==========
யூதா புத்தகம்
(பாகம் மூன்று)
===========
யூதா புத்தகம் கள்ள உபதேசிகளுக்கு எதிராக பேசுகின்ற ஒரு புத்தகம். கள்ள உபதேசங்கள் சபைகளுக்குள் நுழையும்போது, இது கள்ள உபதேசம் என்று தெரியாதபடிக்கு, மக்களை நம்பவைத்துத்தான் சபைக்குள் நுழையும்.
ஒரு பாத்திரத்தில் விஷத்தை ஊற்றி, பாத்திரத்தில் விஷம் என்று எழுதிக் கொடுத்தால் யாரும் அதைக் குடிக்கமாட்டார்கள். ஆனால், ஏதேனும் ஒரு குளிர்பான பாட்டிலில், குளிர்பானத்தோடு தேர்த்து விஷத்தையும் கலந்து கொடுத்தால், அது விஷம் என்று அறியாமல் குடித்துவிடுவார்கள்.
கள்ள உபதேசத்தைப் போதிக்கின்ற சபைகள் முழுக்க முழுக்க கள்ள உபதேசத்தை மாத்திரம் போதிப்பது இல்லை. உண்மையான கடவுளின் வார்த்தைகளை 99% பேசுவார்கள். 1% மட்டுமே கள்ள உபதேசத்தைப் பேசுவார்கள். எனவே, விசுவாசிகள் எது கள்ள உபதேசம் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல், கள்ள ஊழியர்களையும், நல்ல ஊழியர்கள் என்றே நம்புகிறார்கள்.
யூதா எந்த கள்ள உபதேசத்தைப் பற்றி சொல்லுகிறார் என்றால், இரட்சிக்கப்பட்டவன், ஒருபோதும் தன்னுடைய இரட்சிப்பை இழப்பதில்லை என்ற கள்ள உபதேசத்தைப் பற்றி பேசுகிறார்.
பதினாறாம் நூற்றாண்டில் ஜான் கெல்வின் என்ற ஒரு கள்ள உபதேசி இருந்தார். இவர் இரண்டு விதமான கள்ள உபதேசங்களை மக்களுக்கு போதித்தார். அவர் அதை கள்ள உபதேசம் என்றே தெரியாமல் போதித்தார்.
1526-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் உள்ள விட்டன் பெர்க் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த மார்ட்டின் லூத்தர் என்ற கத்தோலிக்க பாதிரியார் கத்தோலிக்க ஐக்கியத்தை விட்டு வெளியே வந்தார்.
பரிசுத்த வேதாகமத்திற்கும், கத்தோலிக்க சபை ஒழுங்குக்கும் உள்ள தொண்ணூற்று ஐந்து (95) முரண்பாடுகளை அவர் கண்டறிந்தார். அவைகளை ஒரு பலகையில் எழுதி தேவாலயத்தின் கதவுகளில் மாட்டி, இதை நம்புகிறவன் மாத்திரமே சபைக்குள் வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.
மாட்டின் லூத்தரின் இச்செயல்களால், கத்தோலிக்க ஐக்கியம் அவர்களை புரட்சியாளர்கள் என்று ஒதுக்கி வைத்தது. ஆங்கிலத்தில் புராட்டஸ்டண்ட்.
மார்ட்டின் லூத்தரின் காலத்திற்கு சில ஆண்டுகளுக்கு பின்பு வந்தவர் தான் ஜான் கெல்வின். இவர் இரண்டு கள்ள உபதேசங்களை மக்களுக்கு போதித்தார்.
அவைகளில் ஒன்று, இந்த உலகில் யார்? யார்? இரட்சிக்கப்பட வேண்டும். யார்? யார்? இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று ஆண்டவர் முன்னமே தீர்மானித்துவிட்டார். யார்? யார்? இரட்சிக்கப்படுவார்கள் என்று ஆண்டவர் தீர்மானித்திருக்கிறாரோ அவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் போதித்தார்.
இது வேதத்தில் இல்லாத உபதேசம். எல்லாம் தலைவிதிப்படி தான் நடக்கும் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அதைப்போலவே ஜான் கெல்வின் என்பவரும் மக்களுக்கு போதித்தார். இவன் இவன் இரட்சிக்கப்பட வேண்டும், இவன் இரட்சிக்கப்பட வேண்டாம் என்று நினைப்பதற்கு நம்முடைய கர்த்தர் பிரம்மண் அல்ல.
நம்முடைய ஆண்டவர் சர்வத்தையும் சிருஷ்டித்த ஜீவனுள்ள கர்த்தர். ஆண்டவர் நியமித்திருக்கிறவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள் என்றால், நாம் சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டிய தேவை இல்லையே.
இந்த கெல்வின் அவர்கள் போதித்த மற்றொரு கள்ள உபதேசம், இரட்சிக்கப்பட்ட ஒருவர் ஒருபோதும் தன் இரட்சிப்பை இழந்துபோவதில்லை என்பது.
இந்த நாட்களில் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட அநேகர் பின்வாங்கி, வேறு மதங்களை பின்பற்றுகிறதையும் நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் மரிக்கும்போது பரலோகத்திற்கு செல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை.
இரட்சிக்கப்பட்ட ஒருவர் மரணபரியந்தம் தன் இரட்சிப்பைக் காத்துக்கொள்ள வேண்டும்.
யூதா புத்தகம் 5,6,7 ஆகிய வசனங்களில் மூன்று விதமான குழுக்களைப் பற்றி யூதா எழுதுகிறார். இவர்கள் ஆண்டவரின் அன்பை ருசிபார்த்து, ஆண்டவரோடு கூட இருந்தார்கள். கடைசியில் ஆண்டவரோடு கூட அவர்கள் இராததினால், ஆண்டவர் அவர்களை அழித்துப்போட்டார்.
யூதா 5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
யூதா ஊழியர்களுக்குத்தான் இந்த புத்தகத்தை எழுதுகிறார். எனவே தான், உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, ஆனாலும் நான் நினைப்பூட்டுகிறேன் என்று எழுதுகிறார்.
இங்கே ஆண்டவர் தம்முடைய ஜனங்கள் எல்லோரையும் இரட்சித்தார். பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார் என்று யூதா எழுதுகிறார்.
ஆண்டவர் அவர்களை (இஸ்ரவேலர்) எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி அவர்களை இரட்சித்தார் என்று யூதா எழுதுகிறார். எகிப்து தேசத்திலிருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு, உண்மையான கடவுளைப் பற்றி கொஞ்சமும் தெரியாது. எகிப்தில் அவர்கள் பல தெய்வங்களை வணங்கினார்கள். இவர்களுடைய தெய்வத்தைப் (யெகோவா கடவுள்) பற்றி என்ன தெரியும் என்றால், அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன். இது மாத்திரமே அவர்களுக்கு தெரிந்திருந்தது.
அதைப்போலவே இன்றைக்கும் இரட்சிக்கப்படாத கிறிஸ்தவனுக்கு இயேசு கிறிஸ்தவர்களின் கடவுள், வெள்ளைக்கார கடவுள், வேதக்காரர்களின் கடவுள் என்று மாத்திரம் தான் தெரியும்.
ஆண்டவர் எகிப்து தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்கும்படியாக, எகிப்து தேசத்தாருக்கு பத்து வாதைகளைக் கொடுத்தார். இப்படி பல அற்புதங்கள் செய்து, ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களை இரட்சித்தார்.
அதைப்போலவே நம்முடைய வாழ்விலும், நாம் இரட்சிக்கப்பட்ட நாட்களில், ஆண்டவர் பல அற்புதங்களை நமக்குச் செய்தார். வியாதியிலிருந்து சுகம் கொடுத்தார். தற்கொலை செய்யப்போனவர்களை காப்பாற்றினார். தொழிலில் உயர்வைக் கொடுத்தார். இப்படி பல ஆசீர்வாதங்களைக் கொடுத்துதான் ஆண்டவர் நம்மை இரட்சித்தார்.
ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களை இரட்சித்து அவர்களை வழிநடத்தி வருகையில் கானான் தேசம் வரும்வரை எத்தனையோ பாதுகாப்புகளை அவர்களுக்குக் கொடுத்தார். பார்வோன் சேனையை அழித்துப்போட்டார், செங்கடலை கடக்கச் செய்தார், மன்னாவினால் போஷித்தார், பகலிலே மேகஸ்தம்பமாக, இரவிலே அக்கினிஸ்தம்பமாக அவர்களை பாதுகாத்து வழிநடத்தினார்.
நாமும் இரட்சிக்கப்பட்ட நாட்களில் நமக்கு எதிராய் வந்த எல்லா காரியங்களையும் ஆண்டவர் முறித்துப்போட்டு அற்புதமாய் நம்மை பாதுகாத்து வழிநடத்தினார்.
இப்படியெல்லாம் பாதுகாத்து வழிநடத்தின ஆண்டவர், அவர்களுக்கு பத்து கற்பனைகளைக் கொடுக்கிறார். நமக்கும் ஆண்டவர் அவருடைய வார்த்தையைக் கொடுக்கிறார்.
இப்படியெல்லாவற்றையும் கொடுத்த பின்பு, விசுவாசியாதவர்களை ஆண்டவர் அழித்தார் என்று வாசிக்கிறோம். விசுவாசியாதவர்கள் என்ற வார்த்தையின் கிரேக்கப் பதம் பிஸ்டிஸ். இந்த விசுவாசித்தின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், ஆண்டவர் இருக்கிறார் என்பதை நம்புவது அல்ல, ஆண்டவருக்கு விசுவாசிமுள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது. பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது. பெற்றுக்கொண்ட அற்புதத்திற்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது. பெற்றுக்கொண்ட வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது.
இப்படி ஆண்டவரிடத்தில் இரட்சிப்பை, ஆசீர்வாதத்தை, பாதுகாப்பைப் பெற்றுக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் பிரச்சனைகள் வந்தபோது, முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். இப்படி முறுமுறுத்த இஸ்ரவேலர்கள் யாவரும் விசுவாசமில்லாதவர்களாக மாறிவிட்டார்கள். இப்படி முறுமுறுக்கிறவர்கள் ஆண்டவரின் இரட்சிப்புக்கு விசுவாசமில்லாதவர்களாய் மாறிவிடுகிறார்கள். ஆண்டவர் அவர்களை அழித்துப்போட்டார் என்று யூதா எழுதுகிறார்.
அதைப்போல கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்ட, அவரிடத்திலிருந்து ஆசீர்வாதத்தையும், நன்மையையும் பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்த காரியம் நடைபெறாதபோது, முறுமுறுக்க ஆரம்பிக்கிறார்கள். இரட்சிப்புக்கு உண்மையில்லாதவர்களாக, விசுவாசமில்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள். நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாமும் இஸ்ரவேலர்களைப் போல விசுவாசியாதவர்களாக, முறுமுறுப்போமானால், பின்வாங்குவோமானால், நம்மையும் ஆண்டவர் அழித்துப்போடுவார்.
நம்முடைய ஆண்டவர் இஸ்ரவேலின் ஆண்டவர். இஸ்ரவேலரை வாலாக்காமல் தலையாக்கினதுபோல, நம்மையும் வாலாக்காமல் தலையாக்குவார். இஸ்ரவேலர்களை பாதுகாப்பது போல, நம்மையும் பாதுகாப்பார். இஸ்ரவேலை ஆசீர்வதித்ததுபோல நம்மையும் ஆசீர்வதிப்பார் என்று மாத்திரம் நாம் நினைக்கிறோம். இஸ்ரவேலரை கர்த்தர் அழித்ததுபோல நம்மையும் அழிப்பார் என்பதை நாம் நினைப்பதில்லை.
பழைய ஏற்பாட்டில் தான் ஆண்டவர் ஜனங்களை தண்டித்தார். புதிய ஏற்பாட்டில் இவையெல்லாம் இல்லை என்று நினைக்கும் கிறிஸ்தவர்களுக்குத்தான் இங்கே யூதா எழுதுகிறார்.
இரட்சிக்கப்பட்ட பின்பு நாம் எவ்வளவு தவறு செய்தாலும், ஆண்டவர் நமக்குக் கிருபையின்மேல் கிருபை கொடுக்கிறார் என்று கள்ள உபதேசிகள் பிரசங்கிக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் ஒரு அப்பாவிபோல இருப்பதாக இந்த கால பிரசங்கங்கள் மாறிவிட்டது. நாம் என்ன செய்தாலும் ஆண்டவர் ஏற்றுக்கொள்வார், எப்படி வாழ்ந்தாலும் ஆண்டவர் மன்னிப்பார் என்று இன்றைக்கு போதிக்கப்படுகிறது.
ஆண்டவரே எனக்கு நல்ல வேலை கொடுத்தால் உம்முடைய ஆலயத்திற்கு தசமபாகம் கொடுப்பேன் என்று நாம் சொன்ன உடன், ஐயோ தசமபாகம் தருகிறேன் என்று சொல்லுகிறானே என்று நினைத்து ஆண்டவர் உடனே வேலையைக் கொடுத்துவிடுவார் என்றும், ஆண்டவரே எனக்கு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், நான் வாரம் தவறாமல் ஆலயத்திற்கு வருகிறேன் என்று நாம் சொன்னால், ஐயோ இந்த ஆத்துமா பாதாளத்திற்கு சென்றுவிடக்கூடாதே என்பற்காக ஆண்டவர் உடனே ஒரு ஆண் குழந்தையை கொடுத்துவிடுவார் என்றும் இக்கால கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள்.
இக்கால கிறிஸ்தவர்கள் தங்களைக் கடவுளாகவும், கடவுள் தங்களுக்கு வேலைசெய்யும் பணியாளராகவும் நினைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பிரசங்கங்கள் தான் சபைகளிலும் போதிக்கப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு நடந்ததை, யார் பேசுகிறார் என்றால் மரியாளின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் சகோதரனும், சீஷனும், அப்போஸ்தலனுமான புதிய ஏற்பாட்டு யூதா பேசுகிறார். இவர் சொல்லுகிறார், பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களை ஆண்டவர் எப்படி அழித்தாரோ, அதேபோல இன்றைக்கும் செய்வார் என்று யூத பேசுகிறார்.
யூதா 6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயந்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
இங்கே தேவதூதர்களைப் பற்றி யூதா பேசுகிறார். பரலோகத்தில் அநேக தேவதூதர்கள் இருக்கிறார்கள். அந்த தேவதூதர்களில் சிலர் தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், பெருமையினிமித்தமாக விழுந்துபோனார்கள்.
பரலோகத்தில் லூசிபர் என்ற தூதன் இருந்தான். அவனும், அவனோடு கூட மூன்றில் ஒரு பங்கு தூதர்களும் பெருமைகொண்டபடியினால், அவர்களுடைய மேன்மையைக் காத்துக்கொள்ளாதபடியினால், மகாநாளின் நியாயத்தீர்ப்பு நாளில், அவர்களை ஆண்டவர் நித்திய சங்கிலிகளினால் கட்டி, அந்தகாரத்திலே அடைத்து வைத்திருக்கிறார்.
அவைகள் தான் பிசாசுகள். பிசாசுகள் இன்றைக்கு கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பிசாசுகளை ஆண்டவர் எங்கே கட்டி வைத்திருக்கிறார் என்றால், இருளில் கட்டி வைத்திருக்கிறார். பிசாசுகளிடம் தேவனுடைய ஒளி இருப்பதில்லை.
பிசாசு அந்தகாரத்திலே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்றபடியினால், பிசாசு பகல் நேரத்தில் வெளிப்படுவதில்லை, இரவில் மாத்திரமே வெளிப்படும் என்பது பொருள் அல்ல. அந்தகாரம் என்பது கடவுளின் வெளிச்சம் பிசாசுகளிடத்தில் இல்லை என்பது பொருள்.
இருளிலே பிசாசுகள் எப்படி இருக்கின்றன என்றால், கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படி கட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், பரலோகத்திற்கு செல்ல முடியாதபடி கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிசாசுகள் முன்னொரு நாளில் தேவதூதர்களாக பரலோகத்தில் இருந்தன. அவைகள் விழுந்தபடியினால், பரலோகத்திற்கு செல்ல முடியாதபடி கட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு காரியங்களை பார்க்கிறோம். பிசாசுகள் எப்படி கட்டப்பட்டிருக்கிறது என்றால், பரலோகத்திற்கு செல்ல முடியாதபடி கட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் நமக்குள்ளே பிசாசுகள் வந்து, தன்னுடைய கிரியையை அவப்போது காட்டுவதுண்டு.
அந்தகாரத்திலே கட்டப்பட்டிருக்கிறது என்றால், நாம் பார்க்கக்கூடிய பகல் இரவு அல்ல, தேவனிடத்தில் உள்ள வெளிச்சத்தைப் பார்க்க முடியாத இருள். எனவே நம்முடைய பகல் நேரத்தில் பிசாசு வெளிப்படாது என்று நினைப்பது முட்டாள்த்தனம். ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டு, நம்மிடத்திலே வருவான் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
நியாயத்தீர்ப்பு நாளில் இந்த பிசாசுகள் அனைத்தும், நித்திய அக்கினி நரகத்திற்குள் அனுப்பப்படும். பூமியிலே பிசாசுகள் கட்டவில்க்கப்பட்டு தான் இருக்கின்றது.
தேவதூதர்களையே ஆண்டவர் தண்டிப்பாரானால், நாம் எம்மாத்திரம். நாமும் பெருமையுள்ளவர்களாக, ஆண்டவருடைய கட்டளைகளையும், பிரமாணங்களையும் மறந்து, நாம் விரும்பக்கூடிய வாழ்க்கை வாழ்வோமானால், நம்மையும் ஆண்டவர் தண்டிப்பார். நித்திய அக்கினிக்கு நாமும் இரையாவோம்.
யூதா 7
அப்படியே, சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யோர்தான் நிதிக்கு அருகில் செழிப்பான சில நகரங்கள் இருந்தன. யோர்தான் நிதிக்கு கீழே இருக்கின்ற உப்புக்கடல் என்று சொல்லப்படும் சவக்கடல், முன்பு உப்பு நீராக இருக்கவில்லை. நன்னீராக இருந்தது. யோர்தான் நதி கலிலேயாக் கடல் வழியே வந்து சவக்கடலிலே சங்கமிக்கும். கலிலேயாக் கடல் எப்படி நன்னீராக இருக்கின்றதோ, அதேபோல சவக்கடலும் முன்நாளில் நன்னீராகத்தான் இருந்தது.
சவக்கடலைச் சுற்றியுள்ள சில பட்டணங்கள் மிகவும் செழிப்பாய் இருந்தன. சோதோம் கொமொரோ ஜனங்கள் செய்த பாவம் என்னவென்றால், தன் இனச்சேர்க்க என்ற பாவம். தன்இனச் சேர்க்கை என்பது ஆண்டவருக்கு விரோதமான பாவம்.
இந்த நாட்களிலும் ஆண் ஆணை, பெண் பெண்ணை திருமணம் செய்யலாம் என்ற சட்டம் பல நாடுகளில் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தேசத்திலே 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது.
இன்றைக்கு அநேக திருச்சபைகளிலும் தன்இனச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கே யூதா சொல்லும்போது, தன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சோதோம் கொமோரா பட்டணத்தால் அக்கினியினால் நித்திய ஆக்கினையை அடைந்து, திரிஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
ஆண்டவர் வானத்திலிருந்து ஒரு பெரிய எரிகல்லை அனுப்பினார். அந்தக் கல் சவக்கடலில் விழுந்தது. எனவேதான் அதிலிருந்த நன்னீர் அனைத்தும், கெட்டுப்போய்விட்டது. அந்த எரிகல்லில் இருந்த கனிமங்கள் தான், உலகில் வேறு எங்கும் இல்லாத 19 கனிமங்களை உண்டாக்கியது. இந்த எரிகல்லினால் சவக்கடலைச் சுற்றியுள்ள சோதோம் கொமோரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டணங்கள் அனைத்தும் அழிந்துபோயின.
அந்த எரிகல்லில் அதிகபடியாக இருந்தது சோடியம் குளோரைடு என்ற பதார்த்தம். இன்றைக்கு நாம் உப்பு என்று சொல்லுகிறோம்.
லோத்தையும், அவனுடைய மனைவி பிள்ளைகளையும் ஆண்டவர் சோதோம் கொமோரா பட்டணத்திலிருந்து துரத்திவிடும்போது, லோத்தின் மனைவி ஓடாமல் பின்னிட்டு திரும்பி பார்த்தபடியினால், எரிமலையிலிருந்து லாவா வருவருதுபோல, அந்த எரிகல்லிலிருந்து விழுந்த லாவாவிலே அவள் மாட்டிக்கொண்டாள்.
இப்படி மனிதர்கள் பாவம் செய்தபோது, அவர்களை தண்டித்த ஆண்டவர், புதிய ஏற்பாட்டில் மனிதன் பாவம் செய்தால், சும்மா அமர்ந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பார் என்று போதிக்கப்படுகிறது. நாம் எந்த தவறு வேண்டுமானாலும் செய்யலாம், அந்த பாவங்களை மன்னிக்கவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டார். எனவே, நாம் பயப்படத்தேவையில்லை என்று போதிக்கும் கள்ள ஊழியர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
இரட்சிக்கப்பட்டவர்கள் ஆண்டவருக்கு உண்மையில்லாதவர்களாக, விசுவாசத்தை அழித்துப்போடும்போது ஆண்டவர் அவர்களை அழித்துப்போடுவார் என்று இந்த பதிவின் மூலமாக ஆழமாக அறிந்து கொண்டோம்.
நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். நம்முடைய வார்த்தையில், சிந்தனையில், நடத்தையில் அந்த இரட்சிப்பை நாம் காத்துக்கொண்டு, ஆண்டவருக்கு விசுவாசமுள்ளவர்களாய் வாழ்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. அமென்…!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.