================
தலைப்பு: பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்
================
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
பெற்றோராகிய நாம் நம்முடைய பிள்ளைகளை சரியான விதத்தில் நடத்தும்போது, அவர்கள் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பார்கள்.
பழமொழி:
ஐந்தில் வளையாது, ஐம்பதில் வழையாது.
என் பிள்ளையை கடவுளுக்கு ஏற்ற விதத்தில் நடத்துவதற்கு, ஒரு நல்ல பெற்றோராக என்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் ஆவியானவரின் துணையோடு அறிந்துகொள்வோம்.
1. நான் சரியாய் இருக்க வேண்டும்
நாம் கற்றுக்கொடுப்பதின் மூலமாக மாத்திரம் அல்ல, நம்முடைய செயல்பாடுகள் மூலம் நாம் நம்முடைய பிள்ளைகளை சரியான விதத்தில் வழிநடத்த வேண்டும். நான் சரியாய் வாழாமல், என் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் வாழாமல் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
பேச்சு
வீட்டில் தகப்பனார் இருக்கும்போது, யாராவது தகப்பனைத் தேடி வந்தால், அம்மா பிள்ளையை அழைத்து, அப்பா வேலைக்கு சென்றிருக்கிறார் என்று பொய் சொல்ல சொல்லுகின்ற பெற்றோரையும் நாம் பார்த்திருக்கிறோம்.
தகப்பனுக்கு தெரியாமல் தாய் தகப்பனுடைய பணத்தை எடுக்கும்போது பிள்ளை பார்த்துவிட்டால், அப்பாவிடம் சொல்லாதே நான் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் பெற்றோரையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இப்படி பிள்ளைகளுக்கு தவறான காரியங்களை நாம் கற்றுக்கொடுத்துவிட்டு பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டித்தால் அவர்கள் திருந்தமாட்டார்கள்.
நான் தினமும் மதுபானமும், சிகரெட்டும் உபயோகித்துவிட்டு, என் பிள்ளையைப் பார்த்து, நீ இந்த கெட்ட பழக்கத்தை செய்யாதே என்று சொன்னால் பிள்ளை கேட்க மாட்டான்.
நம்முடைய வாழ்க்கை முறை சரியானதாக இருந்தால் மாத்திரமே, நம்முடைய பிள்ளைகளும் சரியாய் வாழ்வார்கள்.
ஆபிரகாம்:
ஆபிரகாம் எகிப்திற்கு சென்ற போது, எகிப்தியர் என்னைக் கொன்றுபோட்டு என் மனைவி சாராளை எடுத்துக்கொள்வார்கள் என்ற பயத்தில், தன் மனைவி சாராளை இவள் என் சகோதரி என்று பொய் சொன்னான். (ஆதியாகமம் 12:12,13)
ஆபிரகாம் கேராரில் தங்கியிருந்தபோதும், கேராரின் ராஜாவாகிய அபிமலேக்கிடம் சாராள் என் சகோதரி என்று பொய் சொன்னான். (ஆதியாகமம் 20:2)
ஈசாக்கு
ஆதியாகமம் 26:6,7
6. ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
7. அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக் குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான்.
ஆபிரகாம் பொய் சொல்லும்போது ஈசாக்கு பிறக்கவில்லை. பின் நாட்களில் ஈசாக்கு கேராரில் குடியிருந்தபோது, தன் தகப்பனைப்போலவே ஈசாக்கும் தன் மனைவியை சகோதரி என்று பொய் சொன்னான். தகப்பனுடைய பாவம் பிள்ளையையும் தொடர்ந்தது.
தாவீது
2 சாமுவேல் 5:13
தாவீது யூதாவை ஏழு வருடம் ஆட்சி செய்யும்போது ஏழு பெண்களை திருமணம் செய்தான்.
சாலொமோன்
1 இராஜாக்கள் 11:3
தாவீதின் மகன் சாலொமோன் ஆட்சிக்கு வந்தபோது, 700 மனைவிகளையும், 300 மருமனையாட்டிகளையும் எடுத்தான்.
பெற்றோராகிய நாம் பிள்ளைகளுக்கு முன்பாக மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய வார்த்தைகள், செயல்கள் எல்லாவற்றையும் பிள்ளைகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பிள்ளைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, என்னுடைய வாழ்க்கை அவர்களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும்.
பிள்ளைகளின் வாழ்க்கையில் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அவர்கள் இந்த இடத்தில் என் பெற்றோர் என்ன முடிவெடுப்பார்கள், என்று யோசித்து செயல்பட வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறையின் மூலமாகவே நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
2. கர்த்தருக்குப் பயப்படுதலை கற்றுக்கொடுக்க வேண்டும்
சங்கீதம் 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள். கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
கடவுளுக்கு பயப்படும் பயத்தை பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு பிரியமில்லாத காரியத்தை நான் செய்தால் அவர் என்னை தண்டிப்பார் என்ற பயத்தை பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மற்ற மதத்தினர் கடவுள் பயத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். இதை செய்தால் சாமி கோபித்துக்கொள்ளும், இப்படி செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று மற்ற இறை நம்பிக்கை உள்ளவர்கள் பிள்ளைகளுக்கு கடவுள் பயத்த ஊட்டி வளர்க்கிறார்கள்.
ஆனால் கிறிஸ்தவ பெற்றோராகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கடவுளைக் குறித்த பயத்தைக் கற்றுக்கொடுக்கிறோமா?
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேதத்தை தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறோமா?
காலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு காரியத்தை துவங்கும் முன்பும் ஜெபித்து அக்காரியத்தை துவங்க வேண்டும். இதுபோன்ற கடவுளுக்கு பிரியமான காரியங்களை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாமே வேதம் வாசித்து, ஜெபிக்காத போது நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க முடியாது.
ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்கு சரியான நேரத்தில் வரவேண்டும். சொல்லப்படுகின்ற வார்த்தைகளை கவனித்து கேட்க வேண்டும். வார்த்தையின்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெற்றோர் ஆலயத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்திருப்பதையும், பிள்ளைகள் வீடியோ கேம் விளையாடுவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றவதையும் அநேக பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.
கடவுளுக்குரிய பயத்தை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பெரியவர்களாகும்போது கடவுள் இல்லை என்று, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
சிறுவயதிலிருந்தே நாம் பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டும்.
நீதிமொழிகள் 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
நாம் பிள்ளைகளை கண்டிக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். நான் என் பிள்ளையை கண்டிக்கும்போது பிள்ளைகள் இனி நான் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று தீர்மானம் எடுக்க வேண்டும்.
கண்டிப்பது நமது நோக்கம் அல்ல, பிள்ளைகளை திருத்துவது தான் நம்முடைய நோக்கம். நம்முடைய கண்டிப்பு எல்லைமீறி இருக்குமானால், பிள்ளைகள் தவற்றை திருத்திக்கொள்ள மாட்டார்கள், இந்த தவறை என் பெற்றோருக்கு தெரியாமல் நான் எப்படி செய்வது என்று குறுக்க வழியை யோசிப்பார்கள்.
நம்முடைய பிள்ளைகள் தங்களையும் அறியாமல் ஏதேனும் தவறு செய்யும்போது, அம்மா அப்பா இந்த தவறை நான் செய்துவிட்டேன் என்று தைரியமாய் பெற்றோரிடம் சொல்ல வேண்டும்.
என் பெற்றோரிடம் சொன்னால், என்னை தண்டிப்பார்கள், என்னை அடிப்பார்கள் என்று பயந்து, அவர்கள் செய்த குற்றத்தையும் மறைக்கும் அளவிற்கு நம்முடைய கண்டிப்பு இருக்கக்கூடாது.
பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி கண்டிக்க வேண்டும், எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்ற ஞானத்தை நாம் கர்த்தரித்தில் ஒவ்வொரு நாளும் கேட்க வேண்டும். பிள்ளைகளுக்காக ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்க வேண்டும்.
மனோவா
நியாயாதிபதிகள் 13:12
அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும். அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்.
அநேக ஆண்டுகளுக்கு பின்பாக கர்த்தர் மனோவாவிற்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுப்பதாக வாக்குக்கொடுத்தார். அப்பொழுது மனோவா: அந்த பிள்ளைளை எப்படி நான் வளர்க்க வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுகிறார்.
நாமும் நம்முடைய பிள்ளைகளை சரியான பாதையில் நடத்த வேண்டிய ஞானத்தை கர்த்தரிடம் கேட்க வேண்டும்.
உபாகமம் 6:6,7
6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்து பேசி,
கர்த்தருடைய வார்த்தைகளை நாம் ஒவ்வொரு நாளும் தியானித்தால் மாத்திரமே, வார்த்தைகள் நம்முடைய இருதயத்தில் இருக்கும். இருதயத்தில் இருக்கும் கர்த்தருடைய வார்த்தைகளை பிள்ளைகளுக்கு நாம் கருத்தாய் போதிக்க வேண்டும்.
3. நேரம் செலவிட வேண்டும்
சங்கீதம் 78:5
அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
பிள்ளைகளோடு நாம் நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்குச்சென்று வரும்போது, பள்ளியில் என்ன நடந்து, ஆசிரியர் என்ன கற்றுக்கொடுத்தார்? போன்ற காரியங்களை பிள்ளைகளிடத்தில் கேட்டு விசாரிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது, இதில் ஒருமணி நேரமாவது நாம் பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும். பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு செலுத்தாததினால் தான், பிள்ளைகள் எதிர்பாலினர் மீது ஆசைவைத்து, காதல் என்ற வலைக்குள் விழுந்துவிடுகிறார்கள்
பிள்ளைகளின் படிப்பிற்காக, எதிர்காலத்திற்காக இரவு பகலாக உழைக்கும் பெற்றோர், பிள்ளைகளின் மனநிலையைப் பார்க்க தவறிவிடுகிறார்கள். பெற்றோரின் பராமரிப்பு, கரிசனை இல்லாததால் அநேக பிள்ளைகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு நேராக கடந்து செல்லுகிறார்கள்.
குறிப்பாய் பெண் பிள்ளைகள் தங்களுடைய வாழ்வில் ஏற்படுகின்ற சில சிக்கல்களை யாரிடமாவது பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள், அதற்கு பெற்றோர் ஆயத்தமாக இல்லை. பிள்ளைகளின் சரீரத்தின் மீது அக்கரைகொண்டு, அவர்களுக்கு தேவைப்படுவதை வாக்கிக்கொடுக்கின்ற பெற்றோர், பிள்ளைகளின் மனதின் மீது அக்கரை கொள்வதில்லை. காரணம் பிள்ளைகளோடு அமர்ந்து பேச பெற்றோருக்கு நேரம் இல்லை.
கதை:
ஒரு மகள் தன் தகப்பனிடம் பேச வேண்டும் என்று மிகவும் பிரயாசப்பட்டான். ஆனால் அவள் தகப்பன் செவிகொடுக்க வில்லை. தகப்பன், அலுவலகத்திற்கு சென்று மிகவும் தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவார், வந்ததும் மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார். மகள் அப்பாவிடம் பேச வரும்போதெல்லாம், எனக்கு வேலை இருக்கின்றது பிறகு பேசுகிறேன் என்று சொல்லி தட்டிக்களித்துவிடுவார்.
ஒரு நாள் மகள் தன் அப்பாவிடம் சென்று, உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் என்று கேட்டாள். அதற்கு தகப்பன் ஒரு தொகையைச் சொன்னார். அந்த தொகையை மகள் கூட்டி, கழித்து பார்த்தால், ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வந்தது. மகள் தன் அறைக்கு ஓடினால், தன் சேர்த்து வைத்திருந்த தொகையை எண்ணிப் பார்த்தால், அதில் 150 ரூபாய் இருந்தது. மகள் அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு அவசரமாக ஒரு 100 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டாள். அப்பாவும் வேலை அதிகமாக இருக்கிறதே, இந்த பிள்ளை என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லி, 100 ரூபாயை கொடுத்துவிட்டார்.
அப்பாவிடம் 100 ரூபாயை வாங்கின மகள் தான் சேர்த்துவைத்த 150 ரூபாயையும் சேர்ந்து 250 ரூபாயை தன் தகப்பனிடம் கொடுத்து, அப்பா அடுத்த ஒரு மணி நேரம் நீங்கள் சம்பாதிக்க வேண்டிய பணத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன், அடுத்த ஒருமணி நேரம் என்னோடு பேசுவீர்களா என்று கேட்டாள்.
இன்றைக்கு உலகம் இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. பெற்றோரால் பிள்ளைகளோடு பேசுவதற்கு நேரம் இல்லை. பிள்ளைகளோடு பெற்றோர் நேரம் செலவிடவில்லை என்றால், பிள்ளைகள் வழிதவறி சென்றுவிடுவார்கள். பிள்ளைகள் எடுக்கும் தவறான முடிவுகளுக்கும் பெற்றோரே காரணமாக இருக்கிறார்கள்.
பிள்ளைகள் சரியான விதத்தில் வளர நாம் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் நடந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு கடவுளைக்குறித்த பயபக்தியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளோடு நேரம் செலவிடவேண்டும் என்று கற்றுக்கொண்டுடோம். தொடர்ந்து நம்முடைய பிள்ளைகளை கர்த்தருக்கு ஏற்ற விதத்தில் வழிநடத்துவோம். ஆண்டர் நம்மையும், நம்முடைய பிள்ளைகளையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஆமென்…..!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.