சொல்லுவார்கள்.

  எனவே, எலியேசர் மிகவும் கலக்கத்தோடு தன் எஜமானின் மகனுக்கு பெண்பார்க்க புறப்படுகிறார்.  தன்னை நம்பி தன் எஜமான் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்த எலியேசர், மிகவும் ஜெபத்தோடு கூட ஈசாக்கிற்கு ஏற்ற பெண்னை (மனைவியை) தேடி கானான் தேசத்திலிருந்துத ஆரான் என்றும் தேசத்திற்கு புறப்பட்டு வருகிறார்கள்.  அவர் தன் எஜமானின் மகனுக்கு எப்படிப்பட்ட பெண்னை தேடி வந்தாரோ, அவர் நினைத்தபடியே ஒரு அழகான பெண்னை ஆண்டவர் எலியேசருக்கு காண்பித்தார்.

   எனவே, எலிசேயர் சென்ற காரியம் வெற்றியாய் முடிந்ததும், காரியத்தை வாய்க்கப்பண்ணின கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறார்.

  நாமும் கூட இந்த வருஷத்தில் நாம் செய்த கையின் காரியங்களில் நம்மோடு கூட இருந்து வெற்றியைத் தந்த கர்த்தருக்கு நன்றி செலுத்துவது நம்முடைய கடமையாய் இருக்கிறது.

 

2. எஸ்றா: தயை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

எஸ்றா 7:27ஆ

    எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப் பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

   ராஜாவின் கண்களில் தனக்கு தயை கிடைத்ததை எண்ணி, எஸ்றா ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறார்.

  நாமும் கூட இந்த வருஷத்தில் நமக்கு நன்மையுண்டாகும்படி சில அதிகாரிகளை, தலைவர்களை சந்தித்திருப்போம்.  அவர்களுடைய கண்களில் தயை கிடைக்கப்பண்ணின கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

 

3. சாலொமோன்: சொன்னதை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

2 நாளாகமம் 6:4

    அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

  தாவீதுக்கு ஆண்டவர் உன் மகன் எனக்காக ஒரு தேவாலயத்தைக் கட்டுவான் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்.  ஆண்டவர் அதை சாலொமோன் காலத்தில் நிறைவேற்றினார்.  எனவே, சாலொமோன் என் தகப்பனுக்கு சொன்னதை என் காலத்தில் நிறைவேற்றிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று ஆண்டவரைத் ஸ்தோத்திரிக்கிறார்.

    நம்முடைய வாழ்க்கையிலும் கூட ஆண்டவர் அநேக வாக்குத்தத்தங்களை நமக்கு கொடுத்திருக்கலாம்.  அந்த வாக்குத்தத்தங்கள் இந்த வருஷத்தில் நிறைவேறியிருக்கலாம். அதற்காக நாம் ஆண்டவரை ஸ்தோத்தரிக்க வேண்டும். 

   வருஷத்தின் விழிம்பில் இருக்கிற நாம் இந்த மூவரைப்போல இந்த ஆண்டு முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி பலிகளையும், துதிபலிகளையும் செலுத்த வேண்டும்.


   இந்த வருடத்தில் நாம் ஏறெடுத்த எல்லா ஜெபங்களுக்கும் ஆண்டவர் பதில் கொடுத்தாரா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்பதுதான் நம்முடைய பதிலாக இருக்கும்.

    நிறைவேறாத ஜெபங்களுக்காக நாம் பொறுமையோடும், ஜெபத்தோடும் தரித்திருக்கும்போது ஏற்ற நேரத்தில் கர்த்தர் வாய்க்கப்பண்ணுவார்.

1. ஆபிரகாம்:

ஆதியாகமம் 21:5

    தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

    ஆபிரகாம் எழுபத்து ஐந்து வயதாய் இருந்த போது ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தார்.  உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்.  ஆனால் ஆபிரகாமின் நூறாவது வயதில்தான் அவருக்கு ஈசாக்கு என்னும் ஒரு ஆண் குழந்தை பிறந்தான்.

 இருபத்து ஐந்து ஆண்டுகள் காத்திருந்தார்.  செத்துப்போன சாராளின் (ஆபிரகாமின் மனைவி) கர்ப்பத்திலிருந்து ஆண்டவர் அழகிய ஒரு ஆண் மகனைக் கொடுத்தார்.

  நம்முடைய ஜெபத்திற்கும் பதில் கிடைக்க காலதாமதம் ஆகலாம், ஆனால் வாக்குரைத்தவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.  ஆபிரகாமைப்போல நாமும் பொறுமையோடு காத்திருக்கும்போது நாம் நினைக்காத ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

 

2. யோசேப்பு

  யோசேப்பு சிறுவனாக இருந்தபோது, சொப்பனத்தின் மூலமாக உன் சகோதரரும், தாய் தகப்பன்மாறும் உன்னை வணங்குவார்கள்.  அவர்களுக்கு நீ அதிகாரியாய் இருப்பாய் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார். 

 ஆனால் ஆண்டர் வாக்குறைத்ததற்கு எதிரைமறையாக அனைத்து காரியங்களும் யோசேப்பின் வாழ்க்கையில் நடைபெற்றது.

 சகோதரர்களாள் புறக்கணிக்கப்பட்டார். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின் மீது பொறாமை கொண்டனர்.

 தகப்பனின் வீட்டில் செல்லமாய் வாழ்ந்தவர், எகிப்து தேசத்திற்கு அடிமையாக கொண்டுபோகப்பட்டார்.

  அடிமை வேலை செய்த வீட்டு பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிரைச்சாலைக்குச் சென்றார்.

 ஆண்டவர் வாக்குறைத்தது ஒரு புறம் இருக்க, யோசேப்புடைய வாழ்க்கையில் எல்லா காரியங்களும் தலைகீழாக நடைபெற்றது.  யோசேப்பு அதிகாரியாய் மாறுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒரு சூழல்.

    சிறைச்சாலையில் கைதிகளில் ஒருவராக இருந்த யோசேப்பை ஆண்டவர் ஒரு இமைப்பொழுது எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாய் மாற்றினார்.

     பார்வோனின் அரண்மனைக்கு வரும் வரைக்கும் அவன் ஒரு சிரைக்கைதி.  ஆனால் அரண்மனையை விட்டு வெளியேடும்போது யோசேப்பு எகிப்தின் அதிபதி.  அப்படியாக ஆண்டவர் யோசேப்பை உயர்த்தினார்.

   நம்முடைய ஜெபத்திற்கும் கூட பதில் கிடைக்காமல் இருக்கலாம்.  ஆண்டவர் வாக்குரைத்ததற்கு எதிர்மறையாகவே அனைத்து காரியங்களும் நடைபெறலாம்.  யோசேப்பை உயர்த்தின ஆண்டவர் நம்முடைய ஆண்டவர்.  நம்மையும் ஒருநாள் நிச்சயம் உயர்த்துவார். தொடர்ந்து நாம் அவரை உண்மையாய் நம்புவோம்.  அவர் நமக்கு வெற்றியைத் தருவார்.

         

3. சகரியா – எலிசபெத்:

  சகரியாவும், எலிசபெத்தும் அநேக ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள்.  பொறுமையோடு காத்திருந்தார்கள்.  ஏற்ற நேரம் வந்தபோது தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் தலைவனான யோவான் ஸ்நானனைப் பெற்றெடுத்தார்கள்.

மத்தேயு 11:9

       அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

   நாமும் காத்திருக்கும்போது ஆண்டவர் நமக்கு பதில்செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும்.

 

காத்திருப்பது நல்லது:

நீதிமொழிகள் 13:12

     நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.  விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

   நெடுங்காலமாய் ஒரு காரியத்திற்காக நாம் காத்திருக்கலாம். நாம் விரும்பின காரியத்தை ஆண்டவர் நிச்சயம் வறப்போகிற புதிய வருடத்தில் நமக்குத் தந்து நம்மை வழிநடத்துவார்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.