============
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
============
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோன். நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் என்ற தலைப்பின் அடிப்படையில், கடவுளின் தன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தியானிப்போம்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா தீர்க்கரிசியின் புத்தகம் கி.மு 600-ம் ஆண்டு எழுதப்பட்டது.
நமக்கு ஒரு பாலன் பிறந்தார், என்று இறந்த காலத்தில் தீர்க்கன் எழுதுகிறார்.
இயேசுவானவர் மனிதனை மீட்கும்படியாக சிலுவை மரத்தில் தொங்கவேண்டும் என்று ஏசாயா தீர்க்கதரியின் காலத்திலோ, மீகா தீர்க்கதரிசியின் காலத்திலோ கர்த்தர் தீர்மானிக்கவில்லை. ஆபிரகாமின் காலத்திலோ, மோசேயின் காலத்திலோ தீர்மானிக்கவில்லை.
ஆதாம், ஏவாள் பிறந்தபோதோ, ஆதாம் ஏவாள், பாவம் செய்தபோதோ, ஆண்டவர் தன்னுடைய குமாரனை பூவுலகிற்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கவில்லை. ஆதாம் ஏவாளை படைக்கும் முன்னமே, ஏன் உலகத்தோற்றத்திற்கு முன்னமே, இயேசுவானவர் மானுட அவதாரம் எடுக்க வேண்டும் என்பதை பிதாவானவர் தீர்மானித்திருந்தார்.
வெளிப்படுத்தல் 13:8
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி……..
எனவே தான் ஏசாயா தீர்க்கன், நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமே, பிறந்ததாக இறந்த காலத்தில் எழுதுகிறார்.
மானுட அவதாரம் எடுத்த பாலனுக்கு ஏசாயா தீர்க்கனால் கொடுக்கப்பட்ட பெயர்கள்:
1. அதிசயமானவர்,
2. ஆலோசனைக் கர்த்தர்
3. வல்லமையுள்ள தேவன்
4. நித்திய பிதா
5. சமாதான பிரபு
ஏசாயா கூறுகின்ற இந்த ஐந்து பெயர்களும், கடவுளுடைய ஐந்து தன்மைகளை, அதாவது குணங்களை வெளிப்படுத்துகிறது இந்த குறிப்பில் கடவுளின் இந்த ஐந்து நாமங்களைக் (பெயர்கள்) குறித்தே நாம் தியானிக்க இருக்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் கடவுள்
ஏசாயா 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவரும் தானே. என்னைத் தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தருமாகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் எபிரெயு மொழியில் எழுதப்பட்டது.
எபிரெயு மொழியில் 22 எழுத்துக்கள் உள்ளது. 119-ம் சங்கீதத்தை நாம் எடுத்துப் பார்த்தோமானால், அங்கே தாவீது அரசன் எபிரெய மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தை மையமாகக் கொண்டும் எட்டு, எட்டு வசனங்கள் எழுதியிருப்பதை பார்க்க முடியும். அந்த எட்டு எட்டு வசனங்களுக்கு மேல், அந்த எபிரெய எழுத்து எழுதப்பட்டிருப்பதையும் நாம் தமிழ் வேதாகமத்தில் பார்க்க முடியும்.
எபிரெயும் மொழியின் முதல் எழுத்து ஆலெப். கடைசி எழுத்து தௌ
முந்தினவரும் பிந்தினரும் என்ற பதம் எபிரெயு மொழியில் ஆலெப்பும், தௌவும் என்று எழுதப்பட்டுள்ளது. நான் தான் துவங்கம், நான் தான் முடிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
புதிய ஏற்பாட்டில் கடவுள்
வெளிப்படுத்தல் 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்வலமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
கிரேக்க மொழியில் 24 எழுத்துக்கள் உள்ளன. கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஆல்பா. கடைசி எழுத்து ஒமெகா
நான் தான் ஆரம்பம், நான் தான் முடிவு என்று வெளிப்படுத்தும்படியாகவே, கடவுள் நான் ஆல்பாவாக, ஒமெகாவாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
கடவுள் ஆதியிலே எப்படி இருந்தாரோ அப்படித்தான், மனிதனாக பிறந்தபோதும் இருந்தார், இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார். ஆதியிலே அவருக்கு அதிக வல்லமை இருந்தது என்றும், மானுட அவதாரம் எடுத்தபோது அவருடைய வல்லமை சற்று குறைந்தது என்றும் நினைப்பது தவறு.
எபிரெயர் 13:8
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
ஆதியிலே இருந்தவர், மானுட அவதாரம் எடுத்து மனிதனின் பாவங்களுக்காக சிலுவையிலே மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர். இப்பொழுது நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்ற கடவுளின் சிறப்பு பண்புகளைக் குறித்து தியனிப்போம்.
1. அதிசயமானவர்
இயேசு கிறிஸ்து அதிசயமானவர் என்பதை அவருடைய பிறப்பு நமக்கு காண்பிக்கிறது. உலகப்பிரகாரமாக ஓர் தாய் தகப்பனுக்கு பிறந்தவர் அல்ல இயேசு கிறிஸ்து. கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரிக்கப்பட்டு பிறந்தார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஓர் அதிசயம், அவருடைய ஊழியப்பயணம் முழுவதும் அதிசயங்களாலும், அற்புதங்களாலும் நிறைந்திருந்தது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும் கூட அதிசயம்.
அதிசயமான கடவுள் நம்முடைய வாழ்விலும் அதிசயம் செய்ய வல்லவராய் இருக்கிறார்.
மீகா 7:15ஆ
உன்னை அதிசங்களைக் காணப்பண்ணுவேன்.
வருடத்தின் நிறைவு நாட்களுக்குள்ளாக நாம் வந்திருக்கிறோம். கடவுள் வருகின்ற புதிய ஆண்டில் நம்முடைய வாழ்வில் அதிசயங்களைக் காணப்பண்ண அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
என்னுடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லையே, என்னுடைய ஆசை நிறைவேறவில்லையே, என்னுடைய முயற்சிக்கள் எல்லாம் தோல்வியில் முடிகிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.
யோபு தன் வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களை இழந்தபின்பும் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தார். எனவே தான் யோபு இப்படியாக சொல்லுகிறார்.
யோபு 5:9 | யோபு 9:10
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
எல்லா ஆசீர்வாதங்களும் இருந்தபோது யோபு இந்த வார்த்தையை சொல்லவில்லை. எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்து, தோற்றுப்போன ஒரு நிலையில் யோபு இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். எதுவுமே இல்லை என்றாலும் என் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார், அதிசயங்களை காணப்பண்ணுவார் என்ற நம்பிக்கை யோபுவுக்கு இருந்தது. யோபு அந்த அளவிற்கு கடவுளை உறுதியாய் நம்பினதினாலேயே, தான் இழந்தை அத்துனை ஆசீர்வாதங்களையும் இரண்டு மடங்காய் பெற்றுக்கொண்டார்.
இந்த வருடத்தின் இறுதி நாட்களில் நின்று கொண்டிருக்கும் நமக்கு அநேக சந்திக்கப்பட்டாத தேவைகள் இருக்கலாம். யோபுவைப்போல கர்த்தரை உறுதியாய் நம்பும்போது, கர்த்தர் வருகின்ற புதிய ஆண்டில் நிச்சயமாகவே என்னை அதிசயங்களை காணப்பண்ணுவார் என்று நம்பும்போது, அதிசயமான கடவுள், யோபுவுக்கு அதிசயமான காரியங்களைச் செய்த கடவுள் நம்முடைய வாழ்விலும் அதிசயங்களைச் செய்ய அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
ஆண்டவர் என் வாழ்வில் அதிசயம் செய்ய வேண்டுமானால், நான் என்ன செய்ய வேண்டும். யோசுவா சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள்.
யோசுவா 3:5
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்.
ஆண்டவர் நம்முடைய வாழ்வில் அதிசயம் செய்ய வேண்டுமானால், அற்புதம் செய்ய வேண்டுமானால், நம்மை நாம் தற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். நம்முடைய பாவ காரியங்களை விட்டு விட்டு, நம்மை பரிசுத்தம்பண்ணிக்கொள்ளும்போது, நிச்சயமாகவே வருகின்ற புதிய ஆண்டில் அதிசயமான கர்த்தர் நம்முடைய வாழ்வில் அதிசயம் செய்ய, அற்புதம் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
மனோவாவிடம் கர்த்தர் அதிசயம் என்ற பெயரில் தன்னை வெளிப்படுத்துகிறார்
நியாயாதிபதிகள் 13:18
அதற்கு கர்த்தருடைய ததூதனானவர்: என் நமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
கர்த்தரிடத்தில் அதிசயங்களை பெற்றுக்கொண்ட ஒருசிலரின் வார்த்தைகள்
சாலொமோன்
சங்கீதம் 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்முண்டாவதாக. அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
ஆசாப்
சங்கீதம் 77:14அ
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே.
தாவீது
சங்கீதம் 86:10
தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர். நீர் ஒருவரே தேவன்.
சங்கீதம் 136:14
ஒருவராய் பெரிய அதிசங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.
ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன். உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன். நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்.
2. ஆலோசனைக் கர்த்தர்
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் அனைத்து பிரபலங்களும் தங்களுக்கென ஒரு ஆலோசகர் (வக்கில்) வைத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
சமீப நாட்களுக்கு முன்பாக ஓர் அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு நான் எனது வக்கீலிடம் ஆலோசனை கேட்டுவிட்டு உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறினதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
இவ்வாராக அரசியல் தலைவர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்புக்களிலும் இருக்கிறவர்கள் தங்களுக்கென ஓர் ஆலோசனைக் குழுவை வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
நாமும் ஒரு காரியத்தை துவங்கவேண்டுமானால், ஒர் தொழிலை ஆரம்பிக்க வேண்டுமானால், அதில் நல்ல அனுபவம் மிக்கவர்களிடம் அலோசனை கேட்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
ரெபேக்காள்
ரெபேக்காள் இரட்டைக் குழந்தைகளை கர்ப்பந்தரித்தபோது, இரண்டு பிள்ளைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்பொழுது பயந்துபோன ரெபேக்காள், தன் கணவனிடமோ, மற்ற உறவினர்களிடமோ அதை அறிவிக்கவில்லை. அவர்களிடத்தில் ஆலோசனைகள் கேட்கவில்லை. கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டாள் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 25:22
அவள் (ரெபேக்காள்) கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
பயந்துகொண்டிருந்த ரெபேக்காளுக்கு கர்த்தர் அடுத்த வசனத்தில் ஆலோசனை கொடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 25:23
அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள். மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
தாவீது
தாவீது யுத்தத்திற்கு புறப்படும்போது, கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு, பதிலை பெற்றுக்கொண்ட பின்பே யுத்தத்திற்கு புறப்படுவார்.
2 சாமுவேல் 5:19
பெலிஸ்தருக்கு விரோதமாகப்போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
தாவீது மிகப்பெரிய யுத்த வீரன். தாவீதுக்கு துணையாக யோவாப் என்ற படைவீரன் இருந்தான். இன்னும் அநேக பலவான்களும் தாவீதோடு இருந்தார்கள். எதிரிகள் எவ்வளவு பலம் பொருந்தினவர்களாக இருந்தாலும், தாவீதுக்கு முன்னால் அவர்களால் நிற்க முடியாது. யுத்தத்தில் அவ்வளவு வல்லமை பெற்ற தாவீது, தான் யுத்தத்திற்குச் செல்லும்போது, கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு, கர்த்தர் பதில் கொடுத்தால் மாத்திரமே யுத்தத்திற்கு புறப்படுவார்.
தாவீதின் சங்கீதத்தில் கர்த்தர் தாவீதைப்பார்த்து சொல்லுகிறார்….
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணைவைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
தாவீதைப்போல கர்த்தரை நாம் முழுமையாய் நம்பி வாழும்போது, அவரை மாத்திரம் பற்றிக்கொள்ளும்போது, ஆண்டவர் நம்மையும் சரியான பாதையிலே, நேர்த்தியான பாதையிலே வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
நம்முடைய இல்லங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடும்போது, குறிப்பாய் நம்முடைய பிள்ளைகளுக்கு திருமண காரியத்தை ஏற்படுத்தும்போது, நம்மில் எத்தனைபேர், கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டிருப்போம்.
நாமாக முடிவெடுத்து, நாமாக திருமண காரியங்கள் அனைத்தையும் செய்துகொண்டு, இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்று பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் எழுதுகிறோம்.
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு முடிவுகளையும் நாம் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டபின்பே எடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பு காரியமாக இருந்தாலும், வேலை காரியமாக இருந்தாலும், திருமண காரியமாக இருந்தாலும், புதிய தொழில் துவங்கும் காரியமாக இருந்தாலும், நாம் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்ட பின்பே காரியத்தை துவங்க வேண்டும்.
கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு பெற்றுக்கொண்ட தாவீது இப்படியாக கூறுகிறார்
சங்கீதம் 16:7அ
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதியுங்கள்.
சங்கீதம் 139:17
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள். அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 33:11
கர்த்தரின் ஆலோசனை நித்திய காலதாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
உண்மை நிகழ்வு
கொரியா தேசத்தைச் சார்ந்த ஒரு மனிதர் தான் ஒரு புதிய தொழில் துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தொழில் துவங்குவது என்பது ஒரு சாதாரணமான காரியம் அல்ல. இந்த நாட்களில் பல மனிதர்கள் பணம் கையில் இருக்கிறது, எனவே ஒரு தொழிலை ஆரம்பிப்போம் என்று சொல்லி ஆரம்பித்து, தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததை நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருகிறோம். ஆனால் இந்த மனிதர் உலக மனிதர்களிடத்தில் அல்ல, கர்த்தரிடத்தில், தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகளை கேட்டார். அப்பொழுது நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று மத்தேயு 5:13-ல் சொல்லப்பட்ட வசனம் இவருடைய உள்ளத்தில் ஏதோ ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வந்ததாம். ஆண்டவர் தான் இந்த வசனத்தின் மூலமாக நமக்கு ஆலோசனை கொடுக்கிறார் என்பதை அறிந்துகொண்ட அம்மனிதர் உப்பு வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். ஆரம்பித்த சில நாட்களிலேயே, பலகோடிகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
சாதாரண உப்பு வியாபாரமாக இருந்தாலும், கர்த்தருடைய ஆலோசனைப்படி அவர் செயல்பட்டதால், மிகப்பெரிய வெற்றியை அந்த தொழிலின் மூலமாக பெற்றுக்கொண்டார்.
ஏசாயா 48:17
….பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
நம்முடைய வாழ்க்கைக்கு தேவையில்லாத, பிரயோஜனமற்ற ஆலோசனைகளை, தோல்வியையும், இழப்புக்களையும் தரும் ஆலோசனைகளை கர்த்தர் நமக்குத் தருகிறவர் அல்ல.
ஏசாயா 28:29ஆ
அவர் ஆலோசனையிலே ஆச்சரியமானவர், செயலில் மகத்துமானவர்.
கர்த்தர் நமக்கு ஒரு ஆலோசனையை கொடுக்கிறார் என்றால், அது ஆச்சரியமானதாக இருக்கும். மனிதனுடைய கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்.
கர்த்தருடைய ஆலோசனையை நம்பி நாம் செயல்படும்போது, மனிதர்களுடைய கண்களுக்கு அது வேடிக்கையாக தெரியலாம், ஆனால், அதன் முடிவு ஆச்சரியமானதாக இருக்கும். அநேகர் பார்த்து வியக்கக்கூடிய அளவிலே அது இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
3. வல்லமையுள்ள தேவன்
வல்லமையுடையவர் என்றால், அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை என்று பொருள். ஆதியாகமம் 17:1-ல் நான் சர்வ வல்லமையுள்ளவர் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சர்வ வல்லமையுள்ளவர் இந்த பதத்தில் சர்வ என்ற வார்த்தைக்குள் எல்லாம் அடங்கிவிடுகிறது. அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை என்பதைக் குறிக்கிறது.
1. மரித்தவர்களை உயிரோடு எழுப்ப அவரால் முடியும்.
2. கடலின் மேல் நடக்க அவரால் முடியும்.
3. காற்றையும், கடலையும் அதட்ட அவரால் முடியும்.
ஆபிரகாம்
கல்தேயா என்ற தேசத்தில், ஊர் என்ற பட்டணத்திலே வாழ்ந்து வந்த மனிதன் தான் ஆபிரகாம். ஆபிரகாமின் தகப்பன் தேராகு மிகப்பெரிய செல்வந்தன்.
அந்த நாட்களில் உலகில் வாழ்ந்த பல மனிதர்களின் இந்த கல்தேயர்கள் மாத்திரமே, நாகரீக வளர்ச்சியடைந்தவர்களாக இருந்தார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன. (சுமேரியன் நாகரீகம்). இந்த கல்தேயர்கள் நிலவு மற்றும் சூரியனை தங்கள் தெய்வமாக வணங்கி வந்தார்கள்.
ஆபிரகாமிடத்தில் சொத்துக்கள் ஏராளமாக குவிந்திருந்தாலும், தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும், கவலையும் ஒவ்வொரு நாளும் ஆபிரகாமை காயப்படுத்தியிருக்கும்.
தனக்கு ஓர் வாரீசு தேவை என்பதற்காக ஆபிரகாம் எத்தனையோ முயற்சிகளை எடுத்திருப்பார். இந்த நாட்களிலும் திருமணமாகி இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே, திருமண தம்பதிகளிடம், அநேகர் ஏதேனும் விசேஷம் உண்டா? என்று கேட்பதையும், ஒரு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்றால் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்வோம் என்று நினைக்கு அளவிற்கு நம்முடைய சமுதாயம் மாறிவிட்டது.
ஊர் என்ற பட்டணதத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாமும், தனக்கு ஓர் வாரீசு வேண்டும் என்பதற்காக எத்தனையோ தெய்வங்களை தேடியிருப்பார். எத்தனையோ பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பார். எவ்வளவோ பணத்தை செலவு செய்திருப்பார். எந்த முயற்சியாலும், ஆபிரகாமிற்கு ஓர் குழந்தையை கொடுக்க முடியவில்லை.
எனக்கு ஓர் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கலங்கி தவித்துக்கொண்டிருந்த ஆபிரகாமிற்கு, அவருடைய எழுபத்து ஐந்து வயதில், ஓர் அரசீரி கேட்கிறது.
ஆதியாகமம் 12:1,2
1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
இந்த வார்த்தையை கேட்ட ஆபிரகாம், உடனே புறப்படுகிறார். கடவுளே உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த நாட்டின் கடவுள். உங்களுடைய வல்லமை என்ன? எந்த ஒரு கேள்வியும் ஆபிரகாம் கேட்கவில்லை. ஆதியாகமம் 12:1-3 வரை ஆண்டவர் பேசுகிறார். நான்காம் வசனத்தில் ஆபிரகாம் தேசத்தை விட்டுப் புறப்பட்டார் என்று வாசிக்கிறோம்.
ஆபிரகாம் உடனே புறப்பட காரணம் என்னவென்றால், இவ்வளவு நாட்களாக அவன் ஏங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஏதோ ஓர் கடவுள் தருவேன் என்று சொல்லுகிறார். அப்படியானால், அவருக்கு உடனே கீழ்ப்படிய வேண்டும் என்று ஆபிரகாம் முடிவு செய்கிறார்.
ஆபிரகாம் கடவுளுடைய வார்த்தையை நம்பி தான் இத்தனை நாட்களாக வாழ்ந்த தேசத்தை விட்டு, பெயர் தெரியாத ஓர் இடத்திற்கு வந்துவிட்டார். அந்த இடத்தின் பெயர் கானான் என்று பின்பு அவர் அறிந்து கொள்ளுகிறார்.
கானான் தேசத்திற்கு வந்த பின்பு, ஆபிரகாம் ஒரு வாரம் காத்திருந்தார், ஒரு மாதம் காத்திருந்தார், ஒரு வருடம் காத்திருந்தார், தன் மனைவி சாராள் கருத்தரிப்பதற்காக எந்த அடையாளமும் அவளிடம் இல்லை. மீண்டும் ஆபிரகாமிற்குள் ஓர் கலக்கம் வந்திருக்கும். ஆபிரகாம் இடத்தில் நாம் இருந்திருப்போமானால், நிச்சயமாக இந்த கடவுளும் நம்மை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி, மீண்டுமாக நாம்முடைய சொந்த தேசத்திற்கு சென்றிருப்போம்.
ஒரு ஆண்டு இரண்டு ஆண்டாக மாறுகிறது. இரண்டு ஆண்டு ஐந்து ஆண்டாக மாறுகிறது. ஐந்து ஆண்டு பத்து ஆண்டாக மாறுகிறது. பத்து ஆண்டு இருபது ஆண்டாக மாறுகிறது.
சாராளின் கர்ப்பம் செத்துவிட்டது. இனி அவளால் குழந்தையை பெற்றெடுக்க முடியாது, நான் நம்பின கடைசி கடவுளும் என்னை கைவிட்டுவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது, எனக்கென்று ஓர் சந்ததி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆபிரகாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், ஆபிரகாமுடைய தொண்ணூற்று ஒன்பதாவது வயதில், மீண்டுமாய் ஓர் அசரீர அவருக்கு கேட்கிறது.
ஆதியாகமம் 17:1
ஆபிரகாமுக்கு தொண்ணூற்று ஒன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: நான் சர்வ வல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து உத்தமனாயிரு………
ஆபிராகம் எல்லாம் முடிந்துவிட்டது, இனி இந்த காரியம் நடைபெறாது என்று நினைக்கும் அந்த நேரத்தில் கடவுள் நான் சர்வ வல்லமையுள்ள தேவன். என்னால் செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை என்று வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம்.
முடியாததை முடியப்பண்ணுகிறவரே நம்முடைய ஆண்டவர். ஆபிரகாமிற்கு தொண்ணூற்று ஒன்பது வயதாகும்போது, சாராளின் வயது எண்பது ஒன்பது. எண்பத்து ஒன்பதாவது வயதில், கர்ப்பம் செத்துப்போன சாராள் கருவுற்று, தனது தொண்ணூராவது வயதில் ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.
ஆபிரகாமிற்கு கடவுள் நான் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை வெளிப்படுத்திவிட்டார். நம்முடைய வாழ்விலும் இனி இந்த காரியம் நடைபெறாது, இனி இந்த காரியத்தை யாராலும் மாற்ற முடியாது, இனி எனக்கு ஓர் எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க யாராலும் முடியாது, இனி என்னால் எதுவுமே முடியாது என்று நீங்கள் நினைத்தாலும், உலக மனிர்கள் சொன்னாலும், சர்வ வல்லமையுள்ள கடவுள் நிச்சயமாய் செய்து முடிப்பார். அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வருகின்ற புதிய ஆண்டில் நாம் முடிந்துபோனது என்று நினைக்கும் ஆசீர்வாதங்களையும், முடிந்துவிட்டது இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று நாம் நினைக்கும் காரியங்களையும் என் தேவன் நடத்திக்காட்ட வல்லமையுள்ளவராய் இருக்கிறார். ஏனென்றால் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்.
கடவுள் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை தங்கள் வாழ்வில் அனுபவித்த சிலர் இப்படிக் கூறுகிறார்கள்
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
செப்பனியா 3:17அ
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார்.
எரேமியா 50:34
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர். சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
4. நித்திய பிதா
1 தீமோத்தேயு 6:15ஆ
அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்.
நித்திய பிதா என்பதை அவர் ஒருவர் மாத்திரமே நம்முடைய பரம தந்தை. அவர் ஒருவர் மாத்திரமே கடவுள் என்று நான் புரிந்துகொண்டேன்.
பழமொழி
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று
உலக மனிதர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றக்கொள்கிறார்கள். ஆனால், அவர் ஒருவர் மாத்திரமே தெய்வம் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அநேக கிறிஸ்தவர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான கடவுள், உயிருள்ள கடவுள் இயேசு மாத்திரமே என்பதை அறிந்த பின்பும், நண்பர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, உறவினர்களைப் பிரியப்படுத்துவதற்காக மற்ற தெய்வங்களுக்கு முன்பாகவும் நின்று ஆராதனை செய்கிறதை நாம் பார்க்கிறோம்.
சரீரத்திலே பெலவீனம் வந்துவிட்டால், ஏதோ ஒரு தெய்வம் கோபித்துக்கொண்டது என்ற பயத்தில், மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடிச் செல்லும் கிறிஸ்தவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
நமக்கு ஒரே கடவுள் இருக்கிறார். அவரே நித்தியமானவர், அவரே நம்மை பரலோக ராஜ்ஜியத்தில் சேர்க்கிறவர் என்பதை நாம் உறுதியாய் நம்ப வேண்டும்.
எல்லா நதிகளும் கடைசியாக கடலிலே கலந்து விடுவதுபோல, எல்லா தெய்வங்களும் நம்மை பரலோகத்திற்கு அலைத்துச்செல்லும் என்று நாம் நம்புவது முற்றிலும் பொய்யான நம்பிக்கையாகும்.
பழமொழி:
நோய்க்கும் பார், பேய்க்கும் பார்.
இப்படி உலகத்தார் சொல்வதுபோன்று, ஆண்டவரிடம் விடுதலைக்காக, அற்புதத்திற்காக எதிர்காலத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கின்ற கிறிஸ்தவர்கள், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டு மந்திரவாதிகளையும் தேடிச்செல்கிறார்கள்.
உலகில் உள்ள மற்ற தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறவைகளை நாம் ஆராதிக்கும்போது, அவைகளை சேவிக்கும்போது ஒருவேலை நம்முடைய வேண்டுதல்களுக்கு பதில் கிடைக்கலாம். பிசாசுக்கும் வல்லமை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த ஒரு தெய்வத்தாலும் நம்மை பரலோகம் அழைத்துச் செல்ல முடியாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
யோவான் 14:6ஆ
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
நான் ஆராதிக்கக்கூடிய கடவுள் ஒருவரே நித்தியமானவர், நிரத்தரமானவர். அவரால் மாத்திரமே மீட்பு உண்டு, விடுதலை உண்டு, இரட்சிப்பு உண்டு என்று அறிந்துகொண்ட எந்த கிறிஸ்தவனும், விடுதலைக்காக, தேவைகளுக்காக, சுகத்திற்காக மற்ற தெய்வங்களை தேடிச் செல்ல மாட்டான். இந்த பதிவை வாசிக்கின்ற நீங்கள் நான் ஆராதிக்கின்ற கடவுள் ஒருவர் மாத்திரமே உண்மைக் கடவுள் என்று விசுவாசிக்கிறீர்களா?
5. சமாதான பிரபு
இன்றைக்கு சமாதானத்தைத் தேடி அழையும் மக்கள் கூட்டம் ஏராளம் ஏராளம். மனதிலே அமைதியைத் தேடி அமைதிக்காக புனிதப்பயணம் மேற்கொள்ளும் கூட்டம் ஏராளம் ஏராளம்.
என் வாழ்க்கையில் அமைதி கிடைக்காதா? சமாதானம் கிடைக்காதா? எங்கு சந்தோஷம் உண்டு? எங்கு சமாதானம் உண்டு? சந்தோஷத்தைக் காண, சமாதானத்தைக் காண நான் என்ன செய்ய வேண்டும் என்று புலம்புகின்ற ஜனங்கள் ஏராளம்.
நம்முடைய வாழ்வில் சமாதானம் கிடைக்க வேண்டுமானால், அமைதி கிடைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மாத்திரமே. ஏனென்றால் அவரே சமாதானப் பிரபு.
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
நம்முடைய கர்த்தரால் மாத்திரமே நமக்கு சமாதானத்தையும், அமைதியையும் தர முடியும். ஒருவேலை என்னுடைய குடும்பத்தில் சமாதானம் இல்லையே, சந்தோஷனம் இல்லையே, என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் சமாதானம் இல்லையே என்று நீங்கள் கலங்கி நிற்கலாம். சமாதானப் பிரபுவாகிய இயேசுவே என் உள்ளத்தில் வாரும், எனக்கு சமாதானம் தாரும் என்று அவரை நாம் அழைக்கும்போது, கர்த்தர் இந்த உலகத்தாரால் எடுத்துக்கொள்ள முடியாத மெய்யான சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நம்முடைய வாழ்வை நிரப்புவதற்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் நிருபத்திற்கு எழுதும்போது, கர்த்தருடைய வேதத்தில் எழுதியிருக்கிறபடி, நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்தபடி நீங்கள் வாழும்போது, சமாதானத்தின் தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்று எழுதுகிறார்.
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள். அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
எபேசியர் 2:14
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுரைத் தகர்த்து….
ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
நாம் இயேசுவினிடத்தில் வரும்போது நிச்சயமாகவே சாமாதானத்தையும், சந்தோஷத்தையும், நின்மதியையும் அவர் தருவதற்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
பெத்லகேமிலே பாலனாய் பிறந்த இயேசுவானவர், இந்த நாளில் நம்முடைய உள்ளத்தில், நம்முடைய இல்லத்தில் பிறப்பாரானால் அவர் நிச்சயமாகவே அவர் அதிசயங்களைக் காணப்பண்ண வல்லமையுள்ளவராய் இருக்கிறார். வழி இதுவே, இதில் நடவுங்கள் என்று சொல்லி, நமக்கு ஆலோசனைகள் கொடுக்க அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ளவராய், நாம் நினைப்பதற்கும் வேண்டுக்கொள்வதற்கும் அதிகமான காரியங்களை நம் வாழ்வில் செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார். அவர் ஒருவரே நித்தியமான தேவன், ஏக சக்ராதிபதி என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் என்று நம்மை அழைக்கிறார். அவர் உண்மையாய் தேடும்போது, நம்மையும் குடும்பத்தையும் சமாதானத்தின் பாதையிலே நடத்த அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
இந்த இயேசுவின் கரத்தில் நம்முடைய வாழ்க்கை அர்ப்பணிப்போம், அவர் நம்மை செம்மையான பாதையில் வழிநடத்தி, வர இருக்கின்ற கிறிஸ்துமஸ் நாட்களிலும், புத்திய ஆண்டிளும் நன்மையினாலும், கிருபையினாலும் முடிசூட்டுவாராக.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக... ஆமென்!.........
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.