Type Here to Get Search Results !

கடை நாணய ஐக்கியத்தின் கூட்டு வழிபாட்டு முறை - 2024 | last coin service | csi order of service tamil | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
ஆலடிபட்டி குருசேகரம்
கடை நாணய ஐக்கியத்தின் கூட்டு வழிபாட்டு முறை - 2024
சுயபராமரிப்பு புவியின் பராமரிப்பு


ஆயத்தம்:
கிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்ற சிலுவையைக் கொண்டு ஆலய பலிபீடத்தின் மையத்தை அலங்கரித்து, பாரம்பரியமான துணி ஒன்றை விரித்து, அதன்மேல் வேதாகமத்தை திறந்து வைத்து சிலுவையின் முன்பாக வைக்கவும். இடதுபுறத்தில் ஒழுங்கின்மையுமாய் இருப்பதுபோன்ற ஒரு மாதிரியை உருவாக்கி (காட்டுத் தீ, மரங்களற்ற மலைச்சரிவு, மண் அரிப்பு, நிலநடுக்கம், வெள்ளம், பஞ்சம், வரட்சி போன்றவை...), வலது புறத்தில் சமாதானமும், அமைதியும் நிறைந்த இயற்க்கைக் காட்சி மற்றும் ஒரு சமநிலை சூழல் போன்ற மாதிரியை அமைக்கவும்.

ஏழு பெண்கள் தங்கள் தேசத்தின் பாரம்பரிய உடையில் பின் வரும் சின்னங்களை சுமந்துவர வேண்டும்.
  • மெழுகுவர்த்தி
  • தண்ணீர்
  • மண்
  • ஆகாயத்தைக் குறிக்கும் அடையாளங்களில் ஒன்று (சூரியன், சந்திரன், மேகங்கள், நட்சத்திரங்கள்)
  • தாவரங்கள்
  • மிருகங்களையும், மனிதர்களையும் குறிக்கும் அடையாளங்களில் ஒன்று
  • உடைந்த மண்பானை

மென்மையான இசை இசைக்கப்படும்போது, ஆலய நுழைவுவாயிலிருந்து ஆறு பெண்கள் நடனமாடிக்கொண்டு பலிபீடத்தை நோக்கி ஆடிவர வேண்டும். தாங்கள் கொண்டுவந்த அடையாளப் பொருட்களை பலிபீடத்தின் முன் வைப்பதற்கு முன்பாக, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை வாசிப்பதற்காக பலிபீடத்தின் முன் வரிசையாக நிற்க்க வேண்டும்.

ஆரம்ப ஜெபம்:

ஆரம்ப பாடல்:

ஆராதனை நடத்துபவர்: வானங்கள் கர்த்தரின் மகிமையைக் கூறுகின்றன! ஆகாயமானது கை வேலைப்பாடுகளை பரைசாற்றகின்றன.

சபையார்: எங்கள் படைப்பாளரான கடவுளின் உறுதியான அன்பைக் கொண்டாடுகின்றோம். நிச்சயமாக, கடவுள் அனைத்து படைப்புகளிடத்திலும் உண்மையுள்ளவர்.

ஆராதனை நடத்துபவர்: சூரியன் உதிப்பது முதல் அஸ்தமனமாகும் வரை, படைப்புகள் உரையாடுகின்றன.

சபையார்: இரவும், பகலும் கடவுளின் செயல்களை பூமியின் உயிரினங்கள் அறிவிக்கின்றன.

ஆராதனை நடத்துபவர்: கடவுளின் கட்டளைகள் தெளிவானவைகள், அது இருதயத்தை அறிவூட்டுகின்றது. கடவுளின் சட்டம் நேர்த்தியானவை, அது நமது சிறந்தவைகளை கொடுக்குமாறு நம்மை அழைக்கின்றது.

சபையார்: நம் மத்தியில் இருக்கும் கடவுளின் தூய பிரசன்னத்திற்கு உங்கள் இருதயங்களை திறவுங்கள். கடவுளின் வழிகாட்டுதலுக்கு எங்கள் வாழ்வை திறந்து கொடுக்கின்றோம்.

(எதற்கு இந்த ஆராதனை என்பதை விளக்கும் பின்னியுடன் வரவேற்பும், வாழ்த்துகளும் கூறவும்)


தியானம்:
பெண் 1 (வெளிச்சம்) : ஆதியிலே கடவுள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். எங்கும் இருள் இருந்தது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கடவுள் கூறினார். வெளிச்சம் உண்டாயிற்று. கடவுள் அதை நல்லதென்று கண்டார்.

பெண் 2 (தண்ணீர்) : பின்பு தேவன், தண்ணீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் கூறினார். அவ்வாறே கடவுள் ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார். அது நல்லது என்று கடவுள் கண்டார்.

பெண் 3 (மண்) : பின்பு கர்த்தர் வானத்தின் கீழ் இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. கடவுள் வெட்டாந்தரைக்கு பூமி என்றும், சேர்ந்த தண்ணீருக்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார். பின்பு கடவுள் பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் தாவரங்களையும், மரங்களையும், விதையையுடைய கனிகளை தரும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. கடவுள் அது நல்லது என்று கண்டார்.

பெண் 4 (ஆகாயம்) : பின்பு கடவுள் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். கடவுள் பகலை ஆளப் பெரிய சுடரையும், இரவை ஆள சிறிய சுடரையும் உருவாக்கினார். அது அப்படியே ஆயிற்று. கடவுள் அது நல்லது என்று கண்டார்.

பெண் 5 (தாவரங்கள்) : பின்பு கடவுள் நீந்தும் ஜீவஜந்துக்களையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். கடவுள் மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜெநிப்பிக்கப்பட்ட, சகலவித நீர்வாழ் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவித பட்சிகளையும் சிருஷ்டித்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்

பெண் 6 (மிருகங்கள் / மனிதர்கள்) : பின்பு கடவுள் பூமியானது ஜாதி ஜாதியான ஜீவ ஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதி ஜாதியாக பிறப்பிக்கக்கடவது என்றார். பின்பு கடவுள், நமது சாயலாக மனிதனை படைப்போம், அவன் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். அனைத்து தாவரங்களையும், மனிதர்களுக்கு உணவாகக் கொடுத்தார். அது அப்படியே ஆயிற்று. கடவுள் தான் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிந்தது.


சிறிது நேர மௌனமாக தியானம்:
பெண் 7 (உடைந்த பானை) : நமது வாழ்விடமான பூமித்தாய் உடைந்த பானைக்கு ஒப்பிடப்படுகிறது. பூமியைப் பராமரிக்கும்படி கடவுள் நமக்குக் கொடுத்த கடமையை செய்யத்தவறியதினால் பேரழிவுகளினாலும், பிற சிக்கலினாலும் சூழப்பட்டுள்ள நமது தாய்ப் பூமியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த உடைந்த பானையை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். பறவைகள் அழிந்து கொண்டிருக்கின்றன, புல் உலர்ந்து கொண்டிருக்கின்றது. நீரில் உள்ள நச்சுத்தன்மை நமது குழந்தைகளை கொள்ளுகிறது. சுய லாபாத்திற்காக சொர்க்கமாகிய இந்த பூமி அழிக்கப்பட்டது. கடவுள் இப்பூமி இழந்த தன்மையைக் கண்டார். படைப்பின் நன்மதிப்பை இழப்பதை நாம் காண்கிறோம், கேட்கிறோம், அனுபவிக்கிறோம். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள அனைத்துப் படைப்புகளின் உடன்படிக்கையும் முறிந்தது. பூமியானது பேராசையினாலும் தீமையினாலும் ஆளப்படுகிறது. (கடவுள் இப்பூமி இழந்த தன்மையைக் கண்டார். போர், பசி, பாரபட்சம், விரக்தி, நோய், காலநிலை நெருக்கடி, நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி, சூராவளி ஆகிய தீவிரமாக உள்ளன.)

சிறிது நேர மௌனமான தியானம்

பாவ அறிக்கைக்கான அழைப்பு:
ஆராதனை நடத்துபவர்: வாழ்வளிப்பவரே, கொள்ளையடிக்கப்பட்ட பூமியின் மத்தியில் இருந்து படைப்புகளோடு நாங்கள் கூக்குரலிடுகிறோம்.

சபையர்: எங்கள் மேல் கிருபையாயிரும்.

ஆராதனை நடத்துபவர்: வாழ்வளிப்பவரே, நச்சுக் கலந்த தண்ணீரின் மத்தியில் இருந்து படைப்புகளோடு இணைந்து நாங்கள் கூக்குரலிடுகிறோம்.

சபையார்: எங்கள் மேல் கிருபையாயிரும்.

பெண்கள்: எங்களுக்குள்ளும், எங்கள் அயலகத்தாரோடும் சமாதானத்தை உருவாக்குவதற்கான வழியை நாங்களே கண்டுபிடிக்கத்தக்கதாக நீர் இந்த பூமியை உருவாக்கி இருக்கின்றபடியால், போரை நிறுத்தும்படியாய் உம்மிடத்தில் நாங்கள் மன்றாட இயலாது.

ஆண்கள்: உலகம் அனைத்திற்கும் உணவளிப்பதற்கான வழங்களை நீர் ஏற்கனவே எங்களுக்கு அருளியிருக்கின்றபடியினால் பசியை ஒழிக்க உம்மிடம் நாங்கள் மன்றாட இயலாது. இந்த வளங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி பேராசையின்றி நாங்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது பசியை ஒழிக்க முடியும்.

பெண்கள்: எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கின்ற நல்ல காரியங்களை பார்க்கும்படியாய், நீர் எங்களுக்கு அளித்த கண்களை சரியாய் பயன்படுத்தும்போது, பாரபட்சங்களை ஒழிக்கும்படியாய் நாங்கள் உம்மிடம் மன்றாட இயலாது.

ஆண்கள்: சேரிகளை எல்லாம் அகற்றி, மக்களுக்கு நம்பிக்கையை அழிக்கத்தக்க, அதிகாரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நீர் எங்களுக்கு அளித்திருக்கின்றபடியினால், துன்பங்களை அகற்றம்படி நாங்கள் உம்மிடத்தில் மன்றாட இயலாது.

பெண்கள்: இரக்கத்துடன் அனைவரும் சுகத்தைக் கொடுக்கக்கூடிய சிறந்த மனதை நீர் எங்களுக்கு ஏற்கனவே அருளியிருக்கிறபடியால், வியாதியை நீக்கும்படியாய் உம்மிடத்தில் நாங்கள் மன்றாட இயலாது.

ஆராதனை நடத்துபவர்: ஆகவே, கர்த்தாவே எங்களையும், எங்கள் குறைபாடுகளையும் மன்னித்து, நாங்கள் ஜெபிக்கவும், விருப்பப்படவும் மட்டும் இல்லாமல் செயல்படவும் எங்களுக்கு வலிமையையும், உறுதியையும் துணிவையும் தரும்படியாய் நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம்.

சிறிது நேரம் மௌனமான தியானம்

ஜெபம் (இணைந்து ஏறெடுப்போம்)
வாரும் தூய ஆவியே,
படைப்புகளை புதுப்பியும்,
எங்களோடும் எங்கள் முயற்சிகளிலும்
நீர் அசைவாடி,
எங்கள் திருச்சபையை புதுப்பிக்கும்படியாய், எங்களுக்குள்
புது ஜீவன் அருளும்.
உமது நீதி என்கிற நீரோடைகளுடன் இவ்வுலகில் அசைவாடும்,
ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வாழ்வாகிய நீரையும்,
ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு விடுதலையாகிய ஆறுகளையும் அருளும்,
உமது அன்பாகிய நெருப்பால் எங்கள் உள்ளத்தில் அசைவாடும்.
உமது குணப்படுத்தலின் அரவணைப்பையும், உமது மாற்றுருவாக்கும் அதிகாரமாகிய தீச்சுடரையும் அருளும். ஆமென்.

திருமறைப் பகுதி:
    அப்போஸ்தலர் 9:36-42

சிறப்புப் பாடல்:
அருளுரை: ”நமக்கும், பிறருக்கும், உலகமனைத்திற்கும் வாழ்வழிக்கும் ஊழியம்“

பகிரப்பட்ட சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி
(தங்களை அடையாளப்படுத்துகின்ற ஏதாவது ஒன்றை (பங்கேற்பாளர்களை) கொண்டு வரச் சொல்லி அதிலிருந்து பின்வருவனவற்றைச் சிந்திக்கும்படியாய் கூறலாம்)
1) தாங்கள் தங்களுடைய சமூகத்தில் செய்துவருகின்ற தொண்டு, விருந்தோம்பல் மற்றும் நன்மைகளை குறித்து பகிரவும்.
2) சோர்வடையும் நேரங்களில் மகிழ்ச்சி, ஆற்றல் மற்றும் புதுவாழ்வை எவ்வாறு கண்டடைவீர்கள்?
3) தங்கள் குழு / சமூகம் / திருச்சபை உங்களை எவ்வாறு ஆதரிக்கிறது?
4) சிறு நாணய ஐக்கிய இயக்கம் தங்களுக்கும், தங்கள் குழு சமூகத்திற்கும் எவ்வாறு வாழ்வழிக்கிறது?

அறிவிப்பு

காணிக்கைப் பாடல்

காணிக்கை ஜெபம்

கடைநாணய ஐக்கிய வரலாறு
கடைநாணய ஐக்கியம் என்பது நீதி, சமாதானம், ஒப்புரவாகுதல் என்பவைகளுக்காக செய்யும் விண்ணப்பத்தை வலியுறுத்தும் ஒருமைப்பாட்டின் இயக்கமாகும்.

இந்தியாவைச் சேர்ந்த சகோதரி சாந்தி சாலமோன் அவர்களுக்குக் கர்த்தர் அருளின தரிசனத்தால் உருவானதுதான் இந்த கடை நாணய ஐக்கியம். இரண்டவாது உலகப்போருக்குப் பின்னர் செப்டம்பர் 1956-ல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏழு பெண்கள் கொண்ட “பசுபிக் மிஷன் குழு“ என்ற பெண்கள் குழு ஆசியாவின் பல நாடுகளில் பயணித்து பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிராஸ்பிட்டேரியன் திருச்சபையின் சார்பாக டாக்டர். மார்கிரெட் ஷெனன் அம்மையாரால் இப்பணி துவக்கப்பட்டது. இக்குழுவில் ஒருவரான நமது சாந்தி சாலமோன் அம்மையாருக்கு கொரியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே குழுவின் பிற உருப்பினர் கொரியா செல்ல, திருமதி சாந்தி சாலமோன் மட்டும் தனித்து பலிப்பைன்ஸ் நாட்டில் தங்கிவிட்டார்கள். அங்கு இருக்கும்போது இரண்டு காரியங்களை குறித்து சிந்தித்தார்கள்.

1. பிளவுப்பட்ட இந்த உலகில் ஒப்புரவாகுதலின் அவசியம்.
2. வீட்டை விட்டு வெளியேறாத பெண்களுக்கும், அகில உலக ஐக்கியத்தில் பங்கு பெறும் உணர்வு.

இச்சிந்தனைகளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் பெண்களோடு இரண்டு காசு காணிக்கை போட்ட விதவையை பற்றி தியானிக்கையில் எழுந்த கருத்துச் சிந்தனைதான் ”கடை நாணய ஐக்கியம்“.

அவர்கள் குழுவினர் மீண்டும் அவர்களுடன் வந்து சேர்ந்தபோது, ஜெபம் மட்டுமே நாட்டின் எல்லைகளையும் தாண்டி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தினார்கள். ஆசியாவின் பெண்களுக்கும் அமெரிக்க பிராஸ்பிடீரியன் திருச்சபை பெண்களுக்கும் ஒரு சவாலாக அவர்கள் செய்தி அமைந்தது. நீதி, சமாதானம், ஒப்புரவாகுதல் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஊழியம் பெண்களின் முயற்சியால்,, அவர்களாலேயே உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்கள். அது ஒரு கிறிஸ்தவ ஜெபத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பெண்ணும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு திட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பொருளாதார நிலையில் வேறுபட்ட எத்தரப்பினரும் இத்திட்டத்தில் இணையவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும், தங்கள் நாட்டுப் பணத்தில் சிறிய நாணயம் எதுவோ (Least Coin) அதை தனியாக ஒரு உண்டியலில் சேர்க்க வேண்டும். நாடு, இனம், மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி, கிறிஸ்தவ விசுவாசத்தில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த, இந்த திட்டம் ஊக்குவிக்கும் என்று நம்பினார்கள். அவர்கள் அருட்பணி குழுவின் அங்கத்தினர் யாவரும் இக்கருத்தை முழுமனதுடன் அங்கீகரித்தனர்.

கடை நாணய ஐக்கியம், அது துவங்கப்பட்ட ஆசிய கண்டத்தில் மட்டுமல்ல, உலகமனைத்தும் எல்லா கண்டங்களிலுள்ள பெண்களால் அங்கீகரிக்கப்பட்டது. 1966-ல் கடை நாணய ஐக்கியத்தின் பத்தாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டபோது, 24 நாடுகளின் பெண்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1980-ல் வெள்ளி விழா அனுசரிக்கப்பட்ட போது 75 நாடுகள் இந்த ஐக்கியத்தில் இணைந்திருந்தனர். 1980-ல் 80 நாடுகளின் பெண்கள் இணைந்து 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். 2006-ல் 50-வது ஆண்டை ”ஆரம்பத்தை நினைவுகூர்ந்து, எதிர்கால தரிசனத்தோடு, ஜுபிலியை கொண்டாடுகிறோம்“ என்ற தலைப்பில் அனுசரித்தோம். அடுத்துவரும் 50 ஆண்டுகளில் ”புவியைப் பாதுகாப்பது…. நமது அழைப்பு“ என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டிலும், “எங்ககளைச் சீர்படுத்தும், எங்கள் புவியைச் சீர்படுத்தும்“ என்ற கருப்பொருளில் ஆசரிக்கிறோம்.

துதிப்பாடல்
அனைத்து ஆசீர்வாதங்களையும் அருளும் கடவுளைத் துதியுங்கள்.

வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து உயிரினங்களும் கடவுளைத் துதியுங்கள்.

இயேசுவில் முற்றிலும் அறியப்பட்ட படைப்பாளரும், வார்த்தையையும், ஆவியுமாகிய ஒருவரான கடவுளைத் துதியுங்கள். ஆமென்.

பாடல்:
குறிப்பு: பாடல் பாடும்போது ஆராதனைக்கு முன்பாக ஆயத்தம் செய்யப்பட்ட உருகுலைந்த இயற்க்கைக் காட்சியை ஒருசிலர் முன் வந்து ஒழுங்குபடுத்தலாம்.

அர்ப்பணிப்பின் ஜெபம்: (இணைந்து ஏறெடுப்போம்)
பற்கள் ஒளியுடன் அமைதியாக இருப்பது போல,
பூமியே, எங்களுக்கு அமைதியைக் கற்றுக்கொடு.
பழைய கற்கள் நினைவாற்றலால் பாதிக்கப்படுவது போல,
பூமியே, எங்களுக்குத் துன்பத்தைக் கற்றுக்கொடு.
பூக்கள் தாழ்மையோடு துவங்குவது போல,
பூமியே, எங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடு.
தாய் தனது குழந்தைகளை காப்பதுபோல,
பூமியே, எங்களுக்கு அக்கறையைக் கற்றுக்கொடு.
மரம் தனியாக நிற்பதுபோல,
பூமியே, எங்களுக்கு துணிவைக் கற்றுக்கொடு.
தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு போல,
பூமியே, எங்களுக்கு வரம்பைக் கற்றுக்கொடு.
ஆகாயத்தில் உயரப் பறக்கும் கழுகுபோல,
பூமியே, எங்களுக்குச் சுதந்திரத்தைக் கற்றுக்கொடு.
இலையுதிர் காலத்தில் விழுகின்ற இலைகளைப் போல,
பூமியே, எங்களுக்கு விட்டுக்கொடுத்தலைக் கற்றுக்கொடு.
வசந்த காலத்தில் முளைக்கும் விதையைப் போல,
பூமியே, எங்களுக்கு மீளுருவாக்கத்தைக் கற்றுக்கொடு.
உருகிய பனி தன் வாழ்வை மறப்பதுபோல,
பூமியே, எங்களை நாங்களே மறக்கக் கற்றுக்கொடு.
வறண்ட வயல்கள் மழையில் அழுவதுபோல,
பூமியே, எங்களுக்கு இரக்கத்தை நினைவில் கொள்ள கற்றுக்கொடு.
ஆமென். ஆமென். ஆமென்.


மன்றாட்டு ஜெபம்
ஆராதனை நடத்துபவர்: ஆளுகையின் தேவனே, அனைத்து மக்களின் தேவனே!

சபையார்: எல்லா உயிரினங்களின் ஜீவன் நீரே; புவியை நிரப்பும் ஆற்றல் நீரே; உயிரினங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் மூலமும் நீரே.

ஆராதனை நடத்துபவர்: காயப்பட்டவை அல்லது உடைக்கப்பட்டவை எதுவாயினும் அவற்றைச் சீர்படுத்தும் உந்துசக்தி நீரே!

சபையார்: படைப்புகள் அனைத்தும் விடுதலையாக்கக் கூடிய சரியான பாதையை உம்மிலே கண்டுகொள்கிறோம். புவி முழுவதும் பாடுகிற ஆனந்தப் பாடலும், இப்பொதும் எப்பொழுதும் விடுதலையளிக்கும் உத்தரவாதமும் நீரே! ஆமென்.

ஆராதனை நடத்துபவர்: நாம் இயேசு கிறிஸ்துவின் உறவுகளாக கடவுளின் நல்வரங்களைப் பெற்றிருக்கிறோம்.

சபையார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நடைமுறைப்படுத்தும்படியாக உலகிற்கு உப்பாக வாழவும், நீதி நியாத்தைத் தேடவும், சமாதானத்தை உண்டுபண்ணவும், இயற்கையைப் பாதுகாக்கவும், ஜீவனைக் கண்டடையவும், நம்முடைய வீட்டிற்கும், அயலகத்தாரிடத்திற்கும், பணியிடங்களுக்கும் புறப்பட்டுச் செல்கிறோம்.

ஆராதனை நடத்துபவர்: அன்புள்ள ஆண்டவரே, எங்கள் வாழ்நாளில் நாங்கள் கடினமான பகுதிகளைக் கடந்து வந்து புதிதாக்கப்படவும், சரியான வழியை அறிந்து கொள்ளவும் ஜெபிக்கிறோம்.

சபையார்: எங்கள் வாழ்நாளில் விசாலமான பாதையை அமைக்க முயன்று, நாங்கள் நடக்க வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டோம்.

ஆராதனை நடத்துபவர்: ஆண்டவரே, எங்களுக்குரிய பாதையிலே எங்களை வழிநடத்தும்.

சபையார்: இயற்கையின் வேகத்திற்கேற்ப நாங்கள் எளிமையாக நடந்து புவியின் அன்பை எங்கள் நடையில் உணரத்தக்கதான இடத்திற்கு எங்களை நடத்தும்.

ஆராதனை நடத்துபவர்: எங்கள் இதயங்களில் படைப்பின் இயக்கத்தை உணரும்படியாய் படிப்படியாக எங்களை நடத்தும்.

சபையார்: நாங்கள் பயணிக்கும் பாதையில் இயற்கையின் அரவணைப்பை உணரக்கூடிய இடத்திற்கு நேராய் எங்களை நடத்தும்.

ஆராதனை நடத்துபவர்: ஆண்டவரே, எங்கள் வாழ்க்கை பயணத்தில், எங்களை மகிழ்சி நிறைந்த பொதுவான பாதையில் வழிநடத்தும்.

சபையார்: கடவுளின் அனைத்துப் படைப்புகளோடும் கொண்டுள்ள உறவில் புதிய வழிகளை அறிவதையும், புதிய வாழ்வை வாழ்வதையும் கற்றுக் கொள்வோம். தற்போது நமக்கு இருக்கின்ற ஒரே வாசஸ்தலமான இந்த பூமியைப் பராமரிப்பதும், மீட்டெடுப்பதும் மட்டுமே நமது ஒரே அழைப்பு. கடவுளின் படைப்பு அனைத்திற்கும், நம் ஒவ்வொருவருக்கும் இடையேயும் நாம் கிறிஸ்துவாக வாழ வேண்டும் என்பதைக் காட்டிய இயேசுவின் நாமத்தில், ஆமென்.


ஆராதனை நடத்துபவர்: நீங்கள் மகிழ்ச்சியாய் புறப்பட்டு, சமாதானமாய் கொண்டுபோகப்படுவீர்கள். பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாக கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்கள் எல்லாம் கைகொட்டும். முட்செடிக்குப் பதிலாக தேவதாரு விருட்சம் முளைக்கும். காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடி எழும்பும் அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும். (ஏசாயா 55:12,13)

சமாதானத்தைப் பகிர்தல்
ஆசீர்வாத ஜெபம் (அனைவரும் கரம் கோர்த்து இணைந்து கூறுவோம்)
படைப்பில் நடனமாடும் கடவுளே,
மனித அன்புடன் நம்மை அரவணைப்பவரே,
இடியைப் போல நம் வாழ்வை அசைப்பவரே,
அவளது நீதியினால் இவ்வுலகை நிரப்ப,
எங்களை உமது வல்லமையினால் நிரப்பி,
ஆசீர்வதித்து அனுப்பும்.

நிறைவு ஜெபமும் ஆசீர்வாதமும்

நிறைவு பாடல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.