தலைப்பு – வானத்தை திறக்கும் திறவுகோல்
உபாகமம் 28:12அ
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்
செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்.
இந்த வசனத்திலே ஏற்ற காலம் வரும்போது கர்த்தர் பொக்கிஷசாலையாகிய வானத்தை திறப்பார் என்று வாசிக்கிறோம். ஆண்டவர் நமக்காக வானத்தை திறக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். வானம் திறக்கப்பட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும், வானத்தை திறக்கும் திறவுகோல் என்ன என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் நாம் தியானிக்கலாம்.
1. ஜெபம் செய்ய
வேண்டும்
நாம்முடைய ஜெபத்தின் மூலமாக ஆண்டவர் வானத்தை
திறக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, ஜெபிக்கையில்
வானம் திறக்கப்பட்டது. நாமும் கூட ஜெபிக்கும்போது
ஆண்டவர் வானத்தின் பலகணிகளை திறந்து நம்முடைய ஜெபத்தைக் கேட்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
லூக்கா 3:21
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசுவும் ஞானஸ்நானம்
பெற்று, ஜெபம்பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது.
நமக்காக வானம் திறக்கப்பட வேண்டுமானால் நாம்
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
தனியாகவோ, குழுவாகவோ, நண்பர்களாகவோ, திருச்சபையாகவோ
நாம் கூடி ஜெபிக்கும்போது ஆண்டவர் வானத்தை திறக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
இயேசுவும் சீஷர்களும்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் ஒரு
மணி நேரமாவது விழித்திருக்கக் கூடாதா? என்று வினவுகிறார். ஒருமணி நேர ஜெபம் போதுமானது என்று கிறிஸ்து சொல்லவில்லை. ஒருமணி நேரமாவது விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்
என்று சொல்லுகிறார்.
மத்தேயு 26:40
பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்
கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா?
நாம் ஒரு மணி நேரம் ஜெபிக்காவிட்டாலும்,
இந்த நாளில் ஒரு தீர்மானம் செய்வோம், நான் தினமும் ஐந்து நிமிடம் ஜெபிக்கின்ற நபராக
இருந்தால், இனி வருகிற நாட்களில் பத்து நிமிடம் ஜெபிக்கிற ஒரு நபராக மாறுவோம்.
திடீர் என்று நம்மால் ஒரு மணி நேரம் ஜெபிக்க
முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஜெப
நேரத்தை அதிகப்படுத்தும்போது, ஒரு சில நாட்களிலேயே நாம் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஜெபிக்கின்ற
ஒரு நபராக மாறிவிடுவோம்.
நம்முடைய சுய முற்சியினால் ஜெபிக்காமல்,
எப்படி நான் ஜெபிக்க வேண்டும், எதற்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆலோசனை நாம் கர்த்தரிடம்
கேட்கும்போது, ஆவியானவர் ஒவ்வொரு நாளும் ஜெபத்தின் ஆவியை நமக்கு தந்து நம்மை வழிநடத்துவார்.
ஒவ்வொரு நாளும் நம்முடைய குடும்பத்திற்காக,
உற்றார் உறவினர்களுக்காக, திருச்சபைக்காக, திருச்சபை விசுவாசிகளுக்காக, ஊழியர்களுக்காக,
தேசத்தின் தலைவர்களுக்காக, அவர்கள் நேர்மையாய் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, லஞ்சங்கள்,
போதைப்பொருட்கள், கொள்ளை நோய்கள், இயற்கை சீற்றங்கள் போன்ற காரியங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக
நாம் ஜெபிக்க வேண்டும்.
நமது நண்பர்களை விளையாடயோ, சினிமாவிற்கோ
வீணாய் நேரத்தை செலவு செய்ய அழைத்தால் உடனே வருவார்கள். யாரையாவது ஜெபிக்க அழையுங்கள் வேலை இருக்கிறது என்று
சொல்லுவார்கள். நாம் ஜெப நண்பர்களோடு இணைந்து
ஜெபிக்க வேண்டும்.
நமக்கு தூங்க நேரம் இருக்கிறது, சாப்பிட நேரம்
இருக்கிறது, அலைபேசியை பயன்படுத்த நேரம் இருக்கிறது, ஜெபிக்க மாத்திரம் நேரம் இல்லை
என்கிறோம். மற்ற காரியங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கின்ற நாம் ஜெபத்திற்காக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எலியா:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபித்த போது,
வானம் திறக்கப்பட்டது போல, பழைய ஏற்பாட்டிலும் ஒரு நபர் ஜெபித்த போது வானம் திறக்கப்பட்டது.
எலியா ஜெபித்த போது ஆண்டவர் வானத்தை திறந்து, வானத்திலிருந்து
அக்கினியை இறக்கி, நானே தெய்வம் என்பதை ஜனங்களுக்கு காண்பித்தார்.
1 இராஜாக்கள் 18:38
அப்பொழுது
கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும்,
விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும்
நக்கிப்போட்டது.
எலியா ஜெபித்த போது எலியாவின் ஜெபத்தைக்
கேட்டு வானத்தை திறந்து ஆண்டவர் அக்கினியை இரக்கினார். நம்முடைய ஜெபத்தைக் கேட்டும் வானத்தைத் திறக்க அவர்
வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
குட்டி கதை:
ஒரு கிறிஸ்தவ விசுவாசி கப்பல் பயணம் மேற்கொண்ட போது, எதிர்பாராத
விதமாக கப்பல் விபத்துக்குள்ளாகி, கப்பல் பழுதடைய துவங்கியது. தண்ணீர் கப்பலுக்குள்ளாக ஊடுருவ துவங்கியது. அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்ற கடலுக்குள் குதித்தார்கள். இந்த விசுவாசியும் கடலுக்குள் குதித்தார்.
கப்பலின் உடைந்த பாகம் ஒன்றை பிடித்துக்கொண்டு
கரைக்கு வர முயற்சித்தார். காற்று அவரை ஒரு
தீவிற்கு இழுத்துச் சென்றது.
தீவில் தனிமையாய் இருந்த அவர், ஆண்டவரை நோக்கி
ஜெபிக்க ஆரம்பித்தார். ஆண்டவரே நான் என் குடும்பத்தை
பார்க்க ஆசைப்படுகிறேன். என்னை என் குடும்பத்தோடு சேர்த்து வையுங்கள் என்று ஜெபித்தார். இரவு நேரமானதும், தீவில் இருக்கின்ற மட்டைகள், இழைகளை
வைத்து ஒரு குடிசை ஒன்றை அமைத்து, அதில் படுத்துக்கொண்டார்.
நாட்கள் பல நகர்ந்தது, விசுவாசி ஜெபத்தை
விடவில்லை. ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்தை
பார்க்க வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி ஜெபித்துக்கொண்டே இருந்தார். பசிக்காக, தீவில் இருக்கின்ற பழங்களை உண்டு வந்தார்.
ஒரு நாள் அவர் உணவைத் தேடி சென்று குடிசைக்குத்
திரும்புகையில், அந்த குடிசை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த விசுவாசி ஆண்டவர் ஏன் எனக்கு
இப்படிப்பட்ட சோதனைகளை தருக்கிறார் என்று வேதனைப்பட்டார். அப்பொழுது அவருக்கு ஒரு வசனம் நினைவிற்கு வந்தது.
லூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும்.
இந்த வசனத்தை யோசித்த விசுவாசி தொடர்ந்து
சோர்ந்துபோகாமல் ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு
சில நிமிடங்களில் அந்த தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. விசுவாசியும் உற்சாகத்தோடு கையை அசைத்து கப்பலை
அழைத்தார்.
கப்பல்காரர்கள் வந்து விசுவாசியை அழைத்துச்
சென்றனர். கப்பலில் இருந்தவர்களிடம் விசுவாசி,
நான் இங்கே இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். அதற்கு கப்பலில் இருந்தவர்கள், இந்த தீவில் நெருப்பு
எரிந்துகொண்டிருந்தது. அங்கு யாரோ இருக்கிறார்கள்
என்று அறிந்து உதவ வந்தோம் என்றார்கள்.
நம்முடைய ஜெபத்திற்கும் கூட அநேக நேரங்களில்
பதில் கிடைக்காமல் இருக்கலாம், ஜெபிப்பதற்கு எதிர்மறையாக அநேக காரியங்கள் நடைபெறலாம்,
ஆனால் இவை அனைத்தும் நன்மைக்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அந்த குடிசை தீப்பற்றாமல் இருந்திருந்தால்
அந்த கப்பல் தீவை நோக்கி வந்திருக்காது. அதுபோலவே
நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகிற தீமைகளும் நன்மையையே கொண்டு வரும் என்பதை நாம் உணர்ந்து,
விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது, ஆண்டவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு வானத்தை திறக்க வல்லமையுள்ளவராய்
இருக்கிறார்..
2. தியாகம்
செய்ய வேண்டும்
கிறிஸ்துவுக்காக நாம் தியாகம் செய்யும்போது
ஆண்டவர் வானத்தை திறக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
நம்முடைய பாவங்களுக்காக, குற்றங்களுக்காக,
மீறுதல்களுக்காக நாம் அடிக்கப்பட வேண்டும்.
நாம் நொருக்கப்பட வேண்டும். நம்முடைய தண்டனையை
ஆண்டவர் எடுத்துக்கொண்டார். தம்முடைய கடைசி
சொட்டு இரத்தம் வரை சிந்தி, தம்முடைய ஜீவனையே கொடுத்தார்.
நான் செய்த குற்றங்களுக்காக நான் தண்டிக்கப்பட
வேண்டும், என்னுடைய தண்டனைகளை அவர் ஏற்றுக்கொண்டு, நான் பிழைக்க வேண்டும் என்பதற்காக,
நான் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டும் என்பதற்காக அவர் அடிக்கப்பட்டார், நொறுக்கப்பட்டார்.
நமக்காக தியாகம் செய்த அந்த கிறிஸ்துவுக்காக
நாம் என்ன தியாகம் செய்திருக்கிறேன்.
ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:55,56
55. அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து:
தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு:
56.
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில்
நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
கிறிஸ்துவுக்காக மரித்த முதல் இரத்த சாட்சி
ஸ்தேவான். ஸ்தேவான் கிறிஸ்துவுக்காக தன் ஜீவனையே
தீயாகம் செய்தார். ஸ்தேவான் கிறிஸ்துவுக்காக
இரத்த சாட்சியாய் மரிக்கின்றபோது ஆண்டவர் வானத்தை திறந்து, ஸ்தேவானை வரவேற்றார்.
ஸ்தேவான் அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்ல. சாதாரண பந்தி விசாரிப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட
ஒரு மனிதன். அவருக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர்
இறங்கினார். இந்த ஸ்தேவான் மூலமாக அநேக அற்புத
அடையாளங்கள் நடைபெற்றது. தத்துவ ஞானிகளாலும்,
அறிவியல் நிபுணர்களாலும் ஸ்தேவானின் ஞானத்தை எதிர்க்க முடியவில்லை. (அப்போஸ்தலர்
6:9,10)
சாதாரண பந்திவிசாரிப்புக்காரனாக இருந்த ஸ்தேவானை
மூப்பரும், வேதபாரகரும் கொலை செய்ய தீர்மானித்தபோது, அவன் ஆண்டவரை மறுதலித்திருக்கலாம். ஸ்தேவானுக்கு முன்பாக எவரும் கிறிஸ்துவின் பொருட்டு
கொலைசெய்யப்படவில்லை. ஸ்தேவான் இவ்வளவு தைரியமாக
பேச காரணம், கிறிஸ்துவைப் பற்றி பேசினால் சாட்டையால் அடிப்பார்கள், சிறைச்சாலையில்
அடைப்பார்கள் என்று நினைத்தான். எனவே, தைரியமாய்
பேசினார்.
இயேசுவைப் பற்றி பேசினால் தண்டனை கொடுப்பார்கள்,
சவுக்கால் அடிப்பார்கள், சிறையில் அடைப்பார்கள் என்று நினைத்த ஸ்தேவானுக்கு மிகப்பெரிய
அதிர்ச்சி. ஸ்தேவானின் வார்த்தையை கேட்ட ஜனங்கள்
அவரை கொலை செய்யவே தீர்மானித்தார்கள். பந்திவிசாரிப்புக்காரனாக இருந்த ஸ்தேவான் என்னால்
மறிக்க முடியாது என்று மறுதலித்திருக்கலாம்.
ஸ்தேவான் அப்படி செய்யவில்லை. தன் வாழ்க்கையை
கிறிஸ்துவுக்காக தியாகம் செய்து, முதல் இரத்த சாட்சியாய் மரித்தார்.
எனக்காக பரலோக மேன்மையை விட்டு பூலோகம் வந்து,
என்னுடைய பாவங்களுக்காக தன்னையே தியாக பலியாக ஒப்புக்கொடுத்த அந்த இயேசுவை விட நான்
செய்யும் தியாகம் பெரியதல்ல என்பதை ஸ்தேவான் அறிந்து வைத்திருந்தார்.
ஸ்தேவானை ஒப்பிடுகையில் நாம் கிறிஸ்துவுக்காக
என்ன தியாகம் செய்திருக்கிறோம்.
ஆலயத்தின் பயன்பாட்டிற்காக ஏதேனும் ஒரு பொருளை
காணிக்கையாக கொடுத்திருப்போமானால், மிகப்பெரிய தியாகம் செய்ததாக நினைத்து பெருமைபடுகிறோம். ஆண்டவர் எனக்கு தந்த ஆசீர்வாதத்தினால் நான் ஆண்டவருடைய
ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தேன் என்று நினைக்காமல். என்னுடைய சுய முயற்சியால் நான் வாங்கிகொடுத்தேன்
என்று பெருமைபடுகிறோம்.
ஸ்தேவானைப்போல நாம் நம்முடைய ஜீவனை தியாகம்
செய்ய வேண்டும் என்று ஆண்டவர் விரும்பவில்லை.
நம்முடைய நேரத்தை நாம் கிறிஸ்துவுக்காக தியாகம் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற மட்டும் ஆலயக்காரியங்களில் நம்மை
ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆலயத்தில் ஏதாவது
ஒரு ஊழியத்தை நாம் கிறிஸ்துவுக்காக செய்ய வேண்டும். அதைத்தான் ஆண்டவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்.
சான்னிதழ்:
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும்
சாதிச்சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கும். இதில்
நாம் கிறிஸ்தவரா? இந்துவா? முஸ்லீமா? என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவரை சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொண்ட பிறகும், தங்கள் சான்றிதழ்களில் இந்துக்கள் என்ற பெயரையே வைத்திருக்கிறார்கள்.
கிறிஸ்தவன் என்ற பெயர் உள்ளவர்களும், இந்து என்று மாற்றிக்கொள்கிறார்கள். காரணம், இந்து என்ற சான்றிதழ் என்னிடம் இருந்தால்
அநேக சலுகைகள் அரசிடமிருந்து எனக்கு கிடைக்கிறது, அரசு வேலை சுலபமாக கிடைத்துவிடும்
என்று நினைக்கிறார்கள்.
நமக்காக ஜீவனை தந்த இயேசுவுக்காக நாம் அரசு
தருகிற சலுகையை கூட தியாகம் செய்ய மனதில்லாதவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உண்மை சம்பவம்:
ஒரு கிராமத்தில் ஒரு மூதாட்டி ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் தோசை, இட்லி மாவு வியாபாரம் செய்யக்கூடியவர்கள். வேறு தொழில் செய்ய அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கிறிஸ்தவராக மாறியதும் அவ்வூரார் அந்த பாட்டியிடம்
மாவு வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இருந்தபோதிலும்
அந்த மூதாட்டி கிறிஸ்துவுக்குள்ளாக நிலைத்திருந்திருக்கிறார்கள்.
நாம் கிறிஸ்துவுக்காக நம்முடைய நேரங்களை தியாகம் செய்யும் போது, நேரம் ஒதுக்கி ஊழியப்பாதையில் நம்மை இணைத்துக்கொள்ளும்போது ஆண்டவர் வானத்தை திறந்து நம்மை கனப்படுத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
3. சிறந்ததை
படைத்தல்:
மல்கியா 3:10
என்
ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும்
உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்
என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நம்முடைய சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பகுதியை
நாம் கர்த்தருக்கென்று கொடுக்க வேண்டும். அதுவே
தசமபாகம். நாம் தசமபாகங்களை கர்த்தருடைய ஆலயத்தில்
கொண்டுவந்து படைக்கும்போது ஆண்டவர் வானத்தின் பலகணிகளை திறந்து நம்மை ஆசீர்வதிக்கிறவராய்
இருக்கிறார்.
நாம் நன்றாக வேலை செய்கிறோம், சம்பாதிக்கிறோம், கர்த்தருடைய பங்கை அவருடைய ஆலயத்தில் கொடுக்கிறோமா? நம்முடைய வருமானத்தில் முதல் பகுதியை, சிறந்ததை நாம் கர்த்தருக்காக படைக்கும்போது ஆண்டவர் வானத்தை திறந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.
மல்கியா 1:8
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல,
நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லப்பல்ல என்கிறீர்களே. அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல்
பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
நம்முடைய பிள்ளைகள் ஆசையாக திண்பண்டங்களை
வாங்கி சாப்பிட பணம் கேட்கும்போது ரூபாய் நோட்டுகளை எண்ணி கொடுக்கிறோம். ஆலயத்திற்கு வரும்போது வீட்டில் சில்லரை எங்கே இருக்கிறது
என்று தேடி எடுத்து கொண்டு வருகிறோம்.
கடைக்கு சென்று ஏதோனும் ஒரு பொருளை வாங்குகிறோம்,
மீத சில்லரை பத்து ரூபாய் கொடுக்கிறார்கள்.
வீட்டிற்கு வந்து பார்த்தால் பத்து ரூபாய் தாள் கிழிந்திருக்கிறது. உடனே நம் மனதில் தோன்றும், இதை ஆலயத்தில் காணிக்கையாக
செலுத்திவிடுவோம்.
இப்படியெல்லாம் நாம் செய்வோமானால், நாமும் அந்த இஸ்ரவேல் ஜனங்களைப்போலவே கன் ஊனமானதையும், கால் ஊனமானதையுமே ஆலயத்திற்கு கொண்டு வந்து படைக்கின்றோம்.
நம்முடைய வருமானத்தில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும்
ஆண்டவர் கொடுத்திருக்கிற நேரத்தில் தசமபாகத்தை நாம் கொடுக்க வேண்டும். அதாவது ஒருநாளைக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொடுத்த
ஆண்டவருக்கு, தசமபாகமாகிய 2½ மணிநேரத்தை நாம் கொடுக்க வேண்டும்.
லூக்கா 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய்
அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள. நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால்
உங்களுக்கும் அளக்கப்படும்.
ஒரு பக்தன் இப்படியாக பாடுகிறார், ”கிறிஸ்துவுக்காக
இழந்தவர் எவரும் தரித்திரரானதில்லை”. நாம்
கிறிஸ்துவுக்காக நம்முடைய நேரத்தை, பணத்தை, பொருட்களை செலவிடுவோமானால், நாம் தரித்திரராக
மாட்டோம். மேன்மையையே அடைவோம்.
நாம் கிறிஸ்துவுக்காக என்ன அளவில் அளக்கிறோமா?
அதே அளவினால் ஆண்டவர் நமக்கு அளந்து தருகிறவராய் இருக்கிறார். நம்மிடம் உள்ள சிறந்ததை அவருக்காக கொடுக்கும்போது,
ஆண்டவரும் நமக்கு சிறந்ததை கொடுக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
4. ஆத்தும
ஆதாயம் செய்ய வேண்டும்
ஆண்டவர் வானத்தை திறக்க நாம் ஆத்தும ஆதாயம்
செய்ய வேண்டும், அதாவது நம்மால் இயன்ற ஊழியத்தை, திருப்பணியை செய்ய வேண்டும்.
லூக்கா 15:7
7. அதுபோல, மனந்திருபம்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம்
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று வாசித்தோம்.
நம் பகுதியில் வாழக்கூடிய அநேகர் ஆண்டவரைப்
பற்றி அறியாமல், உண்மைக் கடவுள் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவரைப் பற்றி போதிக்கும் கடமையை
ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிறார்.
நம்மால் இயன்றவரை நம்முடைய உறவினர்கள், நண்பர்கள்
அனைவருக்கும் ஆண்டவரின் அன்பைப் பற்றி அறிவிக்க வேண்டும்.
நம்மோடு கூட படிக்கின்றவர்கள், வேலை செய்கின்றவர்கள் தங்கள் குடும்ப கஷ்ட நஷ்டங்களை நம்மோடு கூட பகிர்ந்து கொள்ளுகின்றபோது, நான் உங்களுக்காக ஜெபிக்கின்றேன், நீங்களும் இயேசுவை விசுவாசியுங்கள் ஆண்டவர் அற்புதம் செய்வார் என்று சொல்ல வேண்டும்.
சாட்சியுள்ள வாழ்க்கை:
ஒரு பிரபலர் இப்படியாக சொல்லுகிறார், நீங்கள்
உங்கள் வழிபாடுகளை சிறப்பாக நடத்துங்கள் ஜனங்கள் தானாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள்
என்பதாக. நாம் கிறிஸ்துவுக்காக சாட்சியாய்
வாழ்ந்து காட்டும்போது அநேகர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாமே மதுபானத்திற்கும்,
போதை வஸ்துக்களுக்கும், கழியாட்டுக்களுக்கும் அடிமையாய் இருப்போமானால் மற்றவர்கள் எப்படி
ஆண்டவரை ஏற்றுக்கொள்வார்கள். புறமதத்தினர்
மத்தியில் நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்தும்போது ஆத்தும ஆதாயம் செய்ய முடியும்.
சமூக பணி:
நாம் சமூக பணி செய்வதன் மூலம் ஆத்தும ஆதாயம்
செய்ய முடியும். ஆண்டவரைப் பற்றி நமக்கு அறிவிக்க
வந்த ஒவ்வொரு மிஷனெரிகளும் கிறிஸ்துவைப் பற்றி மாத்திரம் அறிவிக்கவில்லை. சமுதாயப்பணியையும் செய்தார்கள்.
மிஷனெரிகள் இந்தியாவிற்கு வந்து இங்குள்ள
சமூக சூழலை ஆராய துவங்கினார்கள். சமூகத்தில்
சரியான மருத்துவம், கல்வியறிவு இல்லாததை உணர்ந்து கொண்டார்கள். அதை சரிசெய்ய நினைத்து தங்களுடைய சொத்துக்களை விற்று
மருத்துவமனைகளையும், கல்விசாலைகளையும் நிறுவினார்கள். மிஷனெரிகள் சமுதாயத்தில் ஏற்படுத்தின மாற்றத்தைப்
பார்த்த ஜனங்கள் அவர்கள் வணங்குகிற தெய்வமே உண்மையான தெய்வம் என எண்ணி, ஆண்டவரை சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
நம்முடைய சமுதாயத்தில் என்ன தேவை இருக்கிறது
என்பதை நாம் உணர்ந்து அதை சரி செய்ய வேண்டும்.
அதை பார்க்கின்ற ஜனங்கள் இவர்களால் எப்படி முடிகிறது என்று நினைத்து, நம்முடைய
வழிபாடுகள் சிறந்தது என்று எண்ணி, ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள்.
சோர்ந்துபோகாமல் அறிவிக்க
வேண்டும்:
நாம் ஆண்டவரைப் பற்றி அறிவிக்கும்போது, உடனே
அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது. அறிவிக்க வேண்டியது
நம் கடமை, அவர்களை மாற்றுவது ஆண்டவரின் செயல்.
1 கொரிந்தியர் 3:6
நான் நட்டேன். அப்பொல்லோ
நீர்ப்பாய்ச்சினான். தேவனே விளையச்செய்தார்.
நாம் ஒருவருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கும்போது,
அவர்கள் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு
சில நாட்கள், மாதங்கள் ஏன் வருஷங்கள் ஆகலாம்.
ஆனால் அந்த வார்த்தை வெறுமையாய் திரும்புவதில்லை. நிச்சயம் ஒருநாள் அவர்களுக்குள் கிரியை செய்யும்.
உண்மைக் கதை:
கோத்தகிரி பகுதியில் முள்ளூர் என்ற கிராமத்தில்
ஒரு சமுதாயக் கூட்டத்தார் வாழ்ந்த வந்தார்கள்.
அக்கிராமத்தின் தலைவர் மந்திர, மாந்திரிகத்தில் கற்றுத் தேர்ந்தவர். அவர் ஒரு பிசாசை தன் கைக்குள்ளாக வைத்துக்கொண்டு,
அக்கிராம மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அந்த பிசாசை வைத்து யாரையாவது அழிக்க வேண்டுமானால்
அழித்துவிடுவார். யாரையாவது செழிக்க வைக்க
வேண்டுமானால் செழிக்க வைத்துவிடுவார். அந்த
ஊரில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் அந்த நபரை தலைவரிடம் அலைத்துச் செல்வார்கள். அவர் தீர்த்தம் ஒன்றை கொடுத்து அவரை மரிக்த்துப்போகச்
செய்வார். மருத்துமனைக்கு செல்லவேண்டும், என்ற
எண்ணம் அவர்களுக்கு இல்லை. தலைவர் செய்வதே
சரி என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட கிராமத்திற்கு ஒருவர் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க சென்றார்.
அந்த ஊர் தலைவரை மீறி யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை. ஒரு நாள் ஒரு நபருக்கு காய்ச்சல் வந்தது. உடனே, அக்கிராமத்து மக்கள் இவனை வெப்பவேதி தாக்கி
விட்டது என்று சொல்லி, தலைவரிடம் அழைத்துச் செல்ல நினைத்தார். அந்த நேரத்தில் அந்த ஊழியர், அந்த நபரை தொட்டுப்
பார்த்து, இவனுக்கு மாத்திரை கொடுத்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்.
அதை நம்பாத ஊரார், எங்கள் ஊர் தலைவர் சொல்லுகிறதையே
நாங்கள் செய்வோம். மாத்திரையைப் பற்றி எங்களுக்கு
தெரியாது. எங்கள் ஊர் தலைவரிடம் அழைத்துச்
சென்றால் அவர் இவன் வாயில் எதையோ ஊற்றுவார் இவன் மரித்துப்போவான் என்று சொன்னார்கள்.
ஊழியரின் வார்த்தையைக் கேட்ட தாய், என் மகன்
பிழைப்பான் என்றால், எதையாவது அவனுக்கு கொடுங்கள் என்று சொன்னார்கள். உடனே ஊழியர் மாத்திரையை எடுத்து ஜெபம் செய்து அவனுக்கு
கொடுத்தார். சில நிமிடங்களிலேயே அவன் எழுந்து
உட்கார்ந்தான். அந்த நாள் முதல் அந்த குடும்பத்தார்
ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள்.
இதை அறிந்த அந்த ஊர் தலைவன் ஊழியரிடம் வந்து
நீ இனி எங்கள் கிராமத்தில் இருக்க கூடாது.
உன் ஊரைத்தேடி சென்றுவிடு என்று மிரட்டினார். ஊழியர் சிறிதும் பயமில்லாமல், நான் இங்கேதான் இருப்பேன். உண்மையான கடவுளைப் பற்றி இக்கிராம மக்களுக்கு அறிவிப்பேன்
என்று சொன்னார். நான் என்று இயேசுவைப் பற்றி
சொல்லுவதை நிறுத்துகிறேனோ அன்று நீங்கள் இயேசுவைப் பற்றி சொல்ல துவங்குவீர்கள் என்று
ஊழியர், ஊர் தலைவரிடம் சொன்னார். அதைக் கேட்ட
தலைவருக்கு வேடிக்கையாய் இருந்தது.
அந்த ஒரு குடும்பம் மட்டுமே ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். ஊழியர் எவ்வளவு முயற்சி செய்து ஊழியம் செய்தாலும்
ஒருவரும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்கள்
பல உருண்டோடியது.
ஒரு நாள் ஊழியரால் சுகம்பெற்ற நபர் ஊருக்குள்ளாக
வந்தபோது, ஊர் தலைவரின் மனைவி அவனைப் பார்த்து நீ இப்போதெல்லாம் என் கணவரிடம் வந்து
மந்திரிப்பதில்லையே ஏன் என்ற கேட்டார்கள்.
அதற்கு அந்த நபர் நான் ஆண்டவரை ஏற்றுக்கொண்டேன். இனி வரமாட்டேன். உங்களுக்கு ஒரு குறை வரும்போது இந்த ஊழியரிடம் வாருங்கள்
நிச்சயம் அவர் குறைகளை நிறைவாக மாற்றுவார் என்று சொன்னான். அதைக் கேட்ட ஊர் தலைவரின் மனைவி எனக்கு ஒரு குறை
என்றால் என் கணவன் பார்த்துக்கொள்வான். அவனுக்கு
துணையாய் இருக்கின்ற பிசாசு என்னுடைய குறையை மாற்றும் என்று அவள் சொன்னார்.
அந்த ஊர் தலைவன் பிசாசிற்கு என்ன கட்டளை
கொடுத்தாலும் பிசாசு அதை சரியாய் செய்து முடிக்கும். அதற்கு நன்றி கடனாக அந்த தலைவன் ஒவ்வொரு ஆண்டும்
ஒரு தலைச்சன் பிள்ளையை பலியாக கொடுக்க வேண்டும்.
அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைச்சன் பிள்ளையை அவன் ஒவ்வொரு
வருடமும் பலியாக கொடுத்து வந்தான்.
ஊரில் உள்ள அனைத்து தலைச்சன் பிள்ளைகளையும்
பலிகொடுத்து தீர்ந்த பின்பு, ஒரு நாள் பிசாசு அவனிடம், இந்த ஆண்டு எனக்கு கொடுக்க வேண்டிய
பலி எங்கு என்று கேட்டது. அவன் ஊர் முழுவதும்
தேடிவிட்டேன் எங்கும் தலைச்சன் பிள்ளை இல்லை என்றான். அதற்கு பிசாசு அப்படியானல் உன் பிள்ளையை எனக்கு
கொடு என்று கேட்டது. நாளை இரவு உன் பிள்ளையை
எனக்கு பலியாக எடுத்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு, பிசாசு சென்றுவிட்டது.
ஊர் தலைவன் என்னுடைய இந்த நிலைக்கு காரணம்
அந்த ஊழியனே என்று நினைத்து, நாளை என் பிள்ளை பிசாசிற்கு பலியாகப்போகிறான். அதே நேரத்தில் அந்த ஊழியனும் மரிக்க வேண்டும் என்று
நினைத்து, சில அடியாட்களை ஏற்படுத்தி நாளை இரவு ஊழியரை கொலை செய்ய தீர்மானித்தான்.
மறுநாள் இரவும் வந்தது, பிசாசு பிள்ளை பலி
வாங்குவதற்காக ஊர் தலைவரின் வீட்டிற்குள் வந்து.
தலைவன் அனுப்பின ஆட்கள் ஊழியரை கொலை செய்ய புறப்பட்டார்கள்.
பிசாசு வீட்டிற்குள் வரும்போது, தலைவரின்
மனைவிக்கு, ஊழியரால் சுகம்பெற்ற நபர், ”உங்களுக்கு ஒரு குறை வரும்போது அந்த ஊழியரிடம்
வாருங்கள்” என்று சொன்னது நினைவு வந்தது.
உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு ஊழியர் இருந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினாள். பிசாசும் அவளை துரத்திக்கொண்டு வந்தது.
ஊழியரை வந்து பார்த்தால், ஊழியர் இரத்த வெள்ளத்தில்
கிடந்தார். தலைவன் மனைவி, ஊழியரே நீ தான் என்
பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று ஆழுதாள்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த ஊழியர், அந்த குழந்தையின் மீது கையை வைத்து, பிசாசை
பார்த்து ”இந்த குழந்தையை மாத்திரம் அல்ல, இந்த கிராமத்தில் உள்ள எந்த குழந்தையையும்
தொடுவதற்கு உனக்கு அதிகாரம் இல்லை, இயேசுவின் நாமத்தில் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்று
சொல்லிவிட்டு மரித்துப்போனார்.
பிசாசு குழந்தையை பலிவாங்க முடியாமல், அந்த
ஊரைவிட்டு சென்றுவிட்டது. அதைப்பார்த்த ஊர்
தலைவர், இந்த ஊழியன் வழிபடுகின்ற கடவுளே உண்மையுள்ள கடவுள் என நினைத்து அன்று முதல்
இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டார். அன்று முதல்
ஊழியம் செய்ய ஆரம்பித்தான். நான் இயேசுவைப்பற்றி
சொல்வதை நிறுத்தும்போது, நீங்கள் இயேசுவைப் பற்றி சொல்வீர்கள் என்று ஊழியர் சொன்னது
ஊர் தலைவர் நினைவிற்கு வந்தது. தலைவர் இயேசுவை
ஏற்றுக்கொண்டதால், முழு கிராமமும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டது.
ஊழியர் ஆண்டவரைப் பற்றி சொன்ன மாத்திரத்தில்
முழு கிராமமும் இரட்சிக்கப்படவில்லை. அநேக
நாட்கள் சென்றே இரட்சிக்கப்பட்டார்கள். இதற்காக
ஊழியர் மனம் சோர்ந்துபோகவில்லை. தனது ஜீவனையும்
கொடுக்க ஆயத்தமாயிருந்தார்.
நாமும் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஆத்தும
ஆதாயத்திற்காக முறச்சி செய்ய வேண்டும். நாம்
ஆத்தும ஆதாயம் செய்யும்போது, பரலோகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் உண்டாயிருக்கும்.
வானத்தை திறக்கக்கூடிய நான்கு காரியங்களைக்
குறித்து இந்த குறிப்பில் தியானித்தோம். வானம்
திறக்க வேண்டுமானால் நாம் ஜெபத்தில் உருதியாய் இருக்க வேண்டும், கிறிஸ்துவுக்காக தியாகம்
செய்ய வேண்டும், சிறந்ததை ஆண்டவருக்காக படைக்க வேண்டும், ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும்.
நாமும் ஜெபத்தில் தரித்திருந்து, கிறிஸ்துவின்
பணிக்காக நம்மை தியாகம் செய்து, சிறந்ததை படைத்து, ஆத்தும ஆதாயம் செய்யும்போது ஆண்டவர்
நம்மை வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.