Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் மேய்ப்பர்கள் | Shepherds at the birth of Jesus Christ | Christian Christmas Message Tamil | Jeus Sam

=========================
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் மேய்ப்பர்கள்
=========================

          மேய்ப்பர்கள் என்பதன் சரியான தமிழ் பதம் – இடையர்கள்.

யூதேயா தேசத்தில் மேய்ப்பர்கள் கிராமங்களுக்குள்ளாக அனுமதிக்கப்படுவதில்லை.  ஏனென்றால், ஆடு, மாடுகளின் வாசம் மேய்ப்பர்கள் மேலும் இருப்பதால், அதை விரும்பாத யூதர்கள் அவர்களை கிராமங்களுக்குள்ளாக அனுமதிப்பதில்லை.  மனிதர்கள் வாழாத வயல்வெளிகளிலும், காடுகளிலும், மேடுகளிலும் மேய்ப்பர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

          எ.கா: தாவீது (சாமுவேல் தீர்க்கதரிசி தன் வீட்டிற்கு வந்த செய்தியை அப்பா (ஈசாய்) தாவீதுக்கு அறிவிக்கவில்லை.  காரணம் அவன் தொலைதூரத்தில் தங்கி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்)

          மற்ற எல்லா வேலை செய்யக்கூடியவர்களும் பகலில் மாத்திரம் வேலைசெய்வார்கள்.  நாமும் கூட அப்படித்தான்.  ஆனால் இந்த மேய்ப்பர்கள் மாத்திரம் பகலும், இரவும் வேலை செய்வார்கள்.  பகலிலே நல்ல செழிப்பான இடத்தில் மந்தைகளை மேய்க்க வேண்டும்.  இரவிலே அந்த மந்தைகளை காட்டு மிருகங்கிடமிருந்தும், பூச்சிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

          இந்த தொகுப்பின் மூலமாக நம்மை மீட்கவந்த இரட்சகரின் (இயேசு பாலன்) பிறப்பை முதலில் அறிந்துகொண்ட மேய்ப்பர்களிடமிருந்து நாம் மூன்று காரியங்களை கற்றுககொள்வோம்.

 


1. கடமையை சரியாய்ச் செய்தவர்கள்:

லூக்கா 2:8

          அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியிலே தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

          மேய்ப்பர்கள் இராத்திரி நேரத்தில் தூங்கிக்கொண்டு இல்லை.  பகல் முழுவதும் மந்தையை மேய்த்த கலைப்பு இருந்தாலும், இராத்திரி நேரத்திலும் மிகவும் பொறுப்பாய் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.  அவர்களுடைய கடமையைச் சரியாய் செய்தார்கள்.  உண்மையோடும், நேர்மையோடும் அந்த தொழிலை செய்து வந்தார்கள்.

          நாமும் நம்முடைய வேலைகளில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.  மனிதர்கள் என்னைப் பார்க்கிறார்கள் என்பதற்காக அல்ல, ஆண்டவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற சிந்தையோடு ஒவ்வொரு நாளும் நம்முடைய கடமைகளை சரியாய் நேர்த்தியாய் செய்ய வேண்டும்.

          நான் எவ்வளவு உண்மையாக வேலை செய்தாலும், அது எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கு தெரியப்போவதில்லை, இதனால் எனக்கு பதவி உயர்வும் கிடைக்கப்போவதில்லை, என்னை விட மிகவும் அஜாக்கிரதையாக வேலை செய்யக்கூடியவர்கள் தான் விரைவில் பதவி உயர்வைப் பெறுகிறார்கள், அப்படியானால் நான் மாத்திரம் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்று நாம் அநேக நேரங்களில் யோசிக்கலாம்.

நம்மைப்போலவே அந்த நாட்களில் வாழ்ந்த மேய்ப்பர்களும் இருந்தார்கள்.  அவர்கள் எவ்வளவு கடினத்தின் மத்தியில் அந்த வேலையைச் செய்தாலும் அவர்களை அந்த சமுதாயம் மதிப்பதில்லை.  தேவாலயத்தில் பலி செலுத்த தேவையான ஆடுகளை இந்த மேய்ப்பர்களிடமிருந்தே வாங்கினார்கள்.  அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட அந்த ஜனங்கள் மேய்ப்பர்களை மதிக்காதவர்களாகவும், சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளாதவர்களாகவுமே காணப்பட்டார்கள்.

தேவாலயத்தில் பலிசெலுத்த தேவையான ஆடு, மாடுகளை எங்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால் எங்களை தேவாலயத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.  பொதுமக்களும், அதிகாரிகளும், தேவாலயத்து பிரதிநிதிகளும் (பிரதான ஆசாரியர், ஆசாரியர்கள், லேவியர்கள், வேதபாரகர், பரிசேயர், சதுசேயர்) எங்களை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.  நாங்கள் ஏன் இந்த வேலையை செய்ய வேண்டும் என்ற அவர்கள் நினைக்கவில்லை.

மேய்ப்பர்களுக்குக் கிடைத்த மேன்மையைப் பாருங்கள். அவர்கள் மனிதர்களிடமிருந்து மேன்மையை எதிர்பார்க்கவில்லை.  கடமையை சரியாய் செய்ததால், இரட்சகர் (இயேசு பாலன்) பிறந்த செய்தியை தேவ தூதர்கள் முதல்முதலில் இந்த மேய்ப்பர்களுக்கே வந்து அறிவித்தனர்.  மேய்ப்பர்களை விட அதிகாரத்தில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்த எந்த ஒரு அரசாங்க அதிகாரிக்கும் (ஏரோது, பிலாத்து, அகஸ்துராயன்) இந்த சுவிசேஷம் சென்றடையவில்லை.  மேய்ப்பர்களை விட நாங்கள் மேன்மையானவர்கள், தேவாலயத்தில் கர்த்தருக்காக அராதனை செய்யக்கூடியவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரதான ஆசாரியர், ஜனத்தின் வேதபாரகர், சதுசேயர்களுக்கு இரட்சகர் பிறந்த செய்தி அறிவிக்கப்படவில்லை.  எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட மேய்ப்பர்களுக்கே ”எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” முதலில் அறிவிக்கப்பட்டது.

நாமும் கூட ஆண்டவர் நம்மை நம்பி கொடுத்த அந்த பொறுப்பை உண்மையாய், நேர்மையாய், சரியாய் செய்யும்போது அதற்கான மேன்மையை, கனத்தை கர்த்தர் கொடுப்பார்.  மனிதர்கள் என்னை கனப்படுத்துவார்கள், அவர்கள் எனக்கு பதவி உயர்வு கொடுப்பார்கள் என எண்ணி நாம் உழைக்காமல், கர்த்தர் என்னை பர்த்துக்கொண்டிருக்கிறார் எனக்கான அங்கிகாரத்தை, எனக்கான பதவி உயர்வை என் கர்த்தர் எனக்கு தருவார் என எண்ணி நாம் நமது கடமையை சரியாய் செய்வோம்.  ஆண்டவர் நம்மை ஏற்ற நேரத்திலே உயர்த்தி, அநேகருக்கு பிரகாசிக்கிற ஒளியாய் மாற்றுவார்.

நீதிமொழிகள் 28:20

          உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

 

2. ஆண்டவரை தேடுவதில் ஆர்வம் கொண்டவர்கள்:

லூக்கா 2:16

          தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னனையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

          மந்தையை மேய்ப்பது என்பது ஒரு சாராதன காரியம் அல்ல.  மழை, வெளில், குளிர், பனி எதையும் பொறுப்படுத்தாமல், மந்தையை பாதுகாக்க வேண்டும்.  இந்த வேலை ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு செய்யும் வேலை அல்ல.  பகல் முழுவதும் மந்தையை மேய்க்க அநேக தூரம் பிரயாணப்பட்ட மேய்ப்பர்கள், இரத்திரி நேரத்தில் சற்று நின்மதியாக அமர்ந்திருப்பார்கள்.  அந்த நேரத்தில் கர்த்தருடைய தூதன் ”கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார்” என்று அறிவித்து சென்றுவிட்டார். 

மேய்ப்பர்களுக்கு தேவதூதன் சொன்ன செய்தியை கேட்டதும், அதற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு அநேக காரணங்கள் இருந்தன.  இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று சொன்ன தேவதூதன், இப்பொழுதே சென்று இரட்சகரை பாருங்கள் என்று சொல்லவில்லை.  மேய்ப்பவர்கள் தீவிரமாய் புறப்பட்டு வந்து, இயேசு கிறிஸ்துவை கண்டார்கள். 

1. இரவு நேரமாய் இருக்கிறது, நாளை சென்று இரட்சகரைப் பார்ப்போம் என்று மேய்ப்பர்கள் கீழ்ப்படியாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் மேய்ப்பர்கள் அப்படி இல்லை.

2. பகல் முழுவதும் மந்தையை மேய்த்ததில் நாம் கலைத்து இருக்கிறோம்.  இந்த இரத்திரி நேரத்தில் இத்தனை மந்தைகளையும் இழுத்துக்கொண்டு எப்படி செல்வது என்று கீழ்ப்படியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மேய்ப்பர்கள் அப்படி இல்லை.

3. தூதன் தாவீதன் ஊரில் (பெத்லகேமில்) இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று சொன்னார்.  ஆனால் எந்த வீட்டில் பிறந்திருக்கிறார் என்று சொல்லவில்லை.  இந்த இராத்திரி நேரத்தில், குழந்தை எந்த வீட்டில் இருக்கிறது என்று நாம் எப்படி தேடி கண்டுபிடிப்பது.  பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்.  ஆனால் மேய்ப்பர்கள் அப்படி இல்லை.

          ஆனால் நாம் அநேக நேரங்களில் ஆண்டவரை தேட மறந்துவிடுகிறோம்.  ஆரானையில் கலந்துகொள்ள தவறிவிடுகிறோம்.  ஆவியானவர் நம்மை உணர்த்தும்போது, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நம்மை நாமே தேற்றிக்கொள்கிறோம்.

          1. குடும்பங்களில் திருமணம் போன்ற நிகழ்வுகள் வரும்போது, நாம் ஆண்டவரை தேட மறந்துவிட்டு, திருமணக் காரியங்கள் அநேகம் இருப்பதால் ஆராதனையில் கலந்துகாள்ள முடியவில்லை என்று காரணம் சொல்லுகிறோம்.

          2. லேசாக மழை பெய்துவிட்டால், மழை நேரத்தில் ஏன் ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து வீட்டிலேயே இருந்துவிடுகிறோம். (சில இடங்களில் மழையின் காரணமாக ஆராதனை நடைபெறாமலுக்கு இருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது)

          3. சமைப்பதற்கு தாமதமானதால் ஆராதனைக்கு வரமுடியவில்லை என்று காரணம் சொல்லுபவர்களும் உண்டு.

          நாம் ஆண்டவரை தேடமறந்து விட்டு காரணம் சொல்வதுபோல, நம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் தறாமல் காரணம் சொன்னால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.  இந்த உலகில் எத்தனையோ கோடி ஜனங்களை ஒவ்வொரு நாளும், தங்களுடைய தேவைகளை ஆண்டவரிடம் தெரியப்படுத்துகிறார்கள்.  அப்படியிருக்க நம்முடைய ஜெபத்தை மட்டும் கேட்பதற்கு அவருக்கு நேரமில்லாமல் போகலாமே.  நமக்கு ஆண்டவரைத் தேட நேரமில்லலாமல் இருக்கும்போது, அவர் நமது ஜெபத்தைக் கேட்க நேரமில்லாமல் இருப்பது சரிதானே.

          எல்லாம் வல்ல இறைவனுக்கு எத்தனையோ பொறுப்புகள் வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்முடைய ஜெபத்தை கேட்கவேண்டும் என்று நாம் நினைப்பதுபோல, நாமும் இந்த உலகில் நமக்கு அநேக வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஆண்டவரை ஆராதிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டுமே.

          மேய்ப்பர்களைப்போல நாமும் ஆண்டவரை ஆராதிக்க தீவிரமாய் செயல்படும்போது அவர் நம்மை உயர்த்துவார்.

 

3. இரட்சகரை கண்ட மேய்ப்பர்கள் பிரசித்தம் பண்ணினவர்கள்:

லூக்கா 2:17

          கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

          நீங்கள் இரட்சகரை கண்ட செய்தியை மற்றவர்களுக்கும் அறிவியுங்கள் என்று மேய்ப்பர்களுக்கு யாரும் கட்டளையிடவில்லை.  இருப்பினும் மேய்ப்பர்கள் யாவருக்கும் அந்த நற்செய்தியை அறிவித்தார்கள்.

          இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நாமும் மேய்ப்பர்களைப் போல கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கும் அறிவிக்கும்போது ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதிப்பார்.

          ஒரு தையல் கடைக்கு செய்து நம்முடைய ஆடைகளை தைக்கக்கொடுக்கின்றோம்.  மற்ற கடைகளை விட அந்த கடைக்காரர் பத்து ரூபாய் குறைவாக தைத்துக்கொடுத்தால் உடனே வந்து அக்கம்பக்கத்திலிருப்பவரிடம் வந்து, அந்த தையல் கடைக்குச் செல்லுங்கள் குறைந்த விலையில் தைத்துக்கொடுப்பார் என்று சொல்லுகிறோம்.

          ஆனால் ஆண்டவரிடம் இருந்து ஆசீர்வாதங்களை, நன்மைகளைப் பெற்ற நாம் அதை எத்தனை பேருக்கு அறிவித்திருக்கிறோம். 

          இந்த மேய்ப்பர்களைப்போல நாமும் ஆண்டவருடைய அன்பைப் பற்றியும், அவர் தரும் சுகத்தைப் பற்றியும், ஆசீர்வாதத்தைப் பற்றியும் மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது நாமும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

          விண்ணின் வேந்தன் மண்ணில் அவதறித்த செய்தியை முதல் முதலில் அறிந்து கொண்ட மேய்ப்பர்களிடமிருந்து மூன்று காரியங்களைக் கற்றுக்கொண்டோம்.

          மேய்ப்பர்களைப்போல,

          1. கடமையைச் சரியாய் செய்வோம்

          2. ஆண்டவரை ஆராதிக்க தீவிரமாய் செயல்படுவோம்

          3. ஆண்டவரைப் பற்றி அறிந்துகொண்ட நாம் மற்றவருக்கம் பிரசித்தம்பண்ணுவோம்

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வாதப்பாராக!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.