Type Here to Get Search Results !

Book of JUDE part one | bible study in tamil | யூதா புத்தகம் வேத ஆராய்ச்சி | Jesus Sam

=============
யூதா புத்தகம் (பாகம் 1)
==============


பரிசுத்த வேதாகமத்தில் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திற்கு முந்தின புத்தகம் தான், இந்த யூதா புத்தகம். யூதா புத்தகம் ஒரு அதிகாரம் மட்டுமே கொண்ட சிறிய புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தில் உள்ள முதல் இரண்டு வசனங்களைக் குறித்து மாத்திரம் இந்த பதிவில் தியானிப்போம்.

யூதா 1,2
1. இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2. உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.

யூதா புத்தகத்தை யூதா என்ற நபர் தான் எழுதுகிறார். இவர் இயேசுவின் ஊழியக்காரன் என்று தன்னை அறிமுகம் செய்கிறார். மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுடைய பெயர் பட்டியலை நாம் பார்க்க முடியும். அதில் யூதா என்ற பெயர் இரண்டு முறை இடம் பெற்றிருக்கும். ஒருவர் யூதாஸ்காரியோத்து, மற்றவர் இந்த யூதா புத்தகத்தை எழுதின யூதா.

இந்த யூதா புத்தகத்தை எழுதுவது யூதாஸ்காரியோத்து அல்ல. அவர் இயேசுவை காட்டிக்கொடுத்த பின்பு, தற்கொலை செய்து இறந்து போனார்.

யூதா புத்தகத்தை எழுதின இந்த யூதா, தன் புத்தகத்தில் முதல் வசனத்தில் தன்னை அறிமுகப்படுத்தின விதத்தை பார்க்கும்போது, இவர் எந்த அளவிற்கு தாழ்மையானவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இவர் தன்னை அறிமுகம் செய்யும்போது, நான் இயேசுவின் ஊழியக்காரன். யாக்கோபின் சகோதரன் என்று அறிமுகப்படுத்துகிறார்.

இயேசுவின் சீஷர்களில் யாக்கோபு என்ற பெயரில் இரண்டு நபர்கள் இருந்தார்கள். ஒருபர் பெரிய யாக்கோபு. மற்றவர் சின்ன யாக்கோபு. பெரிய யாக்கோபுவின் சகோதரன் தான் இந்த யூதா என்ற நபர்.

இயேசு தனது ஊழியப்பாதையில் மூன்று சீஷர்களோடு மிக நெருக்கமாக இருந்தார். அவர்கள்: பேதுரு, யோவான், யாக்கோபு. இவர்களில் யாக்கோபும், யோவானும் செபதேயுவின் குமாரர்கள். இந்த யாக்கோபு தான் சின்ன யாக்கோபு.

யூதா புத்தகத்தை எழுதின யூதா, தன்னை யாக்கோபின் சகோதரன் என்று சொன்னார், ஆனால் ஒரு முக்கியமான காரியத்தை அவர் சொல்ல விரும்பவில்லை. இந்த பெரிய யாக்கோபுவும், இந்த யூதாவும் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்கள் (தம்பிமார்கள்).

இயேசு கிறிஸ்து மரியாள் என்ற கண்ணி பெண்ணின் வயிற்றில் குழந்தையாகப் பிறந்தார். மரியாள் தன் வாழ்நாளின் முடிவு வரை கண்ணியாகவே இருந்து மரித்தாள் என்று அநேகர் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. இயேசு கிறிஸ்துவை பெற்றெடுக்கும் வரை மரியாள் கண்ணி பெண்ணாக இருந்தாள். ஆனால், இயேசு கிறிஸ்து பிறந்த பிறகு, மரியாளுக்கும் யோசேப்புக்கும் நான்கு குமாரரும், சில குமாரத்திகளும் பிறந்தார்கள் என்று சரித்திரம் சொல்லுகிறது.

யூதா தனது புத்தகத்தில் நான் யாக்கோபின் சகோதரன் என்று சொல்லுகிறார். பவுல் கலாத்தியர் சபைக்கு எழுதும்போது, யாக்கோபு இயேசுவின் சகோதரன் என்று எழுதுகிறார்.

கலாத்தியர் 1:19
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

பவுல் அப்போஸ்தலன் யாக்கோபு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரன் என்று உறுதியாய் சொல்லுகிறார். எந்த யாக்கோபு என்றால், அப்போஸ்தலனாகிய (இயேசுவின் சீஷன்) யாக்கோபு என்றும் அவர் சொல்லுகிறார்.

பவுல் யாக்கோபு இயேசுவின் சகோதரன் என்று சொல்லுகிறார். யூதா நான் யாக்கோபின் சகோதரன் என்று சொல்லுகிறார். அப்படியானால், யூதாவும் இயேசு கிறிஸ்துவின் சகோதரரில் ஒருவர் என்பது உண்மை.

மாற்கு 6:1-3
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீஷரும் அவரோடே கூட வந்தார்கள்.
2. ஓய்வு நாளானபோது, ஜெப ஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.

இயேசு தாம் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு வந்து அற்புத அடையாளங்கள் செய்தபோது, அதைக் கண்ட ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். காரணம்,  இயேசுவையும் அவருடைய சகோதர, சகோதரிகளையும் நாசரேத் ஜனங்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் தான் இயேசு முப்பது வயது வரை வளர்ந்தார்.

யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகிய நால்வரும் இயேசுவின் சகோதரர்கள் என்றும், மற்ற சகோதரிகளும் இயேசுவுக்கு இருந்தார்கள் என்றும் மாற்கு 6:3-ல் வாசிக்கிறோம். சீமோன் என்றால் சீமோன் பேதுரு அல்ல. இவர் இயேசுவின் சகோதரன் சீமோன்.

இந்த வசனங்கள் மூலம் யூதா புத்தகத்தை எழுதியது, இயேசுவின் சகோதரன் யூதா என்பது நிரூபனமாகிறது. இந்த யூதா எந்த அளவிற்கு தாழ்மையுள்ளவர் என்றால், தான் இயேசுவின் சகோதரன் என்று கூட சொல்ல அவர் விரும்பவில்லை.

இந்த நவீன காலத்தில் சில ஒரு சில ஊழியர்கள், யாரேனும் பெரிய ஊழியரை சந்தித்து ஒரு சில வார்த்தைகள் பேசி, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டால், அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்கள் சபையில் அதுதான் பிரசங்கமாக இருக்கும். நான் அவரை சந்தித்தேன், அவரோடு உறையாடினேன், அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என்று பெருமையாக சொல்லுவார்கள்.

ஒருசில ஊழியர்களுக்கு தங்கள் பெயருக்கு பின், அவர்கள் படித்த பட்டத்தை எழுதவில்லையென்றால், கோபம் வரும். நான் எவ்வளவு படித்திருக்கிறேன், உங்களுடைய அறிவிப்பு பலகையில் எதையும் எழுதாமல் இருக்கிறீர்களே, ஒரு ஊழியனை இப்படித்தான் நீங்கள் மதிப்பீர்களா என்று கேட்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

யூதாவும் இப்படி பெருமைப்பட விரும்பினால், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரன் என்று மிகவும் பெருமையாக எழுதியிருக்க முடியும். ஆனால், அவர் அதை விரும்பவில்லை.

யூதா தனது புத்தகத்தில் தான் இயேசுவின் சகோதரன் என்று சொல்லி, தனக்கு பெருமையை தேடிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், நான் இயேசுவின் ஊழியக்காரன் என்று சொல்லுகிறார். தமிழ் வேதாகமத்தில் ஊழியக்காரன் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மூல மொழியான கிரேக்க மொழியில் அடிமை (டூலோஸ்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் இயேசுவானவர் நம்மை அடிமையாகத்தான் மீட்டுக்கொண்டார். நாம் பாவிகளாய் மரித்தோமானால், நாம் நரகத்திற்குத் தான் செல்ல வேண்டும். நரகத்திற்கு பாத்திரரான நம்மை ஆண்டவர் கிரயம் செலுத்தி (இரத்தம் சிந்தி, தம் சரீரத்தை நொருக்கி) நம்மை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவினால் வாங்கப்பட்டவன் அதாவது கிறிஸ்துவினால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டவன் என்று பொருள்.

நாம் விலை கொடுத்து ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால் அந்த பொருள் என்னுடையது. நான் என் விருப்பப்படி அதை பயன்படுத்தலாம். அது எனக்கு அடிமை.

அதுபோல கிறிஸ்தவனும், கிறிஸ்துவினால் விலைக்கிரயம் செலுத்தி வாங்கப்பட்டவன். எனவே, கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்கு அடிமை.

ஒரு அடிமை நான் இந்த இந்த வேலையைத்தான் செய்வேன், இந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. இந்த நேரத்திற்கு தான் வருவேன், இந்த நேரத்தில் தான் வேலையை செய்வேன் என்று ஒரு அடிமை சொல்ல முடியாது. அடிமை என்பவன் எஜமான் சொல்லும் எல்லா வேலைகளையும், எல்லா நேரமும் செய்ய வேண்டும்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு நல்லவர் என்றால், நம்மை விலைகொடுத்து வாங்கினாலும், அவர் நம்மை அடிமைகளாய் நடத்தவில்லை. நம்மை ஒரு சகோதரனாக, ஒரு நண்பனாக நடத்துகிறார். பிதாவின் குமாரராக நம்மை மாற்றியிருக்கிறார். இயேசு நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொண்டார் என்பதினால், சில நேரங்களில் அவருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதையை நாம் கொடுக்க தவறிவிடுகிறோம்.

ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களோடு இணைந்து விளையாடுகிறார் என்றால், அவர் மாணவர்களை நண்பர்களாக இணைத்துக்கொண்டார் என்று பொருள். அதற்காக மாணவர்கள் அவரை வாடா, போடா என்று அழைக்க முடியாது. கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் தரத்திற்கு தன்னை தாழ்த்தினாலும், அவர் பேராசிரியர்தான். அவருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதையை மாணவர்கள் கொடுத்துதான் ஆக வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அவருடைய சகோதரராக, நண்பராக மாற்றிக்கொண்டாலும், நாம் அவருடைய அடிமைகள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

யூதா 1-ம் வசனத்தில் அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறவதாவது என்று வாசிக்கிறோம். இந்த வார்த்தை மூல மொழியான கிரேக்க மொழியில் அழைப்பைப் பெற்றவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ஆண்டவர் எல்லோரையும் ஊழியத்திற்கென்று அழைக்கிறார். அந்த அழைப்பை நான் பெற்றிருக்கிறேனா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மத்தேயு 20:16
அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்.

அநேக கிறிஸ்தவர்கள் தனக்கு அழைப்பு இருக்கிறதா? இல்லையா? என்று யோசித்தே காலத்தை வீணடித்துவிடுவார்கள். அநேக ஊழியர்களுடைய பிள்ளைகளும், ஆண்டவர் என்னை அழைக்கும்வரை ஊழியம் செய்ய மாட்டேன் என்று சொல்லுவதை பார்த்திருக்கிறோம்.

உண்மையில் இரட்சிக்கப்பட்ட எல்லோரையும் கர்த்தர் ஊழியத்திற்கென்று அழைத்திருக்கிறார். இரட்சிக்கப்பட்ட எல்லோருக்கும் யூதா கடிதம் எழுதவில்லை. அந்த அழைப்பைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே எழுதுகிறார்.

ஆண்டவரின் அழைப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இரண்டு விதமான ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று யூதா எழுதுகிறார்.

அழைக்கப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்கள் என்று யூதா எழுதுகிறார்.

பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்ற பதத்திற்கு மூல மொழியில் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்காக ஒதுக்கப்படுதல் என்று பொருள்.

எல்லோரையும் ஆண்டவர் நேசிக்கிறார், எல்லோரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார். ஆனால், அவருக்காக ஊழியம் செய்கிறவர்களை, ஆண்டவர் தனக்கென பிரித்து எடுக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியம். அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். இந்த கனமான ஊழியத்தின் மகத்துவத்தைக் குறித்து, அநேகர் அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டால், அது சாதாரண மரத்தால் செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும் சாதாரண பொருட்கள் தான். ஆனால், அந்த உடன்படிக்கைப் பெட்டியை யாராலும் தொட முடியாது. கர்த்தர் அனுமதிக்க மாட்டார்.

எல்லோரையும் ஆண்டவர் நேசித்தாலும், அவரால் பிரித்தெடுக்கப்பட்ட ஊழியர்களை தொடுவதற்கு கர்த்தர் ஒருபோதும் அனுமதி கொடுப்பதில்லை.

ஆண்டவருக்காக ஊழியம் செய்கிறவர்களை கர்த்தர் கூடுதலாக பாதுகாக்கிறார். நம்முடைய ஆண்டவர் சுயநலக்காரர் அல்ல, பட்சபாதம் பார்க்கிறவர் அல்ல. ஒருவர் எனக்கு ஊழியம் செய்தால், அவனை பிதா கனம்பண்ணுவார் என்று இயேசு சொல்லுகிறார். பிதா கனம்பண்ணின ஒருவரை இயேசு பாதுகாக்கமாட்டாரா? ஊழியக்காரர்களை இயேசுவானவர் அதிகமாக கனம்பண்ணுகிறார், அதிகமாக பாதுகாக்கிறார்.

காரணம் என்னவென்றால், ஊழியம் செய்கிறவர்களுக்கு பிசாசின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எங்கே தாக்குதல் அதிகமோ, அங்கே பாதுகாப்பும் அதிகம் தேவை. ஊழியர்களை நேசிப்பவர்களைவிட, ஊழியகர்களை கேலிசெய்கிறவர்களும், பரியாசம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். ஜனங்கள் யாரை அதிகமாக கேலி செய்து, பரியாசம் செய்கிறார்களோ அவர்களை இயேசு கிறிஸ்து கூடுதலாக பாதுகாக்கிறார்.

பிதாவினால் அழைக்கப்பட்டவர்கள், இயேசுவினால் பாதுகாக்கப்படுகிறவர்களுக்கு, இன்னும் மூன்று காரியங்கள் தேவை என்று யூதா சொல்லுகிறார்.

யூதா 2
உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.

இரக்கம்
ஆண்டவர் ஊழியக்காரர்களுக்கு அதிக இரக்கம் கொடுக்கிறார். அதிக இரக்கம் என்றால், அவர்கள் அதிகமாக பாவம் செய்யலாம் என்று பொருள் அல்ல.

தாவீது ஒரு பெண்னை (பத்சேபாள்) இச்சித்து அவளோடு தவறான உறவு கொள்கிறார். அவளுடைய கணவன் உரியாவை நயவஞ்சகமாக கொலையும் செய்துவிடுகிறார். எனவே ஆண்டவர் நாத்தான் தீர்க்கதரிசியை தாவீதினிடத்தில் அனுப்பி, தாவீதின் பாவத்தை உணர்த்தி, தாவீதை மனந்திரும்பச் செய்தார். ஏனென்றால், தாவீது கர்த்தருடைய ஊழியக்காரர் என்ற படியினால், கர்த்தருடைய இரக்கம் தாவீதுக்கு அதிகமாக இருந்தது. தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவன்.

ஆண்டவருடைய ஊழியத்தை செய்கின்ற நம்மேல் ஆண்டவர் அதிக இரக்கம் வைத்திருக்கிறார். ஆண்டவர் நம்மேல் இரக்கம் வைத்ததினால், நாமும் மற்றவர்கள் மேல் அதிக இரக்கம் பாராட்ட வேண்டும். நம்மிடமும் இரக்கம் பெருக வேண்டும் என்று யூதா எழுதுகிறார்.

சமாதானம்:
மற்ற உலக மனிதர்களை விட ஊழியக்காரர்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள். உலக மனிதர்கள் பகல் முழுவதும் வேலை செய்தாலும், மாலையில் வீட்டிற்கு வந்ததும் ஓய்வு எடுக்கிறார்கள். ஆனால் ஊழியக்காரர்கள் வீட்டிற்கு வந்தாலும் ஜெபம், வேதம் வாசிப்பு என்று எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கூடுதலான சமாதானத்தை ஆண்டவர் கொடுக்கிறார்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று மத்தேயு 5-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஊழியக்காரர்கள் சமாதான பிரதிநிதிகள். எனவே மற்றவர்களைக் காட்டிலும் ஊழியர்களிடத்தில் சமாதானம் அதிகமாக பெருக வேண்டும் என்று யூதா எழுதுகிறார்.

அநேக நேரங்களில் சமாதானத்தின் பிரதிநிதிகளான ஊழியர்கள் தான் சண்டைக்குக் காரணமாய் இருக்கிறார்கள்.

இரண்டு பெண்களால் ஒரே இடத்தில் வாழ முடியாது என்று பொதுவாக சொல்லுவார்கள். அது அம்மா மகளாக இருந்தாலும், சகோதரிகளாக இருந்தாலும், மாரியார் மருமகளாக இருந்தாலும் இப்படி இரண்டு பெண்கள் இருக்கும் இடத்தில் சண்டைகள் வருவது இயல்பு.

ரோட்டிற்கு இந்த புறத்தில் அரசு இராணுவ அலுவலகமும், ரோட்டிற்கு அந்த புறத்தில் தீவிரவாதிகளின் அலுவலகமும் இருந்தால் அந்த இடம் நின்மதியாக இருக்குமா?

இரண்டு பெண்கள் இருக்கும் இடத்தில் கூட சண்டை இல்லாமல் இருக்கும், இராணுவமும் தீவிரவாதிகளும் அருகருகே இருக்கின்ற இடத்திலும் சண்டை இல்லாமல் இருக்கும், ஆனால் இரண்டு சபைகள் அருகருகே இருக்குமானால், அந்த ஊழியர்களுக்கு இடையே சண்டைகள் இல்லாமல் இருப்பதில்லை என்ற அளவிற்கு இன்றைக்கு ஊழியர்களின் நிலை மாறிவிட்டது.

இந்த நவீன உலகத்தில் ஒற்றுமையாய் இயங்காத ஒரு குழு என்றால் அது கிறிஸ்தவ ஊழியர்கள் என்பதை நான் வேதனையோடு பதிவு செய்கிறேன்.

பிதாவினால் வேறுபிரிக்கப்பட்ட, இயேசுவினால் காக்கப்பட்ட ஊழியர்களாகிய நீங்கள் தயவு செய்து சமாதானமாய் வாழுங்கள் என்று யூதா எழுதுகிறார்.

அன்பு:
அன்பு என்ற பதத்திற்கு மூல மொழியில் அகாப்பே என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்கும் மூன்று சொற்கள் உண்டு. ஈரோஸ் அன்பு, பிளேயோஸ் அன்பு, அகாப்பே அன்பு.

ஈரோஸ் அன்பு என்றால் காமம் என்ற கேவலமான அன்பு.

பிளேயோஸ் அன்பு என்றால் சகோதரத்துவமான அன்பு.

அகாப்பே அன்பு என்றால் பிரதிபலன் எதிர்பாராத அன்பு. அந்த அன்பு ஊழியர்களிடத்திலே பெருக வேண்டும் என்று யூதா எழுதுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த பின்பு, பேதுரு மனமுடைந்தவராக மற்ற சீஷர்களோடு மீன்பிடிக்க சென்றபோது, இயேசு அவர்களை அழைத்து உணவு கொடுக்கிறார். அப்பொழுது பேதுருவைப் பார்த்து பேதுருவே நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? என்று கேட்கிறார். பேதுரு சொன்ன பதிலின் அடிப்படையில் ஆண்டவர் பேதுருவுக்கு பொறுப்பு கொடுக்கிறார்.

பேதுரு பிளேயோஸ் அன்புதான் இருக்கிறது என்று சொல்லுகிறார். அதற்கு இயேசு: ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்று சொல்லுகிறார். சிறிய ஊழியத்தைக் கொடுத்தார். அதற்கு பின்பு, பேதுருவின் நிலையை அறிந்து, என் ஆடுகளையும் மேய்ப்பாயாக என்று கொஞ்சம் பெரிய ஊழியத்தைக் கொடுக்கிறார்.

ஆண்டவருடைய ஊழியத்தை ஒருவர் செய்ய வேண்டுமானால், அவரிடத்தில் இருக்க வேண்டிய தகுதி கல்வி அல்ல. உண்மையில் ஒரு ஊழியக்கு இருக்க வேண்டிய தகுதி என்னவென்றால், ஆண்டவர் மேல் அவன் வைத்திருக்கும் அன்பு மாத்திரமே.

ஊழியன் கடவுள் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறானோ, அந்த அளவிற்கு ஆண்டவர் அவனைப் பயன்படுத்துவார்.

நாம் ஆண்டவர் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவு தான், நம்முடைய ஊழியம் எந்த அளவிற்கு வளரப்போகிறது என்பதை நிர்ணயம் செய்யும்.

1 பேதுரு 4:8
அன்பு திரளான பாவங்களை மூடும் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

நாம் கடவுள் மேல் அன்பு அதிகம் வைத்திருப்போமானால், நாம் அறியாமல் செய்யும் தவறுகளையும் ஆண்டவர் மன்னித்து, நம்மை திருத்துகிறார். நம்மை நல்வழிப்படுத்துகிறார்.

யூதா புத்தகம் முதல் இரண்டு வசனங்களைக் குறித்து அழமாக அறிந்து கொண்டிருக்கிறோம். யூதா முதலாவதாக தாழ்மையை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள் அல்ல, அழைப்பைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆண்டவர் இரண்டு வித ஆசீர்வாதங்களைத் தருகிறார் என்று பார்ததோம்.

1. பிதா அவர்களை பிரித்தெடுக்கிறார்.

2. இயேசு கிறிஸ்து அவர்களை பாதுகாக்கிறார்.

இவை இரண்டு மாத்திரம் போது, ஒரு ஊழியனுக்கு இன்னும் மூன்று ஆசீர்வாதங்கள் வேண்டும் என்று யூதா விரும்புகிறார்.

ஆண்டவர் ஊழியர்களிடத்தில் இரக்கம் வைத்திருப்பது போல, ஊழியர்களும் மற்றவர்களிடத்தில் இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

ஆண்டவர் ஊழியர்களுக்கு சமாதானத்தைக் கொடுக்கிறது போல, ஊழியர்களும் மற்றவர்களிடத்தில் சமாதானமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டவர் ஊழியர்களிடத்தில் அன்பாய் இருக்கிறதுபோ, ஊழியர்களும் மற்றவர்களிடத்தில் அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக…. ஆமென்…..!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.