தென்னிந்திய திருச்சபை
கர்நாடக மத்திய பேராயம்
வாலிபர் ஞாயிறு ஆராதனை முறை
கருப்பொருள்:
கிறிஸ்துவோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள்
ஆராதனைக்கு அழைப்பு
“நீ உன் வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை“ (பிரசங்கி 12:1) தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் வராததற்கு முன்னும் அவரை உன் வாலிபப் பிராயத்திலே நினை.
ஆரம்ப ஜெபம்:
ஆரம்ப பாடல்:
போற்றுதலும் நன்றி சொல்லுதலும்
நடத்துனர்: வாலிப நாட்களில் சகல சந்தோஷங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும், மிக சாதாரணமான வாலிபர்களாகிய நம்மைத் தெரிந்தெடுத்து. அவருடைய திட்டம் நிறைவேறவும், அதில் பங்கெடுக்கவும் செய்த கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக.
சபை: உயிருள்ள ஆண்டவரே, உமது அன்பை நினைவு கூர்ந்து, உம்மை போற்றுகின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துனர்: இருளான நாட்களில் நமக்கு வெளிச்சமாகவும், சோதனை வேளையில் துன்ப நேரத்தில், வியாதிப் படுக்கையில் அவர் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையுமாக இருந்ததற்காகவும் இருக்கப் போகிறதற்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக.
சபை: உயிருள்ள ஆண்டவரே, உமது அன்பை நினைவு கூர்ந்து, உம்மை போற்றுகின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துனர்: நமது சபையின் வாலிபர் சங்கங்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்காகவும், அவர்களின் ஊழிய அர்ப்பணிப்புக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.
சபை: உயிருள்ள ஆண்டவரே, உமது அன்பை நினைவு கூர்ந்து, உம்மை போற்றுகின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துனர்: நமக்கு ஆண்டவர் தந்த ஆலயம், ஆராதனைகள், ஞாயிறு பள்ளி, பெண்கள் ஐக்கிய சங்கம், ஜெப கூட்டங்கள், சுவிசேஷ ஊழியங்கள் இவைகளின் மூலமாக நாம் பெற்றுள்ள ஆன்மீக வாழ்வுகள், நன்மைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.
சபை: உயிருள்ள ஆண்டவரே, உமது அன்பை நினைவு கூர்ந்து, உம்மை போற்றுகின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
பாவ அறிக்கைக்கு அழைப்பு
இளமையும் வலிமையும் ஆண்டவரின் பெரும் ஈவுகள், இந்த ஈவுகளை நாம் அவருக்கேற்றபடி அவருடைய வரம்புக்கு உட்பட்டு அனுபவிக்கத் தவறினோம். அவருடைய சமூகத்திலே பேரின்பமும், அவருடைய வலது பாரிசத்திலே நித்திய பேரானந்தமும் உண்டென்பதை மறந்து, நம்முடைய வழிகளிலே இச்சைகளுக்கு இடம் கொடுத்து சீர்குலைந்தோம். அவருடைய மன்னிப்பைத் தேடுவோம்.
பாவ அறிக்கை
நடத்துனர்: வாலிபனே, உன் சுயபுத்தியின் மேல் சாயாதே, நீ உன்னை ஞானியென்றும் எண்ணிக் கொள்ளாதே என்று நீர் சொல்லியும் கேளாதவர்களாய் எங்கள் சுயபுத்தியினாலே உம்மை விட்டு தூரம் போன எங்களை மன்னியும்.
சபை: எங்களை மன்னியும் ஆண்டவரே.
நடத்துனர்: மாயை, மாயை, இந்த பூலோக வாழ்க்கை எல்லாம் மாயை என்று நீர் எங்களுக்கு கற்றுக்கொடுத்தும், நாங்கள் மேலான பரலோக வாழ்வை எண்ணாது, மாயையான இவ்வுலக சிற்றின்பங்களுக்கு இணங்கி நடந்ததினால் உம்மை விட்டு தூரம் போன எங்களை மன்னியும்.
சபை: எங்களை மன்னியும் ஆண்டவரே.
நடத்துனர்: திருச்சபைக்கும், சமூகத்துக்கும், தேசத்துக்கும், குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாது, கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து உம்மை விட்டு தூரம் போன எங்களை மன்னியும்.
சபை: எங்களை மன்னியும் ஆண்டவரே.
நடத்துனர்: ஓய்வு நாளை அசட்டை பண்ணி, ஆலய ஆராதனையில் கலந்து கொள்ளாமலும், இறைவார்த்தையைக் கேட்டும், அதன்படி நடவாது மனதைக் கடினப்படுத்தி, எங்களது இச்சைகளுக்கு இடம் கொடுத்து, உமது அன்பை வெறுத்து உம்மை விட்டு தூரம் போன எங்களை மன்னியும்.
சபை: எங்களை மன்னியும் ஆண்டவரே
நடத்துனர்: பரம பிதாவே, உமது அன்பையும், மன்னிப்பையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கும் நம்பிக்கையையும் அறிந்து எங்களது மன்னிப்புக்காகவும், மன மாறுதலுக்காகவும் உம்மையே சார்ந்திருக்கிறோம் ஆண்டவரே.
சபை: ”தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே மெய்மனதானந்தமே! செய்யநின் செம்பாதம் சேவிக்க இவ்வேளை அய்யா, நின் அடிபணிந்தேன். ஆ.. ஆ.. ஆ..“
பாவ விமோச்சனம் (சபைகுரு)
அவர்கள் எனக்கு விரோதமாய் செய்த எல்லா அக்கிரமங்களுக்கும், அவர்களை நீங்கலாக்கி சுத்திகரித்து, அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போமாக.
முறை முறையாக வாசித்தல்: சங்கீதம்
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாட்டுப் பகுதி
நிருபப் பகுித
நற்செய்திப் பகுதி
சிறப்பு பாடல், குறு நாடகம்:
அருளுரை:
அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்:
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.
அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறோம். ஆமென்.
அறிவிப்புகள்:
காணிக்கை பாடல்:
மன்றாட்டு லித்தானியா
நடத்துனர்: வாழ்க்கையில் நம்பிக்கையற்று, மனங்கலங்கி யுத்தங்களினாலும், பிணியாலும், இயற்கை சீற்றங்களினாலும், வறுமையினாலும் துன்பப்படுகிற வாலிபர்களுக்காகவும், மற்ற அனைவருக்காகவும் வேண்டிக்கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.
நடத்துனர்: அமைதியிழந்து வீண் பொழுது போக்கும் வாலிபர்களுக்காகவும், படிக்கிற வாலிபர்களுக்காகவும் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வாலிபர்களுக்காகவும் வேண்டிக் கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: திருச்சபையின் வாலிபர், சூழ்நிலை, தற்காலத்தில் காணப்படும் முரண்பாடான கொள்கைகளால் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதபடி காத்துக்கொள்ளவும், உமக்கென்று தங்களை அர்ப்பணிக்கவும் வேண்டுமென்று வேண்டிக் கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: கிறிஸ்துவுக்காக, வாலிபர் மத்தியில் உழைத்து வரும் வாலிபர் இயக்கம், மாணவர் கிறிஸ்தவ இயக்கம், சுவிசேஷ ஐக்கியக் குழு முதலிய நிறுவனங்களுக்காக வேண்டிக் கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: உலகெங்கும் நடைபெறும் மிஷனெரிப் பணிக்காகவும், நம் சபையின் மூலம் நடைபெறும் மிஷனெரிப் பணிக்காகவும் குறிப்பாக நமக்கு கிளை சபைகள் உண்டாகவும் வேண்டிக் கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: இந்த உலகம், நமது நாடு, நாட்டு தலைவர்கள் நமது திருமண்டலம், பேராயர், திருமண்டல அதிகாரிகள், நமது திருச்சபை, நமது போதகர், சபை முறையில் அனைவரும் தங்கள் பொறுப்பகளை உணர்ந்து தேவனுக்கு பிரியமான முறையில் செயல்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: நம் சபையின் ஞாயிறு பள்ளி, வாலிபர் ஐக்கிய சங்கங்கள், பெண்கள் ஐக்கிய சங்கம் மற்றும் நமது திருச்சபையின் ஒவ்வொரு அங்கத்தினர்களுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும், நிறைவான சந்தோஷங்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே தேவா – இப்போ
ஏழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
பிரதிஷ்டை ஜெபம் (வாலிபர்கள் சேர்ந்து)
இனி ஒரு பொழுதும் நான் எனக்கு சொந்தமானவன் அல்ல, உமக்கே சொந்தம். நீர் எந்நிலைமையில் எங்கு, வைத்தாலும் அங்கு உமக்காக வேலை செய்ய, கஷ்டமனுபவிக்க உம்முடைய ஊழியத்திலோ, தாழ்மையிலோ, நிறைவிலோ, வெறுமையிலோ, உள்ளத்திலோ, வறுமையிலோ, நான் என்னுடைய மனப்பூர்வமாக, என் முழு இருதயத்தோடு எல்லாவற்றையும் உம்முடைய வழிநடத்தலுக்கு ஒப்புக் கொடுக்கிறேன். மகிமை நிறைந்த பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகியத் திரியேக கடவுள் என்னுடையவர். நான் அவருடையவன். நான் பூலோகத்திலே செய்த இந்த உடன்படிக்கை பரலோகத்தில் முத்திரிக்கப்படுவதாக. ஆமென்.
கர்த்தருடைய ஜெபம்
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
இறையாசி
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களை காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் மேல் கிருபையாய் இருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள் மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். ஆமென்.
(அல்லது)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய கடவுளுடைய அன்பும், தூய ஆவியானவருடைய பாதுகாப்பும், பராமரிப்பு, வழிநடத்துதளும் நம் அனைவரோடும் கூட இன்றும் என்றும் சதாக்காலங்களிலும் நின்று நிலைத்திருப்பதாக. ஆமென்.
நிறைவு பாடல்
===============
Church of South India
Karnataka Central Diocese
Youth Sunday
order of Service
20th October 2019
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.