===========
யூதா புத்தகம் (பாகம் 5)
============
யூதா புத்தகம் பாகம் ஐந்து. இந்த ஐந்தாம் பாகத்தில் யூதா 17-25 வசனங்களைக் குறித்து நாம் தியானிப்போம். இந்த புத்தகத்தில் யூதா பெரும்பாலும் கள்ள உபதேசத்தைக் குறித்தும், கள்ள உபதேசிகளைக் குறித்தும் எழுகிறார்.
யூதா 17-23 வரை உள்ள வசனங்களில் ஊழியர்களுக்கான ஆலோசனையைக் குறித்து எழுதுகிறார். 24,25 ஆகிய வசனங்களில் ஆசீர்வாதத்தைக் கூறுகிறார்.
யூதா 17
நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
நீங்களோ பிரியமானவர்களே என்று, கர்த்தருடைய அழைப்பைப் பெற்று ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்களைப் பார்த்து யூதா சொல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட நாம் அனைவருமே ஊழியக்காரர்கள் தான்.
இவ்வளவு நேரம் கள்ள உபதேசிகளைக் குறித்து பேசின யூதா, இப்பொழுது ஆண்டவருக்காக உண்மையாய் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்களைப் பார்த்து, நீங்களோ பிரியமானவர்களே, அப்போஸ்தலர்கள் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள் என்று சொல்லுகிறார்.
யூதா 18
கடைசிக் காலத்தில் தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
இங்கே யூதா பரியாசக்காரர் என்று இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்து சொல்லவில்லை. யூதா புத்தகம் ஊழியர்களைக் குறித்து பேசும் புத்தகம். இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று, ஊழியம் செய்யும் ஊழியர்கள், தங்களுடைய சுய இச்சைகளுக்காக உபதேசத்தை மாற்றி பேசுகிறார்களே அப்படிப்பட்ட கள்ள உபதேசகர்களைத் தான் பரியாசக்காரர் என்று எழுதுகிறார்.
கடைசி காலத்தில் கள்ள உபதேசிகள் தோன்றுவார்கள். தோன்றுவார்கள் என்றால் அவர்கள் வானத்திலிருந்து கீழே விழுவார்களா? இல்லை. சபைக்குள்ளே இருந்து தான் எழும்புவார்கள்.
ஒரு காலத்திலே நான்றாக ஊழியம் செய்து கொண்டிருந்தவர்கள் தான், ஒரு கட்டத்தில் கள்ள உபதேசிகளாக மாறிவிடுகிறார்கள். காரணம் அவர்களுக்குள்ளாக இருக்கும் துன்மார்க்கமான இச்சை.
இச்சை என்றால் விபச்சாரம் மாத்திரம் அல்ல, பண இச்சை, பதவி இச்சை இவ்விரண்டு இச்சைகளாலும் சிலரை கள்ள உபதேசிகளாக மாற்றுகின்றார்கள்.
இரட்சிக்கப்பட்ட நாட்களில் நான் ஒன்றுமில்லை, நான் ஒரு புழுவைப் போல் இருக்கிறேன் என்று சொல்லி, ஆண்டவரிடத்தில் தங்களைத் தாழ்த்துவார்கள். ஆண்டவர் இவர்களை பயன்படுத்தி, இவர்களைக் கொண்டு பெரிய பெரிய காரிங்களை செய்யும்போது, அவர்களுக்குள்ளாக பெருமை வந்துவிடுகிறது. மற்றவர்கள் என்னை மதிக்கவேண்டும் என்ற பெருமை இவர்களுக்குள் வந்து விடுகிறது. அவர்களுடைய நடை, உடை, பாவனை அனைத்தும் பெருமையுள்ளவைகளாக மாறிவிடுகிறது.
மதிப்பு, கனம் இச்சை
நம்முடைய போலியான பேச்சுக்கள் மூலமாக நாம் பரிசுத்தத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. போலியான ஆடை, அலங்காரங்கள் மூலாக நாம் பரிசுத்தத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்படி போலியான நடிப்புகள் மூலம் நாம் மனிதர்களிடத்தில் கனத்தை பெற விரும்பக்கூடாது.
ஊழியம் செய்கிறவர்களை பிதா கனம்பண்ணுகிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். பிதாவே நம்மை கனம்பண்ணும்போது, மனிதர்கள் நம்மைக் கணம்பண்ணினால் என்ன? கனம் பண்ணாவிட்டால் என்ன?
மற்றவர்கள் என்னை கனம்பண்ண வேண்டும் என்ற இச்சையினால் அநேகர் கள்ள ஊழியர்களாக மாறிப்போகிறார்கள்.
பண இச்சை
முதலில் மிதிவண்டியில் ஊழியத்தை ஆரம்பிப்பார்கள். சில நாட்கள் சென்றதும், மோட்டார் பைக் வாங்குவார்கள். ஊழியம் கொஞ்சம் அதிகமாக வளர்ந்துவிட்டால், நான்கு சக்கர வாகனத்தை சொந்தமாக வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக மக்களை ஏமாற்றி, ஊழியத்திற்காக விதையுங்கள், கொடுங்கள், கர்த்தர் பத்து மடங்காக திரும்பக் கொடுப்பார் என்ற ஆசை வார்த்தைகளை பேசி, மக்களிடத்திலே பணத்தை வசூலிப்பார்கள்.
ஊழியர்களின் ஆசை வார்த்தையை நம்பி, விசுவாசிகளும், தாங்கள் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக சேமித்து வைத்த தொகையை, ஊழியரிடம் காணிக்கையாக கொடுப்பார்கள். இப்படி அநேக ஊழியர்கள் பண இச்சையினால் கள்ள தீர்க்கதரிசிகளாக மாறிப்போகிறார்கள்.
விசுவாசிகளுக்கு ஓர் கோரிக்கை: ஊழியக்காரன் நம்முடைய உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசுகிறான் என்றபடியினால், உணர்ச்சிவசப்பட்டு தயவு செய்து நீங்கள் காணிக்கையைக் கொடுக்க வேண்டாம்.
ஏதோ ஒரு ஊழியன் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் நம்முடைய பெயரைச் சொல்லிவிட்டால், நமக்கு இருக்கிற கடன் நமக்கு மறந்துபோய் விடுகிறது, அடுத்தவேலை உணவிற்கு வழியில்லையே என்பது மறந்துபோய்விடுகிறது, நமக்கு மருத்துவச் செலவுகள் அதிகம் இருப்பது மறந்துபோய்விடுகிறது, பிள்ளைகள் படிப்பிற்கான செலவுகள் அதிகம் இருப்பது மறந்துபோய்விடுகிறது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அந்த ஊழியன் வேதத்திலிருந்து சொன்ன வார்த்தை மாத்திரமே, நம் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. உடனே, எல்லா பணத்தையும் எடுத்து அந்த ஊழியரிடம் கொடுத்து விடுகிறோம்.
ஊழியர்களுக்கு காணிக்கை் கொடுப்பது தவறு அல்ல, உணர்ச்சிவசப்பட்டு கொடுக்க வேண்டாம் என்பதை விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
யூதா 19
இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
இப்படிப்பட்ட கள்ள உபதேசிகளைக் குறித்து, மூன்றுவித அடையாளங்களை யூதா எழுகிறார்.
பிரிந்துபோகிறவர்கள்
இவர்களால், வார்த்தையின்படி வாழுகிறவர்களோடு இணைந்து வாழ முடியாது. தங்களுக்கென தனி ராஜ்யம் அமைத்துக்கொள்வார்கள்.
தலைமைத்துவத்துக்குக் கீழ் அடங்கியிருக்க மாட்டார்கள். கணக்கு ஒப்புவிக்க மாட்டார்கள். தங்களுக்கு விருப்பமானபடி வாழ்வார்கள்.
ஜென்ம சுபாவத்தார்
அவர்களுடைய இச்சைகளின்படியே நடப்பார்கள். ஜென்ம சுபாவம் என்றால், இரட்சிக்கப்படும் முன்பு எப்படி வாழ்ந்தார்களோ, அப்படியே இப்பொழுதும் வாழ்வார்கள்.
அந்நியபாஷை பேசுவார்கள், தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், ஆனால் உண்மையான பரிசுத்தம் இவர்களிடத்தில் இருப்பதில்லை.
பரிசுத்த ஆவி எங்கே உண்டோ, அங்கே விடுதலை உண்டு என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் கள்ள உபதேசிகள் விசுவாசிகளை கட்டிப்போடுகிறவர்களாய் இருப்பார்கள். (எ.கா: உபவாசி, உடலை வருத்து, இப்படி நடந்துகொள், அப்படி நடந்துகொள்…..etc)
ஆண்டவர் விடுதலையைக் கொடுக்க வந்தார். பாவம் செய்வதற்கு விடுதலை அல்ல, கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பதற்கு விடுதலையைக் கொடுக்க வந்தார்.
யூதா 20
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
விசுவாசத்தின்மேல் உறுதியாய் இருப்பவன் தான் பரிசுத்தவான். வார்த்தையின்படி வாழ்பவன் தான் விசுவாசி. வார்த்தைக்கு உண்மையாய் இருப்பவன் தான் விசுவாசி.
நம்முடைய ஜெபங்கள் பரிசுத்த ஆவிக்குள்ளானதாக இருக்க வேண்டும். அப்படியானால், அந்நியபாஷையில் மாத்திரம் தான் ஜெபிக்க வேண்டும் என்பது அல்ல, அந்நிய பாஷையின் வரம் இருக்கிறவர்கள் அந்நிய பாஷையில் ஜெபிக்கலாம்.
அந்நிய பாஷையின் வரம் இல்லாதவர்கள் சாதாரண தமிழிலே ஜெபிக்கலாம். அந்நியபாஷையில் ஜெபிக்காதவர்கள், அந்நியபாஷையில் ஜெபிக்கிறவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. அந்நிய பாஷையில் ஜெபிக்கிறவர்கள், அந்நியபாஷையில் ஜெபிக்காதவர்களை விட எந்த விதத்திலும் பரிசுத்தவான்களும் அல்ல.
பரிசுத்த ஆவிக்குள் ஜெபிப்பது என்றால், உண்மையில் உணர்ந்து அழகாக, ஒழுங்கும் கிரமமுமாக ஜெபிப்பது ஆகும்.
யூதா 21
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
கடவுளிடத்தில் அன்பு உள்ளவன், கடவுளுக்கு விருப்பமான காரியத்தைச் செய்வான். கடவுளுக்கு விருப்பமில்லாத காரியத்தைச் செய்ய மாட்டான்.
நம்முடைய வாழ்வில் வார்த்தை, சிந்தனை, செயல்களிலே ஏதேனும் தவறான காரியங்கள் வரும். அவ்வப்போது, ஆண்டவரிடத்தில் மன்னிப்பைக் கேட்டு பெற்றுக்கொண்டு, இரக்கத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
யூதா 22
அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,
வசனத்தைப் போதிக்கிற ஊழியர்களைக் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும். அவர்கள் பேசக்கூடிய வார்த்தைகளை பகுத்தரியும் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த வாழ்க்கைப் பயணத்தில் கள்ளர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்பதை பகுத்து அறியும் அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நாம் எல்லோருக்கும் இரக்கம் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவையுள்ளவர்களுக்கு (சிலருக்கு) இரக்கம் பாராட்டுங்கள் என்று யூதா எழுதுகிறார்.
நம்மைச் சுற்றிலும் இரட்சிக்கப்படாத அநேகர் இருப்பார்கள். எல்லோரையும் நாம் இரட்சிப்புக்குள் வழிநடத்த முடியாது. சிலரை அக்கினியிலிருந்து இழுத்து விடுங்கள் என்று யூதா எழுதுகிறார். கர்த்தர் யாரை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை மாத்திரமே நாம் இரட்சிப்புக்குள் வழிநடத்த முடியும். அப்படி நாம் இரட்சிப்புகள் வழிநடத்தும்போது, பயத்தோடு நாம் அவர்களை இரட்சிப்புக்குள் நடத்த வேண்டும்.
யூதா 23
மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில் இன்று மாம்சம் தலைவிரித்து ஆடுகிறதை பார்க்க முடிகிறது. மாம்சக்கரை பட்டவர்களை விட்டு விலகுங்கள், அவர்களை தள்ளிவிடுங்கள் என்று யூதா எழுதுகிறார்.
ஆசீர்வாதம்
யூதா 24,25
24. வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.