============
யூதா புத்தகம் பாகம் நான்கு
============
யூதா புத்தகம் கள்ள உபதேசிகளை அடையாளப்படுத்தும் ஒரு புத்தகம். இது ஒரு தீர்க்கதரிசன புத்தகமுமாகும்.
புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை தீர்க்கதரிசன புத்தகம் என்று சொல்லுவோம். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் 22 அதிகாரங்கள் உள்ளது.
வெளிப்படுத்தின விசேஷம் எதிர்காலத்தில் உலகில் என்ன நடைபெறும் என்பதை தீர்க்கதரிசனமாக கூறுகிறது. ஆனால், யூதா புத்தகம் தற்போது சபையில் கள்ள உபதேசங்கள் எப்படி நுழைந்திருக்கிறது என்பதை கூறுகிறது.
யூதா 8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
கள்ள உபசேதகர்களை யூதா சொப்பனக்காரர்கள் என்று கூறுகிறார். சொப்பனம் என்பது ஆண்டவர் மனிதனோடு பேசுகின்ற வழிகளில் ஒன்றாகும். ஆதியாகமம் புத்தகத்தில் யாக்கோபு, யோசேப்பு போன்ற நபர்களோடு சொப்பனத்திலே ஆண்டவர் பேசினார். அந்த சொப்பனங்கள் நிரைவேறியது.
எகிப்தின் அரசன் பார்வோனுக்கு ஆண்டவர் சொப்பனம் கொடுத்தார். பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சாருக்கு ஆண்டவர் சொப்பனம் கொடுத்தார். இவை அனைத்தும் ஏற்ற நேரத்தில் நிறைவேறியது.
புதிய ஏற்பாட்டிலும் கூட அப்போஸ்தலர் நடபடிகளில் பேதுருவோடு ஆண்டவர் சொப்பனத்தில் பேசுகிறார். இதிலிருந்து சொப்பனம் என்பது ஆண்டவர் மனிதனோடு பேசுவதற்காக பயன்படுத்தும் வழிகளில் ஒன்று என்பதை நாம் அறிய முடியும்.
ஆண்டவர் சொப்பனத்தின் மூலமாகவும் மனிதர்களோடு பேசுகிறார் என்பதை நன்கு அறிந்த பிசாசானவனும், சொப்பனத்தின் மூலமாகவே மனிதர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
வேதம் இல்லாத காலத்தில் ஆண்டவர் சொப்பனங்கள் மூலமாக மனிதர்களோடு பேசினார். ஆனால் இந்த நாட்களில் நம் அனைவரிடமும் வேதம் இருக்கிறது. ஆண்டவர் சொப்பனத்தின் மூலமாகத்தான் மனிதர்களோடு பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இப்பொழுது நாம் காண்கின்ற சொப்பனங்கள் அனைத்தும், கர்த்தர் கொடுத்த சொப்பனங்கள் அல்ல. நான் கண்ட சொப்பனம், கர்த்தர் கொடுத்த சொப்பனமா? இல்லையா? என்று அறிந்துகொள்ள, அதுபோன்ற சொப்பனம் வேதத்தின்படி சரியானதா? வார்த்தையின்படியான சொப்பனமா? இதுபோன்ற சொப்பனத்தை வேதத்தில் ஆண்டவர் யாருக்கேனும் கொடுத்திருக்கிறாரா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வார்த்தைக்கு முரணான கருத்துக்களை நீங்கள் சொப்பனத்தில் பார்க்கிறீர்கள் என்றால், அது எவ்வளவு அர்த்தம் நிரைந்த சொப்பனமாக இருந்தாலும், அது கர்த்தர் கொடுத்த சொப்பனம் அல்ல.
இன்றைக்கு அநேக கள்ள உபதேசிகள் நான் ஒரு சொப்பனம் கண்டேன், ஆண்டவர் என்னை ஒரு ஜெப கோபுரம் கட்டி எழுப்பச் சொன்னார், ஆண்டவர் என்னை ஜெப ஆலயம் கட்டச் சொன்னார், ஆண்டவர் என்னை தேவாலயம் கட்டச் சொன்னார், ஆண்டவர் என்னை பள்ளிகூடம் கட்டச் சொன்னார், ஆண்டவர் என்னை கல்லூரி கட்டச் சொன்னார். அதற்கான காணிக்கையை நீங்கள் தான் தரவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
உண்மையில் அந்த ஊழியன் சொப்பனம் கண்டாரா? இல்லையா? என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது. காரணம் சொப்பனத்தை மற்றொரு நபர் பார்க்க முடியாது. ஏன், கணவன் கண்ட சொப்பனத்தை மனைவியே பார்க்க முடியாது. எவ்வளவு பரிசுத்தமான ஊழியர்களாக இருந்தாலும், கணவனும் மனைவியும் இணைந்து நாற்பது நாள் உபவாசமிருந்து சொப்பனத்திற்காக ஜெபித்தாலும், ஒருவர் கண்ட சொப்பனத்தை மற்றொருவர் அருகில் இருந்து கொண்டு பார்க்க முடியாது.
ஒருவர் நான் சொப்பனம் கண்டேன் என்று சொன்னால், அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், இல்லை அவர் சொப்பனம் காணவில்லை என்று சொல்லுவதற்கு நம்மிடம் எந்த ஆராதமும் இல்லை. உண்மையிலேயே அவர் சொப்பனம் கண்டாரா? என்று நாம் ஆராய்ந்து கண்டறியவும் முடியாது.
எனவே சொப்பனம் காணாத அநேகரும், சொப்பனம் கண்டதாக பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சொப்பனம் காண்கின்ற கள்ள உபதேசிகள் மூன்று காரியத்தை செய்கிறார்கள்.
முதலாவது மாம்சத்தை அசுசிப்படுத்துகிறார்கள்
சொப்பனம் என்ற பெயரிலே இச்சையான வார்த்தைகளை பேசி, ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்.
இரண்டாவதாக கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறார்கள்
அநேக கள்ள உபதேசிகள் தங்கள் படுக்கை அறைக்கு இயேசுவை அழைந்து வந்துவிடுகிறார்கள். இயேசு கிறிஸ்துவை Tourist Guide ஆக மாற்றிவிட்டார்கள். ஆண்டவர் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கே நான் யூதாஸ்காரியோத்தைப் பார்த்தேன். ஆண்டவர் என்னை பரலோகத்திற்கு அழைத்துச் சென்று, எலியாவின் அறையை, மோசேயின் அறையை எனக்குக் காண்பித்தார், Conference Room-யை காண்பித்தார் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வேதத்தில் ஆண்டவர் யாருக்கும் சொப்பனத்தின் மூலமாக பரலோகத்தையோ, நரகத்தையோ காண்பிக்கவில்லை.
ஆண்டவர் இப்படியெல்லாம் எனக்கு சொப்பனம் கொடுத்தார் என்று சொல்லி, பிதாவையும், கர்த்தத்துவத்தையும் இவர்கள் அசட்டைபண்ணுகிறார்கள்.
மகத்துவங்களைத் தூசிக்கிறார்கள்
மகத்துவங்கள் என்பது பரலோகத்தில் உள்ளவைகளைக் குறிக்கிறது. தேவதூதர்களைக் குறிக்கிறது. சில கள்ள உபதேசிகள் நான் தினமும் தேவதூதர்களை சந்திக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.
சிலர் தேவதூதர்களுக்கும் கட்டளையிடுவதுண்டு. என்னுடைய வீட்டை நீ காத்துக்கொள். என் பாதம் கல்லில் இடராமல் என்னை பார்த்துக் கொள் என்று சொல்லி, தேவதூதர்களுக்கும் கட்டளையிடுவார்கள்.
தேவதூதர்கள் நம்முடைய வேலைக்காரர்கள் அல்ல, பிதாவின் வேலைக்காரர்கள். அவருடைய கட்டளையை மாத்திரமே அவர்கள் நிரைவேற்றுவார்கள். இதை அநேகர் உணர்ந்துகொள்வதில்லை.
நம்மைக் காத்துக்கொள்வதற்கு ஆண்டவர் அவருடைய தூதர்களுக்கு கட்டளைகொடுக்கலாம். ஆனால், நாம் ஒருநாளும் தேவதூதர்களுக்கு கட்டளை கொடுக்க முடியாது. தேவதூதர்களோடு நாம் பேசவும் முடியாது. தேவதூதர்களிடத்தில் நாம் ஜெபிக்கவும் முடியாது.
நான் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன். என்றைக்கும் இல்லாத அளவிற்கு அன்று தண்ணீர் அதிகமாக ஓடியது. நான் ஏன் இப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தேவதூதன் எனக்கு வந்து அதைக் குறித்து விளக்கம் கொடுத்தார் என்று சொல்லும் நபர்களையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்டவர்கள் மகத்துவத்தை தூஷிக்கிறார்கள்
இப்படிப்பட்ட ஊழியர்களைத் தான் கள்ள உபதேசிகள் என்று யூதா சொல்லுகிறார். அவர்கள் ஜெபிக்கும்போது பிசாசுகள் ஓடலாம், அற்புதங்கள் நடக்கலாம், வியாதியிலிருந்து சுகம் கிடைக்கலாம். பிசாசுகளுக்கும் சுகம் கொடுக்க முடியும், அற்புதம் செய்ய முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யூதா 9
பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத்துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
இந்த வசனத்தை யூதா ஏன் எழுதுகிறார் என்றால், மோசேயின் சரீரத்தைக் குறித்து சொல்லுவதற்காக அல்ல, பிசாசுக்கும் மிகாவேலுக்கும் இடையே இருக்கும் சண்டையை சொல்லுவதற்காக அல்ல.
மோசேயின் சரீரத்தைக் குறித்து நாம் துக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவர் மோசேயை நேபோ மலையின் மேல் வரச்சொன்னார். அங்கிருந்து கானான் தேசத்தைக் காட்டினார். அதற்கு பின்பு, மோசேயே நீ கானான் தேசத்திற்குள் நுழைய முடியாது, உன் வாழ்நாட்கள் முடிந்துவிட்டது என்று சொல்லுகிறார். மோசே மரித்த பின்பு, கர்த்தர் அந்த பள்ளத்தாக்கிலே மோசேயை அடக்கம் செய்தார்.
ஏன் மோசேயின் சரீரத்தை கர்த்தர் அடக்கம்பண்ணினார். எங்கே அடக்கம் பண்ணினார். அந்த சரீரத்திற்கு இனி நடக்கப்போவது என்ன? இவைகளெல்லாம் நமக்கு தேவையில்லாத காரியங்கள். நமக்கு தேவையானது என்றால், ஆண்டவர் வேதாகமத்தில் அதைக் குறித்து எழுதியிருப்பார்.
மீகாவேலுக்கும் சாத்தானுக்கும் இடையே தர்க்கம் நடைபெறுகிறது. இதைக்குறித்து நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதை வைத்துக்கொண்டு சிலர், வான மண்டலங்களில் யுத்தம் நடைபெறுகிறது. அதற்கு நாமும் பங்குள்ளவர்களாய் இருக்கிறோம். மிகாவேல் தூதனுக்காக நாமும் மன்றாடி ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
மிகாவேல் தூதனுக்கும் சாத்தானுக்கும் இடையே அடிக்கடி தர்க்கம் நடந்திருக்கிறதை வேதத்தில் நாம் பார்க்க முடியும். முன்னே இருவரும் தேவனுடைய சமுகத்தில் ஒன்றாக இருந்தவர்கள். சாத்தானும் முன்பு தேவதூதனாக இருந்தவன்.
லூசிபர் பெருமையினால் கீழே விழுந்துபோனார். சாத்தானாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மிகாவேல் தூதன், பிரதான தூதனாக அன்றும் இன்றும் பரலோகத்தில் இருக்கிறார்.
அவ்வப்போது மிகாவேலுக்கும் சாத்தானுக்கும் இடையே தர்க்கங்கள் வருவது உண்டு. ஏன் வருகிறது? எப்போது வரும்? எப்படி வரும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? இவையெல்லாம் நமக்குத் தேவையில்லாத காரியங்கள்.
மிகாவேலுக்கும் சாத்தானுக்கும் தர்க்கம் வந்தபோது, சாத்தானை திட்டுவதற்கு மிகாவேலுக்கு வார்த்தைகள் வரவில்லை. எனவே ஆண்டவரே உன்னை கடிந்துகொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மிகாவேல் கடிந்துகொள்ள வேண்டிய சாத்தானையே கடிந்துகொள்ளவில்லை. ஆனால் நீங்கள் தேவதூதர்களை உங்கள் வீட்டு வேலையாள் போல் வேலைவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் யூதா சொல்லுகிறார்.
இதை வைத்துக்கொண்டு மிகாவேலே சாத்தானை கடிந்துகொள்ளவில்லை. நம்மால் எப்படி கடிந்துகொள்ள முடியும் என்று நாம் யோசிக்கக்கூடாது.
சாத்தானைக் கட்டவும், பிசாசுகளைத் துரத்தவும் ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
யூதா இதை ஏன் எழுதுகிறார் என்றால், மிகாவேல் சாத்தானையே கடிந்துகொள்ளவில்லை. ஆனால் சில ஊழியர்கள் தேவதூதர்களை கடிந்துகொள்வதுண்டு. ஏன் என்னுடைய பிள்ளையை பாதுகாத்துக்கொள்ளவில்லை, ஏன் என் வீட்டைப் பாதுகாத்துக்கொள்ளவில்லை என்று சிலர் தூதர்களையும் கடிந்துகொள்வதுண்டு. எனவே தான் யூதா இப்படி எழுதுகிறார்.
யூதா 10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள். புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
கள்ள உபதேசிகள் தங்களுக்குத் தெரியாத ஆவிக்குறிய காரியங்களைப் பேசி, அவைகளை தூஷிக்கிறார்கள்.
ஒரு பிரபலமான ஊழியர் இருக்கிறார் என்றால், அவர் வீட்டிற்கு வராத, அவருடைய வீட்டைப் பார்த்திராத ஒருவர், அவருடைய வீட்டைப் பார்த்ததுபோலவே, அவர் வீட்டில் அத்தனை அரைகள் இருக்கிறது, இவ்வளவு விலையுயர்ந்த குளிர்சாதனம் இருக்கிறது என்று மிகைப்படுத்தி ஒருவர் பேசுவாரானால், அவர் அந்த ஊழியரை தூஷிக்கிறார்.
அதைப்போலவே அந்த ஊழியரிடம் ஓரளவு வசதிகள் இருந்தும், அந்த ஊழியர் மிகவும் கஷ்டப்படுகிறார், அவருடைய வீட்டில் ஒன்றுமே இல்லை. கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும், அது அந்த ஊழியரை தூஷிப்பதாக பொருள்.
யார் ஒருவர் மற்றவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவரைப் பற்றி அதிகம் பேசினாலும், குறைய பேசினாலும், அது அவரை தூஷிப்பது ஆகும்.
இன்றைக்கு கள்ள உபதேசிகள் பார்க்காததைப் பார்த்ததாக பேசுகிறார்கள். நான் பரலோகத்திற்கு சென்றேன், அங்கே அருமையான பெரிய வடிவில் மேஜையைப் பார்த்தேன், பரலோகத்தில் உள்ள ஒவ்வொரு அரையும் எப்படி இருக்கிறது என்று சுற்றிப் பார்த்தேன் என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பரலோகத்தையே தூஷிக்கிறார்கள்.
தேவதூதர்களைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாது. தேவதூதர்களைப் பற்றி எனக்கு தெரியும் என்று ஒருவர் சொல்வாரானால், அவர் பொய்யராக இருப்பார். ஆண்டவர் பரலோகத்தைப் பற்றியோ, தேவதூதர்களைப் பற்றியோ நமக்கு விளக்க விரும்பவில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை.
நமக்கு தெரியாத காரியங்களைக் குறித்து நாம் பேசினால் நிச்சயமாக ஒன்று குறைத்தோ, அல்லது கூட்டியோ பேசுவாம். அப்படி நாம் பேசும்போது, நாமும் தூஷிக்கிறவர்களாக மாறிவிடுகிறோம்.
கள்ள உபதேசிகள் மிருகத்தைப்போன்றவர்கள் என்று 10-ம் வசனத்தில் வாசிக்கிறோம். எந்த மிருகத்தைக் குறிக்கிறது என்றால், எல்லா மிருகங்களையும் எடுத்துக்கொண்டால், பெண் விலங்கு பருவத்தை அடைந்த உடன், அந்த மிருகத்திலிருந்து ஒரு திரவம் வெளியேரும். இதை அறிந்த ஆண் மிருகங்கள் அனைத்தும் அந்த பெண் மிருகத்தோடு இணைய போட்டி போடும். அந்த நேரத்தில் அந்த ஆண் மிருகங்களுக்கு எவ்வளவு சுவையான உணவைக் கொடுத்தாலும், அது அதை தள்ளிவிட்டு, அந்த பெண் மிருகத்தோடு இணைவதையே விரும்பும். இப்படிப்பட்ட மிருகத்தைப்போன்றவர்கள் என்றே யூதா சொல்லுகிறார்.
இப்படிப்பட்ட கள்ள உபதேசிகளுக்கு, நீங்கள் பேசுவது தவறு என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவது இல்லை. தாங்கள் பேசுவதுதான் சரி என்று சொல்லி, அதை நிரூபிப்பதற்கு சில வசனங்களையும் எடுத்துக்காட்டுவார்கள்.
இப்படிப்பட்ட கள்ள உபதேசிகள் தங்களுக்குத் தெரிந்தவைகளாலேயே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். கள்ள உபதேசிகளுக்கு சத்தியம் என்ன என்பது தெரியாது. வேதாகமத்தில் தங்களுக்குத் தேவையான வசனங்களை மாத்திரம் பொருக்கி எடுத்து வைத்துக் கொள்வார்கள். தங்களுக்குத் தெரிந்த குறுகிய கொஞ்ச வசனத்தை வைத்துக்கொண்டு தங்களையே கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
யூதா 11
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
கள்ள உபதேசிகள் எப்படிப்பட்டவர்கள் என்று மூன்று வேத உதாரணங்களை யூதா சுட்டிக்காட்டுகிறார்.
1. காயீனின் வழி
காயீன் ஆண்டவருக்கு பிரியமான காணிக்கையை கொடுக்கவில்லை. எனவே ஆண்டவர் அவனுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆபேல் நல்லவனா? கெட்டவனா நமக்குத் தெரியாது. அவனுடைய காணிக்கையை ஆண்டவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். காயீன் தன் சகோதரன் ஆபேலை அடித்த அடியில், ஆபேல் மரித்துப்போனான்.
கள்ள உபதேசிகள் எப்படி போதிப்பார்கள் என்றால், தங்களின் திருப்திக்காக மாத்திரமே போதிப்பார்கள். என்னுடைய உபதேசத்தைக் கேட்கிற மக்கள் வீணாய் போவார்களே என்று யோசிக்க மாட்டார்கள்.
கள்ள உபதேசிகள் காயீனைப் போல தங்கள் சகோதரர்கள் கள்ள உபதேசத்தினால் அழிந்துபோவதைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள்.
2. பிலேயாம் தீர்க்கன் (எண்ணாகமம் 22,23)
மோவாபின் ராஜாவாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பிலேயாமை அழைத்தான். பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து வாயைத் திறந்தபோது, சாபத்திற்கு பதிலாக ஆசீர்வாதம் வந்தது. ஆசீர்வாதத்தைப் பேசி முடித்த பின்பு, பிலேயாம் யோசிக்கிறார், ஜனங்களை சபித்திருந்தால் நமக்கு கூடுதலாக பணம் கிடைத்திருக்குமே, நாம் ஆசீர்வதித்துவிட்டோமே என்று நினைத்து, பாலாக் ராஜாவை தனியே அழைத்து ஒரு ஆலோசனை கொடுத்தார் பிலேயாம்.
ராஜாவே உங்கள் தேசத்தில் உள்ள வேசிகள் அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு சிறப்பான உடை உடுத்தி, அவர்களை இஸ்ரவேல் தேசத்திற்குள் அனுப்புங்கள். இஸ்ரவேல் தேசத்தார் விபச்சார பாவத்தில் விழுந்த பின்பு, அவர்களை விக்கிரக ஆராதனைக்குள்ளே நடத்திவிடலாம் என்று ஆலோசனை கொடுத்தார்.
பிலேயாமின் ஆலோசனைப்படி பாலாக் செய்தான். இதனால் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்கள் அழிந்துபோனார்கள்.
கள்ள உபதேசிகள் பிலேயாமைப்போல மக்களை வேண்டுமென்றே பாவத்தில் விழ வைத்து அழிந்துபோக வைப்பார்கள். மக்கள் மத்தியில் பயத்தைக் கொண்டுவருவார்கள். போலியான வாக்குத்தத்தத்தைக் கொடுப்பார்கள்.
என்ன போலியான வாக்குத்தத்தம் என்றால், என்னுடைய ஊழியத்திற்கென்று நீங்கள் விதைத்தால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். பெரிய அருவடையை பெற்றுக்கொள்வீர்கள். பொருளாராத்தில் உயர்வைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லுவார்கள்.
கள்ள உபதேசி பிலேயாமைப்போல அநீதத்தின் கூலியை விரும்புவான்.
3. கோராவின் எதிர்ப்பு
மோசேயின் காலத்தில் கோரா என்னும் ஓர் குடும்பம் இருந்தது. மோசே, ஆரோனையும் அவருடைய வம்சத்தையும் ஆசாரியர்களாய் ஏற்படுத்தினபோது, இந்த கோராகின் குடும்பத்தார் எங்களுக்கும் பதவி வேண்டும் என்று மோசேயோடு போராடுகிறார்கள்.
கோராகும் அவன் குடும்பத்தாரும், கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட மோசேயின் தலைமைத்துவத்திற்கு எதிர்த்து நின்றார்கள். கடைசியில் பூமி தன் வாயைப் பிளந்து, அவர்கள் அனைவரையும் விழுங்கிக்கொண்டது.
கள்ள உபதேசிகள் உண்மையான வேதத்தின்படி ஏற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு அடங்கியிருக்க மாட்டார்கள். தங்கள் வரவு செலவுகளை கணக்குக் கொடுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கள்ள உபதேசிகளைத் தான் யூதா எச்சரித்துப் பேசுகிறார்.
யூதா 12,13
12. இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள். இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும்,
13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
கள்ள போதகன் ஒருபோதும் தன்னைக் கள்ளபோதகன் என்று சொல்லுவதில்லை. அவனுடைய நடை, உடை, பாவனைகளைப் பார்க்கும்போது அருமையான தேவ மனிதர் போலவே தெரியும். விசுவாசிகளுக்கு இவர் கள்ள உபதேசி என்று கொஞ்சமும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
விசுவாசிகள் இவர்களை தங்கள் விருந்துகளுக்கு அழைக்கும்போது, உடனே வந்து விடுவார்கள். கொஞ்சமும் பயமில்லாமல் விருந்துகளில் கலந்து கொள்ளுவார்கள்.
கள்ள உபதேசிகள் தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறார்கள். மேய்ப்பனுக்குக் கீழ் அடங்கியிருக்க மாட்டார்கள்.
எவர் ஒருவர் எனக்கு தலைமை மேய்ப்பன் இயேசு மட்டுமே. நான் எந்த தலைமைத்துவத்திற்கும் அடங்கியிருப்பதில்லை என்று சொல்லுகிறாறோ, அவர் கள்ள உபதேசி.
கள்ள உபதேசிகள் மேகத்தைப்போல அங்கும் இங்கும் அழைந்து திரிந்துகொண்டிருப்பார்கள். சில கள்ள உபதேசிகள் வேற்று மத தெய்வங்கள் இருக்கும் இடத்திற்கும் சென்று வருவதை நாம் கேள்விப்படுகிறோம்.
இரண்டு தரம் செத்த மரத்தைப்போல, ஆவியில் செத்துப்போனவர்களாக கள்ள உபதேசிகள் இருக்கிறார்கள்.
கடல் அலைகள் நிலையாக இருப்பதில்லை. அதைப்போலவே கள்ள உபதேசிகளும் நிலையான இடத்தில் இருக்க மாட்டார்கள்.
நட்சத்திரங்கள் என்பது எரிகற்களைக் குறிக்கிறது. எரிகற்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லும், எங்குவேண்டுமானாலும் விழும். அதைப்போலவே கள்ள உபதேசிகளும் கட்டுப்பாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்று யூதா எழுதுகிறார்கள்.
இப்படிப்பட்ட கள்ள உபதேசிகளுக்காக என்றென்றைக்கும் காருளிளே வைக்கப்பட்டிருக்கிறது.
யூதா 14,15
14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்.
15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
ஏனோக்கு என்பவர் நோவாவிற்கு முன்பு இருந்தவர். அவர் தீர்க்கதரிசனமாக எழுதினாரா? தீர்க்கதரிசனமாக சொன்னாரா? என்பது நமக்குத் தெரியாது.
ஏனோக்கு புத்தகம் எழுதினாரா என்று நமக்குத் தெரியாது. அப்படி ஒருவேலை அவர் புத்தகம் எழுதியிருந்தாலும், நோவா காலத்து வெள்ளத்தில் அவை அழிந்திருக்கும். ஆனால் யூதா சொல்லுவதை வைத்துப் பார்க்கும்போது, ஏனோக்கு ஏதோ ஒன்று சொல்லியிருக்கிறார் என்று நமக்குத் தெரிகிறது.
ஏனோக்கு சொன்னது யூதாவுக்கு எப்படி தெரியும் என்றால், ஆவியானவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஏனோக்கு என்ன சொன்னார் என்று யூதா நமக்கு என்ன சொல்லுகிறாரோ, அது மாத்திரம் நமக்குத் தெரிந்தால் போதும்.
ஏனோக்கு ஏன் அப்படிச் சொன்னார், எந்த காலத்தில் அப்படிச் சொன்னார், ஏனோக்கு சொன்னாரா? எழுதினாரா? இப்படி தேவையில்லாத ஆராய்ச்சி செய்வது நமக்கு அவசியமற்ற ஒன்றாகும்.
ஆதாமுக்கு பின் ஏழாவது தலைமுறையில் வந்தவர் தான் ஏனோக்கு. ஏனோக்கின் ஆயுசு நாட்கள் முன்னூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு மரிக்கவில்லை, தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணாமல் போனார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 5:23,24)
கடைசி காலத்தில் கள்ள உபதேசிகள் எழும்புவார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவால் தண்டிக்கப்படுவார்கள் என்று ஏனோக்கு சொன்னதாக யூதா எழுதுகிறார்.
இங்கே யூதா என்ன சொல்ல வருகிறார் என்றால், கடைசி காலத்தில் கள்ள உபதேசிகள் எழும்புவார்கள். அவர்களை இயேசுவானவர் தண்டிப்பார் என்று, இன்றைக்கு நேற்று அல்ல, ஏனோக்கின் காலத்திலேயே ஆண்டவர் தீர்க்கரிசனமாக உரைத்திருக்கிறார் என்று யூதா சொல்லுகிறார்.
கள்ளப்போதகர்கள் மீது ஆண்டவருக்கு பயங்கர கோபம் இருக்கிறது. நிச்சயமாக ஆண்டவர் அவர்களை தண்டிப்பார்.
யூதா 16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள். இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும். தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
ஒவ்வொரு விசுவாசிக்கும் யார் கள்ள போதகன்? யார் நல்ல போதகன் என்று கண்டு பிடிப்பதில் மிகப்பெரிய குளப்பம் ஏற்படுவதுண்டு. யார் கள்ளப்போதகன் என்று, யூதா ஐந்து காரியங்களை எடுத்துரைக்கிறார்.
1. முறுமுறுக்கிறவர்கள்
இவர்களிடத்தில் உண்மையான சந்தோஷம் இருப்பதில்லை. எந்த காரியம் நடந்தாலும், இப்படி நடந்துவிட்டதே என்று முறுமுறுத்துக்கொண்டே இருப்பார்கள். இருப்பதில் திருப்பதியில்லாமல் இருப்பார்கள்.
2. முறையிடுகிறவர்கள்
இவர்கள் எங்களுடைய தலைமை மேய்ப்பர் சரியான நபர் இல்லை. எங்களுடைய ஆலோசனைக் குழு சரியான முடிவுகளை எடுப்பதில்லை. அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தான் முறையிடுகிறவர்கள்.
3. தங்கள் இச்சையின்படி நடப்பார்கள்
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சைகளின் படி நடந்துகொள்வார்கள். தங்கள் இச்சைகளை நிரைவேற்ற முடிவுகள் எடுத்து, காரியங்கள் செய்துவிட்டு, ஆண்டவர் தான் இதைச் செய்யச் சொன்னார் என்று சொல்லுவார்கள்.
4. இறுமாப்பானவைகளைப் பேசுவார்கள்
நான் பெரிய ஊழியக்காரன். ஆண்டவரோடு நான் முகமுகமாய்ப் பேசுவேன். வேதம் உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். நான் நாற்பது நாள் உபவாசமிருந்து ஜெபிக்கும் பரிசுத்தவான். நான் ஒவ்வொரு நாளும் அப்படி ஜெபிப்பேன். நான் இப்படி ஜெபிப்பேன் என்று எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி பெருமையாக பேசுகிறவன், இவைகளில் ஒன்றையும் செய்ய மாட்டான். செய்கிறவன் சொல்ல மாட்டான்.
5. தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்
யாரேனும் விசுவாசிகளைப் பார்த்தால் அவர்களிடம் ஏதேனும் கிடைக்கும் என்று, புகழ்ந்து பேசுவார்கள். அவர்கள் செய்யாத காரியங்களையும் செய்ததாக சொல்லி, நீங்கள் அவ்வளவு நல்லவராமே உங்களைக் குறித்து, நான் எவ்வளவு சிறப்பாக கேள்விப்பட்டிருக்கிறேன் என்று முகஸ்துதி செய்வார்கள். இப்படி தங்கள் நலனுக்காக பிறரைப் போலியாக புகழுவார்கள்.
யூதா புத்தகம் நான்காம் பாகத்தில் கள்ள போதகர்களைக் குறித்து மேலும் பல காரியங்களை அறிந்துகொண்டோம். மீதமுள்ள வசனங்களைக் குறித்து அடுத்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.