தென்னிந்திய திருச்சபை
இளைஞர் ஞாயிறு (17 அக்டோபர் 2021)
வழிபாட்டு முறைமை
தலைப்பு: அர்த்தமுள்ள வாழ்வின் தேடலில் இன்றைய இளையோர்
ஆயத்தம்:
(அழகுமிகு பொருட்களைக் கொண்டு உயிரோட்டமுள்ள அலங்காரங்களால் ஆலயம் எழில்மிகு தோற்றமளிக்க வேண்டும்)
தொடக்க பாடல்: (வண்ணமிகு வசன அட்டைகள், இறை அருட் சாதனங்கள், திருவிவிலியம், சிலுவை திருமண்டல இலட்சனை பொருந்திய கொடி ஆகியவற்றை ஏந்தியவாறு இளையோர் வலம் வர ஆராதனையின் தொடக்க பாடல்)
அழைப்பு:
ஆயர்: தந்தை, மகன், தூய ஆவியரின் திருப்பெயராலே!
தொடக்க இறைவேண்டல்
விண்ணுலக தந்தையே! தாழ்மையான இதயத்துடன் உம்மிடம் வருகிறோம். எங்கள் வாழ்வில் செய்து வரும் எல்லா பெருமை செயல்களுக்காக நன்றி செலுத்துகிறோம். நீரே சர்வ வல்லமையும் மகிமையும் உடைய கடவுள், உம் திரு முன்னிலையில் இளையோர் ஞாயிறை அனுசரிக்க நீர் தந்த நல்வாய்ப்புக்காக நன்றிகளை ஏறெடுக்கிறோம். எங்களிடமிருந்து எதை நீர் எதிர்பார்க்கிறீரோ எவை உமக்கு ஏற்புடையனவோ அவற்றையே நாங்கள் செய்ய எங்களுக்கு கற்பித்தருளும். அனுதினமும் உமது வழிநடத்துதலையும் வெளிப்பாடுகளையும் பெற உம்மிடம் திரும்புகிறோம். எனவே, உமது வார்த்தையின்படி வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம், இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதா, ஆமென்.
ஒளி ஏற்றுதல்
வழிபாட்டிற்கு அழைப்பு
ஆயர்: நண்பர்களே கர்த்தர் பரிசுத்தர் அவர் நம்மிடையே வசிக்க விரும்புகிறார்.
அனைவரும்: நாமும் பரிசுத்தமாய் வாழ்வோம் அவருக்கு ஏற்புடைய வாழ்வை அவருடனே வாழ்வோம்
ஆயர்: இயேசு சொன்னார், நானே நல்ல மேய்ப்பன், நான் என் ஆடுகளை அறிவேன் அவைகளும் என்னை அறியும்.
அனைவரும்: கடவுளே எங்கள் மீட்பரே, எங்கள் கடைசி மூச்சு வரை உமது சத்தத்தை நாங்கள் அறிய, உம்மையே விசுவாசிக்க, உம்மையே பின்தொடர எங்களுக்கு உதவியருளும்.
ஆயர்: இயேசு சொன்னார், கடவுள் ஆவியாக இருக்கிறார், அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.
அனைவரும்: தூய இதயத்தோடும் உண்மையோடும் உம்மை தேடிட உம்மை தொழுதுகொள்ள எம்மை வழிநடத்தும்.
நன்றியுணர்வுடன் வழிபடுவோம்
நடத்துனர்: நன்றி மிகுந்த உள்ளத்தோடு அவரது திரு இல்லத்திற்குள் நுழைவோம். அவரது புகழை எல்லைகள் தோறும் சொல்லுவோம்.
அனைவரும்: அவருக்கு நன்றி செலுத்துவோம், அவரது திருப்பெயர் புகழ் பெறுவதாக.
(இப்பாடல் ஒரு சான்று வேறு தெரிந்த பாடல்களைப் பாடலாம்)
உள்ளம் நன்றியால் பொங்கி
கர்த்தர் வாசல் சொல்லுவேன்
எல்லை தோறும் துதிகள் சொல்லுவேன்
கர்த்தர் தந்த நன்னாள் அது இந்நாள் என்பேன்
என்றும் மகிழ்வேன் சந்தோசம் நல்கினார்
தேவன் எண்ணில் சந்தோஷம் நல்கினார்
நடத்துனர்: பூவுலகே ஆனந்த சத்தத்தோடே கடவுளை உயர்த்துங்கள்.
அனைவரும்: மகிழ்ச்சியோடு அவரைத் துதிப்போம், அவருடைய திரு இல்லத்தில் பாடலால் ஆராதிப்போம்.
குறும்பாடல்:
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவன் மாற்றுகிறார்
எனக்கெல்லாம் இயேசுவே என்றென்றுமே
நடத்துனர்: என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் கர்த்தராகிய ஆண்டவரே! சர்வ வல்லவர் நீரே….
சபை: மகிமையும் மகத்துவமுமே உமது ஆடைகளாய் இருக்கின்றன.
குறும்பாடல்:
இயேசு கிறிஸ்து மாறாதவரே மாறாதவரே - 2
ஆமென், இயேசு கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய், அல்லேலூயா (2)
நடத்துநர்: கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆத்துமமே என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி.
குறும்பாடல்:
ஸ்தோத்திரம் கர்த்தருக்கே
கர்த்தரின் நாமத்திற்கே
போற்றுவோம் கர்த்தரையே என்றுமே (2)
கர்த்தரின் நாமம் பலத்த துருகமே
சுத்தர்கள் அவருக்குள்ளே தங்குவாரே (2)
நடத்துனர்: என் இளவயது முதல் என்னை பயிற்றுவிப்பவர் நீரே!
சபை: இந்த நாள் வரை கடவுளே உமது மகத்துவமிகு கிரியைகளைக் கூறி வருவேன்.
சபையோர் முழங்காற்படியிடுவோம் (அல்லது) நிற்போம்.
மனம் மாற அழைப்பு
நடத்துநர்: நாம் அமைதியாக நமது வீழ்ச்சியையும், தோல்விகளையும் நினைவு கூறுவோம்.
அமைதி
பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுதல்
இரக்கமுள்ள கடவுளே நாங்கள் உமக்கு எதிராகவும் எங்கள் அயலாருக்கு எதிராகவும் பாவம் செய்தோம் என்று அறிக்கையிடுகிறோம்.
எங்கள் உடைந்த இதயத்தை வருத்தத்துடன் உம் திருமுன் சமர்ப்பிக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நாங்கள் மறந்துபோனோம். பரந்த இவ்வுலகில் தேவையிலுள்ள மக்களை சந்தித்து, அவர்களை நிறை செய்து, அவர்களில் நாங்கள் உம்மைக் காண மறந்துபோனோம். நீரே வழியும், உண்மையும், நேர்மையுமாய் இருக்கிறீர். எங்கள் வாழ்க்கைப் பாதையில் இதனை ஆராய்ந்து காணாமல் சென்று கொண்டிருக்கிறோம். தடம் மாறும் இந்த உலகில் நீரே வழி என்பதை அறிந்து கொள்ள இயலாமல்போனோம். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும், கணிணி கருவிகளும், கவர்ந்திழுக்கும் போதைப் பொருட்களும், மதுபானங்களும், கொடுக்கும் அந்நேர மகிழ்ச்சியை நிரந்தரம் என்று எண்ணி என்றும் வாழ்வைத் தொலைத்தோம். உண்மையுள்ள மனதுடன் நீர் தரும் வாழ்வைப் பெற்றிட ஏங்கி நிற்கிறோம். எம்மை ஆராய்ந்து பாரும். எம் தீய வாழ்வை பாரும். இன்னும் ஒரு முறை, நீர் எம்மீது கொண்ட ஆழமான அன்பை புரிந்து கொள்ள வாய்ப்பு தாரும். இதன் மூலம் வாழ்வின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளும் உணர்வை எமக்கு வாய்க்க செய்யும். ஆமென்.
சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, இரக்கமுள்ள ஆண்டவரே! தங்கள் சகோதர, சகோதரிகள் செய்யும் தீமைகளை மன்னிக்கும் யாவருக்கும், பாவமன்னிப்பை அருளி செய்வேன் என வாக்கு அருளியவரே, முழு இருதயத்தோடும், உண்மையோடும் மனம் திரும்புகிறோம். எங்கள் மீது இரக்கமாயிரும். எங்கள் பாவங்களை பொறுத்துக் கொண்டு, அவற்றினின்று வெளிவர எமக்கு உதவும். எல்லா நல் எண்ணங்களையும் எமக்கு ஈந்து, எங்களை பெலப்படுத்தி, நிலைப்படுத்தும். நிலை வாழ்விற்குள் எங்களை நடத்திச்செல்லும். ஆமென்.
இந்நாளுக்குரிய இறைவேண்டல்
வாழ்வளிக்கும் கடவுளே! இளையோரை வளப்படுத்தும் உமது படைப்பாற்றலுக்காகவும், துடிப்புள்ள இளையோராக வடிவமைத்ததற்காக உமக்கு நன்றி. இளம் இயேசு கிறிஸ்துவை உம் திருமகனை எமக்கு தந்ததற்காக நன்றி. உலகம் முழுவதும் புது வாழ்வில் மலர்ந்திட உம் திருமகனாம் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை எங்களுக்காக அர்ப்பணித்தாரே! அதற்காக உமக்கு நன்றி. அமைதியான சமத்துவமான, நீதியுள்ள உலகைப் படைத்திட, எமக்கு ஞானமும், புரிந்துணரும் ஆற்றலும், எதிர்நோக்கும், லட்சிய கனவும் வாய்த்திட உதவி புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் கேட்கிறோம். நீரே என்றும் வாழும், என்றும் ஆளும் கடவுளாக உம் திருக்குமாரனாம் இயேசுவுடன், தூய ஆவியரின் கூட்டுறவில் என்றென்றும் அரசாள்கிறீர். ஆமென்.
விவிலியப்பகுதி:
ஆதியாகமம் 39:1-23
சங்கீதம் 17
எபிரெயர் 12:1-11
யோவான் 1:43-51
பாடல்:
அருளுரை:
அர்த்தமுள்ள வாழ்வின் தேடலில் இன்றைய இளையோர்
பற்றுறுதி அறிக்கை:
நாங்கள் கடவுளை நம்புகிறோம். சர்வ வல்ல கடவுளிடம் பற்றுறுதி கொண்டுள்ளோம். அவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் இரக்கமும் அன்பும் கிருபையும் மிகுந்தவர். அவருடைய ஒரே திருமகனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவரே ஆண்டவர். வாழ்வின் நல்வழியை எமக்கு காட்டிட, சான்றாகும் வாழ்வை வாழ்ந்து காண்பித்தவர் அவரே. தமது தந்தையின் திருவுளப்படி, விண்ணகத்திலிருந்து, இப்புவியில் உதித்து, கீழ்ப்படிதலை எமக்கு கற்றுத் தந்தார். கிறிஸ்து, தனது இளமையில் அடக்கு முறைக்கு எதிர்த்து நிற்றல், திக்கற்றோரை கவனித்தல், தேவையுள்ளோருக்கு உதவுதல், தனக்கு எதிராக தீங்கிழைத்தோருக்கு மன்னித்தல் ஆகிய நற்பண்புகளை செய்து காட்டினார். தன்னலமற்ற அன்பு என்ன என்பதை சிலுவை சுமந்ததன் மூலம், நமக்காக பாரத்தை அவர் ஏற்று காட்டினார். கிறிஸ்துவை நமக்கு முன்மாதிரியாக ஏற்று, நம்பிக்கையின் பயணத்தை நாம் வாழும் நாளெல்லாம் அவருடைய பார்வையில் அவருக்கேற்ற முறையில் அர்த்தமுடன் வாழ உறுதி ஏற்போம். எனவே நியாயத்தீர்ப்பின் நாளிலே, உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க அவர் வரும்பொழுது, அவரது அரசு இப்பூமியில் கட்டப்பட்டிருப்பதை அவர் காணமுடியும். இதுவரை, இளையோராக, சிறாராக, மூத்தோராக நமது சபை மக்கள் இயேசு கிறிஸ்து காட்டிய தூய வழியில் வாழ உறுதி ஏற்போம். ஒரே கடவுளும், ஒரே ஆவியரும், ஒரே கிறிஸ்துவும், ஒரே ஐக்கிய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், உயிர்த்தெழுதலும், தூய வாழ்வும் உண்டு எனும் பற்றுறுதியை அறிக்கையிடுகிறோம். ஆமென்.
அறிவிப்புகள்:
சிறப்பு பாடல் / குறு நாடகம்:
காணிக்கை அர்ப்பணிப்பு பாடல்:
காணிக்கை அர்ப்பணிப்பு ஜெபம்:
மன்றாட்டு இறைவேண்டல்
1. சர்வ வல்லமை உள்ள கடவுளே! உயர் உன்னதரே புனிதரே நன்றியுடனும் புகழ்ச்சியுடனும் அசீர்வதிக்கப்பட்ட ஜெப நேரத்துக்கு வருகிறோம். தென்னிந்திய திருச்சபை இளையோராக நாங்கள் ஒற்றுமையுடனும் கூடிட அருள்புரியும். மாறாத உம் வார்த்தைகளால் நாங்கள் வாழ அருள்புரியும். எம்மை உமது ஞானத்தாலும் கொடைகளாலும் நிரப்பியமைக்கு நன்றி செலுத்துகிறோம்.
சபை: அவர்தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார். அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். (சங்கீதம் 111:4)
2. படைப்பின் கடவுளே, உமது உண்மை உக்கிராணக்காரர்களாக உமது படைப்பினை பாதுகாக்க பராமரிக்க உதவும். பெரும்தொற்றின் ஊரடங்கு காலங்களில் நிலையற்ற தன்மைகளின் குழப்பமான சூழலில் எதிர்கால சந்ததிக்கு உமது கைவேலைப்பாடாகிய இயற்கையை பாதுகாத்து அளிக்கும் பொறுப்பை இளையோர் செய்திட அதற்கான சாத்தியக் கூறுகளை பற்றிய தரிசனம் அவர்களுக்கு கிடைத்திட அருள் புரியும்.
சபை: அல்லேலூயா ஆண்டவர் மீது அன்பு கூறுகின்றேன். ஏனெனில் எனக்கு இறங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். (சங்கீதம் 116:1)
3. எங்கள் மீட்பராகிய ஆண்டவரே வாழ்வுக்காக போராடும் இளையோருக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பாதுகாப்பின்மை கல்வியில் பின்தங்கிய நிலை, குடும்ப வன்முறை மற்றும் மன அழுத்தம் இவைகளின் விளைவாக நிகழும் சமூக கொடுமைகள் மற்றும் மன ரீதியான அதிர்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளையோருக்காக ஜெபிக்கிறோம்.
சபை: எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும் போது எனக்கு பதில் அளித்தருளும். நான் நெருக்கடியில் இருந்தபோது நீர் எனக்குத் துணை புரிந்தீர், இப்போதும் எனக்கு இரங்கி என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.
4. எங்கள் மீட்பராகிய கடவுளே, போதை எனும் மாய தூண்டிலில் சிக்கி, சீரழியும் இளம் தலைமுறைக்காக சமய அடிப்படை வாதம், வன்முறை, மனித கடத்தல், ஆபாச படங்கள், தடுமாற்றம், செல்வாக்கு இவற்றினின்று இன்றைய இளம் தலைமுறை நியாயம் பெற அடக்கு முறையில் இன்று அடக்கு முறையினின்று அருள் செய்யும் கர்த்தாவே!
சபை: ஒடுக்கப்படுவோருக்கு! ஆண்டவரே அடைக்கலம், நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே. (சங்கீதம் 9:9)
5. எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே மற்றவர் குறித்த அன்பும் கரிசனையும் உள்ளவர்களாக எமை மாற்றும். உம்மை போல எம்மை மாற்றும். பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து உதவ எமக்கு அருள் செய்யும். உமது மாற்றுருவாக்கும் ஆவியை பெற்று உலகிற்கு வழங்கும் ஒளியாக திகழ அதையே தலைமுறைதோறும் எமது ஆக்கிக்கொள்ள உதவும்.
சபை: ஆனால், உண்மையில் கடவுளும் எனக்கு செவி கொடுத்தார் என் விண்ணப்பக் குரலை கேட்டார். (சங்கீதம் 66:19)
6. அனைத்தையும் வழங்கும் அன்புநிறை கடவுளே! தென்னிந்திய திருச்சபைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அதன் சாட்சிகளாக எம்மை ஒருங்கிணைத்து, திருச்சபையில் ஐக்கியப்படுத்தியவரே உமக்கு நன்றி. சினாடு பேரவைக்காக, பிரதம பேராயர் மற்றும் ஆலுவலர்கள், அனைத்து திருமண்டில பேராயர்களுக்காக, பல்வேறு துறைகளின் இயக்குனருக்காக ஆயர்களுக்காக, சபை ஊழியர்களுக்காக அருட்பணியாளர்களுக்காக, பெண் ஊழியர்களுக்காக, இறை மக்களுக்காக இவர்கள் அனைவரும் நல்ல மனதோடும் சுத்த மனசாட்சியோடும் இறை பணியாற்றவும் ஐக்கியதத்தில் சபைகள் பரிபூரணப்படவும் ஜெபிக்கிறோம்.
சபை: தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார். தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்கும்மாறு செய்தார் அவரது திருப்பெயர் தூயது, அஞ்சுதற்கு உரியது.
7. பாதுகாக்கும் கடவுளே, எங்கள் நாட்டின் தலைவர்களுக்காக ஜெபிக்கிறொம். குறிப்பாக இந்திய குடியரசின் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர், முதல் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்காக ஜெபிக்கிறோம். ஐக்கியமும் சமத்துவமும் உடைய சமுதாயத்தை உருவாக்க எம் தலைவர்களுக்கு நன்னெறிகளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்த ஜெபிக்கிறோம்.
சபை: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
8. சர்வ வல்ல கடவுளே கிருபையும், இரக்கமும் நிறைந்தவரே, சர்தேவ பிரச்சனைகளை தீர்த்திட தேசங்களுக்கிடையே அமைதியையும் ஒருமைப்பாட்டையும் தாரும். உலகை மீட்டு காப்பாற்றும். பெரும் தொற்றின் பின் காலங்களில் வாழ்வாதாரத்தை பெருக்கவும், சூழலுக்கேற்ற வாழ்வை தகவமைக்கும் எமக்கு உமது ஞானம் அறிவு திறன் ஆகியவற்றை தாரும். விரைந்து மாறிடும் உலகில் மாற்றுருவாக்கத்தின் வினையூக்கிகளாக இன்றைய இளையோர் திகழ உடனடி மாற்றத்தையும் நீதியை வழங்கும் உண்மை ஆன்மீகத்தை அவர்கள் பெற உதவும்.
சபை: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். (சங்கீதம் 145:18)
அர்ப்பணிப்பின் வேண்டல்
அன்புள்ள பரம தந்தையே கிருபைக்கும் அன்பிற்கும் காரணரே, உலகை மாற்றுருவாக்கம் செய்பவரே, எங்கள் இளையோரின் இதயத்தை உமக்காக தருகின்றோம். உமது அரசின் மேன்மைக்கென அவர்களது உடல் உள்ளம் அனைத்தையும் தருகின்றோம். அர்த்தமிகு வாழ்வைப் பெற்றிட நீர் படைத்த இயற்கையை பண்படுத்தும் நோக்கத்தை எனக்கு பரிசாக தந்து உள்ளீர். நாங்கள் எங்கள் அயலார்களுக்கும் உமக்காகவும், எங்களை நாங்களே அர்ப்பணிக்கிறோம். ஏனெனில் வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிறோம். பயபக்தியையும், பணிவையும் அணிந்து உம்மை நோக்கி ஆவியோடும் உண்மையோடும் வந்து தூய ஆவியாரிடம் எங்களை அர்ப்பணிக்கிறோம். அப்பொழுது கர்த்தருக்கு பயப்படுதலும் பயபக்தியுமே ஞானத்தின் ஆரம்பம் என அறிவோம். பெரும் தொற்றின் காலங்களில் எமக்கு உதவும், குணமாக்கும், வழிநடத்தும். உண்மையாகவே எம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதியும். உமது ஊழியர்களுக்கும், உண்மை மேய்ப்பர்களுக்கும் கண்காணிக்கும் புனிதர்களுக்கும் நாங்கள் நம்பிக்கையும் சமாதானமும் மகிழ்ச்சியும் பெற உதவும். இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் ஆமென்.
நிறைவு இறைவேண்டல்
(ஆயர்கள் தங்கள் சபையின் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி ஜெபிக்கலாம்)
கர்த்தர் கற்றுத்தந்த ஜெபம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
ஆசீர்வாதம்
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உயிருடன் எழுப்பிய கடவுளின் அமைதி உங்கள் எல்லா நற்செயல்களிலும் இருப்பதாக. நமது சர்வ வல்ல ஆண்டவரின் கூட்டுறவும் நமக்கு ஞானமும் எதிர்நோக்கும் தந்து உங்கள் இளமை வாழ்க்கை அர்த்தமுள்ளதாக என்றும் காப்பாராக. ஆமென்.
-------------
This Order of Worship is prepared and translated by the CSI Department of Youth with the Help of Rev. Moses Francis Huggi, Rev. Iniyan Joshva, Rev. Jerin Sester, Rev. Vincent Raj Kumar Rev. Robin Lawrence, Mr. Mervyn Raj, Dr. Vinoth Isaac Peter, Mrs. Shanthi Jeyapaul, Mrs. Sneha Nischal And Rev. Ch. John Nischal Kumar.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.