============
யூதா புத்தகம் (பாகம் 2)
============
யூதா புத்தகம் இரண்டாம் பாகத்தில் மூன்றாம், நான்காம் வசனங்களைக் குறித்து நாம் தியானிக்க இருக்கிறோம்.
யூதா 3,4
3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
4. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
பிரியமானவர்களே
மூன்றாம் வசனத்தில் யூதா பிரியமானவர்களே என்று எழுதுகிறார். யாரைப் பார்த்து எழுதுகிறார் என்றால், ஆண்டவருடைய ஊழிய அழைப்பைப் பெற்று, ஊழியம் செய்கிறவர்களைப் பார்த்து, ஊழியக்காரனாகிய யூதா பிரியமானவர்களே என்று அழைக்கிறார். தமிழ் வேதாகமத்தில் பிரியமானவர்களே என்று எழுதியிருக்கின்ற பதம், மூல மொழியான கிரேக்க மொழியில் நண்பர்களே என்று தான் எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலும் நண்பர்கள் (Dear Friends) என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊழியர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்தவம் இன்று சபை வாரியாக பிரிந்து கிடக்கிறது. எனவே கிறிஸ்தவ ஊழியர்களும், விசுவாசிகளும் மற்ற கிறிஸ்தவர்களிடம் நண்பர்களாக பழகுவது இல்லை. அநேக கிறிஸ்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், நான் செல்லும் சபை தான் சரியான சபை, என்னுடைய சபையில் மட்டும் தான் உண்மையான சத்தியம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. என்னுடைய சபையில் மட்டும் தான் சிறப்பான இசை இருக்கிறது. இப்படியெல்லாம் நினைக்கின்றபடியினால், மற்ற சபை விசுவாசிகளைப் பார்க்கும்போது, எதிரியைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறார்கள். கிறிஸ்தவர்களின் இச்செயல்களினால் பிசாசானவனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து விடுகிறது.
பரலோகத்தில் இயேசுவோடு நாங்கள் ஒன்றாய் இருப்போம் என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், பூமியில் சக விசுவாசிகளைப் பார்க்கும்போது எதிரியைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்.
கிறிஸ்தவ சபைகளிலே வித்தியாசங்கள் உண்டு. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய வீடுகளில் சுவையான உணவுகளைச் சமைக்கிறோம். எல்லோருடைய வீட்டிலும் ஒருநாள் பருப்பு சாதம் தயார் செய்கிறோம் என்றால், எல்லார் வீட்டிலும் ஒரே சுவை இருப்பதில்லை. ஒரு வீட்டில் உப்பு அதிகமாக இருக்கும். ஒரு வீட்டில் உப்பு குறைவாக இருக்கும். ஒரு வீட்டில் தண்ணீர் அதிகமாக இருக்கும், ஒரு வீட்டில் தண்ணீர் குறைவாக இருக்கும். ஒரு வீட்டில் காரம் அதிகமாக இருக்கும், ஒரு வீட்டில் காரணம் குறைவாக இருக்கும். இதைப்போலவே சபைப் பிரிவுகளிலும் வித்தியாசம் உண்டு. இதைப்பயன்படுத்தி பிசாசானவன், சபை விசுவாசிகளுக்கிடையே உள்ள ஐக்கியத்தைக் கெடுத்துப்போடுகிறான்.
அந்த சபைக்கு அந்த செய்தியாளர் வருகிறார் என்றால், நான் அந்த சபைக்கு செல்ல மாட்டேன் என்று சொல்லும் கிறிஸ்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியானால், அவர் பரலோகம் சொல்கிறார் என்றால், நாம் பரலோகம் செல்லாமல் இருந்து விடுவோமா?
ஒவ்வொரு கிறிஸ்தவனும், ஒவ்வொரு ஊழியனும் மற்ற கிறிஸ்தவர்களை நண்பனாக பார்க்க வேண்டும் என்று யூதா கற்றுக்கொடுக்கிறார்.
பொதுவான இரட்சிப்பு
பொதுவான இரட்சிப்பு என்றால், பாவத்திற்கு மன்னிப்பு பெற்று இரட்சிக்கப்படும் நிலை. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இரட்சிக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படாதவர்களுக்குத் தான் இரட்சிப்பைக் குறித்துப் பேசுவார்கள்.
யூதா ஊழியர்களுக்குத்தான் எழுதுகிறார், ஆனால் நான் இரட்சிப்பைக் குறித்து எழுத ஆசையாய் இருந்தேன் என்று எழுதுகிறார்.
இரண்டு ஊழியர்கள் பேசிக்கொள்ளுகிறார்கள் என்றால் ஊழியத்தைக் குறித்து பேசலாம், குடும்பத்தைக் குறித்து பேசலாம், உலக நடப்புகளைக் குறித்து பேசலாம், விளையாட்டைக் குறித்துப் பேசலாம். இப்படி எதையாகிலும் பேசலாம். இரண்டு ஊழியர்களும் இரட்சிப்பைப் பற்றி பேசுவதற்கு அவசியம் இருக்குமா?
யூதா என்ன சொல்ல வருகிறார் என்றால், ஊழியர்களாகிய நீங்கள் மற்ற எத்தனையோ காரியங்களைக் குறித்து பேசுவதைக் காட்டிலும், இரட்சிப்பைக் குறித்து பேசுங்கள். எங்கோ பாவிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, ஆண்டவர் தன்னுடைய ஜீவனையும் கொடுத்து நரகத்திலிருந்து நம்மை மீட்டு, பரலோக ராஜ்ஜியத்திற்கு தகுதிப்படுத்தியிருக்கிறாரே, அந்த இரட்சிப்பைக் குறித்து நாம் பேச வேண்டுமென்று யூதா விரும்புகிறார்.
இரட்சிப்பு என்பது நம்முடைய வாழ்வில் நமக்குக் கிடைத்த அதிக உன்னதமான பரிசு. அதைக் குறித்து கடைசியாக நம்முடைய குடும்பத்தில் எப்போது பேசினோம் என்று யோசிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம் எப்போது பேசினோம் என்று யோசிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
விசுவாச போராட்டம்
கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட பரிசுத்தவான்களாகிய நமக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் போராட வேண்டுமென்று யூதா எழுதுகிறார்.
போராட்டம் என்றால் யுத்தம். யுத்தம் என்றாலே கிறிஸ்தவர்களுக்கு பிசாசுடன் போராட்டம் என்று தான் நினைவிற்கு வரும்.
யூதா யாரோடு போராட வேண்டுமென்று சொல்லுகிறார் என்றால், பக்கவழியாய் நுழைந்த கள்ள உபதேசிகளோடு போராட வேண்டும் என்று சொல்லுகிறார்.
ஒவ்வொரு ஊழியனும் பிரசங்கம் செய்யும்போது, பரிசுத்த வேதாகமத்திலிருந்து தான் பிரசங்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய சபையின் மேய்ப்பர் பரிசுத்த வேதாகமத்திலிருந்து பிரசங்கம் செய்கிறாரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இன்றைக்கு அநேக ஊழியர்கள், வேதத்தை மறந்து கட்டுக்கதைகளையும், தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் பிரசங்கமாக மாற்றிவிட்டார்கள். வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை மறந்து, கடவுளை மறந்து, மக்களைப் பிரியப்படுத்தும் விதத்தில் வார்த்தைகளை பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மக்களை நம்பவைப்பதற்காக சில ஊழியர்கள் பிரசங்கத்தின் போது பொய்களையும் சொல்லத் துவங்கிவிட்டார்கள். ஒரு சில ஊழியர்கள் நான் பரலோகம் சென்று வந்தேன் என்றும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில ஊழியர்கள் நான் பாதாளத்திற்கு சென்று வந்தேன் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நான் பரலோகம் சென்றேன், பாதாளம் சென்றேன் என்று சொல்லி புத்தகம் எழுதவும் செய்கிறார்கள்.
இதுவரை பரலோகத்திற்கு ஒருவரும் சென்றதில்லை என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். சபை எடுத்துக்கொள்ளப்படும்போது கிறிஸ்துவுக்குள்ளாக மரித்த கிறிஸ்தவர்கள் உயிரோடு எழுந்து, உயிரோடு இருக்கின்ற கிறிஸ்தவர்களோடு இணைந்து, பரலோகத்திற்கு செல்வார்கள். இந்த நாள் வரும் வரை ஒருவரும் பரலோகத்திற்குச் செல்லவோ, பார்க்கவோ முடியாது.
ஆண்டவர் நம்முடைய உள்ளத்தைத்தான் பார்க்கிறார். எனவே நாம் சபைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாம் இருந்த இடத்தில் கர்த்தரை ஆராதிக்கலாம் என்று சொல்லுகிற கள்ள உபதேசகர்களும் இருக்கிறார்கள். ஆனால் வேதத்தில் சபைக் கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று வாசிக்கிறோம்.
சில ஊழியர்கள் நான் ஒரு முறை இரட்சிக்கப்பட்டுவிட்டாள், பரலோகம் எனக்கு சொந்தமானதாக மாரிவிடும் என்று பிரசங்கிக்கிறார்கள். நாம் செய்த பாவங்களுக்காக, செய்யப்போகும் பாவங்களுக்காக இயேசு சிலுவையிலே இரத்தம் சிந்தினார். எனவே, நாம் பாவம் செய்தாலும் பரலோகம் செல்ல முடியும் என்று பிரசங்கிக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. கடைசி வரை விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுகிறவன் தான் பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பான் என்று வேதம் சொல்லுகிறது.
கள்ள உபதேசிகள் தேவனுடைய கிருபையை பிழையான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று யூதா எழுதுகிறார். தேவனுடைய கிருபை என்றால், இரட்சிக்கப்பட தகுதி இல்லாத நமக்கு இரட்சிப்பைக் கொடுத்து, நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக மாற்றியதுதான் கிருபை.
யாரேனும் தவறு செய்திருக்க, அந்த தவறுக்கான தண்டனையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், அந்த தவறு செய்த நபர் எனக்கு விருப்பமான ஒரு நபராக இருக்க வேண்டும். யாரோ ஒருவர் தவறு செய்தால், அந்த தவறுக்கான தண்டனையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
சிலர் இப்படியாக சொல்லுவதுண்டு, என்னை என்ன வேண்டுமானாலும் சொல், என் தாயைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, என்னை என்ன வேண்டுமானாலும் சொல் என் கணவனைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, என்னை என்ன வேண்டுமானாலும் சொல் என் பிள்ளைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாதே என்று சொல்லுகிறவர்களை நாம் பார்த்திருப்போம். நாமே அநேக நேரங்களில் அப்படி சொல்லியிருப்போம்.
நமது வீட்டிற்கு அருகாமையில், நமது உறவினர் அல்லாத யாரோ ஒருவர் குடியிருக்கிறார். அவரை யாரோ ஒருவர் தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டுகிறார் என்றால், அவரிடம் நாம் சென்று அவருக்கு பதிலாக என்னைத் திட்டுங்கள் என்று சொல்லமாட்டோம். யாரோ, யாரையோ திட்டுகிறார் என்று சொல்லி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
ஆனால் பாவத்திலே வாழ்ந்து கொண்டிருந்த நம்மை மீட்பதற்காக, நம்முடைய தண்டனையை ஒருவர் ஏற்றுக்கொண்டு, என்னை அந்த தண்டனையிலிருந்து மீட்டெடுத்திருப்பாரானால், அதற்கு பெயர் தான் கிருபை. அந்த கிருபையை நாம் கிறிஸ்து இயேசுவின் மூலம் பெற்றிருக்கிறோம்.
சிலர் இப்படியாக சொல்லுவார்கள். ஆண்டவரே நீ எனக்கு சுகம் கொடுத்தால், நான் உம்மை ஏற்றுக்கொள்ளுகிறேன். அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டாள் தான் ஆண்டவரே பரலோகத்திற்கு செல்வார் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் இரட்சிப்புக்கு பாத்திரவான்களாக நாம் நடந்துகொள்வோம். ஆனால் சில நாட்களில், அண்டவரே எனக்கு தொழிலில் வளர்ச்சியை கொடும், என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைத் துணையைக் கொடும் என்று ஆண்டவரை அதட்டிக்கொண்டிருப்போம். நான் கடவுளிடத்தில் கட்டளையிட்ட உடன் அவர் எனக்குக் கீழ்ப்படிந்து காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு நாம் மாறிவிடுகிறோம்.
கள்ள உபதேசம் என்பது மேடைகளில் பிரசங்கிக்கப்படுவது மாத்திரம் அல்ல. நம்முடைய உள்ளங்களிலும் கள்ள உபதேசங்கள் எழும்புகிறது. வசனத்திற்கு புரம்பான சிந்தனைகள், எண்ணங்கள் நமக்கு தோன்றுவதும் கள்ள உபதேசம் தான்.
இதுபோன்ற கள்ள உபதேசங்களுக்கு எதிராக நீங்கள் தைரியமாக போராட வேண்டும் என்று யூதா கற்றுக்கொடுக்கிறார். அநேக கிறிஸ்தவர்கள் கள்ள உபதேசங்களுக்கு எதிராக போராடுவது இல்லை.
இஸ்லாமிய சகோதரர்கள், ஒரு பள்ளி வாசலுக்கு அருகாமையில் இன்னும் ஒரு பள்ளிவாசல் கட்டுவது இல்லை. ஆனால் கிறிஸ்தவன் மாத்திரம் ஒரு சபையிலிருந்து தடுக்கி விழுந்தால் மறு சபையில் விழும் அளவிற்கு அருகாமையிலேயே சபையை கட்டிவிடுகிறான். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.
எந்த ஒரு நபரும் முகமது நபியைப் பற்றியோ, குரானைப் பற்றியோ தவறாக பேச முடியாது. அப்படி பேசினால் இஸ்லாமியர்கள் பேச மாட்டார்கள், அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் தான் பேசும்.
ஆனால் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தை கையில் எடுத்துக்கொண்டு, தவாறனை போதனைகளை சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வேதத்தை கையில் வைத்துக்கொண்டு இயேசு தெய்வம் இல்லை என்று சொல்லுகிற கிறிஸ்தவர்களும் (யெகோவாவின் சாட்சிகள் என்ற குழுவினர்) உண்டு.
கிறிஸ்தவம் என்பது ஒரு அமைதியான மார்க்கம். அன்பை போதிக்கின்ற மார்க்கம். ஆனால் நமக்கு ஆண்டவர் ஒப்புவித்திருக்கின்ற இரட்சிப்பிற்கு விரோதமாய் யாரேனும் பேசினால், அவர்களோடு நாம் போராட வேண்டும் என்று யூதா நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.
கள்ள உபதேசகர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாகவும், ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதாகவும், ஊழியம் செய்வதாகவும் சொல்லிக் கொண்டு பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்களோடு நாம் போராட வேண்டும் என்று யூதா கற்றுக்கொடுக்கிறார்.
பக்க வழியாய் நுழைந்திருக்கிற கள்ள போதகர்கள் அநேக வரங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடமும் வல்லமை உண்டு என்று மக்கள் நம்பி, அவர்களை பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். சாத்தானுக்கும் வரங்கள் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாத்தான் ஆதியிலே பரலோகத்தில் இருந்தவன். அவன் தேவதூதனாக படைக்கப்பட்டவன். ஆண்டவர் அவனுக்கு அநேக வல்லமைகளைக் கொடுத்திருந்தார்.
சாத்தானுக்குள் பெருமை வந்தபோது, அவனை ஆண்டவர் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். அப்படி தள்ளிவிடும்போது, ஆண்டவர் அவனிடமிருந்த வரங்களை பரித்துக்கொள்ளவில்லை. எனவே பிசாசுக்கும் வரங்கள் உண்டு. பிசாசினால் சுகம் கொடுக்க முடியும், பிசாசினால் அந்நிய பாஷை பேச முடியும். பிசாசினால் தீர்க்கதரிசனங்கள் உரைக்க முடியும். நம்முடைய நினைவுகள் என்ன என்பதும் பிசாசுக்குத் தெரியும்.
இவ்வளவு வல்லமை நிறந்த பிசாசு, சில போதகர்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். சில கள்ள தீர்க்கரிசிகளும் மக்களுக்கு சுகம் கொடுப்பார்கள், ஒருசில வேதனைகளோடு மக்கள் ஆலயத்தில் அமர்ந்திருக்கும்போது, அவர்களின் எண்ணத்தை அப்படியே சொல்லுவார்கள். இதைப்பார்க்கின்ற விசுவாசிகள் இவரும் கிறிஸ்துவின் ஊழியர் தான் என்று நம்புகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகம் கொடுக்கின்ற, தீர்க்கரிசனம் கொடுக்கின்ற ஊழியர்களும் உண்டு. பிசாசின் வல்லமையைப் பயன்படுத்தி சுகம் கொடுக்கின்ற, தீர்க்கதரிசனம் உரைக்கின்ற ஊழியர்களும் உண்டு. இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றால், அவர்களுடைய வார்த்தைகள் மூலமாக, அவர்களுடைய பிரசங்கங்கள் மூலமாக அவர்கள் நல்ல போதகரா? கள்ள போதகரா என்று நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
கிறிஸ்தவ மூல உபதேசங்கள் 16 உள்ளது. இந்த 16 உபதேசங்களுக்கு மாறாத எந்த ஊழியர் செயல்படுகிறாரோ, அவர் நிச்சயமாய் கள்ள உபதேசியாகத்தான் இருப்பார். விசுவாசிகள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். மூல உபதேசங்களுக்கு விரோதமாய் பேசுகிறவர்களுக்கு விரோதமாய் நாம் போராட வேண்டும் என்று யூதா கற்றுக்கொடுக்கிறார்.
இந்த பதிவின் மூலமாக கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும், ஊழியக்காரர்கள் ஒருவரோடொருவர் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவர்கள் ஊழியர்கள் அநேக காரியங்களைக் குறித்து பேசினாலும், இரட்சிப்பைக் குறித்தும் அவ்வப்போது பேச வேண்டும் என்றும், கள்ள உபதேசத்திற்கு விரோதமாக போராட வேண்டும் என்றும் கற்றுக்கொண்டோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக…ஆமென்..!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.