Type Here to Get Search Results !

கிறிஸ்தவ வாழ்வில் போராட்டம் | Struggle in the Christian Life | blessing gospel sermon | வாழ்வை மாற்றும் அற்புத செய்தி | Jesus Sam

==========
தலைப்பு: போராட்டம்
===========


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

யோபு 7:1அ
    பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ?

யோபு 10:17ஆ
    போராட்டத்தின் மேல் போராட்டம் அதிகரிக்கிறது.

போராட்டம் என்ற தலைப்பின் மூலமாக இந்த பதிவில் கர்த்தருடைய வார்த்தையை நாம் தியானிப்போம்.

இந்த கடைசி காலத்தில் உலகப்பிரகாரமாக எதைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நம்முடைய முன்னோர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். நம்முடைய பெற்றோர் உணவுக்காக போராடினார்கள். நாம் இப்பொழுது வேலைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய பிள்ளைகள் பிற்காலத்தில் உயிருக்காகவே போராடிக்கொண்டிருப்பார்கள். இப்படித்தான் இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.

நமக்கு முறையாக கிடைக்க வேண்டிய உணவையும், தண்ணீரையும் கூட போராடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவலநிலை இன்று உருவாகிவிட்டது.

இப்படி உலகப்பிரகாரமாக எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்களாகிய நம்முடைய ஆவிக்குறிய வாழ்வில் காணப்பட வேண்டிய போராட்டங்கள் என்ன என்பதைக் குறித்து இந்த பதிவில் தியானிப்போம்.

1. மனதில் வருகிற போராட்டம்:
பவுலின் மனதில் உள்ள போராட்டம்
ரோமர் 7:23
    என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயங்களில் இருக்கக் காண்கிறேன். அது என் அவயங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

ரோமர் 7:18-25 வரை உள்ள வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய போராட்டதத்தைக் குறித்து எழுதுகிறார். நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்கிறேன். நான் செய்யவில்லை, எனக்குள் இருக்கின்ற பாவம் அப்படிச் செய்ய வைக்கின்றது என்று பவுல் சொல்லுகிறார்.

பவுலின் மன போராட்டம் சரியானதுவே. நன்மை செய்ய விரும்பி, அதை செய்ய முடியாமல் போராடுகிறார்.

நம்முடைய போராட்டம் எதற்கானதாக இருக்கிறது?
மனதில் போராட்டம் அதாவது மன அழுத்தம் வர காரணம் என்னவென்றால், தேவையற்ற காரியங்களை மனதில் வைத்துக்கொண்டு, தேவையான காரியங்களை மனதிலிருந்து எடுத்து விடுகிறோம். நம்முடைய போராட்டத்திற்கு இதுவே காரணமாக இருக்கிறது.

ஒருவர் நமக்குச் செய்யும் நன்மைகளை நாம் சீக்கிரத்தில் மறந்துவிடுகிறோம். ஆனால் ஒருவர் நமக்கு விரோதமாய் தீமை செய்வாரானால், நம்மை காயப்படுத்துவாரானால், அதை நாம் மனதில் வைத்துக்கொண்டு நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பிறர் நமக்கு செய்த காரியங்களை மனதில் நிறுத்தி, அதை அசைபோட்டுக் கொண்டே இருப்பது நம்முடைய சரீரத்திற்கு பாதிப்பைத்தான் கொண்டு வருகிறது. நமக்கு விரோதமாய் செயல்பட்டவர்கள், காரியத்தை நடப்பித்தவர்கள் சந்தோஷமாக, கவலையின்றி இருப்பார்கள். அதை நினைத்து, நினைத்து நாம் தான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

முதலாவது நம்முடைய போராட்டம் நம்முடைய மனதில் இருக்க வேண்டும். நன்மையான, நேர்மறையான காரியங்களை மாத்திரம் மனதில் நிறுத்திக்கொண்டு, தேவையற்ற, நம்முடைய மனதை காயப்படுத்தக்கூடிய காரியங்களை மனதிலிருந்து தூரமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

1 பேதுரு 1:13அ
    நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

எனவே தான் பேதுரு, மனதின் அறையைக் கட்டிக்கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.

காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், நீதித்துறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொள்ளுகிறவர்கள். இவர்கள் அனைவரும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தங்கள் இருதயத்திற்குள் கொண்டு செல்வதில்லை. கொண்டு செல்வார்களானால், அவர்களால் நின்மதியான வாழ்வு வாழ முடியாது.

பிரபலமான மனிதர்கள் சினிமா நடிகர்,. நடிகைகள், அரசியல் வாதிகள் இவர்களைக் குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் பலவிதங்களில் தவறான வார்த்தைகளைச் சொல்லி பேசுவார்கள் (விமர்சிப்பார்கள்). ஆனால், அவர்கள் அதை தங்கள் இருதயத்திற்குள் கொண்டு செல்வதில்லை.

நல்ல கருத்துக்களை நமது இருதயத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும், தவறான கருத்துக்கள், நம்முடைய மனதைக் காயப்படுத்தக்கூடிய கருத்துக்களை நாம் இருதயத்தை விட்டு வெளியே வைத்துவிட வேண்டும்.

நீதிமொழிகள் 4:23அ
    எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்.

இருதயத்தில் இருக்க வேண்டியது
நீதிமொழிகள் 3:3
    கிருபையும், சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக. நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

ஆண்டவருடைய கிருபையும், ஆண்டவருடைய வார்த்தையும் நம்முடைய இருதயமாகிய பலகையில் இருக்க வேண்டியவைகள். தேவையான காரியங்களை இருதயத்தில் வைத்துக்கொண்டு, தேவையற்ற காரியங்களை இருதயத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதற்காக நம்முடைய மனதோடு ஒவ்வொரு நாளும் நாம் போராட வேண்டும்.


2. பாவத்திற்கு விரோமான போராட்டம்:
எபிரெயர் 12:4
    பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.

பாவத்தோடு இரத்தம் சிந்தும் அளவிற்கு நாம் போராட வேண்டும் என்று பவுல் கற்றுக்கொடுக்கிறார்.

பாவம் எங்கே இருக்கிற என்று தெரியாமல், எது பாவம் என்று தெரியாமல் நம்மால் பாவத்தோடு போராட முடியாது.

பாவம் எங்கே இருக்கிறது?
மாற்கு 7:21,22
    21. மனுஷனுடைய இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
    22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும்.

நாம் எல்லாருடைய இருதயத்திற்குள்ளும் பாவம் ஒழிந்து காணப்படுகிறது என்று இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுக்கிறார். சமயம் கிடைக்கும்போது, பாவம் தலைதூக்கி செயல்படத் துவங்கும். நாம்தான் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

இருதயம்
எரேமியா 17:9
    எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

எது பாவம்?
பாவத்தோடு போராட வேண்டுமானால், எவையெல்லாம் பாவம் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், நாம் தெரிந்தும், தெரியாமலும் பாவத்தைத் தண்ணீரைப் போல பருக்கிக்கொண்டிருக்கிறோம்.

அன்றாட நடைமுறை வாழ்வில் எந்தெந்த காரியங்கள் ஆண்டவருக்கு பிரியமான காரியங்கள் நான் செய்து கொண்டிருக்கிறேன். எந்ததெந்த காரியங்கள் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் என்று நம்மை நாமே தற்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். நான் செய்யும் எல்லா காரியங்களிலும் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறதா? கர்த்தரைக் காயப்படுத்தக்கூடிய காரியங்களை நான் செய்கின்றேனா என்று ஆராய்ந்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம்.

சங்கீதம் 119:11
    நான் உமக்கு விரோதமாய் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

நான் பாவம் செய்யாமலிருக்க பாவத்தைக் குறித்து கண்டித்து பேசும் வேத வசனம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். எது? எது? பாவம் என்றே தெரியாமல்? நான் நீதிமான், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தங்களைத் தாங்களே நியாயம் தீர்த்துக்கொள்கின்ற அநேகரை நாம் பார்த்திருக்கிறோம்.

நீதிமொழிகள் 10:19
    சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமல் போகாது.

நான் அதிகமாய் பேசுவதும் பாவம் என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது. இப்படியாக நம்மிடம் காணப்படுகின்ற பாவக்காரியங்களை நாம் பிரித்தெடுத்து, ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தின் மேல், பரிசுத்தம் அடைய வேண்டும்.

சங்கீதம் 139:24
    வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.

தாவீது அரசனைப்போல, ஆண்டவரைக் காயப்படுத்தக்கூடிய காரியங்கள் என் வாழ்வில் இருக்கின்றதா? என்று ஒவ்வொரு நாளும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாள் இரவு தூங்கச் செல்லும் முன்னும் சங்கீதம் 139:24 இந்த வசனத்தைச் சொல்லி ஜெபித்து, நம்முடைய பாவங்களை கண்டறிந்து, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

பாவத்தின் தண்டனை
எபிரெயர் 10:26
    சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்மாய்ப் பாவங் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,

பாவத்தோடு போராடி, பாவத்தை விட்டு விலகி ஓட வேண்டுமானால், எனக்கு சத்தியம் தெரிந்திருக்க வேண்டும்.

சத்தியத்தை அறிந்து கொண்ட நான், மீண்டும் மீண்டும் பாவத்தை செய்வேனானால், என்னை விடுவிப்பதற்கு, என்னைக் காப்பாற்றுவதற்கு வேறு எந்த சக்தியாலும் முடியாது என்று இங்கே பவுல் கற்றுக்கொடுக்கிறார்.


3. ஜெபத்தில் போராட வேண்டும்
கொலோசெயர் 4:12ஆ
    எப்பாப்பிராவும் தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.

ரோமர் 15:32
    நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுகிறதுபோல, நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டும்

மூன்றாவாக நம்முடைய ஜெபத்தில் நாம் போராட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கற்றுக்கொடுக்கிறார்.

போராடி ஜெபித்த யாக்கோபு
தன்னுடைய போராட்ட ஜெபத்தின் மூலமாக, கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டவர் யாக்கோபு.

ஓசியா 12:4அ
    அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான்.

பழைய ஏற்பாட்டில் தூதனானவர் என்ற பதம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. ஆதியாகமம் 32-ம் அதிகாரத்தில் யாக்கோபை சந்தித்தவர் இயேசுவானவர்.
யாக்கோபை மாத்திரம் அல்ல,
    1) ஆகார் (ஆதியாகமம் 16:11)
    2) ஆபிரகாம் (ஆதியாகமம் 22:11)
    3) மோசே (யாத்திராகமம் 3:2)
    4) பிலேயாம் (எண்ணாகமம் 22:22)
    5) கிதியோன் (நியாயாதிபதிகள் 6:11)
    6) மனோவாவின் மனைவி (நியாயாதிபதிகள் 13:3)
    7) மனோவா (நியாயாதிபதிகள் 13:13,18)
    இப்படி பலரை பழைய ஏற்பாட்டில் இயேசுவானவர் சந்தித்துள்ளார்.

யாக்கோபின் போராட்ட ஜெபம்
ஆதியாகமம் 32:28
    அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

இங்கே யாக்கோபு இரவு முழுவதும் ஆண்டவரோடு போராடி ஜெபித்தார் என்று வாசிக்கிறோம். இறுதியில் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். இங்கே தூதனானவர் யாக்கோபை ஆசீர்வதிக்கும்படியாக வரவில்லை. ஆனால், யாக்கோபின் போராட்ட ஜெபம், தூதனானவருடைய மனதை மாற்றியது. போராட்டத்தின் முடிவில், தூதனானவர் யாக்கோபை இஸ்ரவேல் என்று பெயரிட்டு, ஆசீர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம்.

யாக்கோபு தூதனானவரோடு போராடி மேற்கொண்டார் என்றால், யாக்கோபுக்கும் தூதனானவருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இறுதியில் யாக்கோபு வெற்றி பெறுகிறார். கர்த்தரை நம்மால் வெற்றி பெற முடியுமா? நிச்சயம் நம்முடைய ஜெபத்தின் மூலமாக கர்த்தரையும் நம்மால் வெற்றி பெற முடியும்.

ஒரு தகப்பனுக்கும், மகனுக்கும் போராட்டம் நடைபெறுகிறது என்றால், இறுதியில் மகன் தான் வெற்றி பெருவான். எந்த ஒரு தகப்பனும் தன் பிள்ளையிடம் மட்டுமே தோல்வியை ஒப்புக்கொள்வார்.

ஒரு தாய்க்கும், மகளுக்கும் போராட்டம் நடைபெறுகிறது என்றால், மகளே இறுதியில் வெற்றி பெறுவாள். தகப்பனானவர், தாயிடம் உன் சமையலைவிட, பக்கத்து விட்டு மாமியின் சமையல் அருமையாக இருந்தது என்று சொன்னால், எந்த தாயும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். அதே தகப்பன், உன் சமையலை விட, நம்முடைய மகள் சமைப்பது மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தில் தாய் பெருமைப்படுவாள்.

தாயும், தகப்பனும் தங்களின் தோல்வியை பிள்ளைகளிடத்தில் மாத்திரமே ஒப்புக்கொள்வார்கள்.

யோவான் 1:12
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபோர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளகைள் என்றால், யாக்கோபைப் போல நம்முடைய போராட்ட ஜெபத்தின் மூலம் எல்லாம் வல்ல இறைவனையும் நாம் மேற்கொள்ள முடியும்.

இந்த காரியத்தை கர்த்தரே நமக்கு கொடுக்க வேண்டாம், என்று நினைத்திருந்தாலும், நம்முடைய போராட்ட ஜெபத்தின் மூலமாக நாம் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

போராட்டம் என்ற தலைப்பில், கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆவிக்குறிய வாழ்வில் இருக்க வேண்டிய போராட்டங்களைக் குறித்து அறிந்து கொண்டோம்.

1. நல்ல காரியங்களை மனதில் நிறுத்துவதற்கு நாம் போராட வேண்டும்.

2. பாவத்தை எதிர்த்து நிற்க போராட வேண்டும்

3. ஜெபத்திலே கர்த்தரோடு போராட வேண்டும்.

இப்படிப்பட்ட போராட்டம் நம்முடைய வாழ்வில் காணப்படும்போது, யாக்கோபை ஆசீர்வதித்த கர்த்தர், நம்முடைய போராட்ட ஜெபத்தின் மூலம் நம்மையும் ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்……!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.